Title
stringlengths 21
197
| Author
stringlengths 4
27
| City
stringlengths 3
20
| Published
stringlengths 19
19
| Text
stringlengths 149
24k
|
---|---|---|---|---|
‘ஊரையே சுத்தம் செய்யும் எங்க வாழ்க்கை துயரமா இருக்கே...’ - தூய்மைப் பணியாளர்கள் ஆதங்கம் | அ.சாதிக் பாட்சா | திருச்சி | 2024-02-24 17:41:00 |
திருச்சி: திருச்சி மாநகராட்சி பகுதிகளில் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் அவர்களது பணியில் பல்வேறு சங்கடங்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக பணிப் பாதுகாப்பின்மை, வரையறுக்கப்பட்ட ஊதியம் கிடைக்காதது, பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணி செய்வது, நோய்க்குதரமான மருத்துவ சிகிச்சை கிடைக்காதது போன்ற பல இன்னல்களை அவர்கள் சந்திக்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நிரந்தர ஊழியர்களாக, இலவச குடியிருப்பு வசதிகளுடன் அவர்கள் பணிபுரிந்து வந்தனர். இப்போது தினக்கூலி அடிப்படையில்(அவுட்சோர்சிங்) தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
தூய்மைப் பணி தொழிலாளர்கள் சந்திக்கும் சங்கடங்கள் குறித்து திருச்சி மாநகராட்சி தொழிலாளர்கள் சங்க(சிஐடியு) மாநகரத் தலைவர் இளையராஜா கூறியது: தூய்மைப் பணி தொழில் அவுட்சோர்சிங் முறையில் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்களுக்கு அரசுநிர்ணயிக்கும் ஊதியம் கிடைப்பதில்லை. இஎஸ்ஐ பிடித்தம் செய்தாலும், அதற்கான கார்டு வழங்காததால் இஎஸ்ஐ மருத்துவமனைகளில் அவர்கள் சிகிச்சை பெற முடியவில்லை.
மேலும், இவர்களுக்கு தொற்று நோய் பாதிப்பு, அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதால், முன்பு 6 மாதங்களுக்கு ஒரு முறை முத்தடுப்பு நோய் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக தடுப்பூசி போடுவதில்லை.
எனவே, இவர்களுக்கு மீண்டும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இலவசஉயர்தர சிகிச்சை பெற வசதியாகமருத்துவக் காப்பீடும் செய்துகொடுக்க வேண்டும்.அத்துடன்,பாதுகாப்பு உபகரணங்களான கையுறை, காலணி, முகக்கவசம் ஆகியவற்றை குறிப்பிட்ட காலஇடைவெளியில் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஊரை தூய்மையாக்கி, மக்களின் சுகாதாரத்தை காக்கும் தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை இன்னும் துயரத்தில் தான் இருக்கிறது. தங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும் என்பதே அவர்களது எதிர்பார்ப்பாக உள்ளது.
|
“பாஜகவுடன் திமுகவுக்கே ரகசிய உடன்பாடு... அதிமுகவுக்கு இல்லை!” - இபிஎஸ் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-24 17:20:00 |
சென்னை: “வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் நல்ல கூட்டணி அமையும். தேர்தல் நெருங்கும்போது கூட்டணி குறித்து அறிவிப்போம்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாளையொட்டி, இன்று (பிப்.24) சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அவரது உருவப்படத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். “தமிழக உரிமைகளை பெற்று தர மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் பாடுபடுவோம். இன்று முதல் இரவு - பகல் பாராமல் மக்களை சந்தித்து இரட்டை இலையை வெற்றியடைய செய்வோம்” என்று உறுதியேற்கும்படி தொண்டர்களுக்கு அவர் வலியுறுத்தினார்.
பின்னர் ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியது: “வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் நல்ல கூட்டணி அமையும். தேர்தல் நெருங்கும்போது கூட்டணி குறித்து அறிவிப்போம்.
பாஜகவுடன் திமுகவுக்கு தான் ரகசிய உடன்பாடு இருக்கிறது. அதிமுகவுக்கு இல்லை. அண்மையில் கேலோ இந்தியா விளையாட்டு நிகழ்வு நடந்தது. அதற்கு பிரதமரை வரவழைத்தார்கள். அன்று ‘கோ பேக்’ மோடி என்றார்கள் இன்று ‘வெல்கம் மோடி’ எனக் கூறுகிறார்கள். இதுதான் ரகசிய உடன்பாடு.
காவிரி நதிநீர் பிரச்சினை வந்தபோது 22 நாட்களுக்கு நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கச் செய்தனர் அதிமுக எம்.பி.க்கள். எங்கள் எம்.பி.க்கள் 16,619 கேள்விகள் எழுப்பினர். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 9,695 கேள்விதான் எழுப்பி உள்ளனர். அதிமுக எம்.பி.க்களை வெற்றி பெறச் செய்தால் எந்த அளவுக்கு செயல்படுகிறார்கள் என்று மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
தமிழகத்தில் நீட் தேர்வு கொண்டு வர காரணமாக இருந்தது காங்கிரஸ், திமுகதான். ஒரு கையெழுத்தில் நீட்டை ஒழிப்போம் என்று கூறிய திமுக இன்று லட்சக்கணக்கான பேரிடம் கையெழுத்து வாங்கியுள்ளார்கள். நீட் ஒழிப்புக்கு ஏதும் செய்யவில்லை. திமுக அரசுக்கு நாட்டு மக்கள் மீது அக்கறை இல்லை. வீட்டு மக்கள் மீதுதான் கவலை. ஆனால் நாங்கள் நாட்டு மக்களுக்காகத் தான் நாங்கள் உழைக்கிறோம்” என்று அவர் கூறினார்.
லோகோ வெளியீடு: மக்களவைத் தேர்தலை ஒட்டி பிரசாரத்திற்காக, லட்சினையை வெளியிட்டார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதில், ‘தமிழர் உரிமையை மீட்போம், தமிழ்நாடு காப்போம்’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
முன்னதாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் ஜெயலலிதா பேசுவது போன்ற வீடியோவையும் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதில் ஜெயலலிதாவின் குரலில் மத்திய, மாநில அரசுகளை சாடி கருத்துகள் இடம்பெற்றிருந்தன. வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெற எடப்பாடி பழனிசாமியின் கரங்களை வலுப்படுத்துங்கள் என்று அதிமுக தொண்டர்களுக்கு ஜெயலலிதா அழைப்பு விடுப்பதுபோல் அந்த ஆடியோ உருவாக்கப்பட்டிருந்தது.
முன்னதாக, “வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மற்றும் அதனோடு மறைமுகக் கூட்டணியில் இருக்கும் அதிமுகவை முழுமையாக வீழ்த்தி, தமிழக முதல்வரின் குரல் டெல்லியிலும் நிறைவேறுவதை உறுதிசெய்திட வேண்டும்” என்று திமுக தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது. அதன் விவரம்: ‘பாஜகவுடன் மறைமுகக் கூட்டணி வைத்துள்ள அதிமுகவை வீழ்த்த வேண்டும்’ - திமுகவின் 3 தீர்மானங்கள்
|
“எம்.பி சீட் மறுப்பு, காங்கிரஸில் பெண்கள் புறக்கணிப்பு...” - பாஜகவில் இணைந்த விஜயதரணி அடுக்கிய காரணங்கள் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-24 16:34:00 |
சென்னை: “காங்கிரஸ் கட்சியில் பெண்கள் பெரிய பதவிகளுக்கு வர முடியாத சூழல் நிலவி வருகிறது. ஆனால், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்த நாடு மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது. என்னைப் போன்ற பெண்கள் இதனை உணர முடிகிறது. பெண் சமூகத்துக்கும் பிரதமர் மோடி நிறைய நன்மைகளை செய்து இருக்கிறார்” என்று பாஜகவில் இணைந்த விஜயதரணி விளக்கம் அளித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் இன்று (பிப்.24) பாஜகவில் இணைந்தார். அத்துடன், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக மேலிடத்துக்கு ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளார். கடந்த சில நாட்களாகவே விஜயதரணி பாஜகவில் இணைகிறார் எனப் பேசப்பட்ட நிலையில், அவர் இன்று டெல்லியில் அதிகாரபூர்வமாக பாஜகவில் இணைந்தார்.
பாஜகவில் இணைந்த பின்னர் அவர் கூறியது: “காங்கிரஸ் கட்சியில் பெண்கள் பெரிய பதவிகளுக்கு வர முடியாத சூழல் நிலவி வருகிறது. நான் மூன்று முறை தொடர்ந்து எம்எல்ஏவாக இருக்கிறேன். தற்போது சட்டமன்ற கட்சித் தலைவர் பதவி ஒரு ஜூனியருக்குதான் கொடுக்கப்பட்டிருக்கிறது.
காங்கிரஸ் கட்சித் தலைமை பதவிகளுக்கு பெண்களே வரக்கூடாது என்ற சூழல்தான் காங்கிரஸில் நிலவி வருகிறது. இது தொடர்பான அதிருப்தி நீண்ட நாட்களாக இருந்தது. நீண்ட நாட்களாக நான் எம்.பி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டுக் கொண்டிருக்கிறேன். நான் உச்ச நீதிமன்ற பிராக்டீஸிங் லாயராக இருக்கிறேன். நாடாளுமன்றத்தில் என்னுடைய பணிகளை தொடர வேண்டும் என்று ஆசைப்பட்டு சீட்டு கேட்டேன்.
கடந்த இடைத்தேர்தலில் எம்.எல்.ஏ, எம்.பி தேர்தல் சேர்ந்து வந்த சேர்ந்து வந்தபோதும் அதற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. இந்த முறையும் அந்த வாய்ப்பு கொடுக்கப்படாது என்றுதான் நினைக்கிறேன். குறிப்பாக, என்னுடைய கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் நிறையப் பணிகள் நடைபெறாமல் இருக்கின்றன. ஏற்கெனவே இருந்த எம்.பி-யும், தற்போது இருக்கின்ற எம்.பி-யும் எந்த வேலையையும் செய்யவில்லை.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு மீனவர்கள் கொலை செய்யப்படுவது குறைந்துவிட்டது. அந்த அளவுக்கு மீனவர்கள் பாரதிய ஜனதா ஆட்சியில் மீட்கப்பட்டிருக்கிறார்கள். மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வும் ஏற்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. மீனவர்கள் பிரச்சினைக்காக பாரதிய ஜனதா கட்சி எடுத்த முயற்சி மிகப் பெரியது. அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.
பிரதமர் மோடி அறிவித்த ரேஷன் திட்டங்கள், அனைத்து மாநிலங்களிலும் சென்று அடைந்திருக்கிறது, ஆனால், தமிழகம் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இந்த திட்டங்களை ஏற்க மறுக்கிறார்கள். இந்தத் திட்டங்களை நாம் செயல்படுத்த வேண்டும். இது போன்ற நல்ல நல்ல திட்டங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும்.
பாரதிய ஜனதா கட்சிக்கு வட இந்தியாவில் இந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறது என்றால் இந்தத் திட்டங்கள் மக்களை சென்றடைந்தது தான் காரணம். ஆனால் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகம் போன்ற மாநிலங்களில் இந்த திட்டங்கள் சென்றடையவில்லை. அவர்களும் ஏற்க மறுக்கிறார்கள் இதுதான் உண்மை.
மொழியும் பிரச்சினையாக இருக்கிறது. மொழி பிரச்சினையில் இந்த திட்டங்கள் எந்த அளவுக்கு பயனளிக்கின்றன என்பது தமிழக மக்களுக்கு புரியவும் இல்லை, தெரியவும் இல்லை. பாரதப் பிரதமரின் முயற்சியை என்னை போன்றவர்கள் நிச்சயமாக வரவேற்கிறோம்.
அகில இந்திய அளவிலும் உலக அளவிலும் பெரிய தலைவராக இருக்கிறார் பிரதமர் மோடி. அவரின் தலைமையின் கீழ் இந்த நாடு மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது. என்னைப் போன்ற பெண்கள் இதனை உணர முடிகிறது. பெண் சமூகத்துக்கும் பிரதமர் மோடி நிறைய நன்மைகளை செய்து இருக்கிறார். பெண்களுக்கு நிறைய இட ஒதுக்கீடுகளை கொண்டு வந்து நன்மை செய்து இருக்கிறார். சட்டமாகவும் மாற்றியிருக்கிறார்.
இஸ்லாமிய பெண்களுக்காக விடுதலையை கொடுத்து இருக்கிறார்கள். குறிப்பாக, முத்தலாக்கில் இருந்து விடுதலை கொடுத்திருக்கிறார்கள். இஸ்லாமிய பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கொண்டு வந்திருக்கிறார்கள். இது மாதிரியான விஷயங்களை காங்கிரஸ் கட்சி செய்ய முயற்சி கூட செய்யவில்லை. இன்று இஸ்லாமிய பெண்களின் வாக்குகள் மொத்தமாக பாஜகவுக்கு கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
பல்வேறு நன்மைகள் இருக்கக் கூடிய இடத்தில் பாஜக தன்னுடைய பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது. மோடி தலைமையில் இந்தியா இயங்க வேண்டும் என்ற விருப்பத்தோடு என்னை போன்றவர்கள் பாஜகவில் எங்களை இணைத்துக் கொண்டு வருகிறோம். பாரதிய ஜனதா கட்சியில் பெண்களுக்கான தளம் மிக அதிகமாக இருக்கிறது.
எம்.பிக்.கள் எம்.எல்.ஏ.க்கள் என உங்களுக்கு அதிகமான பதவிகள் வழங்கப்படுகிறது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாத யாத்திரை நடத்தி வருகிறார். அந்த வகையில் தமிழகத்தில் பெரிய எழுச்சி இருக்கிறது.
காங்கிரஸ் தலைமையிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்து விட்டேன். எல்லா பதவிகளில் இருந்தும் ராஜினாமா செய்து விட்டேன். காங்கிரஸ் கட்சி அதற்கு உண்டான நடவடிக்கைகளை எடுக்கும். தற்போது, என்னை இணைத்துக் கொண்ட கட்சி என்ன முடிவு எடுக்கிறதோ அதற்கு கட்டுப்பட்டு செல்வேன்” என்று விஜயதரணி கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அது தொடர்பான பதவிகளில் இருந்து ராஜினாமா செய்கிறேன்.
I am resigning from the position of primary membership and related posts held by me in the Congress party. pic.twitter.com/8PDtXkJ9HM
பின்புலம்: கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜகவுக்கு கணிசமான வாக்கு வாங்கி கொண்டது. தற்போது காங்கிரஸை சேர்ந்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் இத்தொகுதி எம்.பி.யாக உள்ளார். வரும் மக்களவைத் தேர்தலில் இத்தொகுதியை காங்கிரஸ் தக்க வைக்குமா அல்லது பாஜக வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. காங்கிரஸ் சார்பில் மீண்டும் விஜய் வசந்த்துக்கே சீட் வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
அதேநேரம், 3 முறை விளவங்கோடு தொகுதியில் எம்எல்ஏவாக தொடர் வெற்றி பெற்ற விஜயதரணி, இம்முறை கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட தனக்கு எம்.பி. சீட் வழங்க வேண்டும் என காங்கிரஸ் மேலிடத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால், அதுகுறித்து எவ்வித தகவலும் காங்கிரஸ் தரப்பில் இல்லாத நிலையில், பாஜகவில் இணைய முடிவு செய்தது உறுதியாகியுள்ளது. அவர் குமரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடப் போவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tamil Nadu MLA Smt. S. Vijayadharani joins BJP at Party Headquarters in New Delhi. #JoinBJP https://t.co/Yib97hYmDj
|
“தமிழகத்தில் ஒரே கட்ட தேர்தலுக்கு பரிசீலனை, பணப் பரிவர்த்தனை கண்காணிப்பு” - தலைமைத் தேர்தல் ஆணையர் உறுதி | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-24 16:09:00 |
சென்னை: தேர்தல் தொடர்பான புகார்களை மக்கள் தெரிவிக்க ‘சி-விஜில்’ (CVigil) என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளதாகவும், புகார் தெரிவித்த 100 நிமிடங்களில் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில், தேர்தல் ஆணையர் அருண் கோயல், மூத்த துணை தேர்தல் ஆணையர்கள் தர்மேந்திர சர்மா, நிதேஷ் வியாஸ், துணை தேர்தல் ஆணையர்கள் அஜய்பதூ, மனோஜ்குமார் சாஹு, ஊடகப்பிரிவு தலைமை இயக்குநர் பி.நாராயணன், தலைமை இணை இயக்குநர் அனுஜ் சந்தக், முதன்மை செயலர் மல்லே மாலிக் ஆகியோர் நேற்று முன்தினம் வந்தனர். கடந்த 2 நாட்களாக ஆலோசனை நடத்திய நிலையில் இன்று (பிப்.24) அவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறியது: “கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் தேசிய, மாநிலக் கட்சிகள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம். மக்களவைத் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக பல கட்சிகளாலும் முன்வைக்கப்பட்டது. அதேபோல் தேர்தலில் பணப் பட்டுவாடாவை தடுக்க வேண்டும், மது விநியோகத்தைத் தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
தேர்தலை நியாயமாக, சுதந்திரமாக நடத்த வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையம் உறுதியாக இருக்கிறது. தேர்தல் தொடர்பாக புகார்களை மக்கள் ஆணையத்திடம் தெரிவிக்கும் வண்ணம் சி-விஜில் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மக்கள் அளிக்கும் புகார்களுக்கு 100 நிமிடங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் மொத்தம் 6.19 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 3.04 கோடி, பெண்கள் 3.15 கோடி பேர். மூன்றாம் பாலின வாக்காளார்கள் 8294. பெண் வாக்காளர்களே இங்கு அதிகமாக உள்ளனர். தேர்தலின்போது அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அடிப்படை வசதிகள் இருப்பது உறுதி செய்யப்படும். தேர்தலுக்கு 7 நாட்களுக்கு முன்பு வரை பூத் ஸ்லிப் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
மாநிலங்களுக்கு இடையே சோதனைச் சாவடி அமைத்து தீவிரமாகக் கண்காணிக்கப்படும். பதற்றமான வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டு துணை ராணுவப் படை கண்காணிப்பு உறுதிப்படுத்தப்படும்” என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் அவர் பதிலளித்துப் பேசினார். அப்போது அவர் “தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கட்சிகளின் கோரிக்கை பரிசீலிக்கப்படும். ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளும் கண்காணிக்கப்படும்” என்றார்.
|
“கடும் நிதி நெருக்கடியிலும் மக்களுக்காக குடிநீர் திட்டங்கள்...” - முதல்வர் ஸ்டாலின் @ நெம்மேலி | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-24 15:26:00 |
சென்னை: “கடுமையான நிதி நெருக்கடி காலத்திலும் மக்களுக்காக நாம் 100 கோடி ரூபாய் மதிப்பிலான குடிநீர்த் திட்டங்களை தீட்டி வழங்கி வருகிறோம்” என நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை மக்களுக்கு அர்ப்பணித்துப் பேசினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். சிங்காரச் சென்னையை, சீர்மிகு சென்னையாக உருவாக்கியதில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத்தான் பெரிய பங்கு இருக்கிறது என்று அவர் பெருமிதம் தெரிவித்தார்.
நெம்மேலியில் ரூபாய் 1516 கோடியே 82 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்காக முதல்வர் ஸ்டாலின் இன்று (பிப்.24) தொடங்கி வைத்தார். பின்னர் விழாவில் பேசிய் முதல்வர் ஸ்டாலின், “நீர் இன்றி அமையாது உலகு! இதைவிட குடிநீரின் தேவையை யாராலும் விளக்கிச் சொல்லிவிட முடியாது. அதனால்தான், கடுமையான நிதி நெருக்கடி காலத்திலும், 100 கோடி ரூபாய் மதிப்பிலான குடிநீர்த் திட்டங்களை நாம் தீட்டி வழங்கி வருகிறோம்.
2006-2011 ஆட்சியில், நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தேன். மீஞ்சூரில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைக்க 2007-ஆம் ஆண்டு நான்தான் அடிக்கல் நாட்டினேன். அதற்கு பிறகு 2010-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அதை திறந்து வைத்தார்கள்.
இந்த நிலையத்திலிருந்து கிடைக்கின்ற குடிநீர் மூலம், வடசென்னையில் சுமார் 10 லட்சம் மக்கள் பயன்பெற்று வருகிறார்கள். இதை தொடர்ந்து நெம்மேலியில், கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கு 2010-ஆம் ஆண்டு நான்தான் அடிக்கல் நாட்டினேன். இந்த நிலையத்தின் மூலமாக, தென்சென்னையில் வசிக்கின்ற சுமார் 9 லட்சம் மக்கள் பயன்பெற்று வருகிறார்கள். அதனால்தான், பேரூரில், இது மாதிரியான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் நாள் அந்த நிலையத்திற்கும் நான்தான் அடிக்கல் நாட்டினேன். அந்த நிலையம், தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய நிலையமாக அமைய இருக்கிறது. இந்த நிலையத்தை அமைக்கின்ற பணிகள் நிர்ணயிக்கப்பட்ட கால அளவுக்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு நிச்சயமாக, உறுதியாக கொண்டு வரப்படும்.
நாள் ஒன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் இன்றைக்கு நாட்டு மக்களுடைய பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையத்திலிருந்து பெறப்படுகின்ற குடிநீர் மூலம், தென் சென்னை பகுதிகளான வேளச்சேரி, ஆலந்தூர், புனித தோமையார் மலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்கட்டளை, மூவரசன்பேட்டை, சோழிங்கநல்லூர், உள்ளகரம், புழுதிவாக்கம், மடிப்பாக்கம், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லாவரம் மற்றும் ஓ.எம்.ஆரில் இருக்கின்ற ஐ.டி. நிறுவனப் பகுதிகளில் இருக்கின்ற சுமார் 9 இலட்சம் மக்கள் பயனடைவார்கள்.
சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில், முடிவுற்ற பணிகளையும் திறந்து வைத்திருக்கிறேன். நகராட்சி நிர்வாக இயக்ககத்தின் சார்பில், மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கின்ற 172 கோடி ரூபாய் மதிப்பிலான 52 திட்டப்பணிகளையும் திறந்து வைத்திருக்கிறேன்.
இதேபோல, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று முடிந்திருக்கின்ற 70 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளும் விரைந்து முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. பேரூராட்சிகள் இயக்கத்தை எடுத்துக்கொண்டால், 33 கோடி ரூபாய் மதிப்பிலான 12 திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில், மூன்று தனி குடிநீர்த் திட்டங்களையும், ஆறு கூட்டுக் குடிநீர் திட்டங்களையும் தொடங்கி வைத்திருக்கிறேன். இதன் மொத்த மதிப்பு 533 கோடி ரூபாய்! 364 வாகனங்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டிருக்கிறது.
கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் பல ஆண்டுகளாக கொட்டப்பட்டிருக்கின்ற குப்பைகள், 648 கோடியே 38 இலட்ச ரூபாய் செலவில், உயிரி அகழ்ந்தெடுத்தல் முறையில் பிரித்தெடுத்து நிலத்தை மீட்டெடுக்கின்ற பணிக்கும் அடிக்கல் நாட்டியிருக்கிறேன்.
நகராட்சி நிர்வாக இயக்குநரகம் சார்பில், 813 கோடி ரூபாய் மதிப்பிலான 23 திட்டப்பணிகளுக்கும், பேரூராட்சி இயக்குநரகம் சார்பில், 238 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கும் அடிக்கல் நாட்டியிருக்கிறேன். இப்படி மொத்தம் 1,802 கோடி ரூபாய் மதிப்பில் 39 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன். இவை எல்லாமே திட்டமிடப்பட்ட காலத்திற்கு முன்பாகவே திறக்கப்படும்.
சிங்காரச் சென்னையை, சீர்மிகு சென்னையாக உருவாக்கியதில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத்தான் பெரிய பங்கு இருக்கிறது. சென்னை மாநகராட்சியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயராக இரண்டு முறை இருந்தவன் நான்! அப்போது சென்னையின் வளர்ச்சிக்காக ஏராளமான திட்டங்களைத் தீட்டி வழங்கி இருக்கிறோம். இன்றைக்கு சென்னையை நீங்கள் சுற்றி வரும்போது பார்க்கின்ற மேம்பாலங்கள் உள்ளிட்ட பல கட்டமைப்புகள் கழக ஆட்சிக்காலத்தில்தான் உருவாக்கப்பட்டது.
பெருகி வருகின்ற மக்கள்தொகையை கணக்கில் கொண்டு, நெம்மேலியில் இந்த நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது. நாம் திட்டமிடுகின்ற கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் அமைக்கப்படுவது மூலமாக, நாளொன்றுக்கு 750 மில்லியன் லிட்டர் உற்பத்தித் திறன்கொண்ட இந்தியாவிலேயே மிகப்பெரிய கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் நிறுவப்பட்ட மாநகரம் என்ற பெருமையை சென்னை மாநகரம் அடையும்.
இதன்மூலம் நம்முடைய அரசு, சென்னை மாநகர மக்களுடைய குடிநீர்த் தேவையை பூர்த்திசெய்ய தேவையான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு வருகிறது. இதை சிறப்பாகவும், விரைவாகவும் அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் செய்து காட்டுவார் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கிறது.
ஏனென்றால், நமது திராவிட மாடல் அரசை பொறுத்தவரைக்கும் வெற்று அறிவிப்புகள் வெளியிடுகின்ற அரசு கிடையாது! திட்டங்களை நிறைவேற்றி சென்னையின் தாகத்தை தீர்க்கின்ற அரசு.
நிறைவாக சொல்கிறேன், தலைவர் கலைஞராக இருந்தாலும் சரி, அவர் மகன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினாக இருந்தாலும் சரி, நாங்கள் சொன்னதைத்தான் செய்வோம்! செய்வதைத்தான் சொல்வோம்! என்று கூறி விடைபெறுவதற்கு முன்னால், இங்கே நம்முடைய அமைச்சர ஒரு கோரிக்கையை வைத்தார்கள்.
