Title
stringlengths
21
197
Author
stringlengths
4
27
City
stringlengths
3
20
Published
stringlengths
19
19
Text
stringlengths
149
24k
புதுச்சேரி பாஜக வேட்பாளர்: நிர்மலாவா? தமிழிசையா?
செ.ஞானபிரகாஷ்
கூறியதாவது
2024-02-20 10:30:00
மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் காங்கிரஸ் மாநிலத் தலைவரான தற்போதைய எம்.பி. வைத்திலிங்கமே மீண்டும் களம் காண இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக தனித்து களம் காண்கிறது. ஆளும் தரப்பு கூட்டணித் தலைவரான முதல்வர் ரங்கசாமி பாஜகவுக்கு பச்சைக் கொடி காட்டிய நிலையில், பாஜக தரப்பில் வேட்பாளரை தேர்வு செய்வதில் சிக்கல் தொடர்கிறது. தற்போதைய மாநில அரசில் முக்கிய பதவிகளில் உள்ளயாரும் போட்டியிட விரும்பவில்லை. இதற்கிடையே தொகுதி பாஜக பொறுப்பாளராக நிர்மல்குமார் சுரானா நியமிக்கப்பட்டிருக்கிறார். “நீங்கள் எல்லாம் ஆச்சரியப்படும் வேட்பாளர் ஒருவர் புதுச்சேரி தொகுதிக்கு அறிவிக்கப்படுவார்” என்று நிர்வாகிகளிடம் அவர் தெரிவித்திருக்கிறார். இதுபற்றி பாஜக உயர்மட்டத் தலைவர்கள் சிலர் கூறியதாவது: பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிட்டால் எளிதாக வெற்றி பெறலாம் எனகட்சித் தலைமையிடம் வலியுறுத்தினோம். ஆனால் நமச்சிவாயமோ புதுவை அரசியலில் தொடரவே விரும்புகிறார். தான் போட்டியிட விரும்பவில்லை என்றும் கட்சி நிறுத்துபவரை வெற்றி பெற வைப்பது எனது பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார். இந்தச் சூழலில் புதுச்சேரியில் பாஜக சார்பில் போட்டியிட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்படுகின்றன. இவர்களைத் தவிர்த்து பாஜக நியமன எம்எல்ஏவில் ஒருவர், பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏவில் ஒருவர் ஆகியோரின் பெயர்களும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இவர்களில், முதல்வர் ரங்கசாமி ஏற்கும் வேட்பாளரை பாஜக அறிவிக்கும் என்றனர். ஆளுநர் தமிழிசையிடம் இதுபற்றி கேட்டால், ‘சஸ்பென்ஸ்’ என்று அர்த்தப் புன்னகையோடு பதில் தருகிறார். தமிழகத்தில் இல்லாவிட்டாலும், புதுச்சேரியில் களம் கண்டுவெற்றி பெற்று ஒரு ‘தமிழ்’ அடையாளத்தோடு நிர்மலா சீதாராமன் இந்த முறை கேபினட் வந்தால், அது ஒரு கூடுதல் தகுதியாக இருக்கும் என்று பாஜக தலைமை எண்ணுவதாகவும் பேச்சு எழுகிறது. வேட்பாளர் யார் என விரைவில் தெரியும்.
‘சிக்கமாட்டார் விஜயதரணி’ - செல்வப்பெருந்தகை உறுதி
செய்திப்பிரிவு
கூறியதாவது
2024-02-20 10:24:00
விளவங்கோடு காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக அவர் பாஜகவில் சேர திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக டெல்லியில் முகாமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: விளவங்கோடு தொகுதியில் 2 முறை எம்எல்ஏவாக இருப்பவர், வழக்கறிஞர், திறமையாக, விவரமாக இருப்பவர். அவரை பிடிக்க பாஜக வீசும் வலையில் விஜயதரணி சிக்க மாட்டார். அவர் புத்திசாலி. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. அதற்காக டெல்லி சென்றுள்ளார். அவரை பாஜகவில் சேர்க்க நினைக்கிறார்கள். அது நடக்காது. இவ்வாறு அவர் கூறினார். காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறும்போது, "பாஜகவில் இணைகிறீர்களா என்று அவரிடம் கேட்டதற்கு ஆமாம் என்றும் சொல்லவில்லை. இல்லை என்றும் சொல்லவில்லை. இவர் கட்சியிலிருந்து விலகுவதால் காங்கிரஸூக்கு எந்த பாதிப்பு இல்லை" என்றார்.
உலகத் தாய்மொழி நாள்: எங்கும் தமிழ், எதிலும் தமிழ் நிலையை எட்ட ராமதாஸ் வலியுறுத்தல்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-20 10:07:00
சென்னை: தமிழ்நாட்டில் அன்னைத் தமிழ் தொடர்பான மேற்கண்ட கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலையை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (பிப்.20) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தாய்க்கு இணையான மரியாதை தாய்மொழிக்கும் வழங்கப்பட வேண்டும்; அன்னை மொழிக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் உலகத் தாய்மொழி நாள் நாளை கொண்டாடப்படும் நிலையில், அந்நாளைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரத்தில் அன்னைத் தமிழைக் காக்க தீக்குளித்த தீரர்கள் வாழ்ந்த தமிழ்நாட்டில் தமிழ் மொழியின் இன்றைய நிலை கவலையளிக்கிறது. உலகத் தாய்மொழி நாள் அறிவிக்கப்பட்டதன் வெள்ளிவிழா ஆண்டு நாளை கொண்டாடப்படுகிறது. உலகத் தாய்மொழி நாளுக்கு நீண்ட, உணர்ச்சி மிகுந்த வரலாறு உண்டு. இந்திய விடுதலைக்கு முதல் நாள் பாகிஸ்தான் தனி நாடாக அறிவிக்கப்பட்ட போது, கிழக்கு வங்கமும் பாகிஸ்தானின் அங்கமாக மாறியது. பாகிஸ்தான் தனி நாடாக அறிவிக்கப்பட்டதிலிருந்தே வங்க மொழிக்கு உரிய மரியாதை அளிக்கப் படவில்லை. அதைக் கண்டித்தும், வங்க மொழியை அங்கீகரிக்க வலியுறுத்தியும் 1952ம் ஆண்டு இதே பிப்ரவரி 21ம் நாளில் அன்றைய கிழக்கு பாகிஸ்தான் தலைநகர் டாக்காவில் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது சலாம், பர்கட், ரபீக், ஜபார், ஷபியூர் ஆகிய 5 மாணவர்கள் சுட்டுக் கொல்லப்ப்பட்டதை நினைவு கூறும் வகையில், அந்நாளை உலக தாய்மொழி நாளாக 1999ஆம் ஆண்டு யுனெஸ்கோ அறிவித்தது. தமிழ்நாட்டில் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக பாட்டாளி மக்கள் கட்சியின் முழக்கமாக உள்ளது. உலகத் தாய்மொழி நாள் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இந்த முழக்கம் தீவிரமடைந்தது. உலகத் தாய்மொழி நாள் அறிவிக்கப் பட்ட அதே ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் தான் தமிழ்நாட்டில் தமிழைக் கட்டாய பயிற்றுமொழியாக்க வலியுறுத்தி சென்னையில் 102 தமிழறிஞர்கள் சாகும்வரை உண்ணாநிலை மேற்கொண்டனர். ஆனால், ஆட்சியாளர்களுக்கு அக்கறை இல்லாததால் அன்னைத் தமிழை இன்று வரை அரியணை ஏற்ற முடியவில்லை. தமிழ் பயிற்று மொழி மட்டும் தான் என்றில்லாமல், கடைகளின் பெயர்ப்பலகைகள், உயர்நீதிமன்றம், திருமணங்கள், ஆலய வழிபாடு என எங்குமே அண்னைத் தமிழைக் காண முடியவில்லை. இப்படியாக தமிழன்னைக்கு இழைக்கப்படும் அவமானத்தை துடைக்க வேண்டும் என்பதற்காகத் தான் கடந்த ஆண்டு உலகத் தாய்மொழி நாளான 2023&ஆம் ஆண்டு பிப்ரவரி 21&ஆம் நாள் சென்னையில் தமிழன்னை சிலையுடன் தமிழைத்தேடி என்ற தலைப்பில் பயணத்தைத் தொடங்கினேன். செங்கல்பட்டு, திண்டிவனம், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல் வழியாக பிப்ரவரி 28&ஆம் நாள் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் பயணத்தை நிறைவு செய்தேன். தமிழைத்தேடி பயணம் மேற்கொள்ளப்பட்டு ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையில், அன்னைத் தமிழ் சார்ந்த கோரிக்கைகள் அனைத்தும் இன்னும் கோரிக்கைகளாக தொடர்கின்றன. பள்ளி இறுதி வகுப்பு வரை தமிழை கட்டாய பயிற்றுமொழியாக அறிவித்து சட்டம் இயற்ற வேண்டும், தமிழ் கட்டாயப் பாடச் சட்டத்தை பட்ட மேற்படிப்பு வரை நீட்டிக்க வேண்டும், தமிழைக் காக்க மொழிச்சட்டம் நிறைவேற்ற வேண்டும், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழ் மொழியில் அமைக்கப்பட வேண்டும், செம்மொழி தமிழாய்வு நடுவண் நிறுவனத்தை மேம்படுத்த வேண்டும், தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும், சென்னை உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும், தமிழில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும், மருத்துவம், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு தமிழ்ப் பாட மதிப்பெண்ணையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என கடந்த ஓராண்டில் பலமுறை பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்திய போதிலும் எந்தக் கோரிக்கையும் இன்னும் நிறைவேறவில்லை. இந்தி ஆதிக்கத்திலிருந்து அன்னைத் தமிழைக் காக்க வேண்டும் என்பதற்காக 500-க்கும் மேற்பட்டோர் உயிர்த்தியாகம் செய்த தமிழ்நாட்டில் தமிழ் மொழியின் இன்றைய நிலை வருத்தமும், வேதனையும் அளிப்பதாக உள்ளது. இந்த நிலையை மாற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு தான் இருக்கிறது. இதை உணர்ந்து அன்னைத் தமிழ் தொடர்பான மேற்கண்ட கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலையை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
தமிழக பட்ஜெட் 2024-25: 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் முதல் கிளாம்பாக்கத்துக்கு மெட்ரோ வரை!
செய்திப்பிரிவு
மாநாடு
2024-02-20 08:22:00
சென்னையில் ஜனவரியில் உலக புத்தொழில் மாநாடு: முதல் தலைமுறை தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின்கீழ், வரும் நிதியாண்டில் ரூ.101 கோடி அளவுக்கு மானிய உதவி அளிக்க நிதி ஒதுக்கப்படும். உலகின் பல்வேறு பகுதிகளில் முத்திரை பதித்த முன்னணி புத்தொழில் நிறுவனங்களும், இளம் தொழில்முனைவோரும் கலந்துகொள்ளும் வகையில் ‘உலக புத்தொழில் மாநாடு’, 2025 ஜனவரியில் சென்னையில் நடத்தப்படும். தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் ஒட்டன்சத்திரம், மானாமதுரை, திருத்துறைப்பூண்டி ஆகிய இடங்களில் ரூ.32 கோடி மதிப்பீட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்முனைவோருக்கென 3 புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படும். குறுந்தொழில் முனைவோர் தொழில் தொடங்க, கோவை மாவட்டம் குறிச்சி தொழிற்பேட்டையில் ரூ.37 கோடி மதிப்பீட்டில் அடுக்குமாடி ஆயத்தத் தொழில் வளாகமும், மதுரையில் ரூ.24 கோடி மதிப்பீட்டில் தொழில் புத்தாக்க மையமும் அமைக்கப்படும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்காக மதுரை சக்கிமங்கலம் தொழிற்பேட்டையில் ரூ.118 கோடியில் அடுக்குமாடி தொழில் வளாகம் கட்டப்படும். குறுங்குழும மேம்பாட்டு திட்டத்தின் கீழ், விருதுநகர் மாவட்டம் வெள்ளயாபுரம், செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம், கன்னியாகுமரி மாவட்டம் அழகியபாண்டியபுரம், சேலம் மாவட்டம் ராக்கிப்பட்டி, நாமக்கல் மாவட்டம் கத்தேரி, புதுக்கோட்டை மாவட்டம் ராங்கியத்தில், ஆயத்த ஆடை உற்பத்தி, சித்த மருத்துவ மூலிகைப் பொருட்கள் தயாரிப்பு, பட்டுநூல் உற்பத்திக்கு 6 குறுங்குழும திட்டங்கள், தமிழக அரசு மானியத்துடன் ரூ.25 கோடி மொத்த மதிப்பீட்டில் பொது வசதி மையங்களுடன் அமைக்கப்படும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைக்கு பட்ஜெட்டில் மொத்தம் ரூ.1,557 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. சிலப்பதிகாரம், மணிமேகலை மொழிபெயர்ப்புக்கு ரூ.2 கோடி: தமிழின் இரட்டைக் காப்பிங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவை 25 இந்திய மற்றும் உலக மொழிகளுக்குச் சென்றடையும் வகையில், அவற்றை மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட தமிழின் மிகச்சிறந்த நூல்களை உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களிலும், புகழ்பெற்ற நூலகங்களிலும் இடம்பெறச் செய்ய இந்தாண்டு முதல் நடவடிக்கை எடுக்கப்படும். தேமதுர தமிழோசை உலகெங்கும் பரவிடச் செய்யும் முயற்சிக்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். துரிதமாக வளர்ந்துவரும் தொழில்நுட்பப் பரப்பில், தமிழ்மொழி செழித்து வளரத் தேவையான இயந்திரவழிக் கற்றல், செயற்கை நுண்ணறிவு, இயற்கைமொழிச் செயலாக்கம், பெருந்திரள் மொழி மாதிரிகள் போன்ற புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கிடும் புத்தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்க இந்த ஆண்டு ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்படும். தமிழகமெங்கும் உள்ள அரிய நூல்கள் மற்றும் ஆவணங்களை மின்பதிப்பாக மாற்றும் முயற்சிக்கு இந்த ஆண்டு ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்படும். இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000: பள்ளிக்கல்வி, உயர்கல்விக்கு ரூ.52,254 கோடி ஒதுக்கீடு தமிழக பள்ளிக்கல்வி, உயர்கல்விக்கு ரூ.52,254 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் பயின்று உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கு ‘தமிழ்ப்புதல்வன்’ என்ற திட்டத்தில் மாதம் ரூ.1000 கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் 2024-25-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது: பள்ளிக்கல்வி வளர்ச்சிக்கென ரூ.7,500 கோடியில் ‘பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்’ என்ற திட்டத்தை 5 ஆண்டுகளில் செயல்படுத்த இந்த அரசால் அறிவிக்கப்பட்டு, ரூ.2,497 கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிதியாண்டிலும் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் பள்ளிக் கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும். கடந்த 3 ஆண்டுகளில் 38 மாதிரிப் பள்ளிகள் ரூ.352 கோடியில் அமைக்கப்பட்டுள்ளன. 28, தகைசால் பள்ளிகளாக ரூ.100 கோடியில் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளிலும் ரூ.525 கோடியில் 8,209 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் மற்றும் ரூ.435 கோடியில் 22,931 தொடங்கப்பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படவுள்ளன. மேலும் வரும் நிதியாண்டில் 15,000 திறன்மிகு வகுப்பறைகள் ரூ.300 கோடியில் உருவாக்கப்படும். அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்புவரை பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள், பொதுஅறிவு நூல்கள் வாங்க மாதம்தோறும் ரூ.1000 நிதியுதவி வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் சுமார் 3 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர். இதற்காக வரும் நிதியாண்டில் ரூ.360 கோடி ஒதுக்கப்படுகிறது. இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் செயல்படுத்திட ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பொது நூலகங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட ரூ.213 கோடியில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும். இந்த பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.44,042 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் அரசு பொறியியல், கலை அறிவியல் மற்றும் பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் கட்டிட கட்டமைப்பு பணிகள் ரூ.200 கோடி செலவில் செயல்படுத்தப்படும். பொறியியல், கலை அறிவியல் மற்றும் பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் உட்பட 236 அரசு கல்வி நிறுவனங்களுக்கு கணினி மற்றும் இதர அறிவியல் கருவிகள் ரூ.173 கோடியில் வழங்கப்படும். 45 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளை தொழில்துறை 4.0 தரத்துக்கு உயர்த்திட ரூ.3,014 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும். பொறியியல், வேளாண்மை உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களின் கல்வி, விடுதி, போக்குவரத்து உள்ளிட்ட மொத்த கல்விச் செலவையும் அரசே ஏற்றுக் கொள்கிறது. தற்போது படித்து வரும் 28,749 மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்பதற்காக வரும் நிதியாண்டில் ரூ.511 கோடி செலவிடப்படும். இளைய தலைமுறையினரின் அறிவு தாகத்தை மேலும் தூண்டும் விதமாக ஒரு மாபெரும் நூலகம் மற்றும் அறிவியல் மையம், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் கோவையில் அமைக்கப்படும். இந்த பட்ஜெட்டில் உயர்கல்வித் துறைக்கு ரூ.8,212 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் 100 பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் ரூ.200 கோடியில் புதிய திறன் பயிற்சி கட்டமைப்புகள் உருவாக்கப்படும். அரசு பள்ளி மாணவர்கள் தங்களது பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை வெளிநாடுகளில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் படிக்க உதவித்தொகை அளித்து உதவும் வகையில், புதிய திட்டம் வரும் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும். 2024-25-ம் ஆண்டில் ஒரு லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.2,500 கோடி அளவுக்கு பல்வேறு வங்கிகள் மூலம் கல்விக்கடன் வழங்கிடுவதை அரசு உறுதி செய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தெரு நாய் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த ரூ.20 கோடி: தமிழகத்தில் தெரு நாய்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. எனவே, விலங்குகள் இனப்பெருக்கத் தடை திட்டத்தை மேலும் முறையாக செயல்படுத்திடவும், தமிழகத்தின் பல இடங்களில் இயங்கி வரும் இனப்பெருக்கத் தடை மையங்களை மேம்படுத்திடவும் 2024-25-ம் ஆண்டின் வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் ரூ.20 கோடி ஒதுக்கப்படும். மேலும், தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்துக்கு வரும் நிதியாண்டில் ரூ.11 கோடி ஒதுக்கப்படும். ஊரகப்பகுதி அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம்: ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.3,123 கோடி ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ கடந்த 2022-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாளில் மதுரையில் தொடங்கப்பட்டு, பிறகு கடந்த 2023-ம் ஆண்டு தமிழகத்திலுள்ள அனைத்து 30,992 அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 15 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் விரிவுப்படுத்தப்பட்டது. தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் இயங்கி வரும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மேலும் சுமார் 2.50 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில், வரும் கல்வி ஆண்டு முதல் இத்திட்டம் விரிவுப்படுத்தப்படும். இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக, வரும் நிதியாண்டில் ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தும் பொருட்டு ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ என்ற திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு, அதன் விளைவாக ஊட்டச்சத்து குறைபாடுள்ள 6 மாதத்துக்குட்பட்ட குழந்தைகளில் 74 சதவீத குழந்தைகள் இயல்பு நிலைக்கு முன்னேறியுள்ளனர். ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களாக கண்டறியப்படும் 6 மாதத்துக்குட்பட்ட அனைத்து குழந்தைகளின் தாய்மார்களுக்கும் ஊட்டச்சத்துப் பெட்டகம் வழங்கப்படும். வரும் நிதியாண்டில் சுமார் ரூ.70 கோடி செலவில் வாடகைக் கட்டிடங்களில் இயங்கிவரும் 500 குழந்தைகள் மையங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்படும். ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்துக்காக வரும் நிதியாண்டில் ரூ.3,123 கோடி ஒதுக்கப்படும். அதிநவீன வசதிகளுடன் ரூ.1,100 கோடியில் கோவையில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா சென்னையைப் போல, கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட அனைத்து மாநகராட்சியிலும் 1000 முக்கிய இடங்களில் இலவச வைஃபை சேவை வழங்கப்படும். மதுரையில் ரூ.350 கோடி மதிப்பீட்டிலும், திருச்சியில் ரூ.345 கோடி மதிப்பீட்டிலும் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதேபோல், தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடியிலும் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் 13,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்துறை, ஆராய்ச்சி மற்றும் மருத்துவத்துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பப் பயன்பாட்டின் வாய்ப்புகள் மற்றும் வழிநடத்திடத் தேவையான வரையறைகளைத் தெளிவாக வகுத்திட ‘தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம்’ ஏற்படுத்தப்படும். மேலும், கோவை மாவட்டம் விளாங்குறிச்சியில் 20 லட்சம் சதுரஅடியில் 2 கட்டங்களாக ரூ.1,100 கோடி செலவில் அதிநவீன வசதிகளுடன் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும். பருவக்கால மழைநீரை சேமிக்கவும், பாசனத்துக்கு உரிய நீரை உறுதி செய்யவும், வரும் நிதியாண்டில் தரைகீழ் தடுப்பணை, கால்வாய் சீரமைப்பு, புதிய அணைக்கட்டு போன்ற நீர் செறிவூட்டும் கட்டுமானங்களும், நீர்பாசன பராமரிப்புப் பணிகளும் ரூ.734 கோடியில் மேற்கொள்ளப்படும். மேலும், அணைகள் மற்றும் கதவணைகளில் ரூ.66 கோடி மதிப்பீட்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். கல்லணை கால்வாயினை நீட்டித்தல், புனரமைத்தல் மற்றும் நவீனமயமாக்குதல் திட்டத்தின் முதற்கட்டமாக ரூ.1,037 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவுபெறும் நிலையில் உள்ளது. இந்நிலையில், 2-ம் கட்டமாக வரும் நிதியாண்டில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் 23 லட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும். அரசு சார் இணையவழிச் சேவைகளை மேலும் துரிதமாக்கும் வகையில், மாநில தரவு மையம் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.200 கோடியில் தரம் உயர்த்தப்படும். சாலை கட்டமைப்பு தரத்தை மேம்படுத்த நெடுஞ்சாலை, சிறுதுறைமுகங்கள் துறைக்கு ரூ.20,043 கோடி சாலை கட்டமைப்பின் தரத்தை மேம்படுத்தும் விதமாக, முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.4,881 கோடியில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதவிர ரூ.2,824 கோடியில் 16 புறவழிச் சாலைகள் அமைக்கும் பணிகளும், ரூ.2,006 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.8,365 கோடியும், சென்னை எல்லைச் சாலை திட்டத்துக்கு ரூ.2,267 கோடியும், சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தடத் திட்டத்துக்கு ரூ.908 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறைக்கு ரூ.20,043 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சிவகாசி வெளிவட்ட சாலை, மன்னார்குடி வட்டச் சாலை, திண்டுக்கல் நகருக்கு புறவழிச் சாலை, திருச்சி ஸ்ரீரங்கம் இடையே உயர் மட்ட பாலம், அவினாசி முதல் மேட்டுப்பாளையம் வரை 4 வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி, விழுப்புரம் மாரங்கியூர் - ஏனாதிமங்கலம் சாலையில் கோரையாறு குறுக்கே பாலம் கட்டும் பணி ஆகியவை ரூ.665 கோடியில் வரும் நிதியாண்டில் மேற்கொள்ளப்பட உள்ளது. அதன் தொடர்ச்சியாக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூர் முதல் உத்தண்டி வரையில் உள்ள 14.6 கிமீ நீளமுள்ள பகுதியில் 4 வழி உயர்மட்ட வழித்தடம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும். மேலும், தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த சாலை கட்டமைப்பு திட்டங்களை சிறந்த மேலாண்மை முறைகளை பின்பற்றி செயல்படுத்துவதற்காக ‘தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம்’ அமைப்பதற்கான சட்டமசோதா நடப்பு கூட்டத் தொடரிலேயே விரைவில் அறிமுகப்படுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கிளாம்பாக்கத்துக்கு ரூ.4,625 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம்: சென்னை மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்கு இந்த பட்ஜெட்டில் ரூ.12,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிகள் ரூ.63,246 கோடி செலவில் 119 கி.மீ தூரத்துக்கு 3 வழித்தடங்களில் நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக பூந்தமல்லி முதல் கோடம்பாக்கம் வரையிலான உயர் வழித்தடம் அடுத்த ஆண்டு டிசம்பரில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். சென்னை மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்கு இந்த பட்ஜெட்டில் ரூ.12,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் வழித்தடத்தை நீட்டிக்க விரிவான திட்ட அறிக்கை ரூ.4,625 கோடி மதிப்பீட்டில் பெறப்பட்டு, மத்திய அரசின் மூலதன பங்களிப்புக்காக ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. கோயம்பேடு - ஆவடி, பூந்தமல்லி - பரந்தூர் வரையிலும் 2-ம் கட்டத்தின் நீட்டிப்பு வழித்தடங்களுக்கு விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்படும். பொதுத்துறை, வணிக மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் அலுவலகத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே மரபுசார் வடிவமைப்புடன் 27 தளங்களைக் கொண்ட முத்திரைப் பதிக்கும் கட்டிடம் ரூ.688 கோடியில் கட்டப்படும். பிராட்வே பேருந்து நிலையம் அருகில் ஒருங்கிணைந்த பன்முகப் போக்குவரத்து வசதிகள் கொண்ட பேருந்து நிலையம், நவீன வசதிகள் கொண்ட அலுவலக வளாகம் ரூ.823 கோடி செலவில் உருவாக்கப்படும். 10,000 புதிய சுயஉதவி குழுக்கள் உருவாக்கப்படும்: சுயஉதவி குழு இயக்கத்தில் சேராத பெண்கள் மற்றும் விளிம்புநிலை வாழ் குடும்ப உறுப்பினர்களை கொண்டு, வரும் நிதி ஆண்டில் 10,000 புதிய சுய உதவிகுழுக்கள் உருவாக்கப்படும். ரூ.35,000 கோடி அளவுக்கு வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை, மதுரை ஆகிய முக்கிய நகரங்களில் 345 பெண்கள் பயன்பெறும் வகையில் ரூ.26 கோடியில் 3 புதிய தோழி விடுதிகள் கட்டப்படும். உயர்கல்வியை தொடர விரும்பும் மூன்றாம் பாலினத்தவரின் கல்வி கட்டணம், விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்து கல்வி செலவுகளையும் அரசே ஏற்கும். திருநங்கைகள் நல வாரியம் மூலம் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டத்துக்காக இந்த ஆண்டு ரூ.2 கோடி கூடுதலாக அரசால் வழங்கப்படும். அரசு கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள், பாதுகாப்பு இல்லங்கள் ஆகிவற்றை திறம்பட செயல்படுத்தவும், அதன் நிர்வாகத்தை மேம்படுத்தவும், உரிய ஆலோசனை வழங்க அமைக்கப்பட்ட முன்னாள் நீதிபதி கே.சந்துரு குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் இத்துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது. இதுவரை சமூக பாதுகாப்பு துறை என்ற பெயரில் இயங்கி வந்த இத்துறை, இனி ‘குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை’ என பெயர் மாற்றம் செய்யப்படும். முதல்கட்டமாக கோவையில் குழந்தைகளுக்கான திறன் பயிற்சி கூடம், ஆலோசனை அறைகள், நூலகம், குடும்ப பார்வையாளர்கள் அறை, மருத்துவ பரிசோதனை அறை, பூங்கா, விளையாட்டு மைதானம் ஆகிய வசதிகளுடன் ‘பூஞ்சோலை’ என்ற பெயரில் மாதிரி இல்லம் அமைக்கப்படும். இதற்காக, சமூகநலம், மகளிர் உரிமை துறைக்கு ரூ.7,830 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சி ஊராட்சித் துறைக்கு ரூ.27,922 கோடி: தமிழக பட்ஜெட்டில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு ரூ.27,922 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது: அடுத்து வரும் 2 ஆண்டுகளில் மிகவும் வறிய நிலையில் உள்ள சுமார் 5 லட்சம் ஏழைக் குடும்பத்தினருக்கு அரசின் உதவிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து வழங்கி, விரைவில் அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்திட அரசு உறுதியாக உள்ளது. முதல்வரின் தாயுமானவர் திட்டம்: ‘முதல்வரின் தாயுமானவர் திட்டம்’ என்ற பெயரில் புதிய திட்டத்தில் சமூகத்தில் விளிம்பு நிலையில் வாழ்ந்திடும் மக்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மட்டுமின்றி கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, வீடுகள் போன்ற அனைத்து உதவிகளும் வழங்கப்படும். இத்திட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள், வங்கிகளின் பங்கேற்பும் உறுதி செய்யப்படும். இந்த வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு ரூ.27,922 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கடந்த 3 ஆண்டுகளில் ரூ.1,328 கோடி மதிப்பில் பணிகள் முடிவுற்று, ரூ.1,659 கோடி மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்திட்டத்தை செயல்படுத்த வரும் நிதியாண்டில் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்படும். அம்ருத் 2.0 திட்டத்தில், ரூ.4,942 கோடி மத்திய அரசு பங்களிப்புடனும், ரூ.9,047 கோடி மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பங்களிப்புடனும் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 2024-25-ம் ஆண்டில், பல்வேறு திட்ட நிதிகளைத் திரட்டி நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளில் 4,457 கி.மீ. நீளமுள்ள சாலைகள் ரூ.2,500 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்படும். இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம், திருநீர்மலையில் ரூ26 கோடியில் ரோப்கார் வசதி: செங்கல்பட்டு திருநீர்மலை, மதுரை திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள கோயில்களுக்கு கம்பிவட ஊர்தி வசதி ரூ.26 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும். ஆயிரம் ஆண்டு பழமையான கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள இந்த ஆண்டு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். சுற்றுலாத் துறை சார்பில் குமரி, மதுரை, தஞ்சாவூர், திண்டுக்கல், கோவை, திருவண்ணாமலை உள்ளிட்ட முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒருங்கிணைந்த சுற்றுலாத் தல மேம்பாட்டுத் திட்டங்கள் அரசு, தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும். ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தில் 8,00,000 கான்கிரீட் வீடுகள்: சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கிராமப்பகுதிகளில் சுமார் 8 லட்சம் குடிசை வீடுகளில் மக்கள் வாழ்ந்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. "குடிசையில்லா தமிழகம்" என்ற இலக்கைஎய்திடும் வகையில், வரும் 2030-ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் ஊரகப்பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். முதல்கட்டமாக, 2024-25ம் ஆண்டில் ஒரு லட்சம் புதிய வீடுகள் ஒவ்வொன்றும் ரூ.3.50 லட்சம் செலவில் உருவாக்கப்படும். சொந்தமாக வீட்டுமனை இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்குவதுடன், வீடு கட்டுவதற்கான தொகை அவர்தம் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும். தங்கள் கனவு இல்லங்களை பயனாளிகள் தாங்களே உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்பு என குறிப்பிடத்தக்க அம்சங்களைத் தாங்கிய இப்புதிய திட்டம் ‘கலைஞரின் கனவு இல்லம்’ என்றபெயரில் வரும் நிதியாண்டில்ரூ.3,500 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும். முதல்வரின் கிராமச்சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 2024- 25ம் ஆண்டில் 2,000 கி.மீ. சாலை மேம்பாட்டுப் பணிகள் ரூ.1,000 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் 2-ன் கீழ், 2024-25ம் ஆண்டில் 2,482 கிராம ஊராட்சிகளில் ரூ.1,147 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்படும். ஊரகப்பகுதிகளில் உள்ள பழைய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்குப் பதிலாக ரூ.365 கோடி மதிப்பீட்டில் 2,000 புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் இந்த ஆண்டு அமைக்கப்படும். மாநகராட்சிப் பகுதிகளை அடுத்துள்ள விரிவாக்கப் பகுதிகளில் வரும் ஆண்டில் ரூ.300 கோடி மதிப்பில் சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும். ஊரகப் பகுதிகளில் அமைந்துள்ள சிறுபாசன ஏரிகள், குளங்கள் மற்றும் வரத்துக் கால்வாய்களை சீரமைத்து மேம்படுத்தும் வகையில், இந்த ஆண்டில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் தலைசிறந்த அறிவியல் நிறுவனங்களின் வழிகாட்டுதலுடன் மக்கள் பங்களிப்போடு 5,000 நீர்நிலைகளைப் புனரமைக்கும் பெரும் திட்டம் செயல்படுத்தப்படும். 2024-25-ம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்துக்காக ரூ.3,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 3500 புதிய பேருந்துகள்: பேருந்து தேவையை கருத்தில்கொண்டு இந்த நிதியாண்டில் தமிழகத்தில் 3 ஆயிரம் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். இதுமட்டுமின்றி ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் 500 மின் பேருந்துகள் கொள்முதல் செய்து இந்நிதியாண்டில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். மேலும், இந்த வரவு செலவுத் திட்டத்தில் மகளிருக்கான இலவச பேருந்துக் கட்டண மானியத்துக்காக ரூ.3,050 கோடி, மாணவர்களுக்கான பேருந்து கட்டண மானியத்துக்காக ரூ.1,800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோவையில் அவிநாசி சாலை - சத்தியமங்கலம் சாலை வழித்தடத்தில் ரூ.10,740 கோடி, மதுரையில் திருமங்கலம் - ஒத்தக்கடை வழித்தடத்தில் ரூ.11,368 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தயாரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கைகள், மூலதன பங்களிப்பு பெறுவதற்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அனுமதி அளித்ததும் பணிகள் தொடங்கப்படும். ரூ.60 ஆயிரம் கோடி முதலீட்டில் நீரேற்று புனல் மின் நிலையங்கள்: 2030-க்குள் 100 பில்லியன் யூனிட் கூடுதல் புதுப்பிக்கத்தக்க பசுமை ஆற்றலை தமிழ்நாட்டில் உருவாக்க, முதற்கட்டமாக புதிய பசுமை ஆற்றல் நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் 11,500 மெகாவாட் திறனுள்ள நீரேற்று புனல் மின் நிலையங்கள் அமைப்பதற்கு உகந்த 12 இடங்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளன. அவ்வகையில், பொதுத்துறை, தனியார் பங்கேற்புடன், சுமார் ரூ.60 ஆயிரம் கோடி முதலீட்டில் இந்த புதிய நீரேற்றுபுனல் மின் நிலையங்கள் உருவாக்கப்படும். பல்லுயிர் நலன் காக்கும் முயற்சியாக, அழிந்து வரும் உயிரினங்கள் பாதுகாப்பு நிதி ஒன்றை ரூ.50 கோடி செலவில் அமைக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கென முதற்கட்டமாக ரூ.5 கோடியை அரசு வழங்கும். இதன்மூலம், அழிந்துவரும் மற்றும் விளிம்பு நிலையிலுள்ள உயிரினங்களைப் பாதுகாக்க உரிய திட்டங்கள் வகுக்கப்படும். மேலும், நாகப்பட்டினம், சென்னையில் கடல் ஆமை பாதுகாப்பு மையங்கள், தஞ்சை மாவட்டம் மனோரா பகுதியில் சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையம் அமைக்கப்படும். எண்ணூர் கடற்கழிமுகப் பகுதியை ரூ.40 கோடியில் பாதுகாத்து மீட்டெடுப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். சென்னை மெரினா, ராமநாதபுரம் அரியமான், தூத்துக்குடி காயல்பட்டினம், திருநெல்வேலி கோடாவிளை, நாகை காமேஸ்வரம், புதுகை கட்டுமாவடி, கடலூர் சில்வர் கடற்கரை, விழுப்புரத்தில் மரக்காணம் ஆகிய கடற்கரைப் பகுதிகளில் ரூ.250 கோடியில் மேம்பாட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி, நீலக் கொடி கடற்கரைகள் சான்றுகளைப் பெற திட்டமிடப்பட்டுள்ளது. 3 லட்சம் சதுர அடியில் கலைஞர் பன்னாட்டு அரங்கம்: கைவினைஞர் மேம்பாட்டுத் திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த உள்ளது. ஆண்டுதோறும் 10 ஆயிரம் பேர் பயன்பெறும் வகையில், ரூ.20 கோடியில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். சென்னையில் ரூ.227 கோடியில், 4 லட்சம் சதுரஅடி பரப்பில், கைத்தறி, கைவினைப் பொருட்களைக் காட்சிப்படுத்தும் கண்காட்சி அரங்கம், கைவினைப் பொருட்களுக்கான புத்தாக்க மையம், திறந்தவெளி விற்பனை அரங்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய ஒன்றிணைந்த வளாகம் நிறுவப்படும். சென்னையை உலகத்தரம் வாய்ந்த மாநகரமாக மாற்றியமைக்கும் வகையில், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு பகுதியில் 3 லட்சம் சதுரஅடி பரப்பில், 10 ஆயிரம் பேர் பார்வையிடும் வகையிலான சர்வதேச கண்காட்சி அரங்கம், 5 ஆயிரம் இருக்கைகள் கொண்ட பன்னாட்டுக் கூடம் கொண்ட உலகத்தரம் வாய்ந்த ‘கலைஞர் பன்னாட்டு அரங்கம்’ நவீன வசதிகளுடன் அமைக்கப்படும். டெல்லியில் ரூ.257 கோடியில், 3 லட்சம் சதுரஅடி பரப்பில் புதிதாக தமிழ்நாடு இல்லம் கட்டப்பட உள்ளது. அதேபோல, கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்க வளாகத்தில், தமிழர்களின் வரலாறு, பண்பாடு, கலைகளை அரங்கேற்றம் செய்யும் வகையில் ரூ.20 கோடியில் பசுமைப் பரப்புகளுக்கான வளாகமும் நடப்பாண்டில் உருவாக்கப்படும். ரூ.373 கோடியில் நவீனமயமாகும் தீயணைப்பு துறை: தமிழகத்தில் உள்ள 1,551 காவல் நிலையங்களிலும், 372 சிறப்பு பிரிவுகளிலும் குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் வலைப்பின்னல் திட்டத்தை (சிசிடிஎன்எஸ்) மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி இத்திட்டமானது ரூ.124 கோடியில் மேம்படுத்தப்பட்டு பொதுமக்களிடம் இருந்து இணையவழியில் புகார்களை பதிவு செய்வது உள்ளிட்ட அம்சங்களுடன் சிசிடிஎன்எஸ் 2.0 என்ற ஒரு புதிய திட்டமாக அடுத்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும். அதேபோல ரூ.373 கோடியில் தீயணைப்பு துறை வலுப்படுத்தப்பட்டு நவீனமயமாக்கப்பட உள்ளது. அதற்கேற்ப நவீன தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மீட்பு கருவிகளை வாங்குவதற்காக ரூ.137 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர ரூ.104 கோடியில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் உயர்ரக பாதுகாப்புடன் கூடிய புதிய நவீன சிறைச்சாலை அமைக்கப்பட உள்ளது. தடய அறிவியல் துறைக்கும் புதிய கருவிகளை வாங்குவதற்காக ரூ.26 கோடி வழங்கப்படும். அதேபோல சென்னை தலைமையகத்தில் சரக்கு மற்றும் சேவை வரிக்கான வருவாயைப் பெருக்கவும், வரி ஏய்ப்பை தடுக்கும் விதத்திலும் தகுந்த தொழில்நுட்ப வல்லுநர்களுடன் ரூ.4 கோடியில் தரவுகள் பகுப்பாய்வு மையமும் அமைக்கப்பட இருக்கிறது. காலநிலை மாறுபாடுகளை கணக்கிட்டு நிகழ் நேர மழைப்பொழிவு மற்றும் வானிலை அளவீடுகளை பெறுவதற்காக 1,400 புதிய தானியங்கி மழைமானிகளையும், 100 புதிய தானியங்கி வானிலை நிலையங்களையும் அமைப்பதற்காக தமிழக அரசு ரூ.32 கோடிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் விரைவான கணினி சேவைகளை பெறுவதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பேரிடர் அபாயக் குறைப்புக்கான கள நிலவரங்களுக்கு உகந்த செயல்பாட்டு உத்திகளை வகுக்க ஏதுவாக ‘தொழில்நுட்ப மையம்’ புதிதாக அமைக்கப்பட உள்ளது. வானிலை முன்னறிவிப்பை வலுப்படுத்தும் விதமாக ராமநாதபுரம், ஏற்காடு ஆகிய இடங்களில் ரூ.52 கோடியில் 2 நவீன டாப்ளர் ரேடார்களை அமைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு ரூ.13,720 கோடி: மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம், 1.15 கோடி குடும்பத்தலைவிகளுக்கு ஒவ்வோர் மாதமும் ரூ.1,000 அவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த தொகை அவர்களுக்கு பேருதவியாக இருப்பது மட்டுமின்றி, அவர்கள் மாதந்தோறும் கணிசமாக சேமிக்கவும் வழிவகுக்கிறது. மகளிர் நலன் காக்கும் இத்திட்டத்துக்காக, இந்த ஆண்டு ரூ.13,720 கோடி நிதி ஒதுக்கப்படும்.
தமிழக பட்ஜெட்டுக்கு தலைவர்களின் ஆதரவும், எதிர்ப்பும்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-20 07:31:00
சென்னை: தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டுக்கு கட்சிகளின் தலைவர்கள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: மத்திய அரசு இதுவரை பேரிடர் நிதியிலிருந்து நிதி அளிக்காமல் துரோகம் செய்கிறது. நான் முதல்வன் திட்டத்தின்கீழ் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்த்தது, பல துறைகளுக்கு நிதி கூடுதலாக ஒதுக்கி இருப்பது வரவேற்கத்தக்கது. இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: இடை பாலினத்தவர்களுக்கு கல்வி, விடுதி இலவசமாக வழங்குவதும், கல்லூரி கல்வி செலவை அரசே ஏற்பதும் அவர்களின் சமூக ஒப்புதலுக்கு வழிவகுக்கும். உயர் கல்வி பெறும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தும் தமிழ்ப்புதல்வன் திட்டமும் வர வேற்கத்தக்கது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: தொழில் புத்தாக்க மையங்கள், தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், செயற்கை நுண்ணறிவு கல்வி, திறன்மிகு வகுப்பறை, அனைத்து தொழில் படிப்பு மாணவர்கள் கல்வி கட்டண உதவி ஆகியவை வளர்ந்து வரும் அறிவுசார் இளைய சமூகத்தின் வாழ்க்கை மேம்பாட்டுக்கும், தொழில் வளர்ச்சிக்கும் மிகுந்த ஊக்கம் அளிக்கக் கூடியது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: ‘தடைகளைத் தாண்டி -வளர்ச்சியை நோக்கி’ எனும் 2024-25 நிதிநிலை அறிக்கை, தமிழ் நாட்டின் சமச்சீரான வளர்ச்சிக்கும், ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்னும் திராவிட இயக்க அடிப்படைக் கோட்பாட்டின் வெற்றிக்கும் அடித்தளம் அமைத்திருக்கிறது. பாமக நிறுவனர் ராமதாஸ்: புதிய பாசனத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவதற்கான திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை. நெல், கரும்புக்கான கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை. மொத்தத்தில் வறட்சியான பட்ஜெட்டாக அமைந்துள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: இந்த ஆண்டாவது, மக்கள் நலன் சார்ந்த திட் டங்களைச் செயல்படுத்தும் என்று நம்பியிருந்த பொதுமக்களை, திமுக அரசின் பட்ஜெட் நட்டாற்றில் விட்டிருக்கிறது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த எரிவாயு மானியம், நியாயவிலைக் கடைகளில் கூடுதல் சர்க்கரை மற்றும் உளுத்தம் பருப்பு, மாதந்தோறும் மின்கட்டணம், பழைய ஓய்வூதியத் திட்டம், கல்விக்கடன் ரத்து உள்ளிட்டவை பட்ஜெட்டில் நிறைவேற்றப்படாதது பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்
மக்களுக்கு பயன் தராத கானல் நீர்: பட்ஜெட் குறித்து பழனிசாமி கருத்து
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-20 07:25:00
சென்னை: தமிழக பட்ஜெட் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறியதாவது: இந்த பட்ஜெட்டில் வார்த்தை ஜாலங்கள்தான் உள்ளன. மக்கள் சார்ந்த திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் இல்லை. தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு ஆண்டும் தடுப்பணைகள் கட்டப்படும் என்று அறிவித்தார்கள். இந்த பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்புகள் எதுவும் இல்லை. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் நிதி பற்றாக்குறை கொண்ட பட்ஜெட் ஆகவே தாக்கல் செய்யப்படுகிறது 2024-25 நிதியாண்டில் ரூ.3 லட்சத்து 58 ஆயிரம் கோடி பற்றாக்குறையோடு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் கடன் தொகையை ரூ.8 லட்சம் கோடி அளவுக்கு திமுக அரசு உயர்த்தியுள்ளது. இந்தியாவிலேயே கடன் வாங்கும் மாநிலத்தில் முதல் மாநிலம் தமிழகம்தான். கடன் மேலாண்மையை சரி செய்வதற்காக அமைக்கப்பட்ட நிபுணர் குழுவால் பலனில்லை. தேன் கூடும், கஞ்சனின் கருவூலமும் ஒன்றுதான். அவை இரண்டும், அவற்றை நிரப்பிட உழைத்தவனுக்கு பலன் தராது. அந்த வகையில் இந்த ஆட்சியின் பட்ஜெட் உள்ளது. இது கானல் நீர், மக்களுக்கு பயன் தராது.