சென்னை மாநகராட்சியின் கட்டடத்துக்கு அருகில் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கக் கூடிய ஒரு புதிய கட்டிடத்திற்கு தலைவர் கலைஞர் பெயரை சூட்டவேண்டும் என்று, கலைஞருடைய நூற்றாண்டு விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே, நிச்சயமாக அந்த கட்டடத்துக்கு “கலைஞர் நூற்றாண்டு விழா கட்டடம்” என்று பெயர் சூட்டப்படும் என்பதைத் தெரிவித்து விடை பெறுகிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
|
நாள் ஒன்றுக்கு 15 கோடி லி. - நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை முதல்வர் தொடங்கி வைத்தார் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-24 15:12:00 |
சென்னை: நெம்மேலியில் ரூ.1,516 கோடியே 82 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் (15 கோடி லிட்டர்) உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்காக முதல்வர் ஸ்டாலின் இன்று (பிப்.24) தொடங்கி வைத்தார்.
இது தொடர்பான அரசு செய்திக் குறிப்பு: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நெம்மேலியில் அமைக்கப்பட்டுள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் உள்ளிட்ட 2465 கோடி ரூபாய் செலவிலான 96 முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, 1802.36 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 39 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
முதல்வர் ஸ்டாலின் இன்று (24.2.2024) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள நெம்மேலியில் சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் 1516 கோடியே 82 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் மற்றும் 948 கோடியே 18 லட்சம் ரூபாய் செலவில் முடிவுற்ற 95 திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, 1802.36 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 39 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
நெம்மேலியில் ரூ.1516.82 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தல் வளர்ந்து வரும் சென்னை மாநகரின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்களை வடிவமைத்து, நிறுவி, இயக்கி மற்றும் திருப்பித் தரும் அடிப்படையில் மீஞ்சூரில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டதன் அடிப்படையில் 25.2.2007 அன்று அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலினால் அடிக்கல் நாட்டப்பட்டது. 31.7.2010 அன்று இந்நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிலையத்திலிருந்து கிடைக்கக்கூடிய குடிநீர் மூலம், வடசென்னை பகுதிகளான மணலி, மாதவரம், எண்ணூர், கத்திவாக்கம், திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, வியாசர்பாடி ஆகிய பகுதிகளில் வசிக்கும் சுமார் 10 லட்சம் மக்கள் பயன்பெற்று வருகின்றார்கள். இதனைத் தொடர்ந்து, நெம்மேலியில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைப்பதற்கான திட்டப் பணிகளை அன்றைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் 23.02.2010 அன்று அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையத்தின் மூலம், தென்சென்னை பகுதிகளாகிய சோழிங்கநல்லூர், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், காரப்பாக்கம், செம்மஞ்சேரி, துரைப்பாக்கம், பெருங்குடி, கொட்டிவாக்கம், பாலவாக்கம், திருவான்மியூர், வேளச்சேரி, தரமணி, பள்ளிப்பட்டு, அடையாறு, பெசன்ட் நகர், நந்தனம், எம்.ஆர்.சி. நகர், இராஜா அண்ணாமலைபுரம், மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் சுமார் 9 லட்சம் மக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் வளர்ச்சியினை தொடர்ந்து சென்னைக்கு அருகாமையில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாலும், வளர்ச்சிக்கேற்ப சீரான குடிநீர் வழங்கும் பொருட்டும், பேரூரில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதனடிப்படையில், செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பேரூரில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்திற்கு முதல்வர் ஸ்டாலின் 21.8.2023 அன்று அடிக்கல் நாட்டினார். இந்நிலையம் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய நிலையமாக அமைய உள்ளது. இந்நிலையம் அமைக்கும் பணிகள் நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
இந்நிலையில், நெம்மேலியில் 1516 கோடியே 82 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்காக முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
|
“விஜயதரணி வருகை தமிழக பாஜகவுக்கு வலுசேர்க்கும்” - அண்ணாமலை வரவேற்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-24 15:04:00 |
சென்னை: “விஜயதரணியை வரவேற்பதோடு, அவரது வருகை, தமிழக பாஜகவுக்கு மேலும் வலுசேர்க்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் இன்று (பிப்.24) பாஜகவில் இணைந்தார். கடந்த சில நாட்களாகவே விஜயதரணி பாஜகவில் இணைகிறார் எனப் பேசப்பட்ட நிலையில், அவர் இன்று டெல்லியில் அதிகாரபூர்வமாக பாஜகவில் இணைந்தார்.
பாஜகவில் கட்சியில் இணைந்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “பிரதமர் மோடியின் தலைமையில் சர்வதேச அளவில் இந்திய தேசம் பல சாதனைகளைப் புரிந்து வருவதால் அவரின் தலைமையில் அரசியல் பணியாற்ற பாஜகவில் இணைந்துள்ளேன்” என்று விளக்கினார்.
இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் இட்ட பதிவில், “காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி, பிரதமர் நரேந்திர மோடியின் சீரிய தலைமையால் கவரப்பட்டு, இன்று பாஜகவில் இணைந்துள்ளார். விஜயதரணியை வரவேற்பதோடு, அவரது வருகை, தமிழக பாஜகவுக்கு மேலும் வலுசேர்க்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, விஜயதரணி பாஜகவுக்கு சென்றது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அளித்தப் பேட்டியில், “விஜயதரணிக்கு கட்சி 3 முறை வாய்ப்பு கொடுத்தது. ஆனாலும் அவர் கட்சி மாறியிருக்கிறார். எங்கிருந்தாலும் வாழ்க” என்று கருத்து தெரிவித்துள்ளார். | வாசிக்க > பாஜகவில் இணைந்தார் விஜயதரணி: காரணம் என்ன?
|
“கர்நாடக அரசின் பிரதிநிதியாக மத்திய அமைச்சர் பேசுவதா?” - ராமதாஸ் கண்டனம் @ மேகேதாட்டு விவகாரம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-24 14:42:00 |
சென்னை: “காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தமிழக அரசு தடுக்கக் கூடாது என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியிருக்கிறார். காவிரி சிக்கலில் உச்ச நீதிமன்றம் மற்றும் நடுவ மன்றத்தின் தீர்ப்புகளை செயல்படுத்த வேண்டிய மத்திய நீர்வளத் துறை அமைச்சர், கர்நாடக அரசின் குரலாக ஒலித்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்” என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தமிழக அரசு தடுக்கக் கூடாது என்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் கூறியிருக்கிறார். காவிரி சிக்கலில் உச்ச நீதிமன்றம் மற்றும் நடுவ மன்றத்தின் தீர்ப்புகளை செயல்படுத்த வேண்டிய மத்திய நீர்வளத்துறை அமைச்சர், கர்நாடக அரசின் குரலாக ஒலித்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.
ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், ‘தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகேதாட்டு அணையை கட்ட முடியாது என்பது உண்மைதான். ஆனால், என்னைப் பொறுத்தவரை, மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்தை தமிழக அரசு தடுக்கக் கூடாது. கர்நாடக அணைகளில் போதிய தண்ணீர் இருக்கும் போது, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதை யாரும் தடுக்கப்போவதில்லை.
இந்த சிக்கலில் இரு மாநிலங்களுக்கும் இடையே இணக்கம் ஏற்படுத்த நான் முயற்சி செய்வேன்’ என்று கூறியிருக்கிறார். அமைச்சரின் இக்கருத்தை ஏற்க முடியாது. மத்திய நீர்வளத்துறை அமைச்சராக பணியாற்றி வரும் கஜேந்திர சிங் ஷெகாவத், மேகேதாட்டு அணை சிக்கலில் சட்டமும், உச்ச நீதிமன்றம் மற்றும் நடுவர் மன்றத் தீர்ப்பும் என்ன சொல்கிறதோ? அதன்படித் தான் செயல்பட வேண்டும். இந்த விவகாரத்தில் அமைச்சரின் தனிப்பட்டக் கருத்தை யாரும் கேட்கவில்லை.
மேகேதாட்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பும் மிகத் தெளிவாக உள்ளன. தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் காவிரியின் குறுக்கே புதிய அணைகளை கர்நாடகம் கட்ட முடியாது என்பது தான் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு. இதை உச்ச நீதிமன்றமும் பல்வேறு தருணங்களில் உறுதி செய்திருக்கிறது. 1924-ஆம் ஆண்டில் காவிரி நீர்ப்பகிர்வு தொடர்பாக சென்னை மாகாணத்திற்கும், மைசூர் மாகாணத்திற்கும் இடையே கையெழுத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்திலும் இது உறுதி செய்யப்படுள்ளது. இதை செயல்படுத்துவது தான் மத்திய அரசின் பணியாக இருக்க வேண்டும்.
மத்திய நீர்வளத்துறை அமைச்சராக முன்பு பணியாற்றிய உமாபாரதி, இந்த நிலைப்பாட்டை ஒப்புக் கொண்டு, தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் மேகேதாட்டு அணை கட்டுவதற்கான விண்ணப்பம் கர்நாடகத்திடமிருந்து வந்தால் அது திருப்பி அனுப்பப்படும் என்று அறிவித்திருந்தார். 09.06.2015 அன்று இது தொடர்பாக அப்போதைய பாமக மக்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ், உமாபாரதி கடிதம் எழுதியிருந்தார்.
இப்போதைய மத்திய நீர்வள அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தும் இந்த நிலைப்பாட்டை ஒப்புக் கொள்கிறார். ஆனால், அதற்குப் பிறகும் மேகேதாட்டு அணையை தடுக்கக் கூடாது என்று தனிப்பட்டக் கருத்தைக் கூற வேண்டிய தேவை என்ன? தமிழகம் & கர்நாடகம் இடையே நீதிபதியாக செயல்பட வேண்டிய மத்திய அமைச்சர் ஷெகாவத், கர்நாடகத்தின் வழக்கறிஞராக மட்டும் செயல்பட வேண்டிய தேவை என்ன? என்பது தான் பாமக எழுப்ப விரும்பும் வினாவாகும்,
இதற்கு முன்பும் கூட தமது கர்நாடகப் பாசத்தை அமைச்சர் ஷெகாவத் வெளிப்படுத்தியிருக்கிறார். 05.03.2022 ஆம் நாள் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய ஷெகாவத், ‘‘மேகேதாட்டு அணை விவகாரத்தை மத்திய அரசால் தீர்க்க முடியாது. ஆனால், மேகேதாட்டு அணை கட்டப்பட வேண்டும் என விரும்புகிறேன். மேகேதாட்டு சிக்கல் குறித்து இந்த ஆண்டிலிருந்து இரு மாநிலங்களும் பேச்சு நடத்தத் தொடங்கினால், நிச்சயமாக மேகேதாட்டு அணை சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும்’’என்று கூறினார். கடந்த இரு ஆண்டுகளில் மேகேதாட்டு சிக்கலில் மத்திய அரசு எடுத்த முடிவுகள் கர்நாடகத்திற்கு சாதகமாகவே உள்ளன.
மேகேதாட்டு அணை குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் விவாதிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்திருக்கும் நிலையில், கடந்த ஒன்றாம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் அது குறித்து விவாதிக்கப்பட்டதுடன், மேகாதாட்டு குறித்து முடிவெடுக்கும் பொறுப்பை மத்திய நீர்வள ஆணையத்திடம் காவிரி மேலாண்மை ஆணையம் ஒப்படைத்திருக்கிறது. இந்த முடிவுக்கு பின்னால் அமைச்சர் ஷெகாவத்தின் கர்நாடக ஆதரவு நிலைப்பாடு இருக்குமோ என்ற ஐயம் எழுகிறது.
அதேபோல், மேகேதாட்டு அணை தொடர்பான பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் இடையே இணைக்கம் ஏற்படுத்தப் போவதாக மத்திய அமைச்சர் ஷெகாவத் கூறியிருப்பதும் தேவையற்றது ஆகும். இது தொடர்பாக பேச்சு நடத்தலாம் என்று மத்திய அரசிடமிருந்து அழைப்பு வந்தால் அதை தமிழக அரசு ஏற்கக் கூடாது.
மேகேதாட்டு அணை தொடர்பாக எந்த முன்னெடுப்பையும் மத்திய அரசு மேற்கொள்ளக் கூடாது. மேகேதாட்டு அணை சிக்கலில் உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பின் அடிப்படையில் மட்டுமே மத்திய அரசு செயல்படும் என்று மத்திய நீர்வள அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் அறிவிக்க வேண்டும்” என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
|
பாஜகவில் இணைந்தார் விஜயதரணி: பிரதமர் மோடியின் தலைமை ஈர்த்ததாக விளக்கம் | செய்திப்பிரிவு | புதுடெல்லி | 2024-02-24 14:22:00 |
புதுடெல்லி: கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் இன்று (பிப்.24) பாஜகவில் இணைந்தார். கடந்த சில நாட்களாகவே விஜயதரணி பாஜகவில் இணைகிறார் எனப் பேசப்பட்ட நிலையில், அவர் இன்று டெல்லியில் அதிகாரபூர்வமாக பாஜகவில் இணைந்தார்.
கட்சியில் இணைந்த பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “பிரதமர் மோடியின் தலைமையில் சர்வதேச அளவில் இந்திய தேசம் பல சாதனைகளைப் புரிந்து வருவதால் அவரின் தலைமையில் அரசியல் பணியாற்ற பாஜகவில் இணைந்துள்ளேன்” என்றார் கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் பெண் எம்எல்ஏ, 3 முறை சட்டப்பேரவை உறுப்பினர் என்ற அந்தஸ்தைப் பெற்றிருந்த விஜயதரணி, கட்சியின் மீது கடும் அதிருப்தியில் இருந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகவே விஜயதரணி பாஜகவில் இணையப்போவதாக செய்திகள் வந்தன. இந்தச் சூழலில் அவர் இன்று பாஜகவில் அதிகாரபூர்வமாக இணைந்தார்.
செல்வப்பெருந்தகை ரியாக்ஷன்: விஜயதரணி பாஜகவுக்கு சென்றது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அளித்தப் பேட்டியில், “விஜயதரணிக்கு கட்சி 3 முறை வாய்ப்பு கொடுத்தது. ஆனாலும் அவர் கட்சி மாறியிருக்கிறார். எங்கிருந்தாலும் வாழ்க” என்று கருத்து தெரிவித்தார்.
அண்ணாமலை வரவேற்பு: “காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி, பிரதமர் மோடியின் சீரிய தலைமையால் கவரப்பட்டு, டெல்லியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் இன்று பாஜகவின் இணைந்துள்ளார். அவரை வரவேற்பதோடு, அவரது வருகை, தமிழக பாஜகவுக்கு மேலும் வலுசேர்க்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
அதிருப்தி ஏன்? - கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜகவுக்கு கணிசமான வாக்கு வாங்கி கொண்டது. தற்போது காங்கிரஸை சேர்ந்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் இத்தொகுதி எம்.பி.யாக உள்ளார். வரும் மக்களவைத் தேர்தலில் இத்தொகுதியை காங்கிரஸ் தக்க வைக்குமா அல்லது பாஜக வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. காங்கிரஸ் சார்பில் மீண்டும் விஜய் வசந்த்துக்கே சீட் வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
அதேநேரம், 3 முறை விளவங்கோடு தொகுதியில் எம்எல்ஏவாக தொடர் வெற்றி பெற்ற விஜயதரணி, இம்முறை கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட தனக்கு எம்.பி. சீட் வழங்க வேண்டும் என காங்கிரஸ் மேலிடத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால், அதுகுறித்து எவ்வித தகவலும் காங்கிரஸ் தரப்பில் இல்லாத நிலையில், பாஜகவில் இணைய முடிவு செய்ததாகவும், அவர் குமரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடப் போவதாகவும் தகவல்கள் பரவி வந்தது.
இதனிடையே, காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறும்போது, “பாஜகவில் இணைகிறீர்களா என்று அவரிடம் கேட்டதற்கு ஆமாம் என்றும் சொல்லவில்லை. இல்லை என்றும் சொல்லவில்லை. இவர் கட்சியிலிருந்து விலகுவதால் காங்கிரஸுக்கு எந்த பாதிப்பு இல்லை” என்றது குறிப்பிடத்தக்கது.
|
சென்னை, மதுரை பல்கலை., நிதி நெருக்கடிக்கு தீர்வு காண்க: அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-24 11:59:00 |
சென்னை: மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தை நிதி நெருக்கடியிலிருந்து மீட்கவும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்கவும் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று (சனிக்கிழமை) அவர் வெளியிட்ட அறிக்கையில், “சென்னைப் பல்கலைக்கழகமும், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகமும் வெவ்வேறு காரணங்களால் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன. அதற்கு தீர்வு காண வேண்டும் என்று இரு பல்கலைக்கழகங்களின் பணியாளர்களும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த சிக்கலுக்கு தீர்வு காண தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் அங்கு பணியாற்றும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களுக்கும் கடந்த திசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களுக்கான ஊதியம் வழங்கப்படவில்லை. அதேபோல், ஓய்வூதியர்களுக்கும் இரு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. அதைக் கண்டித்தும், உடனடியாக ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அங்குள்ள பணியாளர்கள் கடந்த 9 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், அவர்களின் கோரிக்கைகள் குறித்து தமிழக அரசுத் தரப்பில் இருந்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.
காமராசர் பல்கலைக்கழகத்தின் அவசரத் தேவைகளுக்காக வைக்கப்பட்டிருந்த மூலதன நிதி ரூ.300 கோடி ஏற்கனவே செலவு செய்யப்பட்டு விட்ட நிலையில், பல்கலைக்கழக நிதி ஆதாரங்கள் அனைத்தும் வறண்டு விட்டன. அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டால் மட்டுமே நிலைமையை சமாளிக்க முடியும். ஆனால், அரசுத் தரப்பில் நிதியுதவி வழங்கப்படாத நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே குறித்த காலத்தில் ஊதியம் வழங்க முடியவில்லை. இப்போது இரு மாதங்களாக ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதுடன், இம்மாதத்திற்கான ஊதியத்தையும் வழங்க இயலாத நிலை உருவாகியுள்ளது. இது மிகவும் மோசமான நிலை ஆகும்.
இன்னொருபுறம் சென்னைப் பல்கலைக்கழகத்தின் வங்கிக் கணக்குகளை வருமானவரித் துறை முடக்கி வைத்திருப்பதால், அதன் விடுதிகளில் மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்கு கூட தடுமாறும் நிலை உருவாகியுள்ளது. பல்கலைக்கழகம் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையில் ஒரு குறிப்பிட்ட அளவை செலுத்தினால் வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்க தயாராக இருப்பதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் நேற்று உண்ணாநிலை போராட்டம் நடத்தியுள்ளனர். ஆனாலும் அரசுத் தரப்பிலிருந்து எந்த உதவியும் வழங்கப்படவில்லை.
2017-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை வருமானவரித்துறைக்கு சென்னை பல்கலைக்கழகம் ரூ424 கோடி வரி பாக்கி வைத்திருக்கிறது. அதற்கான முதன்மைக் காரணம் , சென்னைப் பல்கலைக்கழகங்களின் நியமனங்கள், பதவி உயர்வுகள் ஆகியவற்றில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளின் காரணமாக கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்படும் நிதியை தமிழக அரசு குறைந்து வந்தது தான். அதனால் தான் சென்னைப் பல்கலைக்கழகம் ஓய்வூதிய நிதி உள்ளிட்டவற்றை ஊதியம் வழங்க பயன்படுத்தியது என்பதை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23-ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியிருந்தேன்.
சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை சென்னைப் பல்கலைக்கழகத்திடம் ரூ.500 கோடி வரை உபரி நிதி இருந்தது. ஆனால், பல்கலைக்கழகத்தின் செலவுகளுக்கு தமிழக அரசு போதிய நிதி, மானியத்தை வழங்கத் தவறியது தான் நிதிநிலை அறிக்கை மோசமடைந்ததற்கு காரணம் ஆகும். அதற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். இந்நிலையிலிருந்து பல்கலைக்கழகம் மீளவும் அரசு தான் உதவ வேண்டும். ஆனால், தமிழக அரசோ இதை பல்கலைக்கழகத்தின் பிரச்சினையாகக் கருதி, எந்த உதவியும் செய்யாமல் ஒதுங்கி நிற்கிறது. இது பெரும் தவறு.
தமிழ்நாட்டின் முதன்மையான பல்கலைக்கழகம் சென்னைப் பல்கலைக்கழகம். பெருந்தலைவர் காமராசர் அவர்களால் உருவாக்கப்பட்டு, பின்னாளில் அவரது பெயரையே தாங்கி நிற்கும் கல்வி நிறுவனம் மதுரை காமராசர் பல்கலைக்கழகம். தமிழ்நாட்டின் அடையாளங்களாக திகழும் இந்த இரு பல்கலைக்கழகங்களும் முடங்கி விடாமல் காக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது. எனவே, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தை நிதி நெருக்கடியிலிருந்து மீட்கவும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்கவும் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
|
அதிமுகவுடன் பாமக, தேசிய லீக் பேச்சு | செய்திப்பிரிவு | கூறியதாவது | 2024-02-24 11:26:00 |
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவுடன் கூட்டணி சேர்வதாக எந்த கட்சியும் அறிவிக்கவில்லை. ஏற்கெனவே பாமக நிறுவனர் ராமதாஸை, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தைலாபுரத்தில் சந்தித்து பேசினார். ஆனால் பாமகவின் முடிவை இதுவரை தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் நேற்று பாமக எம்எல்ஏக்கள் 3 பேர் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை நேற்று சந்தித்து கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக நேற்று மாலை இந்திய தேசிய லீக் அகில இந்திய தலைவர் முகமது சுலைமான், பொதுச்செயலாளர் அகமது தேவர்கோவில், மகளிரணி தலைவி தஸ்லிம் இப்ராஹிம் சுலைமான், மாநிலத் தலைவர் முனிருதீன் ஷெரிப் ஆகியோர் பழனிசாமியை சந்தித்து பேசியுள்ளனர்.
பின்னர் முனிருதின் ஷெரிப் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுகவுக்கு மக்களவை தேர்தலில் ஆதரவு அளிப்பது, தொகுதிகள் ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்தோம். அதிமுக அமைத்துள்ள குழுவிடம் பேசி முடிவெடுக்குமாறு பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை நடைபெறும் கட்சியின் நிர்வாக குழு கூட்டத்தில், தொகுதி எண்ணிக்கை தொடர்பாக முடிவெடுத்த பின்னர் அதிமுக குழுவை சந்திப்போம். 10 ஆண்டுகளாக அதிமுக கூட்டணியில்தான் இருந்தோம். பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் விலகினோம். பின்னர் சிறுபான்மையினருக்கு நல்லது செய்வார்கள் என திமுகவுடன் இருந்தோம். நாங்கள் எதிர்ப்பார்த்த அளவுக்கு நன்மை கிடைக்கவில்லை. அதனால் அதிமுகவுடன் எங்கள் தொடர்பை புதுப்பித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
|
சமூக வலைதள பிரச்சாரத்தை தீவிரமாக்க தமிழக காங். திட்டம் | செய்திப்பிரிவு | கூறியதாவது | 2024-02-24 10:56:00 |
தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில், காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வெ.கி.சம்பத்தின் 47-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை சத்யமூர்த்தி பவனில் நேற்று செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் செல்வப்பெருந்தகை கூறியதாவது: விவசாயிகளின் ஆதரவு தேவை. ஆனால் அவர்களுக்கான உரிமையை மோடி மறுக்கிறார். அதனால் போராட்டம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இதிலிருந்து போடி தப்ப முடியாது. தமிழகத்தில் பாஜக 3 சதவீத வாக்குகள் கூட பெற வாய்ப்பில்லை. கட்சியில் சிறப்பாக செயல்படாத தலைவர்கள் மக்களவை தேர்தலுக்கு பிறகு மாற்றப்படுவார்கள்.
மக்களவை தேர்தலில் பாஜகவினரின் கருத்துகள், செயல்பாடுகளுக்கு பதிலடி கொடுப்பது தொடர்பாக காங்கிரஸ் சமூக வலைத்தள நிர்வாகிகளுடன் நானும், மேலிட பார்வையாளர் அஜோய்குமாரும் ஆலோசனை நடத்தினோம். இதில் சமூக வலைத்தள பிரச்சாரத்தை தீவிரப்படுத்துவது, அதில் மோடி அளித்த வாக்குறுதிகள், அதை செயல்படுத்தாதது, விலை உயர்வு தொடர்பாக மக்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்ப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.
|
தேர்தலுக்கு பிறகு கட்சியிலும் அரசிலும் மாற்றம்: மா.செ. கூட்டத்தில் ஸ்டாலின் எச்சரிக்கை | செய்திப்பிரிவு | பேசியதாவது | 2024-02-24 10:09:00 |
மக்களவை தேர்தலையொட்டி, திமுக மாவட்ட செயலாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது.
இதில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் மக்களவைத் தொகுதிவாரியாக நடைபெற்ற கூட்டங்கள் அனைத்தும் பெரும் வெற்றியடைந்துள்ளன.
தேர்தல் பணிகளைப் பொறுத்தவரை, நாம் மிக வேகமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். புதுவை உட்பட 40 தொகுதியிலும் நாம்தான் முழுமையான வெற்றி பெறுவோம் என்பதில் சந்தேகம் இல்லை.
அந்த வெற்றி மகத்தானதாக, பெறும் வாக்குகள் அபரிமிதமாக இருக்கவேண்டும். நம்முடைய ஒவ்வொரு திட்டம் பற்றியும் படித்துவிட்டு, எளிமையாகப் பரப்புரைச் செய்யவேண்டும். ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரையும் காப்பாற்றும் அரசு, நமது அரசு என எளிமையாகப் புரியும்வகையில் பரப்புரை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
எச்சரிக்கை: கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது,‘‘ தேர்தல் பணிகள் விரைவாக நடைபெற்றுவரும் நிலையில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோரிக்கைகள், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவுக்கு வந்துள்ளது. பாஜகவின் அநீதிகள், திமுகவின் சாதனைகள், பட்ஜெட் அம்சங்கள், அதிமுகவின் நடவடிக்கைகள் தொடர்பாக மக்களிடம் வரும் 26ம் தேதி முதல் வீடுவீடாக சென்று தெரிவிக்க வேண்டும்.
தற்போதைய நிலையில், கட்சி நிர்வாகிகள் முதல் அடிமட்டத்தொண்டர்கள் வரை என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என்ற அனைத்து விவரங்களும் தலைமைக்குத் தெரியும். குறிப்பாக கொங்கு மாவட்டங்களில் அதிமுக, பாஜகவினருடன் தொடர்பில் இருப்பவர்கள் யார் என்பதையும் அறிந்து வைத்துள்ளோம்.
தேர்தலின் போது கடந்த முறையை விட வாக்கு சதவீதம் அதிகம் பெற வேண்டும். வாக்கு குறைந்தால் மாவட்ட செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலுக்குப் பிறகு் கட்சியிலும், அரசிலும் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம்’’ என தெரிவித்துள்ளார்.
|
கோடநாடு எஸ்டேட் பங்களாவை நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்ய நீதிமன்றம் அனுமதி | செய்திப்பிரிவு | உதகை | 2024-02-24 10:05:00 |
உதகை: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை நடந்தது தொடர்பான வழக்கு உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. சிபிசிஐடி கூடுதல் எஸ்.பி. முருகவேல் தலைமையிலான போலீஸார், அரசு வழக்கறிஞர் கனகராஜ் ஆஜராகினர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் சயான், வாளையாறு மனோஜ் ஆஜராகினர்.
இந்நிலையில், குற்றச் சம்பவம் நடைபெற்ற இடத்தில் நீதிபதி தலைமையில் நேரில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கடந்த 9-ம் தேதி எதிர் தரப்பு வழக்கறிஞர் விஜயன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது.
மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட மாவட்ட நீதிபதி அப்துல் காதர், "நிபுணர் குழு அமைத்து கோடநாடு பங்களாவை ஆய்வு செய்யலாம். அதை முழுவதுமாக வீடியோ எடுத்து, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். சாட்சியங்களை அழிக்கக் கூடாது" என்று உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 8-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இதுகுறித்து அரசுத் தரப்பு வழக்கறிஞர் கனகராஜ் கூறும்போது, "கோடநாடு பங்களாவை நீதிமன்றம் மூலமாக ஆய்வு செய்ய எந்த ஆட்சேபனையும் இல்லை. அரசுவழக்கறிஞர், சிபிசிஐடி போலீஸார்,பொதுப்பணி, மின்வாரிய அதிகாரிகள் அடங்கிய நிபுணர் குழு, கோடநாடு பங்களாவை ஆய்வு செய்யலாம்" என்றார்.
|
தனி சின்னத்தில் மட்டுமே தமாகா போட்டியிடும்: இளைஞரணி தலைவர் யுவராஜா தகவல் | செய்திப்பிரிவு | உதகை | 2024-02-24 09:59:00 |
உதகை: தமாகா இளைஞரணித் தலைவர்யுவராஜா உதகையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
வரும் மக்களவைத் தேர்தலில் தமாகா தனது சைக்கிள் சின்னத்தில் போட்டியிட உள்ளது. குறைந்தது 2 தொகுதியில் போட்டியிடுவோம். நாங்கள் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியுடன் நெருக்கமாக உள்ளோம். ஆனால், பழக்கம் வேறு, தேர்தல் வேறு.
நாங்கள் மாநிலம் முழுவதும் களப் பணியாற்றி உள்ளோம். எங்களது கோரிக்கைகளை ஏற்று, எங்களை கண்ணியத்துடன் நடத்தும் கட்சியுடன் கூட்டணி அமைப்போம். கருத்துக் கணிப்புகள் எப்போதும் துல்லியமானதாக இருப்பதில்லை. சத்தீஸ்கரில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. ஆனால் என்ன நடந்தது?
திமுக மீது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி உள்ளது. இதுமக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெவ்வேறு விதமாக மக்கள்வாக்களிக்கின்றனர்.
மக்களவைத் தேர்தலில் மக்கள் பணத்துக்காக வாக்களிக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார். மாநிலப் பொது செயலாளர் சரத் உடனிருந்தனர்.
|
பெண் சார் பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை | செய்திப்பிரிவு | நாகர்கோவில் | 2024-02-24 09:56:00 |
திருநெல்வேலி/நாகர்கோவில்: அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், பெண் சார் பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர்.
திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளர் அலுவலராக பொறுப்பு வகிப்பவர் வேலம்மாள். இவர் 2014 முதல் 2021 வரையிலான காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திருநெல்வேலி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கின் அடிப்படையில், அம்பாசமுத்திரம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி எஸ்கால் தலைமையிலான போலீஸார் நேற்று சோதனை மேற்கொண்டனர். அதேபோல, வேலம்மாளின் மகள் கிருஷ்ணவேணியின் வீடு, கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூரில் உள்ளது. அங்கு கன்னியாகுமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு ஏடிஎஸ்பி ஹெக்டர்தர்மராஜ் தலைமையில் சோதனை நடைபெற்றது.
ஒரே நேரத்தில் நடைபெற்ற இந்தச் சோதனையில், ஏராளமான வங்கி பணப் பரிவர்த்தனை ஆவணங்கள் சிக்கியதாக போலீஸார் தெரிவித்தனர்.
|
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் சாதி, வருமான சான்றிதழ் வழங்கும் வசதி: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல் | செய்திப்பிரிவு | கோவை | 2024-02-24 09:39:00 |
கோவை: தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் சாதி, வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ் வழங்கும் வசதி ஒரு மாதத்தில் ஏற்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார்.
பள்ளிக்கல்வித் துறை சார்பில், தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் நடத்திய `பெற்றோர்களைக் கொண்டாடுவோம்' என்ற மாநாடு கோவையில் நேற்றுநடைபெற்றது. தலைமை வகித்துஅமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசும்போது, "தமிழக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.44,042 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தபிறகு பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு மட்டும் ரூ.1.57,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், அரசுப் பள்ளிமாணவ, மாணவிகள் உயர்கல்வி பயில்வதற்காக மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன" என்றார்.
பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாணவர்களுக்கு சாதி, வருமானம் மற்றும் இருப்பிடச் சான்றிதழ்களை பள்ளிகளில் வழங்கும் வசதி ஒரு மாதத்தில் ஏற்படுத்தப்படும். 20 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிக்கு நிலம் நன்கொடை அளித்தவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், அவர்களை கவுரவப்படுத்தி வருகிறோம்.
திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கோவை மாவட்டங்களில் அரசுப்பள்ளிகளுக்கு ரூ.448 கோடி மதிப்பில் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித் துறைச் செயலர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்வேதா சுமன், பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், தமிழ்நாடு மாநிலபெற்றோர் ஆசிரியர் சங்க மாநிலத்துணைத் தலைவர் வி.முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஆதார் பதிவு தொடக்கம்: கோவை காளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ‘பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு’ என்ற சிறப்பு முகாமை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கிவைத்தார். தொடர்ந்து, ஆதார் பதிவுச் சான்றுகளை மாணவர்களுக்கு வழங்கிய அவர், "வரும் மார்ச் 1-ல் பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்குகிறது. மாணவர்கள் படிப்பில் அதிக கவனத்தை செலுத்த வேண்டியது அவசியம்.
மாணவர்களுக்கு படிப்பில் ஏற்படும் சந்தேகங்கள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். தேர்வுக்கு முதல் நாள் இரவு தூங்காமல், சாப்பிடாமல் தொடர்ந்து படிக்க வேண்டாம். தேர்வு குறித்து பயமோ, பதற்றமோ இருக்கக்கூடாது’’ என்றார்.
|
அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் தந்தை காலமானார் | செய்திப்பிரிவு | திருப்பூர் | 2024-02-24 09:28:00 |
திருப்பூர்: தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனின் தந்தை சா.பெருமாள்சாமி நேற்று உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
அமைச்சர் சாமிநாதன், திருப்பூர் மாவட்டம் முத்தூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது தந்தை சா.பெருமாள் சாமி (94).தாயார் தங்கமணி. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தாயார் தங்கமணி உயிரிழந்தார். வயது மூப்பு காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சா.பெருமாள் சாமி கடந்த 3 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலை 7.50 மணியளவில் அவர் உயிரிழந்தார்.
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருப்பூர் தெற்குமாவட்ட திமுக செயலாளர் இல.பத்மநாபன் மற்றும் கட்சியினர், பிரமுகர்கள் உள்ளிட்டோர் அமைச்சர் மு.பெ.சாமிநாதனை நேரில் சந்தித்து, இரங்கல் தெரிவித்தனர். அவரது இறுதி சடங்கு நேற்று மாலை முத்தூரில் உள்ளபங்களா தோட்டத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
முதல்வர் ஸ்டாலின் இரங்கல்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் தந்தை முத்தூர் சா.பெருமாள்சாமி மறைந்தசெய்தியறிந்து வருந்தினேன். தந்தையை இழந்து வாடும் சாமிநாதனை தொடர்பு கொண்டு இரங்கலும், ஆறுதலும் தெரிவித்தேன். அவரது குடும்பத்தினர், உறவினர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
|
அரசு மருத்துவரிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட அமலாக்கத் துறை அதிகாரிக்கு இடைக்கால ஜாமீன் மறுப்பு | செய்திப்பிரிவு | மதுரை | 2024-02-24 09:22:00 |
மதுரை: அரசு மருத்துவரிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
அரசு மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட மதுரை அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமீன் கேட்டு திண்டுக்கல் நீதிமன்றத்திலும், பின்னர் உயர் நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தார். அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில், உயர் நீதிமன்ற கிளையில் ஜாமீன் கோரி அங்கித் திவாரி மீண்டும் மனு தாக்கல் செய்தார். அதில், "கைது செய்யப்பட்ட பின்னர் 80 நாட்களுக்கு மேலாக சிறையில் இருந்து வருகிறேன். வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, ஜாமீன் வழங்க வேண்டும்" என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி விவேக்குமார் சிங் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் திருவடிக்குமார் வாதிடும்போது, "வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதனால்தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. குற்றப்பத்திரிகை தயாராக உள்ளது. அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது" என்று தெரிவித்தார்.
இதையடுத்து, அங்கித் திவாரி தரப்பில் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்த நீதிபதி, விசாரணையை மார்ச் 12-க்கு தள்ளிவைத்தார்.
|
ரூ.313 கோடியில் மருத்துவ கட்டிடங்களை பிரதமர் நாளை திறக்கிறார்: சுகாதாரத் துறை அமைச்சர் தகவல் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-24 09:07:00 |
சென்னை: கிண்டி தேசிய முதியோர் நல மருத்துவமனை உட்பட ரூ.313.60 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை பிரதமர் நாளை காணொலி மூலம் திறந்து வைக்கிறார்.
சென்னை வந்துள்ள மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தின் சுகாதாரம் மற்றும் மனநலத் துறையின் அமைச்சர் ஆம்பர் ஜேட் சாண்டர்சன் தலைமையிலான குழுவினர், சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை நேற்று சந்தித்தனர். அப்போது, தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகள், திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் குறித்து கேட்டறிந்தனர். தமிழகத்தின் திட்டங்களை தங்கள் நாட்டில் செயல்படுத்துவது குறித்து ஆலோசனை செய்தனர். அப்போது, சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் தேரணிராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: தமிழகத்தில் பல்வேறு வகையான மருத்துவக் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. வரும் 25-ம் தேதி மாலை 4 மணி அளவில் சென்னை கிண்டியில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள தேசிய முதியோர் நலமருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் திறந்துவைக்கிறார். நாட்டிலேயே தமிழகத்தில்தான் பிரத்யேகமாக முதியோருக்காக மருத்துவமனை அமைந்துள்ளது.
தீவிர சிகிச்சை பிரிவு: உளுந்தூர்பேட்டை, அரக்கோணம், ஓட்டேரி, சிவகாசி, திருவண்ணாமலை ஆகிய இடங்களில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடங்கள் கட்டப்படவுள்ளன. இப்பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
அதேபோல், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, நீலகிரி மாவட்டம் குன்னூர், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஆகிய பகுதிகளில் தலா ரூ.1.75 கோடியில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகங்கள் கட்டும் பணிகள் மற்றும் ரூ.25 கோடியில் கட்டப்படவுள்ள காசநோய் ஆராய்ச்சி மையம் என 10 பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர், கட்டிமுடிக்கப்பட்ட ரூ.313.60 கோடி மதிப்பீட்டிலான கட்டிடங்களை திறந்து வைக்கிறார்.
மருத்துவமனை கட்டிடம் திறப்பு: மதுரை மாவட்டத்தில் சுகாதாரத் துறை சார்பில் ரூ.334.25 கோடியில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனைகளின் கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக வரும் 27-ம் தேதி திறந்து வைக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
|
தமிழகத்தில் உள்ள 65 சதவீத கோயில்களில் எந்த பராமரிப்பு பணியும் சரியாக நடைபெறவில்லை: அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-24 08:59:00 |
சென்னை: தமிழகத்தில் உள்ள 65 சதவீத கோயில்களில் எந்த பராமரிப்பு பணியும் சரியாக நடைபெறவில்லை என்றும் அதுதொடர்பாக அரசும் கவலை கொள்வதில்லை என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பழமையான புராதன சிறப்பு மிக்க கோயில்களில் தூய்மை மற்றும் சீரமைப்பு பணிகளில் பொதுமக்கள் பங்கெடுக்கும் வகையில் உழவாரப் பணிகளை மேற்கொள்ள அனுமதி மறுக்கப்படுவதாகக்கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கே. கார்த்திகேயன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரான வழக்கறிஞர் கே.கார்த்திகேயன் ஆஜராகி, பாரம்பரியமிக்க பழமையான கோயில்களில் உழவாரப்பணிகள் மேற்கொள்ளப்படாததால் அந்த கோயில்கள் பாழடைந்த நிலையில் உள்ளன.
உழவாரப் பணி மேற்கொள்ள பக்தர்கள் அனுமதி கோரினால் அதற்கு செயல் அலுவலர்கள் அனுமதி மறுக்கின்றனர் என குற்றம் சாட்டி சில கோயில்களின் புகைப்படங்களையும் ஆதாரமாக சமர்ப்பித்தார்.
ஆனால் அதற்கு அறநிலையத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ஆர்.ஆர்.அருண் நடராஜன் ஆட்சேபம் தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழகத்தில் உள்ள 65 சதவீத கோயில்களில் எந்த பராமரிப்பு பணியும் சரியாக நடைபெறவில்லை. அதுதொடர்பாக தமிழக அரசும் கவலை கொள்வதில்லை என கண்டனம் தெரிவித்தனர்.
பின்னர் நீதிபதிகள், மாநிலம் முழுவதும் உள்ள கோயில்களில் உழவாரப் பணிகளில் தன்னார்வலர்கள், பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் அறநிலையத்துறை 2 வாரங்களில் திட்டம் வகுக்க வேண்டும். ஆழ்வார்கள், நாயன்மார்கள் பாடல் பாடப்பெற்ற 540 பழமையான பாரம்பரியமிக்க, புராதன கோயில்களை ஆய்வு செய்ய, மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைக்க வேண்டும். இந்தக்குழு மாவட்ட நீதிபதி அல்லது மாவட்ட கூடுதல் நீதிபதியுடன் இணைந்து ஆய்வு நடத்தி, அந்த 540 கோயில்களின் நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இவற்றை, 2 வார காலத்துக்குள் அறநிலையத்துறை அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை அடுத்த மாதத்துக்கு தள்ளி வைத்துள்ளனர்.
|
35 மாவட்டங்களில் ரூ.295 கோடி மதிப்பீட்டில் 1,674 புதிய நீர்தேக்க தொட்டிகள்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-24 08:53:00 |
சென்னை: உயிர் நீர் இயக்கத்தின்கீழ் தமிழகத்தின் 35 மாவட்டங்களில் உள்ள கிராம பகுதிகளில் ரூ.294.83 கோடியில் 1,674 புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் கட்ட நிர்வாக அனுமதி அளித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து நகராட்சி நிர்வாகத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கிராமப்புற குடியிருப்பு பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் இந்த ஆண்டுக்குள் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கி, அதன்மூலம் தினசரி ஒருவருக்கு 55 லிட்டர் குடிநீர் வழங்குவது மத்திய, மாநில அரசுகள் மற்றும் மக்களின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் உயிர் நீர் இயக்கத்தின் நோக்கம் ஆகும்.
தமிழக கிராம பகுதிகளில் உள்ள 1.25 கோடி வீடுகளில் இத்திட்டத்தின்கீழ் இதுவரை 99 லட்சம் வீடுகளுக்கு (79.03 சதவீதம்) குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளில் 5,578 கிராம ஊராட்சிகளுக்கு 100 சதவீதம் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், கன்னியாகுமரி மாவட்டங்களின் கிராமப்புற பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 100 சதவீதம் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், வீடுதோறும் குடிநீர் வழங்கும் மாவட்டங்கள் என காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்கள் சான்றளிக்கப்பட்டுள்ளன.
ஜல் ஜீவன் திட்டம்: ஜல் ஜீவன் திட்டத்தின்கீழ் 45 புதிய கூட்டு குடிநீர் திட்டங்கள், பயன்பாட்டில் உள்ள 56 கூட்டு குடிநீர் திட்டங்களை மறுசீரமைப்பு செய்தல் மற்றும் நீடித்த நிலைத்தன்மை உடைய நீராதாரத்தை கொண்டுள்ள கிராமங்களில் ஒற்றை கிராம திட்டங்கள் ஆகியவற்றை செயல்படுத்த தமிழக அரசால் ரூ.18,228.38 கோடி மதிப்பீட்டில் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.
இந்நிலையில், மத்திய, மாநில அரசுகள் மற்றும் மக்களின் நிதி பங்களிப்புடன் ரூ.294.83 கோடியில் உயிர் நீர் இயக்கத்தின்கீழ் 35 மாவட்டங்களில் கிராம பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் தினசரி ஒருவருக்கு 55 லிட்டர் வீதம் குடிநீர் வழங்கும் வகையில், 1,674 புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் அமைக்க நிர்வாக அனுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதன்மூலம், ஊரக பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் அரசின் நோக்கத்தை அடைவதில் இத்திட்டமும் முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
|
தமிழக மீனவர்களுக்கு சிறை தண்டனை: இலங்கைக்கு காங்., பாமக, மதிமுக கண்டனம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-24 08:43:00 |
சென்னை: தமிழக மீனவர்களுக்கு சிறை தண்டனை விதித்த இலங்கைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கு.செல்வப்பெருந்தகை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள ராமேசுவரம் மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்துக்குரியது. இதை எதிர்த்து மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் அடக்குமுறை அதிகரித்துள்ளது. இந்த விவகாரத்தில் கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவைப் புறக்கணித்து, வரும் 24-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ள மீனவர்களுக்கு தமிழக காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கிறது.
ராமதாஸ்: மீனவர்கள் சிறையில் அடைக்கப்படுவதை தடுக்க முதல்வர் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் டெல்லிக்குச் சென்று பிரதமர் மோடியை சந்தித்து, மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணுமாறு வலியுறுத்த வேண்டும்.
வைகோ: இலங்கையின் புதிய கடல் தொழில் மீன்பிடி சட்டத்தின்படி தமிழக மீனவர்களைக் கைது செய்வது, கோடிக்கணக்கில் அபராதம் விதிப்பது, படகுகளை அரசுடமையாக்குவது மற்றும் அதிகபட்சமாக 2 ஆண்டுகள் வரை சிறை் தண்டனை விதிப்பது போன்ற நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபடுகிறது. இலங்கை அரசின் புதிய சட்டத்தை அமல்படுத்த விடாமல் தடுக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் 4 ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தினர். தற்போது வரை மீனவர்களின் கோரிக்கையை மத்திய அரசு புறக்கணிப்பது கடும் கண்டனத்துக்குரியது. இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களை விடுவிப்பதுடன், பறிமுதல் செய்யப்பட்டுள்ள மீன்பிடி படகுகளையும் மீட்க வேண்டும்.
|
மக்களவை தேர்தலில் வெற்றிபெற உறுதியேற்போம்: ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு பழனிசாமி கடிதம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-24 08:35:00 |
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழக முதல்வராக 6 முறை பதவி வகித்தவர் ஜெயலலிதா. அவரது வழியில் பயணித்து, மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை வழங்கி, மாணவர்களின் வாழ்வில் விளக்கேற்றி வைத்தோம்.
எம்ஜிஆர், ஜெயலலிதா பாதையில் தொடர்ந்து செல்லும் நானும், என்னுடன் கரம் கோர்த்து பயணிக்கும் தொண்டர்களும் அதிமுகவை மென்மேலும் வலுப்படுத்த வேண்டும். இரு பெரும் தலைவர்களின் வழியில் அதிமுக பீடுநடை போடுகிறது.
அடிப்படைத் தொண்டனுக்கும் உச்சபட்ச பதவியை வழங்குவது அதிமுகதான். ஜெயலலிதா சொன்னதைப்போல, இந்த இயக்கம் 100 ஆண்டுகளைக் கடந்து மக்கள் பணியாற்ற வேண்டுமெனில், பல்வேறு வகைகளில் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் திமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர சபதமேற்போம். மக்கள் அதிமுகவுக்கு வாக்களிக்கத் தயாராகிவிட்டார்கள்.
கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் இரவு, பகல் பாராமல் தேர்தல் பணியாற்றி, மக்களவைத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்று, அதை எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் சமர்ப்பிக்க உறுதியேற்போம். 2026-ம் ஆண்டு அதிமுகவின் ஆண்டு என்பதை உறுதிப்படுத்துவோம். இவ்வாறு கடிதத்தில் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
|
உலக நாடுகளுக்கு இணையான தொழில்நுட்ப வளர்ச்சி: ‘யுமாஜின்’ தகவல் தொழில்நுட்ப மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் உறுதி | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-24 08:30:00 |
சென்னை: உலக நாடுகளுக்கு இணையான தொழில்நுட்ப வளர்ச்சியை தமிழகத்திலும் உருவாக்குவோம் என்று சென்னையில் நேற்று தொடங்கிய ‘யுமாஜின்’ தகவல் தொழில்நுட்ப மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, சென்னையில் 500 இடங்களில் இலவச வைஃபை வசதியை தொடங்கி வைத்தார்.
தமிழக தகவல் தொழில்நுட்பவியல், டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் ‘யுமாஜின் 2024’ (Umagine TN) என்ற தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு 2 நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
முன்னதாக, சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் 1,000 முக்கிய இடங்களில் இலவச வைஃபை சேவை வழங்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, முதல்கட்டமாக சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பூங்காக்கள், பேருந்து நிலையங்கள், கடற்கரை என முக்கியமான 500 இடங்களில் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (எல்காட்) மூலம் இலவச வைஃபை வசதி வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.
அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: நாட்டிலேயே முதன்முதலாக தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத்துக்கென தனி கொள்கை, தனி துறை, டாஸ்க் ஃபோர்ஸ், ‘தமிழ்நெட்-99’ என்று கடந்த 1997-ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில்தான் அத்துறையில் மாபெரும் பாய்ச்சல் தொடங்கியது. நாட்டின் முதல் டைடல் பூங்காவை 2000-ல் அவர்தான் உருவாக்கினார்.
இந்த ஆட்சிக் காலமும் அதேபோல இருக்கவேண்டும் என்று தீவிரமாக செயல்படுகிறோம். அதனால்தான், தமிழ்நாடு தரவுமைய கொள்கை, தரவு கொள்கை, தகவல் தொழில்நுட்ப துறைக்கான தரநிலை கொள்கை உள்ளிட்டவற்றை வெளியிட்டுள்ளோம். அத்துடன், தகவல் தொழில்நுட்ப நகரங்கள், டைடல் பூங்காக்கள் உருவாக்க கட்டமைப்பாளர்கள், முதலீட்டாளர்களுடன் ஆலோசனை நடத்தினோம். ஐ.டி. நிறுவனங்களுடன் பேசி 5G அலைக்கற்றை அமைப்பதை துரிதப்படுத்தினோம்.
இயற்கை பேரிடர் காலங்களில், இணையம் மற்றும் தகவல் தொடர்பு இணைப்புகள் செயலிழக்காமல் இயங்க தேவையான முன்னேற்பாடுகள் குறித்து விவாதித்தோம். அனிமேஷன், காமிக்ஸ், கணினி விளையாட்டு சார்ந்த நிறுவனங்களுடன் கலந்துரையாடி உள்ளோம். தமிழகத்தில் இத்துறைகள் தொடர்பான வர்த்தகத்தை தொடங்கும் முயற்சிகளை செய்து வருகிறோம்.
தமிழ் இணைய கல்விக் கழகம் சார்பில் ‘கணித்தமிழ் -24’ மாநாடு நடத்தப்பட்டுள்ளது. 10 நாடுகளில் இருந்து 60-க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள், அறிஞர்கள், தொழில் துறை வல்லுநர்கள் இதில் பங்கேற்றனர். நாட்டிலேயே முதல் மாநிலமாக, ஆங்கிலம் அல்லாத மொழியில் ஒரு தொழில்நுட்ப மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம். இதுதான் இந்த ஆட்சியின் தனித்தன்மை.
நீண்டகாலமாக தடைபட்டிருந்த தமிழ்நாடு ஃபைபர்நெட் அமைப்பை விரைவுபடுத்தியுள்ளோம். புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் புத்தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்க பட்ஜெட்டில் ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் 20 லட்சம் சதுரஅடி பரப்பில் ரூ.1,100 கோடியில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காஉருவாக்கப்படுகிறது.
மதுரையில் 6.4 லட்சம் சதுரஅடியில் ரூ.345 கோடியிலும், திருச்சியில் 6.3 லட்சம் சதுரஅடியில் ரூ.350 கோடியிலும் புதிய டைடல் பூங்காக்கள் உருவாக்கப்பட உள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.200 கோடியில் மாநில தரவு மையம் மேம்படுத்தப்படும்.
தமிழகத்தை உலகின் மனிதவள தலைநகராக மாற்றுவோம். தகவல் தொழில்நுட்ப துறையினர் தேடிவரும் நகரமாக ஆக்குவோம். தொழில்நுட்பத்தில் உலக நாடுகள் எப்படிப்பட்ட முன்னேற்றத்தை அடைகிறதோ, அதே தொழில்நுட்ப வளர்ச்சியை அதே காலத்தில் தமிழகத்தில் உருவாக்க உழைப்போம். இவ்வாறு முதல்வர் பேசினார்.
மாநாட்டில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பழனிவேல் தியாகராஜன், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் எஸ்.கிருஷ்ணன், தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் தீரஜ்குமார், எல்காட் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் எஸ். அனீஷ் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
|
மேல்மா விவசாயிகள் சுழற்சி முறையில் உண்ணாவிரத போராட்டம் | செய்திப்பிரிவு | திருவண்ணாமலை | 2024-02-24 06:34:00 |
திருவண்ணாமலை: செய்யாறு அடுத்த மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி 4-வது நாளாக நேற்றும் நீட்டித்த உண்ணாவிரதப் போராட்ட களத்தில், காவல் துறையினரின் நெருக்கடியால் விவசாயிகள் தங்களது யுக்தியை மாற்றி சுழற்சி முறையில் பங்கேற்றுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, திட்டத்தை கைவிட வலியுறுத்தி கடந்த 7 மாதங்களாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு, கண்டனம் தெரிவித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, நிலமற்றவர்கள்தான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என கருத்து தெரிவித்திருந்தார்.