தமிழக பொருளாதாரம் ஆரோக்கியமாக உள்ளது: நிதித் துறை செயலர் உதயச்சந்திரன் தகவல்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-20 07:19:00
சென்னை: நெருக்கடியான சூழல்கள் இருந்தாலும், தமிழகப் பொருளாதாரம் ஆரோக்கியமாகவே உள்ளது என்று நிதித் துறை செயலர் த.உதயச்சந்திரன் தெரிவித்தார். தமிழக அரசின் பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த நிலையில், பட்ஜெட் முக்கிய அம்சங்கள் குறித்து நிதித் துறை செயலர் த.உதயச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பணவீக்கத்தைப் பொறுத்த வரை தேசிய சராசரியைவிட தமிழகத்தில் கட்டுக்குள் உள்ளது. பொருளாதார வளர்ச்சி போன்று பணவீக்கமும் முக்கியம். பணவீக் கத்தைக் கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது. மூலதனச் செலவுகளைப் பொறுத்தவரை, 2024-25-ம் ஆண்டில் ரூ.47 ஆயிரம் கோடி அளவில் கட்டமைப்புகளுக்காக செலவிட உள்ளோம். குறிப்பாக, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்காக இதில் அதிகம் செலவிட திட்டமிட்டுள்ளோம். தமிழகத்தின் நிதிப் பற்றாக்குறை, 3.5 சதவீதத்துக்குள் உள்ளது. மிக நெருக்கடியான காலத்தில், வரி வருவாய் சிக்கல்களுக்கு உள்ளானது. இதற்கு காரணம், தமிழகம் சந்தித்த 2 தொடர் இயற்கைப் பேரிடர்கள். இதனால் வருவாய் குறைவு மற்றும் வெள்ள நிவாரணத்துக்கும் செலவழிக்க வேண்டியிருந்தது. இந்த நெருக்கடிக்கிடையில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், தமிழகப் பொருளாதாரம் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது. முக்கியமாக, சொந்த வரி வருவாயில், வணிவரித் துறையில் இருந்து 15 சதவீத வளர்ச்சி எதிர்பார்க்கிறோம். பத்திரப் பதிவுத் துறையில் கடந்தாண்டு எதிர்பார்த்த வளர்ச்சி இல்லை. ஆனால், அடுத்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கிறோம். அதேபோல் மற்ற வரி வருவாய்களும் அதிகம் வரும் என தெரிகிறது. வணிகவரித் துறையில் நிறைய சீர்திருத்தம் செய்துள்ளோம். வரி ஏய்ப்பை தடுக்கவும், நிகழ்நேர தகவல் பரிமாற்றத்தின் மூலம் வரி வசூலைக் கண்காணிக்கவும், ஐதராபாத் ஐஐடியுடன் ஒப்பந்தம் செய்து தரவு பகுப்பாய்வு குழுவை அமைத்துள்ளோம். இதை கடந்தாண்டு கடைசி காலாண்டில் கொண்டுவந்தோம். அதேபோல், பத்திரப்பதிவுத் துறையிலும் நிறைய மாற்றங்கள் செய்துள்ளோம். இந்த முயற்சிகள் அடுத்த நிதியாண்டில் பலன் அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதன்மூலம் வரி வருவாய் திரட்டப்பட்டு, குறிப்பிட்ட இலக்கை அடைய முடியும். மத்திய அரசின் நிதிப்பகிர்வு 6.6 சதவீதத்தில் இருந்து 4.08 சதவீதமாக குறைந்துள்ளது. இதுதவிர செஸ் மற்றும் மேல்வரி ஆகியவற்றாலும் மாநிலத்துக்கு நிதி குறைவாகவே கிடைக்கிறது. இதுகுறித்தும் மத்திய அரசிடம் நாம் வலியுறுத்தி வருகிறோம். இதுதவிர, மத்திய அரசிடம் இருந்து வரும் மானிய உதவிகள் குறைந்துகொண்டே வருகிறது. மாநிலத்தின் வரி வருவாய் ரூ.1.95 லட்சம் கோடி, வரியில்லா வருவாய் ரூ.30,728 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கனிம வளம் தொடர்பாக புதிய சீர்திருத்தம் மற்றும் வரியில்லா வருவாய் தொடர்பான திட்டங்களில் மாற்றம் கொண்டு வந்துள்ளோம். சேமிப்பு நிதியில் இருந்தும் கொண்டு வந்ததன் மூலம் இந்த நிலை எட்டப்படும். மத்திய வரி பகிர்வை பொறுத்தவரை, ஜிஎஸ்டி வருவாய் நாடு முழுவதும் அதிகரித்துள்ளதால், நிதிக்குழு பரிந்துரை அடிப்படையில் தமிழகத்துக்கான பகிர்வு அதிகரிக்கும் என்பதால் திருத்திய மதிப்பீடுகளில் அதிகமாக கொடுத்துள்ளோம். மேலும், மோட்டார் வாகன வரி உயர்விலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இருசக்கர வாகனங்களைவிட, நான்கு சக்கர வாகனங்கள், சொகுசு வாகனங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் வரி வருவாய் திரட்டுவதற்கான நம்பிக்கை உள்ளது. ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் அடுத்த நிதியாண்டில் இருந்து நடைமுறைக்கு வரும். தொழில்நுட்ப சிக்கல், செமி கண்டக்டர் பற்றாக்குறை காரணமாக மாணவர்களுக்கான மடிக்கணினி இதுவரை வழங்க முடியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் 2 கோடி உறுப்பினர் சேர்க்க இலக்கு நிர்ணயம்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-20 07:14:00
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று அக்கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. விஜய் மக்கள் இயக்கம் மூலமாக பல்வேறு நலத்திட்டங்களை செய்துவந்த நடிகர் விஜய், கடந்த 2-ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் நேற்று நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தலைமை நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில், கட்சியின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கை நடத்த வேண்டும். நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டு வரும் சிறப்பு செயலி மூலமாக, உறுப்பினர் சேர்க்கை முகாம்களை ஒருங்கிணைக்க வேண்டும். கட்சியில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்து, உறுப்பினர் சேர்க்கைப் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தினார். மேலும், தொகுதிப் பொறுப்பாளர்கள் தங்களது பகுதிகளில் உள்ள வாக்காளர் விவரங்களை தெரிந்து வைத்திருக்கவேண்டும். கட்சி சார்புள்ளவர்கள், சாராதவர்கள் போன்ற விவரங்களையும் சேகரிக்க வேண்டும். கட்சித் தலைவர் விஜய் உத்தரவின்பேரில் தொகுதி பொறுப்பாளர்களுக்கு விதிக்கப்படும் நிபந்தனைகள், கட்டுப்பாடுகளை ஏற்று செயல்பட வேண்டும். கட்சியின் பெயரில் போஸ்டர்கள், பேனர்கள் தயாரிக்கும்போது, கட்சித் தலைமை வழங்கும் நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். கட்சியின் அதிகாரப்பூர்வ தகவல்கள், கட்சியின் சமூக வலைதளங்களில் வெளியிடப்படும். இதை நிர்வாகிகள் பின்பற்றி, 2 கோடி உறுப்பினர் சேர்க்கையை உறுதி செய்யவேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தினார்.
ஆம்னி பேருந்து விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தீர்ப்புக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
செய்திப்பிரிவு
புதுடெல்லி
2024-02-20 07:00:00
புதுடெல்லி: தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து தனியார் ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே இயக்கப்பட வேண்டும் என தமிழக போக்குவரத்து ஆணையர் கடந்த ஜன. 24-ம் தேதி உத்தரவிட்டு இருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மற்றும் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்தவழக்குகளை விசாரித்தஉயர் நீதிமன்ற தனி நீதிபதி, ‘‘இந்த வழக்கில் மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கோயம்பேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைத்துள்ள கேரேஜ்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும், சூரப்பட்டு, போரூர் டோல்கேட்டுகளில் மட்டுமே பயணிகளை இறக்கி, ஏற்றலாம் என்றும், அதேபோல கண்டிப்பாக கிளாம்பாக்கம் பேருந்து முனையத்துக்குள் செல்லாமல் தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடாது எனவும் கூறி வழக்கு விசாரணையை வரும் ஏப்.15-க்கு தள்ளி வைத்திருந்தார். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த இடைக்கால உத்தரவை எதிர்த்தும், போக்குவரத்து ஆணையரின் உத்தரவை எதிர்த்தும், கோயம்பேட்டில் இருந்தே ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்க கோரியும் தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சூர்யகாந்த், கே.வி.விஸ்வநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதி இடைக்கால உத்தரவைத்தான் பிறப்பித்துள்ளார். அதற்குள் இந்தவிவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஏன் தலையிட வேண்டும். ஏப்.15-ம் தேதி இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தங்கள் வாதங்களை முன்வைக்கலாம் என்றனர். மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், பொதுமக்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவில் தலையிட முடியாது என தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர். இதையடுத்து தமிழக அரசின் போக்குவரத்து ஆணையர் நேற்று பிறப்பித்துள்ள செய்திக்குறிப்பில், ‘சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் சூரப்பட்டு டோல்கேட், போரூர் டோல்கேட் மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் ஆகிய 3 இடங்களில் மட்டுமே பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும். மீறினால் சம்பந்தப்பட்ட உரிமையாளர் களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையும் எடுக்கப் படும்’’என எச்சரித்துள்ளார்.
பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்: அமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-20 06:59:00
சென்னை: தமிழக அரசின் 2024-25 நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்கிறார். தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் திமுக வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தது. முன்னதாக, திமுகவின் தேர்தல் அறிக்கையில், வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 2021-ம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்று முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்தபோதே, முதல்முறையாக தனி வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தொடர்ந்து, 2022, 2023-ம் ஆண்டுகளிலும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழக அரசின் பொது பட்ஜெட், சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, வேளாண் துறைக்கான 4-வது பட்ஜெட்டை பேரவையி்ல் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று காலை தாக்கல் செய்கிறார். வேளாண் பட்ஜெட்டில், விவசாயிகளுக்கான புதிய அறிவிப்புகள் மட்டுமின்றி, கூட்டுறவு, உணவுத்துறைகள் தொடர்பான திட்டங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகளும் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, 2024-25ம் ஆண்டுக்கான முன்பண மானிய கோரிக்கை, நிதி ஒதுக்க சட்ட முன்வடிவு ஆகியவை நிறைவேற்றப்படும். தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கும்.
அரசு பள்ளியில் மரத்தடியில் கல்வி பயின்ற குழந்தைகள்: வீட்டுக்கு அழைத்துச் செல்ல முயன்ற பெற்றோர் @ திருவிடைமருதூர்
செய்திப்பிரிவு
கும்பகோணம்
2024-02-20 06:58:00
கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே மருத்துவக்குடியில் சேதமடைந்த அரசுப் பள்ளிக் கட்டிடம் இடிக்கப்பட்டு 6 மாதங்களாகியும் புதிய கட்டிடம் கட்டப்படாததால், மரத்தடியில் பயின்ற அரசுப் பள்ளி மாணவர்களை பெற்றோர் வீட்டுக்கு அழைத்துச் செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே ஆடுதுறையை அடுத்த மருத்துவக்குடியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு 45 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இரு ஆசிரியர்கள் உள்ளனர். இந்தப் பள்ளிக் கட்டிடம் மிகவும் சிதிலமடைந்த நிலையில் இருந்ததால், புதிய கட்டிடம் கட்டுவதற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன் பழைய கட்டிடம் இடிக்கப்பட்டது. பின்னர், அங்குள்ள திரவுபதி அம்மன் கோயில் வளாகத்தில் பள்ளி தற்காலிகமாக இயங்கி வந்தது. பின்னர், அங்கு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டதால், பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தடியில் அமர்ந்து மாணவர்கள் கல்வி பயிலும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று காலை பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தடியில் அமர்ந்து மாணவ, மாணவிகள் படித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர், பள்ளிக்கு இதுவரை புதிய கட்டிடம் கட்டப்படாததைக் கண்டித்து, தங்களது குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். அப்போது அவ்வழியாக வந்த ஆடுதுறை பேரூராட்சித் தலைவர் ஸ்டாலின், பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இதுகுறித்து அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், மீண்டும் ஒருமுறை கோரிக்கை வைத்து, பள்ளிக் கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், அதுவரை பள்ளியின் அருகே ஒரு வீட்டின் மாடியில் உள்ள கொட்டகையில் மாணவ, மாணவிகள் கல்வி பயில நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து பெற்றோர் கலைந்து சென்றனர்.
திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த வேண்டும்: அமைச்சர்கள், ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-20 06:51:00
சென்னை: தமிழக நிதியமைச்சரின் பட்ஜெட், அரசின் கனவு என்றும், அந்த கனவை நனவாக்க அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் பாடுபடுவதுடன், திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின அறிவுறுத்தியுள்ளார். சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தடை களைத் தாண்டி, வளர்ச்சியை நோக்கி தமிழகம் சீர்மிகு பயணத்தை நடத்தி வருகிறது. பொதுவாக பட்ஜெட் என்பது நிதியை மையமாகக் கொண்டு தயாரிக்கப்படும். சமூகநீதியை மையமாகக் கொண்டு தயாரான இந்த அறிக்கை, அனைத்து மக்களுக்குமான சமநீதியையும் - சமநிதியையும் வழங்கி தமிழகத்தின் சீரான வளர்ச்சிக்கான பாதைக்கு அதிவேகப் பயணத்தை உறுதி செய்துள்ளது. இந்தியாவின் பொருளாதாரத்துக்கு 9 சதவீத பங்கை தருவதாக தமிழகத்தின் பொருளாதாரம் வளமாக உள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. மாநிலத்தின் பணவீக்கம் 5.97 சதவீதமாக குறைந்துள்ளது. ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டில் நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழகம் உயர்ந்துள்ளது. தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக 14-வது இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு தமிழகத்தை உயர்த்தி இருக்கிறோம். புத்தாக்கத் தொழில்கள் வரிசையில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. இப்படி அனைத்துத் துறையிலும் முன்னேறி வரும் மாநிலமாகத் தமிழகம் உள்ளது. 7 மாபெரும் கனவுகள்: அனைத்துத் துறை வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி என்பதே 'திராவிட மாடல்' வளர்ச்சியின் இலக்குகளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம். இந்த வளர்ச்சியின் அடுத்தகட்ட உயர்வை அடையாளம் காட்டுவதாக தமிழக பட்ஜெட் அமைந்துள்ளது. இந்த பட்ஜெட் 7 மாபெரும் கனவுகளை மாபெரும் இலக்காகக் கொண்டுள்ளது. குடிமை முதல் விண்வெளி வரை அனைத்தையும் உள்ளடக்கிய அறிக்கையாக இது அமைந்துள்ளது. ஏழு பெரும் கனவுகளையும் முழுமையாக நிறைவேற்றும்போது தமிழகம் நாட்டில் சிறந்த மாநிலமாக திகழும் காலம் விரைவாக ஏற்படும். அனைத்தும் நனவாகும்: இவை நமது அரசின் கனவுகள் மட்டுமல்ல, நனவாகப் போகும் கனவுகள். நாளை முதல் அனைத்தும் நனவாகும். துறை சார்ந்த அமைச்சர்களும், துறையின் செயலர்களும் இந்த திட்டங்கள் எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டனவோ அதை மனதில் வைத்து சிறப்பாகச் செயல்படுத்திக் காட்ட வேண்டும். மாவட்ட ஆட்சியர்களும் மாவட்ட நிர்வாகமும் தங்களுக்கான திட்டங்களை மிகமிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பிப். 24, 25 தேதிகளில் மழை பெய்ய வாய்ப்பு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-20 06:41:00
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரைக் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இன்று முதல் வரும் 23-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டம் நிலவ வாய்ப்புள்ளது. வரும் 24-ம் தேதி கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. உள்தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதேபோல, வரும் 25-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
3 லட்சம் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000: தமிழக பட்ஜெட்டில் ‘தமிழ் புதல்வன்’ திட்டம் அறிவிப்பு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-20 06:30:00
சென்னை: அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, உயர் கல்வியில் சேரும் 3 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ என்ற மாபெரும் திட்டம் வரும் நிதி ஆண்டில் அறிமுகம் செய்யப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்த நிலையில், தமிழக அரசின் 2024-25 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தாக்கல் செய்தார். முன்னதாக, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற அவர், பட்ஜெட் அடங்கிய கையடக்க கணினியுடன் பேரவைக்கு வந்தார். பேரவை தலைவரின் அறிவிப்பை தொடர்ந்து, காலை 10 மணிக்கு பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கி, பகல் 12.07 மணிக்கு நிறைவு செய்தார். நிதித்துறை பொறுப்பை ஏற்ற பிறகு, அவர் முதல்முறையாக தாக்கல் செய்த பட்ஜெட் இது. பட்ஜெட் உரையில், பல்வேறு புதிய திட்டங்கள், நிதி ஒதுக்கம் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசுக்கு 7 முதன்மையான நோக்கங்களை கொண்ட ஒரு மாபெரும் தமிழ்க் கனவு உண்டு. சமூக நீதி, கடைக்கோடி தமிழர் நலன், உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், மகளிர் நலன் காக்கும் சமத்துவப் பாதை, பசுமைவழி பயணம், தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் என்ற 7 இலக்குகளை முன்வைத்தே இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. இந்த ஆண்டில் 1 லட்சம் வீடுகள்: குறிப்பாக, குடிசை இல்லாத தமிழகம் என்ற இலக்கை அடையும் வகையில் 2030-ம் ஆண்டுக்குள் கிராமப்புற பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். இதில் முதல் கட்டமாக, வரும் நிதி ஆண்டில் தலா ரூ.3.50 லட்சம் செலவில் ஒரு லட்சம் புதிய வீடுகள் உருவாக்கப்படும். ‘கலைஞரின் கனவு இல்லம்’ என்று பெயரிடப்பட்ட இத்திட்டத்துக்கு ரூ.3,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தலைசிறந்த அறிவியல் நிறுவனங்களின் வழிகாட்டுதலில், மக்கள் பங்களிப்புடன் 5 ஆயிரம் நீர்நிலைகளை சீரமைக்கும் திட்டம் ரூ.500 கோடியில் செயல்படுத்தப்படும். தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் 2.2 சதவீதம் பேரில் மிகவும் வறிய நிலையில் உள்ள 5 லட்சம் ஏழை குடும்பத்துக்கு அரசின் உதவிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து வழங்கி, அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்கும் வகையில், ‘முதல்வரின் தாயுமானவர் திட்டம்’ என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும். 1.15 கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்துக்கு ரூ.13,720 கோடி ஒதுக்கப்படும். நீலகிரி, கொடைக்கானல், வால்பாறை போன்ற பகுதிகளுக்கும் பெண்கள் இலவச பேருந்து பயண திட்டம் விரிவுபடுத்தப்படும். மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண் திட்டம், வரும் கல்வி ஆண்டு முதல், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளும் பயன் பெறும் வகையில் விரிவுபடுத்தப்பட்டு, ரூ.370 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கிராமப்பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மேலும் 2.50 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதல்வரின் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்படும். உயர்கல்வியை தொடர விரும்பும் மூன்றாம் பாலினத்தவரின் கல்வி, விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்து கல்வி செலவுகளையும் அரசே ஏற்கும். புதுமைப்பெண் திட்டம்போல, அரசுப் பள்ளிகளில் பயின்ற ஏழை மாணவர்களை சாதனையாளர்களாக மாற்றவும், உயர்கல்வி சேர்க்கையை உயர்த்தவும் ‘தமிழ்ப் புதல்வன்’ என்ற மாபெரும் திட்டம் வரும் நிதி ஆண்டில் அறிமுகம் செய்யப்படும். அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வியில் சேரும் 3 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 அவர்களது வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும். இத்திட்டத்துக்கு ரூ.360 கோடி ஒதுக்கப்படும். ரூ.2,500 கோடி கல்விக் கடன்: தேவை அடிப்படையில் ஒரு லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு வங்கிகள் மூலம் ரூ.2,500 கோடி கல்விக் கடன் வழங்கப்படும். முதல்வர் தலைமையில் தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம் ஏற்படுத்தப்படும். புதிதாக 3,000 பேருந்துகள், 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைப்பதற்கான சட்ட மசோதா, நடப்பு கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யப்படும். நகரங்களை ஒட்டிய கிராமப்புறங்களில் சிற்றுந்து சேவை நீட்டிக்கப்படும். தமிழகத்தில் 11,500 மெகாவாட் திறனுள்ள நீரேற்று புனல்மின் நிலையங்கள் அமைக்க உகந்த 12 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பொது, தனியார் பங்களிப்புடன் ரூ.60 ஆயிரம் கோடி முதலீட்டில் இவை உருவாக்கப்படும். மாநில வளர்ச்சியை பாதிக்காமல் நிதி பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் சீரிய நிதி நிர்வாக மேலாண்மையை இந்த அரசு கடைபிடித்து, 2022-23-ம் ஆண்டில் 3.46 சதவீதமாக இருந்த நிதி பற்றாக்குறையை 2023-24-ல் 3.45 சதவீத மாகவும், 2024-25-ல் 3.44 சதவீதமாகவும் குறைத்துள்ளது. மாநிலத்தின் வருவாய் ஆதாரங்களில் இருந்தே தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழகத்துக்கு இழப்பீட்டு நிதி வழங்கிய பிறகும், பேரிடர்களால் கடும் பாதிப்பை சந்தித்தபோதும், நிதி பற்றாக் குறையை குறைத்து அரசு சாதனை படைத்துள்ளது. பல்வேறு சவால்களுக்கு இடையிலும் திறன்மிகு நிதி மேலாண்மையை உறுதியாக கடைபிடித்து, அதேநேரம், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இந்த அரசு உறுதி கொண்டிருப்பதை ‘தடைகளை தாண்டி வளர்ச்சி நோக்கி’ பயணிக்கும் பட்ஜெட் கோடிட்டு காட்டுகிறது. இவ்வாறு பட்ஜெட் உரையில் அமைச்சர் தெரிவித்தார். பட்ஜெட் முக்கிய அம்சங்கள்
கீழடி அகழ் வைப்பகத்துக்கு ரூ.17 கோடி: தொடங்கும் 10-ம் கட்ட அகழாய்வு பணி
செய்திப்பிரிவு
திருப்புவனம்
2024-02-20 06:25:00
திருப்புவனம்: கீழடி திறந்தவெளி அகழ் வைப்பகத் துக்கு ரூ.17 கோடி ஒதுக்கியதுக்கும், 10-ம் கட்ட அகழாய்வுப் பணி தொடங்குவதற்கும், அப்பகுதி மக்கள், தமிழ் ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்ட நகர நாகரிகம் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அங்கு இதுவரை 9 கட்ட அகழாய் வுப் பணிகள் நடந்து முடிந்துள்ளன. இதேபோல், அருகிலுள்ள கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட இடங்களிலும் அகழாய்வுகள் நடைபெற்றன. இங்கும் ஆயிரக்கணக்கான தொல் பொருட்கள் கண்டறியப்பட்டன. இந்த தொல்பொருட்களை பொதுமக்கள் பார்வையிடும் வகையில், உலகத் தரம் வாய்ந்த கீழடி அகழ் வைப்பகம் அமைக்கப்பட்டது. இதை பல லட்சம் பேர் தினந்தோறும் பார்வையிட்டு வருகின்றனர். இந்நிலையில், அகழாய்வு நடந்த இடத்திலேயே அகழாய்வு குழிகளையும், தொல்பொருட் களையும் நேரடியாக பார்வை யிடும் வகையில், திறந்தவெளி அகழ் வைப்பகம் ஏற்படுத்தப்படும், என ஏற்கெனவே அரசு அறி வித்திருந்தது. இதற்காக அகழாய்வு நடந்த நிலங்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். ஆனால், சந்தை மதிப்புக்குரிய பணத்தை தர வேண்டுமென நில உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்ததால் தாமதம் ஏற்பட்டது. சில மாதங்களுக்கு முன், ஒரு சென்ட் ரூ.1.65 லட்சம் தருவதாகக் கூறி நிலங்களை அதிகாரிகள் கையகப்படுத்தினர். இந்நிலையில், திறந்தவெளி அகழ் வைப்பகத்துக்கு பட் ஜெட்டில் ரூ.17 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. மேலும், கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய் வுப் பணி மேற்கொள்ள ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கீழடியில் 10-ம் கட்ட அகழாய்வுப் பணி தொடங்க உள்ளது. இந்த இரு அறிவிப்பையும் அப்பகுதி மக்கள், தமிழ் ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர். இதுகுறித்து கீழடி ஊராட்சித் தலைவர் வெங்கடசுப்பிரமணியன் கூறுகையில், திறந்தவெளி அகழ் வைப்பகத்துக்கும், 10-ம் கட்ட அகழாய்வுப் பணிக்கும் நிதி ஒதுக்கியது வரவேற்கத்தக்கது. விரைவிலேயே 10-ம் கட்ட அகழாய்வுப் பணி தொடங்க வேண்டும். அப்போதுதான் மழைக் காலத்துக்குள் அதிகளவில் தொல்பொருட்களை கண்டறிய முடியும் என்றார். நில உரிமையாளர் சந்திரசேகர் என்பவர் கூறுகையில், பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுவதால், நிலங் களுக்குரிய தொகையை உடனடி யாக விடுவிக்க வேண்டும் என்றார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே ரூ.688 கோடியில் 27 தளங்களுடன் பிரம்மாண்ட கட்டிடம்: தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-20 06:20:00
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எதிரே 10 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.688 கோடி செலவில் 27 தளங்களை கொண்ட பிரம்மாண்டகட்டிடம் கட்டப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நகரில் செயல்படுத்த உள்ள புதிய திட்டங்கள் குறித்து பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள அறிவிப்புகள் வருமாறு: சென்னை தீவுத்திடலில் இயற்கை வனப்புடன் கூடிய நகர்ப்புற பொது சதுக்கம், கண்காட்சி அரங்குகள், திறந்தவெளி திரையரங்கம் போன்ற நவீன சமூகக் கட்டமைப்பு வசதிகள் ரூ.104 கோடி செலவில் ஏற்படுத்தப்படும். பூந்தமல்லிக்கு அருகில் 150 ஏக்கர் பரப்பளவில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் அதிநவீன திரைப்பட நகரம் உருவாக்கப்பட உள்ளது. சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரூ.64 கோடி செலவில் மேம்படுத்தப்படும். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எதிரே 10 லட்சம் சதுர அடிபரப்பளவில் ரூ.688 கோடி செலவில் 27 தளங்களை கொண்ட மரபுசார் வடிவமைப்புடன் கூடிய கட்டிடம் கட்டப்படும். பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் அருகில் உள்ள குறளகம் கட்டிடம் அமைந்துள்ள பகுதியில் ஒருங்கிணைந்த பன்முக போக்குவரத்து வசதிகள் கொண்ட பேருந்து நிலையம் மற்றும் உயர்தர நவீன வசதிகள் கொண்ட அலுவலக வளாகம் ரூ.823 கோடி செலவில் உருவாக்கப்படும். புற உலகச் சிந்தனையற்ற மதி இறுக்கம் உடையோருக்கான உயர்திறன் மையம் ரூ.25 கோடி மதிப்பீட்டில் சென்னையில் அமைக்கப்படும். புதிய ஒன்றிணைந்த வளாகம் ரூ.227 கோடி செலவில் சென்னையில் நிறுவப்படும். சர்வதேச கண்காட்சிகள், பன்னாட்டுக் கூட்டங்கள் நடத்திடும் வகையில் உலகத் தரம் வாய்ந்த கலைஞர் பன்னாட்டு அரங்கம் நவீன வசதிகளுடன் கிழக்கு கடற்கரைச் சாலையில் முட்டுக்காடு பகுதியில் 3 லட்சம் சதுரஅடி பரப்பளவில் கட்டப்பட உள்ளது. சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் ரூ.147 கோடி செலவில் 3 லட்சம் சதுர அடி பரப்பளவில் 95 பி மற்றும் 133சி வகை குடியிருப்புகள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மகளிர் பயன்பெறும் வகையில், சென்னையில் புதிய தோழி விடுதிகட்டப்படும். மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ரயில்வே, வங்கிப் பணி தேர்வுகளில் இளைஞர்கள் அதிகம் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில், சென்னையில் உண்டு உறைவிட வசதியுடன் 6 மாத கால பயிற்சி அளிக்கப்படும். சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் ரூ.350 கோடி மதிப்பீட்டில் 22 நிரந்தர வெள்ளத் தடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை, சூளையில் உள்ள தேவாலயம் பழமை மாறாமல் புதுப்பிக் கப்படும் இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட்டில் பழைய ஓய்வூதிய திட்ட அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம்: ஆசிரியர் சங்கங்கள் கருத்து
செய்திப்பிரிவு
சிவகங்கை
2024-02-20 06:17:00
‘சிவகங்கை: ‘தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் திமுகவின் தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்ட அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது’’ என ஆசிரியர் சங்கங்கள் கருத்து தெரிவித்தன. தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஆ.முத்துப் பாண்டியன் கூறியதாவது: பழைய ஓய்வூதியத் திட்ட அறிவிப்பு இல்லாதது, தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் பதவி உயர்வை பாதிக்கும் அரசாணை 243-ஐ ரத்து செய்யாதது ஏமாற்றம் அளிக்கிறது. ஜாக்டோ-ஜியோ விடம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாதது அதிர்ச்சி அளிக்கிறது. பிப்.22-க்குள் சாதகமான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கிறோம். மேலும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு விரிவாக்கம், மூன்றாம் பாலின மாணவர்களின் கல்லூரி மற்றும் விடுதிக் கட்டணங்களை அரசே ஏற்றது, புதிய வகுப்பறை கட்டிடங்களுக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கியது, தமிழ் நூல்களை 24 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய ரூ.2 கோடி ஒதுக்கியது, தமிழ் புதல்வன் திட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்த கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1,000 வழங்குவது போன்றவற்றை வரவேற்கிறோம். என்று கூறினார். காரைக்குடி தொழில் வணிகக் கழக செயலாளர் கண்ணப்பன் கூறுகையில் ‘‘ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் சொத்துகளை மீட்க நடவடிக்கை எடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. காரைக்குடிக்கு 24 மணி நேரமும் தடையில்லா குடிநீர் திட்ட அறிவிப்பு வரவேற்கத்தக்கது. எனினும் காரைக்குடிக்கு திரைப்பட நகரம், தொழிற்பூங்கா அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது’’ என்று கூறினார்.
திண்டுக்கல்லுக்கு வைகை கூட்டு குடிநீர் திட்டம்: கொண்டாடிய திமுகவினர்
செய்திப்பிரிவு
திண்டுக்கல்
2024-02-20 06:12:00
திண்டுக்கல்: வைகை அணையில் இருந்து திண்டுக்கல் நகருக்கு புதிதாக வைகை கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்த ரூ.565 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து திண்டுக்கல்லில் திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில், ஒட்டன்சத்திரம் தொகுதியில் தொழிற்பேட்டை, குஜிலியம்பாறை பகுதியில் தொழிற்பயிற்சி மையம் என பல்வேறு திட்ட அறிவிப்புகள் வெளியாகின. இதில் முக்கிய திட்டமான வைகை அணையில் இருந்து திண்டுக்கல் நகருக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் கொண்டு வரும் திட்டத் துக்கு ரூ.565 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வைகை அணையில் இருந்து பைப் லைன் மூலம் திண்டுக்கல் நகருக்கு குடிநீர் கொண்டுவரப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக 6 லட்சம் பொதுமக்கள் பயன்பெற உள்ளனர். வழியோர கிராமங்களான சின்னாளபட்டி, சேவுகம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகள், ஆத்தூர், நிலக்கோட்டை, வத்தலகுண்டு ஆகிய ஊராட்சி ஒன்றியத் துக்குட்பட்ட கிராமங்கள் பயன் பெற உள்ளன. திண்டுக்கல் நகருக்கு குடிநீர் வழங்க ஆத்தூர் நீர்த்தேக்க திட்டம், காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் ஆகியவை உள்ள நிலையில், தற்போது வைகை கூட்டுக் குடிநீர் திட்டமும் செயல்படுத்தப்பட்டால் திண்டுக்கல் நகர் மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும். இந்த அறிவிப்பை அடுத்து திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே துணை மேயர் ராஜப்பா தலைமையில் கூடிய திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட் டத்தில் ஈடுபட்டனர். தமிழக முதல் வருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர். இதில் திமுக மாநகர பொருளாளர் சரவணன், பகுதிச் செயலாளர்கள் பஜ்லுஹக், ஜானகிராமன், சந்திரசேகர், ராஜேந்திரகுமார், மாநகராட்சி மண்டலத் தலைவர் ஜான்பீட்டர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அரசியலில் இருந்து பிரதமர் மோடிக்கு விடுதலை கொடுக்க மக்கள் தயாராகிவிட்டனர்: ஆர்ப்பாட்டத்தில் செல்வப்பெருந்தகை தகவல்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-20 06:10:00
சென்னை: அரசியலில் இருந்து பிரதமர் மோடிக்கு விடுதலை கொடுக்க மக்கள் தயாராகிவிட்டனர் என்று, காங்கிரஸ் சார்பில் மத்திய அரசுக்கு எதிராக சென்னையில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநிலத் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித் துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கை வருமான வரித்துறை முடக்கியதை கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் சிவ.ராஜசேகரன், எம்.பி. ரஞ்சன்குமார், முத்தழகன், எம்.எஸ்.திரவியம், டில்லிபாபு, அடையாறு துரை ஆகியோர் ஏற்பாட்டில், கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந் தகை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மத்திய பாஜக அரசுக்கு எதிராக தொண்டர்களும், கட்சி நிர்வாகிகளும் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் செல்வப்பெருந்தகை பேசியதாவது: மாநில கட்சிகளை ஒடுக்குகிறது எங்கெங்கெல்லாம் பாஜக ஆட்சி இல்லையோ அங்கெல்லாம் அந்த மாநில கட்சிகளை ஒடுக்குவது, பிள்ளை பிடிப்பவர்கள்போல் எம்.பி, எம்எல்ஏக்களை பிடிப்பது போன்ற செயல்களில் பாஜக ஈடுபட்டு வருகிறது. விடுதலைப் போராட்டத்தில் தன்னை அர்ப்பணித்த காங்கிரஸ் தலைவர்கள் இந்த நாட்டை பிரிட்டிஷ் அரசிடம் இருந்து மீட்டெடுக்க வேண்டும். கிழக்கு இந்திய கம்பெனியை வெளியேற்ற வேண்டும். இந்த நாட்டு மக்கள் முழுமையான சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டும் என்று போராடினர். நாட்டின் விடுதலைக்கும், மோடிக்கும், பாஜகவுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?இந்த நாட்டு விடுதலை போராட்ட வீரர்கள் யாராவது பாஜக, ஆர்எஸ்எஸ்-ல் இருக்கிறார்களா? நாட்டின் விடுதலைக்கும், அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல், எந்த ஒரு அர்ப்பணிப்பும் இல்லாமல், எந்த களப்பணிக்கும் செல்லாமல் மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்ததுதான் பாஜக அரசு. 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்பதில் உறுதியாக இருக்கும் பாஜக, எதற்காக காங்கிரஸ் வங்கிக் கணக்கை முடக்குகிறது. திருட்டும், புரட்டும் ஒரு நாள் விடியும். நீண்ட நெடிய நாட்கள் ஏமாற்ற முடியாது. பிரதமர் மோடிக்கு அரசியலில் இருந்து விடுதலை கொடுக்க மக்கள் தயாராகிவிட்டனர். மோடிக்கு இதுதான் கடைசி ஆட்சி. வரும் தேர்தலில் இண்டியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. இவ்வாறு அவர் பேசினார்.அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கை வருமான வரித்துறை மூலம் முடக்கியதைக் கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.படம்: ம.பிரபு
தீவுத்திடலைச் சுற்றி நிபந்தனைகளுடன் பார்முலா - 4 கார் பந்தயம் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-20 06:06:00
சென்னை: சென்னை தீவுத்திடலைச் சுற்றியுள்ள சாலை மார்க்கமாக கடந்தாண்டு டிச.9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து தெற்காசியா வில் முதன்முறையாக இரவு நேர பார்முலா-4 கார் பந்தயம் நடத்தத் தமிழக அரசு சார்பில் திட்டமிடப்பட்டது. சென்னை மாநகருக்குள் எந்த பகுதியிலும் இந்த பந்தயத்தை நடத்தக் கூடாது என தடை விதிக்கக் கோரியும், இந்தப் பந்தயத்தை ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்கு மாற்றக் கோரியும் மருத்துவர் ஸ்ரீஹரிஷ் மற்றும் லூயிஸ் ராஜ், டிஎன்பிஎஸ்சி முன்னாள் உறுப்பினரான பாலுசாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்தனர். இந்த வழக்குகள் ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மிக்ஜாம் புயல் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட கார் பந்தயத்தை வரும் ஜூன் மாதத்துக்குப் பிறகு நடத்த திட்டமிட்டுள்ளதாகத் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் அமர்வில் ஏற்கெனவே நடந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் இந்த கார் பந்தயம் நடத்த தமிழக அரசு ரூ.42 கோடியை அளித்திருப்பது தவறு என்றும், சட்டரீதியாக எந்தவொரு முன் அனுமதியும் பெறாமல் இந்த கார் பந்தயம் நடத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், தமிழக அரசின் சார்பில் தெற்காசியாவில் முதன்முறையாக சென்னையில் இரவு நேர கார் பந்தயம் நடத்த தமிழக அரசு கொள்கை ரீதியாக முடிவு எடுத்துள்ளது எனத் தெரிவிக்கப் பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தனர். இந்நிலையில் நீதிபதிகள் நேற்று பிறப்பித்துள்ள தீர்ப்பில், சர்வதேச அளவிலான கார் பந்தயம் போன்ற விளையாட்டுகளை தமிழகத்தில் ஊக்குவிக்கும் நோக்கில் இந்த கார் பந்தயத்தை நடத்தத் தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாகத் தெரி விக்கப்பட்டுள்ளது. எனவே சென்னை தீவுத்திடலைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் பார்முலா-4 கார் பந்தயத்தை நிபந்தனைகளுடன் நடத்திக்கொள்ள எந்த தடையும் கிடையாது. கார் பந்தயம் அப்பகுதிகளில் நடைபெறும் போது ஒலி மாசுவை வெகுவாக குறைப்பதற்கான நடவடிக்கைகளை தனியார் நிறுவனமும், அரசும் எடுக்க வேண்டும். இந்த கார் பந்தயத்தை பொதுமக்களுக்கு தொந்தரவு இல்லாத வகையில் நடத்தத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும். இந்த கார் பந்தயத்துக்காக தமிழக அரசு செலவிட்டுள்ள ரூ.42 கோடியை சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் அரசுக்கு திருப்பிச் செலுத்த வேண்டும். இந்த பந்தயத்துக்கான முழு செலவையும் தனியார் நிறுவனமே ஏற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல எதிர்வரும் அடுத்த 2 ஆண்டுகளில் இந்த பந்தயத்தை நடத்திக்கொள்ள ரூ.15 கோடியை சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் அரசுக்கு டெபாசிட் செய்ய வேண்டும், என உத்தரவிட்டுள்ளனர்.
வால்மீகி சமுதாயத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தல்
செய்திப்பிரிவு
ஓசூர்
2024-02-20 06:05:00
ஓசூர்: வால்மீகி சமுதாயத்தைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என கெலமங்கலத்தில் நடைபெற்ற வால்மீகி ஜனசேன நலச் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. கெலமங்கலத்தில் இச் சங்கத்தின் பேரணி மற்றும் மாநாடு நடந்தது. இந்நிகழ்ச்சிகளுக்கு, சங்கத்தின் மாநில தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் லகுமா நாயுடு, பொருளாளர் மாதேஷ் நாயக், செய்தி தொடர்பாளர் சீனிவாசன், மாவட்ட தலைவர் பத்ரி மற்றும் பிரேமானந்தா சுவாமிஜி, முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர். மாநாட்டில், ‘வால்மீகி ஜெயந்திக்கு அரசு விடுமுறை வழங்க வேண்டும் வால்மீகி சமுதாய மக்களைப் பழங்குடியினர் பட்டியல் பிரிவில் சேர்க்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. மாநாட்டில் கலந்து கொண்ட கு.ப.கிருஷ்ணன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் சாதிவாரி கணக் கெடுப்பு நடத்தி எந்த வறுமையும் நீங்கிவிடப் போவ தில்லை மாறாக ஒவ்வொரு சாதியிலும் உள்ள அரசு அதிகாரி கள், உயர் பதவி வகிப்பவர்கள், பொருளாதார நிலையை கணக்கெடுக்க வேண்டும். எந்த சாதியில் எவ்வளவு ஏழைகள் இருக்கிறார்கள், மற்ற சாதிகளில் எவ்வளவு உயர்ந்தவர்கள் இருக்கிறார்கள், அவர்களின் எவ்வளவு பேர் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் பதவிகளில் இருக்கிறார்கள், அரசு வேலைகளில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் மற்றும் அவர்களின் பொருளாதார நிலைகள் ஆகியவற்றின் புள்ளி விவரங்களையும் சேர்த்து எடுக்க வேண்டும். எந்த சமூகத்தில் இது போன்ற சமநிலை கிடைக்கவில்லையோ அந்த சமூகத்துக்குச் சமநிலை கிடைத்தாக வேண்டும், வால்மீகி சமுதாயம் மற்ற மாநிலங்களில் பழங்குடியினர் பட்டியலில் உள்ளனர். தமிழகத்திலும் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வால்மீகி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். மாநாட்டில், தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்திலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட வால்மீகி சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
2009-ல் போலீஸாரால் தாக்கப்பட்ட நாள்: வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-20 06:02:00
சென்னை: கடந்த 2009-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் போலீஸாரால் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட கருப்பு நாளை முன்னிட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கையில் உள்நாட்டுப் போர் நடந்தபோது, தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதைக் கண்டித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இதையொட்டி, கடந்த 2009-ம் ஆண்டு பிப்.19-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கும், போலீஸாருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, வழக்கறிஞர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து ஒவ்வோர் ஆண்டும் பிப்.19-ம் தேதியை வழக்கறிஞர்கள் கருப்பு நாளாக அனுசரித்து வருகின்றனர். அதன்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கச் செயலாளர் ஆர்.கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்று போலீஸாருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். அதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட போலீஸாரைக் கைது செய்யக் கோரியும், அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக் கோரியும் அரசுக்கு வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ரூ.8.33 லட்சம் கோடி கடன் அதிகரிப்புதான் திமுகவின் சாதனை: வானதி சீனிவாசன்
செய்திப்பிரிவு
கோவை
2024-02-20 06:01:00
கோவை: பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2024-25-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கடன் 8 லட்சத்து 33 ஆயிரத்து 361 கோடியே 80 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. வருவாய்பற்றாக்குறை ரூ.49 ஆயிரத்து 278கோடியே 73 லட்சமாக அதிகரித்துள்ளது. இதுவே திமுக அரசின் சாதனை. நிதிநிலை அறிக்கையில்உள்ள இந்த புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது தமிழ்நாட்டின் பொருளாதாரம் சரியானபாதையில் செல்லவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. தமிழ்நாடு அரசுக்கு கிடைக்கும் வருவாயில் பெரும் பகுதி கோவைஉள்ளிட்ட கொங்கு மண்டல மாவட்டங்களில் இருந்தே கிடைக்கிறது. ஆனால், கோவை மெட்ரோ ரயில்திட்டத்தை செயல்படுத்த எந்தஉத்தரவாதமான அறிவிப்பும்இல்லை. இது மக்களை ஏமாற்றும்சில அறிவிப்புகளுடன் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை. தமிழ்நாடு மக்களின் நலன், தொலைநோக்கு எதுவும் இல்லை. இவ்வாறு அதில்தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு கொண்டாட்டத்தில் மோதல்: அதிமுக பெண் கவுன்சிலர் உள்ளிட்ட 3 பேர் மீது தாக்குதல்
செய்திப்பிரிவு
மதுரை
2024-02-20 05:10:00
மதுரை: மதுரையில் திமுக, அதிமுக தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், அதிமுக பெண் கவுன்சிலர் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர். மதுரை மாநகர் அதிமுக பகுதி செயலாளர் சித்தன். அவரது மனைவி நாகஜோதி, 20-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். சித்தனுக்கும், அப்பகுதி திமுக வட்டச் செயலாளர் தனசேகரனுக்கும் தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்தது. இந்நிலையில், திண்டுக்கல்லில் நடந்த ஜல்லிக்கட்டில் காளையை அவிழ்த்தபோது இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்தப் போட்டியில் தனசேகரன் தரப்பு காளை வெற்றி பெற்றது. அதை ஊருக்குள் அழைத்து வந்து, ஆட்டம், பாட்டத்துடன் உற்சாகமாகச் சென்றனர். அப்போது, விளாங்குடி மந்தை பகுதியில் நின்றிருந்த சித்தன் தரப்பினருக்கும், தனசேகரன் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் மோதிக் கொண்டனர். இதில் கவுன்சிலர் நாகஜோதி, அவரது மகன் சுந்தரபாண்டியன் மற்றும் தனசேகரன் தரப்பில் ஒருவர் காயமடைந்தனர். இதுகுறித்து கூடல்புதூர் காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் புகார் அளித்தனர். அதிமுகவைச் சேர்ந்த சித்தன் மற்றும் 13 பேர் மீதும், திமுக தரப்பில் தனசேகரன் மற்றும் 10 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, சித்தன், அவரது உறவினர் நவீன், திமுக வட்ட செயலாளர் தனசேகரனின் ஆதரவாளர் சரவணன், சத்யசீலன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இதற்கிடையில், அதிமுக பகுதி செயலாளர் சித்தன் கைதுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சோலை ராஜா தலைமையில் கட்சியினர் காவல் நிலையத்தில் திரண்டனர். அவர்களிடம் போலீஸார் பேசி, கலைந்து போகச் செய்தனர்.
‘வறுமையை ஒழித்து வளர்ச்சிக்கு வழிவகுக்கும் பட்ஜெட்’ - திருமாவளவன்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-19 23:56:00
சென்னை: இன்று (பிப்.19) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை வறுமையை ஒழிப்பதற்கும், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் வழி வகுக்கின்ற தொலைநோக்குத் திட்டமாக உள்ளது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டி வரவேற்கிறோம் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது. "தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் காரணமாக வறுமை ஒழிக்கப்படும் மாநிலமாகத் தமிழகம் மாறி வருகிறது. தற்போது வறுமையில் இருக்கும் ஐந்து லட்சம் குடும்பங்களை வறுமையிலிருந்து மீட்பதற்கு ஒருங்கிணைந்த திட்டம் வகுக்கப்படுவதாக இந்த நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டிருப்பது ஏழை மக்களைப் பாதுகாப்பதில் மிகுந்த அக்கறையுள்ள அரசாக இது திகழ்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது. முத்தமிழ் அறிஞர் கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் இருக்கும் குடிசை வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு அனைத்து குடிசை வீடுகளையும் கான்கிரீட் வீடுகளாக மாற்றுவதற்கான மாபெரும் திட்டம் உருவாக்கப்பட்டது. 2010-ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட அந்தத் திட்டத்தில் 2 ஆண்டுகளில் 5 லட்சம் வீடுகள் கட்டப்பட்டன. 2011-ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக அந்தத் திட்டத்தை அதிமுக அரசு நிறுத்திவிட்டது. தற்போது அவரது வழியில் ஆட்சி நடத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘குடிசை இல்லா தமிழ்நாடு’ திட்டத்தை நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த ஆறு ஆண்டுகளில் 8 லட்சம் வீடுகள் கட்டப்படும் என்றும், நடப்பு ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறதென்றும் இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனைப் பாராட்டி வரவேற்கின்றோம். வீடு ஒன்றுக்கு 3.5 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படுவதாக இதில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என அரசைக் கேட்டுக்கொள்கிறோம். பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிப்பதற்காக முதலமைச்சர் அறிமுகப்படுத்திய "புதுமைப்பெண் திட்டம்" பெருமளவில் பயனளித்துள்ளது. அதனை ஆண்களுக்கும் விரிவுபடுத்துவதற்காக ‘தமிழ்ப் புதல்வன் திட்டம்’ என்கிற புதிய திட்டம் இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனையும் மனமுவந்து வரவேற்கிறோம். புதுமைப்பெண் திட்டம், முதலமைச்சரின் காலை சிற்றுண்டித்திட்டம் இரண்டையும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்துவதாக அறிவித்திருப்பது எளிய மக்களின் கோரிக்கையை இந்த அரசு எந்த அளவுக்கு மதிக்கிறது என்பதற்குச் சான்றாகும். கோவையில் "கலைஞர் நூற்றாண்டு நூலகம்" அமைக்கப்படும் என்ற அறிவிப்பையும் மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம். அறிவுசார் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் தூத்துக்குடியில் "விண்வெளி தொழில் மற்றும் உந்து சக்தி பூங்கா" அமைக்கப்படும் என்றும்; தமிழ்நாட்டில் முதன்முறையாக "உலகப் புத்தொழில் மாநாடு" நடத்தப்படும் என்றும்; முதலமைச்சர் தலைமையில் "தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம்" உருவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருப்பது தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்துவதில் இந்தியாவுக்கே தமிழகம் வழிகாட்டியாக விளங்குகிறது என்பதற்குச் சான்றுகளாக உள்ளன. அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசுப் பணி, ஜூன் மாதத்திற்குள் பத்தாயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற அறிவிப்பு வேலைவாய்ப்பைத் தேடும் இளைஞர்களுக்கு பெரும் நம்பிக்கையை அளிப்பதாகும். சென்னையின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு என்று பல திட்டங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ‘வடசென்னை வளர்ச்சித் திட்டம்’ அறிவிக்கப்பட்டிருப்பதை மகிழ்வோடு வரவேற்கிறோம். பழங்குடியின மக்களின் வாழ்விடங்களில் சாலை வசதிகள், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ‘தொல்குடி’ என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த நான்கு ஆண்டுகளில் இது செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையும் பாராட்டி வரவேற்கிறோம். ஒட்டுமொத்தத்தில் இந்த நிதிநிலை அறிக்கை வறுமையை ஒழிப்பதற்கும், தமிழகத்தின் வளர்ச்சியை விரைவுப்படுத்துவதற்குமான தொலைநோக்குப் பார்வையுடன்கூடிய செயல் திட்டமாக விளங்குகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள தமிழக முதலமைச்சர் அவர்களையும் மற்றும் நிதித்துறை அமைச்சர் அவர்களையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டுகிறோம்" என தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத கட்டுமானங்களை தடுக்க உயர் மட்ட கண்காணிப்பு குழு: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
கி.மகாராஜன்
மதுரை
2024-02-19 21:51:00
மதுரை: தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் சட்டவிரோத கட்டுமானங்களை தடுக்க உயர் மட்டக் கண்காணிப்பு குழு விரைவில் அமைக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது. மதுரை உட்பட பல்வேறு இடங்களில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றவும், ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி ஏராளமானோர் உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுக்களை விசாரித்து சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றவும், தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை அமல்படுத்துவதில் அதிகாரிகளின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படவில்லை. இதனால் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் வேறு மாதிரியாக நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. மாநில அளவில் மாநகராட்சி, நகராட்சிகளில் சட்டவிரோத கட்டுமானங்களை கட்டுமானம் தொடங்கும் நிலையிலும், அனுமதி பெறாமல் வீடுகளை வர்த்தக பயன்பாட்டுக்கு மாற்றுவதையும் தடுக்கவும், கண்காணிக்கவும் உயர்மட்ட கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். இது தொடர்பாக அரசிடம் தகவல் பெற்று தெரிவிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு நீதிபதி டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில், தமிழகத்தில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை தடுக்கவும், கண்காணிக்கவும் 2018-ல் சிறப்புக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுபடி தற்போது சென்னை மாநகராட்சியில் ஆணையர் தலைமையில் உயர் மட்டக் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு கடந்தாண்டு செப். 8-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிற மாநகராட்சி/நகராட்சிகளில் விரைவில் உயர் மட்டக் கண்காணிப்பு குழு அமைத்து அரசாணை பிறப்பிக்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து நீதிபதிகள், உயர் நீதிமன்ற உத்தரவுபடி சென்னை மாநகராட்சியில் விரைவில் உயர் மட்டக் கண்காணிப்பு குழு அமைத்ததற்காக மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகளை நீதிமன்றம் பாராட்டுகிறது. பிற மாநகராட்சி/ நகராட்சிகளிலும் உயர்மட்டக் கண்காணிப்பு குழு அமைத்து அரசாணை பிறப்பிப்பது குறித்து அரசு பரிசீலனை செய்து வருவதாக கூடுதல் அட்வகேட் ஜெனரல் உறுதியளித்துள்ளார். எனவே இந்த வழக்கின் அடுத்த விசாரணையை மார்ச் 4-க்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இரு மத பெண்களை மணந்தவர் உடலுக்கு இந்து மதப்படி சடங்கு, இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய ஐகோர்ட் உத்தரவு
கி.மகாராஜன்
மதுரை
2024-02-19 21:30:00
மதுரை: இரு மத பெண்களை மணந்த அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர் உயிரிழந்த நிலையில், உடலுக்கு இந்து மதப்படி இறுதி சடங்கு செய்யவும், இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காரைக்குடி பர்மா காலனி வள்ளூவர் நகரைச் சேர்ந்த சாந்தி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: எனக்கும் அரசு பேருந்து ஓட்டுநர் பாலசுப்பிரமணியன் (எ) அன்வர்உசேன் (55) என்பவருக்கும் 1988-ல் திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு ஒரு மகள் உள்ளார். பின்னர் எனக்கும் கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்தோம். கடந்த 2019-ல் என் கணவர் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விவாகரத்து ரத்து பெற்றார். விவாகரத்தை ரத்து செய்யக்கோரி மேல்முறையீடு செய்தேன். விவாகரத்து ரத்து செய்யப்பட்டது. பின்னர் என் கணவர் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த சையத் அலி பாத்திமா என்பவரை திருமணம் செய்து அவருடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில், என் கணவர் இறந்துவிட்டதாக எனக்கு தகவல் கிடைத்தது. என் கணவர் உடலை இந்து மத வழக்கப்படி இறுதி சடங்குகள் செய்து அடக்கம் செய்வதற்காக கணவர் உடலை என்னிடம் ஒப்படைக்கக் கோரி போலீஸில் புகார் அளித்தேன். ஆனால் சையது அலி பாத்திமா என் கணவர் உடலை இஸ்லாமிய மதச் சடங்குகள் செய்து அடக்கம் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். என் கணவர் உடல் காரைக்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளது. என் கணவருக்கு நான் தான் சட்டப்படியான வாரிசு. இந்து மதச் சடங்குபடியே கணவரின் உடலை அடக்கம் செய்ய வேண்டும். எனவே கணவரின் உடலை என்னிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு அவசர வழக்காக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் மலையேந்திரன் வாதிட்டார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: அரசு மருத்துவமனையில் உள்ள மனுதாரரின் கணவர் உடலை முதலில் முதல் மனைவியான மனுதாரரிடம் ஒப்படைக்க வேண்டும். அவர் கணவர் உடலுக்கு அவர் சார்ந்த மத முறைப்படி இறுதி சடங்கு செய்து, அரை மணி நேரத்தில் காரைக்குடி முஸ்லிம் ஜமாத் நிர்வாகத்திடம் உடலை ஒப்படைக்க வேண்டும். பின்னர் உடலுக்கு அவர் 2-வது மனைவி இறுதி மரியாதை செய்து இஸ்லாமிய சடங்குபடி அடக்கம் செய்யலாம். வழக்கு முடிக்கப்படுகிறது என உத்தரவிட்டுள்ளது.
பட்ஜெட் 2024-25 ஹைலைட்ஸ்: குடிசையில்லா தமிழகம் முதல் ரூ.1,000 ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் வரை
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-19 21:17:00
சென்னை: சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு திங்கள்கிழமை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகளின் சிறப்பு அம்சங்கள்: 2030-க்குள் குடிசையில்லா தமிழகத்தை உருவாக்கும் வகையில், கலைஞரின் கனவு இல்லம் எனும் பெயரில் 6 ஆண்டுகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்ட திட்டம். 2024-25ல் ஒரு லட்சம் வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு வீட்டின் மதிப்பீடு 3.5 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது. | விரிவாக வாசிக்க > குடிசையில்லா தமிழகத்துக்காக 8 லட்சம் வீடுகள்: கனவு இல்லம் திட்டம் @ பட்ஜெட் 2024 5 லட்சம் ஏழைக் குடும்பங்களைக் கண்டறிந்து வறுமையை அகற்றிட முதலமைச்சரின் தாயுமானவர் வறுமை ஒழிப்புத் திட்டம் தொடங்கப்படும். விரிவாக வாசிக்க > விளிம்புநிலை மக்களுக்காக ‘தாயுமானவர்’ திட்டம் @ தமிழக பட்ஜெட் 2024 ‘தமிழ்ப் புதல்வன்’ எனும் திட்டம் வரும் நிதியாண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ், 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர் கல்வி சேரும் மாணவர்கள் பாடப் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவர்களது கல்வியை மெருகேற்றிட உதவும் வகையில், மாதந்தோறும் ரூ.1,000 அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. முழு விவரம்: அரசுப் பள்ளியில் பயின்ற உயர் கல்வி மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 - ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் @ பட்ஜெட் 2024 தஞ்சாவூர், சேலம், திருப்பூர், வேலூர் மற்றும் தூத்துக்குடியில் நியோ டைடல் பூங்காக்கள் உருவாக்கப்படும். இதன்மூலம் 13,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். | விரிவாக வாசிக்க > சிப்காட் முதல் நியோ டைடல் பார்க் வரை: தமிழக பட்ஜெட் 2024-ல் புதிய அறிவிப்புகள் நீலக்கொடி கடற்கரைச் சான்றிதழ் பெற்ற தமிழக கடற்கரைகளான சென்னை - மெரினா, கடலூர் - சில்வர் பீச், விழுப்புரம் - மரக்காணம், நாகப்பட்டினம் - காமேஸ்வரம், புதுக்கோட்டை - கட்டுமாவடி, ராமநாதபுரம் - அரியமான், தூத்துக்குடி - காயல்பட்டினம் மற்றும் திருநெல்வேலி - கோடாவிளை ஆகியவை மேம்படுத்த ரூ.250 கோடி ஒதுக்கீடு. ரூ.5,718 கோடி மதிப்பிலான 6,071 ஏக்கர் கோயில் நிலங்கள் மீடகப்பட்டுள்ளன. 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில்களில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். | வாசிக்க > 1,000 ஆண்டுகள் பழமையான கோயில்களில் திருப்பணிகளுக்கு ரூ.100 கோடி: தமிழக பட்ஜெட் 2024-ல் அறிவிப்பு மலைப் பகுதிகளில் வாழும் மகளிர் பயன்பெறும் வகையில் நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், வால்பாறை போன்ற மலைப்பகுதிகளுக்கும் மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவாக வாசிக்க > மலைப் பகுதிகளிலும் இனி மகளிர் கட்டணம் இல்லா பேருந்து பயணத் திட்டம்!
“அடுத்தகட்ட நகர்வுக்கு கொண்டு செல்லும் பட்ஜெட்” - தமிழக காங். தலைவர் செல்வப்பெருந்தகை
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-19 20:55:00
சென்னை: “தமிழகத்தை அடுத்தகட்ட நகர்வுக்கு கொண்டு செல்லும் 2024-25 ஆண்டுக்கான மிகச் சிறந்த நிதிநிலை அறிக்கை” என தமிழக பட்ஜெட்டை காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “இயற்கைப் பேரிடர், மத்திய பேரிடர், ஆளுநர் பேரிடர் என்று எத்தகைய பேரிடர்கள் வந்தாலும் மத்திய அரசு உதவி செய்யாவிட்டாலும் தமிழகத்தின் நிதிநிலையை கொண்டும், உலக முதலீட்டாளர்களின் முதலீடுகளைக் கொண்டும் அழகான செப்பனிடப்பட்ட மிகச்சிறந்த நிதிநிலை அறிக்கையை அவையில் தாக்கல் செய்துள்ளார் தமிழக நிதியமைச்சர். அவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நிதிநிலை அறிக்கையில் கல்வி, மருத்துவம், சாலை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து அதிக கவனம் செலுத்தியிருக்கிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை செயல்படுத்துவதில் நாட்டிலேயே மிகச்சிறந்த மாநிலமாக தமிழகம் இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தமிழ் வளர்ச்சி, பழங்குடி மொழி வளங்களை ஆவணப்படுத்தும் அறிவிப்பு, கடல்வழியை பாதுகாக்க நீலப்புரட்சி அறிவிப்பு, குடிசையில்லா தமிழ்நாட்டை உருவாக்கிட, 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்ற அறிவிப்பு, மேலும் ஒவ்வொரு வீடும் 3.5 லட்சத்தில் கட்டப்படும் என்ற அறிவிப்பு வருங்காலத்தில் குடிசைகள் இல்லாத நிலையை தமிழகத்தில் உருவாக்கும். வீட்டு மனையில்லாதவர்களுக்கு வீட்டுமனை வழங்குவதுடன், வீடு கட்டுவதற்கான தொகையும் அவர்கள் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்றும், அதற்கு 3500 கோடியில் கலைஞரின் கனவு இல்லம் அறிவிப்பும் வரும் காலத்தில் வீட்டுமனையே இல்லாதவர்கள் என்ற நிலையை தமிழ்நாடு எட்டும். வறுமை ஒழிப்பில் சிறந்த மாநிலமாக உள்ளது தமிழகம் என்ற நிதிஆயோக் அறிக்கை, தமிழக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் முக்கிய கோரிக்கையான அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களிலும் முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டம் மற்றும் புதுமைப்பெண் விரிவுபடுத்தியது மிகச்சிறந்த அறிவிப்பாகும். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதிஒதுக்கீடு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சாலை பணிக்கு நிதி ஒதுக்கீடு, சென்னை 2.0 திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு, ஒக்கேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு, புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்ற அறிவிப்பு மற்றும் மின்சார பேருந்துகள் வாங்குவது என்ற அறிவிப்பு, கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் சிற்றுந்து இயக்கப்படும் என்ற அறிவிப்புகள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பல்வேறு அறிவிப்புகள் அடங்கிய நிதிநிலையாக இருக்கிறது. தமிழகத்தை அடுத்த கட்ட நகர்வுக்கு கொண்டு செல்லும் 2024-25 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வரவேற்கின்றேன். பாராட்டுகின்றேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
“மோடி அரசின் கடன் பற்றி இபிஎஸ் வாய் திறக்காதது ஏன்?” - அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-19 20:31:00
சென்னை: “ஓர் அரசு கடன் வாங்குவதில் தவறு இல்லை. உலகம் எங்கும் அரசுகள் கடன் வாங்கித்தான் திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால், அப்படிப் பெறப்படும் கடனைத் திருப்பிச் செலுத்தக் கூடிய திறன் பெற்ற அரசாக இருக்க வேண்டும். அப்படியான அரசாக திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பட்ஜெட் தொடர்பான விமர்சனத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “திராவிட இயக்கக் கோட்பாடுகளைக் கொண்ட, எல்லோருக்கும் எல்லாமுமான, கடைக்கோடி மனிதருக்கும் நலவாழ்வு அளிக்கும் பட்ஜெட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு தாக்கல் செய்திருக்கிறது. இதனால், கொதிநிலைக்குப் போயிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, ‘கனவு பட்ஜெட்; மக்களுக்குப் பயன் தராது’ எனப் புலம்பியிருக்கிறார். ‘திமுக அரசுக்கு 8,33,361 கோடி கடன் உள்ளது. கடன் பெற்றே ஆட்சியை நடத்துகின்றனர். இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் நம்பர் ஒன் அரசாகத் தமிழ்நாடு அரசு உள்ளது’ எனச் சொல்லியிருக்கிறார். எம்ஜிஆர் மாளிகையின் பரணில் தூக்கிப் போடப்பட்டிருக்கும் அதிமுகவின் 2011 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையைத் தேடி எடுத்துப் படித்துப் பாருங்கள். அதையெல்லாம் படிக்க உங்களுக்கு நேரம் இருக்காது என்பது எங்களுக்குத் தெரியும். அதனால், 8-ஆம் பக்கத்தை மட்டுமாவது கொஞ்சம் புரட்டிப் பாருங்கள். ‘ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனாளி மாநிலம் என்கிற தலைக்குனிவில் இருந்து தமிழ்நாட்டை மீட்டு, தமிழர்கள் தலைநிமிர்ந்து நிற்கவும், தன்மானத்துடன் வாழவும், வழிவகை செய்யப்படும்’ என வாக்குறுதி அளித்திருந்தீர்கள். அந்தத் தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்த அதிமுக தான் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. ஜெயலலிதா, பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோரின் பத்தாண்டு ஆட்சிகளில் கடன் சுமை என்கிற தலைக்குனிவைப் போக்குவதற்குப் பதிலாக ஒவ்வொரு தமிழரின் தலையிலும் கடனை ஏற்றியதுதான் உங்கள் சாதனை. நடப்பது மக்களாட்சியா... இல்லை மன்னராட்சியா எனச் சந்தேகம் கொள்ளும் வகையில் சட்டமன்றத்தில் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குத் துதி பாடிக் கொண்டிருந்தார்கள். எதார்த்தத்துக்கு வராமல் ஜெயலலிதாவையும், பழனிசாமியையும் குளிர்விப்பதற்கே தமிழக சட்டமன்றம் பயன்பட்டது. 2011 - 2012-ஆம் ஆண்டில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 630 கோடி ரூபாயாக இருந்த கடனைப் படிப்படியாக உயர்த்தி 2020-2021-ஆம் ஆண்டில் 4 லட்சத்து 85 ஆயிரத்து 502 கோடி ரூபாயாகக் கொண்டு வந்து நிறுத்தினீர்கள். ‘கடன்’ என்ற சொல்லுக்குக் ‘கடமை’ என்ற பொருளும் உண்டு. ஆனால், கடமையைச் செய்யத் தவறிக் கடன் சுமை தொடர்ந்து ஏறிக்கொண்டே போனதுதான் பத்தாண்டு அதிமுக அரசின் சாதனை. ‘ஒரு மாநில அரசு, மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் ஆண்டுக்கு மூன்று விழுக்காட்டுக்கு மேல் கடன் வாங்க முடியாது. அதே சமயம் எந்தக் காலத்திலும் ஒட்டுமொத்தமாக 25 விழுக்காட்டைத் தாண்டக் கூடாது’ என்கிறது மத்திய நிதி கமிஷன். இந்த வரம்பைத் தமிழ்நாடு அரசு இன்னும் தாண்டவில்லை. ஓர் அரசு கடன் வாங்குவதில் தவறு இல்லை. உலகம் எங்கும் அரசுகள் கடன் வாங்கித்தான் திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால் அப்படிப் பெறப்படும் கடனைத் திருப்பிச் செலுத்தக் கூடிய திறன் பெற்ற அரசாக இருக்க வேண்டும். அப்படியான அரசாக திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ‘வருஷா வருஷம் கடன் வாங்கித்தான் இந்த அரசு வண்டியை ஓட்டிக்கிட்டு இருக்கு’ என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி. பத்தாண்டு அதிமுக. அரசும் அதைத்தானே செய்து கொண்டிருந்தது. திமுக அரசின் கடனைப் பற்றிக் கவலைப்படும் பழனிசாமி ஏன் மோடி அரசின் கடனைப் பற்றி வாய் திறக்கவில்லை? 2014-இல் டாக்டர் மன்மோகன் சிங் ஆட்சியில் 54 லட்சம் கோடியாக இருந்த கடன் பத்தாண்டில் 205 லட்சம் கோடிக்கு மேல் உயர்ந்திருக்கிறதே அதைப் பேசப் பழனிசாமி வாய்க்கு யார் பூட்டு போட்டார்கள்? பா.ஜ.க.வோடு கூட்டணி இல்லை என்பதை மணிக்கொரு முறை சொல்லிக் கொண்டிருக்கும் பழனிசாமி, அது உண்மையென்றால் மத்திய அரசின் கடனைப் பற்றி கர்ஜிக்க வேண்டியதுதானே? பழனிசாமி அளித்த அந்தப் பேட்டியில் அவரே ஒரு உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார். “அ.தி.மு.க. ஆட்சியை விட அதிக வருவாய் இப்போது தி.மு.க. ஆட்சியில் வருகிறது” எனச் சொல்லியிருக்கிறார். அதாவது வருவாயைப் பெருக்கும் பணியைத் தி.மு.க. அரசு செவ்வனே செய்து வருகிறது என அவரே சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார். கடனை அடைக்க வருவாயைப் பெருக்கும் வழியையும் மு.க.ஸ்டாலின் அரசு செய்து கொண்டிருக்கிறது. நிச்சயமாகக் கடனை அடைக்கும் வழிகளை இன்னும் சிறப்பாக இந்த அரசு மேற்கொள்ளும். ’தி.மு.க. அரசின் பட்ஜெட் கானல் நீர் போன்றது; மக்களுக்குப் பயன் தராது’ எனச் சொல்லியிருக்கிறார். அது பயன் தரும் என நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பு எழுதுவார்கள். கடந்த காலங்களில் அ.தி.மு.க.வின் பட்ஜெட்டுகளில் வெளியான அறிவிப்புகள் புஸ்வாணமானதை எல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி மறந்துவிட வேண்டாம்” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். | வாசிக்க > கடன்‌ வரம்பு நிபந்தனைகளால் மாநில அதிகாரத்தை கட்டுப்படுத்துகிறது மத்திய அரசு: அமைச்சர் தங்கம் தென்னரசு
அண்ணாமலை மார்ச் 2-ல் சேலம் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு
செய்திப்பிரிவு
சேலம்
2024-02-19 20:09:00
சேலம்: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வரும் மார்ச் 2-ம் தேதி சேலம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. சேலத்தைச் சேர்ந்த பியூஸ் என்பவர் சேலம் நீதிமன்றத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், இந்து மத கலாச்சாரத்தை அழிக்கும் நோக்கில், தீபாவளியன்று பட்டாசுகளை வெடிக்க கூடாது என கிறிஸ்தவ மிஷனர்களின் உதவியோடு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என யூடியூப் சேனல் ஒன்றில் பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இரு மதத்தினரிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக பேசிய அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஜேஎம் எண்:4 நீதிமன்ற குற்றவியல் நீதிமன்ற நடுவர் வரும் மார்ச் மாதம் பாஜக தலைவர் அண்ணாமலை வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். இந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணாமலை மனு தாக்கல் செய்தார். இதனை எதிர்த்து பியூஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அண்ணாமலையின் மனுவை தள்ளுபடி செய்தது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை இன்று சேலம் ஜேஎம் எண்:4 நீதிமன்றத்தில் நடந்தது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சேலம் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்க வேண்டும். ஆனால், வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்ட நிலையில், அண்ணாமலை சார்பில் வழக்கறிஞர் நாச்சிமுத்து ராஜா ஆஜராகி வாதாடினார். அப்போது, ‘பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால், வழக்கை மூன்று மாதத்துக்கு ஒத்தி வைக்க வேண்டும்’ என நீதித்துறை நடுவரிடம் வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். ஆனால், நீதித்துறை நடுவர், தமிழகம் முழுவதும் பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணம் செய்து வருகிறார். அவரை நீதிமன்றத்துக்கு வரச் சொல்லுங்கள் என்று கூறி வழக்கை வரும் மார்ச் 2-ம் தேதிக்கு ஒத்தி வைத்ததுடன், அன்று அண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார்.
மலைப் பகுதிகளிலும் இனி மகளிர் கட்டணம் இல்லா பேருந்து பயணத் திட்டம்!
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-19 19:03:00
சென்னை: “இந்த நிதியாண்டில் 3,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்” என்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்த தமிழக பட்ஜெட் 2024-25 உரையில் தெரிவித்தார். இந்த பட்ஜெட்டில் அவர் வெளியிட்ட போக்குவரத்து துறைச் சார்ந்த முக்கிய அறிவிப்புகள்: > தமிழ்நாட்டின் கடைக்கோடி கிராமங்களுக்கும் தரமான போக்குவரத்து சேவைகளைத் தொடர்ந்து வழங்கிட புதிய பேருந்துகளை வாங்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இந்நிதியாண்டில் 3,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். இதுமட்டுமன்றி ஜெர்மன் வளர்ச்சி வங்கி (KſW) நிதியுதவியுடன் 500 மின் பேருந்துகள் கொள்முதல் செய்து இந்நிதியாண்டில் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும். கடந்த 1997 ஆம் ஆண்டில் மறைந்த முன்னள் முதல்வர் கலைஞர் அறிமுகப்படுத்திய சிற்றுந்து (Mini bus) திட்டம் தமிழ்நாடெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது, வளர்ச்சியடைந்து வரும் நகரங்களை ஒட்டிய வேகமாக ஊரகப் பகுதிகளிலும் போக்குவரத்துச் சேவையை வழங்கிடும் நோக்கில் மாற்றியமைக்கப்பட்ட விதிமுறைகளுடன் சிற்றுந்து திட்டம் தமிழத்தில் விரிவுபடுத்தப்படும். இந்த வரவு - செலவுத் திட்டத்தில் மகளிருக்கான இலவசப் பேருந்துக் கட்டண மானியத்திற்காக 3,050 கோடி ரூபாய், மாணவர்களுக்கான பேருந்துக் கட்டண மானியத்திற்காக 1,521 கோடி ரூபாய் மற்றும் டீசல் மானியத்திற்காக 1,800 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் பதவியேற்ற முதல் நாளிலேயே கையெழுத்திட்ட முதல் ஐந்து கோப்புகளில் மகளிர் கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கும் விடியல் பயணம் என்ற மகத்தான திட்டமும் ஒன்று. சாதாரணக் கட்டண நகரப் பேருந்துகளில் விடியல் பயணத் திட்டத்தின் மூலம் பயணம் செய்யும் பெண்களின் சதவீதம் 40 சதவீதத்திலிருந்து 65 சதவிதமாக உயர்ந்துள்ளது. தினமும் சராசரியாக 50 லட்சம் மகளிர் பயணம் செய்து, ஜனவரி 2024 நிலவரப்படி, பேருந்துகளில் மகளிர் 444 கோடி பயணங்களை மேற்கொண்டுள்ளனர். மேலும், திருநங்கைகள் மற்றும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது உதவியாளர்களும் கட்டணம் இல்லாமல் பயணம் செய்திட அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, மாநிலத்தின் மலைப்பகுதிகளில் வாழும் மகளிர் பயன்பெறும் வகையில் நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், வால்பாறை போன்ற மலைப்பகுதிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். மகளிரின் பேராதரவு பெற்ற இத்திட்டத்திற்கான மானியத்தொகையாக 3,050 கோடி ரூபாயை 2024-25 ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் அரசு ஒதுக்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. | வாசிக்க > தமிழக பட்ஜெட் 2024-25: முக்கிய அம்சங்கள்
“ஒவ்வொருவர் பெயரிலும் ரூ.1.20 லட்சம் கடன்... தமிழக பொருளாதாரம் வீழ்ச்சி” - அன்புமணி @ பட்ஜெட் 2024
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-19 17:12:00
சென்னை: "ஒவ்வொருவர் பெயரிலும் ரூ.1.20 லட்சம் கடன், ஓராண்டிற்கான வட்டி மட்டும் ரூ.63,722 கோடி எனில், எங்கே போகிறது தமிழகத்தின் பொருளாதாரம்?” என்று தமிழக பட்ஜெட் 2024 குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு மீள முடியாத கடன் வலையில் சிக்கிக் கொள்வதை நோக்கி பயணிப்பதை 2024-25ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை உறுதி செய்திருக்கிறது. 2024-25ஆம் ஆண்டின் நிறைவில் தமிழ்நாடு அரசின் நேரடிக் கடன் மட்டும் ரூ.8,33,361 கோடியாக அதிகரிக்கும் என்பதும், ஓராண்டிற்கான வட்டியாக ரூ.63,722 கோடியாக செலுத்த வேண்டும் என்பதும் தமிழகத்தின் எதிர்காலம் குறித்த அச்சத்தை ஏற்படுத்துகின்றன. தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2024-25ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டு மக்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அடிப்படையான தேவைகள் கூட நிறைவேற்றப்படவில்லை. கிளாம்பாக்கத்தில் திறக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்திற்கு சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து இணைப்பு வசதிகள் செய்யப்படவில்லை. இந்நிலையில், விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோரயில் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், தமிழக அரசோ, 3 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை சுட்டிக்காட்டி கடந்து சென்றிருக்கிறது. இத்திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்பதைக் கூட அரசு அறிவிக்கவில்லை. மேகதாது அணை கட்டப்படும் என்பதை கர்நாடக அரசும், புதிய முல்லைப்பெரியாறு அணை கட்டப்படும் என்பதை கேரள அரசும் அம்மாநில நிதிநிலை அறிக்கைகளின் ஓர் அங்கமாக மாற்றிக் கொண்டிருக்கும் நிலையில், மேகதாது, முல்லைப்பெரியாறு விவகாரங்களில் தமிழகத்தின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்ற வாக்குறுதியைக் கூட நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசு அளிக்காதது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. மற்றொருபுறம், தமிழகத்தின் பொருளாதார நிலை சீரழிந்து கொண்டே செல்கிறது என்பதற்கான அனைத்து அறிகுறிகளும் 2024-25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தென்படுகின்றன. * 2023-24ஆம் ஆண்டில் தமிழக அரசின் சொந்த வரிவருவாய் ரூ.1.81 லட்சம் கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில் அது ரூ.1.70 லட்சம் கோடியாக குறைந்து விட்டது. * 2023-24ஆம் ஆண்டில் தமிழக அரசின் நிதிப்பற்றாக்குறை ரூ.37,540 கோடியாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 2024-25ஆம் ஆண்டில் இது ரூ.18,588 கோடியாக குறைந்திருக்க வேண்டும். ஆனால், தற்போது இது ரூ.49,278 கோடியாக அதிகரித்திருக்கிறது. * 2023-24ஆம் ஆண்டில் தமிழகத்தின் நிதிப்பற்றாக்குறை ரூ.89,884 கோடியாக கணிக்கப்பட்டிருந்த நிலையில், இது இப்போது ரூ.94,059 கோடியாக அதிகரித்திருக்கிறது. 2024-25ஆம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறை ரூ.96,031 கோடியாக கணிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது அது ரூ.1,08,689 கோடியாக அதிகரித்துள்ளது. தமிழகத்தின் பொருளாதார நிலை வீழ்ச்சியடைந்து வருவதையே இது காட்டுகிறது. * 2024-25 ஆம் ஆண்டில் தமிழக அரசு ரூ.49,638 கோடி கடனை அடைக்க வேண்டியிருக்கிறது. ஆனால், அதற்கான நிதி தமிழக அரசிடம் இல்லாத நிலையில், ரூ.1,55,584 கோடி கடன் வாங்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. * 2024-25ஆம் ஆண்டின் நிறைவில் தமிழக அரசின் நேரடிக் கடன் மட்டும் ரூ.8,33,361.80 கோடியாக இருக்கும். இது கடந்த ஆண்டின் கடன் அளவான ரூ.7,26,028 கோடியை விட ரூ.1,07,333 கோடி அதிகமாகும். அதாவது நடப்பாண்டில் தமிழக அரசு ரூ.1,07,333 கோடி நிகரக் கடன் வாங்கியுள்ளது. * தமிழ்நாட்டில் 2021-22 ஆம் ஆண்டில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற போது தமிழக அரசின் நேரடிக் கடன் ரூ.4,56,660.99 கோடியாக இருந்தது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 2024-25ஆம் ஆண்டு வரை மொத்தம் ரூ.3,76,700.81 கோடி கடன் வாங்கியிருக்கிறது. அதாவது இந்தியா விடுதலை அடைந்தது முதல் 2021ஆம் ஆண்டு வரையிலான 70 ஆண்டுகளில் தமிழ்நாட்டை ஆட்சி செய்த அரசுகள் வாங்கிய கடனில் 82.50% கடனை தற்போதைய திமுக அரசு மட்டும் வாங்கிக் குவித்திருக்கிறது. * தமிழக அரசின் நேரடிக் கடனை, தமிழ்நாட்டின் மக்கள்தொகையான 7.65 கோடியுடன் பகிர்ந்தால் ஒவ்வொருவர் பெயரிலும் ரூ.1.20 லட்சம் கடனாக வாங்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்தில் மொத்தம் 5 பேர் இருப்பதாகக் கொண்டால் அக்குடும்பத்தின் மீது ரூ.6 லட்சம் கடனாக வாங்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசு இதுவரை வாங்கிக் குவித்துள்ள கடனுக்காக மட்டும் ஆண்டுக்கு ரூ.63,722 கோடி வட்டி செலுத்த வேண்டும். ஒவ்வொரு நாளும் ரூ.175 கோடி வட்டி செலுத்த வேண்டியுள்ளது. இரு நாட்கள் செலுத்த வேண்டிய வட்டியை சேமித்தால் ஒரு மருத்துவக் கல்லூரியை கட்டிவிட முடியும். * 2024-25ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு (ஜி.எஸ்.டி.பி) ரூ.32 லட்சத்து 928 கோடியாக இருக்கும் என்று ஏற்கனவே மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அது ரூ.31.55 லட்சம் கோடியாக குறைந்து விட்டது. தமிழக பொருளாதார வீழ்ச்சியை இது காட்டுகிறது. தமிழகத்தின் பொருளாதாரம் அனைத்து வழிகளிலும் வீழ்ச்சியடைந்து வருவதையே தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை காட்டுகிறது. புதிய கொள்கைகளின் மூலம் தமிழகத்தின் உற்பத்தியை அதிகரித்தல், வரியில்லாத வருமானத்தை அதிகரித்தல், செலவுகளைக் குறைத்தல் ஆகியவற்றின் மூலம் தமிழ்நாட்டை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீட்டு, முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்'' என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
“நிதி அல்ல, நீதியும் சமூக நீதியுமே மையம்” - முதல்வர் ஸ்டாலின் கருத்து @ பட்ஜெட் 2024
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-19 16:40:00
சென்னை: "பொதுவாக நிதிநிலை அறிக்கைகள் நிதியை மையமாகக் கொண்டு தயாரிக்கப்படும். இது நீதியை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. அதுவும் சமூக நீதியை மையமாகக் கொண்டு தயாரான இந்த அறிக்கை, அனைத்து மக்களுக்குமான சம நீதியையும் - சம நிதியையும் வழங்கித் தமிழகத்தின் சீரான வளர்ச்சிக்கான பாதைக்கு அதிவேகப் பயணத்தை உறுதி செய்துள்ளது" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், "தடைகளைத் தாண்டி, வளர்ச்சியை நோக்கித் தமிழ்நாடு சீர்மிகு பயணத்தை நடத்தி வருகிறது. இதனை எடுத்துச் சொல்லும் அரசின் நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்றைய தினம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்கள். பொதுவாக நிதிநிலை அறிக்கைகள் நிதியை மையமாகக் கொண்டு தயாரிக்கப்படும். இது நீதியை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. அதுவும் சமூகநீதியை மையமாகக் கொண்டு தயாரான இந்த அறிக்கை, அனைத்து மக்களுக்குமான சமநீதியையும் - சமநிதியையும் வழங்கித் தமிழ்நாட்டின் சீரான வளர்ச்சிக்கான பாதைக்கு அதிவேகப் பயணத்தை உறுதி செய்துள்ளது. ஆறாவது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசானது 'எல்லார்க்கும் எல்லாம்' என்ற திராவிடவியல் கோட்பாட்டின் அரசு நிர்வாக வடிவமாகச் செயல்பட்டு வருகிறது. இந்தச் செயல்பாட்டின் பயனை நாம் அனைவரும் உடனடியாகவும், நேரடியாகவும் கண்டு வருகிறோம். இந்தியாவின் பொருளாதாரத்துக்கு 9 விழுக்காடு பங்கைத் தருவதாகத் தமிழ்நாட்டின் பொருளாதாரம் வளமாக இருக்கிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) அளவில் இந்தியாவில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சி 8.19 விழுக்காடாக இருக்கிறது. மாநிலத்தின் பணவீக்கமானது 5.97 விழுக்காடாகக் குறைந்துள்ளது. ஏற்றுமதி தயார்நிலைக் குறியீட்டில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் தமிழ்நாடு உயர்ந்துள்ளது. தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக 14-ஆவது இடத்தில் இருந்து 3-ஆவது இடத்துக்குத் தமிழ்நாட்டை உயர்த்தி இருக்கிறோம். புத்தாக்கத் தொழில்கள் வரிசையில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. இப்படி அனைத்துத் துறையிலும் முன்னேறி வரும் மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது. இது சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் உயர்த்தி வருகிறது. அனைத்துத் துறை வளர்ச்சி, அனைத்துச் சமூக வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி என்பதே 'திராவிட மாடல்' வளர்ச்சியின் இலக்குகளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம். இந்த வளர்ச்சியின் அடுத்தகட்ட உயர்வை அடையாளம் காட்டுவதாக தமிழ்நாடு அரசின் 2024-25-ம் ஆண்டுக்கான நிதிநிலை அமைந்திருப்பதை உணர்ந்து மகிழ்கிறேன். இலக்கை அமைத்துக் கொள்வதுதான் வெற்றிக்கான முதல் படி. இந்த நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டின் பெருங்கனவுகளை மாபெரும் இலக்காகக் கொண்டுள்ளது. சமூகநீதி - கடைக்கோடி மனிதருக்கும் நலவாழ்வு - உலகை வெல்லும் இளைய தமிழகம் - அறிவுசார் பொருளாதாரம் - சமத்துவ நோக்கில் மகளிர் நலம் - பசுமைவழிப் பயணம் - தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் ஆகிய ஏழு இலக்குகளைக் கொண்டதாக இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது. குடிசை இல்லாத் தமிழ்நாடு - வறுமை ஒழிப்பு - பின்தங்கிய பகுதிகளின் மேம்பாடு - விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துதல் - மாணவர்களுக்கு கல்விக் கடன் - காலை உணவுத் திட்ட விரிவாக்கம் - நீர்நிலைப் பாதுகாப்பு - கணினிமயமாக்கம் - சாலைகள் - குடிநீர்வசதிகள் - தமிழ் வளர்ச்சி - தமிழ் நூல்கள் மொழிபெயர்ப்பு - தொல்லியல் - விண்வெளி என அனைத்தையும் உள்ளடக்கியதாக இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது. குடிமை முதல் விண்வெளி வரை அனைத்தையும் உள்ளடக்கிய அறிக்கையாக இது அமைந்துள்ளது. இந்த அறிக்கையின் மிக முக்கியமான சிறப்பு என்னவென்றால், ஒவ்வொரு சொல்லும் - எழுத்தும் - அறிவிப்பும் ஈரமுள்ளதாக, இதயமுள்ளதாக இருக்கிறது என்பதுதான். ''ஆடுகளை ஓட்டிக்கொண்டு வரும் ஒரு விவசாயி, ஒரே ஒரு ஆட்டை மட்டும் தோளில் தூக்கிப் போட்டு சுமந்து வருவான். அது காலில் அடிபட்டு நடக்க முடியாத ஆடாக இருக்கும். அதற்குப் பெயர்தான் சமூகநீதி'' - என்று சொன்னவர் தலைவர் கலைஞர். அந்த அடிப்படையில் பல்வேறு அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன. கடைக்கோடி மனிதரையும் மேம்படுத்தி, இந்தியாவின் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாட்டை உச்சிக்குக் கொண்டு போய் உட்கார வைப்பதாக இதன் ஒவ்வொரு அறிவிப்பும் அமைந்துள்ளன. நமது கையில் இருக்கும் வளத்தை, தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கைக்குப் பயன்படுத்துவதாக இந்த அறிக்கையை வடிவமைத்துள்ளோம். கடந்தகால அதிமுக ஆட்சியின் நிர்வாகச் சீர்கேடு, நிதிச் சூறையாடல்கள் நடந்து முடிந்த காலத்தில், ஆட்சிக்கு வந்தது திமுக என்பதை அனைவரும் அறிவீர்கள். கடன்களை மட்டுமே சொத்துகளாக வைத்து விட்டுப் போனார்கள். அதனை மனதில் வைத்து 'நிதி இல்லை' என்ற பல்லவியையே பாடிக் கொண்டிராமல் நிதியைத் திரட்டும் செயல்களைச் செய்தோம். இதற்கிடையில் ஒன்றிய அரசானது மாநிலத்தின் நிதி வளத்தை சுரண்டும் செயல்களைத் தொடர்ந்து செய்தது. நியாயமாக மாநிலத்துக்குத் தர வேண்டிய நிதி ஒதுக்கீடுகளையும் தர மறுத்தது. கடன் வாங்கித் திட்டங்களைத் தீட்டுவதற்கும் தடை செய்தது ஒன்றிய அரசு. இப்படி அனைத்துப் பக்கங்களிலும் வந்த நிதி நெருக்கடிகளையும், நிர்வாகத் தொல்லைகளையும் தாண்டியும், பொறுத்துக் கொண்டும்தான் இத்தகைய வெற்றியைத் தமிழ்நாடு அரசு பெற்று வருகிறது. இதுபோன்ற பொருளாதார நெருக்கடியைத் தருவதன் மூலமாகத் தமிழ்நாடு அரசின் அனைத்துத் துறை வளர்ச்சிச் செயல்பாட்டைத் தடுக்கப் பார்த்தார்கள். ஆனால் அந்தத் தடைகளையும் வென்று, அனைவர்க்குமான வளர்ச்சிக்குத் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறது. ஏழு பெரும் கனவுகளையும் முழுமையாக நிறைவேற்றும்போது தமிழ்நாடு இந்தியாவில் சிறந்த மாநிலமாக, தலைசிறந்த மாநிலமாகத் திகழும் காலம் விரைந்து ஏற்படும். தலைசிறந்த - தொலைநோக்குப் பார்வை கொண்ட - கனிவான - பொருளாதாரச் சமநிலை அறிக்கையைத் தயாரித்து வழங்கிய நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசை பாராட்டுகிறேன். திராவிட மாடல் அரசுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்கும் மாபெரும் கடமையை மிகச் சரியாக ஆற்றி இருக்கிறார் அமைச்சர். அவருக்குத் துணையாக இருந்து, பொருளாதார வளத்தைச் சமூகச் சீர்திருத்த வளர்ச்சிக்குப் பயன்படும் வகையிலான அறிக்கையாக அமையக் காரணமாகவும் இருந்த நிதித்துறையின் முதன்மைச் செயலாளர் த.உதயச்சந்திரனுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நிதித்துறை அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். திராவிட மாடல் ஆட்சி உருவானபோது, “இந்த ஆட்சியானது ஒரு விவசாயிக்கு மழையாகவும், ஒரு ஏழைக்கு ஒரு கவளம் சோறாகவும், ஒரு ஊழியருக்கு மாதத்தின் முதல் நாளாகவும், ஒரு தொழிலதிபருக்கு வளர்ச்சியின் குறியீடாகவும் செயல்படும்” என்று நான் குறிப்பிட்டேன். அப்படித்தான் திமுக அரசு செயல்பட்டு வருகிறது. இனியும் அப்படித்தான் செயல்படும் என்பதை நாட்டுக்குச் சொல்லும் அறிக்கைதான் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை. இவை நமது அரசின் கனவுகள் மட்டுமல்ல, நனவாகப் போகும் கனவுகள். நாளை முதல் அனைத்தும் நனவாகும். துறைசார்ந்த அமைச்சர்களும், துறையின் செயலாளர்களும் இந்தத் திட்டங்கள் எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டனவோ அதனை மனதில் வைத்துச் சிறப்பாகச் செயல்படுத்திக் காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அனைத்து மாவட்டங்கள், நகரங்கள், கிராமங்களுக்கும் அறிவிப்புகள் பரந்து விரிந்துள்ளன. மாவட்ட ஆட்சியர்களும் மாவட்ட நிர்வாகமும் தங்களுக்கான திட்டங்களை மிகமிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
“திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தின் கடன் அதிகரிப்பு” - இபிஎஸ் குற்றச்சாட்டு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-19 16:28:00
சென்னை: "திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, சுமார் 8 லட்சத்து 33 ஆயிரத்து 361 கோடி கடன் உயர்ந்திருக்கிறது. இந்த கடன் மேலாண்மையை சரி செய்வதற்காக, ஒரு நிபுணர் குழுவை அமைத்தனர். இப்போது அந்தக் குழுவைத் தேடி கண்டுபிடிப்பதற்கு ஒரு குழுவை அமைக்க வேண்டும். அப்படிப்பட்ட நிலையைத்தான் இப்போது இந்த ஆட்சியில் பார்க்க முடிகிறது" என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். இதையடுத்து, சட்டமன்றத்துக்கு வெளியே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியது: "திமுக அரசு 4-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. இந்த பட்ஜெட்டில் வார்த்தை ஜாலங்கள்தான் அதிகமாக காணப்படுகிறது. மக்களுக்கான திட்டங்கள் எதுவுமே இல்லை. பெரிய வளர்ச்சித் திட்டங்கள் எதுவுமே பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்த சமயத்தில், ஏழை மக்களுக்கு பசுமை வீடுகள் திட்டத்தைக் கொண்டு வந்தோம். அந்தத் திட்டத்தையும் திமுக அரசு நிறுத்திவிட்டது. 3 ஆண்டுகாலமாக மாநகராட்சிப் பகுதிகளில் இருக்கின்ற உட்புறச் சாலைகள் சீர் செய்யப்படவில்லை. இந்த ஆண்டுதான் நிதி ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர். கிராமப்புறங்களில் 1 லட்சத்து 52 ஆயிரம் கி.மீ உள்ள சாலைகளை சீர் செய்வதற்கு வெறும் 1,000 கோடிதான் ஒதுக்கியுள்ளனர். திமுக தேர்தல் அறிக்கையில், ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தடுப்பணைகள் கட்டப்படும் என்றும், அதற்கு தேவையான நிதி ஒதுக்கப்படும் என்றும் கூறினார்கள். இந்த பட்ஜெட்டில் அது தொடர்பாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்டத் தொகை ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கப்படும். அதுபோலத்தான், இந்த ஆண்டும் திமுக அரசு அனைத்து துறைகளுக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு நிதியை ஒதுக்கியுள்ளது. திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றப்பிறகு, 2021-22ல் 72, 839.29 கோடி பற்றாக்குறை, 2022-23ல் 1 லட்சத்து 55 ஆயிரத்து 625.11 கோடி பற்றாக்குறை, 2023-24ல் 2 லட்சத்து 49 ஆயிரத்து 684 கோடி பற்றாக்குறை, 2024-25 திட்ட மதிப்பீட்டில், 3 லட்சத்து 58 ஆயிரத்து 384 கோடி பற்றாக்குறை என்று கூறுகின்றனர். இந்த ஆண்டுக்கான நிதிப் பற்றாக்குறை 1 லட்சத்து 8 ஆயிரத்து 659 கோடி என்று கூறியுள்ளனர். திமுக ஆட்சிப் பொறுப்பேற்றப் பிறகு, 8 லட்சத்து 33 ஆயிரத்து 361 கோடி கடன் இருக்கிறது. ஆட்சிப் பொறுப்பேற்பதற்கு முன்பாக, 2021 பொதுத் தேர்தலின்போது, பொதுக்கூட்டங்களில் பேசிய தற்போதைய முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தை கடனாளியாக்கிவிட்டதாக குற்றம் சுமத்திக் கொண்டிருந்தார். இப்போது ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, சுமார் 8 லட்சத்து 33 ஆயிரத்து 361 கோடி கடன் உயர்ந்திருக்கிறது. இந்தக் கடன் மேலாண்மையை சரி செய்வதற்காக, நிபுணர் குழு அமைக்கப்படும் என்றுகூறி ஒரு குழுவை அமைத்தனர். இப்போது அந்தக் குழுவைத் தேடி கண்டுபிடிப்பதற்கு ஒரு குழுவை அமைக்க வேண்டும். அப்படிப்பட்ட நிலையைத்தான் இப்போது இந்த ஆட்சியில் பார்க்க முடிகிறது. எங்களுக்கு நிதிநிலை புத்தகம் கொடுக்கவில்லை. கணினியில்தான் நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம். எனவே, முழுமையான தகவல்களை எடுக்க முடியவில்லை. இந்த நிதிநிலை வரவு செலவுத் திட்டங்களைப் பார்க்கும்போது அதில் பல குளறுபடிகள் இருக்கின்றன. அவையெல்லாம் முழுமையாக என்னுடைய அறிக்கையில் கொடுக்கப்படும்" என்று அவர் கூறினார். | வாசிக்க > தமிழக பட்ஜெட் 2024-25: முக்கிய அம்சங்கள்
“தமிழக வளர்ச்சிக்கு வழி வகுக்காத வறட்சி பட்ஜெட்” - ராமதாஸ் கடும் விமர்சனம்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-19 16:23:00
சென்னை: “தமிழக நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய திட்டங்கள் எதுவும் இல்லாத நிலையில், இவை அனைத்தும் இல்லாத உடலுக்கு அணிவிக்கப்பட்ட அணிகலன்களாக, யாருக்கும் பயனில்லாதவையாக மாறிவிட்டன. இது வளர்ச்சிக்கு வழி வகுக்காத வறட்சியான நிதிநிலை அறிக்கை” என்று தமிழக பட்ஜெட் 2024-ஐ பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்துக்கான 2024 - 25ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பாசனக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களும், சாதிவாரி கணக்கெடுப்பும் அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. 2024- 25 ஆம் ஆண்டில் ரூ.1,55,584 கோடி கடன் வாங்கும் அளவுக்கு தமிழகத்தின் நிதிநிலை மோசமடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க எந்த புதிய நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளாதது கவலை அளிக்கிறது. 2024-25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். நிதிநிலை அறிக்கை உரை முழுவதும் தெளிந்த நீரோடையாக இருந்தது. திருக்குறளில் தொடங்கி புறநானூறு வரை ஏராளமான மேற்கொள்கள் இடம் பெற்றிருந்தது மகிழ்ச்சியளித்தது. ஆனால், நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய திட்டங்கள் எதுவும் இல்லாத நிலையில், இவை அனைத்தும் இல்லாத உடலுக்கு அணிவிக்கப்பட்ட அணிகலன்களாக, யாருக்கும் பயனில்லாதவையாக மாறிவிட்டன. நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாகவே சமூகநீதி, கடைக்கோடி தமிழர் நலன் உள்ளிட்ட 7 இலக்குகளை அடிப்படையாக வைத்தே நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டின் சமூகநீதியைக் காக்க அடிப்படை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது தான். ஆனால், நிதிநிலை அறிக்கையில் அதுகுறித்த எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. மாறாக, 2021 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது என்ற பழைய பல்லவி தான் பாடப்பட்டிருக்கிறது. இதனால் தமிழ்நாட்டில் எந்த வகையிலும் சமூக நீதி மலராது என்பதே உண்மை. மணிமேகலை, சிலப்பதிகாரம் ஆகிய நூல்களை 25 மொழிகளில் மொழிபெயர்க்க நிதி ஒதுக்கீடு, 8 இடங்களில் அகழாய்வுகள் போன்ற தமிழ் வளர்ச்சிக்கும், தமிழர் நாகரிகத்தின் தொன்மையை கண்டு பிடிப்பதற்கும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், தமிழ்வழிக் கல்விக்கும், தமிழை கட்டாயப்பாடமாக்குவதற்கும் எந்த திட்டத்தையும் அறிவிக்காமல் இவற்றை செய்து என்ன பயன்? காலை உணவுத் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம், பட்டப்படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதற்கான புதுமைப் பெண் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளுக்கும் நீட்டிப்பு, மூன்றாம் பாலினத்தவரின் உயர்கல்வி செலவை அரசே ஏற்றல், அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம், 5000 நீர்நிலைகளை ரூ.500 கோடி செலவில் சீரமைப்பது ஆகியவை தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் வரவேற்கப்பட வேண்டிய சில திட்டங்கள் ஆகும். அதேநேரத்தில், * புதிய பாசனத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை, * ஓகனேக்கல் இரண்டாம் கட்ட கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை * தருமபுரி உபரி நீர் திட்டம் அறிவிக்கப்படவில்லை * அரியலூர் சோழர் பாசனத் திட்டம் அறிவிக்கப்படவில்லை. * தமிழ்நாட்டில் புதிய கல்லூரிகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை * 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அறிவிக்கப்படவில்லை * கல்விக்கடன் ரத்து குறித்து எந்த அறிவிப்பும் இல்லை * இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவதற்கான திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை * நெல், கரும்புக்கான கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை என்பன போன்ற ஏராளமான இல்லாமைகள் இந்த நிதிநிலை அறிக்கையில் நிறைந்திருக்கின்றன. மகளிர்நலன் காக்கும் சமத்துவப் பாதை என்ற இலக்கை அடிப்படையாகக் கொண்டு புதிய திட்டங்கள் உருவாக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. மகளிர் நலன் காப்பதற்கான முதல் நடவடிக்கை தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது தான். ஆனால், நடப்பாண்டில் ஒரு மதுக்கடையைக் கூட மூடுவதற்கான அறிவிப்புகள் இல்லை. மாறாக, நடப்பாண்டில் ரூ.50,000 கோடியாக உள்ள மதுவணிகத்தின் மூலமான வருவாயை ரூ.55,000 கோடியாக உயர்த்துவதற்கு அரசு இலக்கு நிர்ணயித்திருக்கிறது. இது எந்த வகையிலும் மகளிர் நலனைக் காக்காது; குடும்பங்களை சீரழிக்கும். திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இத்தகையதாக உள்ள நிலையில், தமிழகத்தின் நிதிநிலை மிகவும் மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. நடப்பாண்டில் 1.81 லட்சம் கோடி அளவுக்கு தமிழகத்தின் சொந்த வரி வருவாய் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது ரூ.1.70 லட்சம் கோடியாக குறைந்து விட்டது. வரும் ஆண்டில் நிலையை சமாளிக்க ரூ.1.55 லட்சம் கோடி கடன் வாங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இது எந்த வகையிலும் மகிழ்ச்சியளிக்கும் செய்தி அல்ல. இது வளர்ச்சிக்கு வழி வகுக்காத வறட்சியான நிதிநிலை அறிக்கை. மொத்தத்தில் 2024-25ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது. நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளிக்கும் போதாவது புதிய திட்டங்களை நிதியமைச்சர் அறிவிக்க வேண்டும். தமிழகத்தின் நிதிநிலையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
“பல சவால்களுக்கு மத்தியில் தமிழக பட்ஜெட் 2024 தயாரிப்பு” - உதயச்சந்திரன் விவரிப்பு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-19 16:16:00
சென்னை: "தொழிநுட்பத்தை உதவியுடன் நிதி மேலாண்மையை அரசு சீர்படுத்தியுள்ளது. தமிழக பொருளாதாரம் மிக சிறப்பாக உள்ளது" என்று தமிழக பட்ஜெட் குறித்து நிதித் துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாடு பட்ஜெட் தொடர்பாக நிதித்துறை முதன்மை செயலாளர் உதயச்சந்திரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "தேசிய சராசரியை விட தமிழ்நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதும் ஒரு அரசின் கடமையாகும். அந்த வகையில் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த நிதியாண்டில் ரூ.47,000 கோடி அளவில் கட்டமைப்புகளுக்கு செலவிட போகிறோம். சென்னை மெட்ரோ திட்டத்துக்கு இதில் அதிகம் செலவிட வாய்ப்பு உள்ளது. நிதிப்பற்றாக்குறை 3.05%க்குள் இருக்க வேண்டும் நிதி குழு சொல்கிறது. அந்த வரம்புக்குள் தமிழ்நாடு இருக்கிறது, 2024-25 நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை 3.44% ஆக இருக்கும். மிக நெருக்கடியான காலகட்டத்தில் மாநிலத்தின் வரிவருவாய் எவ்வளவு சிக்கல்களுக்கு உள்ளானது என்பது பட்ஜெட்டில் விரிவாக சொல்லப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் தமிழ்நாடு சமீபத்தில் சந்தித்த இரு இயற்கை பேரிடர்கள். இந்த பேரிடர்களால் இரண்டு விதமான சிக்கல்கள் வந்தன. ஒன்று வருவாயில் குறைவு ஏற்பட்டது. வருவாய் அதிகம் கொடுக்கக் கூடிய சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்கள் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டன. தென் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. இதனால் வருவாய் குறைவு ஏற்பட்டது. இரண்டாவது வெள்ள நிவாரணத்துக்கென செலவு செய்ய வேண்டி இருந்தது. இந்த நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தமிழகத்தின் பொருளாதாரம் மிக ஆரோக்கியமாக உள்ளது. தமிழகத்தின் சொந்த வரி வருவாயில் 15% வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம். பத்திரப் பதிவு துறையில் சென்ற வருடம் எதிர்பார்த்த வளர்ச்சி இல்லை. ஆனால் வரும் வருடத்தில் நிறைய எதிர்பார்ப்புகளோடு இருக்கிறோம். மாநில அரசின் வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வரி வருவாயை திரட்டுவதிலும், வரி ஏய்ப்பை தடுப்பதிலும் தொழில்நுட்பத்தின் துணையுடன் செயல்பட்டு வருகிறோம். புதுமைப் பெண் திட்டத்தின் வெற்றியால் கல்லூரிகளில் பெண்களின் சேர்க்கை அதிகமானது. எனவே, அதேபோல் தமிழ்ப் புதல்வன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பழங்குடி மக்களுக்காக தொல்குடி திட்டம் என்ற முக்கியமான திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. மகளிர் நலன் காக்க இந்த பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்கள் வெளிநாடுகளில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் படிக்க முற்பட்டால் அவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. விரைவில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகப்படுத்தப்படும். தமிழகத்தின் பிற்படுத்தப்பட்ட 10 இடங்களை தேர்வு செய்து அங்கு ஐடிஐ மையங்கள் அமைக்கப்படவுள்ளன. பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வரும்போது தொலைநோக்கு பார்வை எதிர்காலம் நோக்கி இருக்க வேண்டும். எதிர்காலம் அறிவுசார் பொருளாதாரம் நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இதனை மிகக் கவனமாக கையாண்டு தொழில்நுட்ப பூங்காக்கள் திறப்பது உள்ளிட்ட புதிய திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த பட்ஜெட் 7 முதன்மையான நோக்கங்களை கொண்டு தயாரிக்கப்பட்டது. நலத் திட்டங்கள் செயல்படுத்துவதில் தொய்வடைய கூடாது என்பது ஒருபுறம், கட்டமைப்புத் திட்டங்களில் முன்னேறி செல்ல வேண்டும் என்பது ஒருபுறம். இந்த பட்ஜெட் அறிக்கை பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தயாரிக்கப்பட்டது. வரி வருவாயில் சிக்கல், இயற்கை பேரிடர்கள், ஜிஎஸ்டி இழப்பீட்டு சிக்கல், சென்னை மெட்ரோ ரயில் திட்ட சிக்கல், தமிழ்நாடு மின்பகிர்மான கழக நஷ்டத்தில் 90% அரசு ஏற்க வேண்டும் என்பது நிபந்தனை. அந்த நிபந்தனை நமது நிதி நிலைமையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நடப்பு நிதியாண்டில் கொடுக்க வேண்டியது என்று யோசித்த தொகை சுமார் ரூ.3000 கோடி. ஆனால் அதிகமாக கொடுத்திருப்பது 15,000 கோடி ரூபாய். இது வருவாய் பற்றாக்குறையில் பிரதிபலிக்கிறது. 2017-ம் ஆண்டில் இதேபோன்று தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தின் நட்டத்தை அரசு ஏற்றுக்கொள்ளும் உதய் என்கிறது திட்டம். அந்தத் திட்டத்தை அறிவித்தபோது அரசு நட்டத்தை எவ்வளவு ஏற்றுக்கொள்கிறது, அதனை நிதி பற்றாக்குறையில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்றும், அரசு திரட்டும் கடன் உச்ச வரம்பில் கழித்துக் கொள்ளப்படும் என்று சொல்லியிருக்கிறார். இதுதொடர்பாக ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். வருவாய் பற்றாக்குறையை பொறுத்தவரை, மதிப்பீடுகளை விட சற்று அதிகமாகியிருக்கிறது. சுமார் 17000 கோடி ரூபாய் அரசு நினைத்ததைவிட அதிகமாக செலவு செய்ய வேண்டியிருந்தது. சிறப்பான நிதி நிர்வாகத்தினால் இதனை 8000 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் பற்றாக்குறையை குறைந்திருக்கிறோம். தொழிநுட்பத்தை உதவியுடன் நிதி மேலாண்மையை அரசு சீர்படுத்தியுள்ளது. தமிழக பொருளாதாரம் மிகச் சிறப்பாக உள்ளது. தேசிய சராசரியை விட தமிழ்கத்தின் வளர்ச்சி அதிகம். பணவீக்கம் குறைவு. இந்த முன்னேற்றத்தை தக்கவைத்து கொள்ள நாம் நலத்திட்டங்களில் கட்டமைப்புகளில் முதலீடு செய்ய வேண்டும். திறன் மேம்பாடு செய்ய வேண்டும் என்பதற்காக இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. கணக்குகளின்படி இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரம், தமிழகம்” என்றார். | வாசிக்க > புதிதாக புற்றுநோய் மேலாண்மை இயக்கம்: தமிழக பட்ஜெட் 2024-ல் மருத்துவத் துறை அறிவிப்புகள்
2 கோடி உறுப்பினர்களை சேர்க்க விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இலக்கு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-19 16:01:00
சென்னை: “2 கோடி உறுப்பினர்கள்‌ என்று இலக்கு நிர்ணயித்து, உறுப்பினர்‌ சேர்க்கைப்‌ பணிகளில்‌ கூடுதல்‌ கவனம்‌ செலுத்துவதுதான்‌ நமது முதற்கட்டப்‌ பணி” என கட்சியினருக்கு தமிழக வெற்றிக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கை: “தமிழக வெற்றிக்‌ கழகத்தின்‌ உறுப்பினர்‌ சேர்க்கை மற்றும்‌ உட்கட்சிக்‌ கட்டமைப்பு விரிவாக்கம்‌ தொடர்பான ஆலோசனைக்‌ கூட்டம்‌, சென்னையில்‌ இன்று நடைபெற்றது. இந்தக்‌ கூட்டத்தில்‌ கட்சியின் தலைவர் விஜய் ஆலோசனையின்படி வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள்‌: தமிழக வெற்றிக்‌ கழகத்தின்‌ உள்கட்டமைப்பை வலுப்படுத்தும்‌ வகையில்‌ உறுப்பினர்‌ சேர்க்கை முகாம்கள்‌ மாநிலம்‌ முழுவதும்‌ மாவட்ட மற்றும்‌ சட்டமன்றத்‌ தொகுதிகள்‌ வாரியாக நடத்தப்பட வேண்டும்‌. விரைவில்‌ முதற்கட்டமாக மகளிர்‌ தலைமையிலான உறுப்பினர்‌ சேர்க்கை அணி நிர்வாகிகள்‌ அறிவிக்கப்பட உள்ளனர்‌. உறுப்பினர்‌ சேர்க்கை அணியுடன்‌ இணைந்து, புதியதாக நியமிக்கப்பட இருக்கும்‌ மாவட்டப்‌ பொறுப்பாளர்கள்‌, சட்டமன்றத்‌ தொகுதிப்‌ பொறுப்பாளர்கள்‌ ஆகியோர்‌ முழு அளவில்‌ உறுப்பினர்‌ சேர்க்கைக்கான ஒருங்கிணைப்புப்‌ பணிகளில்‌ ஈடுபட வேண்டும்‌. தமிழக வெற்றிக்‌ கழகத்தால்‌ நவீன வசதிகளுடன்‌ உருவாக்கப்பட்டு வரும்‌ சிறப்புச்‌ செயலி வாயிலாக உறுப்பினர்‌ சேர்க்கை முகாம்களை மாவட்ட, மாநகர, நகர, பேரூர்‌, ஒன்றிய, ஊராட்சி, வார்டு வாரியாக முழுவீச்சில்‌ நடத்தி, புதிய உறுப்பினர்களைச்‌ சேர்க்க வேண்டும்‌. கட்சித் தலைமை‌ ஆணையை ஏற்று, இரண்டு கோடி உறுப்பினர்கள்‌ என்று இலக்கு நிர்ணயித்து, உறுப்பினர்‌ சேர்க்கைப்‌ பணிகளில்‌ கூடுதல்‌ கவனம்‌ செலுத்துவது தான்‌ நமது முதற்கட்டப்‌ பணியாகும்‌. ஒவ்வொரு தேர்தலிலும்‌ புதிய வாக்காளர்களின்‌ எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளர்‌ பட்டியலில்‌ இடம்பெற்றுள்ள, புதிய வாக்காளர்கள்‌ மற்றும்‌ மகளிர்‌ உள்ளிட்ட வாக்காளர்கள்‌ அனைவரையும்‌ தமிழக வெற்றிக்‌ கழகத்தில்‌ உறுப்பினர்களாகச்‌ சேர்க்கக்‌ கூடுதல்‌ கவனம்‌ செலுத்த வேண்டும்‌. வருகின்ற மக்களவைத்‌ தேர்தலை முன்னிட்டு, மாவட்ட ரீதியாகவும்‌, சட்டமன்றத்‌ தொகுதி வாரியாகவும்‌ புதிய திருத்தப்பட்ட வாக்காளர்‌ பட்டியல்‌ தேர்தல்‌ ஆணையத்தால்‌ வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட, சட்டமன்றத்‌ தொகுதிப்‌ பொறுப்பாளர்கள்‌, தங்கள்‌ நிர்வாகத்திற்கு உட்பட்ட சட்டமன்றத்‌ தொகுதிகள்‌ தொடர்புடைய வாக்காளர்‌ பட்டியலின்‌ நகலை முறைப்படி பெற்றுக்கொள்ள வேண்டும்‌. மாவட்ட, சட்டமன்றத்‌ தொகுதிப்‌ பொறுப்பாளர்கள்‌, தங்களது நிர்வாகத்திற்கு உட்பட்ட தொகுதிகளில்‌ உள்ள வாக்காளர்கள்‌ பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள வேண்டும்‌. பூத்‌ கமிட்டி அமைத்து, பூத்‌ வாரியாக வாக்காளர்களில்‌ கட்சி சார்புள்ளவர்கள்‌ யார்‌ யார்‌, எந்தக்‌ கட்சியையும்‌ சாராதவர்கள்‌ யார்‌ யார்‌ என்ற விவரங்களையும்‌ சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்‌. மாவட்ட, சட்டமன்றத்‌ தொகுதிப்‌ பொறுப்பாளர்களுக்கு விதிக்கப்படும்‌ நிபந்தனைகள்‌, கட்டுப்பாடுகளை ஏற்றுச்‌ செயல்படுவதைக்‌ கடமையாகக்‌ கருத வேண்டும்‌. தமிழக வெற்றிக்‌ கழகம்‌ என்ற பெயரை அறிவித்து, தலைமை அறிவித்துள்ள அறிக்கையில், இலக்கு குறித்தும், அரசியல் நிலைபாடு குறித்தும் தெளிவாக விளக்கியுள்ளார். அதனை மாவட்ட, சட்டமன்றத்‌ தொகுதிப்‌ பொறுப்பாளர்கள்‌ அனைவரும்‌ கருத்தில்‌ கொண்டு செயல்பட வேண்டும்‌. தமிழக வெற்றிக்‌ கழகத்தின்‌ பெயரில்‌ போஸ்டர்கள்‌, பிளக்ஸ்‌ பேனர்கள்‌ தயாரிக்கும்‌ போதும்‌, பயன்படுத்தும்‌ போதும்‌, கட்சித்‌ தலைமையால்‌ வழங்கப்படும்‌ வழிகாட்டு நெறிமுறைகளைக்‌ கட்டாயம்‌ பின்பற்ற வேண்டும்‌. கட்சியின் அதிகாரபூர்வ நியமனங்கள்‌, அறிவிப்புகள்‌ அனைத்தும்‌ கட்சியின் தலைவர் அல்லது அவரின் ஒப்புதலுடன் பொதுச் செயலாளரால் கட்சியின் அதிகாரபூர்வ சமூக வலைத்தள பக்கங்களில்‌ வெளியிடப்படும்‌ என்பதை மாவட்ட, சட்டமன்றத்‌ தொகுதிப்‌ பொறுப்பாளர்கள்‌ உள்ளிட்ட அனைவரும்‌ கருத்தில்‌ கொள்ள வேண்டும்‌. அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு நமது இலக்கான 2 கோடி உறுப்பினர்கள் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்பதை அன்போடு கேட்டுகொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. #தமிழகவெற்றிக்கழகம் pic.twitter.com/wDtoYPqhcv
புதிதாக புற்றுநோய் மேலாண்மை இயக்கம்: தமிழக பட்ஜெட் 2024-ல் மருத்துவத் துறை அறிவிப்புகள்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-19 15:57:00
சென்னை: தமிழக பட்ஜெட் 2024-25-ல் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு 20,198 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த நிதியாண்டில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்துக்காக 243 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர் தனது உரையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள்: > மக்களைத் தேடி மருத்துவம் எனும் ஒரு மகத்தான திட்டத்தினை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் வீட்டிலிருந்தே பயன்பெறும் வகையில் சேவைகளை வழங்கும் இத்திட்டத்துக்காக 243 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். > மருத்துவக் காப்பீட்டினைப் பயன்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில், அரசு மருத்துவமனைகளின் பங்களிப்பை 50 சதவீதத்துக்கும் மேலாக உயர்த்தி, நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இந்த மருத்துவமனைகளில் கட்டமைப்பை மேலும் மேம்படுத்தி, உயர் சேவைகளை வழங்குவதற்காக காப்பீட்டுத் தொகுப்பு நிதியிலிருந்து 200 கோடி ரூபாய் செலவிடப்படும். > 2 லட்சம் நபர்களுக்கு மேல் பயன் பெற்றுள்ள நாட்டிலேயே முன்னோடியான இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டத்தை மேலும் மேம்படுத்திட இந்த அரசு முனைந்துள்ளது. விபத்து நடந்த முதல் 48 மணி நேரத்தில் வழங்கப்படும் இலவச சிகிச்சைக்கான உச்சவரம்புத் தொகை ஒரு லட்சம் ரூபாயிலிருந்து இரண்டு லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். > மாநிலம் முழுவதிலும் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவுகள் மற்றும் நோய் கண்டறிதல் சேவைகளுக்கான கட்டமைப்பு வசதிகள் வரும் நிதியாண்டில் மேலும் மேம்படுத்தப்படும். ராமேஸ்வரம், செந்துறை, ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம் ஆகிய மருத்துவமனைகளிலும், தேனி மற்றும் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும், 50 படுக்கைகள் கொண்ட 6 தீவிர சிகிச்சைப் பிரிவுகள் 142 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும். > பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 100 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டப்படும். மேலும், 87 கோடி ரூபாயில் 25 வட்டம் மற்றும் வட்டம்சாரா மருத்துவமனைகளுக்கு கூடுதல் கட்டடங்கள் கட்டப்படும். சென்னையிலுள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் 64 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும். புற்றுநோய் மேலாண்மை இயக்கம்: புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது, தகுந்த சிகிச்சை அளிப்பது மற்றும் புனர்வாழ்வு சேவைகளை அளிப்பதற்காக ஒரு புதிய புற்றுநோய் மேலாண்மை இயக்கத்தை இந்த அரசு செயல்படுத்தும். அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனைக்குத் தேவையான உயர்தர சிகிச்சைக்காக கூடுதல் உயர்நிலை புற்றுநோய்க கருவிகள் வழங்கப்பட்டு, அதனை உயர்திறன் மையமாக (Centre of Excellecne) தரம் உயர்த்தப்படும். > 25 அரசு மருத்துவமனைகளில் சிறப்பு போதைப் பழக்க மீட்பு மையங்களை நிறுவி, மது மற்றும் போதைப் பொருட்களால் பாதிக்கப்பட்டோருக்கு தேவையான மனநல ஆலோசனை, மருத்துவ சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு சேவைகள் 20 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும். > இந்த வரவுசெலவுத் திட்ட மதிப்பீடுகளில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு 20,198 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. | வாசிக்க > ரூ.300 கோடியில் 15,000 ஸ்மார்ட் வகுப்பறைகள்: தமிழக பட்ஜெட் 2024-ல் பள்ளிக் கல்வி அறிவிப்புகள்
ரேஷன் கடை பாமாயிலை தரையில் கொட்டி திருச்சியில் விவசாயிகள் போராட்டம்
ஜி.செல்லமுத்து
திருச்சி
2024-02-19 15:39:00
திருச்சி: ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பாமாயிலை தரையில் கொட்டி விவசாயிகள் போராட்டம் நடத்தியதால், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு நிலவியது. திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் தலைமையில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் அடிப்படை வசதிகள் முதியோர் உதவித் தொகை என பல்வேறு மனுக்கள் பெறப்பட்டன. இதில், பேருவளை வாய்க்கால் பாசன சங்கத்தினர் மாநில துணைத் தலைவர் தியாகராஜன் தலைமையில் பருவ மழையில் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி மனு அளித்தனர். முன்னதாக பேரணியாக வந்த விவசாயிகள், திருச்சி மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் சோளம் பயிரிட்டு விளைச்சல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு அரசு வழங்கிடவும், தமிழக விவசாயிகளை வாழ வைக்காமல், மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்து ரேஷன் கடைகளில் பாமாயில் வழங்கும் திமுக அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். அத்துடன், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் வழங்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி, தமாக விவசாயம் பிரிவு சார்பில் விவசாயிகள் ஏராளமானோர் பாமாயில் எண்ணெயை சாலையில் கொட்டியும், பாதிக்கப்பட்ட சோள பயிர்களுடன் பேரணியாக வந்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டும் அறிவிப்புகள்” - வைகோ கருத்து @ தமிழக பட்ஜெட் 2024
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-19 15:33:00
சென்னை: “தடைகளை தாண்டி - வளர்ச்சியை நோக்கி” எனும் 2024-25 நிதி நிலை அறிக்கை, தமிழகத்தின் சமச்சீரான வளர்ச்சிக்கும்,“எல்லோருக்கும் எல்லாம்” என்னும் திராவிட இயக்க அடிப்படைக் கோட்பாட்டின் வெற்றிக்கும் அடித்தளம் அமைத்திருக்கிறது" என்று தமிழக பட்ஜெட் 2024-25-ஐ மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வரவேற்றுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாபெரும் தமிழ் கனவுடன் தமிழக அரசின் 2024-25 நிதி ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கையை இன்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருக்கிறார். சமூக நீதி, கடைக் கோடி மனிதருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமை வழி பயணம் மற்றும் தாய் தமிழும் தமிழர் பண்பாடும் ஆகிய ஏழு இலக்குகளை நிறைவேற்ற நிதிநிலை அறிக்கையில் திட்டங்களை வழங்கி இருக்கிற நிதி அமைச்சருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார பலம் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இயற்கைப் பேரிடர், ஒன்றிய அரசின் பாராமுகம், நிதி நெருக்கடி, வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஆதாரங்களைத் திரட்டுவதற்கு ஒன்றிய அரசின் கடும் நிபந்தனைகள், ஜிஎஸ்டி வரி வருவாயில் ஆண்டிற்கு 20 ஆயிரம் கோடி இழப்பு, வருவாய் பற்றாக்குறை ரூபாய் 44 ஆயிரத்து 907 கோடி அளவுக்கு உயர்வு, நிதிப் பற்றாக்குறை ரூபாய் 94060 கோடியாக அதிகரிப்பு போன்ற கடுமையான சூழ்நிலையிலும் திறன் மிக்க நிதி மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அன்புச் சகோதரர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசை பாராட்டி வாழ்த்துகிறேன். சமூக நீதிக்கு அடித்தளமாக, மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிதி நிலை அறிக்கையில், தமிழ்நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுக்கு தேவையான முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. வேளாண் தொழிலுக்கு ஆதாரமான காவிரி வைகை, நொய்யல், தாமிரபரணி போன்ற ஆறுகளை புனரமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. மத்திய அரசின் நிதி ஆயோக் ஆய்வறிக்கையின்படி, தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் 2.2 விழுக்காடு மக்களை வறுமையின் பிடியில் இருந்து மீட்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. தாயுமானவர் வறுமை ஒழிப்புத் திட்டம் என்ற புதிய திட்டத்தின் மூலம் ஆதரவற்றோர், தனித்து வாழும் முதியோர் நலன் பேணப்படும் என்பதும் பாராட்டத்தக்கது. குடிசைகள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு ரூபாய் 3500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. எப்போதும் போல் இந்த நிதி நிலை அறிக்கையிலும் கல்வி வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. உயர் கல்வித் துறைக்கு ரூபாய் 8212 கோடி, பள்ளிக் கல்வித் துறைக்கு 44 ஆயிரத்து நாற்பத்தி இரண்டு கோடி ரூபாய், ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ் வளர்ச்சிக்கு என்றென்றும் பாடுபடும் திராவிட இயக்க ஆட்சியில் சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட 25 இலக்கிய நூல்கள் மொழி பெயர்க்கப்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே சிறந்து விளங்கும் தமிழ்நாடு மேலும் வளர்ச்சி காண பல்வேறு திட்டங்கள் வரவு செலவு அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன. கோவையில் 20 லட்சம் சதுர அடியில் ரூபாய் 1100 கோடியில் தகவல் தொழில் நுட்பப் பூங்கா, மதுரையில் தொழில் புத்தாக்க மையம், தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர் மற்றும் தூத்துக்குடி போன்ற நகரங்களில் நியோ டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் 13,000 பேருக்கு வேலை வாய்ப்பு, தூத்துக்குடியில் 2000 ஏக்கர் பரப்பளவில் விண்வெளி தொழில் மற்றும் உந்து சக்தி பூங்கா, மதுரை மற்றும் திருச்சியில் தகவல் தொழில் நுட்ப பூங்காக்கள், தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் 300 ஏக்கர் பரப்பளவில் சிப் காட் தொழில் பூங்கா அமைக்கப்படுகிறது. விருதுநகர், சேலத்தில் ரூபாய் 2483 கோடி செலவில் ஜவுளி பூங்காக்கள் அமைத்தல்; இதன் மூலம் 2.08 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள்; ஜவுளி தொழில் நுட்ப மேம்பாட்டிற்கு ரூபாய் 500 கோடி ஒதுக்கீடு; கரூர், ஈரோடு, விருதுநகர் மாவட்டங்களில் சிறிய ஜவுளி பூங்காக்கள், விருதுநகர், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, சேலம், நாமக்கல் மற்றும் புதுக்கோட்டையில் குறு தொழில் தொகுப்புகள்; சிறு குறு தொழில் முனைவோருக்கு புதியதாக மூன்று தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் தொழில் மேம்பாட்டு திட்டம், போன்ற அறிவிப்புகள் தொழில் துறை வளர்ச்சிக்கும் இளைஞர்களின் வேலை வாய்ப்புக்கும் அடித் தளமாக அமையும். மேலும், 2025 ஜனவரியில் உலக புத்தொழில் மாநாடு நடத்தப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்கத்தக்கது. இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை உறுதி செய்ய திராவிட மாடல் அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் 60 ஆயிரத்து 567 இளைஞர்கள் தமிழக அரசு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு பணி வழங்கப்படும்; ஜூன் மாதத்தில் பத்தாயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும்; ரயில்வே வங்கிப் பணிகளில் தமிழக இளைஞர்கள் அதிக அளவில் சேர சென்னை, கோவை, மதுரை மண்டலத்தில் விடுதி வசதியுடன் கூடிய ஆறு மாத பயிற்சி வழங்கும் திட்டம் ஆகிய அறிவிப்புகள் இளைஞர்களுக்கு நம்பிக்கை ஊட்டுகின்றன. மகளிர் நலம் பேணுவதில் திமுக அரசு முன்னோடியாக இருப்பது அறிந்ததே. 500-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு பணி வழங்கும் நிறுவனங்களுக்கு ஊதிய மானியம் அளிக்கப்படும் என்ற அறிவிப்பின் மூலம் பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கும் புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு, மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க 370 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டமான “விடியல் பயணம்” திட்டத்திற்கு ரூபாய் 3500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, மலைப் பகுதிகளுக்கும் இத்திட்டம் விரிவாக்கம் செய்திருப்பதும் வரவேற்கத்தக்கது. மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்திற்கு ரூபாய் 13 ஆயிரத்து 720 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது; வரும் நிதியாண்டில் பத்தாயிரம் புதிய சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுய உதவிக் குழுக்களுக்கு ரூபாய் 35 ஆயிரம் கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது; கோவை, மதுரையில் மூன்று புதிய தோழி மகளிர் தங்கும் விடுதிகள் கட்டப்படும்; ஊட்டச்சத்து குறைபாடு உள்ள தாய்மார்களுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் போன்ற பயன் தரும் அறிவிப்புகள் வெளியிடப் பட்டுள்ளன. 2024 - 25 வரவு செலவு திட்ட அறிக்கையில் 14 கடலோர மாவட்டங்களில் 1076 கிலோ மீட்டர் கடற்கரை பகுதிகளை மையமாகக் கொண்டு நெய்தல் மீட்சி இயக்கம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பழங்குடியினர் மேம்பாட்டிற்கு ரூபாய் ஆயிரம் கோடியில் “தொல்குடி” திட்டம், அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று உயர் கல்வி செல்லும் மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் “தமிழ்ப் புதல்வன் திட்டம்”, ராமநாதபுரத்தில் கடல் சார் நீர் விளையாட்டு மையம், புற்றுநோய் மேலாண்மை இயக்கம் போன்ற புதிய திட்டங்கள் வரவேற்கத்தக்கவை ஆகும். “தடைகளை தாண்டி - வளர்ச்சியை நோக்கி” எனும் 2024-25 நிதி நிலை அறிக்கை, தமிழகத்தின் சமச்சீரான வளர்ச்சிக்கும்,“எல்லோருக்கும் எல்லாம்” என்னும் திராவிட இயக்க அடிப்படைக் கோட்பாட்டின் வெற்றிக்கும் அடித்தளம் அமைத்திருக்கிறது" என்று வைகோ கூறியுள்ளார்.
“காத்திருப்பு நிலை நீடிப்பு, சமூக நீதி கண்ணோட்டம்” - முத்தரசன் கருத்து @ தமிழக பட்ஜெட் 2024
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-19 15:16:00
சென்னை: “தமிழகம் முழுவதும் சமச்சீர் வளர்ச்சி பெற வேண்டும் என்ற சமூக நீதி கண்ணோட்டம் கொண்ட நிதி நிலை அறிக்கை, தடைகள் பலவற்றையும் தாண்டி சாதனை படைக்கும்” என்று தமிழக பட்ஜெட் 2024-ஐ இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் வெகுவாக வரவேற்றுள்ளார். மேலும், வரும் ஆண்டுகளில் 50 ஆயிரம் பேருக்கு அரசு பணி வழங்கப்படும் என உறுதியளித்துள்ள நிதிநிலை அறிக்கை, அரசுத் துறைகளிலும், நிறுவனங்களிலும் பத்தாண்டுகளுக்கும் மேலான ஒப்பந்த தொகுப்பூதிய பணியாளர்கள் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஆசிரியர், அரசுப் பணியாளர் பழைய ஓய்வூதியம் போன்றவை இன்னும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையிலேயே நீடிக்கிறது. இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசின் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2024-25-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்துள்ளார். அதில், தமிழ் சமூகத்தின் தொன்மை நல் மரபுகளை முன்னெடுத்து வளர்த்தெடுக்க நிதி நிலை அறிக்கை கவனம் செலுத்தி இருக்கிறது. சிலப்பதிகாரம், மணிமேகலை உட்பட தமிழ் இலக்கியங்கள் பிற மொழிகளில் பெயர்த்து வழங்கவும் தொல்லியல் ஆய்வுகளை மேலும் ஆறு மையங்களுக்கு விரிவுபடுத்தியிருப்பதும், கீழடியில் திறந்த வெளி அரங்கம் அமைக்கும் திட்டம் மற்றும் பழங்குடி மக்கள் மொழிகளை ஆவணப்படுத்தும் திட்டம் போன்றவை சிறப்பானது. குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, நீர் வளத்துறையில் 5 ஆயிரம் ஏரிகள், குளங்கள் உட்பட காவிரி, வைகை, நொய்யல், தாமிரபரணி ஆறுகளும் புனரமைக்கும் திட்டமும், 2 ஆயிரம் மேல்நிலைத் தொட்டி கட்டும் திட்டமும் முக்கியமானது. இடை பாலினத்தவர்களுக்கு (மூன்றாம் பாலினத்தவர்கள் ) கல்வி, விடுதி இலவசமாக வழங்குவதும், கல்லூரி கல்வி செலவை அரசே ஏற்பதும் அவர்களின் சமூக ஒப்புதலுக்கு வழிவகுக்கும். மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு ரூ.13 ஆயிரத்து 720 கோடியும் மாணவர்கள் கல்விக் கடன் வழங்குவதும் உயர் கல்வி பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ 1000 அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தும் தமிழ் புதல்வன் திட்டமும் வரவேற்கத்தக்கது. ஒன்றிய அரசு கட்டமைப்பில் தமிழர் பங்கேற்பு அதிகரிக்க சிறப்பு பயிற்சி மையங்கள் அமைப்பது குறிப்பிடத்தக்கது. 500-க்கும் மேற்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள் பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு ஊதிய மானியம் அளிப்பது வரவேற்பு பெறும். இதில் 500 பேர் பணியமர்வு என்ற வரம்பை தளர்த்தி, குறைப்பது அவசியமாகும். பள்ளிக் கல்வித் துறைக்கு பெரும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்துறையில் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் பகுதி நேர ஆசிரியர் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்: பொதுப் போக்குவரத்துப் பயணிகள் வசதிக்காக மூன்றாயிரம் புதிய பேருந்துகள் வாங்க கவனம் செலுத்தியுள்ள நிதிநிலை அறிக்கை, போக்குவரத்துத் தொழிலாளர்களின் சட்டப்பூர்வ உரிமைகளை பாதுகாத்து, அவர்களுக்கு வழங்க வேண்டிய பணப் பயன்களை வழங்கவும் முன் வரும் என எதிர்பார்ப்பு இருக்கிறது. சென்னை பெருநகரில் நிலவும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் முறையில் மெட்ரோ ரயில் பாதை விரிவாக்கம் செய்வது பொருத்தமானது. தீவிரமாக நகர்மயமாகி வரும் நிலையில் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு மேலும் கூடுதலாக நிதித் தேவை உருவாகும். குடிசைகள் இல்லா தமிழ்நாடு முத்தமிழறிஞர் கலைஞரின் நீண்ட காலக் கனவாகும். அதனை நனவாக்கும் முயற்சியில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை பேரிடர் இரண்டு முறை தாக்கியதால் பெரும் சவாலை சந்தித்தபோது, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒரு ரூபாயும் வழங்காமல் வஞ்சித்து விட்ட பாஜக மத்திய அரசின் பாரபட்ச போக்கை சுட்டிக் காட்டிய நிதியமைச்சர், மாநில அரசுகள் கடன் வாங்கும் வரம்புகளில் கடுமையான நிபந்தனைகளை விதித்து நிதித் தாக்குதல் நடத்தி வருகிறது என்பதை கூறினார். இதன் காரணமாக தமிழ்நாட்டின் நிதிப் பற்றாக்குறை ரூபாய் ஒரு லட்சத்து 8 ஆயிரம் கோடியாக உயர்ந்திருப்பதாக அமைச்சர் கூறியுள்ளார். வரும் ஆண்டுகளில் 50 ஆயிரம் பேருக்கு அரசு பணி வழங்கப்படும் என உறுதியளித்துள்ள நிதிநிலை அறிக்கை அரசுத் துறைகளிலும், நிறுவனங்களிலும் பத்தாண்டுகளுக்கும் மேலான ஒப்பந்த தொகுப்பூதிய பணியாளர்கள் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஆசிரியர், அரசுப் பணியாளர் பழைய ஓய்வூதியம் போன்றவை இன்னும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையிலேயே நீடிக்கிறது. மொத்தத்தில் தமிழகம் முழுவதும் சமச்சீர் வளர்ச்சி பெற வேண்டும் என்ற சமூக நீதி கண்ணோட்டம் கொண்ட நிதி நிலை அறிக்கை, தடைகள் பலவற்றையும் தாண்டி சாதனை படைக்கும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது" என்று இரா.முத்தரசன் கூறியுள்ளார்.
எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
ஆர்.பாலசரவணக்குமார்
சென்னை
2024-02-19 15:03:00
சென்னை: பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்த சர்ச்சைப் பேச்சு தொடர்பான வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகர்க்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் தரக்குறைவாக விமர்சித்திருந்த கருத்தை நடிகரும், அரசியல் பிரமுகருமான எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் செயலாளர் மிதார் மொய்தின் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் பிரிவினர் இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.. இந்த வழக்கில் 2019-ம் ஆண்டு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யபட்டது.விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஜி.ஜெயவேல், “புகார் குறித்த குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கபட்டுள்ளது. எனவே இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளான அமைதியை சீர் குலைத்தல், தெரிந்த குற்றம் என கருதி மிரட்டல் விடுத்தல், பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது” என தீர்ப்பளித்தார். இதனையடுத்து, அபராத தொகையை செலுத்திய பிறகு தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதாக எஸ்.வி.சேகர் தரப்பில் மனு தாக்கல் செய்ததை ஏற்று, தண்டனையை நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் புதுமைப்பெண், காலை உணவுத் திட்டம்: தமிழக பட்ஜெட் 2024-ல் அறிவிப்பு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-19 14:24:00
சென்னை: தமிழக பட்ஜெட் 2024-25-ல், சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறைக்கு 7,830 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், 2024-25-ஆம் ஆண்டில், மகளிர் நலன் காக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்துக்காக 13,720 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுவதாகவும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தனது உரையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள்: > கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் ஒரு கோடியே 15 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் அவர்களுடைய வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டு வருகிறது. மகத்தான இத்திட்டத்தை பல்வேறு மாநிலங்களிலுள்ள மகளிரும் பயன்பெறும் வகையில், எதிர்காலத்தில் இந்த நாடே பின்பற்றும் என்று நம்புகிறோம். மகளிர் நலன் காக்கும் இத்திட்டத்துக்காக இந்த ஆண்டு 13,720 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். > சாதாரணக் கட்டண நகரப் பேருந்துகளில் விடியல் பயணத் திட்டத்தின் மூலம் பயணம் செய்யும் பெண்களின் சதவீதம் 40-லிருந்து 65 சதவீதமாக உயர்ந்துள்ளது. தினமும் சராசரியாக 50 லட்சம் மகளிர் பயணம் செய்து, ஜனவரி 2024 நிலவரப்படி, பேருந்துகளில் மகளிர் 444 கோடி பயணங்களை மேற்கொண்டுள்ளனர். மாநிலத்தின் மலைப்பகுதிகளில் வாழும் மகளிர் பயன்பெறும் வகையில் நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், வால்பாறை போன்ற மலைப் பகுதிகளுக்கும் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டும். மகளிரின் பேராதரவு பெற்ற இத்திட்டத்துக்கான மானியத்தொகையாக 3,050 கோடி ரூபாயை 2024-25-ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் அரசு ஒதுக்கியுள்ளது. > மூவலூர் ராமமிர்தம் அம்மையார் புதுமைப் பெண் திட்டத்தில் 2 லட்சத்து 73 ஆயிரம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1,000 பெற்று பயனடைந்து வருகின்றனர். இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், உயர் கல்வியில் முதலாமாண்டு சேரும் மாணவிகளின் எண்ணிக்கை நடப்பு ஆண்டில் 34 சதவீதமாக அதிகரித்து, 34,460 மாணவியர் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். இந்த புதுமைப் பெண் திட்டம், வரும் கல்வியாண்டு முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளும் பயன்பெறும் வகையில் விரிவுப்படுத்தப்படும். இந்த ஆண்டு இத்திட்டத்தைச் செயல்படுத்த 370 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. > முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் கடந்த 2023-ம் ஆண்டு தமிழகத்திலுள்ள அனைத்து 30,992 அரசுப் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 15 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் விரிவுபடுத்தப்பட்டது. தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் இயங்கிவரும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மேலும் சுமார் 2.50 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில், வரும் கல்வி ஆண்டு முதல் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக வரும் நிதியாண்டில் 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. > குழந்தைகள் மையங்களில் அடிப்படை வசதிகளை உறுதி செய்திடும் வகையில், வரும் நிதியாண்டில் சுமார் 70 கோடி ரூபாய் செலவில் வாடகை கட்டிடங்களில் இயங்கிவரும் 500 குழந்தைகள் மையங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்படும். ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்துக்காக வரும் நிதியாண்டில் 3,123 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். > இதுவரை சுயஉதவிக் குழு இயக்கத்தில் இணைந்திடாத மகளிர் மற்றும் விளிம்புநிலை வாழ் குடும்ப உறுப்பினர்களைக் கொண்டு 10,000 புதிய சுயஉதவிக் குழுக்கள் வரும் நிதியாண்டில் உருவாக்கப்படும். மேலும், வரும் நிதியாண்டில், 35,000 கோடி ரூபாய் அளவுக்கு வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. > வரும் நிதியாண்டில், சென்னை, கோவை, மதுரை ஆகிய முக்கிய நகரங்களில் 345 மகளிர் பயன்பெறும் வகையில் 26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 புதிய தோழி விடுதிகள் கட்டப்படும். > உயர் கல்வியைத் தொடர விரும்பும் மூன்றாம் பாலினத்தவரின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கல்விச் செலவுகளையும் அரசே ஏற்கும். திருநங்கைகள் நல வாரியம் மூலம் நடைமுறைப்படுத்தவிருக்கும் இத்திட்டத்துக்காக இந்த ஆண்டு 2 கோடி ரூபாய் கூடுதலாக அரசால் வழங்கப்படும். > அரசு கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றைத் திறம்படச் செயல்படுத்தவும், அதன் நிர்வாகத்தை மேம்படுத்தவும் உரிய ஆலோசனைகள் வழங்கிட அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்த்ரு தலைமையிலான ஒரு நபர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், உரிய சீர்த்திருத்தங்களை மேற்கொள்வது என இந்த அரசு முடிவு செய்துள்ளது. இதுவரை சமூகப் பாதுகாப்புத் துறை என்ற பெயரில் இயங்கி வந்த இந்தத் துறை, இனி குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை என பெயர் மாற்றம் செய்யப்படும். மேலும், தலைமைப் பாதுகாப்பு அலுவலர் உள்ளிட்ட புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டு, துறையின் மனிதவள மேலாண்மை உறுதி செய்யப்படும். > முதற்கட்டமாக கோவையில், குழந்தைகளுக்கான திறன்பயிற்சிக் கூடம், ஆலோசனை அறைகள், நூலகம், குடும்ப பார்வையாளர்கள் அறை, மருத்துவப் பரிசோதனை அறை, பூங்கா மற்றும் விளையாட்டு மைதானம் ஆகிய வசதிகளுடன் கூடிய ஒரு மாதிரி இல்லம் பூஞ்சோலை என்ற பெயரில் அமைக்கப்படும். > இந்த வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறைக்கு 7,830 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. | > தமிழக பட்ஜெட் 2024-25: முக்கிய அம்சங்கள்
தமிழில் மேலும் 600 நூல்கள், 8 இடங்களில் அகழாய்வுகள்: தமிழக பட்ஜெட் 2024-ல் புதிய அறிவிப்புகள்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-19 14:12:00
சென்னை: “சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களை மேலும் 25 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்” என்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்த தமிழக பட்ஜெட் 2024-25 உரையில் தெரிவித்தார். இந்த பட்ஜெட்டில் அவர் வெளியிட்ட தமிழ் வளர்ச்சிக்கான முக்கிய அறிவிப்புகள்: > தமிழர்களின் ஒற்றுமை, அரசியல் நேர்மை குடிமக்கள் உரிமை, வணிகச் சிறப்பு, சமய நல்லிணக்கம், பசிப்பிணி ஒழிப்பு மற்றும் பெண்ணியம் உள்ளிட்ட சமூகச் சிந்தனைகள், பண்பாட்டு மரபுகள் ஆகியவற்றை எடுத்துரைக்கும் தமிழின் இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவை 25 இந்திய மற்றும் உலக மொழிகளுக்குச் சென்றடையும் வகையில், அவற்றை மொழிபெயர்க்க 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். > நமது செழுமையான தமிழ் இலக்கியப் படைப்புகளை உலகம் முழுவதும் எடுத்துச் செல்லவும், சிறந்த பன்னாட்டு அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் படைப்புகளைப் பெற்று தமிழில் பல புதிய படைப்புகளை உருவாக்கவும் தமிழக அரசு, சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சியை இரண்டாவது ஆண்டாக வெற்றிகரமாக நடத்தியது. இதில் 40 நாடுகளில் இருந்து 75-க்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் மற்றும் இலக்கிய முகவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் தமிழ்ப் படைப்புகளை பிற மொழிகளுக்கு மொழி பெயர்க்க 483 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உட்பட மொத்தம் 752 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. > கடந்த இரு நூற்றாண்டுகளில் பல்வேறு உலகமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் நூல்களை விட இரண்டு மடங்கு தமிழ்நூல்களை, தற்போது இரண்டே ஆண்டுகளில் மொழிபெயர்த்திட இவ்வரசு முன்முயற்சி எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், உலகமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழின் மிகச்சிறந்த நூல்களை உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களிலும், புகழ்பெற்ற நூலகங்களிலும் இடம்பெறச் செய்ய இவ்வாண்டு முதல் நடவடிக்கை எடுக்கப்படும். தேமதுரத் தமிழோசை உலகெங்கும் பரவிடச் செய்யும் இம்முயற்சிக்கு 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். தமிழில் 600 முக்கிய நூல்கள்: தமிழக பாடநூல் கழகத் தலைவராக பதவியேற்றிருந்த காலத்தில் கல்லூரி மாணவர்களுக்கான 32 துறைகள் சார்ந்த 875 கலை, அறிவியல் பாடநூல்களை தமிழ்வழியில் வெளியிட்டு சாதனை படைத்தார் அன்றைய முதல்வர் கருணாநிதி. அவர் வகுத்துத் தந்த பாதையில் பயணித்து, தற்போது கலைஞர் நூற்றாண்டில் தமிழ்நாடு பாடநூல் கழகம் இதுவரை 340 மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல், இலக்கிய மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் மேலும் 600 முக்கிய நூல்கள் தமிழில் வெளியிடப்படும். > 25 ஆண்டுகளுக்கு முன் முன்னாள் முதல்வர் கருணாநிதி முன்னின்று நடத்திய தமிழ் இணையம்-99 மாநாட்டிற்குப் பிறகு, இந்த ஆண்டு வெற்றிகரமாக நடைபெற்ற கணித்தமிழ்-24 மாநாட்டில் உலகெங்கிலும் இருந்து தமிழறிஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், மின்னணு வணிக நிறுவனங்களுடைய நிர்வாகிகள் கலந்துகொண்டு வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் தமிழுக்கான இடம் குறித்து ஆக்கபூர்வமாக விவாதித்து பல செயல்திட்டங்களை உருவாக்கியுள்ளனர். அதன்படி துரிதமாக வளர்ந்துவரும் தொழில்நுட்பப் பரப்பில் தமிழ்மொழி செழித்து வளரத் தேவையான இயந்திரவழிக் கற்றல் (machine learning) செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), இயற்கைமொழிச் செயலாக்கம் (Natural Language processing) , பெருந்திரள் மொழி மாதிரிகள் (large language models) போன்ற புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கிடும் புத்தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி அளித்திட இந்த ஆண்டு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். > தமிழ் இணைய கல்விக்கழகம் உருவாக்கியுள்ள தமிழ் மின் நூலகம் தெற்காசியாவிலேயே மிகப்பெரிய மின் நூலகமாகத் திகழ்ந்து வருகிறது. 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்நூல்கள், பருவ இதழ்கள், அரிய ஆவணங்கள் மற்றும் 8 லட்சம் ஓலைச்சுவடிப் பக்கங்கள் இந்த நூலகத்தில் காணக் கிடைக்கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 5 கோடி முறை இந்த இணையதளம் பார்வையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. தமிழ்மொழியின் வளம், தமிழரின் தொன்மை குறித்து எதிர்காலத் தலைமுறையினருக்கும் கொண்டு சேர்த்திடும் வகையில் தமிழ்நாடெங்கும் உள்ள அரிய நூல்கள் மற்றும் ஆவணங்களை மின்பதிப்பாக மாற்றும் முயற்சிக்கு இந்த ஆண்டு 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். பழங்குடி மொழி வளங்களை ஆவணப்படுத்துதல்: தமிழ்நாட்டில் பேசப்படும் சௌராஷ்டிரா, படுக மொழிகளையும் தோடர், கோத்தர், சோளகர், காணி, நரிக்குறவர் உள்ளிட்ட பல்வேறு பழங்குடியின மக்களின் மொழி வளங்கள் மற்றும் ஒலி வடிவங்களையும் எதிர்காலத் தலைமுறையினருக்குப் பயன்படும் வகையில் இனவரைவியல் (Ethnography) நோக்கில் ஆவணப்படுத்திப் தமிழ்நாடு அரசு 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திடும். பண்பாடு: கீழடி எனும் ஒற்றைச்சொல் தமிழர்தம் மரபுவழிப் பயணத்தில், தலைமுறைகளைத் தாண்டி உலகத் தமிழர்களை ஒன்றிணைத்தது. கூடல் மாநகருக்கு அருகே வைகைக் கரையில் சங்ககாலத்தில் செழித்து வளர்ந்த நகர நாகரிகத்தினை தொல்லியல் அகழ்வாராய்ச்சி மூலம் வெளிக்கொணர்ந்ததை ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமே கொண்டாடி மகிழ்ந்தது. தமிழரின் நீண்ட நெடிய பண்பாட்டு மரபினை மொழி வரலாறு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் துணைகொண்டு. சான்றுகளின் அடிப்படையில் அறிவுலகம் ஏற்றுக்கொள்ளும் வகையில், உறுதியாக நிறுவிடத் தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 2024-25 ஆம் ஆண்டில் சிவகங்கை மாவட்டம் கீழடி, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பொற்பனைக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டி, தென்காசி மாவட்டம் திருமலாபுரம், திருப்பூர் மாவட்டம் கொங்கல்நகரம், கடலூர் மாவட்டம் மருங்கூர். கிருஷ்ணகிரி மாவட்டம் . சென்னானூர் என மொத்தம் 8 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படும். மேலும், தமிழகம் மட்டுமின்றி பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் காலச்சுவடுகளைத் தேடி கேரள மாநிலத்திலுள்ள முசிறி (பட்டணம்) ஒடிசா மாநிலத்திலுள் மாநிலத்திலுள்ள பாலூர், வெங்கி கர்நாடகத்திலுள்ள ஆந்திர மஸ்கி ஆகிய தொல்லியல் சிறப்புமிக்க இடங்களிலும் இந்த ஆண்டு அகழாய்வு மேற்கொள்ளப்படும். மேற்கூறிய பகுதிகளில் அகழாய்வு மேற்கொள்ளப்படும். மேற்கூறிய பகுதிகளில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள தொல்லியல் துறைக்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். அகழ்வாராய்ச்சிக்கென நாட்டிலேயே ஒரு மாநிலத்தில் இவ்வளவு அதிக நிதியை தமிழ்நாடு அரசுதான் தொடர்ந்து வழங்கி வருகிறது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அமைச்சர் பட்ஜெட் உரையில் கூறினார். | வாசிக்க > தமிழக பட்ஜெட் 2024-25: முக்கிய அம்சங்கள்
தனியார் பங்களிப்புடன் சென்னை நதிகள் சீரமைப்புக்கு ரூ.1,500 கோடி: தமிழக பட்ஜெட் 2024-ல் அறிவிப்பு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-19 13:33:00
சென்னை: “தமிழக பட்ஜெட் 2024-25-ல், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 25,858 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், 2024-25-ஆம் ஆண்டில், சென்னை நதிகளை அழகுறச் சீரமைக்கும் திட்டம், அரசு தனியார் பங்களிப்புடன் சுமார் 1,500 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தனது உரையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள்: > கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கடந்த 3 ஆண்டுகளில் 1,328 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் முடிவுற்று 1,659 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தினைச் செயல்படுத்திட, வரும் நிதியாண்டில், 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். அம்ருத் 2.0 திட்டத்தில் 4,942 கோடி ரூபாய், மத்திய அரசு பங்களிப்புடனும் 9,047 கோடி ரூபாய் மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பங்களிப்புடனும், திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. >2024-25 ஆம் ஆண்டில், பல்வேறு திட்ட நிதிகளைத் திரட்டி நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளில் 4,457 கி.மீ நீளமுள்ள சாலைகள் 2,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்படும். > சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. இதுவரை, கடந்த 3 ஆண்டுகளில் 1,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 1,183 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இத்திட்டத்துக்கு வரும் நிதியாண்டு 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. > சென்னையில் அதிகப் போக்குவரத்து நெரிசல் கொண்ட சாலைகள் அகலப்படுத்துவதற்காகக் கண்டறியப்பட்டுள்ளன. அதன் முதற்கட்டமாக, புதிய ஆவடி சாலை, பேப்பர் மில்ஸ் சாலை மற்றும் செம்பியம் ரெட்ஹில்ஸ் சாலைகளை 18 மீட்டராகவும், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை மற்றும் கல்கி கிருஷ்ணமூர்த்தி சாலைகளை 30.5 மீட்டராகவும் வளர்ச்சி உரிமைப் பெற்ற (TDR) முறையில் அகலப்படுத்தும் திட்டம் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். > சென்னை கடற்கரையோரப் பகுதிகளை அழகுற சீரமைத்து மேம்படுத்திடும் நோக்கோடு கோவளம், எண்ணூர், பெசன்ட் நகர் ஆகிய கடற்கரைப் பகுதிகள் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய வசதிகளுடன் மெருகூட்டி அழகுபடுத்தப்படும். > சென்னை மாநகரில் சமச்சீர் வளர்ச்சியை உறுதி செய்ய வடசென்னை வளர்ச்சித் திட்டம் எனும் புதிய முயற்சியை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. புதிய குடியிருப்புகள், புதிய உயர்தர சிகிச்சைப் பிரிவு, புதிய கட்டிடங்கள், புதிய தளங்கள், தொழிற்பயிற்சி நிலையம், ஏரிகளை சீரமைத்தல், பள்ளிகளைப் புதுப்பித்தல், மேம்படுத்துதல் மற்றும் கணினிமயமாக்கல் போன்ற பல்வேறு வளர்ச்சிப் பணிகள் என மொத்தம் 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். > வடசென்னைப் பகுதிகளில் கழிவுநீர் மற்றும் குடிநீர் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு கழிவுநீரைத் திறம்பட அகற்றுவதற்கும், நீர்நிலை மாசுபாட்டைத் தவிர்ப்பதற்கும் 946 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு புதிய திட்டம் நிறைவேற்றப்படும். > சென்னையை ஒட்டி பூந்தமல்லிக்கு அருகில் அதிநவீனத் திரைப்பட நகரம் ஒன்று உருவாக்கப்பட உள்ளது. சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில், இந்த கனவுத் தொழிற்சாலையில், VFX, Animation மற்றும் LED Wall போன்ற நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய படப்பிடிப்புத் தளங்கள், படத் தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளுக்கான (Post Production) கட்டமைப்புகள் மற்றும் படப்பிடிப்புக்குத் தேவையான கட்டமைப்புகள், அரசு தனியார் பங்களிப்புடன் (Public-Private Partnership) அமைக்கப்படும். > சென்னையில் உள்ள முக்கிய நீர்வழிகளான அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் கொசஸ்தலையாறு ஆகியவற்றைச் சீரமைத்திட இந்த அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் முதற்கட்டமாக, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலம் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள கூடுவாஞ்சேரியிலிருந்து தாம்பரம், திருநீர்மலை, மணப்பாக்கம், ஆலந்தூர், சைதாப்பேட்டை பகுதிகள் வழியாகப் பாய்ந்து வங்கக்கடலில் கலக்கும் அடையாறு நதியை மீட்டெடுத்து அழகுறச் சீரமைக்கும் திட்டம், அரசு தனியார் பங்களிப்புடன் சுமார் 1,500 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும். > அடையாற்று ஆற்றின் இரு கரைகளிலும் 70 கி.மீ தூரத்துக்கு கழிவுநீர்க் குழாய்கள் அமைத்து கழிவுநீர் வெளியேறுவதற்கு ஏற்ற மாற்று வழிகளை அமைப்பது, நாள் ஒன்றுக்கு 110 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட 14 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல், ஆற்றின் கரையில் மக்களின் மனம் கவரும் வகையில் 4 பூங்காக்கள் அமைத்தல் மற்றும் நதிகரை நெடுக பசுமைப் பரப்புகளை அதிகரிப்புது போன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்ட இத்திட்டம் விரைவில் தொடங்கப்பட்டு 30 மாத காலக்கட்டத்தில் பணிகள் நிறைவு செய்யப்படும். > சைதாப்பேட்டை முதல் திரு.வி.க.பாலம் வரையிலான பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு 15 மாதங்களுக்குள்ளாகவே இப்பணிகள் முடிக்கப்படும். > மதுரை, திருச்சி, திருநெல்வேலி, ஈரோடு மற்றும் கோவையில் நதிகள் சீரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டப் பணிகளை மேற்கொள்ள விரிவான ஆய்வுப் பணிகள் மற்றும் திட்ட அறிக்கை 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தயாரிக்கப்படும். > பசுமைத் தமிழ்நாடு இயக்கம், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்போடு, நகர்ப்புர பசுமைத் திட்டம் என்ற புதிய திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும். > தமிழகத்தில் தற்போது 12 மாநகராட்சிகளில் சோதனை அடிப்படையில் 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் வழங்கல் திட்டப்பணிகள் பல்வேறு நிலையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதே அடிப்படையில், மதுரை மற்றும் சேலம் மாநகராட்சிகளிலும் 2024-25 ஆம் நிதியாண்டில் 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் விநியோகம் விரிவுப்படுத்தப்படும். > சென்னை மாநகராட்சியில் பொதுக்கழிப்பறைகளை நவீனமுறையில் சீரமைத்து வடிவமைத்தல், இயக்குதல், பராமரித்தல் மற்றும் புதிய கழிப்பறைகளைக் கட்டுதல் பணிகளுக்காக அரசு தனியார் பங்களிப்புடன் 430 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதே முறையில் இந்த ஆண்டில், கோவை, திருச்சி மற்றும் சென்னை மாநகராட்சியின் பிற பகுதிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும். > சென்னை மாநகரின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்யும் நோக்கில் 1,517 கோடி ரூபாய் மதிப்பில் நெமிலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. 9 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட இந்நிலையம் நிறைவுபெறும் தருவாயில் உள்ளது. விரைவில் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும். > 2007-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு, வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வரும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் 7,890 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் தருமபுரி, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த 40 லட்சம் மக்கள் பயன்பெறுவதோடு, தொழில் வளர்ச்சிக்கும் உதவும். > பெரம்பலூர் நகராட்சியிலுள்ள சுமார் 65,000 மக்களுக்குத் தேவையான அளவு குடிநீர் வழங்கும் பொருட்டும், பெரம்பலூர் மாவட்டத்தில் எறையூர் மற்றும் பாடலூரில் அமைந்துள்ள சிப்காட் தொழில் வளாகத்துக்குத் தேவையான நீரை வழங்கும்பொருட்டு, ஒரு கூட்டுக் குடிநீர்த் திட்டம் 366 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். > காவிரி ஆற்றை நீராதாரமாகக் கொண்டு நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம், எருமப்பட்டி, கபிலர்மலை மற்றும் பரமத்தி ஆகிய 4 ஒன்றியங்களில் உள்ள 216 ஊரகக் குடியிருப்புகளில் வசிக்கும் சுமார் 2 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு கூட்டுக் குடிநீர்த் திட்டம் 358 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். > வைகை ஆற்றை நீராதாரமாகக் கொண்டு திண்டுக்கல் மாநகராட்சி, சின்னாளப்பட்டி, சேவுகம்பட்டி பேரூராட்சிகள் மற்றும் ஆத்தூர், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 425 ஊரகக் குடியிருப்புகளில் வசிக்கும் சுமார் 6 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில், ஒரு புதிய கூட்டுக் குடிநீர்த்திட்டம் 565 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்படும். > இந்த வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 25,858 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. | வாசிக்க > தமிழக பட்ஜெட் 2024-25: முக்கிய அம்சங்கள்
இரு பேரிடர்களால் சிக்கலில் தமிழக நிதிநிலை: பட்ஜெட் 2024 உரையில் அமைச்சர் தகவல்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-19 13:09:00
சென்னை: "நடப்பாண்டில் இரண்டு தொடர் பேரிடர்கள் ஏற்படுத்திய பாதிப்பு இந்த சூழ்நிலையை மேலும் மோசமடைய செய்து, மாநில அரசின் நிதி நிலைமையை சிக்கலாக்கியுள்ளன." என்று சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கலின்போது நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, "சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒன்றிய அரசிடம் இருந்து ஒப்புதல் கிடைப்பதில் கால தாமதம் ஏற்படுவதால் அத்திட்டத்துக்கான முழு செலவையும் மாநில அரசே தனது நிதியில் இருந்து ஏற்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இதன் விளைவாக அரசுக்கு நடப்பாண்டில் ரூ.9000 கோடி செலவுகள் ஏற்பட்டுள்ளது. மேலும், 2022ம் ஆண்டு ஜூன் முதல் சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீடு நிறுத்தப்பட்டதால் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 20000 கோடி ரூபாய்வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இத்தகைய சவால்கள் நிறைந்த சூழ்நிலையில் தான் கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நடப்பாண்டில் இரண்டு தொடர் பேரிடர்கள் ஏற்படுத்திய பாதிப்பு இந்த சூழ்நிலையை மேலும் மோசமடைய செய்து, மாநில அரசின் நிதி நிலைமையை சிக்கலாக்கியுள்ளன. தேவையான நிவாரணத் தொகை வழங்குவதற்கும் தற்காலிக மற்றும் நிரந்தர சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கும் எதிர்பாராத செலவினங்கள் ஏற்பட்டுள்ளதுடன் குறிப்பிடத்தக்க வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. பல முறை ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து எந்த ஒரு நிதியையும் மாநில அரசுக்கு இதுவரை ஒன்றிய அரசு வழங்கவில்லை. மாநிலத்தின் எதிர்பார்களுக்கு நேர்மாறாக மாநில அரசின் நிதி நிலையை மேலும் பாதிக்கும் வகையில் கடன் வாங்கும் வரம்பு குறித்து ஒன்றிய அரசு கடுமையான நிபந்தனைகளை விதிப்பதன் மூலம் வளர்ச்சி திட்டங்களுக்காக நிதி ஆதாரங்களை திரட்டும் மாநில அரசின் அதிகாரத்தையும் ஒன்றிய அரசு கட்டுப்படுத்துகிறது. இத்தகைய கடுமையான நிபந்தனைகளுள் ஒன்றின் விளைவாக நடப்பாண்டில் தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்துக்கு மாநில அரசின் இழப்பீட்டு நிதியாக ரூ.17,117 கோடியை வழங்கியுள்ளது. இந்த நிபந்தனையை நிறைவேற்ற தவறும் நெறிவில் அதற்கு இணையான தொகை நமது கடன் வாங்கும் வரம்பில் இருந்து கழிக்கப்படும். அடுத்த நிதியாண்டில் தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்துக்கு இழப்பீட்டு நிதியாக ரூ.14,442 கோடி வழங்கப்பட வேண்டும். மின்துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள இந்த அரசு உறுதி மேற்கொண்டுள்ள அதேவேளையில் இத்தகைய நிபந்தனை மாநில அரசின் நிதி நிலையின் மீது பெரும் சுமையை ஏற்படுத்தி வளர்ச்சிப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை பாதிக்கிறது. கடந்த காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட உதய் திட்டத்தினை போன்று இந்த தொகையினையும் நிதி பற்றாக்குறை மற்றும் கடன் உச்ச வரம்பு கணக்கீட்டில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஒன்றிய அரசிடம் முன்வைத்துள்ளது மாநில அரசு. அண்மையில், பதினாறாவது நிதிக்குழுவை ஒன்றிய அரசு அமைத்துள்ளது. தமிழ்நாடு போன்ற வளர்ச்சியடைந்த மாநிலங்களுக்கு ஒன்றிய அரசின் வரிகளைப் பகிர்ந்தளிப்பதில் முந்தைய நிதிக்குழுக்களால் இழைக்கப்பட்டுள்ள வரலாற்று அநீதியை, டாக்டர். அரவிந்த் பனகாரியாவின் தலைமையில் உள்ள நிதிக்குழுவினால் சரி செய்யப்படும் என்று இந்த அரசு நம்புகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சியைக் காரணங்கூறாமல், நாட்டின் வளர்ச்சிக்குக் கைகொடுக்கும் வகையில் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய உரிய நிதியை உறுதிசெய்யும் நியாயமான முறையை நாங்கள் எதிர்நோக்குகிறோம். இந்தியா விடுதலை பெற்றபின் நாட்டிலுள்ள பல்வேறு மாநிலங்களும் தங்களுக்கான வளர்ச்சிப் பாதையை வகுத்துக் கொள்ளத் தொடங்கின. எனினும் சமூக முன்னேற்றத்திலும், பொருளாதார வளர்ச்சியிலும் தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்த விதம் குறித்து உலகப் பொருளாதார அறிஞர்களும், அமைப்புகளும் பாராட்டிப் போற்றுகின்றனர். தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்து நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் அவர்கள் குறிப்பிட்டதை இப்பேரவையில் பதிவு செய்திட விரும்புகிறேன். "Tamil Nadu is one of the states which had achieved rapid progress within a relatively short period despite it starting from appalling levels of poverty, deprivation and inequality. Tamil Nadu initiated bold social programmes and has some of the best public services among all Indian States and many of them are accessible to all on a non-discriminatory basis. Tamil Nadu has one of the highest per capita income and lowest poverty rates among all Indian States. This is an important example of the complementarity between economic growth and public support." கடந்த 75 ஆண்டுகளில் நாட்டின் சில மாநிலங்கள் பொருளாதார வளர்ச்சி மட்டும் அடைந்தன. மற்ற சில மாநிலங்கள் கல்வி, சுகாதாரம் என சமூகக் குறியீடுகளில் மட்டும் முன்னேற்றம் அடைந்தன. மாற்றாக சமூக முன்னேற்றம், தொழில் வளர்ச்சி என அனைத்து தளங்களிலும் பெருவளர்ச்சி பெற்று தமிழ்நாடு தன் முத்திரையைப் பதித்துள்ளது" என்று அவர் பேசினார். வாசிக்க > தமிழக பட்ஜெட் 2024-25: முக்கிய அம்சங்கள்
‘வாழ்வாதாரமே இல்லாததால்...’ - திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் உதவி கோரி கர்ப்பிணி மனு
ஜி.செல்லமுத்து
திருச்சி
2024-02-19 13:08:00
திருச்சி: திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் வழக்கத்தை காட்டிலும் பெண்களின் கூட்டம் அதிக அளவில் இருந்தது. குறிப்பாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, இலவச வீட்டு மனை பட்டா, வேலை வாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமானோர் மனு அளித்தனர். இதில் திருச்சி மாவட்டம் புத்தா நத்தம் கணவாய்பட்டி பகுதியை சேர்ந்த முருகேசன் மனைவி கலைச் செல்வி (26) மனு ஒன்றை அளித்தார். அதில், "எனக்கு 3 வயதில் மகனும், தற்போது 7 மாத கர்ப்பிணியாகவும் உள்ளேன். கடந்த டிசம்பர் மாதம் தனது கணவர் முருகேசனை சொத்து தகராறு காரணமாக அவரது உறவினர்கள் கொலை செய்துவிட்டனர். அதன்பிறகு எனது கணவர் குடும்பத்தினர் என்னை கண்டுகொள்ளவில்லை. தற்போதைய நிலையில் நான் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளேன். ஆகையால், அரசு எனக்கு வேலையோ அல்லது ஏதாவது ஓர் உதவியோ செய்து தருமாறு வேண்டும். இல்லையென்றால்தான் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிலைதான் ஏற்படும்” என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், ஏதாவது ஒரு தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் வேலை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவரிடம் உறுதியளித்தனர்.
ஊரகப் பகுதிகளில் 1 லட்சம் கான்கிரீட் வீடுகள்: தமிழக பட்ஜெட் 2024-ல் அறிவிப்பு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-19 12:46:00
சென்னை: “தமிழக பட்ஜெட் 2024-25-ல், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு 27,922 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், 2024-25-ஆம் ஆண்டில் ஒரு லட்சம் புதிய வீடுகள், ஒவ்வொன்றும் ரூ.3.50 லட்சம் செலவில் உருவாக்கப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தனது உரையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள்: > நாட்டிலேயே முதன்முறையாக ஊரகப் பகுதிகளில் ஏழைக் குடும்பங்கள் வசிக்கும் குடிசைகளுக்குப் பதிலாக நிரந்தர வீடுகள் கட்டித்தரும் முன்னோடித் திட்டம் மறைந்த முதல்வர் கருணாநிதியால் 1975-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2010-ம் ஆண்டு குடிசையில்லா மாநிலம் என்ற இலக்கை எய்திடும் வகையில் கலைஞர் வீடு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. > குடிசையில்லா தமிழ்நாடு என்ற இலக்கினை எய்திடும் வகையில், வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் விடுகள் கட்டித் தரப்படும். முதற்கட்டமாக 2024-25-ஆம் ஆண்டில் 1 லட்சம் புதிய வீடுகள் ஒவ்வொன்றும் ரூ.3.50 லட்சம் செலவில் உருவாக்கப்படும். > தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் சொந்தமாக வீட்டுமனை இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்குவதுடன், வீடு கட்டுவதற்கான தொகை அவர்தம் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும். அறிவியல்பூர்வமான கணக்கெடுப்பு, வெளிப்படையான பயனாளிகள் தேர்வு, முறை, தங்கள் கனவு இல்லங்களை பயனாளிகள் தாங்களே உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்பு என குறிப்பிடத்தக்க அம்சங்களைத் தாங்கிய இப்புதிய திட்டம் கலைஞரின் கனவு இல்லம் என்ற பெயரில் வரும் நிதியாண்டில் 3500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். > முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2024-25 ஆம் ஆண்டில், 2000 கி.மீ சாலை மேம்பாட்டுப் பணிகள் 1,000 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். > கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்-II இன் கீழ் 2024-25 ஆம் ஆண்டில் 2,482 கிராம ஊராட்சிகளில் 1,127 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும். > திராவிட மாடல் அரசு, கடந்த 3 ஆண்டுகளில் ஊரகப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு 46 லட்சம் குடிநீர் இணைப்புகளை வழங்கியுள்ளது. மேலும், ஊரகப் பகுதிகளில் உள்ள பழைய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்குப் பதிலாக, 365 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2,000 புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் இந்த ஆண்டு அமைக்கப்படும். > மாநகராட்சிப் பகுதிகளை அடுத்துள்ள விரிவாக்கப் பகுதிகளில், வரும் ஆண்டில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும். > இந்த ஆண்டில் சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தலைசிறந்த அறிவியல் நிறுவனங்களின் வழிகாட்டுதலுடன் மக்கள் பங்களிப்போடு 5,000 நீர்நிலைகளைப் புனரமைக்கும் பெரும் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும். > தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை நாட்டிலேயே மிகச் சிறப்பாக செயல்படுத்திடும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தமிழகத்தில் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்து வரும் 92 லட்சம் பயனாளிகளில், 26 லட்சம் பட்டியல், 1.6 லட்சம் பழங்குடியினர்களும் அடங்குவர். அதிலும் குறிப்பாக, 79 லட்சம் பெண்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவது குறிப்பிடத்தக்கது. 2024-25 ஆம் ஆண்டில் இத்திட்டத்துக்காக 3,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. > நெகிழிக் கழிவுகள் உள்ளிட்ட மட்காத குப்பைகள், கிராமப்புறங்களின் சுற்றுச்சூழலை மிகவும் பாதிப்புக்கு உள்ளாக்கிவிடுவைத் தவிர்க்க, முறையான திடக்கழிவு மேலாண்மைக் கட்டமைப்புகளை உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் உருவாக்கி, மட்காத குப்பைகளை முறையாக சேகரித்து மறுசுழற்சி செய்தல், தொழில் நிறுவனங்களின் எரிபொருள் பயன்பாட்டுக்கு வழங்குதல் போன்ற பணிகளைச் செயல்படுத்தி சுகாதாரமான தமிழகத்தை உருவாக்கிடும் நோக்கோடு ஒரு புதிய நிறுவனம் ஏற்படுத்தப்படும். > மத்திய அரசின் நிதி ஆயோக் சமீபத்திய தனது அறிக்கையில், பன்முக வறுமைக் குறியீட்டின்படி, தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்களின் சதவீதம் மிக குறைவாக 2.2 சதவீதம் மட்டுமே என அறிவித்துள்ளது. அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளில் மிகவும் வறியநிலையில் உள்ள சுமார் 5 லட்சம் ஏழைக் குடும்பத்தினரும் அரசின் உதவிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து வழங்கி, விரைவில் அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்திட அரசு உறுதியாக உள்ளது. > ஆதரவற்றோர், தனித்து வாழும் முதியோர், ஒற்றைப் பெற்றோர் குடும்பங்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள், மனநலம் குன்றியவர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறப்புக் குறைபாடு உடைய குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு உதவிடும் வகையில், முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் என்ற பெயரிலான புதிய திட்டத்தில், மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பங்கேற்பும் உறுதி செய்யப்படும். > இந்த வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு 27,922 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. | வாசிக்க > தமிழக பட்ஜெட் 2024-25: முக்கிய அம்சங்கள்
விளிம்புநிலை மக்களுக்காக ‘தாயுமானவர்’ திட்டம் @ தமிழக பட்ஜெட் 2024
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-19 12:31:00
சென்னை: தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் இன்று (பிப்.19) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்து அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த அறிவிப்பில் பல புதிய திட்டங்களும் இடம்பெற்றுள்ளன. அதில், ‘முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்’ என்பதும் இடம்பெற்றுள்ளது. அதன் விவரம்: முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்: ஆதரவற்றோர், தனித்து வாழும் முதியோர், ஒற்றைப் பெற்றோர் குடும்பங்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள், மனநலம் குன்றியவர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறப்புக் குறைபாடு உடைய குழந்தைகள் உள்ள குடும்பங்கள் போன்ற சமூகத்தின் விளிம்புநிலையில் வாழ்ந்திடும் மக்கள் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மட்டுமன்றி கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, வீடுகள் போன்ற அனைத்து உதவிகளும் வழங்கப்படும். அரசிடம் உள்ள தரவுகள், கள ஆய்வு, மக்கள் பங்கேற்புடன் கலந்துரையாடல், கிராம சபை ஆகியவற்றின் மூலம் மாநிலம் முழுக்க மிகவும் ஏழைக் குடும்பங்கள் கண்டறியப்படும். ‘முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்’ என்ற பெயரிலான இப்புதிய திட்டத்தில், மக்கள் பிரதிநிதிகள் தொண்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளி பங்கேற்பும் உறுதி செய்யப்படும். இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு 27,922 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. | வாசிக்க > தமிழக பட்ஜெட் 2024-25: முக்கிய அம்சங்கள்
7 இலக்குகளுடன் தமிழக பட்ஜெட் 2024-25: அமைச்சர் தங்கம் தென்னரசு விவரிப்பு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-19 11:45:00
சென்னை: “சமூக நீதி, கடைக்கோடித் தமிழர் நலன், உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், மகளிர் நலன் காக்கும் சமத்துவப் பாதை, பசுமைவழிப்பயணம், தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும், இந்த 7 இலக்குகளை முன்வைத்தே இந்த வரவு செலவுத் திட்டம் அமையப் பெற்று இருக்கிறது” என்று சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். தமிழக அரசின் பட்ஜெட் வழக்கமாக மார்ச் மாதத்தில் தாக்கல் செய்யப்படும். இந்த நிலையில், மக்களவை பொதுத் தேர்தல் அறிவிப்பு விரைவில் எதிர்நோக்கப்படுவதால், வரும் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் பிப்ரவரி மாதமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதித் துறை பொறுப்பை ஏற்ற பிறகு, முதன்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு. அவர் தனது அறிமுக உரையில், “2024-25 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டங்களை, நூற்றாண்டு கண்ட இந்த சட்டமன்றப் பேரவையின் முன்வைப்பதில் நான் பெருமை கொள்கிறேன். இந்திய திருநாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக திகழ்ந்து கொண்டிருக்கும் தமிழகத்தின் வளர்ச்சிக்கு வித்திடும் வகையில், இந்த வரவு செலவு திட்டத்தை உருவாக்குவதில் தொடர் வழிகாட்டுதல் வழங்கிய முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன். பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்புமுனைத் திட்டங்களின் வரிசையில், நமது முதல்வரால் அறிமுகப்படுத்தப்பட்ட காலை உணவு திட்டத்துக்கு 2023-24 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும், திராவிட மாடல் அரசின் மகத்தான திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு 7000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதையும் இந்த சட்டமன்ற வரலாறு பொன்னெழுத்துக்களால் தன் நினைவுப் பேழையில் என்றென்றும் குறித்து வைத்துக் கொள்ளும். காலத்தை வென்று நிலைத்து நிற்கும் இதுபோன்ற மக்கள் நலத்திட்டங்களால்தான், தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் கம்பீரமாகப் பயணித்து வருகிறது. ஏழை, எளிய மக்களின் நல்வாழ்வு குறித்த அளவற்ற கருணையும், அந்நோக்கத்தை நிறைவேற்றிடத் தேவையான நிதி ஒதுக்கீடும் முறையாக அமைந்ததால் நமது மாநிலம் முன்னேற்றத்தை அடையத் தொடங்கியது. இந்த வரவு செலவுத் திட்டத்தை உருவாக்கிட வழிகாட்டியாக அமைந்தவை அறிஞர் அண்ணாவின் சொல்லோவியம்தான். நிதியமைச்சராகவும் பொறுப்பு வகித்த அண்ணா 1967-68 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போது "இந்த வரவு செலவுத் திட்டத்தில் மூன்றரை கோடி மக்களுடைய வாழ்வும், தாழ்வும் இந்த 64 பங்கங்களில் அடங்கியிருக்கின்றன. நம்முடைய இதயமும், அதிலே கலக்கப்பட்டிருக்கிறது. நம்மைத் தேர்ந்தெடுத்த மக்களின் லட்சியங்கள் இதில் அடங்கியிருக்கின்றன என்று குறிப்பிட்டார். அறிஞர் அண்ணாவின் அறிவுரைகளைத் தாங்கியே, இந்த வரவு செலவுத் திட்டத்தை வெறும் புள்ளிவிவர குவியலாக இல்லாமல், கடைக்கோடி தமிழர்களின் எண்ணங்களின் அறிவிப்பாக மாற்றிட முயன்றுள்ளோம். மேலும், பல்வேறு எதிர்பாராத நெருக்கடிகளுக்கே எதிரே, தமிழகத்தின் பொருளாதாரத்தை நிலைநிறுத்த வேண்டிய சூழலில் நாம் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். ஆழிசூழ் தமிழ் நிலப் பரப்புக்குள், அழையா விருந்தினர் போல் அவ்வப்போது வருகைதந்து இன்னல்கள் பல கொடுத்திடும் இயற்கைப் பேரிடர்கள் ஒருபுறம். கூட்டாட்சித் தத்துவத்தை அடியோடு மறந்து மாற்றந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்ளும் மத்திய அரசு மறுபுறம். இதற்கிடையே தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல உதவும் வரவு - செலவுத் திட்டத்தை உருவாக்கிய வேண்டிய தேவை எழும்போதெல்லாம் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் வழிகாட்டுதல்கள் மட்டுமே கலங்கரை விளக்கமாய் எங்களுக்கு அமைந்தன. "அறநெறி முதற்றே அரசின் கொற்றம்" எனச் செயல்பட்டு வரும் நமது முதல்வர் தலைமையிலான இந்த அரசுக்கென ஒரு மாபெரும் தமிழ்க்கனவு உண்டு. வானவில்லின் வண்ணங்களைப் போன்று 7 முதன்மையான நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட தமிழ்க்கனவு அது. சமூக நீதி, கடைக்கோடித் தமிழர் நலன், உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், மகளிர் நலன் காக்கும் சமத்துவப் பாதை, பசுமைவழிப்பயணம், தாய்த்தமிழும் தமிழர் பண்பாடும், இந்த 7 இலக்குகளை முன்வைத்தே இந்த வரவு செலவுத் திட்டம் அமையப் பெற்று இருக்கிறது" என்று அவர் கூறினார். | வாசிக்க > தமிழக பட்ஜெட் 2024-25: முக்கிய அம்சங்கள்
தமிழக காங்கிரஸ் கட்சியில் மாவட்ட நிர்வாகிகள் மாற்றமா?