அமைச்சரின் கருத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும், நிலம் உள்ளதை நிரூபித்தால் அமைச்சர் பதவியில் இருந்து விலக தயாரா? என கேள்வி எழுப்பி போராட்டத்தை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்த 20-ம் தேதி சென்னையில் முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க சென்ற விவசாயிகளை, காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இதனால், மேல்மா கூட்டுச்சாலையில் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். உண்ணாவிரதம் இருந்த 10 விவசாயிகளின் உடல்நலன் பாதிக்கப்பட்டதாக கூறி, காவல் துறையினர் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது சலசலப்பை ஏற்படுத்தியது.
காவல் துறையினரின் நெருக் கடியால் தொடர் உண்ணாவிரதப் போராட்ட யுக்தியை விவசாயிகள் மாற்றிக் கொண்டுள்ளனர். சுழற்சி முறையில் விவசாயிகள் பங்கேற்க தொடங்கி உள்ளனர். முதற்கட்ட போராட்டத்தில் பங்கேற்ற 10 விவ சாயிகள், தங்களது உண்ணா விரதத்தை நேற்று முன்தினம் கைவிட்டனர்.
இதையடுத்து 2-வது கட்டமாக இளநீர்குன்றம் சாரதி (28), நர்மாப்பள்ளம் சரவணன் (37), கருணாகரன் (26), குறும்பூர் பரமசிவம்(60), சுந்தர வடிவேலு(45), மேல்மா காசி(51), நர்மாப்பள்ளம் எல்லப்பன் மனைவி கல்யாணி(70), ரத்தினம் மனைவி செந்தாமரை(55), இளநீர்குன்றம் பெருமாள் மனைவி பேபி(60) என 3 மூதாட்டிகள் உட்பட 9 பேர் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
|
மணல் குவாரி விவகாரம் | அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை எதிர்த்து தமிழக அரசு எப்படி வழக்குத் தொடர முடியும்? - உச்ச நீதிமன்றம் கேள்வி | செய்திப்பிரிவு | புதுடெல்லி | 2024-02-24 06:18:00 |
புதுடெல்லி: சட்டவிரோத மணல் குவாரி தொடர்பாக 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை எதிர்த்து தமிழக அரசு எப்படி வழக்கு தொடர முடியும் என கேள்வி எழுப்பியுள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள், இதுதொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க நேரிடும் என தெரிவித்து விசாரணையை பிப்.26-க்கு தள்ளி வைத்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள முக்கியமான மணல் குவாரிகளில் அரசுநிர்ணயம் செய்த அளவைவிட கூடுதலாக மணல் அள்ளப்பட்டு சட்டவிரோதமாக விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் கிடைத்த கோடிக்கணக்கான ரூபாய் வருமானத்தை சட்டவிரோதபணப்பரிமாற்றத்தில் ஈடுபடுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்தாண்டு செப்டம்பரில் தமிழகத்தில் 34 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனைமேற்கொண்டனர்.
இந்த சோதனையில் மணல் குவாரிகளின் மொத்த ஏஜெண்டாக செயல்பட்டு வந்த தொழிலதிபர்கள் புதுக்கோட்டை ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளின் வீடுகளில் இருந்து கணக்கில் காட்டப்படாத பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், ரூ. 12.82 கோடி ரொக்கம், ரூ.56.86 லட்சம் மதிப்புள்ள ஆயிரத்து 24 கிராம் எடையுள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசின் நீர்வளத்துறை முதன்மைப் பொறியாளர் முத்தையா நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆவணங்களுடன் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.
இடைக்காலத் தடை: அதையடுத்து திருச்சி, கரூர், அரியலூர், தஞ்சாவூர் மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராகி இதுதொடர்பாக விளக்கமளிக்க அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. இந்த சம்மனை எதிர்த்து தமிழக அரசின் பொதுத்துறைச் செயலர், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அமலாக்கத் துறையின் சம்மனுக்கு இடைக்காலத் தடை விதித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி பீலா எம்.திரிவேதி தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சட்டவிரோத மணல் குவாரிகள் தொடர்பாக அமலாக்கத்துறை 5மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பினால், அந்த சம்மனை எதிர்த்து தமிழக அரசு எப்படி வழக்குத் தொடர முடியும்? எந்தசட்டத்தின் அடிப்படையில் தமிழகஅரசு இவ்வாறு வழக்குத் தொடர்ந்துள்ளது? ஒருவேளை சம்மனை எதிர்த்து சம்பந்தப்பட்ட மாவட்டஆட்சியர்கள்தான் தனிப்பட்ட முறையில் மனு தாக்கல் செய்திருக்க வேண்டும். இல்லையெனில் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கியிருக்க வேண்டும். அல்லது சம்மனுக்கு பதிலளித்து இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் அரசு ஏன் இடையூறு செய்கிறது? இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் விளக்கமளிக்க வேண்டும், இல்லையென்றால் உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு தடை விதிக்க நேரிடும் என கருத்து தெரிவித்தனர்.
அப்போது தமிழக அரசு தரப்பில்ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல்ரோஹ்தகி, இந்த விஷயத்தில் கூட்டாட்சி முறையை அமலாக்கத்துறை ஒடுக்கப் பார்க்கிறது. மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்ப அமலாக்கத் துறைக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்பதால்தான் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. தங்களுக்கு தொடர்பு இல்லாத விஷயத்தில் மாவட்ட ஆட்சியர்கள் எதற்காக பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விரைவில் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளதால், இந்த வழக்கை தள்ளிவைக்க வேண்டுமென வலியுறுத்தினார். அதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கை வரும் பிப். 26-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.
|
“ஆட்சியை நடத்த தெரியாதவர்கள் திமுகவை விமர்சிக்கிறார்கள்” - அதிமுகவினர் மீது கனிமொழி சாடல் | செய்திப்பிரிவு | வேலூர் | 2024-02-24 06:16:00 |
வேலூர்: ஆட்சியை எப்படி நடத்த வேண்டும் என்று தெரியாதவர்கள் திமுகவின் தேர்தல் அறிக்கையை விமர்சிக்கிறார்கள் என திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி குற்றஞ்சாட்டினார்.
2024 மக்களவைத் தேர்தலை யொட்டி, திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக மக்களவை உறுப்பினரும் திமுக துணை பொதுச் செயலாளருமான கனிமொழி தலைமையில் திமுக செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், தமிழக அரசு தலைமைக் கொறடா கோவி. செழியன், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், திமுக மாணவரணி செயலாளர் எழிலரசன், திமுக அயலக அணி செயலாளர் அப்துல்லா, திமுக மருத்துவ அணி செயலாளர் மருத்துவர் எழிலன் நாகநாதன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்ட 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் தமிழ்நாட்டு மக்களின் ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் முக்கிய நகரங்களில் பல்வேறு தரப்பு மக்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளை கேட்டு வருகின்றனர்.
அதன்படி, வேலூரில் தனியார் திருமண மண்டபத்தில் திமுக தேர்தல் அறிக்கை கருத்து கேட்புக்கூட்டம் மக்களவை உறுப்பினர் கனிமொழி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு பரிந்துரைகளை அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்து கனிமொழி பேசும்போது, ‘‘திமுக தேர்தல் அறிக்கை எப்போதும் மக்களுடைய தேர்தல் அறிக்கையாக இருக்கும் என தலைவர் கருணாநிதி காலம் முதல் தற்போதைய தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வரை தொடர்கிறது. மக்களைச் சந்தித்து அவர்களுடைய கருத்துக்களைக் கேட்டு, அந்த கருத்துக்களை பதிவு செய்து தேர்தல் அறிக்கையாக உருவாக்கப்பட்டு வருகிறது.
உங்களுடைய கோரிக்கைகள், உங்களுடைய கருத்துக்கள், நீங்கள் எங்களுக்கு கொடுக்கக் கூடிய அறிவுரைகளை முதலமைச்சரிடம் கலந்துரையாடி தேர்தல் அறிக்கையை உருவாக்க இருக்கிறோம்’’ என்றார்.
பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் கனிமொழி கூறும்போது, ‘‘திமுக தேர்தல் அறிக்கை தொடர்பாக அண்ணாமலை விமர்சனம் செய்வதற்கு முன்பாக பிரதமர் மோடி, இரண்டு தேர்தலுக்கு முன்பு அனைவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் வரும் என கூறினார். அதற்காக, இன்றளவும் காத்துக்கொண்டிருக்கிறோம். அனைவரின் வங்கிக் கணக்கில் அந்த பணத்தை போட்டதும் அண்ணாமலை மற்றவர்களை விமர்சிக்கும் உரிமையை எடுத்துக்கொள்ளட்டும்.
தவறான ஆட்சியை நடத்தி தமிழ்நாட்டை எல்லா இடத்திலும் பின்னோக்கி நகரக்கூடிய நிலையில் வைத்துச் சென்றவர்தான் பழனிசாமி. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகுதான் தமிழ்நாட்டில் எல்லா துறைகளிலும் முன்னேற்றம் என்ற நிலை உருவாகிஉள்ளது. கல்வி, சுகாதாரம், தொழில் முனைவோர், அதிகப்படியான முதலீடு செய்வது வேலைவாய்ப்புகள் என அனைத்திலும் திமுக ஆட்சியில்தான் சாத்தியமானது.
தேர்தல் அறிக்கையை விமர்சிக்கும் அளவுக்கு அவர்களுக்கு தெரியாது. ஆட்சியை எப்படி நடத்த வேண்டும் என தெரிந்தால்தானே தேர்தல் அறிக்கை பற்றி எல்லாம் புரியும்’’ என்றார்.
இதில், வேலூர் மத்திய மாவட்டச் செயலாளர் ஏ.பி.நந்தகுமார், திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் தேவராஜி, வேலூர் மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்த்குமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கார்த்திகேயன், ஈஸ்வரப்பன், அமலு விஜயன், வில்வநாதன், திமுக சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
|
மாவட்ட தலைநகரங்களில் பிப்.26 முதல் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-24 06:15:00 |
சென்னை: மாவட்டத் தலைநகரங்களில் பிப்.26-ம் தேதிமுதல் போராட்டம் நடைபெறும் என இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். கடந்த 2009-ம் ஆண்டு மே 31-ம் தேதி தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஓர் ஊதியமும், அதே ஆண்டு ஜூன்1-ம்தேதி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஒரு நாள்வித்தியாசத்தில், ஜூன் 1-ம் தேதி நியமிக்கப்பட்டவர்கள் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைவாக பெற்றுவருகின்றனர். அந்த வகையில் சுமார் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த முரண்பாட்டைக் களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் சென்னை பள்ளிக் கல்வி வளாகம் அருகில் கடந்த 19-ம்தேதிமுதல் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை போலீஸார் கைது செய்து வருகின்றனர். இருப்பினும் ஆசிரியர்கள் ஐந்தாவது நாளாக நேற்றும் போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் எஸ்எஸ்டிஏ பொதுச் செயலாளர் ஜெ.ராபர்ட் கூறும்போது, கடந்த5 நாட்களாக டிபிஐ வளாகத்தில் தொடர் முற்றுகைபோராட்டங்களை நடத்தி வருகிறோம். இந்தப் போராட்டம் இன்றும், நாளையும் தொடரும். இதுவரை அரசுஎங்களை அழைத்து கோரிக்கை குறித்து பேசி முடிவு செய்யாத காரணத்தால் அடுத்தகட்ட போராட்டத்துக்கு தயாராகியுள்ளோம்.
மீதமிருக்கும் இரு நாள்களுக்குள் எங்களை அழைத்துப் பேசி கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் பிப்.26-ம் தேதி முதல் மாநிலத்தின் தலைநகரான சென்னையில் தொடர் முற்றுகைப் போராட்டம், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
|
“ஊழல் அமைச்சர்களை வேட்டையாடப் போகிறோம்” - அண்ணாமலை ஆவேசம் | செய்திப்பிரிவு | தென்காசி | 2024-02-24 06:12:00 |
தென்காசி: சங்கரன்கோவிலில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின், ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நேற்று இரவு நடைபெற்றது. சங்கரன்கோவில் பயணியர் விடுதி முன்பு தொடங்கிய யாத்திரை மெயின் ரோடு வழியாக நகைக்கடை பஜார், கீழரத வீதி, தெற்கு ரத வீதி, மேல ரத வீதி வழியாக வந்து வடக்கு ரத வீதியில் முடிவடைந்தது. பின்னர் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது:
வருகிற 27-ம் தேதி பல்லடத்தில் நடைபெறும் யாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்கிறார். தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்று மக்கள் தீர்மானித்துவிட்டார்கள். 2024-ல் மிகப்பெரிய புரட்சிக்கு மக்கள் தயாராகிக்கொண்டு உள்ளனர். இந்தியா முழுவதும் மோடியின் புகழ் பரவியுள்ளது. மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக அரசு உள்ள பகுதிகள் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்று வருகிறது.
மூன்றாவது முறையாக மோடியை பிரதமராக்க வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டனர். எதிரணியினர் தெறித்து ஓடுகின்றனர். மோடியை எதிர்க்கும் துணிவு எந்த அரசியல் தலைவர்களுக்கும் இல்லை.
மோடிக்கு எதிராக எந்த ஆயுதமும் வேலை செய்ய முடியவில்லை. தென்காசியில் வளர்ச்சியை கொண்டுவர வேண்டும். தொழிற்சாலைகளை கொண்டுவர வேண்டும். லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
இந்த ஆண்டு இலவச வேட்டி வழங்கும் திட்டத்தில் ஊழல் செய்துள்ளனர். 88 சதவீத பாலியெஸ்டரும், 12 சதவீத பருத்தியும் மட்டுமே வேட்டியில் உள்ளது. இதன் மூலம் 66 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளனர். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்துள்ளேன்.
ஊழல் அமைச்சர்கள் ஒவ்வொருவரையும் வேட்டையாடப் போகிறோம். கெட்டவர்கள் கெட்டது செய்யும்போது, அதை சும்மா பார்த்துக்கொண்டு இருக்கும் நல்லவர்களால் இந்த சமுதாயம் கெட்டுக்கொண்டு இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
யாத்திரையில் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, மாநில பொதுச் செயலாளர் பொன்.பாலகணபதி, முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா, தென்காசி மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
|
நிதி நெருக்கடியை சரிசெய்ய வலியுறுத்தி சென்னை பல்கலை. பேராசிரியர்கள் உண்ணாவிரதம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-24 06:10:00 |
சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் நிதி நெருக்கடியை சரி செய்யக்கோரி பேராசிரியர்கள், பணியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக நிதிப்பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் பல்கலை. கல்வி மற்றும் நிர்வாகப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் 2017 முதல் 2021-ம் ஆண்டு வரையான காலகட்டத்தில் ரூ.424 கோடி வருமானவரி நிலுவைத் தொகை கட்ட வேண்டுமெனக் கூறி பல்கலைக்கழகத்தின் 30-க்கும் மேலான வங்கிக் கணக்குகள் வருமான வரித் துறையால் முடக்கப்பட்டன. இதனால் பல்கலை.யின் செயல்பாடுகள் முடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நிதி சிக்கலை சரிசெய்ய தமிழக அரசு முன்வர வேண்டுமென வலியுறுத்தி சென்னை பல்கலைக்கழக ஆசிரியர், அலுவலர் சங்கங்களின் கூட்டுநடவடிக்கை குழு சார்பில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் 100-க்கும்மேற்பட்ட பேராசிரியர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
இது தொடர்பாக சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் பேரவைத்தலைவர் சுந்தரம் நிருபர்களிடம் கூறியதாவது: பல்கலை. வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதால், மின் கட்டணம் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், விடைத்தாள் திருத்தும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தற்காலிக பணியாளர்களுக்கு மாதஊதியம் வழங்க முடியாத சூழல்உள்ளது. அனைவரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகளை விடுவிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.மேலும், பல்கலை.க்கு வழங்கவேண்டிய மானியத் தொகையை உடனே அரசு வழங்க வேண்டும். இல்லையெனில் அடுத்தகட்டபோராட்டம் முன்னெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
சரிசெய்ய நடவடிக்கை: உயர்கல்வித் துறை செயலாளர்கார்த்திக்கை, சென்னை பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.ஏழுமலைநேற்று நேரில் சந்தித்தார். அப்போது, சென்னை பல்கலைக்கழகத்தின் நிதிச் சிக்கல் தொடர்பாகவும், தமிழக அரசு தரப்பில் வழங்கப்பட வேண்டிய மானியம் குறித்தும் விளக்கம் அளித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து, பல்கலை.யின் நிதி நிலையைச் சரிசெய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அரசுத்தரப்பில் கூறப்பட்டதாகத் தெரிகிறது.
|
பராமரிப்பு பணி காரணமாக கடற்கரை - தாம்பரம், செங்கல்பட்டு இடையே நாளை 44 மின்சார ரயில்களின் சேவை ரத்து | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-24 06:09:00 |
சென்னை: பராமரிப்பு பணி காரணமாக, சென்னை கடற்கரை-தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே நாளை44 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக, மெட்ரோ ரயில்சேவை மற்றும் மாநகர பேருந்து சேவைகளை கூடுதலாக இயக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே சென்னைக் கோட்டம் தெரிவித்துள்ளது.
சென்னை, கோடம்பாக்கம் - தாம்பரம் இடையே காலை 11 மணிமுதல்பிற்பகல் 3.15 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், சென்னை கடற்கரை-தாம்பரம்மற்றும் செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் 44 மின்சார ரயில்களின் சேவை நாளை (25-ம் தேதி) முற்றிலுமாக ரத்து செய்யப்படுகின்றன.
இதன்படி, சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே காலை 10.30, 10.40, 10.50, 11.10, 11.20, 11.30, 11.40,நண்பகல் 12, 12,10, 12.20, 12.40, 12.50, 1, 1.15, 1.30, 2, 2.15, 2.30மணி, சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே 11, 11.50, மதியம்12.30, 12.50, 1.45, 2.15 மணி, சென்னைகடற்கரை - அரக்கோணம் இடையேமதியம் 1 மணிக்கு இயக்கப்படும்ரயில்கள் நாளை முற்றிலுமாக ரத்து செய்யப்படுகின்றன.
இதேபோல், மறுமார்க்கத்தில் தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே காலை 10.05, 10.15, 10.25,10.45, 10.55, 11.05, 11.25, 11.35, நண்பகல் 12.15, 12.45, மதியம் 1.30, 1.45,2.15, மாலை 4.30 மணி, செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இடையேகாலை 9.40, 10.55, 11.30, நண்பகல்12, மதியம் 1 மணி, காஞ்சிபுரம்-சென்னை கடற்கரை இடையே காலை 9.30 மணி, திருமால்பூர்-சென்னை கடற்கரை இடையே காலை 11.05 மணிக்கு இயக்கப்படும்ரயில் சேவைகளும் நாளை முற்றிலுமாக ரத்து செய்யப்படுகின்றன.
எனினும் பயணிகளின் வசதிக்காக நாளை தாம்பரம்-செங்கல்பட்டு இடையே காலை 11.55, மதியம்12.45, மதியம் 1.25, 1.45, 1.55, 2.40, 2.55மணிக்கும், செங்கல்பட்டு-தாம்பரம் இடையே காலை 9.30, 9.40, 10.55, 11.05, 11.30, நண்பகல் 12,மதியம் 1 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
மேலும், பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் மற்றும் மாநகர பேருந்து சேவைகளை கூடுதலாக இயக்குமாறு சம்மந்தப்பட்டபோக்குவரத்து நிர்வாகத்திடம்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, தெற்கு ரயில்வே சென்னைக் கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
தமிழகத்தில் 28-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-24 06:08:00 |
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (பிப்.24) தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிருஇடங்களில் லேசான மழை பெய்யவாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில்அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்கக்கூடும். நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும். 26 முதல் 28-ம்தேதிவரை தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வட தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 29-ம் தேதி தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 79 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.
|
சட்டவிரோத பணப்பரிமாற்றம் புகாரையடுத்து மும்பை நிறுவனம் சார்ந்த இடங்களில் அமலாக்க துறை சோதனை | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-24 06:06:00 |
சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்றம் புகாரையடுத்து, சென்னையில் மும்பை நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது.
மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தனியார் வர்த்தக நிறுவனத்தின் கிளை அலுவலகங்கள் சென்னை, திருச்சி, டெல்லி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வருகின்றன. மேலும் நேபாளம், பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் அரபு நாடுகளுடனும் அந்நிறுவனம் வர்த்தகம் செய்துவருவதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், இந்த நிறுவனம், ஒரு விளம்பர நிறுவனத்தையும் நடத்தி வருவதாகத் தெரிகிறது.
10-க்கும் மேற்பட்ட இடங்கள்: இந்நிலையில், நிதி முறைகேடு மற்றும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அந்நிறுவனத்தின் மீது புகார் எழுந்தது.
இதையடுத்து சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த அமலாக்கத் துறை அதிகாரிகள், நேற்று சென்னையில் அந்நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர். அதன்படி, எழும்பூர், திருவிக நகர், பெரம்பூர், பழவந்தாங்கல் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்றது.
திருவிக நகரில் இந்நிறுவன அதிகாரிகளான மார்டின், ஜான்சன், டேனியல் செல்வக்குமார் ஆகியோரது வீடுகளிலும், பழவந்தாங்கலில் ஹேலன் சாமுவேல், வெங்கடேஷ் உள்ளிட்டோரின் வீடுகளிலும் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
இதேபோல், எழும்பூரில் உள்ள அந்நிறுவனத்தின் கிளை அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது. சோதனை குறித்த எந்த விவரங்களையும் அமலாக்கத் துறையினர் தெரிவிக்கவில்லை. சோதனை முழுமையாக முடிவடைந்த பிறகே முழு விவரங்களும் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
|
பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-24 06:00:00 |
சென்னை: பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூய்மைப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தூய்மை தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சென்னைஎழும்பூரில் நேற்று நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் எம்.சக்திவேல் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டம் குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தூய்மைப் பணியாளர்கள் சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் பணிபுரிந்துவரும் தூய்மை காவலர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின்படி மாத ஊதியமாக ரூ.20 ஆயிரமாவது வழங்க வேண்டும். அதேபோல தமிழக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரிந்துவரும் தூய்மை பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்.
ஊதியத்தை வறுமை ஒழிப்பு சங்கம் மூலமாக பெறுவதால் நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகின்றன. எனவே நேரடியாக ஊராட்சிகள் மூலம் வழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும். கரோனா காலத்தில் அறிவிக்கப்பட்ட ஊக்கத்தொகை ரூ.15 ஆயிரம், ஊராட்சிகளில் உள்ளதூய்மைப் பணியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தூய்மை தொழிலாளர்கள் நலச்சங்க மாநில செயலாளர் கே.முருகேசன், பொருளாளர் செல்வராசு மற்றும் பல பெண் தூய்மைப் பணியாளர்கள் பங்கேற்றனர்.
|
அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-24 05:55:00 |
சென்னை: அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், குறிப்பாக பண்டிகை காலங்கள் மற்றும் தொடர் விடுமுறை தினங்களில் கூடுதல் கட்டண வசூலில் ஈடுபடுவதாகவும், எனவே, தொடர் சோதனை நடத்திசம்பந்தப்பட்ட பேருந்து நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யும் அரசாணையை முறையாக அமல்படுத்தக் கோரி உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது,‘‘பொதுமக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளுக்கு எதிராக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் எந்தவொரு கடுமையான நடவடிக்கையும் எடுப்பதில்லை. மாறாக அபராதம் மட்டுமே விதிக்கின்றனர். இதனால்தனியார் பேருந்துகளில் கூடுதல்கட்டணம் வசூலிப்பது தொடர்கதையாக இருந்து வருகிறது’’ என மனுதாரர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
அதற்கு அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. கூடுதல்கட்டணம் வசூலி்க்கும் தனியார் பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இந்த சோதனையை தீவிரப்படுத்தஅதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளுக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது’’ என தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள், ‘‘கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல வழக்குகளில் நீதிமன்றம் உத்தரவிட்டும், அதிகாரிகள் அதைசெயல்படுத்துவது இல்லை. வெறும் அபராதம் விதித்தால் மட்டும் போதாது. கூடுதல் கட்டணம்வசூலிக்கும் தனியார் பேருந்துகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்வது போன்ற கடுமையான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும். அப்படிஎடுத்தால் மட்டுமே இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்’’ என உத்தரவிட்டுள்ளனர்.
|
பாலகுருசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: தாய்லாந்து அரசு பிப்.27-ல் வழங்குகிறது | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-24 05:50:00 |
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், கல்வியாளருமான இ.பாலகுருசாமி, ஜார்க்கண்ட் ஆளுநரின் கல்வி ஆலோசகராகவும், இபிஜி அறக்கட்டளையின் தலைவராகவும் இருந்து வருகிறார். இவர் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, கணினி கல்வி துறையில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். 1980-களில் இந்தியாவில் கணினி படிப்பு தொடர்பான அறிவை பரப்பியதில் இவருக்கும் முக்கியப் பங்கு உண்டு.
அந்த வகையில், ஜாவா, சி, சி போன்ற கணினி படிப்புகள், தொழில்நுட்பத் துறை தொடர்பாக இதுவரை 51 புத்தகங்களை எழுதியுள்ளார். தாய்லாந்து, ரஷ்யா உட்பட 7 சர்வதேசமொழிகளில் இவை மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கல்வித் துறையில் இவரது சேவையை பாராட்டும் வகையில், தாய்லாந்து அரசு சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தின் மெத்தராத் பல்கலைக்கழகத்தில் வரும் 27-ம் தேதி நடைபெறும் கண்டுபிடிப்புஆராய்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பான சர்வதேச கருத்தரங்கில், பாலகுருசாமிக்கு அந்நாட்டின் போக்குவரத்துத் துறை அமைச்சர் தவான்சென்னியம், வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி கவுரவிக்கிறார். இதுகுறித்து ‘இந்து தமிழ்திசை’யிடம் பாலகுருசாமி கூறியது:
கணினி கல்வி துறையில் எனது பங்களிப்பை பாராட்டி தாய்லாந்து அரசு விருது அறிவித்திருப்பதை பெருமையாக கருதுகிறேன். இது,கணினி கல்வித் துறையில் எனக்குகிடைக்கும் 37-வது விருது. எங்களைப் போன்ற கல்வியாளர்களை இத்தகைய விருதுகள் மேன்மேலும் ஊக்குவிக்கும்.