இ.ஜெகநாதன்
சிவகங்கை
2024-02-19 11:04:00
சிவகங்கை: தமிழக காங்கிரஸில் மாநிலத் தலைவர் மாற்றப்பட்ட நிலையில், மாவட்டங்களிலும் நிர்வாகிகள் மாற்றப் பட உள்ளதாகக் கூறப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் தனக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய மாவட்ட காங்கிரஸ் தலைவர் சத்திய மூர்த்தியை மாற்ற, மாநிலத் தலைமையை கார்த்தி சிதம்பரம் எம்.பி. வலியுறுத்தி வந்தார். ஆனால், மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டு கொள்ளவில்லை. இதனால், அவர் தனது தந்தை ப.சிதம்பரம் மூலம் தேசிய தலைமையிடம் காய் நகர்த்தி, கடந்த ஆண்டு செப்டம்பரில் கே.எஸ்.அழகிரி, முன்னாள் எம்எல்ஏ கே.ஆர்.ராமசாமி ஆதரவாளராக இருந்த சத்திய மூர்த்தியை மாற்றிவிட்டு, தனது ஆதரவாளரான சஞ்சய்காந்தியை நியமிக்க நடவடிக்கை எடுத்தார். அதேபோல், திருநாவுக்கரசர் எம்.பி.க்கு எதிராகச் செயல்பட்ட திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் ஜவஹரையும் மாற்ற கே.எஸ்.அழகிரி மறுத்தார். இதனால் தேசிய தலைமை மூலம் அவரை மாற்றிவிட்டு, தனது ஆதரவாளரான ரெக்ஸ் என்பவரை மாநகர மாவட்டத் தலைவராக நியமிக்க திருநாவுக்கரசர் நடவடிக்கை எடுத்தார். மேலும், சிவகங்கை மாவட்டத்தில் தங்களுக்கு எதிராக செயல்பட்ட நகர, வட்டார நிர்வாகிகளை கே.எஸ்.அழகிரி ஆதரவில்லாமல் மாற்றுவதில் கார்த்தி சிதம்பரத்துக்கு சிக்கல் இருந்து வந்தது. தற்போது கே.எஸ்.அழகிரி மாற்றப்பட்டு, மாநிலத் தலைவராக செல்வப் பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ப.சிதம்பரத்துக்கு நெருக்கமானவர் என்பதால், சிவகங்கை மாவட்டத்தில் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராகச் செயல்படும் நகர, வட்டார நிர்வாகிகள் மாற்றப்படலாம் எனக் கூறப்படுகிறது. மற்ற மாவட்டங்களிலும் மீண்டும் சீட் கேட்டு வரும் எம்.பி.கள் தங்களுக்கு எதிராக போர்க் கொடி தூக்கி வரும் உள்ளூர் நிர்வாகிகளை மாற்ற மாநிலத் தலைமையிடம் வலியுறுத்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் தேர்தலுக்குள் காங்கிரஸ் கட்சிக்குள் பல்வேறு மாற்றங்கள் வரலாம் எனக் கூறப்படுகிறது. இது குறித்து சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூறுகையில், மாவட்டத் தலைவரை மாற்றினால் தனக்கு எதிர்ப்புக் குறையும் என கார்த்தி சிதம்பரம் நினைத்தார். இதனால் மற்ற நிர்வாகிகளை மாற்ற நினைக்கவில்லை. ஆனால், அவர்கள் தொடர்ந்து கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராகச் செயல்படுகின்றனர். இதனால் அவர்களை மாற்ற வாய்ப்புள்ளது. இதேபோல், மற்ற மாவட்டங்களிலும் மாற்றம் இருக்கலாம் என்றனர்.
40 தொகுதிகளிலும் விருப்ப மனு பெறும் அதிமுக: விண்ணப்பக் கட்டணம் ரூ.15,000
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-19 11:03:00
சென்னை: வரவிருக்கும் மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழகம், புதுச்சேரியின் 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்கள் ஏற்கப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில், அதிமுக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தலைமைக் கழகத்தில் வருகின்ற 21.2.2024 புதன் கிழமை முதல் 1.3.2024 - வெள்ளிக் கிழமை வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை, உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி அதற்கான விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொள்ளலாம். அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து மீண்டும் தலைமைக் கழகத்தில் வழங்கலாம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். பொதுத் தொகுதிக்கு ரூ.20,000 மற்றும் தனி தொகுதிக்கு ரூ.15,000 கட்டணம் செலுத்தி விண்ணப்ப படிவங்களை பெற்றுக் கொள்ளலாம்” எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழக பட்ஜெட் 2024-25: முக்கிய அம்சங்கள்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-19 10:13:00
சென்னை: சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தனது உரையில் அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் முக்கிய அம்சங்கள்: வானிலை முன்னறிவிப்பை வலுப்படுத்த ராமாநதபுரம் மற்றும் ஏற்காடு ஆகிய 2 இடங்களில் இரண்டு சி-பேண்ட் டோப்ளர் ரேடார்கள் (Doppler Radar) ரூ.56 கோடி மதிப்பில் அமைக்கப்படும். வேப்பூர் (கடலூர் மாவட்டம்), குஜிலியம்பாறை (திண்டுக்கல் மாவட்டம்), போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி மாவட்டம்), சேந்தமங்கலம் (நாமக்கல் மாவட்டம்), கந்தர்வக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்), கமுதி (ராமநாதபுரம் மாவட்டம்), நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர் மாவட்டம்), கூத்தாநல்லூர் (திருவாரூர் மாவட்டம்), செங்கம் (திருவண்ணாமலை மாவட்டம்), ஏரல் (தூத்துக்குடி மாவட்டம்) ஆகிய இடங்களில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்கள் ஏற்படுத்தப்படும். > தமிழகத்தில் உலகத் தரம் வாய்ந்த முக்கிய சாலை கட்டமைப்பு திட்டங்களுக்கு ஒரு சட்டபூர்வ அமைப்பு உருவாக்க திட்டம். இது தொடர்பாக நடப்பு கூட்டத் தொடரில் சட்டமுன்வடிவு அறிமுகம். தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடியில் நியோ டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும். இந்த நியோ டைடல் பூங்காக்கள் மூலம் 13,000 பேருக்கு வேலைவாய்ப்பு உண்டாகும். > ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் 2 ஆம் கட்டப்பணிகளுக்கு ரூ.7,890 கோடி நிதி ஒதுக்கீடு. இத்திட்டம் மூலம் சுமார் 40 லட்சம் மக்கள் பயன்பெறுவர். சிப்காட் பகுதியில் பணிபுரியும் பெண்களின் குழந்தைகள் பாதுகாப்புக்காக குழந்தைகள் பாதுகாப்பு மையம் ஏற்படுத்தப்படும். அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் இந்த ஆண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். > சென்னையின் கோவளம், பெசன்ட் நகர், எண்ணூர் ஆகிய கடற்கரைகள் ரூ.100 கோடி மதிப்பீட்டில் அழகுபடுத்தப்படும். > நிதி ஆயோக் அறிக்கைப்படி வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் 2.2% மக்களை கண்டறிந்து, அவர்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்ற அரசு முடிவு. மிகவும் வறிய நிலையில் உள்ள 5 லட்சம் ஏழைக் குடும்பத்தினருக்கு அரசின் உதவிகளை ஒருங்கிணைத்து வழங்கி அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க அரசு உறுதி. தமிழக அரசின் பட்ஜெட் வழக்கமாக மார்ச் மாதத்தில் தாக்கல் செய்யப்படும். இந்த நிலையில், மக்களவை பொதுத் தேர்தல் அறிவிப்பு விரைவில் எதிர்நோக்கப்படுவதால், வரும் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் பிப்ரவரி மாதமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதித் துறை பொறுப்பை ஏற்ற பிறகு, முதன்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு. "காட்சிக்கு எளியன், கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம்" என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. தொடர்ந்து அவர் ஆற்றிய அறிமுக உரையில், "நூற்றாண்டு கண்ட இந்த சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்வதில் மகிழ்ச்சி. இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார பலம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. 100 ஆண்டுகளில் தாக்கல் செய்த பட்ஜெட், தமிழர்களை தலைநிமிர செய்தது. தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழர்களின் எண்ணங்களை அறிவிப்பாக மாற்றிடும் வகையில் பட்ஜெட் உரை அமையும். பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையில் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை வழிநடத்திட வேண்டிய சூழலில் பணியாற்றிக்கொண்டிருக்கிறோம். ஆழி சூழ் தமிழ் நில பரப்பில் அழையா விருந்தாளியாக அவ்வப்போது வரும் இயற்கை பேரிடர்கள் ஒரு பக்கம். கூட்டாட்சி தத்துவத்தை அடியோடு மறந்து மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடந்துகொள்ளும் ஒன்றிய அரசு மறுபக்கம். இதற்கிடையே, தமிழ்நாட்டை வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்ல உதவும் வரவு செலவு திட்டத்தை உருவாக்கிட வேண்டிய தேவைகள் எழும்போதெல்லாம் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் வழிகாட்டுதல் மட்டுமே எங்களுக்கு கலங்கரை விளக்கமாக எங்களுக்கு அமைந்துள்ளன" என்றார்.
ஜார்க்கண்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு... தமிழகத்தில் சமூகநீதி மலர்வது எப்போது? - அன்புமணி
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-19 10:05:00
சென்னை: “இன்றைய நிதிநிலை அறிக்கையின் 7 கனவுகளில் முதலாவது கனவு சமூகநீதி என்று தமிழக அரசு விளம்பரம் செய்திருக்கிறது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு என்ற சமூகநிதிக் கனவை இன்றைய நிதிநிலை அறிக்கை நனவாக்குமா? அல்லது அது கனவாகவே தொடருமா?” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ அதிக மக்கள்தொகை கொண்ட சமூகங்களுக்கு அதிக பங்கு என்ற முழக்கத்துடன் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த ஜார்க்கண்ட் மாநில அரசு முடிவு செய்திருக்கிறது. கர்நாடகம், பிஹார், ஒடிசா ஆகிய மாநிலங்களில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் நடத்தப்படும் நிலையில் ஆறாவது மாநிலமாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த ஜார்க்கண்ட் மாநில அரசு முன்வந்திருக்கிறது. ஜார்க்கண்ட் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. வடக்கில் பிஹாரில் வீசத்தொடங்கிய சமூக நீதித் தென்றல் ஜார்க்கண்ட் மாநிலத்திலும் சமூகநீதிக் குளிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், தெற்கில் கர்நாடகம், ஒடிசா, ஆந்திரம், தெலங்கானா ஆகிய 4 மாநிலங்களில் சமூகநீதிக் காற்று வீசினாலும் தமிழ்நாட்டில் சமூகநீதி வறட்சி தான் நிலவுகிறது. அதற்கான காரணம், சமூகநிதி வழங்க ஆட்சியாளர்களின் மனங்களில் இடம் இல்லை என்பது தான். இன்றைய நிதிநிலை அறிக்கையின் 7 கனவுகளில் முதலாவது கனவு சமூகநீதி என்று தமிழக அரசு விளம்பரம் செய்திருக்கிறது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு என்ற சமூகநிதிக் கனவை இன்றைய நிதிநிலை அறிக்கை நனவாக்குமா? அல்லது அது கனவாகவே தொடருமா?” எனத் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறாரா டி.ஆர்.பாலு?
பெ.ஜேம்ஸ்குமார்
கூறியதாவது
2024-02-19 09:39:00
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி.யாக உள்ள டி.ஆர்.பாலுவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது. இந்த தொகுதியை காங்கிரஸ் கட்சியும் கேட்பதால் தலைமை என்ன முடிவெடுக்குமோ என திமுகவினர் குழப்பமடைந்துள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் கடந்த தேர்தலில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு போட்டியிட்டு வெற்றிபெற்று ௭ம்.பி. ஆனார். திமுக பொருளாளராகவும் அக்கட்சியின் மக்களவைக் குழு தலைவராகவும் உள்ளார். கட்சியின் மூத்த நிர்வாகியான டி.ஆர்.பாலுவுக்கு 86 வயதாகிறது. எனவே, அவருக்கு ஓய்வு அளிக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாகத் தொண்டர்கள் மத்தியில் பேசப்படுகிறது. இதனால், அவருக்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வழங்கப்படாது என்றும், அவரை மாநிலங்களவை உறுப்பினராக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து திமுக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: இளைஞரணி செயலாளர் உதயநிதி, கட்சியில் இளைஞர்களின் பங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறார் இதன் தொடர்ச்சியாக, இந்த முறை ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் டி.ஆர்.பாலுவுக்கு சீட் தருவதைவிட, அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கலாம் என முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.அதேநேரம், கட்சியில் சீனியர்கள் அனைவரும் டி.ஆர்.பாலுவுக்கு ஆதரவாக உள்ளனர். இண்டியா கூட்டணி வெற்றிபெறும் பட்சத்தில் கூட்டணி அமைச்சரவையில் டி.ஆர்.பாலுவுக்கு அமைச்சர் பதவி உறுதி என்றும் அவர்கள் பேசி வருகின்றனர். ஆனால் திமுக நிர்வாகிகள் மத்தியில், புதியவர்களுக்கு இம்முறை பெரும்புதூரில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையே உள்ளது. இந்த சூழலில், காங்கிரஸ் கட்சியும் திமுகவிடம் அளித்த தொகுதிப் பட்டியலில் பெரும்புதூர் தொகுதியும் இருப்பதாகவும், தற்போது புதிதாகத் தலைவராகியுள்ள செல்வப்பெருந்தகை தனது வாரிசை எம்.பி.யாகநிறுத்த காய் நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த தொகுதியில் டி.ஆர்.பாலு மீது மக்கள் மத்தியில் அதிருப்தி உள்ளதா என திமுக தலைமை ரகசியமாக தனியார் நிறுவனம் மூலம் சர்வேயும் நடத்தியுள்ளது. அந்த சர்வேயின்படியும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்போம்: ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் எச்சரிக்கை
செய்திப்பிரிவு
ராமேசுவரம்
2024-02-19 09:27:00
ராமேசுவரம்: கச்சத் தீவு திருவிழாவைப் புறக்கணிக்கப் போவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ராமேசுவரம் விசைப் படகு மீனவர்கள் அறிவித்துள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடித்த தாக, பிப்ரவரி 3-ம் தேதி ராமேசுவரத்தைச் சேர்ந்த 23 மீனவர்களையும், அவர்களது 2 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை சிறை பிடித்தது. இந்த வழக்கு விசாரணை, இலங்கை ஊர்க் காவல்துறை நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது நீதிபதி கஜ நிதி பாலன், 20 மீனவர்களை விடுதலை செய்தும், 2-வது முறையாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மெல்சன் என்பவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், 2 படகுகளின் ஓட்டுநர்களுக்கு தலா 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் விதித்தார். மீனவர்களுக்கு இலங்கை அரசு சிறைத் தண்டனை விதித்ததைக் கண்டித்தும், மீனவர்களை விடுதலை செய்யக் கோரியும் ராமேசுவரத்தில் விசைப் படகு மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை பிப்.17-ம் தேதி தொடங்கினர். தொடர்ந்து, ராமேசுவரம் மீன் பிடி துறைமுகத்தில் நிறுத்தப் பட்டிருந்த 800-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் கருப்புக் கொடி கட்டி, மீனவர்கள் நேற்று 2-ம் நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தமிழக மீனவர்களை விடுதலை செய்யாவிட்டால் பிப்ரவரி 23, 24 ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ள கச்சத்தீவு திருவிழாவைப் புறக்கணிக்கப்போவதாக ராமேசுவரம் விசைப் படகு மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
“இரண்டு நாட்களில் நல்ல செய்தி” - தேர்தல் கூட்டணி குறித்து கமல்ஹாசன் தகவல்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-19 09:00:00
சென்னை: கூட்டணி குறித்து இன்னும் இரண்டு நாட்களில் நல்ல செய்தியுடன் சந்திக்கிறேன் என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7-ம் ஆண்டு தொடக்க நாளான பிப்.21-ம் தேதி கட்சித் தலைவர் கமல்ஹாசன் கொடியேற்றி வைத்து உரையாற்றவுள்ளார். இதற்கான அக்கட்சியின் அறிக்கையில், "தாய்மொழி தினத்தில் (பிப்.21) பிறந்த மக்கள் நீதி மய்யம் கட்சி மக்களவைத் தேர்தல் களத்தில் வெல்லும். வரலாறு அதைச் சொல்லும். நாடாளுமன்றத்தில் நம்மவர்" என்று கூறப்பட்டிருந்தது. வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து மக்கள் நீதி மய்யம் போட்டியிடவுள்ளது எனச் சொல்லப்படும் நிலையில், கமல் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெறுவார் என்றும், தமிழக காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் இடங்களில் கமல் போட்டியிட வாய்ப்புள்ளது என்றும் சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. காங்கிரஸ் மற்றும் அதன் தலைவர் ராகுல் காந்தியுடன் சமீப காலத்தில் கமல் காட்டிய நெருக்கம் அதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. இதனிடையே, அமெரிக்காவில் இருந்து திரும்பிய கமல் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அதில், "தக் லைப் படத்தின் முன்னேற்பாடுகளுக்காக அமெரிக்கா சென்றிருந்தேன். அதை முடித்துவிட்டு தமிழகம் திரும்பியுள்ளேன். இன்னும் இரண்டு நாட்களில் நல்ல செய்தியுடன் சந்திக்கிறேன். நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் நன்றாக சென்றுகொண்டிருக்கிறது. கூட்டணி குறித்த தகவல்களை இரண்டு நாட்களில் சொல்கிறேன்." இவ்வாறு தெரிவித்தார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் டெல்லி பயணம்: இந்த மாதத்தில் 2-வது முறை!
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-19 08:34:00
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார். இதனிடையே, ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். 4 நாட்கள் பயணமாக டெல்லி சென்றுள்ள ஆளுநர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இம்மாத தொடக்கத்தில் (பிப்.4ம் தேதி) தான் ஆளுநர் டெல்லி சென்று வந்தார். அப்போது சட்டப்பேரவை கூட்டத்தொடர் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்த ஆளுநர் டெல்லியில் உள்துறை அமைச்சகம் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆளுநர் ஆலோசனையில் ஈடுபட்டதாக சொல்லப்பட்டது. பின்னர் மூன்று நாள்களுக்கு தமிழகம் திரும்பிய ஆளுநர் பிப்.12ம் தேதி தொடங்கிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரையை முழுமையாக படிக்காமல் புறக்கணித்தது சர்ச்சையானது. இந்தநிலையில்தான் 4 நாட்கள் பயணமாக மீண்டும் இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார் ஆளுநர். இதனால் அவரின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
காங்கிரஸில் நிலவும் அதிருப்தி, உட்கட்சி பகை: சவால்களை எதிர்கொள்வாரா செல்வப்பெருந்தகை?
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-19 07:36:00
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாற்றம் தொடர்பாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக பல்வேறு நிர்வாகிகள் டெல்லிக்கு படையெடுத்து, அங்கேயே முகாமிட்டு வந்தனர். ஒருவழியாக கே.எஸ்.அழகிரியை மாற்றி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்எல்ஏ.வுமான கு.செல்வப்பெருந்தகை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கட்சி நிர்வாகி ஒருவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், பெரியாரும், காமராஜரும் அமர்ந்த இருக்கையில் செல்வப்பெருந்தகை அமர இருப்பதை சுட்டிக்காட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். இப்பதவி அவருக்கு எளிதில் கிடைக்கவில்லை. ப.சிதம்பரம் போன்ற ஜாம்பவான்கள், தங்கள் அரசியல் செல்வாக்கால் தங்கள் மகன்களுக்கு பெற நினைத்த பதவியை, தன் சொந்த அரசியல் அனுபவத்தின் அடிப்படையில் தொடர் முயற்சி மற்றும் போராட்டத்தால் செல்வப்பெருந்தகை பெற்றிருப்பது கட்சியினர் அனைவரின் புருவத்தையும் உயர்த்தி இருக்கிறது. கக்கன் (1952), இளையபெருமாள் (1979) ஆகியோருக்கு அடுத்தபடியாக, 45 ஆண்டுகளுக்கு பிறகு பட்டியலினத்தை சேர்ந்த செல்வப்பெருந்தகையை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக அகில இந்திய காங்கிரஸ் நியமித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவர் அடுத்த சில தினங்களில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்க உள்ள நிலையில், ஏராளமான சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. உடனடியாக இவர் தேர்தல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கைக்கு குறையாமல் பெற வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் அரசியல் சூழல் மாறியுள்ளது. தேசியத் தலைவர் ஒருபுறம் அரசியல் பணியாற்றி வருகிறார். மறுபுறம் ராகுல் காந்தி நடைபயணம் சென்று்கொண்டிருக்கிறார். இந்த தேர்தலில் தேசிய அளவில் இண்டியா கூட்டணிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வட மாநிலங்களில் கூட்டணியில் உள்ள கட்சிகள், தனித்தே போட்டியிட விரும்புகின்றன. ராமர் கோயில் திறக்கப்பட்டிருப்பதை பாஜக பெரும் பலமாக கருதுகிறது. கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் பாஜக தமிழகத்தில் வலிமை பெற்றுள்ளது. இதை எல்லாம் எதிர்கொள்ளும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் இந்த தேர்தலில் அரசியல் வியூகங்களை அமைப்பதும் பெரும் சவாலாக இருக்கும். மேலும் உட்கட்சி பகைமையை முடிவுக்கு கொண்டு வந்து, கட்சியை ஒற்றுமையாக கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பும், கடமையும் செல்வப்பெருந்தகையிடம் வந்து சேர்ந்துள்ளது. இதில் வெல்வதை பொருத்தே, இவரது தலைமைப்பண்பு மதிப்பிடப்படும் என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. பல கட்சிகள் மாறி காங்கிரஸுக்கு வந்த செல்வப்பெருந்தகைக்கு, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவராக்கி, மாநில காங்கிரஸ் தலைவராகவும் அகில இந்திய காங்கிரஸ் தலைமை நியமித்திருப்பது வருத்தம் அளிப்பதாக கூறி, கட்சிக்குள் அதிருப்தி நிலவுவதாகக் கூறப்படுகிறது. அவர்கள் விரும்பும் தலைவராக செல்வப்பெருந்தகை மாறுவதுதான், அவர் முன் இருக்கும் மிகப்பெரும் சவால். மேலும் கட்சியில் வாரிசுகளுக்கே தொடர்ந்து வாய்ப்பு வழங்குவதாகவும், பணம் படைத்தவர்களுக்கே பதவிகள் கிடைப்பதாகவும், கட்சியில் நீண்ட நாட்களாக உழைப்பவர்களுக்கு எந்த பதவியும் கிடைப்பதில்லை எனவும் நீண்ட நாட்களாகவே கட்சிக்குள் புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கு தீர்வு காண்பதும் செல்வப்பெருந்தகைக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் கூறிய செல்வப்பெருந்தகை, “கட்சியில் அணி என்பது, அக்கட்சியை பிடித்திருக்கும் பிணி. அதை ஒழிப்போம். அரசியல் என்பது ஒரு கூட்டு முயற்சி. அனுபவம் வாய்ந்த தலைவர்கள் கட்சியில் இருக்கிறார்கள். அவர்களுடன் ஆலோசித்து கட்சியை வளர்க்கவும், வலிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
மணல் கொள்ளையை தடுத்ததால் கொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் மகன் சிவில் நீதிபதி தேர்வில் வெற்றி
ரெ.ஜாய்சன்
தூத்துக்குடி
2024-02-19 06:58:00
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே மணல் கொள்ளையை தடுக்க முயன்றதால் கொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்துபிரான்சிஸின் மகன் சிவில் நீதிபதி தேர்வில் தேர்ச்சிபெற்று, தந்தையின் கனவை நிறைவேற்றியுள்ளார். தூத்துக்குடி அருகேயுள்ள சூசைபாண்டியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ்(53). ஸ்ரீவைகுண்டம் வட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். இவர் தாமிரபரணி ஆற்றில் நடைபெறும் மணல் கொள்ளைக்கு எதிராக காவல் துறையில் புகார் அளித்தார். இந்நிலையில், 2023 ஏப்ரல் 25-ம் தேதி தனது அலுவலகத்தில் இருந்த லூர்து பிரான்சிஸை 2 பேர் வெட்டிக் கொலை செய்தனர். இந்தசம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் மணல் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டு, இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், தந்தையின் ஆசையை நிறைவேற்றும் வகையில், லூர்து பிரான்சிஸின் மகன் எல்.மார்ஷல் ஏசுவடியான் (23) சிவில் நீதிபதி தேர்வில் வெற்றிபெற்றுள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்ட சிவில் நீதிபதிக்கான தேர்வில் முதல் முயற்சியிலேயே மார்ஷல் ஏசுவடியான் தேர்ச்சி பெற்றுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன், மார்ஷல் ஏசுவடியான் வீட்டுக்கே நேரில் சென்று பாராட்டினார். இதுகுறித்து மார்ஷல் ஏசுவடியான் ‘இந்து தமிழ் திசை' செய்தியாளரிடம் கூறியதாவது: சென்னையில் உள்ள ‘ஸ்கூல் ஆஃப் எக்சலென்ஸ் இன் லா' என்ற சட்டக் கல்லூரியில் பி.ஏ. எல்எல்பி (ஹான்ஸ்) 5 ஆண்டு பட்டப் படிப்பை கடந்த 2022-ல் முடித்து,அதே ஆண்டு இறுதியில் பார் கவுன்சிலில் பதிவு செய்து, வழக்கறிஞர் பணியைத் தொடங்கினேன். ‘‘நீ எப்படியாவது நீதிபதியாக வேண்டும். தொடர்ந்து முன்னேறி, உச்ச நீதிமன்ற நீதிபதி வரை உயரவேண்டும்’’ என்று எனது தந்தை எப்போதும் கூறுவார். நான் நீதிபதியாக வேண்டும் என்பது அவரது கனவு. இந்நிலையில், எனது தந்தை கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். அவர் கொலையான 5-வது நாள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் சிவில் நீதிபதி தேர்வு அறிவிப்பு வெளியானது. என் தந்தையின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன், தேர்வுக்கு விண்ணப்பித்தேன். சொந்த முயற்சியில் தேர்வுக்கான பயிற்சிகளை எடுத்தேன். இதற்கிடையே எனது தந்தை கொலை வழக்கையும் கவனிக்க வேண்டி இருந்தது. தற்போது நான் சிவில் நீதிபதி தேர்வில் வென்று, எனது தந்தையின் கனவை நிறைவேற்றியுள்ளேன். எனது தந்தையைப் போல கடைசி வரை நேர்மையாக இருப்பேன். அதுவே எனது லட்சியம்" என்றார்.
தமிழக அரசை மத்திய அரசு தினமும் அச்சுறுத்துகிறது: அமைச்சர் கே.என்.நேரு குற்றச்சாட்டு
செய்திப்பிரிவு
ஈரோடு
2024-02-19 06:43:00
ஈரோடு: தமிழக அரசையும், அமைச்சர்களையும் மத்திய அரசு தினமும் அச்சுறுத்துகிறது என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறினார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை சரளை பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: 2019-ல் மக்களவைத் தேர்தல்நேரத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது வரை அடிக்கல் நாட்டிய அளவிலேயே அந்ததிட்டம் உள்ளது. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவர நிதி கேட்டால், கடன் கேட்டுள்ளோம் என்கின்றனர். பாஜக ஆட்சியில் 5 மாநில விவசாயிகள் விளை பொருட்களுக்கு உரிய விலை கேட்டு போராடி வருகின்றனர். இதற்குமத்திய அரசு செவி சாய்க்கவில்லை. மாநில முதல்வர்களே, டெல்லிக்குச் சென்று போராட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத வகையில், தமிழக அரசையும், அமைச்சர்களையும் மத்திய அரசு தினமும் அச்சுறுத்துகிறது. ஆளுநர் என்பது மரியாதைக்குரிய பதவி. ஆனால், ஆளுநர்களை வைத்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்படவிடாமல் செய்துகொண்டிருக்கும் நிலை மாற வேண்டுமெனில், மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும். தென் மாநிலங்களில் பாஜக 10 இடங்களில்தான் வெற்றி பெறும். மற்ற இடங்களில் மாநிலக் கட்சிகள்தான் வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், அமைச்சர்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஒப்புகைச் சீட்டை எண்ணிய பிறகே தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும்: பிப்.23-ல் விசிக ஆர்ப்பாட்டம்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-19 06:15:00
சென்னை: யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்தும் ஒப்புகைச் சீட்டையும் எண்ணிய பிறகே தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி பிப்.23-ம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய தேர்தல் முறையைப் பாதுகாப்பது தான், இந்திய ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான அடிப்படையாகும். தற்போது நடைமுறையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. அதில் எளிதாக முறைகேடு செய்ய முடியும். ஆளும் கட்சிதான் விரும்பிய வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய முடியும் என்று வல்லுநர்கள் நிரூபித்துள்ளனர். குறிப்பாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்றான ‘பெல் நிறுவனத்தின்’ இயக்குநர்களாக பாஜகவினரே நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இவ்வாறு மக்களுடைய சந்தேகத்தை வலுப்படுத்தும் வகையில் பாஜக அரசும் செயல்பட்டு வருகிறது. அதற்குத் தேர்தல் ஆணையமும் துணை போகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்திய ஜனநாயகத்தின் அடிப்படையாக உள்ள தேர்தல் முறையைச் சிதைப்பதற்கு நாம் அனுமதிக்க முடியாது. எனவே, வாக்குப்பதிவு இயந்திரங்களை மட்டும் வைத்து தேர்தலை நடத்தக்கூடாது. மாறாக, அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களோடும் ஒப்புகைச் சீட்டைப் பெறும் இயந்திரமும் இணைக்கப்பட வேண்டும். அப்போதுதான், வாக்காளர் தான் விரும்பிய சின்னத்தில் வாக்களித்த பின்னர், தான் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்துகொள்ள முடியும். அந்த ஒப்புகைச் சீட்டை வாக்குப் பெட்டியில் போடுதல் வேண்டும். அவற்றை எண்ணித்தான் தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும். இந்த கோரிக்கையைத்தான் இண்டியா கூட்டணி கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இதை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் வரும் 23-ம் தேதி ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறோம். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகளும், ஜனநாயக சக்திகளும் பங்கேற்பார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.
தென்சென்னை தொகுதியில் 13 இடங்களில் தமிழக வெற்றிக் கழக கிளைகள் திறப்பு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-19 06:10:00
சென்னை: தென்சென்னை மக்களவைத் தொகுதியில் 13 இடங்களில் தமிழக வெற்றிக் கழக கிளைகள் நேற்று திறக்கப்பட்டன. அப்போது, அந்தந்த பகுதியில் அன்னதானம், பள்ளிக் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை நிர்வாகிகள் வழங்கினர். விஜய் மக்கள் இயக்கம், அன்மைக்காலமாக அரசியல் நிகழ்வுகளில் தீவிரம் காட்டி வந்தது. இந்நிலையில், கடந்த 2-ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்குவதாக விஜய் அறிவித்தார். அன்றைய தினமே டெல்லியில் பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த், கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார். விஜய் கட்சி ஆரம்பித்ததும் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். தொடர்ந்து கட்சிப் பணிகளில் அவரது ரசிகர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். தமிழகம் உட்பட அண்டை மாநிலங்களில் நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் தமிழக வெற்றிக் கழகத்துக்கு கிளைகளை திறந்து வருகின்றனர். அந்தவகையில் தென்சென்னை மக்களவைத் தொகுதியில் நேற்று 13 இடங்களில் புதிதாக கிளைகள் திறக்கப்பட்டன. இதில் மகளிர் அணி கிளைகளும் அடங்கும். தமிழக வெற்றிக் கழக தென்சென்னை மாவட்டத் தலைவர் தி.நகர் அப்புனு தலைமையில் விருகம்பாக்கம், சேப்பாக்கம், தி.நகர் உட்பட 13 இடங்களில் கட்சியின் கிளைகள் திறக்கப்பட்டன. அப்போது, அந்தந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு அன்னதானம், பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை நிர்வாகிகள் வழங்கினர்.
முஸ்லிமாக மதம் மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க ஆலோசனை குழு அமைத்தால் போராட்டம்: இந்து முன்னணி எச்சரிக்கை
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-19 06:08:00
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர்ஜவாஹிருல்லா, இஸ்லாமியராகமதம் மாறிய ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு அதே இடஒதுக்கீடு சலுகை அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததற்கு, தமிழக முதல்வர் உடனே அது குறித்து ஆவன செய்யப்படும் என பதில் அளித்திருந்தார். இந்நிலையில், நேற்று முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான சிறுபான்மை நலன் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் சிலஅறிவிப்புகள் வெளியாகி உள்ளன. மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. அது செல்லுபடியாகாது என உச்ச நீதிமன்றம் தெள்ளத் தெளிவாக கூறியுள்ளது. ஓட்டு வங்கி அரசியலுக்காக இந்துக்களுக்கு திமுக அநீதி இழைக்க தயாராக இருப்பதை இந்துக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். மதம் மாறிய முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு இந்துக்களின் இட ஒதுக்கீடு சலுகைகளை அள்ளித்தருவதன் மூலம் மதம் மாற்ற வேட்டைக்கு இந்துக்கள் பலிகடா ஆக்க திராவிட கட்சிகள் துடிக்கின்றன. எனவே, தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்ததுபோல முஸ்லிமாக மதம் மாறியவர்களுக்கு ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினரின் இட ஒதுக்கீடு சலுகைகளை இந்துக்களிடம் இருந்து பறித்து பங்குபோட ஆலோசனைக் குழு அமைத்தால், இந்து முன்னணி எதிர்த்து போராடுவதுடன், சட்ட போராட்டத்தையும் நடத்தும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
மேகேதாட்டுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டும் முயற்சியை தடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு வாசன் கோரிக்கை
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-19 06:07:00
சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கர்நாடக முதல்வர் மேகேதாட்டுவில் அணை கட்டப்படும் என்று தெரிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. குறிப்பாக, மேகேதாட்டு அணை தொடர்பாக நிதி ஒதுக்கீடு செய்து, முன்னேற்பாடுகள், குழுக்கள், நீர் செல்லும் நிலப் பரப்பு உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வு செய்யும் பணி நிறைவடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேகேதாட்டுவில் அணை கட்டினால் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய காவிரி நீர் கிடைக்காமல், தமிழக விவசாயிகளும், பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள். தமிழக அரசு, கர்நாடக அரசின் மேகேதாட்டு அணை சம்பந்தமான அறிவிப்பை கண்டும் காணாமல், மெத்தனப் போக்கை கடைப்பிடித்து அரசியல் செய்வது நியாயமில்லை. தமிழக அரசு இனியும் தாமதிக்காமல், கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராகச் செயல்படும் கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
பார்வையற்ற மாற்று திறனாளிகள் தி.நகரில் சாலை மறியல்: 50-க்கும் மேற்பட்டோர் கைது
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-19 06:06:00
சென்னை: சென்னையில் கடந்த 12-ம் தேதி 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 17-ம் தேதி தேனாம்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தின் போது, அமைச்சர் கீதாஜீவன் பேச்சுவார்த்தை நடத்தி,முதல்வருடன் கலந்து பேசி தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில், தொடர்ந்து 5-வது நாளாக தி.நகர் பேருந்துநிலையம் முன்பு சாலையில்அமர்ந்து பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் நேற்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை நடுவே அமர்ந்து தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால், உஸ்மான் சாலையில்கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தி.நகர் போலீஸார், மாற்றுத் திறனாளிகளை களைந்து போகும்படி கூறினர்.ஆனால், அவர்கள் களைந்து செல்லாமல், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீஸார்அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை அகற்ற முயன்றனர். மறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைது செய்து அருகில் உள்ள மண்டபத்துக்கு கொண்டு சென்றனர். இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை கடற்கரை - தாம்பரம் தடத்தில் மின் ரயில்கள் ரத்து - பேருந்து, மெட்ரோ ரயில்களில் அலைமோதிய மக்கள்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-19 06:05:00
சென்னை: ரயில்வே பொறியியல் பணி காரணமாக, சென்னை கடற்கரை- தாம்பரம் வழித்தடத்தில் நேற்று 44 மின் ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால், பேருந்து, மெட்ரோ ரயில்களில் கூட்டம் அலைமோதியது. மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில், கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்பட்டதால், பயணிகளுக்கு பேருதவியாக இருந்தது. சென்னை எழும்பூர் - விழுப்புரம் மார்க்கத்தில் கோடம்பாக்கம் - தாம்பரம் இடையே பொறியியல் பணி காரணமாக, நேற்று காலை 11 மணிமுதல் பிற்பகல் 3.30 மணிவரை 44 மின் ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டது. முன்னதாக இது தொடர்பாக,ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கையால், ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருந்தது. இருப்பினும், இத்தகவலை அறியாமல் வந்த பயணிகள் பேருந்து, மெட்ரோ ரயில் நிலையத்தை நோக்கிப் படையெடுத்தனர். இதன் காரணமாக, பேருந்து, மெட்ரோ ரயில்களில் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. மேலும், பயணிகள் வசதிக்காக, கூடுதல் பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள் விடுத்திருந்தது. அதன்படி, சென்ட்ரல், மாம்பலம், கிண்டி, தாம்பரம் உள்ளிட்ட முக்கிய பேருந்து நிலையங்களிலிருந்து 150 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டன. இதனால், பொதுமக்கள் பேருந்துகளில் நெரிசலின்றி பயணித்தனர். மேலும், மெட்ரோ ரயில்களும் அடிக்கடி (7 நிமிடத்துக்கு ஒரு ரயில்) இயக்கப்பட்டதால், பயணிகளுக்கு வசதியாக இருந்தது. பேருந்து, மெட்ரோ ரயில் நிலையங்கள் நேற்று நாள் முழுவதும் பரபரப்பாகக் காணப்பட்டன. பயணிகள் தவிப்பு: ஆவடி ரயில் நிலையத்தில் பழைய நடைமேம்பாலத்தை இடித்து அப்புறப்படுத்தும் பணி நேற்று முன்தினம் இரவு 10 மணிமுதல் மறுநாள் அதிகாலை 4.30 மணிவரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக, சென்னை சென்ட்ரல்- திருவள்ளூர், அரக்கோணம் இடையே இரவு நேரத்தில் 10 ரயில்கள் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதிகாலை 4.30 மணிக்கு முடிய வேண்டிய பணிகள் காலை 6.30 வரை நடைபெற்றது. இதனால், காலை நேரத்தில் ரயில் நிலையத்துக்கு வந்திருந்த பயணிகள் தவித்தனர். காலை 6.30 மணிக்கு பிறகு, அரக்கோணம் மற்றும் திருவள்ளூரிலிருந்து சென்ட்ரலுக்கு வரும் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த ரயில்கள் விரைவு ரயில்கள் செல்லும் பாதையில் இயக்கப்பட்டதால், பட்டாபிராம் முதல் பட்டரவாக்கம் வரை உள்ள ரயில் நிலையங்களில் ரயில்கள் நிறுத்தப்படவில்லை. இந்த ரயில் நிலையங்களில் ரயிலுக்காகக் காத்திருந்த பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.