இன்றைய மாணவர்கள் அனைத்து பாடங்களையும் ஆன்லைன் வாயிலாகவே கற்க விரும்புகின்றனர். ஆன்லைனில் படிப்பதால் தகவல்களை தெரிந்து கொள்ளலாமே தவிர, அதில் வளர்ச்சி பெற முடியாது. கணினி பொறியாளர்களுக்கு திறன் பயற்சி மிகவும் அவசியம். எனவே, செய்முறைபயிற்சிகளிலும், புத்தகங்களை வாங்கி படிப்பதிலும் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்ட வேண்டும் என்றார்.
|
தமிழகத்துக்கு மார்ச் முதல் வாரமும் பிரதமர் மோடி வருகை: அண்ணாமலை தகவல் | செய்திப்பிரிவு | திருப்பூர் | 2024-02-24 05:45:00 |
திருப்பூர்: பல்லடம் அருகே மாதப்பூரில் வரும் 27-ம் தேதி பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று பார்வையிட்டு ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறும்போது, ‘‘பல்லடம் அருகே மாதப்பூர் பகுதியில் நடைபெற உள்ள ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழா மாநாடு, எழுச்சி விழாவாக இருக்கும். 1947-ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்த பின்பு, தமிழ்நாட்டில் எத்தனையோ அரசியல் மாற்றம் நிகழ்ந்திருந்தாலும், இந்த பொதுக்கூட்டத்துக்கு பிறகு முக்கிய அரசியல் மாற்றம் நிகழும்.
தமிழ்நாடு முழுவதும் இருந்து தொண்டர்கள் வர உள்ளனர். தேசியம் மற்றும் ஆன்மீகத்தின் மீது நம்பிக்கை உள்ள மக்களை கொண்ட கோவை மக்களவைத் தொகுதியில் இந்த பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. ‘என் மண், என் மக்கள்' யாத்திரை நிறைவு விழா திருப்பத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது. வரும் 27, 28-ம் தேதிகளில் மட்டுமின்றி, மார்ச் முதல் வாரமும் தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி மீண்டும் வருகிறார். அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும்.
தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பும், பின்பும் பிரதமர் தொடர்ச்சியாக தமிழ்நாடுக்கு வருவார்’’ என்றார்.
இந்த ஆய்வின்போது, மாநிலப் பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், மாவட்ட தலைவர் செந்தில்வேல் உட்பட பலர் உடனிருந்தனர்.
பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடியை வரவேற்று, திருப்பூர் செட்டிபாளையம் தனியார் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் ‘வி லவ் மோடி’ என்ற எழுத்து வடிவில் அணிவகுத்து நின்றனர்.
|
ஒரே கட்டமாக தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையரிடம் தமிழக கட்சிகள் வலியுறுத்தல் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-24 04:58:00 |
சென்னை: தமிழகத்தில் மக்களவை தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையரிடம் அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் - கட்டுப்பாட்டு இயந்திரம் ஆகியவற்றுக்கு இடையே, விவிபாட் இயந்திரத்தை வைக்க கூடாது என்று திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தின.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில், தேர்தல் ஆணையர் அருண் கோயல், மூத்த துணை தேர்தல் ஆணையர்கள் தர்மேந்திர சர்மா, நிதேஷ் வியாஸ், துணை தேர்தல் ஆணையர்கள் அஜய்பதூ, மனோஜ்குமார் சாஹு, ஊடகப்பிரிவு தலைமை இயக்குநர் பி.நாராயணன், தலைமை இணை இயக்குநர் அனுஜ் சந்தக், முதன்மை செயலர் மல்லே மாலிக் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தனர்.
மீனம்பாக்கத்தில் உள்ள ஓட்டலில் நேற்று காலை நடந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநிலகட்சிகளின் பிரதிநிதிகளை அவர்கள்சந்தித்தனர். பிற்பகலில், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களிடம் கேட்டறிந்தனர். பல்வேறு அறிவுறுத்தல்களையும் வழங்கினர். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு மற்றும் கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர் உடன் இருந்தனர்.
தமிழகத்தில் உள்ள 10 அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளுக்கு தனித்தனியாக நேரம் ஒதுக்கி, அவர்களது கருத்துகளை கேட்டறிந்தனர்.
மக்களவை தேர்தலை தமிழகத்தில் ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று பெரும்பாலும் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் வலியுறுத்தினர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் கட்சிகளின் பிரதிநிதிகள் கூறியதாவது:
ஆர்.எஸ்.பாரதி (திமுக): கடந்த தேர்தல்போல இல்லாமல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம் இடையே விவிபாட் இயந்திரம் வைக்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளனர். இது சட்டத்துக்கு புறம்பானது. பொதுமக்கள் அளிக்கும் வாக்கு நேரடியாக கட்டுப்பாட்டு இயந்திரத்துக்கு செல்வதுதான் நம்பகத்தன்மையை உருவாக்கும். இடையில் விவிபாட் இயந்திரத்தை வைப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்த நடைமுறையால் 2 சதவீதம் வரை தவறு நடக்க வாய்ப்பு உள்ளதாக ஆணையர்களே ஒப்புக் கொள்கின்றனர். எனவே,இதை மாற்றியமைக்க வேண்டும்.
முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் (அதிமுக): வாக்காளர் பட்டியலில் முரண்பாடுகளை முழுமையாக களைய வேண்டும்.ஒரே குடும்பத்தினர் பல வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கும் நிலை உள்ளதை மாற்ற வேண்டும். பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிந்து, கூடுதல் துணை ராணுவப் படை, சிசிடிவி கேமரா பயன்படுத்தி சுதந்திரமாக தேர்தல் நடத்த வேண்டும். உள்ளூர்காவல் துறை ஆளுங்கட்சிக்கு சாதகமாக உள்ளதால், துணை ராணுவத்தினரை அதிகம் நியமிக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் தேர்தலுக்கு முன்பு ஆட்சியர்கள், எஸ்.பி.க்கள் முதல் கீழ்நிலை வரை அதிகாரிகளை மாற்ற வேண்டும்.
கராத்தே தியாகராஜன் (பாஜக): மாநில தலைவர் அண்ணாமலை சார்பில், கடிதம் அளித்துள்ளோம். தமிழகத்தில் உள்ள 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளும் முக்கியமானதாக இருப்பதால், கூடுதல்பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். வாக்குச்சாவடி, வாக்கு எண்ணிக்கை மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். போதிய அளவில் துணை ராணுவப்படையினரை நியமிக்க வேண்டும். ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படும்காவல் துறை உயர் அதிகாரிகளுக்குதக்க அறிவுரை வழங்க வேண்டும்.
காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு தலைவர் சந்திரமோகன்: வாக்களிப்போருக்கு 100 சதவீதம் ஒப்புகைச் சீட்டுவழங்க வேண்டும். ஆணையம் வழங்கும்வாக்காளர் அடையாள அட்டையுடன் வாக்களிக்க சென்றால், பட்டியலில் பெயர் இருந்தாலும், இல்லாவிட்டாலும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியகுழு உறுப்பினர் பி.சம்பத்: மின்னணுவாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாகமக்களுக்கு சந்தேகம் இருப்பதால்,முதலில் மின்னணு இயந்திரம், அடுத்து கட்டுப்பாட்டு இயந்திரம், தொடர்ந்து விவிபாட் இயந்திரத்தை வைக்குமாறு வலியுறுத்தியுள்ளோம்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணைசெயலாளர் மு.வீரபாண்டியன்: பதற்றமான சூழல் உள்ள இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில்பிரச்சாரம் செய்வது, சாதி, மத, இனஉணர்வுகளை தூண்டுவது ஆகியவற்றை தடுக்க வேண்டும்.
தேமுதிக துணை செயலாளர் பார்த்தசாரதி: வாக்காளர் அடையாள அட்டையில் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை விரைவில் முடிக்க வேண்டும்.
இவ்வாறு வலியுறுத்தி உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
தலைமை தேர்தல் ஆணையர் உள்ளிட்டோர் இன்று காலை தமிழகம், கர்நாடகா, கேரளாவின் தலைமை தேர்தல்அதிகாரிகள், காவல் அதிகாரிகளிடம் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிகின்றனர். தொடர்ந்து, தமிழகதலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா,டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்துகின்றனர்.
|
பொள்ளாச்சி பாலியல் வழக்கு: கைதான 9 பேர் ஓர் ஆண்டுக்குப் பின் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் | டி.ஜி.ரகுபதி | கோவை | 2024-02-23 21:39:00 |
கோவை: பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 9 பேர், ஒரு வருடத்துக்கு பின்னர், வழக்கு விசாரணைக்காக கோவை நீதிமன்றத்தில் இன்று (பிப்.23) நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கோவை அருகே பொள்ளாச்சியில் இளம் பெண்களை வீடியோ எடுத்து, பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட இளம்பெண், சில இளைஞர்கள் மீது கடந்த 2018-ம் ஆண்டு மாவட்ட காவல் துறையில் புகாரளித்தார். கோவை மாவட்டக் காவல்துறையினர் முதலில் விசாரித்த நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, பின்னர் சிபிஐ-க்கு மாற்றம் செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக, பொள்ளாச்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு(25), சபரிராஜன்(25), வசந்தகுமார்(27), சதீஷ் (28), மணிவண்ணன்(25) ஆகியோர் கடந்த 2019-ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு ஹேரேன் பால்(29), பாபு என்ற பைக் பாபு(34), அருளானந்தம்(34), அருண்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து இவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை கடந்த 2021-ம் ஆண்டு சிபிஐ தாக்கல் செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களின் வீடுகள், அவர்கள் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் ஆவணங்கள் மற்றும் ஏராளமான வீடியோக்களை கைப்பற்றினர். இவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் ஆவணங்களின் நகல்களை கேட்டு 9 பேரும் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், மேற்கண்ட வழக்கு தொடர்பான விசாரணைக்காக கைதான 9 பேரும் இன்று (பிப்.23) கோவை மகளிர் நீதிமன்றத்தில், நீதிபதி முன்பு நேரில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
அவர்களது முன்னிலையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள், வீடியோக்கள் ஆய்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நகல்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணைக்கு பின்னர், வழக்கை மார்ச் 1-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
இதையடுத்து 9 பேரும் மீண்டும் சேலம் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர். கடந்த ஒரு வருடமாக வீடியோ கான்பிரஸிங் முறையில் ஆஜர்படுத்தப்பட்ட 9 பேரும் இன்று நேரில் ஆஜர்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
|
முதல்வரின் கிராம சாலைத் திட்டம்: ரூ.2,300 கோடிக்கான வெள்ளை அறிக்கை கோரும் அண்ணாமலை | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-23 21:37:00 |
சென்னை: முதல்வரின் கிராம சாலைகள் என்ற திட்டத்தைப் பெயரளவில் அறிவித்து, நிதியும் ஒதுக்கீடு செய்துவிட்டு, பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் நிதியில் செயல்படுத்தப்படும் பணிகளை, நீங்கள் அறிவித்த திட்டத்தில் கணக்கு காட்டுகிறீர்களோ என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. எனவே, கடந்த ஆண்டு, முதல்வரின் கிராம சாலைகள் திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.2,300 கோடிக்கான வெள்ளை அறிக்கையை திமுக அரசு கண்டிப்பாக வெளியிட வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்துக்கும், தமிழக அரசு கூறியுள்ள கிராம சாலைகள் திட்டத்துக்கும் வித்தியாசம் என்ற பெயரில் ஒரு அரிய விளக்கத்தைக் கொடுத்திருக்கிறது தமிழக அரசின் உண்மை (?) கண்டறியும் குழு. பிரதமரின் கிராம சாலைகள் திட்டம், கடந்த 2000-ம் ஆண்டு, அன்றைய பிரதமர், பாரத ரத்னா வாஜ்பாயால், கொண்டு வரப்பட்ட திட்டம்.
குக்கிராமங்களுக்கும், மலைக் கிராமங்களுக்கும் தார் சாலை வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் இந்தத் திட்டத்தின் கீழ், கடந்த ஒன்பது ஆண்டுகளில், தமிழகத்தில் செலவிட்ட நிதி ரூ.5,837 கோடி. எனினும், திருவண்ணாமலை, வேலூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில், மலைக் கிராமங்களில் சாலை வசதிகள் இல்லாமல் மருத்துவச் சிகிச்சைக்காக டோலி கட்டி தூக்கிக் கொண்டு வரும் அவல நிலைதான் தமிழகத்தில் இன்னும் இருக்கிறது. அப்படியானால், அதற்கு முன்பாக மத்தியில் 2004 – 2014 வரை பத்து ஆண்டுகளாக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்த திமுக, தமிழகக் கிராமங்களுக்கு ஒன்றுமே செய்ததில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
திமுக அறிவித்துள்ள முதல்வரின் கிராம சாலைகள் திட்டம், கடந்த 2023 ஆம் ஆண்டுதான் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பு வரை, தமிழக கிராமங்களில் சாலை வசதிகள் அமைக்கப்படாமல் இருந்ததாகக் கூறுகிறதா திமுகவின் உண்மை அறியும் குழு? அப்படி அதற்கு முன்பாகவே கிராமங்களில் சாலை வசதிகள் அமைக்கப்பட்டிருந்தால், அவை எந்த நிதியில் மேற்கொள்ளப்பட்டன? மத்திய அரசின் நிதியிலா?அல்லது மாநில அரசின் நிதியிலா? கிராமப் பஞ்சாயத்துகளுக்கு நிதி வழங்குவது மத்திய அரசா? அல்லது மாநில அரசா?
இவை ஒருபுறம் இருக்க, கடந்த 18.03.2023 அன்று திமுக அரசு வெளியிட்ட அரசாணை எண் 34 ன் படி, முதல்வரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், 2022 – 2023 ஆம் ஆண்டுக்கு, ரூ.2,300 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால், உண்மையில் செலவு செய்தது, “முட்டை”. இதையும் திமுகவின் உண்மை அறியும் குழு தவறு என்று கூறுமானால், கடந்த ஆண்டு ரூ.2,300 கோடி செலவு செய்ததற்கான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்.
எதற்காக வெள்ளை அறிக்கை கேட்கிறோம் என்றால், முதல்வரின் கிராம சாலைகள் என்ற திட்டத்தைப் பெயரளவில் அறிவித்து, நிதியும் ஒதுக்கீடு செய்துவிட்டு, பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் நிதியில் செயல்படுத்தப்படும் பணிகளை, நீங்கள் அறிவித்த திட்டத்தில் கணக்கு காட்டுகிறீர்களோ என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. எனவே, கடந்த ஆண்டு, முதல்வரின் கிராம சாலைகள் திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.2,300 கோடிக்கான வெள்ளை அறிக்கையை திமுக அரசு கண்டிப்பாக வெளியிட வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, கடந்த ஒன்பது ஆண்டுகளில், பிரதமர் நரேந்திர மோடி, கிராமப் பஞ்சாயத்துக்களுக்கு நேரடியாக வழங்கிய நிதி 19,936 கோடி ரூபாய். அதில் செலவிட்டது போக, தமிழகத்தில் உள்ள பஞ்சாயத்துக்களிடம் மீதமிருக்கும் நிதி அனைத்தையும், தமிழக அரசின் கருவூலத்தில் சேர்க்கச் சொல்லி திமுக அரசு, உத்தரவிட்டிருக்கிறது.
இந்த நிதியில்தான், பெயரளவில் கிராமங்களுக்குத் திட்டங்களை அறிவித்துக் கொண்டிருக்கிறது. கடந்த பிப்ரவரி 7 அன்று, அரக்கோணம் சட்டமன்றத் தொகுதியில் பேசும்போதே இதனைக் குறிப்பிட்டேன். இதனை ஆதாரங்களுடன் மறுக்க திமுகவின் உண்மை அறியும் குழு முன்வருமா?
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்களை, ஊழல் இல்லாமல், லஞ்சம் வாங்காமல், கமிஷன் அடிக்காமல், பொதுமக்களுக்குக் முழுமையாகக் கொண்டு சேர்த்தாலே, தமிழகத்தின் அனைத்துப் பகுதி மக்களும் உரிய பலனடைவார்கள். அதை விடுத்து, மாறுவேடம் அணிவது போல, திட்டத்தின் பெயரை மட்டும் மாற்றி அறிவிப்பது எதற்காக என்பது, திமுகவின் அறுபதாண்டு கால வரலாறு அறிந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
|
“நிதியுதவி ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்” - உலக வங்கி குழுவிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவிப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-23 20:38:00 |
சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில், உலக வங்கியின் மேலாண்மை இயக்குநர் அன்னா ஜெர்டே உலக வங்கியின் உயர்மட்ட குழுவினருடன் இன்று (பிப்.23) சந்தித்துப் பேசினார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில், உலக வங்கியின் மேலாண்மை இயக்குநர் அன்னா ஜெர்டே (Anna Bjerde) உலக வங்கியின் உயர்மட்ட குழுவினருடன் இன்று சந்தித்துப் பேசினார். அப்போது, உலக வங்கியின் மேலாண்மை இயக்குநர் , தமிழக அரசின் சார்பில் தாம்பரத்தில் செயல்படுத்தப்பட்டு வரும், பணிபுரியும் பெண்களுக்கான குறைந்த வாடகையில், தரமான மற்றும் பாதுகாப்பான தங்கும் விடுதி திட்டமான “தோழி” விடுதியை பார்வையிட்டதாகவும், மிகவும் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்துக்கு தனது பாராட்டினை தெரிவித்து, இத்திட்டம் உலக நாடுகளுக்கு ஒரு வழிகாட்டியான திட்டமாகும் என்று தெரிவித்தார்.
இச்சந்திப்பின்போது, தமிழக முதல்வர், உலக வங்கியின் நிர்வாக இயக்குநரை வரவேற்று, தமிழகத்தின் வேளாண் கடன் திட்டத்துக்கு 1971-ம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டதிலிருந்து தமிழகத்துக்கும் உலக வங்கிக்கும் நீண்டகால உறவு இருப்பது குறித்தும், அப்போதிலிருந்து மாநிலத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், சமூக வளர்ச்சியை ஊக்குவிக்கவும், சமச்சீரான பொருளாதார வளர்ச்சியை அடையவும் உலக வங்கி பல வெற்றிகரமான ஒத்துழைப்புகளை அளித்துள்ளது.
தற்போது, உலக வங்கி நிதியுதவியுடன் நடைமுறையுள்ள 8 திட்டங்கள் குறித்தும், மேலும் ஆலோசனை நடைபெற்றுவரும் 3 திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்து, அனைத்துத் திட்டங்களுக்கும் உலக வங்கியின் ஆதரவைத் தொடர்ந்து எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். மேலும், அவர்களது தமிழகப் பயணம் பயனுள்ளதாக அமைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, முதல்வரின் கூடுதல் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், நிதித்துறை முதன்மைச் செயலாளர் த. உதயச்சந்திரன், தெற்காசிய மண்டல துணைத் தலைவர் மார்டின் ரைசர், சர்வதேச நிதி நிறுவன Country Manager வெண்டி வெர்னர் (Wendy Werner), உலக வங்கியின் பங்கு நிதி நிறுவனங்களின் திட்டத் தலைவர் (Equity Finance Institutions, Program Leader) பாவ்னா பாட்டியா, தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனத்தின் முதுநிலை துணைத் தலைவர் டி. ராஜேந்திரன் ஆகியோர் இச்சந்திப்பின்போது உடனிருந்தனர்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
3 மாத சம்பள நிலுவை வழங்க நடவடிக்கை: பணிக்குத் திரும்பிய காமராசர் பல்கலை. ஊழியர்கள் | என்.சன்னாசி | மதுரை | 2024-02-23 20:24:00 |
மதுரை: மூன்று மாத சம்பளம், ஓய்வூதியம் வழங்குவதற்கான அரசு உத்தரவை அடுத்து போராட்டத்தை கைவிட்டு காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர்கள், அலுவலர்கள் பணிக்கு திரும்பினர்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள கடும் நிதி நெருக்கடியால் தொடர்ந்து பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் வழங்க முடியாத சூழல் உள்ளது. கடந்த 2 மாதமாக சம்பளம், ஓய்வூதியம் கிடைக்கவில்லை. விரைந்து சம்பளம், ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி பல்கலை நிர்வாக அலுவலர்கள் சங்கம் மற்றும் பேராசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், விரைந்து சம்பளம் வழங்கக் கோரி கடந்த 14-ம் தேதி முதல் பல்கலை அலுவலர் சங்கத்தினர் தொடர் உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். பல்கலை துணைவேந்தர் ஜெ.குமார், பதிவாளர் ராமகிருஷ்ணன் மற்றும் நிர்வாக அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பளம், ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினர்.
ஆனாலும், நடவடிக்கை இன்றி உள்ளிருப்புப் போராட்டம் தொடர்ந்தது. பல்கலை நிர்வாகப் பணிகள் பாதித்தன. விடைத்தாள் திருத்தும் பணியும் தொடர்ந்து பாதிப்பதால் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு முடிவு வெளியிடுவதிலும் தாமதம் ஏற்படும் என, மாணவர்கள், பெற்றோர் தரப்பில் புகார் எழுந்தது.
இந்நிலையில், இன்று மதியம் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலை பேராசிரியர்கள், அலுவலர்கள், ஒய்வூதியர்கள் சங்கத்தினரிடம் துணைவேந்தர் ஜே.குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். சம்பளம், ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து தற்காலிகமாக போராட்டம் திரும்பபெற்று, மதியத்துக்கு மேல் பணிக்குத் திரும்பினர்.
அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் முத்தையா, சுந்தரமூர்த்தி கூறுகையில், ''தொடர் நிதி நெருக்கடியை சமாளிக்க பல்கலை நிர்வாகம் முயற்சி எடுக்கவில்லை. சம்பளம், ஓய்வூதியம் இன்றி பேராசிரியர்கள், அலுவலர்கள், ஊழியர்கள், ஓய்வூதியர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளோம். அன்றாட செலவினங்களுக்கும் சிரமப்படுகிறோம். போராட்டத்தால் பல்கலை.யின் பல பணிகளும் தொடர்ந்து பாதிக்கும் நிலையில், துணை வேந்தர் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்திற்கான சம்பளம், ஓய்வூதிய தொகையை வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
வெள்ளிக்கிழமை சம்பளம், ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் போராட்டத்தை கைவிடுங்கள் எனவும் வலியுறுத்தினார். அவரது பேச்சை நம்பி தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புகிறோம். 3 மாதத்திற்கான சம்பளம், ஓய்வூதிய தொகையை வழங்க நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு பேராசிரியர்கள், அலுவலர்கள் சங்கம் சார்பில், நன்றியை தெரிவிக்கிறோம்,'' என்றனர்.
|
விவிபேட் கருவி... - தேர்தல் ஆணையர் ஆலோசனைக் கூட்டத்தில் திமுக எழுப்பிய சந்தேகம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-23 19:45:00 |
சென்னை: "வாக்காளரின் வாக்கு நேரடியாக கன்ட்ரோல் யூனிட்டுக்குச் செல்வதுதான் நம்பகத்தன்மையை உருவாக்கும். இடையில் விவிபேட் கருவியை வைப்பதும், அதில் நூறு சதவீதம் எண்ணிக்கையைப் பார்க்க முடியாது என்று கூறுவது மிகப் பெரிய சந்தேகத்தை உருவாக்குகிறது" என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடத்துவது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஆலோசனை நடத்தி வருகிறார். அவர் அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இன்று மக்களவை தேர்தல் தொடர்பான ஆலோசனை நடத்துகிறார். அதன்படி, திமுக, அதிமுக, தேமுதிக, பாஜக, ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் கட்சி ஆகிய 10 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தேர்தல் தேதி, வாக்குச்சாவடி, நடத்த விதிமுறைகள் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது: "தேர்தல் ஆணையத்தின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்ற அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை, திமுக சார்பில் அடிப்படை கோரிக்கையாக வைத்திருக்கிறோம்.
கடந்த தேர்தலுக்கும் தற்போது நடக்கவிருக்கும் இந்த தேர்தலுக்கு இருக்கும் வித்தியாசம் என்னவென்றால், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்துக்கும், கன்ட்ரோல் யூனிட்டுக்கும் நேரடியாக தொடர்பு இருந்து வந்தது. இதற்கிடையே விவிபேட் என்ற கருவியை வைக்க வேண்டும் என்ற ஒரு நிலைப்பாட்டைக் கொண்டு வந்துள்ளனர். இது சட்டத்துக்குப் புறம்பானது.
வாக்காளரின் வாக்கு நேரடியாக கன்ட்ரோல் யூனிட்டுக்குச் செல்வதுதான் நம்பகத்தன்மையை உருவாக்கும். இடையில் விவிபேட் கருவியை வைப்பதும், அதில் நூறு சதவீதம் எண்ணிக்கையைப் பார்க்க முடியாது என்று கூறுவது மிகப் பெரிய சந்தேகத்தை உருவாக்குகிறது.
இந்த முறையைப் பின்பற்றினால், 1 முதல் 2 சதவீதம் வரை தவறுகள் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தேர்தல் ஆணையமே ஒப்புக்கொள்கிறது. ஒரு மக்களவைத் தொகுதிக்கு 2 சதவீதம் என்றால், ஏறத்தாழ 40 முதல் 50 ஆயிரம் வாக்குகள். இந்த வாக்குகள் ஒரு தொகுதியின் வெற்றியைத் தீர்மானிக்கும் என்பதை அனைவரும் அறிவர். எனவே, இதனை மாற்றி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.
அதேபோல், இங்கு கொடுக்கப்படும் மனுக்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பித்தான் அனுமதி பெற வேண்டிய சூழல் இருக்கிறது. எனவே, அதனை எளிமைப்படுத்தும் வகையில் மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு அந்த அதிகாரத்தைக் கொடுத்து, அரசியல் கட்சிகள் தரப்பில் கொடுக்கப்படுகிற புகார்களின் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்ற கோரிக்கையையும் திமுக சார்பில் வைத்திருக்கிறோம்" என்று அவர் கூறினார்.
|
“அறநிலையத் துறை சரியாக செயல்படாததாக தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி” - சேகர்பாபு சாடல் | செய்திப்பிரிவு | சோளிங்கர் | 2024-02-23 18:28:00 |
சோளிங்கர்: "அரசின் மீதும் எந்த விதமான குற்றங்களை கூற முடியாத காரணத்தால் அரசியலுக்காக சிறு பிரச்சினைகளைக் கூட ஊடகங்களிடம் பேசி அதில் ஒரு குழப்பத்தை விளைவித்து இந்து சமய அறநிலையத் துறை சரியாக செயல்படவில்லை என்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இந்த குற்றச்சாட்டுகள் எல்லாம் மக்களிடம் பொய்த்து போகும்" என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
தமிழக கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் இன்று (பிப்.23) ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர், லட்சுமி நரசிம்மர் சுவாமி கோயிலில் பக்தர்களின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள கம்பிவட ஊர்தியின் (Rope Car) வெள்ளோட்ட நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தனர்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியது: "கடந்த ஆட்சியில் முடிக்கப்படாமல் இருந்த ரோப் காரின் இதர பணிகளை உபயதாரர்களின் பங்களிப்போடு ரூ.12 கோடி மதிப்பீட்டில் மேற்கொண்டு, நரசிம்ம சுவாமிகளே மகிழ்ச்சி அடைகின்ற அளவுக்கு செய்து முடித்து, இன்று வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளதற்கு காரணமான அமைச்சர் காந்திக்கு துறையின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். ரோப் கார் வெள்ளோட்டம் நிறைவுற்றவுடன், இதர சிறு பணிகளையும் முடித்து தமிழக முதல்வரின் பொற்கரங்களால் இந்த ரோப் கார் பக்தர்களின் பயன்பாட்டுக்கு வெகு விரைவில் அர்ப்பணிக்கப்படும்.
இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு பழநி - இடும்பன் மலை, திருநீர்மலை, திருக்கழுகுன்றம், அனுவாவி திருப்பரங்குன்றம் மற்றும் கோர குட்டை போன்ற 6 இடங்களில் ரோப் கார் அமைப்பதற்குண்டான சாத்திய கூறுகள் ஆராயப்பட்டு இருக்கின்றன. அதில் இரண்டு ரோப்கார்கள் அமைப்பதற்கு முதல்வர் இந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் ரூ. 26 கோடி நிதி ஒதுக்கி இருக்கின்றார், அந்தப் பணிகள் வெகு விரைவில் தொடங்கும்.
கடந்த ஆட்சிக் காலத்தில் 40 சதவீதப் பணிகள் மட்டுமே முடிவுற்ற நிலையில் சட்டமன்றத் தேர்தலுக்காக திறக்கப்பட்ட அய்யர்மலை ரோப் கார் திட்டத்தில், தற்போது பக்தர்களுக்கான காத்திருப்பு கூடம், குடிநீர், கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட இதரப் பணிகள் அந்தத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அவர்கள் முன்னின்று மேற்கொண்டுள்ளதால் இன்னும் ஓரிரு மாதங்களில் அந்த ரோப் காரும் பக்தர்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்படும்.
இந்த ஆட்சியில் முதியோர்கள், உடல் நலம் குன்றியவர்கள் இறைவனை சுலபமாக தரிசிப்பதற்காக தமிழக முதல்வர் மேற்கொள்கின்ற நடவடிக்கைகளை கண்டு பக்தர்கள் பெருமகிழ்ச்சி அடைகின்றார்கள். சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் திருக்கோயிலில் உள்ளூர் மக்கள் அனைத்து நிலைகளிலும் இறை தரிசனத்தை மேற்கொள்ளலாம். முக்கிய நாட்களில் வெளியூரிலிருந்து அதிகளவில் வருகின்ற பக்தர்கள் நலன் கருதி சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. உள்ளூர் பக்தர்களும் பொது வரிசை மற்றும் சிறப்பு தரிசன வரிசையில் தொடர்ந்து தரிசனம் செய்து கொண்டுதான் வருகிறார்கள்.
துறையின் மீதும், அரசின் மீதும் எந்த விதமான குற்றங்களை கூற முடியாத காரணத்தால் அரசியலுக்காக சிறு பிரச்சினைகளைக் கூட ஊடகங்களிடம் பேசி அதில் ஒரு குழப்பத்தை விளைவித்து இந்து சமய அறநிலையத் துறை சரியாக செயல்படவில்லை என்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
மக்களைப் பொறுத்தளவில் முதல்வரின் வழிகாட்டுதலோடு நடைபெறுகின்ற இந்து சமய அறநிலையத் துறையின் பணிகளை வெகுவாக பாராட்டுகிறார்கள். சட்டமன்றத்தில் தோழமைக் கட்சிகள் மட்டுமல்லாமல் எதிர்க்கட்சிகள் கூட துறை மேற்கொள்ளுகின்ற அறப்பணிகளை வெகுவாக பாராட்டியுள்ளனர். ஆகவே, குற்றச்சாட்டுகள் எல்லாம் மக்களிடம் பொய்த்து போகும்” என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
|
“அண்ணாமலை கூறுவதை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம்” - மாணிக்கம் தாகூர் எம்.பி | என்.சன்னாசி | மதுரை | 2024-02-23 16:58:00 |
மதுரை: “பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறுவதை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை” என்று விருதுநகர் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றம் அருகே பாம்பன் நகரில் புதிய நியாய விலை கடை பூமி பூஜை விழாவில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பங்கேற்றார். இதன்பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “டெல்லி பத்திரிகைகளும் பாஜக கூட்டணியும் எதிர்பார்த்ததைப் போன்று அல்லாமல் இந்தியா கூட்டணி வெற்றிகரமாக கூட்டணியை உறுதி செய்கிறது.
சமாஜ்வாதி கட்சியோடு கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியோடு தொகுதி பேச்சுவார்த்தை நடக்கிறது. இதற்கு பின், திரிணமூல் காங்கிரஸ் கட்சியோடும் பேச்சு நடக்கிறது. இந்தியா கூட்டணி தொடர்ந்து பலமானதாக இருக்கிறது. 300-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
மோடியின் ஆட்சி விவசாயிகள், இளைஞர்கள், பெண்களுக்கு எதிரான ஆட்சி என்பது உறுதி ஆகிவிட்டது. எல்லாவற்றிலும் மதத்தை இழுப்பது, உரிமைக்காக போராடு கின்றவர்களை கொச்சைப் படுத்துவது பாஜகவின் வேலை.
டெல்லி ஊடகங்களும் பாஜக விஷயங்களை பெரிதுபடுத்த விரும்புவதில்லை. உண்மையில் விவசாயிகள் போராடுகின்றனர். போராட்டத்தின்போது, கடந்த முறை 72 விவசாயிகள் உயிரிழந்தனர்.
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் தமிழக அரசு 70 சதவீத மானியம் வழங்குவதாக கூறுவது பொய் என அண்ணாமலை குற்றம்சாட்டுகிறார். அண்ணாமலை உண்மை தவிர, எதுவும் கூறுவதில்லை. அவர் கூறுவதை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஆளுநருக்கும், முதல்வருக்கும் அவருக்கு வித்தியாசம் தெரிவதில்லை.
பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனை திறப்பு விழாவிலோ அல்லது வேறு ஏதாவது 5 ஆண்டுக்கு முன் செயல்படுத்திய திட்டங்களின் நிறைவு விழாவிலோ பங்கேற்க தமிழகம் வந்தால் மகிழ்ச்சி. அவரது கட்சி நிகழ்வில் (என் மண் என் மக்கள்) பங்கேற்க வருகிறார். 9 ஆண்டுக்கு பிறகு மீண்டும் அடிக்கல் நாட்ட கிளம்பியுள்ளார். தமிழக மக்களை ஏமாற்ற நினைக்கிறார். மக்கள் ஏமாறமாட்டார்கள். திமுக கூட்டணியில் எங்களது கட்சி நிர்வாகிகள் பேசுகின்றனர். எத்தனை சீட் என்பதை விரைவில் தெரிவிக்கிறோம்” என்று மாணிக்கம் தாகூர் கூறினார்.
|
அதிமுகவில் இருந்து நீக்கிய அறிவிப்பை வாபஸ் பெறக் கோரி இபிஎஸ்ஸுக்கு ஏ.வி.ராஜூ வழக்கறிஞர் நோட்டீஸ் | ஆர்.பாலசரவணக்குமார் | சென்னை | 2024-02-23 16:50:00 |
சென்னை: தன்னை கட்சியில் இருந்து நீக்கிய அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூ சார்பில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வழக்கிறஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதிமுகவின் சட்டதிட்டங்களுக்கு விரோதமாக, அதிமுகவின் ஒழுங்கை குலைக்கும் வகையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டதாகக் கூறி, சேலம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜுவை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக பிப்ரவரி 17-ம் தேதி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக ராஜு சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், "என்னை நீக்குவதாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் கட்சி விரோத நடவடிக்கை என்ன என்பது குறித்து விளக்கப்படவில்லை. மேலும், அதிமுக உட்கட்சி விதிப்படி விளக்கம் கேட்டு நோட்டீஸ் எதுவும் அனுப்பாமல் நேரடியாக நீக்கியது தவறு. எனவே, என்னை கட்சியில் இருந்து நீக்கிய அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
“கச்சத்தீவு திருவிழாவை தமிழக மீனவர்கள் புறக்கணிப்பதிலும் மத்திய அரசு அலட்சியம்” - வைகோ | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-23 16:23:00 |
சென்னை: “கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழாவை தமிழக மீனவர்கள் புறக்கணித்து இருப்பதையும், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதையும் மத்திய பாஜக அரசு அலட்சியப்படுத்தி வருவது கடும் கண்டனத்துக்குரியதாகும்” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த பிப்ரவரி-4 ஆம் தேதி இரண்டு விசைப் படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற 23 மீனவர்களை, இலங்கைக் கடற்படையினர் கைது செய்து, படகுகளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களில் 20 பேர், ஐந்து ஆண்டு ஒத்தி வைக்கப்பட்ட 18 மாத சிறை தண்டனையுடன் விடுதலை செய்யப்பட்டனர்.
எஞ்சிய 3 பேரில் இருவருக்கு 6 மாதம், ஒருவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இதுபோல் இரண்டு மாதங்களுக்கு முன்பும் ஒரு மீனவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவரும் சிறையில் இருந்து வருகிறார்.
புதிய கடல் தொழில் மீன்பிடி சட்டத்தின்படி, தமிழக மீனவர்களைக் கைது செய்வது, கோடிக்கணக்கில் அபராதம் விதிப்பது, படகுகளை அரசுடமையாக்குவது மற்றும் மீனவர்களுக்கு அதிகபட்சமாக இரண்டு ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிப்பது போன்ற நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபடுகிறது. இலங்கை அரசின் புதிய சட்டத்தை அமல்படுத்த விடாமல் தடுக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்தினர்.
இந்நிலையில், இலங்கை மற்றும் இந்திய ஒன்றிய அரசைக் கண்டித்து அனைத்து விசைப்படகு மீனவ சங்கத்தினர் பிப்ரவரி-18 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
700-க்கும் மேற்பட்ட மீனவர்கள் விசைப் படகுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக பிப்ரவரி 23, 24-ஆம் தேதிகளில் நடைபெறும் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்க விசைப்படகு மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவுக்கு விசைப்படகுகளை இயக்க மாட்டோம் எனவும் மீனவர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன.
இதையடுத்து, ''கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்க போவதில்லை. மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தத்தால் கச்சத்தீவு திருவிழாவுக்கான பயண ஏற்பாடுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கச்சத்தீவு திருவிழாவிற்கு படகுகளில் செல்ல பதிவு செய்த நபர்கள் ராமேசுவரம் துறைமுகத்திற்கு வரவேண்டாம். விசைப்படகிற்காக அவர்கள் செலுத்திய பணம் விரைவில் திருப்பித் தரப்படும்'' என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரனுக்கு கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா திருப்பயண குழு ஒருங்கிணைப்பாளர் ராமேஸ்வரம் பாதிரியார் சந்தியாகு கடிதம் அனுப்பியுள்ளார்.
கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழாவை தமிழக மீனவர்கள் புறக்கணித்து இருப்பதையும், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதையும் ஒன்றிய பாஜக அரசு அலட்சியப்படுத்தி வருவது கடும் கண்டனத்துக்குரியதாகும்.
நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த பத்தாண்டுகளில் மட்டும் இலங்கை கடற்படையினரால் 3076 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 534 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மற்றும் ஒன்றிய அமைச்சர்களிடம் வலியுறுத்தியுள்ளதோடு, பிரதமருக்கு 9 கடிதங்களும், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு 35 கடிதங்களும் எழுதியுள்ளார். ஆனாலும் தமிழக மீனவர்களின் உயிருக்கும் உடைமைக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் சிங்கள அரசுக்கு உரிய முறையில் அழுத்தம் கொடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது. இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களை விடுவிப்பதோடு, பறிமுதல் செய்யப்பட்டுள்ள மீன்பிடி படகுகள் உள்ளிட்ட கருவிகளை மீட்க வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்” என்று வைகோ கூறியுள்ளார்.
|
‘பாஜகவுடன் மறைமுகக் கூட்டணி வைத்துள்ள அதிமுகவை வீழ்த்த வேண்டும்’ - திமுகவின் 3 தீர்மானங்கள் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-23 16:18:00 |
சென்னை: "தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 தொகுதியிலும் நாம் தான் முழுமையான வெற்றி பெறுவோம் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. அந்த வெற்றி மகத்தானதாக இருக்க வேண்டும். நாம் பெறும் வாக்குகள் அபரிமிதமாக இருக்க வேண்டும். நம்முடைய ஒவ்வொரு திட்டம் பற்றியும் படித்துவிட்டு, எளிமையாகப் பரப்புரைச் செய்ய வேண்டும்" என்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
திமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் காணொலி வாயிலாக இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், பங்கேற்று அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியது: “மாவட்டச் செயலாளர்கள், தொகுதிப் பொறுப்பாளர்கள் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டிய அவசர அவசியம் காரணமாகத்தான் நேற்று சட்டமன்றம் முடிந்தவுடன் இன்று காணொலி வாயிலாக நடத்துகிறோம்.
நேற்று நான் சட்டமன்றத்தில், ஒரு அழைப்பு விடுத்தேன். நம்மை எல்லாம் ஆளாக்கிய மறைந்த முதல்வர் கருணாநிதியின் நினைவிடமும், அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடமும் வருகிற 26-ம் தேதி, மாலை 7 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் திறக்கப்படுகிறது. தாய் தமிழ்நாட்டையும், நம் கட்சியையும் காத்த தலைவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றியின் அடையாளமாக மிகப் பிரமாண்டமாக இந்த நினைவகங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. விழாவாக இல்லாமல், நிகழ்ச்சியாக நாம் நடத்துவதால், அந்நிகழ்வில் நீங்கள் அனைவரும் கலந்துகொள்ள தவறாது வருகை தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். அடுத்து, உங்கள் அனைவருக்கும் எனது மகிழ்ச்சி கலந்த நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.
‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் நாடாளுமன்றத் தொகுதிவாரியாக நடைபெற்ற கூட்டங்கள் அனைத்தும் பெரும் வெற்றியடைந்துள்ளன. மிகப் பிரமாண்டமாக நடத்திக் காட்டிவிட்டீர்கள். பெரும்பாலான கூட்டங்களை டிவியில் பார்த்து பிரமித்தேன். அனைத்துத் தொகுதிகளிலும் ஒரே மாதிரியாக மேடை அமைக்கப்பட்டு, எல்இடி திரைகளுடன் பிரம்மாண்ட கூட்டங்களாக இருந்தன. மக்கள் நிறைந்து காணப்பட்டார்கள், டாப் ஆங்கிளில் எடுக்கப்பட்ட கூட்ட புகைப்படங்களும் மலைப்பை ஏற்படுத்தியது.
இதனை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த பொறுப்பு அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இக்கூட்டங்கள் பரவலாக மாநிலம் முழுவதும் கட்சியினரை உற்சாகப்படுத்தியிருக்கின்றன. தேர்தல் பணிகளைப் பொறுத்தவரை, நாம் மிக வேகமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 தொகுதியிலும் நாம் தான் முழுமையான வெற்றி பெறுவோம் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. அந்த வெற்றி மகத்தானதாக இருக்க வேண்டும். நாம் பெறும் வாக்குகள் அபரிமிதமாக இருக்க வேண்டும். நம்முடைய ஒவ்வொரு திட்டம் பற்றியும் படித்துவிட்டு, எளிமையாகப் பரப்புரைச் செய்ய வேண்டும். ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரையும் காப்பாற்றும் அரசு, நமது அரசு என எளிமையாகப் புரியும் வகையில் பரப்புரை செய்ய வேண்டும். இவை அனைத்தையும் இப்போது நாம் தீர்மானமாக நிறைவேற்ற உள்ளோம்” என்று பேசினார். பின்னர் இந்தக் கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை:
> நாடாளுமன்றத் தொகுதிவாரியாக ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கூட்டங்கள் பொதுமக்களிடம் பெரும் தாக்கத்தை உண்டாக்கியுள்ளன. பாஜக வீழ்த்தப்பட வேண்டிய கட்சி என்பதற்கான காரணங்களை அடுக்கடுக்காக மக்கள் மன்றத்தில் வைத்துள்ளோம். 'நாற்பதும் நமதே - நாடும் நமதே' என்ற முழக்கத்துடன் இக்கூட்டங்களை மிகச்சிறப்பாக நடத்தி முடித்துள்ள கட்சியின் அனைத்து நிர்வாகிகளுக்கும் மாவட்டச் செயலாளர்களின் இக்கூட்டம் நன்றியும் பாராட்டுகளும் தெரிவிக்கிறது.
> திராவிட மாடல் ஆட்சியின் மூன்றாண்டு சாதனைகளையும், தமிழக அரசின் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்களையும் வீடுதோறும் கொண்டு சேர்க்கவும், அதேசமயம் மத்திய பாஜக அரசு தமிழகத்துக்கும் தமிழுக்கும் தமிழர்களுக்கும் செய்து வரும் அநீதிகளைத் தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் எடுத்துரைக்கும் வகையில், பிப்ரவரி 26-ம் தேதியன்று ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் திண்ணைப் பிரச்சாரத்தைத் தொடங்குவது என மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது.
பிப்.26-ம் தேதி முதல் ஒவ்வொரு நாளும் மாலை நேரங்களில் பூத் கமிட்டியினர் ஒவ்வொரு வீடாகச் சென்று துண்டறிக்கைகளை வழங்கி, ஒவ்வொரு வீட்டில் உள்ளவர்களிடமும் ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற பரப்புரை குறித்து சில நிமிடங்களாவது விளக்கி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மற்றும் அதனோடு மறைமுகக் கூட்டணியில் இருக்கும் அதிமுகவை முழுமையாக வீழ்த்தி, தமிழக முதல்வரின் குரல் டெல்லியிலும் நிறைவேறுவதை உறுதிசெய்திட வேண்டும் என இந்தத் கூட்டம் தீர்மானிக்கிறது.
> திமுக தலைவர், தமிழக முதல்வரின் பிறந்தநாளை நாம் அனைவரும் சீரிய வகையில் கொண்டாடும் விதமாக திராவிட மாடல் அரசின் சாதனைகள் மற்றும் அரசின் நிதிநிலை அறிக்கை விளக்கும் பொதுக்கூட்டங்களை மார்ச் 2 மற்றும் 3 தேதிகளில் தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சிகளில் தலைமைக் கழக அறிவிப்பின்படி நடத்திடுவது எனவும் இந்த கூட்டம் தீர்மானிக்கிறது.
|
அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு | ஆர்.பாலசரவணக்குமார் | சென்னை | 2024-02-23 15:16:00 |
சென்னை: அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளின் உரிமத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதிக கட்டண வசூல் தொடர்பாக அடிக்கடி சோதனைகள் நடத்திட வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட பேருந்து நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வகை செய்யும் அரசாணையை அமல்படுத்த அனைத்து வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிட வேண்டும், எனக்கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. அபராதம் மட்டும் விதிக்கப்படுகிறது. இதனால், தனியார் பேருந்து நிறுவனங்கள் தொடர்ந்து, அதிக கட்டணம் வசூலிப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அப்போது அரசு தரப்பில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிர சோதனைகளில் ஈடுபடுவதோடு, பேருந்து நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. மேலும், சோதனையை தீவிரப்படுத்தி நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளுக்கு விதிக்கப்படும் அபராதத்தை 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக ஏற்கெனவே, பல வழக்குகளில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெறும் அபராதம் மட்டும் விதிப்பதால் தீர்வு ஏற்படப் போவதில்லை. தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என கண்காணிக்க அடிக்கடி சோதனைகள் நடத்த வேண்டும். தொடர் குற்றத்தில் ஈடுபடும் தனியார் பேருந்துகளுக்கான உரிமத்தை சஸ்பெண்ட் செய்ய சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளதால், உரிமத்தை சஸ்பெண்ட் செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
|
“உலகின் மனிதவள தலைநகரமாக தமிழகம்” - கனவுகளை அடுக்கிய முதல்வர் ஸ்டாலின் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-23 15:05:00 |
சென்னை: “எனக்கு இரண்டு கனவுகள் இருக்கிறது. ஒன்று, தமிழகத்தை டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்தவேண்டும். மற்றொன்று, உலகத்தின் மனிதவள தலைநகரமாக தமிழகத்தை மாற்றவேண்டும். அதற்காக முழு ஈடுபாட்டுடன் என்னை நானே அர்ப்பணித்து கொண்டிருக்கிறேன்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் இரண்டு நாட்கள் நடத்தப்படும் “Umagine TN 2024” தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு இன்று தொடங்கியது. மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் பிறகு பேசிய அவர், “தகவல் தொழில்நுட்பத்தை முன்வைத்து நடைபெறும் இந்த மாபெரும் மாநாட்டை ஏற்பாடு செய்துள்ள தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை முதலில் நான் பாராட்டுகிறேன். மூன்று தலைமுறையாக, நாட்டுக்குத் தொண்டாற்றி வரும் குடும்பத்திற்குச் சொந்தக்காரர் அவர்.
இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான திருச்சி என்.ஐ.டி-யிலேயும், உலகத்தின் தலைசிறந்த கல்வி நிறுவனமான எம்.ஐ.டி-யிலேயும் படித்தவர். பல ஆண்டுகள் வெளிநாட்டில் படித்து வேலை செய்திருந்தாலும், அங்கேயே தங்கிடாமல், தமிழகத்துக்கு திரும்ப வந்து, இங்கேயும் தொழில் வர்த்தகம் என்று ஒதுங்கிடாமல், அவருடைய அப்பா, தாத்தா போலவே அரசியலில் பங்கெடுத்து, தன்னுடைய அறிவாற்றலை தமிழக மக்களின் நலனுக்கு கொடுத்துக் கொண்டு இருக்கக்கூடியவர் அவர்.
நம்முடைய ஆட்சியில் முதல் இரண்டு ஆண்டுகளில் நிதியமைச்சராக மிகச் சிறப்பாக செயல்பட்டு பல மாற்றங்களுக்கு வித்திட்டவர் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். அவரை நான் ஐ.டி.துறைக்கு மாற்றினேன். அவரை நான் மாற்றியதற்கு காரணம் ஐ.டி. துறையிலேயும், நிதித்துறை போல மாற்றங்கள் தேவைப்பட்டது. அவருடைய தலைமையில் தகவல் தொழில்நுட்பத் துறை மூலமாக தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியும், தமிழக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பும் அதிகமாகும். நான் கொடுத்த பொறுப்பை அவர் சிறப்பாக செயல்படுத்துகிறார் என்பதற்கு இந்த மாநாடே எடுத்துகாட்டாய் அமைந்திருக்கிறது. அவருடைய பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன்.
கால்நூற்றாண்டுக்கு முன்பே, வருங்காலம் என்பது, கணினியின் காலம்; தொழில்நுட்ப காலம் என கணித்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. அதனால்தான், 1996-2001 காலகட்டத்திலேயே கணினி வாசலை தமிழகத்தில் திறந்து வைத்தார். அவரால் மேற்கொள்ளப்பட்ட தொலைநோக்குப் பார்வைகொண்ட முயற்சிகளால்தான், இந்தியாவின் ஐ.டி. தொழிற்புரட்சியில் தமிழகம் முதன்மையான மாநிலமாக திகழ்கிறது. இந்தியாவிலேயே முதன்முதலாக 1997-ல் ஐ.டி. பாலிஸி, ஐ.டி.க்கு என்று தனித் துறை, டாஸ்க் ஃபோர்ஸ், ‘தமிழ்நெட்-99’ என்று ஐ.டி. துறையில் தமிழின் மாபெரும் பாய்ச்சல் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில்தான் தொடங்கியது. நாட்டின் முதல் ஐ.டி. பார்க்கை, டைடல் பூங்காவை 2000-ஆம் ஆண்டில் உருவாக்கினார்.
இது எல்லாவற்றையும் கால் நூற்றாண்டுக்கு முன்பாகவே செய்த பெருமை முன்னாள் முதல்வர் கருணாநிதியைத்தான் சேரும். அதனால்தான், நாங்கள் அவரை நவீன தமிழகத்தின் சிற்பி என சொல்கிறோம். ஐ.டி.க்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி காலம் எப்படி பொற்காலமோ, அதேபோல, நமது திராவிட மாடல் அரசின் ஆட்சிக்காலமும் இருக்கவேண்டும் என்று செயல்படுகிறோம். அதனால்தான், நீண்ட ஆலோசனைகளுக்கு பிறகு, தமிழ்நாடு தரவு மைய கொள்கை-2021, தமிழகத்துக்கான தரவுக் கொள்கை- 2022, தகவல் தொழில்நுட்பத் துறைக்கான தர நிலை கொள்கை–2022, தகவல் தொடர்பு உட்கட்டமைப்பிற்கான கொள்கை-2022 என முக்கியமான தகவல் தொழில்நுட்ப கொள்கை முடிவுகளை அறிக்கைகளை அரசு வெளியிட்டிருக்கிறது.