எம்ஆர்பி ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் கோரி 21-ம் தேதி பெருந்திரள் முறையீடு போராட்டம்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-19 06:01:00
சென்னை: பணி நிரந்தரம் செய்யக்கோரி எம்ஆர்பி ஒப்பந்த செவிலியர்கள், சென்னையில் வரும் 21-ம் தேதி பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் நிர்வாகிகள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் (எம்ஆர்பி) போட்டித் தேர்வு மூலம் 2015-ம் ஆண்டில் 8,500 செவிலியர்களும், 2019-ல் 3,500 செவிலியர்களும் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் படிப்படியாக ஒப்பந்த முறையில் பணியில்அமர்த்தப்பட்டனர். பணியில் சேரும்போது, இரண்டு ஆண்டுகளில் பணி நிரந்தரம் செய்யப்படும் என்று பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. மகப்பேறு விடுப்பு ஊதியம்: ஆனால், இதுவரை 5,500 செவிலியர்கள் மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்கள் 2 ஆண்டுகளை கடந்தும் இன்னும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. நாங்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால், அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டதுபோல் எம்ஆர்பி செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம்செய்ய வேண்டும். மகப்பேறு விடுப்புக்கான ஊதியத்தை வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பணியிடங்களை உருவாக்க வேண்டும். கரோனா காலகட்டத்தில் இரண்டரை ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மனு கொடுப்பது, கோரிக்கைகள் அடங்கிய அட்டை அணிந்து, அனைத்து மாவட்டங்களிலும் போராட்ட ஆயத்தமாநாடு போன்ற பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். ஆனால், தமிழக அரசு எங்களின் கோரிக்கைகளுக்கு துளியும் செவிசாய்க்கவிலை. அதனால், வரும் 21-ம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் ஈடுபட இருக்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் நீதி மய்யம் தொடக்க நாள்: பிப்.21-ல் கொடியேற்றி கமல் உரை
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-19 05:59:00
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7-ம் ஆண்டு தொடக்க நாளான பிப்.21-ம் தேதி கட்சித் தலைவர் கமல்ஹாசன் கொடியேற்றி வைத்து உரையாற்றவுள்ளார். இதுதொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் ஆ.அருணாச்சலம் நேற்று வெளியிட்ட அறிக்கை: மக்கள் நலன் ஒன்றே தனது கொள்கை, அதுவே நாளைய உலகின் நவீன சித்தாந்தம் என்ற முழக்கத்துடன் மக்கள் நீதி மய்யம் கட்சியை கமல்ஹாசன் தொடங்கிய நாள் பிப்.21. இதன்படி அன்றைய தினம் 7-ம் ஆண்டு தொடக்க நாள் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. இதற்காக காலை 10 மணியளவில், ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் கொடி ஏற்றிவைத்து தொண்டர்களிடையே கட்சித் தலைவர் சிறப்புரையாற்ற உள்ளார். இதில் நிர்வாகக் குழு, செயற்குழு உறுப்பினர்கள், அமைப்பு மற்றும் அணிகளைச் சேர்ந்த மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், நம்மவர் தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் அவசியம் கலந்து கொள்ள வேண்டும். தாய்மொழி தினத்தில் (பிப்.21) பிறந்த மக்கள் நீதி மய்யம் கட்சி மக்களவைத் தேர்தல் களத்தில் வெல்லும். வரலாறு அதைச் சொல்லும். நாடாளுமன்றத்தில் நம்மவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பேரியம் நைட்ரேட், சரவெடிக்கு அனுமதி கோரி இன்று முதல் பட்டாசு உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம்
செய்திப்பிரிவு
சிவகாசி
2024-02-19 05:50:00
சிவகாசி: சரவெடி மற்றும் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தி பட்டாசு உற்பத்தி செய்ய அனுமதி வழங்கக்கோரி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் (டாப்மா) அறிவித்துள்ளது. சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 1,100-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்குகின்றன. நாட்டின் மொத்த பட்டாசு உற்பத்தியில் 95சதவீதம் சிவகாசியில்தான் உற்பத்தி செய்யப்பட்டுகிறது. இந்நிலையில், பட்டாசு வெடிப்பதால் ஒலி மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதால் பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கக் கோரி 2018-ல் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில், பேரியம் நைட்ரேட் பயன்படுத்தவும், சரவெடிதயாரிக்கவும் நீதிமன்றம் தடை விதித்தது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் பசுமைப் பட்டாசு தயாரிப்பது குறித்து புதிய ஃபார்முலாவை உருவாக்கி, உற்பத்தியாளர்ளுக்குப் பயிற்சி அளிக்க மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் கழகம் (நீரி), மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை (பெசோ) ஆகியவற்றுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. சிவகாசி பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் பசுமை பட்டாசு மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. பேரியம் நைட்ரேட் மற்றும் சரவெடி தடை காரணமாக 50 சதவீதம் வரை பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் (டாப்மா) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சரவெடி தயாரிக்கவும், பேரியம் நைட்ரேட் பயன்படுத்தி பட்டாசு தயாரிக்கவும் அனுமதி வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், பட்டாசு தனி தாசில்தார் ஆகியோரிடம் கோரிக்கை அளிக்கப்பட்டது. சரவெடி, பேரியம் நைட்ரேட் தடை காரணமாக பலதொழிற்சாலைகளை நடத்த முடியாத சூழல் நிலவுகிறது. எனவே, இன்று (பிப்.19) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, பட்டாசு ஆலைகள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றன. இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
39 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்: செல்வப்பெருந்தகை உறுதி
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-19 05:46:00
சென்னை: தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் வெற்றிபெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்ட செல்வப்பெருந்தகை நேற்று தெரிவித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரி மாற்றப்பட்டு, அப்பதவிக்கு கு.செல்வப்பெருந்தகை எம்எல்ஏவை நேற்று முன்தினம் அகில இந்திய காங்கிரஸ் தலைமை நியமித்தது. இந்நிலையில், செல்வப்பெருந்தகை நேற்று கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, சின்னமலையில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி சிலை, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் உள்ள காமராஜர் சிலை, அண்ணா சாலையில் உள்ள தந்தை பெரியார் சிலை, வால்டாக்ஸ் சாலையில் உள்ள முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி சிலை, அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலை ஆகியவற்றுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வர் தலைமையில் தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் கூட்டணி கட்சிகள் வெற்றிக்கு வியூகங்கள் வகுத்து வருகிறோம். இத்தேர்தலில் 39 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். கடந்த தேர்தலைவிட இந்தமுறை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் எங்கள் வேட்பாளர்கள் வெற்றிபெற நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், எம்.கிருஷ்ணசாமி ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று, கட்சியை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். தேசத் தலைவர்களுக்கு மரியாதை செலுத்தியபோது, மூத்த தலைவர் கே.வி.தங்கபாலு, ரூபி மனோகர் எம்எல்ஏ, மாவட்ட தலைவர்கள் சிவ.ராஜசேகரன், முத்தழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சென்னையில் பிப் 24-ல் ஜெ. பிறந்தநாள் விழா: இபிஎஸ் பங்கேற்பு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-19 05:33:00
சென்னை: அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்த நாள் விழா, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் வரும் 24-ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்று, ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் சிலைகளுக்கு மரியாதை செய்ய உள்ளார். இதையொட்டி, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு, மாநகராட்சிப் பகுதி, வட்ட அளவில் ஆங்காங்கே கட்சி கொடிகம்பங்களுக்கு புதுவர்ணம் பூசியும், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்தும், நலதிட்ட உதவிகளை வழங்கி கொண்டாட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழக ஆலோசனை கூட்டம்: பனையூரில் இன்று நடக்கிறது
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-19 05:29:00
சென்னை: தமிழக வெற்றிக் கழக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பனையூரில் இன்று நடக்கிறது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சி, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து அவரின் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். அத்துடன், சென்னை பனையூரில் கட்சி நிர்வாகிகளை சந்தித்த விஜய், மக்கள் பணியை துரிதப்படுத்த அறிவுறுத்தினார். அடிக்கடி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனையும் வழங்கி வருகிறார். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம், சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது. இதில், விஜய் உத்தரவின் பேரில், உறுப்பினர் சேர்க்கையை அதிகரிப்பது மற்றும் கட்சி கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. கட்சியின் மாவட்டத் தலைமை நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஊரக வளர்ச்சி, பள்ளிக்கல்வி துறைகள் சார்பில் ரூ.338 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-19 05:28:00
சென்னை: ஊரக வளர்ச்சி, பள்ளிக்கல்வித் துறைகள் சார்பில் ரூ.337.90 கோடியில், வகுப்பறை, பள்ளி, நூலகம் மற்றும் துறை கட்டிடங்களை திறந்த வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ. 139.65 கோடியில் புதிய சாலை அமைக்க அடிக்கல் நாட்டினார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.800 கோடி மதிப்பில் 6 ஆயிரம் புதிய வகுப்பறைகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ. 250 கோடியில் 1,200 வகுப்பறைகள் என ரூ.1050 கோடியில் 7200 வகுப்பறைகள் கூடுதலாக கட்டப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் 2022-23 ம் ஆண்டில் ரூ.800 கோடி மதிப்பீட்டில் 5,653 புதிய வகுப்பறைகள் கட்ட அரசாணை வெளியிடப்பட்டது. இக்கட்டிடங்கள் அனைத்தும் உயர்த்தப்பட்ட மேற்கூரை, விசாலமான தாழ்வாரம், காற்றோட்டமிக்க ஜன்னல் வசதிகள், வழுக்காத தரைகள், கற்றலை ஊக்குவிக்கும் சுவர் ஓவியங்கள், வாழ்க்கைப் பாடங்கள் அடங்கியவையாகும். இத்திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக தமிழகத்தின் 37 மாவட்டங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கட்டி முடிக்கப்பட்ட ஆயிரம் வகுப்பறைகள் கடந்தாண்டு செப்.26-ம் தேதியும் 2-ம் கட்டமாக 34 மாவட்டங்களில் ரூ.155.42 கோடியில் 1,000 வகுப்பறைகள் டிச.26-ம் தேதியும் முதல்வரால் திறக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, ரூ.204.57 கோடியில் 35 மாவட்டங்களில் 1,374 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கட்டி முடிக்கப்பட்ட வகுப்பறை கட்டிடங்களை நேற்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் திருநெல்வேலி, திண்டுக்கல், மதுரை, நாமக்கல், பெரம்பலூர், சேலம், வேலூர் மாவட்டங்களில் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்கள், 62 கிராம செயலகம், கிராம ஊராட்சி அலுவலகங்கள், 150 அங்கன்வாடி மையங்கள், 50 பொது விநியோக கடைகள், உணவு தானிய கிடங்குகள் என ரூ.80.85 கோடி மதிப்பிலான கட்டிடங்களை திறந்து வைத்தார். நாமக்கல் மாவட்டம், கீழூர் ஊராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ் கீழூர், மேலூர், கெடமலையை இணைக்கும் வகையில் ரூ.139.65 கோடியில் 31 கிலோ மீட்டர் நீளத்தில் போதமலையில் சாலை அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பள்ளிக்கல்வித் துறை சார்பில் செங்கல்பட்டு, கடலூர், நாகப்பட்டினம், நீலகிரி, பெரம்பலூர், சேலம், தேனி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ. 48.57 கோடியில் 227 வகுப்பறைகட்டிடங்கள், 19 ஆய்வகங்கள், 7 கழிப்பறைகள், 3 பள்ளி சுற்றுச்சுவர்கள், ஒரு நூலகம், ஒரு கலையரங்கம் மற்றும் ஒரு முகப்பு வளைவு ஆகியவற்றையும் முதல்வர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், துறை செயலர்கள் ப.செந்தில்குமார், ஜெ.குமரகுருபரன், ஊரக வளர்ச்சி இயக்குநர் பா.பொன்னையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆந்திராவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு: கோழிப் பண்ணைகளில் தடுப்பு நடவடிக்கை
செய்திப்பிரிவு
நாமக்கல்
2024-02-19 05:21:00
நாமக்கல்: ஆந்திர மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப் பண்ணைகளில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் கடந்த 7-ம் தேதி ஒரு கோழிப் பண்ணையில் 10 ஆயிரம் கோழிகள் திடீரென உயிரிழந்தன. ஆய்வில், உயிரிழந்த கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் நோய் தாக்கம் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "நெல்லூர் மாவட்டத்தில் உள்ள சட்டகுட்ல, குமாளடிப்பா கிராமங்களில் பறவைக் காய்ச்சல் நோய்த் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த கிராமங்களைச் சுற்றிலும் 10 கி.மீ. சுற்றளவுக்குக் கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து கோழி, இறைச்சி மற்றும் முட்டை உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யவோ, வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆந்திர மாநில எல்லையில் உள்ள திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள பொதுமக்களுக்கும், கோழிப் பண்ணையாளர்களுக்கும் கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் பொது சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப் பண்ணையாளர்கள், தங்கள் பண்ணைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். நாமக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட முட்டை கோழிப் பண்ணைகளில், 5 கோடி கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இவற்றைப் பாதுகாக்கக் கோழிகளுக்குக் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. பண்ணை வாயிலில் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல் கலந்த தண்ணீர் வைக்கப்பட்டு, வெளி ஆட்களும், வாகனங்களும் அதன் வழியாக வர அனுமதிக்கப்படுகின்றனர். இது தொடர்பாக பண்ணையாளர்கள் சிலர் கூறும்போது, “நாமக்கல் பகுதியில் நிலவும் தட்பவெப்ப நிலை மற்றும் பண்ணைகளில் பின்பற்றப்படும் பயோ செக்யூரிட்டி முறைகளால், பறவைக் காய்ச்சல் நோய்க் கிருமிகள் பரவ வாய்ப்பில்லை. எனினும், பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன” என்றனர்.
மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு செயலி: புதிய வசதியை தொடங்கியது மின்வாரியம்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-19 05:14:00
சென்னை: மொபைல் செயலி மூலம் மின்சார தடை, மீட்டர் பழுது, கூடுதல் மின்கட்டணம் உள்ளிட்ட மின்சாரம் தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கான புதிய வசதியை மின்வாரியம் தொடங்கி உள்ளது. மின்நுகர்வோர் மின்தடை, கூடுதல் மின்கட்டணம் வசூல் உள்ளிட்ட மின்சாரம் தொடர்பான புகார்களை, சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்படும் மின்னகம் நுகர்வோர் சேவை மையத்தை 94987 94987 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மின்னகத்தில் ஒரு ஷிப்டுக்கு 60 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். ஒரே சமயத்தில் அதிகம் பேர் புகார் அளிக்க தொடர்பு கொள்ளும்போது பலருக்கு இணைப்பு கிடைப்பதில்லை. இதனால், புகார் அளிக்க முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். மின்கட்டணத்தை எப்போதுவேண்டுமானாலும் செலுத்துவதற்கு வசதியாக, ‘TANGEDCO’ என்ற மொபைல் போன் செயலியை மின்வாரியம் ஏற்கெனவே அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில், இந்த செயலியில் புகார்களை தெரிவிப்பதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நுகர்வோர் புகார் அளிக்கலாம்: இதன்படி, மின்தடை, மீட்டர் பழுது, மின்கட்டணம், மின்னழுத்தப் பிரச்சினைகள் குறித்தும், சேதமடைந்த மின்கம்பம், மின்கம்பி அறுந்து விழுதல், மின் திருட்டு, மின்சார தீ விபத்து உள்ளிட்டவை தொடர்பாகவும் இந்த செயலியில் நுகர்வோர் புகார் அளிக்கலாம். இந்த செயலியில் மீட்டர், மின்கட்டண புகார்களுக்கு மின்இணைப்பு எண் பதிவிட வேண்டும். மற்ற சேவைகளுக்கான புகாரை, மின்இணைப்பு எண் குறிப்பிடாமலும் பதிவிடலாம். அவ்வாறு பதிவிடும்போது எந்த இடத்தில் இருந்து செயலியை இயக்குகிறோமோ, மேப் மூலமாக சம்மந்தப்பட்ட பிரிவு அலுவலக முகவரி செயலியில் தானாகவே வந்து விடும். அதற்குகீழ், இடத்தைக் குறிப்பிட்டு புகாரை பதிவிடலாம். புகைப்படமும் பதிவிடலாம்: மேலும், புகார் தொடர்பாக மொபைல் போன் கேமராவில் புகைப்படம் எடுத்தும் இந்த செயலியில் பதிவிடலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
சட்டப்பேரவையில் 2024-25 நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-19 04:51:00
சென்னை: சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார். மத்திய அரசின் பட்ஜெட் ஆண்டுதோறும் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படும் நிலையில், தமிழக அரசின் பட்ஜெட் வழக்கமாக மார்ச் மாதத்தில் தாக்கல் செய்யப்படும். இந்த நிலையில், மக்களவை பொதுத் தேர்தல் அறிவிப்பு விரைவில் எதிர்நோக்கப்படுவதால், வரும் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் பிப்ரவரி மாதமே தாக்கல் செய்யப்படுகிறது. நிதித் துறை பொறுப்பை ஏற்ற பிறகு, அமைச்சர் தங்கம் தென்னரசு முதல்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார். முன்னதாக, கடந்த 12-ம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் தொடங்கியது. அன்று நடந்த அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் கடந்த 15-ம் தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டு, முதல்வர் ஸ்டாலின் பதிலுரையும் அளித்தார். இந்நிலையில், பட்ஜெட் தாக்கலுக்காக தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது. தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார். வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நாளை (பிப்.20) தாக்கல் செய்கிறார். இதைத் தொடர்ந்து, பட்ஜெட்கள் மீதான விவாதம் 20, 21-ம் தேதிகளில் நடைபெறும். விவாதத்துக்கு 2 அமைச்சர்களும் 22-ம் தேதி பதில் அளிக்கின்றனர். மேலும், வரும் நிதி ஆண்டுக்கான துணை மானிய கோரிக்கைகளையும் பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். தொடர்ந்து, நிதி ஒதுக்கத்துக்கான சட்ட மசோதா தாக்கல் செய்து, நிறைவேற்றப்படுகிறது. பட்ஜெட்டில் 7 சிறப்பு அம்சங்கள்: இந்நிலையில், ‘மாபெரும் 7 தமிழ்கனவு’ என்ற தலைப்பில் சமூக நீதி,கடைக்கோடி மனிதருக்கும் நலவாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம்,அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமைவழிபயணம், தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும்ஆகிய 7 சிறப்பு அம்சங்கள் தமிழகபட்ஜெட்டில் இடம்பெறும் என்று தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. கடந்த முறை தமிழக பட்ஜெட்டை, அப்போது நிதி அமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அப்போது, ‘வரும் ஆண்டில் சொந்த வரி வருவாய் ரூ.1.81 லட்சம் கோடியாக உயரும். வரியல்லாத வருவாய் ரூ.20,223.51 கோடியாக இருக்கும்’ என்று கணிப்பு தெரிவித்திருந்தார். மேலும், திருத்த மதிப்பீட்டில் மொத்தவருவாய் ரூ.2.45 லட்சம்கோடி என்றும் மதிப்பிட்டிருந்தார். அதேபோல, வருவாய் பற்றாக்குறை 2024-25-ல் ரூ.18,583 கோடியாக குறையும் என்றும், 2025-26-ம் ஆண்டில் ரூ.1,218.08 கோடி உபரி வருவாய் கிடைக்கும் என்றஎதிர்பார்ப்பையும் தெரிவித்திருந்தார். இதுதவிர, நிதி பற்றாக்குறை ரூ.92,075 கோடி என்றும், மொத்த கடன் 2024 மார்ச் வரை ரூ.7.26 லட்சம் கோடியாக இருக்கும் என்றும் மதிப்பிட்டிருந்தார். இருப்பினும், மெட்ரோ ரயில் பணிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காதது, தமிழகம் கடந்த ஆண்டு இறுதியில் சந்தித்த பேரிடர்கள், ஜிஎஸ்டி இழப்பீடு கிடைக்காதது, பல்வேறு திட்டங்களில் கூடுதல் பயனாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி போன்றவை காரணமாக 2024-25-ம்ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் நிதிதொடர்பான எதிர்பார்ப்புகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது. புதிய அறிவிப்புகளுக்கு வாய்ப்பு: அதேநேரம், மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், மக்களுக்கான சலுகை திட்டங்கள், புதிய அறிவிப்புகள் ஆகியவை இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட்டுக்கு முன்னதாக கலைஞர் மகளிர் உரிமை தொகைகுறித்த அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின்வெளியிட்டார். தொடர்ந்து, பட்ஜெட்டில் ரூ.7 ஆயிரம் கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. தற்போது பயனாளிகள் எண்ணிக்கை 1.15 கோடியை தாண்டியுள்ளதால், இந்த ஆண்டு கூடுதல் நிதி ஒதுக்கவேண்டிய அவசியம் உள்ளது. இதுதவிர, புதுமைப்பெண் திட்டத்தில் சிறுபான்மையின பெண்களும் சேர்க்கப்பட்டுள்ளதால் இந்த திட்டத்துக்கும் கூடுதல் நிதி தேவைப்படுகிறது. இதுதவிர, புயல், கனமழை, வெள்ளம் உள்ளிட்டபேரிடர்களால் பாதிக்கப்பட்ட சாலை போன்ற உள்கட்டமைப்பு வசதிகளுக்கும் அதிக நிதி தேவைப்படுகிறது. இதுபோன்று பல்வேறு துறைகளுக்கும் தேவைப்படும் நிதியை ஒதுக்கீடு செய்யும் வகையில் இந்த பட்ஜெட் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. புதிய இலச்சினை வெளியீடு: பட்ஜெட்டின் நோக்கம் குறித்த கருத்தியலுடன் முதல்முறையாக புதிய இலச்சினையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ‘தடைகளை தாண்டி, வளர்ச்சியை நோக்கி’ என்ற தலைப்பில் பட்ஜெட் அளிக்கப்படுவதை குறிக்கும் விதமாக, இந்த இலச்சினை வடிவமைக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
“கர்நாடக அரசின் முயற்சிகளை முதல்வர் முறியடிக்க வேண்டும்” - வானதி சீனிவாசன் @ மேகேதாட்டு விவகாரம்
செய்திப்பிரிவு
கோவை
2024-02-19 04:04:00
கோவை: மேகேதாட்டுவில் அணை கட்ட நடவடிக்கை மேற்கொண்டு வரும் கர்நாடகா அரசின் முயற்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் முறியடிக்க வேண்டும் என எம்எல்ஏவும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கர்நாடக மாநில அரசின் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா, காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் புதிய அணை கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து முடித்துள்ளோம். முறையான அனுமதி பெற்று விரைவில் அணையின் கட்டுமானப் பணிகளை தொடங்குவோம் என்று அறிவித்துள்ளார். சென்னை மாகாணத்திற்கும், மைசூர் மாகாணத்திற்கும் இடையே 1924-ம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, காவிரியாறு பாயும் தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் காவிரியாற்றின் குறுக்கே கர்நாடகா எந்த அணையையும் கட்ட முடியாது. இதை காவிரி நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதிப்படுத்தியுள்ளன. உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி காவிரியாற்றின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் புதிய அணை கட்டுவோம் என்று கர்நாடக சட்டப்பேரவையில் அம்மாநில முதலமைச்சர் அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. மேகேதாட்டு அணை இல்லாத போதே, நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, வறட்சியான காலங்களில், தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்க கர்நாடகா மறுத்து வருகிறது. இத்தகைய சூழலில், மேகேதாட்டு அணை கட்டப்பட்டால், தமிழகத்திற்கு இப்போது கிடைக்கும் குறைந்த அளவு தண்ணீரும் கிடைக்காமல் போய்விடும். இந்த முயற்சியை முறியடிக்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும். ஆனால், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பதால், தமிழக நலன்களை காற்றில் பறக்கவிட்டு, கண்டனம் கூட தெரிவிக்காமல், ‘மேகேதாட்டுவில் அணை கட்ட முடியாது' என்று வழக்கமான பல்லவியை பாடி இருக்கிறார் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன். கர்நாடக அரசை கண்டித்தால், சோனியாவும், ராகுலும், பிரியங்காவும் கோபித்துக் கொள்வார்கள் என்பதால், இந்த விவகாரத்தில் மென்மையான போக்கை திமுக அரசு கையாண்டு வருகிறது. இது கடும் கண்டனத்திற்குரியது. கர்நாடக அரசின் முயற்சியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முறியடிக்க வேண்டும். இதற்கு சட்ட ரீதியான தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திண்டுக்கல் மாநகராட்சியாக தரம் உயர்த்தி 10 ஆண்டு நிறைவு - எல்லை விரிவாக்கம் இல்லாதால் வளர்ச்சி பாதிப்பு
பி.டி.ரவிச்சந்திரன்
திண்டுக்கல்
2024-02-19 04:02:00
திண்டுக்கல்: எல்லை விரிவாக்கம் தாமதம் காரணமாக மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் எந்தவித வளர்ச்சியும் அடையாமல் நகராட்சி போலவே உள்ளது திண்டுக்கல் மாநகராட்சி. திண்டுக்கல் , 2014-ம் ஆண்டு பிப். 19-ம் தேதி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அதையடுத்து நகராட்சி எல்லைக்குள் இருந்த 48 வார்டுகளுடன் திண்டுக்கல்லை சுற்றியுள்ள பால கிருஷ்ணாபுரம், பள்ளபட்டி, அடியனூத்து, தோட்டனூத்து, செட்டி நாயக்கன் பட்டி, சீலப்பாடி, முள்ளிப்பாடி, குரும்பபட்டி, பொன்மாந்துரை புதுப்பட்டி, பிள்ளையார் நத்தம் ஆகிய கிராம ஊராட்சிகளை திண்டுக்கல் மாநகராட்சியுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டது. இந்தத் திட்டம் கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் நகர வளர்ச்சி இல்லாமல் திண்டுக்கல் பெயரளவில் மட்டும் மாநகராட்சியாக இருந்து நகராட்சி போலவே செயல்பட்டு வருகிறது. திண்டுக்கல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தை புறநகர்ப் பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை உள்ளது. நகர எல்லை விரிவாக்கம் செய்யப்படாததால் பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய முடியவில்லை. இதனால் திண்டுக்கல் நகரில் போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது. பேருந்து நிலையத்தை நகருக்கு வெளியே மாற்றினாலே திண்டுக்கல் நகரின் பாதி பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்து விடும். கடந்த அதிமுக ஆட்சியிலும் சரி, தற்போது நடைபெறும் திமுக ஆட்சியிலும் சரி, பேருந்து நிலையத்தை இடமாற்றும் திட்டத்தை செயல்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். திண்டுக்கல் நகரில் மொத்தமுள்ள 48 வார்டுகளில் ஒரு சில வார்டுகளில் மட்டுமே பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பாதிக்கும் மேற்பட்ட வார்டுகளில் பாதாள சாக்கடை இல்லை. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இரண்டாம் கட்டமாக பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தியும், திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை. முதல் கட்டமாக அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டத்தில் நிலவும் குளறுபடிகளால் தினமும் நகரின் ஏதோ ஒரு பகுதியில் கழிவு நீர் வெளியேறி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துவது தொடர்கிறது. திண்டுக்கல்லில் நகரமைப்பு பிரிவு சார்பில் கண் துடைப்பாக ஆக்கிரமிப்புகளை அகற்றுவதும், மீண்டும் ஆக்கிரமிப்புகள் உருவாவதும் தொடர் கதையாக உள்ளது. நடைபாதைகள், சாலைகள் மிகவும் குறுகலாகி பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். அனுமதி பெறாமல் பிளெக்ஸ் போர்டுகள் வைப்பது திண்டுக்கல் நகரில் அதிகரித்துள்ளது. இதனால் மக்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகி உள்ளது. நாய்கள், மாடுகள் தொல்லை: திண்டுக்கல் நகரில் மொத்தம் 7 ஆயிரம் தெரு நாய்கள் உள்ளன. பல மாதங்களாக கருத்தடை மையம் செயல் பாட்டில் இல்லாததால், நாய்களின் இனப்பெருக்கம் அதிகரித்து வருகிறது. அதே போல், நகரில் மாடுகள் வளர்ப்போர் தங்கள் மாடுகளை அவிழ்த்து விடுவதால் அவை சாலைகளில் வலம் வருகின்றன. சாலையில் திரியும் மாடுகளால் இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் திறம்பட செயல்பட்டால்தான் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். தரம் உயர்த்தப் பட்ட நடவடிக்கை பெயரளவில் மட்டும் இல்லாமல், செயல்பாட்டிலும் இருந்தால்தான் நகரின் வளர்ச்சி சாத்தியமாகும் என்று திண்டுக்கல் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
“பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் முறையை ஒழித்துவிடுவர்” - அன்பில் மகேஸ்
செய்திப்பிரிவு
கோவை
2024-02-19 04:00:00
கோவை: ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில், திமுக சார்பில், மக்களவை தேர்தல் பிரச்சாரக் கூட்டம், கோவை கொடிசியா மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இக்கூட்டத்தில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி பேசும்போது, ‘‘திமுக ஆட்சியில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டு வருகின்றன. முதல்வர் ஸ்டாலின் எடுத்துவரும் நடவடிக்கையால் இந்தியாவில் பாசிசம் சரிந்து வருகிறது. திராவிட மாடல் அரசின் 33 மாதங்களில் 1,339 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. ஆன்மிகத்துக்கு எதிரானது திமுக என பரப்ப பாசிசம் முயற்சிக்கிறது. பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் தேர்தல் முறையை ஒழித்து விடுவார்கள். சிறையில் உள்ள செந்தில் பாலாஜி அமைச்சர் என்பதற்காக அல்ல, தொண்டர் என்ற அடிப்படையில், அவருக்கு துணையாக திமுக இருக்கிறது. அச்சத்தை ஏற்படுத்த அமலாக்கத் துறை, வருமான வரித் துறையை மத்திய அரசு ஏவுகிறது. திட்டக் குழு என்பதை கலைத்து நிதி ஆயோக் என்பதை கொண்டு வந்து, பொருளாதாரம், வேலை வாய்ப்பு என விவாதிக்காமல் அந்த அமைப்பு முடங்கியுள்ளது’’ என்றார். இக்கூட்டத்தில் வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, திமுக மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொ.அ.ரவி, தளபதி முருகேசன், மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் ரா.வெற்றிச் செல்வன், நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
2024-25 தமிழக பட்ஜெட் டீசரை வெளியிட்ட அரசு!
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-19 00:04:00
சென்னை: 2024-25-ம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (திங்கள்கிழமை, பிப்.19) சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார். இந்நிலையில், இதற்கான டீசரை அரசு வெளியிட்டுள்ளது. முன்னதாக, பட்ஜெட்டுக்கான லோகோ வெளியிடப்பட்டு இருந்தது. தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் கடந்த பிப்.12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்றது. பிப்.15-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரையாற்றினார். இந்த சூழலில் 2024-25-ம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளார். பிப்.20-ம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யவுள்ளார். இந்நிலையில், இதற்கான டீசர் வெளியாகி உள்ளது. இதில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ என குறிப்பிட்டு சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமைவழிப் பயணம், தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் முன்னிட்டவை ஹைலைட் செய்யப்பட்டுள்ளன. அதோடு காத்திருங்கள் பட்ஜெட் அறிவிப்புக்கு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. Grand 7 Tamil Dream STAY TUNED FOR BUDGET ANNOUNCEMENTS... #CMMKSTALIN | #TNDIPR | #TNBudget2024| #TNInclusiveBudget |@CMOTamilnadu @mkstalin @mp_saminathan @TThenarasu pic.twitter.com/A1W4nfpEY8
மேல்மா சிப்காட் விவகாரம்: அமைச்சர் எ.வ.வேலு உருவபொம்மையை எரித்து போராட்டம்
இரா.தினேஷ்குமார்
திருவண்ணாமலை
2024-02-18 23:24:00
திருவண்ணாமலை: செய்யாறு அருகே மேல்மா சிப்காட் விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் பொய்யான தகவலை கூறியதாக தெரிவித்து அமைச்சர் எ.வ.வேலுவின் உருவ பொம்மையை எரித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மேல்மா சிப்காட் திட்டத்துக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து கடந்த ஏழு மாதங்களாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மீது செய்யாறு உட்கோட்ட காவல் துறையினர் பல வழக்குகளை பதிவு செய்துள்ளனர். மேலும் தமிழக அரசுக்கு எதிராக போராடுவதாக கூறி, 7 விவசாயிகளை குண்டர் சட்டத்தில் காவல் துறையினர் கைது செய்தனர். பாஜக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து 7 விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை தமிழக அரசு ரத்து செய்தது. இந்நிலையில், விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கண்டனம் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, ‘நிலம் இல்லாதவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்’ என கருத்து தெரிவித்தார். இதற்கு விவசாயிகள் மற்றும் மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கத்தினர் கண்டனம் தெரிவித்து, அமைச்சர் எ.வ.வேலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாய நிலத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், நிலம் இருப்பதை நிரூபித்தால் அமைச்சர் பதவியில் இருந்து விலக தயாரா? என கேள்வி எழுப்பினர். இதற்கிடையில், செய்யாறு அருகே வட ஆளப்பிறந்தான் கிராமத்தில் அமைச்சர் எ.வ.வேலு உருவபொம்மையை எரித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், சட்டப்பேரவையில் ஒரு சென்ட் நிலம் கூட இல்லை என பொய்யான கருத்தை தெரிவித்த அமைச்சருக்கு எதிராக முழக்கமிட்டனர்.
3 ஆண்டுகளுக்குள் 60,567 நபர்களுக்கு பணி நியமனம்: முதல்வர் பேச்சு; தமிழக அரசு விளக்கம்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-18 19:41:00
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் 60,567 நபர்களுக்கு அரசு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில், “சென்னையில் 16.02.2024 அன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில், தமிழ்நாட்டில் இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து கடந்த மாதம் வரை 60,567 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட விவரத்தை முதல்வர் குறிப்பிட்டார். இது குறித்து சில ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களுக்கு பின்வரும் விவரங்கள் தெரிவிக்கப்படுகின்றது. தமிழ்நாட்டில், அரசுப் பணிக்கான பணியாளர்களை தேர்வு செய்வதற்காக உள்ள தேர்வு முகமைகளான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் ஆகியவற்றின் மூலம், கடந்த இரண்டரை ஆண்டுகளில் வெவ்வேறு அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்காக, ஜனவரி 2024 வரை, 27,858 அரசுப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது தவிர, பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக, ஜனவரி 2024 வரை 32,709 நபர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். துறைவாரியான நியமனங்களைப் பொறுத்தவரை நீதித்துறையில் 5,981 பணியிடங்களும், பள்ளிக்கல்வித்துறையில் 1,847 பணியிடங்களும், வருவாய்த் துறையில் 2,996 பணியிடங்களும், சுகாதாரம் மற்றும் மக்கள் நல வாழ்வுத் துறையில் 4,286 பணியிடங்களும், ஊரக வளர்ச்சித் துறையில் 857 பணியிடங்களும், உயர் கல்வித் துறையில் 1,300 பணியிடங்களும், காவல்துறை, நகராட்சி நிர்வாகம், வேளாண்மை, சமூக நலம் மற்றும் சத்துணவு போன்ற அரசின் பிற துறைகளின் வாயிலாக 15,442 பணியிடங்களும் அந்தந்தத் துறைகளின் வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றி நேரடியாக நிரப்பப்பட்டன. இவ்வகையில் 32,709 இளைஞர்களுக்கு பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆக மொத்தம், இந்த அரசு பொறுப்பேற்ற இந்த மூன்று ஆண்டு காலத்திற்குள் (27,858 + 32,709) 60,567 நபர்களுக்கு அரசுப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமன்றி, தமிழ்நாட்டில் படித்த இளைஞர்களுக்கு பல்லாயிரக்கணக்கில் வேலை வாய்ப்பினை உருவாக்கிட உலக முதலீட்டாளர்களும் நடத்தப்பட்டது. இம்மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக நம் மாநிலத்தின் இளைஞர்களுக்கு இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை உருவாக்கிட தமிழ் நாடு அரசு வழிவகை செய்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். ஆனால், ஓய்வு பெற்றவர்களின் எண்ணிக்கையில் பாதிக்கும் குறைவாக 24,879 பேருக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்பட்டிருக்கிறது. ஒப்பீட்டளவில் தமிழக அரசு பொறுப்பேற்ற போது இருந்ததை விட இப்போது அரசு பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில் அரசுத் தரப்பில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சி - 23 வயதில் சிவில் நீதிபதியான விவசாய கூலித் தொழிலாளியின் மகன்
ஜி.செல்லமுத்து
திருச்சி
2024-02-18 19:22:00
திருச்சி: திருச்சி மாவட்டம் குண்டூர் அருகே உள்ள அயன்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளியின் மகனான பாலமுருகன் (23) சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ளார். மாநில அளவில் 33வது இடத்தையும், திருச்சி மாவட்டத்தில் முதலிடமும் பிடித்துள்ளார். எளிய ஓட்டு வீட்டில் படித்து நீதிபதியான இவரை அப்பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் பலரும் நேரில் சென்று பாராட்டி வருகின்றனர். தமிழ்நாட்டில் கீழமை நீதிமன்றங்களில், காலியாக உள்ள 245 சிவில் நீதிபதி பணியிடங்களுக்கு தேர்வினை அண்மையில் நடத்தியது. இதில், 6031 ஆண்களும், 6005 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 12,037 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான முதல் நிலை தேர்வு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 19-ம் தேதி சென்னை, மதுரை , திருச்சி உள்ளிட்ட 9 இடங்களில் தேர்வு மையங்களில் நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மெயின் தேர்வு நவம்பரில் நடந்தது. முதல்நிலை தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்முக தேர்வுக்கு தற்காலிகமாக 472 பேர் அழைக்கப்பட்டு, அதற்கான முடிவுகள் பிப்.10-ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, திருச்சி மாவட்டம் குண்டூர் அருகே உள்ள அயன்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளியான மாமுண்டி-விஜயா தம்பதியின் மகன் பாலமுருகன் (23) சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ளார். திருச்சி அரசு சட்டக்கல்லூரியில் இளநிலை சட்டம் பயின்ற இவர், ஏழ்மை நிலையை கருதி விவசாய கூலி தொழிலுக்கு சென்ற வந்தார். ஓய்வு நேரங்களில் தன் கனவாக சிவில் நீதிபதியாக வேண்டும் என்ற முனைப்பில் சட்ட பயில்வதையே நோக்கமாக கொண்டிருந்தார். இந்தநிலையில், நடப்பாண்டில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவீல் நிதிபதி தேர்வு முடிவில், பாலமுருகன் மாநில அளவில் 33வது இடத்தையும் திருச்சி மாவட்டத்திலேயே முதலிடம் பிடித்துள்ளார். எளிய ஓட்டுவீட்டு கொட்டகையில் படித்து நீதிபதியான இவரை அப்பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் பலரும் நேரில் சென்று பாராட்டி வருகின்றனர். பயிற்சி காலத்திற்குப் பின்னர் நீதிபதியாக பதவியேற்க உள்ளார்
‘விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கும் திமுக அரசு’ - இபிஎஸ் பேச்சு @ மயிலாடுதுறை
வீ.தமிழன்பன்
மயிலாடுதுறை
2024-02-18 19:06:00
மயிலாடுதுறை: விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கும் அரசாக திமுக அரசு உள்ளது என அதிமுக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி கூறியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பல்வேறு அரசியல் கட்சிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி இன்று (பிப்.18) நடைபெற்றது. இதில் புதிதாக கட்சியில் இணைந்தோரை வரவேற்று, கவுரவித்தப் பின்னர் பழனிசாமி பேசியது: “அதிமுக ஆட்சிக் காலத்தில், வாக்குகளை நோக்கமாக கொள்ளாமல், மக்களின் நலன் கருதி, மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன. சீர்காழியை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் கோட்டம் உருவாக்கப்பட்டது. டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. மீத்தேன் திட்டம் வருவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர் இன்றைய முதலவர் மு.க.ஸ்டாலின். ஆனால் அதை தடுத்து நிறுத்தியது அதிமுக அரசு. டெல்டா மாவட்டங்களில் பல ஆண்டுகளாக தூர் வாரப்படாமல் இருந்த நீர் நிலைகளை தூர்வாரும் வகையில் குடிமராமத்து திட்டம் என்ற சிறப்பான திட்டத்தை அதிமுக அரசு செயல்படுத்தியது. தூர் வாரிய மண்ணை விவசாயிகளே பயன்படுத்திக் கொண்டனர். அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் அதிகபட்சமாக விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீடு இழப்பீட்டுத் தொகை பெற்றுத்தரப்பட்டது. நாட்டிலேயே அதிகபட்சமாக 50 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.9,400 கோடி இழப்பீட்டுத் தொகை பெற்றுத்தரப்பட்டது. குறுவை சாகுபடிக்காக முதல்வர் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறந்து வைத்தார். ஆனால் கர்நாடகத்திலிருந்து தண்ணீரை தொடர்ந்து பெற முடியாமல், 3.5 லட்சம் ஏக்கர் குறுவை பயிர்கள் நீரின்றி காய்ந்து பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு காப்பீட்டுத் தொகை பெற்றுத்தர முதல்வர் தவறிவிட்டார். காப்பீடு இழப்பீட்டுத் தொகை பெற்றிருந்தால் ஹெக்டேருக்கு ரூ.84 ஆயிரம் கிடைத்திருக்கும். விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கும் அரசாக திமுக அரசு உள்ளது.பிரதமர் வீடுகட்டும் திட்டத்தை மத்திய அரசு கைவிட்டுவிட்டது. மாநில அரசின் வீடுகட்டும் திட்டமும் கைவிடப்பட்டுள்ளது. அதிமுக கொண்டு வந்த பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டமும் கைவிடப்பட்டது. அதிமுக கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்களையெல்லாம் கைவிடுவதுதான் திமுக அரசின் சாதனையாக உள்ளது. ஆட்சிக்கும் வந்ததும் முதல் கைழுத்திட்டு, ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறியவர்கள், பல லட்சம் கையெழுத்துப் பெற்று, அதை சேலம் மாநாட்டு திடலில் வீசிச் சென்றதை பார்த்தோம். ஆனால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை அரசுப் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு அதிமுக அரசால் கொண்டு வரப்பட்டு, இன்று அரசுப் பள்ளி மாணவர்கள் அதிகமானோர் மருத்துவம் படித்து வருகின்றனர். 3 ஆண்டுகளில் எந்தவொரு மக்கள் நலத்திட்டத்தையும் திமுக அரசு கொண்டுவரவில்லை. சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டணம் என அனைத்தும் உயர்த்தப்பட்டுள்ளன. பாஜகவும் கூட்டணி இல்லை என அதிமுக சொன்ன பின்னர், இஸ்லாமியர்களை அழைத்து கோரிக்கைகள் குறித்து முதல்வர் பேசுகிறார். 3 ஆண்டுகளாக சிறுபான்மையினர்களின் கோரிக்கைகள் குறித்து பேசாதது ஏன்? சிறுபான்மை மக்களுக்கு திமுக கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்ற வேண்டும் என அதிமுக வலியுறுத்தியப் பின்னரே முதல்வர் அழைத்துப் பேசுகிறார். சிறுபான்மையினர் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியுள்ளது. திமுக சிறுபான்மை மக்களை ஏமாற்றி வருகிறது. திமுக ஆட்சியில் வெறும் பேச்சு மட்டும்தான் உள்ளது. செயலில் எதுவும் இல்லை. வரும் மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும். காவிர் நீர் உரிமை தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பை கூட பாதுகாக்க முடியாத அரசாக திமுக அரசு உள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திமுக, கர்நாடகத்திலிருந்து தண்ணீரை கேட்டுப் பெற முடியவில்லை. இவற்றையெல்லாம் செய்யத் தவறிய, மக்கள் நலனில் அக்கறை இல்லாத திமுக அரசுக்கு வரும் மக்களவைத் தேர்தலில் மக்கள் தண்டனை கொடுக்க வேண்டும். அப்போதுதான் தமிழகத்தை பாதுகாக்க முடியும் என்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: "வரும் மக்களவைத் தேர்தலில் தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை. அதிமுக தலைமையில் சிறப்பான கூட்டணி அமையும். கூட்டணி அமைந்த பிறகு ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படும். மேகேதாட்டு பிரச்சினை குறித்து ஏற்கெனவே அறிக்கை மூலம் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றார். முன்னதாக அவர் வைத்தீஸ்வரன் வைத்தியநாதசுவாமி கோயிலில் வழிபாடு செய்தார். முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், அதிமுக மாவட்டச் செயலாளர் எஸ்.பவுன்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்டத்தில் ‘மாஸ்டர் பிளான்’ வரைவு திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல்
ஒய்.ஆண்டனி செல்வராஜ்
மதுரை
2024-02-18 18:29:00