அதோடு, பொது, தனியார் கூட்டு முறையில் தகவல்தொழில்நுட்ப நகரங்களும், டைடல் பூங்காக்களும் உருவாக்க, தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டமைப்பாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடன் ஆலோசனைகளை மேற்கொண்டோம். அனைத்து தகவல் தொடர்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி 5G அலைக்கற்றை அமைப்பதை துரிதப்படுத்தினோம். இயற்கை பேரிடர் காலங்களில், இணையம் மற்றும் தகவல்தொடர்பு இணைப்புகள் செயலிழக்காமல் இயங்க, தேவையான முன்னேற்பாடுகள் குறித்து விவாதித்தோம். அனிமேஷன், விஷுவல் எபெக்ட்ஸ், கணினி விளையாட்டுகள் மற்றும் காமிக்ஸ் துறை சார்ந்த நிறுவனங்களுடன் இரண்டு முறை கலந்துரையாடல்கள் நடத்தினோம்.
நம்முடைய தமிழகத்தில் இந்த துறைகளில் வர்த்தகம் துவக்குவதற்கான முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறோம். நான் அடிக்கடி சொல்வதுண்டு, எனக்கு இரண்டு கனவுகள் இருக்கிறது. ஒன்று, தமிழகத்தை டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்தவேண்டும். மற்றொன்று, உலகத்தின் மனிதவள தலைநகரமாக தமிழகத்தை மாற்றவேண்டும். அதற்காக முழு ஈடுபாட்டுடன் என்னை நானே அர்ப்பணித்து கொண்டிருக்கிறேன். வளர்ச்சி என்பதை வெறும் எண்கள் மட்டும் அல்ல, மக்களுடைய வாழ்க்கைத் தரத்தில் காட்டுகிறோம். அனைத்து துறைகளும் அதற்கான செயல் திட்டங்களுடன் சிறப்பாக செயல்படுகிறது. அதில் முக்கியமான துறையாக தகவல் தொழில்நுட்பத் துறை இருக்கின்றது என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி!
ஐ.டி. துறையுடன் வளர்ச்சியும், முன்னேற்றமும் இப்போது நம்முடைய கண்முன்னாடி தெரிகிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதி ‘தமிழ்நெட்-99’ மாநாட்டை நடத்தி 25 ஆண்டுகள் ஆகின்ற இந்த நேரத்தில், தமிழ் இணையக் கல்விக் கழகம் சார்பாக ‘கணித்தமிழ் -24’ மாநாட்டை நடத்தியிருக்கிறோம்.
10 நாடுகளிலிருந்து 60-க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள், அறிஞர்கள், தொழில்துறை வல்லுநர்கள் இதில் கலந்து கொண்டார்கள். செயற்கை நுண்ணறிவு, இயந்திரவழிக் கற்றல் போன்ற துறைகளில் மொழியின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள, செயற்கை நுண்ணறிவுக் காலத்தில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக, ஆங்கிலம் அல்லாத மொழியில் ஒரு தொழில்நுட்ப மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறோம். இதுதான் திராவிட மாடல் ஆட்சியினுடைய தனித்தன்மை. எல்காட்டில் அனுமதி வழிமுறைகளை மேம்படுத்தியதால், 5G அலைக்கற்றை நடைமுறைப்படுத்துவதை துரிதப்படுத்தியிருக்கிறோம். தமிழகம் டிஜிட்டல் மயமாக்கல் வியூகத்தை அறிமுகப்படுத்தியது, சென்ற ஆண்டு செய்த சாதனைகளில், முக்கியமான ஒன்று!
நீண்டகாலமாக தடைப்பட்டிருந்த தமிழ்நாடு ஃபைபர்நெட் அமைப்பை விரைவுபடுத்தியிருக்கிறோம். நான் முதல்வன் திட்டத்தின்கீழ், ஐசிடி வழியாக நடத்தப்படுகின்ற பயிற்சித் திட்டங்களை அதிகரித்திருக்கிறோம். தமிழகம் மின் ஆளுமை முகமை வழியாக 36 துறைகளின் 751 திட்டங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் இருக்கின்ற 38 ஆயிரத்து 292 இ-சேவை மையங்களில், 25 ஆயிரத்து 726 மையங்கள் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டிருக்கிறது.
இது ஒரு ‘டிஜிட்டல் புரட்சி’ இல்லையா? சென்னையில் ஆயிரம் வைஃபை ஹாட்ஸ்பாட்ஸ் அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு, சென்னையில் மட்டும், 11 மில்லியன் சதுர அடி அளவிலான புதிய அலுவலகங்கள் குத்தகைக்கு விடப்பட்டிருக்கிறது. இதிலிருந்தே, இந்தத் துறை எப்படிப்பட்ட வளர்ச்சியை அடைந்திருக்கிறது என்று நீங்கள் தெரிந்துகொள்ளலாம். 2021-2022-ஆம் ஆண்டுகளில், சென்னைப் பெருநகரப்பகுதியில் பணியாளர்களுடைய எண்ணிக்கை 40 விழுக்காடு வரைக்கும் அதிகரித்திருப்பதாக சென்னை பெருநகர மாநகராட்சி கவுன்சில் மதிப்பிட்டிருக்கிறது. கோவையிலேயும் முன்பு எப்போதையும்விட அலுவலகங்கள் அதிகமாக திறக்கப்பட்டிருக்கிறது.
ஐந்து நாட்கள் முன்பு, கடந்த பிப்ரவரி 19 அன்று வெளியிடப்பட்ட நிதிநிலை அறிக்கையில், புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கிறது. புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்குகின்ற புத்தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்க இந்த ஆண்டு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில், புதிய தகவல்தொழில்நுட்ப பூங்கா 20 லட்சம் சதுர அடியில், ஆயிரத்து 100 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட இருக்கிறது. அடுத்த 5 ஆண்டுகளில், 200 கோடி ரூபாய் செலவில், மாநிலத் தரவு மையம் மேம்படுத்தப்படும். மதுரையில், புதிய டைடல் பூங்காக்கள் 6.4 லட்சம் சதுர அடியில 345 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட உள்ளது.
திருச்சியில், 6.3 லட்சம் சதுர அடியில் 350 கோடி ரூபாய் செலவில் புதிய டைடல் பூங்காக்கள் உருவாக்கப்பட இருக்கிறது. தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடியில் நியோ டைடல் பூங்காக்கள் அமைத்து 13 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது. 30 கோடி ரூபாயில் மின் அலுவலகத் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலத்தில் இலவச Wifi வசதிகள் என பல்வேறு திட்டங்களை இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவித்திருக்கிறோம். இவையெல்லாம் நிச்சயம் ஐ.டி. துறையை வளர்க்கும். அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமையிலான இந்த துறையில், தமிழகம் இந்தியாவின் முதன்மை மாநிலமாக உயரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
|
தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கப்படுமா? - தேர்தல் ஆணையம் விளக்கம் @ உயர் நீதிமன்றம் | ஆர்.பாலசரவணக்குமார் | சென்னை | 2024-02-23 15:02:00 |
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்குவது குறித்து மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பாக முடிவு செய்யப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தாக்கல் செய்த மனுவில், “எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் எங்களது கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கக் கோரி கடந்த 6-ம் தேதி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளோம். அடுத்த நான்கு வாரங்களில் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் அறிவிக்கலாம் என்ற நிலையில், எங்களது மனு மீது இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
எனவே, கடந்த 2019-ம் ஆண்டு பொதுத் தேர்தலைப் போன்று, இந்தத் தேர்தலுக்கும் தங்களது கட்சிக்கு சைக்கிள் சின்னம் வழங்க உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷஃபிக் ஆகியோர் அடங்கிய அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால், ''இந்திய தேர்தல் ஆணையத்திடம் தமிழ் மாநில காங்கிரஸ் அளித்த மனுவில் சில குறைகள் உள்ளன. அந்த குறைகளைச் சரி செய்து மீண்டும் மனு அளித்தால் அந்த மனு பரிசீலிக்கப்படும். மேலும், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் தமிழ் மாநில காங்கிரஸின் மனு பரிசீலிக்கபடும்'' என விளக்கம் அளித்தார்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மனுவை முன்னுரிமை அளித்து தகுதியின் அடிப்படையில் பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
|
“தமிழக மீனவர் பிரச்சினையில் ஒன்றிய அரசு பாராமுகம்” - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-23 13:50:00 |
சென்னை: “தமிழ்நாடு மீனவர் பிரச்சினையில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டு மீனவர்களை இந்திய மீனவர்கள் என்று கருதாமல் பாராமுகமாகவே செயல்பட்டு வருகிறது” என்று தமிழக மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக - இலங்கை மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக தமிழக மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், “பாக் நீரிணைப்பகுதியில் பன்னாட்டு கடல் எல்லையானது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் மிகவும் குறுகியதாக உள்ளது. பாக் வளைகுடா பகுதியில் குறிப்பாக இராமநாதபுரம் புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சார்ந்த மீனவர்கள் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருக்கும் போது, அவர்களது படகு இயற்கை சீற்றம் மற்றும் இயந்திர கோளாறு போன்ற காரணங்களினால் பன்னாட்டு எல்லைக்கோட்டினைக் கடந்து செல்ல நேர்கிறது.
இந்நேர்வுகளில், தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை இராணுவத்தினரின் தாக்குதலுக்கும் கைதுக்கும் உள்ளாகின்றனர். இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் துன்புறுத்தப்படும்போதும் கைது செய்யப்படும்போதும் தமிழக முதல்வர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டி பிரதமர் மற்றும் ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஆகியோரை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இவ்வாறான தாக்குதல் மற்றும் கைது சம்பவங்களில், ஒன்றிய அரசு தலையிட்டு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் மற்றும் படகுகளை உடனடியாக விடுதலை செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இலங்கை அரசு மீனவர்களை மட்டும் அவ்வப்போது விடுவித்துவிட்டு, படகுகளை நாட்டுடமையாக்கும் செயல்களை தொடர்ந்து செய்து வருகின்றது. படகுகளை பறிகொடுத்த மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பெரும்துயரத்திற்கு உள்ளாகின்றனர். தற்போதுவரை, இலங்கைச் சிறையில் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் 49 மீனவர்களும் 151 மீன்பிடி படகுகளும் உள்ளன.
சிறைபிடிக்கப்பட்ட 151 படகுகளில் 12 படகுகள் இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளது. இதில் மீட்கும் நிலையில் உள்ள 10 படகுகளையும் மீட்டு தமிழகம் கொண்டுவர முதல்வர் ஸ்டாலின் கடந்த அக்டோபர் 2023 அன்றே நிதி ஒதுக்கி மீட்புக்குழு அமைத்து ஆணையிட்டார். ஆனாலும், ஒன்றிய அரசானது தமிழ்நாட்டின் மீட்புக்குழு இலங்கைக்கு சென்று விடுதலை செய்யப்பட்ட படகுகளை தமிழ்நாட்டுக்கு கொண்டு வருவதற்கான அனுமதியை இன்றுவரை வழங்கவில்லை. அதேபோல, தமிழக - இலங்கை மீனவர்களுக்கிடேயேயான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்பொருட்டு நடத்தப்படும் இந்திய-இலங்கை கூட்டுப்பணிக்குழு கூட்டம் (Indo – Srilankan Joint working committee meeting) 2022ம் ஆண்டுக்கு பின்னர் இதுவரை நடைபெறவில்லை.
இந்த கூட்டத்தை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள ஒன்றிய அரசை முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனாலும், தமிழ்நாடு மீனவர் பிரச்சினையில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டு மீனவர்களை இந்திய மீனவர்கள் என்று கருதாமல் பாராமுகமாகவே செயல்பட்டு வருகிறது. அரசியல் காரணங்களுக்காக மீனவர்களை ஏமாற்றும் நோக்கத்தில் ஒன்றிய அமைச்சர்கள் அவ்வப்போது ராமேஸ்வரம் பகுதிகளுக்கு சென்று மீனவர்களை சந்தித்து இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை மீட்டுத்தருவோம் என்று வாக்குறுதி தருவதும், பாரதிய ஜனதா கட்சியினர் மீனவ பிரதிநிதிகளை டெல்லிக்கு அழைத்துச் சென்று ஒன்றிய அமைச்சர்களை சந்திக்க வைப்பதும் அவ்வப்போது நடந்து வருகிறது.
ஆனால், சிறைபிடிக்கப்பட்டு இலங்கையில் உள்ள படகுகளை மீட்பதற்கு எந்தவொரு திடமான நடவடிக்கையும் ஒன்றிய அரசால் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்பதே உண்மை. முதல்வர் ஸ்டாலின் இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டு சேதமடைந்த 152 மீன்பிடி படகுகளுக்கு ரூ.6.84 கோடி நிவாரணமாக வழங்கி மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்துள்ளார். எனவே, தமிழ்நாட்டு மீனவர்களின் மேல் அக்கறை இல்லாத ஒன்றிய அரசு மேலும் காலம் தாழ்த்தாமல் இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை விடுவிப்பதற்கும் இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு மீட்கும் நிலையில் உள்ள 10 படகுகளை தமிழ்நாட்டுக்கு கொண்டு வருவதற்கு அமைக்கப்பட்ட மீட்புக்குழு இலங்கை செல்ல உடனடியாக அனுமதியும் வழங்க வேண்டும்.
அதேபோல, இந்திய – இலங்கை கடற்பகுதியில் இருநாட்டு மீனவர்களும் அச்சமின்றி மீன்பிடி தொழிலில் ஈடுபட நெடுங்காலமாக நடத்தப்படாமல் இருக்கும் இந்திய-இலங்கை கூட்டுப்பணிக்குழு கூட்டத்தையும் உடனடியாக நடத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அரசை கேட்டுக் கொள்கிறோம்" இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
|
சென்னையில் 500 முக்கிய இடங்களில் இலவச வைஃபை: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-23 13:28:00 |
சென்னை: சென்னை மாநகராட்சியில் 500 முக்கிய இடங்களில் இலவச வைஃபை வசதி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் இரண்டு நாட்கள் நடத்தப்படும் “Umagine TN” தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு இன்று தொடங்கியது. மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
2021-2022ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, யுமாஜின் (UMAGINE) - வருடாந்திர தொழில்நுட்ப தலைமை உச்சி மாநாட்டை சென்னையில் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, முதலாவது “UmagineTN” மாநாடு 2023ம் ஆண்டு மார்ச் 23 முதல் 25 வரை சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டும், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (எல்காட்) மூலம் “UmagineTN 2024” எனும் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு சென்னை வர்த்தக மையத்தில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.
மாநாட்டின் முதல் நாளான இன்று, பொருளாதார வளர்ச்சியை வழங்கவல்ல தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கான நோக்கத்தை முன்னெடுப்பதற்கான ஒரு தளமாக, தொழில் நிறுவனங்களுடன் இணைந்து உலகளாவிய தொழில்நுட்ப நிகழ்வைச் சென்னையில் நடத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்தது.
முன்னதாக, இந்நிகழ்வின்போது வரவு–செலவுத் திட்டக் கூட்டத்தொடரில் வெளியிடப்பட்ட சென்னை, கோவை, மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம் உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் 1000 முக்கிய இடங்களில் இலவச வைஃபை சேவைகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பின்படி, முதற்கட்டமாக சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களான பூங்காக்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் கடற்கரை ஆகிய முக்கிய 500 இடங்களில் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மூலம் இலவச வைஃபை வசதி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
|
மீனவர்கள் கைது | மனிதச் சங்கிலி, மோடிக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம்: தமிழக காங்கிரஸ் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-23 13:00:00 |
சென்னை: மத்திய அரசு மற்றும் இலங்கை அரசின் தமிழக மீனவர்கள் மீதான விரோதப் போக்கை கண்டித்து பிப்.27-ல் மனித சங்கிலி போராட்டமும், பிப். 28 -ல் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து பிப்ரவரி 03 அன்று கடலுக்குச் சென்று கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டு விசைப்படகுகளை சிறைப்பிடித்து படகுகளிலிருந்த 23 மீனவர்களில் 20 மீனவர்களை மட்டும் விடுதலை செய்த இலங்கை நீதிமன்றம், 2 படகுகளின் ஓட்டுநர்களுக்கு தலா 6 மாதங்கள் சிறை தண்டனையும் ஒரு மீனவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.
இதனால், ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 20 ஆம் தேதி பேரணியாக சென்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதன் காரணமாக, மாவட்ட ஆட்சியர் மீனவ பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையினால் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய மீன்வளத்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்களிடம் தமிழக மீனவப் பிரதிநிதிகள் நேரடியாக சென்று சிறை தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்திய பின்னரும் மத்திய அரசு எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் மேலும் ஒரு ராமேஸ்வரம் மீனவரான ஜான்சன் என்பவருக்கு இலங்கை நீதிமன்றம் மீண்டும் ஆறு மாத சிறை தண்டனையை நேற்று விதித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சிக் காலத்தில் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் அடக்குமுறை மேலும் அதிகரித்துள்ளது. கடந்த 2014 முதல் பிப்ரவரி 2024 வரையிலுமான 10 ஆண்டுகளில் சுமார் 400 படகுகள் உட்பட 3179 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி ஆட்சியின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட தோல்வியினால் தான் தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் அத்துமீறலும், தாக்குதலும் தொடர்கிறது.
கடந்த 2013 ஆம் ஆண்டு பாம்பனில் பாஜகவினர், சுஷ்மா சுவராஜ் தலைமையில் கடல் தாமரை மாநாடு நடத்தி, ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீனவர்களுக்கென தனி அமைச்சகம், இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் கைது இருக்காது” என வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்தார்கள். அந்த வாக்குறுதிகள் எதையும் இதுவரை நிறைவேற்றாமல் தமிழக மீனவர்களுக்கு எதிரான அரசாக மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், ராமேஸ்வரம் மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பு தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டிக்கிற வகையில், பாரம்பரியமாக பங்கேற்கிற கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழாவை புறக்கணிப்பது எனவும், நாளை முதல் தொடர் உண்ணாவிரதமும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மீனவர் போராட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கிறது.
எனவே, நமது மத்திய அரசு மற்றும் இலங்கை அரசின் தமிழக மீனவர்கள் மீதான விரோதப் போக்கை கண்டித்து எனது தலைமையில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ்குமார், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தேசியத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில், பிப்ரவரி 27 செவ்வாய்க்கிழமை அன்று காலை ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டமும், அதைத் தொடர்ந்து பிப்ரவரி 28 புதன்கிழமை அன்று காலை தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்ட வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தேசியத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ தலைமையில் கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
இந்தப் போராட்டங்கள் வெற்றி பெற அனைத்து மீனவ பெருமக்களும் பெருந்திரளாக பங்கேற்று மீனவ மக்களின் உரிமைகளை காக்க முன்வர வேண்டுமென அன்போடு அழைக்கிறேன்.
அகில இந்திய மீனவர் காங்கிரஸ் நடத்தும் இப்போராட்டங்களில் நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், அகில இந்திய மீனவர் காங்கிரஸ், தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் நிர்வாகிகள், தமிழக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் நாட்டுப்படகு, விசைப்படகு மீனவ பிரதிநிதிகள் திரளாக கலந்து கொள்ள உள்ளார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
|
தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தந்தை மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல் | செய்திப்பிரிவு | திருப்பூர் | 2024-02-23 12:30:00 |
திருப்பூர்: தமிழக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் தந்தை முத்தூர். சா. பெருமாள்சாமி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன். இவர், திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரின் பெற்றோர்கள் தந்தை சா. பெருமாள்சாமி (94). தாயார் தங்கமணி. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சாமிநாதனின் தாயார் தங்கமணி இறந்த நிலையில் தந்தை பெருமாள் சாமி வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் சமீப நாட்களாக கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பலனளிக்காத நிலையில் இன்று காலை பெருமாள் சாமி உயிரிழந்தார்.
அவரின் மறைவையொட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் , “தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சரும் கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான மு.பெ.சாமிநாதன் அவர்களின் அருமைத் தந்தை முத்தூர். சா. பெருமாள்சாமி அவர்கள் மறைந்த செய்தியறிந்து வருந்தினேன்.
தந்தையை இழந்து தவிக்கும் மு.பெ.சாமிநாதனை தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தேன். அப்போது, 94 ஆண்டுகளைக் கடந்து நிறைவாழ்வு வாழ்ந்த தன் தந்தை, அவரது இறுதி மூச்சுவரை உழவராக வாழ்ந்ததைக் குறிப்பிட்டார். பெருமாள்சாமி அவர்களது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் மீண்டும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
|
தமிழக மீனவர்களுக்கு சிறைத் தண்டனை: நிரந்தர தீர்வு காண மத்திய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-23 12:24:00 |
சென்னை: வங்கக்கடலில் மீன்பிடித்த போது கடந்த 8-ஆம் நாள் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேரில் 18 பேரை விடுதலை செய்திருக்கும் இலங்கை நீதிமன்றம், ஜான்சன் என்ற படகு ஓட்டுநருக்கு மட்டும் 6 மாதம் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருக்கிறது. சிங்கள அரசின் புதிய அத்துமீறலைத் தடுத்து மத்திய அரசு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “வங்கக்கடலில் மீன்பிடித்த போது கடந்த 8-ஆம் நாள் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேரில் 18 பேரை விடுதலை செய்திருக்கும் இலங்கை நீதிமன்றம், ஜான்சன் என்ற படகு ஓட்டுநருக்கு மட்டும் 6 மாதம் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருக்கிறது. மீனவர் ஜான்சன் ஏற்கனவே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைதாகி விடுதலை ஆனவர் என்றும், இப்போது மீண்டும் ஒரு முறை அந்தக் குற்றத்தை செய்திருப்பதால் சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது.
அதுமட்டுமின்றி, விடுதலை செய்யப்பட்ட 18 மீனவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டால், அவர்களுக்கு 6 மாதங்களும், ஜான்சன் விடுதலையான பிறகு மீண்டும் கைது செய்யப்பட்டால் ஓராண்டும் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் இலங்கை நீதிமன்றம் எச்சரித்திருக்கிறது. இது சட்டத்தைப் பயன்படுத்தி சிங்கள அரசு செய்யும் அத்துமீறலாகும்.
தமிழக மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் சிறைத் தண்டனை விதிப்பது கடந்த ஒரு வாரத்தில் இது இரண்டாவது முறையாகும். கடந்த 4-ஆம் தேதி வங்கக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 23 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், கடந்த 16-ஆம் நாள் தீர்ப்பளித்த இலங்கை நீதிமன்றம், 20 மீனவர்களை விடுதலை செய்ததுடன், இரு மீனவர்களுக்கு தலா 6 மாத சிறைத் தண்டனையும், ஒரு மீனவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து தான் நேற்று மீனவர் ஜான்சனுக்கு இலங்கை நீதிமன்றம் தண்டனை வழங்கியிருக்கிறது.
தமிழக மீனவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கும் சிங்கள அரசு மற்றும் நீதிமன்றங்களின் புதிய அத்துமீறல், தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரங்களை அழிப்பதற்காக திட்டமிட்டு அரங்கேற்றப்படும் அடுத்தக்கட்ட அணுகுமுறையாகவே தோன்றுகிறது. கடந்த 6 மாதங்களுக்கு மேலாகவே தமிழக மீனவர்களை கைது செய்வது, தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்கொள்ளையர்களைக் கொண்டு தாக்குதல் நடத்தி கொள்ளையடிப்பது போன்ற செயல்களில் இலங்கை அரசு ஈடுபட்டு வந்தது.
ஆனால், அவற்றின் மூலம் தமிழக மீனவர்களை நிலைகுலையச் செய்ய முடியாததால் மீனவர்களை மாதக்கணக்கிலும், ஆண்டுக் கணக்கிலும் சிறையிலடைக்கும் அணுகுமுறையை இலங்கை அரசு கையில் எடுத்திருக்கிறது. இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களை பறிப்பதற்காக கடந்த காலங்களிலும் இத்தகைய உத்திகளை இலங்கை பயன்படுத்தியிருக்கிறது. இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடிப்பவர்களுக்கு ரூ.25 கோடி தண்டம் விதிக்கும் சட்டத்துக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
அப்போது தமிழகத்தில் இருந்து எழுந்த எதிர்ப்புகளின் காரணமாக அந்த முடிவை இலங்கை அரசு திரும்பப் பெற்றது. பின்னர் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டினால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று கடந்த ஆண்டு இலங்கை அரசு எச்சரிக்கை விடுத்தது. இப்போது அதை செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. இலங்கை அரசின் இந்த நடவடிக்கை பன்னாட்டு விதிகளுக்கு எதிரானது.
வங்கக்கடலில் மீன்பிடிப்பதற்காக தமிழக மீனவர்களுக்கு எந்த வகையிலும் தண்டனை விதிக்க முடியாது என்பது தான் எதார்த்தம் ஆகும். இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான கடற்பரப்பு மிகவும் குறுகியது. அதனால் தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள்ளும் இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள்ளும் நுழைவதை தவிர்க்க முடியாது. அதனால் தமிழக மீனவர்களும், இலங்கை மீனவர்களும் காலம் காலமாக எந்தெந்த பகுதிகளில் மீன்பிடித்து வந்தார்களோ, அதே பகுதியில் தொடர்ந்து மீன்பிடிக்க அனுமதிப்பது தான் சரியானதாகும். பாரம்பரியமாக மீன் பிடிக்கும் பகுதிகளில் மீன் பிடித்ததற்காக தமிழக மீனவர்களை சிங்கள அரசு கைது செய்வதையும், சிறையில் அடைப்பதையும் இந்திய அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது.
மிகக்குறுகிய பரப்பளவைக் கொண்ட தமிழக இலங்கை கடல் எல்லையை இரு தரப்பு மீனவர்களும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பகிர்ந்து கொண்டு மீன் பிடிப்பது தான் இந்த சிக்கலுக்கு தீர்வாகும். கடந்த காலங்களில் பலமுறை இத்தீர்வு முன்வைக்கப்பட்டுள்ளது. இதை உணர்ந்து கொண்டு தமிழக மீனவர்கள், இலங்கை மீனவர்கள், தமிழக அரசு, இலங்கை அரசு ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுக்களுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
சிங்களக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில், அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதுடன் தனது கடமையை முதல்வர் மு.க.ஸ்டாலின் முடித்துக் கொள்ளக் கூடாது.