மதுரை: மதுரை மாநகராட்சி உள்பட மதுரை மாவட்டத்தில் 2 நகராட்சிகள், 4 டவுன் பஞ்சாயத்துகள், 316 கிராம பஞ்சாயத்துகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட ‘மாஸ்டர் பிளான்’ வரைவு திட்ட அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இதனால், நகர்பகுதிகள் 147.97 சதுர கி.மீ., தொலைவுக்கு விரிவடைவதால் சென்னை, கோவை மாநகரங்களை போல் தொழில் வளமும், வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு நகரத்துக்கும் அதன் எதிர்காலத்தை மேம்படுத்துவதற்காக ‘மாஸ்டர் பிளான்’ திட்டம் உருவாக்கப்படுகிறது. இந்த திட்டம் தமிழகத்தில் 1971ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. ஆனால், கடந்த காலத்தில் இந்த மாஸ்டர் பிளான் திட்டம், ஊட்டி, கொடைக்கானல் தவிர மற்ற நகரங்களில் தீவிரமாக செயல்படுத்தப்படவில்லை. அதனால், குடியிருப்பு பகுதிகள் காலப்போக்கில் வர்த்தகப்பகுதியாக மாறியதால் நகர்பகுதியில் சரக்கு வாகனங்கள் வந்து செல்வதால் தேவையற்ற போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பும், சுற்றுச்சூழல் சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியில் கடந்த 1994ம் ஆண்டு 72 வார்டுகளில் ‘மாஸ்டர் பிளான்’ திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் ஒவ்வொரு 5 முதல் 10 ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். ஆனால், இந்த நடைமுறைப் பின்பற்றப்படாததால் மதுரை மாநகராட்சி இந்த திட்டத்தால் எந்த முன்னேற்றமும் அடையவில்லை. குடியிருப்பு பகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் தற்போது வர்த்தக நிறுவனங்கள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் பெருகிவிட்டதால் நகரப்பகுதியில் நீடிக்கும் போக்குரவத்து நெரிசலால் மக்கள் வசிக்க முடியாத பரிதாபம் ஏற்பட்டுள்ளது. அதனால், புறநகர் பகுதிகளில் வீட்டுமனைகளுக்கான ரியல் எஸ்டேட் தொழில் கொடி கட்டிப்பறக்கிறது. ஆனால், தொழில் வளம் பெருகவில்லை. இந்நிலையில் மதுரை மாநகராட்சி உள்பட மாவட்டத்தில் உசிலம்பட்டி, மேலூர் ஆகிய 2 நகராட்சிகள், 4 டவுன் பஞ்சாயத்துகள், 316 கிராம பஞ்சாயத்துகளை ஒருங்கிணைத்து 147.97 சதுர கி.மீ., தொலைவுக்கு மாஸ்டர் பிளான் திட்டம் நிறைவேற்றுவதற்காக உருவாக்கப்பட்ட வரைவு திட்ட அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இந்த திட்டத்தில் மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளில் முதன்மையாக சிறப்பு கவனம் கொடுத்து ‘மாஸ்டர் பிளான்’ திட்டம் உருவாக்கப்படுகிறது. ‘மாஸ்டர் பிளான்’ திட்டம் மதுரை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டால் மதுரை மாநகராட்சி மட்டுமின்றி அருகில் உள்ள சிறிய நகரங்கள், ஊர்கள் அனைத்தும் பெரும் முன்னேற்றம் அடையும். மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்பட்டு அனைத்து வசதிகளும் கிடைக்கும். வர்த்தக அளவில் தென் மாவட்டங்களிலிருந்து எளிதில் பொருள்கள் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய முடியும் என்பது உள்ளிட்ட பல்வேறு எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி நகரமைப்புப்பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: மதுரை மாநகராட்சியில் 30 ஆண்டுக்குப் பிறகு, 100 வார்டுகளில் ‘மாஸ்டர் பிளான்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில், இடம்பெறும் மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்சாயத்து, கிராம பஞ்சாயத்துப் பகுதியில் எந்தெந்த பகுதிகள் வீட்டுமனைகள், வர்த்தக மனைகள் என்பது அடையாளப்படுத்தப்படும். அதுபோல், வீட்டுமனைகளும், வர்த்தகப்பகுதிகளும் இணைந்த (Mixer Zone) இடங்களும் உருவாக்கப்படும். சாலையோர வீட்டு மனைகள், வர்த்தகப்பகுதியாக அறிவிக்கப்படும். தியேட்டர்கள், மால்கள், வணிக வளாகங்கள், தொழிற்சாலை பகுதிகள் போன்றவை வகைப்படுத்தப்படும். இந்த மாற்றங்கள், சர்வே எண், தனியார் நிலமாக இருந்தால் அதன் உரிமையாளர்கள் பெயர், அரசு நிலமாக இருந்தால் அதன் நிலை வகைப்பாடுடன் குறிப்பிடப்படும். அதனால், பிற்காலத்தில் யாரும் வீட்டுமனைக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை வணிகப் பகுதிகளாக மாற்ற முடியாது. இந்த திட்டத்தில் மாநகராட்சிக்கு அருகில் உள்ள புறநகர் கிராம பகுதியில் புதிதாக கூடுதல் தொழிற்சாலைப் பகுதிகள் உருவாக்கப்படும். இதனால், கிராமப்புற படித்த, படிக்காத இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள். தற்போது தொழில்துறையை பொறுத்தவரையில் சென்னை, கோவைக்கு பிறகு மற்ற நகரங்கள் வளர்ச்சிப்பெறவில்லை. அதற்கு தொழில் நிறுவனங்கள் வருவதற்கான இடங்களை அரசால் கண்டுபிடித்துக் கொடுக்க முடியவில்லை. தற்போது மாஸ்டர் பிளான் திட்டத்தில் தொழிற்சாலைகளுக்கான இடமும் ஒதுக்கப்படுவதால் இந்த திட்டத்தால் மதுரையில் தொழில்வளம் வளர்ச்சிப்பெற வாய்ப்புள்ளது. இந்த மாஸ்டர் பிளானை செயல்படுத்துவதற்கு முன் பொதுமக்கள், தொழில் முனைவோர்களிடம் கருத்துக்கேட்பு நடத்தப்படும், ’’ என்றனர். ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டமும், இதுபோல்தான் பெரிய எதிர்பார்ப்பை மதுரையில் ஏற்படுத்தியது. கடைசியில் அது நகர வளர்ச்சிக்கு கொஞ்சமும் உதவாமல் அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி விரயமானது. அதுபோல், இந்த திட்டத்தை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் கண்துடைப்புக்கு நிறைவேற்றாமல் பொறுப்பை உணர்ந்து நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
விருதுநகர் | பட்டாசு ஆலையில் வெடி விபத்து
இ.மணிகண்டன்
விருதுநகர்
2024-02-18 18:10:00
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் அருகே பட்டாசு ஆலையில் இன்று திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் அருகே உள்ள ஓ.கோவில்பட்டியில் சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த சுந்தரலட்சுமி என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதிபெற்று இயங்கும் இந்த பட்டாசு ஆலையில் 30க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இன்று பிற்பகல் இந்த பட்டாசு ஆலையில் மருந்துகள் வைக்கப்பட்டிருந்த அறையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. மேலும், அடுத்தடுத்து இருந்த இரு அறைகளும் இடிந்து தரைமட்டமாயின. இன்று விடுமுறை தினம் என்பதால் தொழிலாளர்கள் யாரும் பணிக்கு வரவில்லை. இதனால் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தகவலறிந்த விருதுநகர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கட்டிட இடிபாடுகளை அகற்றி தீயை அணைத்தனர். ஆமத்தூர் போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தியதில், வெப்பம் காரணமாக ரசாயன மாற்றம் ஏற்பட்டு மருந்துகள் வெடித்துள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த வெடி விபத்து குறித்து ஆமத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒற்றை யானை தாக்கி 2 பெண்கள் உயிரிழப்பு: உறவினர்கள் சாலை மறியல் @ ஓசூர்
கி.ஜெயகாந்தன்
ஓசூர்
2024-02-18 18:07:00
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே ஒன்றை யானை தாக்கி 2 பெண்கள் உயிரிழந்ததை கண்டித்து தளி எம்எல்ஏ மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். கர்நாடக மாநிலம் பன்னர் கட்டா உயிரியல் பூங்காவிலிருந்து உணவு தண்ணீர் தேடி கடந்த டிசம்பர் மாதம் 150-க்கும் மேற்பட்ட யானைகள் தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி ஆகிய வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளன. இந்த யானைகள் வனப்பகுதியையொட்டி விளை நிலங்களை சேதப்படுத்துவது மட்டும் அல்லாமல், மனிதர்களையும் தாக்கி வருகிறது. இதனால் யானைகளை மீண்டும் கர்நாடக மாநில வனத்துக்கு இடம்பெயர செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் வனப்பகுதியிலிருந்து கூட்டத்திலிருந்து பிரிந்து வந்த ஒற்றை யானை ஒன்று தேன்கனிக்கோட்டை நகருக்குள் புகுந்து ஒவ்வொரு சாலையாக இரவு முழுவதும் சுற்றி திரிந்தது. பின்னர் வனத்துறையினர் அருகே உள்ள வனத்துக்கு விரட்டினர். பின்னர் அந்த ஒற்றை யானை இன்று அதிகாலை தேன்கனிக்கோட்டை அடுத்த அந்நியாலம் கிராமத்துக்குள் புகுந்து, ஆனந்த் என்பவர் மனைவி வசந்தம்மா (37) என்பவரை தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலியே உயிரிழந்தார். இதேபோல் அப்பகுதியில் இருந்த பசுமாடுகளை தாக்கியதில் 2 மாடுகள் உயிரிழந்தன. மேலும் அதே பகுதியை சேர்ந்த 2 பேரை தாக்கியது. இதனைத் தொடர்ந்து அந்த ஒற்றை யானை தாசரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரது மனைவி அஸ்வத்தம்மா (40) என்பவர் விவசாயப் பணியில் ஈடுப்பட்டிருந்தபோது, ஒற்றை யானை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இருவர் உடலையும் வனத்துறையினர் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த 2 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர் ஒரே நாளில் யானை தாக்கி 2 பெண்கள் உயிரிழந்த சம்பவத்தையடுத்து தேன்கனிக்கோட்டை அதனை சுற்றி உள்ள பொதுமக்கள் மற்றும் தளி எம்எல்ஏ ராமசந்திரன் ஆகியோர் வனத்துறையை கண்டித்தும், ஒற்றை யானையை கும்கி வைத்து பிடிக்க வேண்டும், யானைகளிடமிருந்து பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். உரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதேபோல் தேன்கனிக்கோட்டை வனத்துறை அலுவலகத்தையும் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த டிஎஸ்பி முரளி தலைமையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். பின்னர் தருமபுரி மாவட்ட வன அலுவலர் பொறுப்பு அப்பல நாயுடு, மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பின்னர் நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு மறியல் கைவிடப்பட்டது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வனத்துறை சார்பில் முதல்கட்டமாக ரூ.50 ஆயிரம் நிவாரணத் தொகையை எம்எல்ஏ ராமசந்திரன் வழங்கினார். சுமார் 4 மணி நேரத்துக்கு மேல் நடந்த இந்த மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தளி எம்எல்ஏ ராமச்சந்திரன் கூறும்போது, “நான் ஏற்கெனவே நேற்றைய தினம் கூட சட்டமன்ற கூட்டத்தில் தளி பகுதியில் வன விலங்குகளால் உயிர் சேதம் அதிக அளவில் ஏற்படுகிறது. இதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்துள்ளேன். மின்வேலி அமைக்கும் தூரத்தை அதிகப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன்” என்று அவர் கூறினார் இது குறித்து வனத்துறையினர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஜவளகிரி அருகே கும்பளாபுரம் பகுதியில் ஒற்றை யானை ஆக்ரோஷமாக சுற்றித் திரிகிறது. இதனை வனத்துறையினர் கண்காணித்து கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.தேவையின்றி வெளியே வரவேண்டாம் எனக் கூறப்பட்டுள்ளது
“தடைகளைத் தாண்டி.. வளர்ச்சியை நோக்கி...” - 2024-25 தமிழக பட்ஜெட் லோகோ வெளியீடு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-18 17:37:00
சென்னை: 2024-25 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை “தடைகளைத் தாண்டி” எனும் தலைப்பில் பேரவையில் பெருமிதத்துடன் அளிக்கப்படுவதைக் குறிக்கும் சின்னமாக நிதிநிலை அறிக்கையின் முத்திரைச் சின்னம் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது.“யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே” எனும் பழமொழிக்கேற்ப வரும் ஆண்டின் நிதிநிலை அறிக்கையின் வெற்றியை முன்னே முழங்கிடும் முத்துச் சின்னமாக இது விளங்கிடும் என்பது திண்ணம், என்று தமிழக அரசு கூறியுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “என்னருந் தமிழ்நாட்டின் கண் எல்லோரும் கல்வி கற்றுப் பன்னருங் கலை ஞானத்தால் பராக்கிரமத்தால் அன்பால் உன்னத இமயமலை போல் ஓங்கிடும் கீர்த்தி எய்தி இன்புற்றார் என்று மற்றோர் இயம்பக் கேட்டிடல் எந்நாளோ?” என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஏங்கிய காலம் நிறைவேறி; இன்று தமிழ்நாடு உயர்கல்வியில் முன்னணி மாநிலம். மருத்துவத் துறையில் முன்னணி மாநிலம். தொழில்துறையில் முன்னணி மாநிலம். இந்தியப் பொருளாதாரத்தில் உயர்ந்துள்ள முன்னணி மாநிலம். வேளாண்மையில் முன்னணி மாநிலம். விளையாட்டுத் துறையில், இளைஞர்தம் ஆற்றல் நிறைந்துள்ளதில் முன்னணி மாநிலம், என எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் கண்டு எத்திசையிலும் புகழ் பதித்துத் திகழ்கின்றது. ஏடும், நாடும் இதர மாநிலங்களும் இதற்குச் சான்று பதிக்கின்றன. இந்நிலையில் ஆட்சிப் பொறுப்பேற்ற மே 2021-ஆம் ஆண்டில் ஆட்டிப்படைத்த கரோனாவை முறியடித்து, காலமல்லாக் காலத்தே புயலும், மழையும், வீசி கடும் சேதங்களை விளைவித்த நிலையிலும், மக்களின் துயர் நீக்கி, நமது மாநிலத்துக்கு இயல்பாக வரவேண்டிய நிதிகளும், உதவிகளும், ஒத்துழைப்பும் கிடைக்காமல் தடைகள் பல தொடர்கின்ற நிலையிலும், முறையான, சிதையாத, கட்டுப்பாடான நிர்வாக நடைமுறைகளால் தடைகளை எல்லாம் தகர்ந்தெறிந்து, தொடர்ந்து முன்னேற்றத் திசையினில் தமிழகத்தினை செலுத்திடும் நோக்கில் இந்த திராவிட மாடல் அரசு “எல்லோர்க்கும் எல்லாம்” என்ற இலக்கினை எளிதில் எய்திடும் வண்ணம் இன்று நான்காம் ஆண்டில் நிதிநிலை அறிக்கையைப் பேரவையில் அளிப்பதில் பெருமிதம் கொள்கிறது. தமிழக அரசின் 2024-25 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை “தடைகளைத் தாண்டி” எனும் தலைப்பில் பேரவையில் பெருமிதத்துடன் அளிக்கப்படுவதைக் குறிக்கும் சின்னமாக நிதிநிலை அறிக்கையின் முத்திரைச் சின்னம் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது. “யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே” எனும் பழமொழிக்கேற்ப வரும் ஆண்டின் நிதிநிலை அறிக்கையின் வெற்றியை முன்னே முழங்கிடும் முத்துச் சின்னமாக இது விளங்கிடும் என்பது திண்ணம், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'மீண்டும் மீண்டும் குற்றம்புரிபவர்' பட்டியலில் 3 தமிழக மீனவர்கள்: முதல்வர் ஸ்டாலின் வேதனை
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-18 17:05:00
சென்னை: “தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து கைது நடவடிக்கைக்கு உள்ளாவது மிகுந்த கவலையளிக்கிறது. கடந்த இரண்டு மாதங்களில், இத்தகைய கைது நடவடிக்கைகள் மிகவும் அதிகரித்திருக்கின்றன. இக்காலத்தில் 69 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதைவிட அதிர்ச்சியளிப்பது, மூன்று மீனவர்களை 'மீண்டும் மீண்டும் குற்றம்புரிபவர்' பட்டியலில் அநியாயமாகச் சேர்த்து விடுவிக்காமல் தொடர்ந்து சிறையில் அடைத்திருப்பதுதான்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் தனது சமூக வலைதள பக்கத்தில், “தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து கைது நடவடிக்கைக்கு உள்ளாவது மிகுந்த கவலையளிக்கிறது. கடந்த இரண்டு மாதங்களில், இத்தகைய கைது நடவடிக்கைகள் மிகவும் அதிகரித்திருக்கின்றன; இக்காலத்தில் 69 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதைவிட அதிர்ச்சியளிப்பது என்னவென்றால், மூன்று மீனவர்களை 'மீண்டும் மீண்டும் குற்றம்புரிபவர்' (habitual offender) பட்டியலில் அநியாயமாகச் சேர்த்து விடுவிக்காமல் தொடர்ந்து சிறையில் அடைத்திருப்பதுதான். இது நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பது மட்டுமல்லாமல், அவர்களது படகுகளை நாட்டுடைமையாக்கும் இலங்கை அரசின் செயல் சிறுகச் சிறுகச் சேர்த்த சேமிப்புகளையும் அழிக்கிறது. இந்தியப் பிரதமரும், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் உடனடியாக இதில் தலையிட்டு நமது மீனவர்கள் விடுதலை செய்யப்படுவதையும் அவர்களது படகுகள் விடுவிக்கப்படுவதையும் உறுதிசெய்திட வேண்டும் எனத் தமிழக மக்கள் அனைவரின் சார்பாகவும் நான் கேட்டுக்கொள்கிறேன். இதனை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதி, நமது மீனவர்களின் நலனைக் காக்கும் வகையில் உறுதியான நடவடிக்கையை எடுத்திட வேண்டும். ஏனென்றால், அவர்கள் தமிழர்கள் மட்டுமல்ல, பெருமைமிகு இந்தியர்களும் கூட” என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை | ரூ.29.93 கோடி மதிப்பிலான காசநோய், நெஞ்சக மருத்துவம் மற்றும் தொற்றுநோய் பிரிவு கட்டிடம் திறப்பு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-18 16:46:00
சென்னை: ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் 29.93 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காசநோய் மற்றும் நெஞ்சக மருத்துவம் மற்றும் தொற்றுநோய் பிரிவுக் கட்டிடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்.18) திறந்து வைத்தார். இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் 205 படுக்கை வசதிகளுடன், மொத்தம் 77,554 சதுர அடி பரப்பளவில் தரை மற்றும் ஐந்து தளங்களுடன் 29.93 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காசநோய் மற்றும் நெஞ்சக மருத்துவம் மற்றும் தொற்றுநோய் பிரிவுக் கட்டடத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். இக்கட்டிடத்தின் தரை தளத்தில், வரவேற்பு மற்றும் தகவல் அறை, நோயாளிகள் காத்திருப்பு பகுதி, புறநோயாளிகள் பிரிவு, கதிரியக்க நோய் கண்டறிதல் பிரிவு, ஆய்வகம், காய்ச்சல் புற நோயாளிகள் பிரிவு (ஆண்கள் மற்றும் பெண்கள்), தொற்று அறுவை அரங்கம் போன்ற வசதிகளும்; முதல் தளத்தில், முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்ட அறை, உடன்இருப்போர் காத்திருப்பு அறை, ஆலோசனை அறை, மருத்துவ செய்முறை விளக்க அறை, நுரையீரல் செயல்திறன் முன்னேற்றும் சிகிச்சை மையம், தீவிர சிகிச்சைப் பிரிவு, இடைநிலை - தீவிர சிகிச்சைப் பிரிவு, சிகிச்சை அறை போன்ற வசதிகளும்; இரண்டாம் தளத்தில், உணவு வழங்கும் பகுதி, உடன் இருப்போர் காத்திருக்கும் அறை, நுரையீரல் செயல்திறன் ஆய்வகம், தொற்றுப் பிரிவு – ஆண்கள் மற்றும் பெண்கள், மூச்சுக்குழாய் உள்நோக்கி பரிசோதனை அறை, மருந்துக்கட்டு அறை, சலவை நிலையம், நுரையீரல் நோய்கள் பிரிவு – ஆண்கள் மற்றும் பெண்கள் போன்ற வசதிகளும்; மூன்றாம் தளத்தில், நூலகம், நித்திரை மதிப்பீடு ஆய்வகம், நுரையீரல் இடையீடு அரங்கம், அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய கவனிப்பு அறை, நோய் – நுண்கிருமி நீக்கும் அறை, ஆண்கள் மற்றும் பெண்கள் சிகிச்சைப் பிரிவுகள், நுரையீரல் நோய்கள் பிரிவு போன்ற வசதிகளும்; நான்காம் தளத்தில், பொது ஆய்வகம், NIRT அறை, NTEP அறை, செய்முறை விளக்க அறை, சளி பரிசோதனை வார்டு போன்ற வசதிகளும்; ஐந்தாம் தளத்தில், துணிகள் சேமிப்பு அறை, வயிற்றுபோக்கு சிகிச்சைப் பிரிவு, FLU வார்டு, டெங்கு காய்ச்சல் சிகிச்சை பிரிவு – ஆண்கள் மற்றும் பெண்கள், நாய்க்கடி சிகிச்சை பிரிவு போன்ற வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இக்கட்டடத்தின் அனைத்து தளங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பிடம், பொது கழிப்பிடம், 3 மின்தூக்கிகள், சாய்வுதளம் போன்ற பிற வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்போசிஸ் நிறுவன அறக்கட்டளையின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து 30 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் அரசு கஸ்தூரிபா காந்தி தாய் சேய் நல மருத்துவமனைகளின் பயன்பாட்டிற்காக வழங்குதல் இன்போசிஸ் நிறுவன அறக்கட்டளையின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து சென்னை, இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் இருதய மகப்பேறியல் துறையில் நிறுவப்பட்டுள்ள 10 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய கேத்லேப் (Cath Lab) கருவி மற்றும் சென்னை, அரசு கஸ்தூரிபா காந்தி தாய் சேய் நல மருத்துவமனையின் நான்காவது தளத்தில் நிறுவப்பட்டுள்ள 20 கோடி ரூபாய் மதிப்பிலான அனைத்து அதிநவீன, உயர் சிகிச்சை மற்றும் உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை தமிழக முதல்வர் அம்மருத்துவமனைகளின் பயன்பாட்டிற்காக வழங்கினார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மரு. சங்குமணி, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் மரு. தேரணிராஜன், அரசு கஸ்தூரிபா காந்தி தாய் சேய் நல மருத்துவமனை இயக்குநர் மரு. டி.எஸ். மீனா, இன்போசிஸ் நிறுவனத்தின் துணை தலைவர்பி.என். அனில்குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பதவி உயர்வில் 4% இடஒதுக்கீடு; மாற்றுத்திறனாளி அலுவலர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?
சுப.ஜனநாயகச் செல்வம்
மதுரை
2024-02-18 16:14:00
மதுரை: மாற்றுத்திறனாளிகள் நலன்களுக்காகவும், சமூக நீதிக்காக பாடுபடும் தமிழக அரசு, மாற்றுத்திறனாளி அரசு அலுவலர்களுக்கு பதவி உயர்வில் 4% இட ஒதுக்கீடு கட்டாயம் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் 2021-ல் தீர்ப்பளித்தும் தமிழகத்தில் இதுவரை நடைமுறைப் படுத்தாதால் மாற்றுத்திறனாளிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். தமிழக சட்டப்பேரவையில் அறிவிப்பாரா என எதிர்பார்த்துள்ளனர் மாற்றுத்திறனாளி அரசு அலுவலர்கள். இந்திய நாடாளுமன்றத்தில் 1995-ம் ஆண்டு இயற்றப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சட்டம் பிரிவு 34-இன் படி மாற்றுத்திறனாளிகளின் சம உரிமை பாதுகாக்கப்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்றத்தில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக நடந்த வழக்கில் 2021-ல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இறுதித் தீர்ப்பை மூன்று நீதிபதிகள் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் வழங்கியது. அதன்படி மத்திய அரசு பணியிலுள்ள மாற்றுத் திறனாளி அலுவலர்களுக்கு பதவி உயர்வில் 4% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இத்தீர்ப்பை ஏற்று ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் உள்பட பல மாநிலங்களில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், சமூக அக்கறையுடன் வழங்கப்பட்டுள்ள உச்ச நீதிமன்ற தீர்ப்பை தமிழகத்தில் சமூக நீதியை காக்கும் திமுக அரசு இதுவரை செயல்படுத்தாமல் உள்ளது. இதனால் சில மாற்றுத் திறனாளி அரசு அலுவலர்கள் சென்னை, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் முக்கியத்துவம் உணர்ந்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி, தமிழகத்தில் அரசு பணியில் இருக்கும் மாற்றுத்திறனாளி அலுவலர்களுக்கு பதவி உயர்வில் 4 % இட ஒதுக்கீடு 3 மாதத்திற்குள் வழங்க வேண்டும் என 2023 ஜனவரியில் தீர்ப்பு வழங்கினார். ஆனால் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தவேண்டிய தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை நடைமுறைப்படுத்தாமல், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. ஆனால் 7 மாதமாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக அரசு வாய்தா வாங்கி வருகிறது. இதனால் தமிழகத்திலுள்ள மாற்றுத்திறனாளி அரசு அலுவலர்கள் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் தங்களுக்கு நீதி மறுக்கப்படுவதாக மன வேதனையுடன் உள்ளனர். இதுகுறித்து மாற்றுத்திறனாளி அரசு அலுவலர்கள் கூறியதாவது: “உடலில் ஊனமுடையவர்களை வார்த்தைகளில் கூட ஊனப்படுத்தி விடக்கூடாது என எண்ணிய முன்னாள் முதல்வர் கருணாநிதி, உடல் ஊனமுற்றவர்களை மாற்றுத்திறனாளிகள் என அழைக்க அரசாணை பிறப்பித்தார். அவரது கொள்கை வழியில் செயல்படுவதாக கூறும் தமிழக அரசு மாற்றுத்திறனாளி அரசு அலுவலர்களுக்கு 4% இட ஒதுக்கீட்டில் பதவி உயர்வு வழங்க மறுப்பதன் காரணம் புரியவில்லை. தமிழக முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நலத்துறை உயரதிகாரிகள் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று மாற்றுத்திறனாளிகளுக்கும் சமூக நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.” என்றனர்.
விருதுநகர் வெடி விபத்து: 10 பேரின் குடும்பத்துக்கு நிவாரண உதவித் தொகை வழங்கல்
இ.மணிகண்டன்
விருதுநகர்
2024-02-18 15:56:00
விருதுநகர்: பட்டாசு ஆலையில் நேற்று (பிப்.18) ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்துக்கு ரூ.50.50 லட்சம் நிவாரண உதவித் தொகையை அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சாத்தூர் ராமச்சந்திரன், சி.வி.கணேசன் ஆகியோர் இன்று வழங்கினர். விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகே குண்டாயிருப்பில் விக்னேஷ் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் அவேராஜ், முத்து, ரமேஷ், கருப்பசாமி, குருசாமி, முனியசாமி, சாந்தா, முருகஜோதி, ஜெயா, அம்பிகா ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், ரெங்கம்மாள், சிவக்குமார், முத்துக்குமார், அன்னலட்சுமி ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதியும், பலத்த காயமடைந்தவர்களுக்கு சிகிச்சைக்கான நிவாரண உதவித் தொகையாக தலா ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதோடு, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என பிரதமர் மோடியும் நேற்று அறிவித்தார். அதையடுத்து, உயிரிழந்த 10 பேரின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் அறிவித்த நிவாரண நிதி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன், எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா, எம்எல்ஏக்கள் சீனிவாசன் (விருதுநகர்), ரகுராமன் (சாத்தூர்) ஆகியோர் முன்னிலையில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தொழிலாளர் துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர், உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரண நிதியாக தலா ரூ.3 லட்சமும், தொழிலாளர் நலத்துறை சார்பில் தலா ரூ.2 லட்சம் இழப்பீடும், ஈம சடங்கு உதவித்தொகையாக தலா ரூ.5 ஆயிரமும் என 10 குடும்பத்தினருக்கு தலா ரூ..5.05 லட்சம் வீதம் மொத்தம் ரூ.50.50 லட்சம் மதிப்பிலான நிவாரணத்தொகையை வழங்கினர். அப்போது, நிவாரணத் தொகை பெற்ற குடும்பத்தினர் தங்களின் வாழ்வாதாரத்துக்கு உதவுமாறும், அங்கன்வாடி, சமையல் பணி வழங்கி உதவுமாறும் அமைச்சர்களிடம் கோரிக்கை விடுத்தனர். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர்கள் அப்போது தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டியில், “வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ. 3லட்சம், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் நிவாரண உதவி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். அதன்படி, உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தற்போது நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும், தொழிலாளர் நலத்துறை சார்பில் தலா ரூ.2.05 லட்சமும் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நிரந்தர பணி வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். இதுபற்றி முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசென்று அங்கன்வாடி, சத்துணவுத் திட்டங்களில் சமையல் பணிகளில் கண்டிப்பாக முன்னுரிமை வழங்கப்படும்” என்று கூறினார். வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அளித்த பேட்டியில், “விருதுநகர் மாவட்டத்தில் ஆயிரத்து 200 மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. விதிமுறைகள் குறித்து வருவாய்த்துறைனரும் தொழிலாளர் துறையினரும் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். ஒரு சில பட்டாசு ஆலைகளில் விபத்து ஏற்படுகிறது. மனித தவறுகளால் விபத்துகள் ஏற்படுகிறது. விபத்துகளைத் தடுக்க விதிமுறைகள் கடுமையாக விதிக்கப்படுகின்றன. விதிமுறைகளை மீறிய 30 பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளன. தற்போது விபந்து நடந்த பட்டாசு ஆலையும் மூடப்பட்டுள்ளது. மேலும், கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு எதிர்காலத்தில் இதுபோன்று விபத்து நடக்காமல் தடுக்கப்படும்” என்று கூறினார்.
சூளகிரியில் அசுத்தமான நீரில் சுத்தம் செய்யப்படும் கீரை: சுகாதார ஆய்வாளர் எச்சரிக்கை
எஸ்.கே.ரமேஷ்
கிருஷ்ணகிரி
2024-02-18 15:48:00
கிருஷ்ணகிரி: சூளகிரி பகுதியில் அசுத்தமான நீரில் கீரை வகைகளைச் சுத்தம் செய்யும் வியாபாரிகளைச் சுகாதார ஆய்வாளர் எச்சரித்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும்பாலான மக்களின் பிரதானத் தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, தளி, ராயக்கோட்டை, வேப்பனப்பள்ளி, சூளகிரி உள்ளிட்ட பகுதிகளில் காய்கறி பயிர்களை விவசாயிகள் அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர். சந்தை வாய்ப்பு: இதில், சந்தை வாய்ப்பு மற்றும் விற்பனை வரவேற்பை அடிப்படையாகக் கொண்டு சூளகிரி, வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி சுற்று வட்டாரப் பகுதிகளில் குறுகிய காலப் பயிரான கீரை வகைகள், புதினா, கொத்தமல்லியை அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில், பெரும்பாலான வியாபாரிகள் நேரடியாக விளை நிலங்களுக்கு வந்து விவசாயிகளிடமிருந்து கீரை வகைகள் மற்றும் கொத்த மல்லி, புதினா ஆகியவற்றைக் கொள்முதல் செய்கின்றனர். இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் கீரை வகைகளை வாகனங்கள் மூலம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திர, கர்நாடக மாநில சந்தைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். துர்நாற்றம் வீசும் நீர்: விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் கீரை, புதினா, கொத்தமல்லி ஆகியவற்றை சந்தைகளுக்கு அனுப்பும் முன்னர் சூளகிரி-பேரிகை சாலையில் உள்ள துரை ஏரியில் தேங்கியுள்ள அசுத்தமான நீரில் சுத்தம் செய்து வாகனங்களில் ஏற்றி அனுப்பி வருகின்றனர். இந்த ஏரியில் மாசடைந்துள்ள நீரில் மீன்கள் உயிரிழந்து மிதப்பதுடன், தண்ணீர் துர்நாற்றம் வீசி வருகிறது. இந்த நீரில் கீரை வகைகளைச் சுத்தம் செய்வதைப் பார்க்கும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர். மேலும், இதைத் தடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். நோய் பாதிக்கும் அபாயம் - இது தொடர்பாக சூளகிரி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது: சூளகிரி - பேரிகை சாலையில் உள்ள துரை ஏரியில் அசுத்தமான நீரில், வியாபாரிகள் சிலர் கீரைகளை சுத்தம் செய்கின்றனர். இதனால், இதைப்பயன்படுத்தும் மக்களுக்கு நோய் பாதிக்கும் அபாயம் உள்ளது. இது தொடர்பாக சுகாதாரத் துறைக்கு புகார் தெரிவித்துள்ளோம். மேலும், இதைத் தடுக்க சுகாதாரத் துறை மூலம் இப்பகுதியில் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். இப்பகுதியில் ஆய்வு செய்து தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். ஆய்வும்..எச்சரிக்கையும்: இதனிடையே, சூளகிரி அரசு மருத்துவமனை சுகாதார ஆய்வாளர் தினேஷ் குமார் மற்றும் அலுவலர்கள் துரை ஏரியில் ஆய்வு செய்தனர். அப்போது, அங்குக் கீரை வகைகளைச் சுத்தம் செய்து கொண்டிருந்த வியாபாரிகளிடம், அசுத்தமான நீரில் சுத்தம் செய்யக் கூடாது என விழிப்புணர்வு செய்து, எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
திமுக சின்னத்தில் போட்டியிடமாட்டோம் என கூட்டணிக் கட்சிகள் கூறவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
செ.ஞானபிரகாஷ்
புதுச்சேரி
2024-02-18 15:40:00
புதுச்சேரி: தமிழகத்தில் வரும் மக்களவைத் தேர்தலின் போது திமுக சின்னத்தில் போட்டியிடமாட்டோம் என கூட்டணிக் கட்சிகளில் யாரும் கூறவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். புதுச்சேரியில் தியாகி சிங்காரவேலரின் 165-வது பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் சாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு திமுக சார்பில் இன்று மாலை அணிவித்த மரியாதை செலுத்திய அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “புதுவை மாநிலத்தில் பஞ்சுமிட்டாய்களில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப் பொருட்கள் கலந்த வண்ணம் இருப்பது தெரியவந்ததை அடுத்து தடை விதிக்கப்பட்டுள்ளது. அச்செய்தியை தமிழக சுகாதாரத்துறை அறிந்து பல தமிழக மாவட்டங்களில் பஞ்சு மிட்டாய்கள் சோதனைக்கு உள்படுத்தப்பட்டன. சோதனையில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப் பொருள்கள் இருந்ததை அறிந்து வண்ண பஞ்சு மிட்டாய்க்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டது. அதே நேரத்தில் வெண்மை பஞ்சுமிட்டாய்க்கு தடை விதிக்கப்படவில்லை. திராவிட மாடல் பிரிவினையை பேசுவதாக மத்திய நிதியமைச்சர் உண்மைக்கு மாறான கருத்தைத் தெரிவித்துள்ளார். தூங்குபவர்களை எழுப்பலாம், தூங்குவது போல நடிப்பவர்களை எழுப்பமுடியாது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மதுரையில் நில ஆர்ஜிதம் செய்யவில்லை என நிதியமைச்சர் கடந்த 2023 ஆம் ஆண்டு மக்களவையில் தெரிவித்தார். ஆனால், கடந்த 2019 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி மதுரையில் அடிக்கல் நாட்டினார். ஆர்ஜிதம் செய்யப்படாத நிலத்தில் பிரதமர் அடிக்கல் நாட்டியது தவறானது. நில ஆர்ஜிதம் செய்யாமல் அடிக்கல் நாட்டி இருந்தால் முதல் குற்றவாளி எடப்படி பழனிசாமி. அது தெரியாமல் பிரதமர் வந்து அடிக்கல் நாட்டி இருந்தால் அவரும் தவறுக்கு உரியவர். திமுக சின்னத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட மாட்டோம் என திமுக கூட்டணிக் கட்சிகள் யாரும் கூறவில்லை. புதுவை மக்களவைத் தேர்தலில் யார் போட்டியிடுவது என்பது பற்றி திமுக தலைவரே முடிவெடுப்பார் என்று தெரிவித்தார்.முன்னதாக அவருடன் திமுக மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா, எம்.எல்.ஏ.க்கள் அனிபால்கென்னடி, சம்பத் உள்ளிட்டோர் சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஒப்புகை சீட்டுகளை  எண்ணித்தான் தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும்: திருமாவளவன்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-18 14:34:00
சென்னை: "நாடாளுமன்ற பொதுத் தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும், 100 விழுக்காடு ஒப்புகை சீட்டுகளை எண்ணித்தான் தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி பிப்ரவரி 23-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்து வெற்றி பெறுவதற்கு பாஜக அரசு சதி செய்கிறது என்ற ஐயம் நாடு முழுவதும் மக்களிடையே எழுந்துள்ளது. அதற்கு இந்திய தேர்தல் ஆணையமும் துணை போகிறதா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. எனவே, ‘நாடாளுமன்ற பொதுத் தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும், 100 விழுக்காடு ஒப்புகை சீட்டுகளை எண்ணித்தான் தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும்’ என வலியுறுத்தி பிப்ரவரி 23 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். தற்போது நடைமுறையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. அதில் எளிதாக முறைகேடு செய்ய முடியும்; ஆளும் கட்சி தான் விரும்பிய வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய முடியும் என்று வல்லுநர்கள் மெய்ப்பித்துக் காட்டியுள்ளனர். மக்களுடைய சந்தேகத்தை வலுப்படுத்தும் வகையில் பாஜக அரசும் செயல்பட்டு வருகிறது. அதற்குத் தேர்தல் ஆணையமும் துணை போகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்திய ஜனநாயகத்தின் அடிப்படையாக உள்ள தேர்தல் முறையைச் சிதைப்பதற்கு நாம் அனுமதிக்க முடியாது. எனவே, வாக்குப்பதிவு எந்திரங்களை மட்டும் வைத்து தேர்தலை நடத்தக்கூடாது. மாறாக, எல்லா வாக்குப்பதிவு எந்திரங்களோடும் ஒப்புகைச் சீட்டினைப் பெறும் எந்திரமும் இணைக்கப்பட வேண்டும். அப்போதுதான், வாக்காளர் தான் விரும்பிய சின்னத்தில் வாக்களித்தபின்னர், தான் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்துகொள்ள முடியும். அந்த ஒப்புகைச் சீட்டினை வாக்குப் பெட்டியில் போடுதல் வேண்டும். அவற்றை எண்ணித்தான் தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும். இந்த கோரிக்கையைத்தான், "இண்டியா கூட்டணி" கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இதே கருத்தை முன்னாள் தேர்தல் ஆணையர் குரேஷி உட்பட பல அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் இதற்காக தலைநகர் டெல்லியில் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தப் போராட்டத்தை பல சிவில் சமூக அமைப்புகளும் ஆதரித்து பல்லாயிரக்கணக்கில் திரண்டு தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர்.ஆனால், பாஜக அரசு அதற்கு செவிசாய்க்காமல் தொடர்ந்து அதிகாரத்துவ மமதையோடு நடந்து கொள்கிறது. தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் ரத்து செய்து தலைமை நீதிபதிக்குப் பதிலாக ஒரு அமைச்சரை நியமித்துக் கொள்ள வகை செய்யும் வகையில் புதிய சட்டத்தை பாஜக அரசு கொண்டுவந்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்றான 'பெல் நிறுவனத்தின்' இயக்குனர்களாக பாஜகவினரே நியமிக்கப்பட்டிருக்கின்றனர். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தொடர்பாகத் தமது கருத்துக்களை எடுத்துக் கூறுவதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு இண்டியா கூட்டணி கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்ட போதும் இந்திய தேர்தல் ஆணையம் அவர்களை சந்திக்க மறுத்து வருகிறது. மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் தொடர்பாக வெளியிடப்படும் உண்மைகளை மக்களுக்குத் தெரியாமல் மறைக்கும் விதமாக அவற்றை சமூக ஊடகங்களிலிருந்து தேர்தல் ஆணையம் நீக்கி வருகிறது. கடந்த தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் இருந்த எண்ணிக்கைக்கும் ஒப்புகை சீட்டில் வந்த எண்ணிக்கைக்கும் பல இடங்களில் வேறுபாடுகள் இருந்தன. அதற்கான காரணம் தேர்தல் ஆணையத்தால் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. லட்சக்கணக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் காணாமல் போய் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது அதைப் பற்றியும் தேர்தல் ஆணையமோ, மத்திய அரசோ விளக்கம் எதையும் அளிக்கவில்லை. மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் பயன்படுத்தப்படும் ’சிப்’பில் பதிவு செய்யப்பட்ட விவரங்களை வெளியிலிருந்து மாற்றி அமைக்க முடியும் அதன் மூலம் தேர்தல் முடிவுகளை மாற்ற முடியும் என்பதை வல்லுநர்கள் நிரூபணம் செய்துள்ளனர். இதனால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலமாக நடத்தப்படும் தேர்தல் முறை மீது மக்கள் முற்றாக நம்பிக்கை இழந்துள்ளனர். எனவே, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை மட்டும் வைத்து தேர்தலை நடத்தக் கூடாது. வாக்குப்பதிவு எந்திரங்கள் எல்லாவற்றோடும் ஒப்புகைச் சீட்டு கருவியை இணைக்க வேண்டும்; வாக்களித்ததும் ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒப்புகைச்சீட்டினைத் தனியே ஒரு பெட்டியில் போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும். அந்த ஒப்புகைச் சீட்டுகளை எண்ணித்தான் தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும் என எல்லோரும் வலியுறுத்துகின்றனர். ஆனால், பாஜக அரசாங்கமோ, தேர்தல் ஆணையமோ இதற்கு எந்த பதிலையும் கூறவில்லை. ‘இந்தத் தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம்’ என்று பிரதமர் மோடியும், பாஜகவினரும் கூறி வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாஜக ஆட்சி மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கும் நிலையில், 400 இடங்களில் வெல்வோம் என்று அவர்கள் கூறுவது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் அவர்கள் முறைகேடு செய்யத் திட்டமிட்டு இருக்கிறார்கள் என்ற ஐயத்தை வலுப்படுத்துகிறது. பாஜகவின் இந்த சதித் திட்டத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் துணைபோகக்கூடாது. 100 சதவீதம் ஒப்புகை சீட்டை எண்ணித் தேர்தல் முடிவை அறிவிப்போம் என தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும். இதனை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் 23- 02- 2024 ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறோம். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தோழமைக் கட்சிகளின் பிரதிநிதிகளும், சனநாயக சக்திகளும் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். இந்திய தேர்தல் முறையைப் பாதுகாப்பது தான், இந்திய ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான அடிப்படையாகும். எனவே,நேர்மையாகத் தேர்தல் நடத்த வலியுறுத்துவோம். பாஜகவின் சதித் திட்டத்தை முறியடிப்போம், என ஜனநாயக சக்திகளை அறைகூவி அழைக்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.
பாஜக - அதிமுக முறிவால் சிறுபான்மையின மக்கள் மீது முதல்வர் அக்கறை: இபிஎஸ் விமர்சனம்
செய்திப்பிரிவு
சீர்காழி
2024-02-18 14:09:00
சீர்காழி: "அதிமுக பாஜகவில் இருந்து விலகிய உடனே, திமுக அரசு கிறிஸ்தவர்களை அழைத்து அவர்களுடைய குறைகளை கேட்டறிகிறது. 3 ஆண்டுகாலமாக கிறிஸ்தவ மக்கள் திமுகவின் கண்ணுக்குத் தெரியவில்லை. நாங்கள் பாஜகவில் இருந்து விலகிய பின்னர், முதல்வர் ஸ்டாலின், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களை அழைத்துப் பேசுகிறார். அவர்களுடைய கோரிக்கையைக் கேட்கிறார். அதிமுக ஆட்சியில்தான் இஸ்லாமியர்களுக்கான எண்ணற்ற நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டது"என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: "அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வந்த திட்டங்களில் ஒன்றாவது, திமுக ஆட்சியின் மூன்றாண்டு கால ஆட்சியில் கொண்டு வரப்பட்டதா? . திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, சொத்து வரி, வீட்டு வரி, கடை வரி, குடிநீர் கட்டணத்தை உயர்த்தி விட்டனர். மின் கட்டணத்தை 52 சதவீதம் உயர்த்திவிட்டனர். மின்சாரம் எப்போது வருகிறது, எப்போது போகும் என்பதே தெரியவில்லை. அப்படியான நிலைதான் இன்றைக்கு இருக்கிறது. டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்த அதிமுக அரசு. அப்போது அவர்களுடைய வயலுக்கு போதுமான தண்ணீர் விளைச்சலுக்குக் கிடைக்கும். அந்த திட்டத்தைக் கொண்டு வந்தது அதிமுக. ஆதனூர் குமாரமங்கலம் இடையே தடுப்பணை வேண்டும் என்ற கோரிக்கையை 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அந்த திட்டத்தைக் கொண்டு வந்தது அதிமுக அரசாங்கம். இப்படி ஏராளமான திட்டங்களை நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். அத்துடன் அதிமுக ஆட்சியில்தான் இஸ்லாமியர்களுக்கு எண்ணற்ற திட்டங்களை நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். அதிமுக பாஜகவில் இருந்து விலகிய உடனே, திமுக அரசு கிறிஸ்தவர்களை அழைத்து அவர்களுடைய குறைகளை கேட்டறிந்தனர். 3 ஆண்டுகாலமாக கிறிஸ்தவ மக்கள் திமுகவின் கண்ணுக்குத் தெரியவில்லை. நாங்கள் பாஜகவில் இருந்து விலகிய பின்னர், முதல்வர் ஸ்டாலின், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களை அழைத்துப் பேசுகிறார். அவர்களுடைய கோரிக்கையைக் கேட்கிறார். அதிமுகதான் சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பாக இருந்து வருகிறது. நேற்றுகூட இஸ்லாமிய மக்களின் முக்கியத் தலைவர்களை அழைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்கிறார். 3 வருடங்களாக இஸ்லாமியர்களை திமுக கண்டு கொள்ளவே இல்லை. இப்போதுதான், இஸ்லாமியர்களின் கஷ்டங்களை புரிந்துகொள்வதற்கான காலம் முதல்வருக்கு வந்திருக்கிறது. இதெல்லாம் வருவதற்கு யார் காரணம்? அதிமுக கேள்வி எழுப்பியதால் வந்ததுள்ளது. இல்லையென்றால், சிறுபான்மை மக்களைக் கண்டுகொள்ளாத அரசுதான் இந்த திமுக அரசு. ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி தயாரிக்க விலையில்லா அரிசி வழங்கிய ஒரே அரசு அதிமுக அரசுதான். 5400 மெட்ரிக் டன் அரிசியை அதிமுக அரசு கொடுத்தது. நாகூர் தர்ஹா சந்தனக்கூடு திருவிழாவுக்காக விலையில்லா சந்தனக் கட்டைகளை வழங்கியது அதிமுக அரசுதான்” என்று அவர் கூறினார்.
கைநழுவியதா கரும்பு விவசாயி சின்னம்? - ஓரிரு நாளில் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதாக சீமான் தகவல்
செய்திப்பிரிவு
கூறியதாவது
2024-02-18 13:17:00
மக்களவைத் தேர்தலையொட்டி, நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட பொறுப்பாளர்களுடன் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். கூட்டத்தில் சீமான் பேசும்போது,"மக்களவைத் தேர்தல் வேட்பாளர்களாக இன்னும் வெகு சிலர் மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது. ஓரிரு நாட்களில் அனைத்து தொகுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும். அடுத்த ஒரு வாரத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெறும்" என்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: என்ஐஏ சோதனையை எதிர்கொள்ளும் வலிமையும் ஆற்றலும் நாம் தமிழர்கட்சிக்கு இருக்கிறது. இடையூறு ஏற்படுத்தவே கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கவில்லை. ஆணையத்துடன் பேச்சுவார்த்தை சமூகமாக முடிந்தாலும் நீதிமன்றத்தை அணுகுவோம். கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தேர்தல் அறிக்கை தயாரிக்க இப்போது தான் கருத்து கேட்கின்றனர். 39 தொகுதிகளிலும் உள்ள உறுப்பினர்களுக்கு மக்களின் பிரச்சினை கூட தெரியாதா. கடந்த தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்தால் பாஜகவுக்கு சாதகமாக அமையும் என்ற திமுகவின் பிரச்சாரம், மக்கள் நீதி மய்யம் கட்சி உதயம் போன்ற காரணங்களால் வாக்குகள் பிரிக்கப்பட்டன. இவையெல்லாம் சேர்த்தால் நாம் தமிழருக்கு அதிக சதவீத வாக்குகள் கிடைத்திருக்கும். இந்த நேரத்தில் அதிமுகவுடன் கூட்டணியில் இணைந்தால் 0.7 சதவீத வாக்குகள் கூட கிடைக்காது. மேகே தாட்டு அணை கட்டுவோம் என தேர்தல் வாக்குறுதியளித்த போதும், திமுக காங்கிரஸுக்கு ஆதரவளித்தது. அவர்கள் நிறைவேற்றிய வாக்குறுதியை வெளியிட வேண்டும். மக்கள் போராட்டத்தை மதிக்கும் ஆட்சியாளர்கள் இல்லை. கோயிலுக்குச் செல்லும் பிரதமர் போராடும் விவசாயிகளை கவனிக்க மாட்டார். இவ்வாறு அவர் தெரிவித்தார். மயிலாடுதுறையில் காளியம்மாள்: இதற்கிடையே, மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் போட்டியிடவுள்ளதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானதையடுத்து, கட்சி நிர்வாகிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
“பேரவையில் இருக்கையை மாற்றியதால் வருத்தம் இல்லை” - ஓபிஎஸ்
செய்திப்பிரிவு
மதுரை
2024-02-18 12:58:00
மதுரை: சட்டப்பேரவையில் இருக்கையை மாற்றியதால் வருத்தம் ஏதும் இல்லை என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக அரசின் அனுமதி இல்லாமல் மேகேதாட்டுவில் கர்நாடகா அரசால் அணை கட்ட முடியாது. தமிழக மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான கச்சத் தீவை மீட்பதற்கு மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும். சட்டப்பேரவையில் இருக்கையை அவர்களாகவே கொடுத்தார்கள், தற்போது அவர்களாகவே எடுத்துக் கொண்டார்கள். இதில் எந்த வருத்தமும் இல்லை. பாஜக கூட்டணி தொடர்பாக அக்கட்சியின் தேசிய தலை வர்களை சந்திக்க சென்றால் உங்களிடம் ( செய்தியாளர்களிடம் ) சொல்லி விட்டுத்தான் செல்வேன். இவ்வாறு அவர் கூறினார்.