மீனவர்கள் தொடர்ந்து சிறையில் அடைக்கப் படுவதைக் கண்டித்து தொடர் வேலை நிறுத்தம், கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழா புறக்கணிப்பு என இராமேஸ்வரம் மீனவர்கள் போர்க்கோலம் பூண்டுள்ள நிலையில், இந்த சிக்கலுக்கு தீர்வு காண ஆக்கபூர்வ நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொள்ள வேண்டும். அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் டில்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணும்படி வலியுறுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
|
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை ஐடி துறைக்கு மாற்றியது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் விளக்கம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-23 11:33:00 |
சென்னை: அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை நிதி துறையில் இருந்து தகவல் தொழில்நுட்ப துறைக்கு மாற்றியது ஏன் என்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
சர்வதேச அளவிலான “Umagine TN 2024” அல்லது ‘உமேஜின்’ என்ற தகவல் தொழில்நுட்ப மாநாடு சென்னையில் இன்று (பிப்.23) தொடங்கியுள்ளது. தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த தகவல் தொழில்நுட்ப மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தொடக்க உரையின்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை நிதி துறையில் இருந்து தகவல் தொழில்நுட்ப துறைக்கு மாற்றியது ஏன் என்பது தொடர்பாக பேசியுள்ளார். தனது உரையின்போது, “தகவல் தொழில்நுட்பத்தை முன்னிறுத்தி இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ள துரையின் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை நான் பாராட்டுகிறேன். மூன்று தலைமுறையாக நாட்டுக்கு தொண்டாற்றி வரும் குடும்பத்துக்குச் சொந்தக்காரர் அமைச்சர் பிடிஆர்.
இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான திருச்சி என்ஐடியிலும், உலகின் தலைசிறந்த கல்வி நிறுவனமான எம்ஐடியிலும் படித்தவர். பல ஆண்டுகளில் வெளிநாடுகளில் படித்து, வேலை பார்த்திருந்தாலும், அங்கேயே தங்கிவிடாமல் தமிழ்நாட்டுக்கு திரும்ப வந்து, இங்கேயே தொழில் வர்த்தகம் என்று ஒதுங்கி விடாமல் அவரின் தாத்தா, அப்பா மாதிரி அரசியலில் பங்கெடுத்து தன்னுடைய அறிவாற்றலை தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுத்துட்டு இருப்பவர் அமைச்சர் பிடிஆர்.
திமுக ஆட்சியில் முதல் இரண்டு ஆண்டுகள் நிதி அமைச்சராக மிக சிறப்பாக செயல்பட்டு பல மாற்றங்களுக்கு வித்திட்டார் பிடிஆர். அவரை நான் ஐடி துறைக்கு மாற்றினேன். அவரை மாற்றியதற்கு காரணம், ஐடி துறையிலும், நிதித் துறை போல் மாற்றங்கள் தேவைப்பட்டது. அவரின் தலைமையில் தகவல் தொழில்நுட்ப துறை மூலமாக தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியும், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பும் அதிகமாகும். நான் கொடுத்த பொறுப்பை அவர் சிறப்பாக செயல்படுத்துகிறார் என்பதற்கு இந்த மாநாடே சிறந்த உதாரணம். அவரின் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.” என்று தெரிவித்தார்.
|
மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டம்: தமிழக அரசு உடனடியாக கைவிட டிடிவி வலியுறுத்தல் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-23 11:30:00 |
சென்னை: திருவண்ணாமலையில் சிப்காட் அமைக்கும் பணிக்காக விளைநிலங்களைத் தர மறுக்கும் விவசாயிகளைக் கைது செய்து குற்றவாளிகளைப் போல நடத்துவது கடும் கண்டனத்திற்குரியது என்றும் போராடும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இது குறித்து வெளியிட்டிருக்கும் தனது எக்ஸ் பதிவில், “திருவண்ணாமலையில் சிப்காட் அமைக்கும் பணிக்காக விளைநிலங்களைத் தர மறுக்கும் விவசாயிகளைக் கைது செய்து குற்றவாளிகளைப் போல நடத்துவது கடும் கண்டனத்திற்குரியது. போராடும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்திற்காக 3,200 ஏக்கர் விளைநிலங்களைக் கையகப்படுத்தும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிராக அப்பகுதி விவசாயிகள் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சிப்காட் விரிவாக்க திட்டத்தை எதிர்த்து போராடும் விவசாயிகள் நிலமற்றவர்கள் எனவும், வெளியூர்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சட்டமன்றத்தில் பேசியிருப்பது ஒட்டுமொத்த விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுப்பணித்துறை அமைச்சரின் உண்மைக்கு மாறான கருத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தி திருவண்ணாமலை மேல்மா கூட்டுச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். தேர்தல் அறிக்கையில் 43-வது வாக்குறுதியான விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் விளைநிலங்களை வேறுபயன்பாட்டிற்கு மாற்றுவது தடுக்கப்படும் என கூறிய திமுக அரசின் முதல்வர், கோரிக்கை மனுக்களை வழங்க வரும் விவசாயிகளைச் சந்திக்க மறுத்து காவல்துறை மூலம் கைது செய்திருப்பது ஈவு இரக்கமற்ற செயலாகும்.
எனவே, விளைநிலங்களைப் பறித்து வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்பதோடு, சட்டமன்றத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் உண்மைக்கு மாறான கருத்தையும் அவைக் குறிப்பில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
|
இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுக: ஜி.கே.வாசன் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-23 11:22:00 |
சென்னை: தமிழக அரசு, நான்கு நாட்களுக்கும் மேலாக போராட்டக் களத்தில் இருக்கும் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் கோரிக்கைகளை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழக அரசு, நான்கு நாட்களுக்கும் மேலாக போராட்டக் களத்தில் இருக்கும் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் கோரிக்கைகளை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசு, தமிழ்நாட்டில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை போராட்டக் களத்திற்கு செல்லும் நிலைக்கு செயல்படுவது நியாயமில்லை.
சமவேலைக்கு சம ஊதியம் கேட்டு கடந்த 4 நாட்களுக்கும் மேலாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்ட நிலையில், அவர்களை கைது செய்த போலீஸார், அவர்களுடன் சாலையில் நின்ற பொதுமக்களையும் கைது செய்து அழைத்து சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் உள்ள தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில் 2009 ஜூன் 1-க்குப் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதற்கு முன்னர் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஊதிய முரண்பாடுகள் இருந்து வருகிறது. 01.06.2009-க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் 8 ஆயிரத்து 370 ரூபாய் என்றும், அதன் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு 5 ஆயிரத்து 200 ரூபாய் என உள்ளது.
ஒரே கல்வித் தகுதி மற்றும் ஒரே பணி என இருந்த போதும் இரண்டு விதமான ஊதியங்கள் நிர்ணயிக்கப்பட்டதை களையக் கோரி, இடைநிலை ஆசிரியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய எந்த நடவடிக்கையும் எடுக்காததால், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மாணவர்களின் கல்வி நலனை கவனத்தில் கொண்டு, காலாண்டு மற்றும் அரையாண்டு விடுமுறை போன்ற விடுமுறை நாட்களில் மட்டுமே தங்கள் உடலை வருத்திக் கொண்டு உண்ணாமல் உண்ணாவிரதப் போராட்டத்தையும் மேற்கொண்டனர்.
இப்போது சென்னையில் கடந்த 4 நாட்களாக போராட்டத்தில் உள்ள ஆசிரியர்களின் கோரிக்கை சம்பந்தமாக தமிழக அரசு நிதிநிலைமை சீராகும் போது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்திருப்பது ஏற்புடையதல்ல. இந்நிலையில் நேற்று முதல் தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட தொடங்கிய போது போராடிய சுமார் 500 க்கும் மேற்பட்டோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது.
சம வேளைக்கு சம ஊதியம் கேட்கும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை சம்பந்தமாக தேர்தலுக்கு முன்பு திமுக வாக்குறுதி கொடுக்கும் போது நிதிநிலை சீராகும் போது கொடுப்போம் என்று தெரிவித்திருந்தால் பரவாயில்லை. ஆனால் திமுக தேர்தல் அறிக்கை வரிசை எண் 311-இல் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்குச் சம வேலைக்கு, சம ஊதியம் வழங்கப்படும் என இடைநிலை பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கையை இடம் பெறச் செய்தது. இதிலிருந்து என்ன தெரிகிறது, வாக்கு வாங்கி வெற்றிபெறத்தான் வாக்குறுதிகள் அள்ளி வீசப்பட்டன.
எனவே தமிழக திமுக அரசு, இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஏற்கனவே அறிவித்த வாக்குறுதி, ஆசிரியர்களின் பொருளாதார நிலைமை, மாணவர்களுக்கு போராட்டமில்லா ஆசிரியர்களின் கற்பித்தல் நிலை ஆகியவற்றை கவனத்தில் கொண்டு உடனடியாக இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
|
மக்களவை தேர்தல் | சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை: அரசியல் கட்சிகள் பங்கேற்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-23 11:04:00 |
சென்னை: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் சென்னையில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடத்துவது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஆலோசனை நடத்தி வருகிறார். அவர் அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இன்று மக்களவை தேர்தல் தொடர்பான ஆலோசனை நடத்துகிறார். அதன்படி, திமுக, அதிமுக, தேமுதிக, பாஜக, ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் கட்சி ஆகிய 10 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
ஒவ்வொரு கட்சிக்கும் 10 நிமிடம் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட நேரத்தில் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மக்களவைத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துவார். தேர்தல் தேதி, வாக்குச்சாவடி, நடத்த விதிமுறைகள் பாதுகாப்பு உள்ளிட்டவை ஆலோசனையில் முக்கிய அம்சமாக இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் உடன் துணை ஆணையர் தர்மேந்திர சர்மா, நிதேஷ் நியாஸ், அஜய் பாது ஆகியோரும் ஆலோசனையின்போது உடன் உள்ளனர்.
நாளையும் மக்களவைத் தேர்தல் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஆலோசனை நடத்தவிருக்கிறார். நாளை தென்மாநில தேர்தல் அதிகாரிகள், அமலாக்கத் துறை, சுங்கத்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.
|
“அதிமுகவை உடைக்க ஸ்டாலின் முயற்சிக்கிறார்” - இபிஎஸ் குற்றச்சாட்டு | செய்திப்பிரிவு | பேசியது | 2024-02-23 10:04:00 |
நெய்வேலி டவுன்ஷிப் செவ்வாய் சந்தை அருகே, ரூ. 10 லட்சம் செலவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முழு உருவ சிலையை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று இரவு திறந்து வைத்தார். கடலூர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
இதில். பழனிசாமி பேசியது: இங்குள்ள எம்ஜிஆர் சிலையை ஜெயலலிதா திறந்து வைத்தார். நான் ஜெயலலிதா சிலையை திறந்து வைத்துள்ளேன். இந்த மைதானமே நிரம்பி வழிந்து கொண்டிருப்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மக்களவைத் தேர்தலிலே வெற்றி பெறுவதற்கு இங்கு உள்ள கூட்டமே அத்தாட்சி. நெய்வேலி வரை மக்கள் வெள்ளத்தில் நீந்தி வந்துள்ளேன். நாங்கள் மக்களை நம்பி இருக்கிறோம் மக்கள் தான் எஜமானர்கள்.
மக்கள் சக்தி பெற்ற இயக்கம் அதிமுக. இந்த இயக்கத்தை உடைக்க திமுக தலைவர் ஸ்டாலின் முயற்சி செய்து வருகிறார். அதிமுகவை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது. காற்றுக்கு எப்படி தடை போட முடியாதோ அதுபோல் அதிமுகவுக்கு தடை போட முடியாது.
ஸ்டாலின் எத்தனை வழக்கு போட்டாலும், நீதிமன்றத்தில் சந்தித்து வழக்குகளை எல்லாம் வெற்றி காண்போம். அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு நிறுத்தியுள்ளது. இதற்கு தமிழ்நாட்டு மக்கள் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள். விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்தோம் விவசாயிகளுக்கு இலவசமின்சாரம் கொடுத்தோம். தற்போது டெல்டா விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
திரிணமூல் ஆதரவு: மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது திரிணமூல் காங்கிரஸ். அதற்கான கடிதத்தை, கட்சியின் தமிழக தலைவர் கலைவாணன் நேற்று முன்தினம், சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை சந்தித்து வழங்கினார். கலைவாணன் கூறும்போது, "இந்த முடிவை விரைவில் மம்தா பானர்ஜிக்கு தெரிவிப்போம்" என்றார்.
|
“வரும் தேர்தலில் தமிழகத்தில் பாஜக வாக்கு சதவீதம் அதிகரிக்கும்” - அண்ணாமலை உறுதி | செய்திப்பிரிவு | கோவை | 2024-02-23 08:53:00 |
கோவை: வரும் மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜகவின் வாக்கு 33 சதவீதமாக அதிகரிக்கும் என, மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்ற ‘என் மண் என் மக்கள்’ நடை பயணம் நேற்று மாலை கோவை பாப்ப நாயக்கன் பாளையம் பகுதியில் தொடங்கி சித்தாபுதூர் விகேகே மேனன் சாலையில் நிறைவடைந்தது.
தொடர்ந்து அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது: தமிழகத்தில் மது விற்பனை மூலம் அரசுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இது போன்ற அவல நிலையை காண முடியாது. என்னை லேகியம் விற்பவர் என அதிமுகவினர் விமர்சித்துள்ளனர். பிப்ரவரி 27ம் தேதி பொங்கலூரில் நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் தமிழகத்தில் நிலவி வரும் குடும்ப ஆட்சி உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாக அந்த லேகியம் அமையும்.
நதிகள் புனரமைப்பு உள்ளிட்ட தமிழக அரசு அறிவித்து வரும் திட்டங்கள் அனைத்தும் மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்து அமல்படுத்தி வரும் திட்டங்கள் தான். தமிழகத்தில் பாஜக 20 சதவீத வாக்கு சதவீதத்தை தாண்டி பல ஆண்டுகள் கடந்துவிட்டது. எதிர்வரும் தேர்தலில் 33 சதவீதமாக அதிகரிக்கும். எனவே, தமிழகத்தில் பாஜக ஏற்கெனவே வளர்ந்து விட்டது.
கோவையில் தேசிய புலனாய்வு முகமை காவல் நிலையம் அமைக்க வேண்டும். கோவை போன்ற ஒரு நகரத்தில் சர்வதேச விமான போக்கு வரத்து அதிகரிக்காதது, விரிவாக்க திட்டம் செயல்படுத்தாமல் உள்ளது உள்ளிட்டவை வெட்கக்கேடானது. இதற்கு திமுக அரசே காரணம். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ., மாநில பொதுச் செயலாளர் ஏ.பி. முருகானந்தம், பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், கோவை மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ்குமார், பேராசிரியர் கனக சபாபதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
|
“நிலம் தர மறுத்ததால் குற்றவாளிகளை போல் நடத்தும் காவல் துறையினர்” - போராடும் மேல்மா விவசாயிகள் | செய்திப்பிரிவு | திருவண்ணாமலை | 2024-02-23 08:35:00 |
திருவண்ணாமலை: அமைச்சர் எ.வ.வேலுவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், முதல்வரை சந்திக்க அனுமதிக்க கோரியும் செய்யாறு அடுத்த மேல்மா கூட்டுச்சாலையில் 3-வது நாளாக உண்ணாவிரதம் இருந்த 7 விவசாயிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றி திருவண்ணா மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்த காவல்துறைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா சிப்காட் திட்டத்தை எதிர்த்து, கடந்த 7 மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மற்றும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் குறித்து, சட்டப்பேரவையில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு கருத்து தெரிவித்திருந்தார். அமைச்சர் கருத்துக்கு கடும்கண்டனம் தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், விவசாயிகளுக்கு எதிராக தெரிவிக்கப்பட்ட அமைச்சர் எ.வ.வேலுவின் தவறான கருத்தை அவை குறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலினை சந்திக்க கடந்த 20-ம் தேதி புறப்பட்ட விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால், மேல்மா கூட்டுச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை விவசாயிகள் தொடங்கினர். இந்தப் போராட்டம் 3-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது.
மேல்மா கூட்டுச்சாலையில் காவல்துறையினர் அதிகாலை 4.30 மணியளவில் குவிக்கப்பட்டனர். உண்ணாவிரதம் இருந்த விவசாயிகள் சந்திரன், மணிகண்டன், மாசிலாமணி, தேவன், ரேணுகோபால், நேதாஜி, ராஜா ஆகிய 7 விவசாயிகளை வலுக்கட்டாயமாக ஆம்புலன்ஸில் ஏற்றி, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
அவர்களுக்கு, மருத்துவப் பரிசோதனை செய்ததில் உடல்நிலை சீராக இருப்பது தெரியவந்ததால், அனைவரும் வீட்டுக்கு செல்லலாம் என கூறி மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, மருத்துவக் கல்லூரி முன்பு உள்ள பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த 7 விவசாயிகளையும் திருவண்ணாமலை காவல் துறையினர் சிறைபிடித்து, மருத்துவமனைக்கு மீண்டும் அழைத்துச் சென்றனர். இதற்கிடையில், விவசாயிகளுக்கு ஆதரவாக மருத்துவமனை வளாகத்தில் பாமகவினர் திரண்டனர். இதனால், காவல் துணை கண்காணிப்பாளர் குணசேகரன் தலைமையிலான காவல் துறையினர் பின்வாங்கினர். இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து 7 விவசாயிகளும் வெளியேறினர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, “முதல்வரை சந்தித்து மனு கொடுக்க அனுமதிக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இன்று (நேற்று) அதிகாலை, எங்களை குண்டு கட்டாக தூக்கி, கைதியை போல் 108 ஆம்புலன்ஸில், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
எங்களை பரிசோதித்த மருத்துவர், உடல்நிலை சீராக இருப்பதாக கூறி அனுப்பிவிட்டனர். சொந்த கிராமத்துக்கு செல்ல முயன்ற எங்களை, காவல்துறையினர் சிறைபிடித்தனர். நிலம் தர மறுத்ததால் எங்களை குற்றவாளிகளை போல் மடக்கி பிடித்து அவமதித்தனர்” என்றனர்.
ஏற்கெனவே, உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறி பெருமாள், கணேசன் ஆகிய 2 விவசாயிகள், வந்தவாசி அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
9 விவசாயிகளை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கொண்டு சென்றதால், ஆத்திரமடைந்த பிற விவசாயிகளில் சிலர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
23 விவசாயிகள் கைது: இதற்கிடையில், முதல்வரை சந்தித்து மனு கொடுக்க சென்னை தலைமை செயலகத்துக்கு நேற்றுகாலை சென்ற 19 பெண்கள், 4 ஆண்டுகள் என 23 விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அப்போது இரண்டு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதில், 2 விவசாயிகள் காயமடைந்துள்ளனர். முதல்வரை சந்தித்து மனு கொடுக்கும் வரை, சென்னையில் இருந்து திரும்பமாட்டோம் என விவசாயி கள் தெரிவித்துள்ளனர்.
|
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 18 பேர் விடுதலை: ஒருவருக்கு 6 மாதம் சிறை தண்டனை | செய்திப்பிரிவு | ராமேசுவரம் | 2024-02-23 06:29:00 |
ராமேசுவரம்: வெளிநாட்டு மீன்பிடி தடைச் சட்டத்தின் கீழ் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் படகுகளின்ஓட்டுநர்களுக்கு சிறை தண்டனை விதிக்கும் நடைமுறையை இலங்கை அரசு அண்மையில் அமல்படுத்தியது.
இதனடிப்படையில் தமிழக மீனவர் மெல்சனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், 2 படகுகளின் ஓட்டுநர்களுக்கு தலா 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதைக் கண்டித்தும், தண்டனையை ரத்து செய்யக் கோரியும் ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் நேற்று 6-வது நாளாக தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த 9-ம் தேதி கடலுக்குச் சென்ற19 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி கஜநிதிபாலன், ``ஒரு படகின் உரிமையாளர் அன்றன் சசிக்குமார் படகின் ஓட்டுநராகவும் இருந்து சிறை பிடிக்கப்பட்டதால் அவரது படகை மட்டும் நாட்டுடமையாக்கப்படுகிறது. மற்றொரு படகின் ஓட்டுநர் ஜான்சன் (38) என்பவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது" என்று உத்தரவிட்டார்.
மேலும், 18 மீனவர்கள் மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்தால் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் விடுதலை செய்து உத்தரவிட்டார். மற்றொரு படகின் உரிமையாளரான அலெக்ஸ் மே 14-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
|
பிரதமர் பிப்.27-ல் தமிழகம் வருகை: 2 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-23 06:15:00 |
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி பல்வேறுநிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வரும் 27-ம் தேதி தமிழகம் வருகிறார். அவர் 2 நாட்கள் திருப்பூர், மதுரை, தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே கடந்த மாதம் தமிழ்நாடு, கேரளா, லட்சத்தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர், இந்த ஆண்டு 2-வது முறையாக மீண்டும் தமிழகம் வருகிறார்.
வரும் 27-ம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற உள்ள அண்ணாமலையின் `என் மண், என் மக்கள்' நடைபயண நிறைவு நாள் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார்.
இதையொட்டி, வரும் 27-ம் தேதி டெல்லியில் இருந்து புறப்பட்டு, திருவனந்தபுரம் வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து மதியம் 2.05 மணிக்கு விமானம் மூலம் கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்துக்கு வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருப்பூர் மாவட்டம் பல்லடத்துக்கு மதியம் 2.30 மணி அளவில் செல்கிறார்.
அங்கிருந்து சாலை மார்க்கமாக பல்லடம் மாதப்பூர் பகுதியில் நடைபெறும் `என் மண், என் மக்கள்' நடைபயன நிறைவு விழாவுக்கு வந்து, அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
அன்று மாலை 4 மணியளவில் பல்லடத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை செல்லும் பிரதமர், மாலையில் நடைபெறும் டிவிஎஸ் பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர், திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்குகிறார்.
ராக்கெட் ஏவுதளம்: வரும் 28-ம் தேதி காலைமதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு ஹெலிகாப்டரில் செல்லும் பிரதமர், காலை 9.30 மணிக்குவஉசி துறைமுக வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட திட்டப் பணிகளைத் காணொலி வாயிலாகத் தொடங்கிவைக்கிறார்.
தொடர்ந்து காலை 11.05 மணிக்கு தூத்துக்குடியில் இருந்துஹெலிகாப்டர் மூலம் திருநெல்வேலி செல்லும் பிரதமர், காலை 11.15 மணிக்கு திருநெல்வேலியில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார். பின்னர், பகல் 12.30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து டெல்லி செல்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக பயணத் திட்டம் முடிவாகிவிட்ட நிலையிலும், அவரது புறப்பாடு மற்றும் வருகை நேரங்களில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்றுகூறப்படுகிறது. இது தொடர்பாக விரைவில் இறுதி செய்யப்பட்டு, தமிழக அரசுக்கும், மாநில காவல் துறைக்கும் தெரிவிக்கப்படும் என்று பிரதமர் அலுவலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
|
ஐஓஎஸ் தளத்தில் செயல்படும் ‘சென்னை பஸ் செயலி’ அறிமுகம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-23 06:10:00 |
சென்னை: ஐஓஎஸ் தளத்தில் செயல்படும் ‘சென்னை பஸ் செயலி’ பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னை மாநகர பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு, பேருந்துகள் வரும் நேரம், வந்து கொண்டிருக்கும் இடம் உள்ளிட்டவற்றை செல்போனில் அறிந்து கொள்ளும் வகையில் ‘சென்னை பஸ்’ (CHENNAI BUS) செயலி கடந்த 2022-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
இது ஆண்டிராய்டு செல்போனில் மட்டும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இச்செயலியை ஆப்பிள் நிறுவன செல்போன்களில் பயன்படுத்துவதற்கேற்ப ஐஓஎஸ்தளத்தில் செயல்படுத்த வேண்டும் என நீண்டநாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சென்னை, தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐஓஎஸ் தளத்தில் இயங்கும் வகையிலான ‘சென்னை பஸ்’ செயலியை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கிவைத்தார்.
|
பார்வையற்ற பட்டதாரிகள் போராட்டத்தை கைவிட வேண்டும்: மாற்றுத் திறனாளிகள் நலத் துறை வேண்டுகோள் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-23 06:09:00 |
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் பார்வையற்றக் கல்லூரி மாணவர்கள், பட்டதாரிகள் சங்கத்தினர் ஆகியோர் போராட்டத்தைக் கைவிடவேண்டும் என்று மாற்றுத் திறனாளிகள் நலத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழக மாற்றுத் திறனாளிகள் நலத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலைவாய்ப்பு, உதவித்தொகை உயர்த்திவழங்குதல் உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்றக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினர் கடந்த 13-ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சங்க உறுப்பினர்களிடம் பிப்.17 மற்றும் பிப்.21-ம் தேதி ஆகிய நாட்களில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
பணிநிரந்தரம்: அரசு வேலை வாய்ப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டில், பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு சதவீத இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், அனைத்துத் துறைகளிலும் சிறப்பு ஆள்சேர்ப்பு மூலம் பணிநியமன நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், 2 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளை பணிநிரந்தரம் செய்தல், ஆசிரியர் நியமனத்துக்கான போட்டித் தேர்வில் இருந்து விலக்கு அளித்தல், மாணவர்களுக்கான கல்லூரி கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம் உள்ளிட்டவைகளுக்கு விலக்கு அளித்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
குறிப்பாக, பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பான கோரிக்கை குறித்து அரசால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இடஒதுக்கீட்டின் அடிப்படையில்.. காலி பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு உகந்த பணியிடங்களாக கண்டறியப்பட்ட பணியிடங்களில், மாற்றுத் திறனாளிகளுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பப்படும் முறை குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
அரசுப் பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகள் பணிபுரிய உகந்த பணியிடங்களை கண்டறிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கனிவுடன் பரிசீலனை: மாற்றுத் திறனாளிகளின் பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு கனிவுடன் தொடர்ந்து பரிசீலித்து வருகிறது. எனவே, பார்வையற்றக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்தைக் கைவிட வேண்டும்.இவ்வாறு அதில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
ரூ.640 கோடியில் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகம் மீட்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-23 06:03:00 |
சென்னை: கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தை ரூ.640 கோடி செலவில் மீட்பதற்கு பணி ஆணையை ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுக்கு கவுன்சிலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
தொடர்ந்து கூட்டத்தில் திருவிக நகர் மண்டலம், 69-வது வார்டில் அகரம் சோமையா தெருவில் ரூ.2.75 கோடியிலும், ரங்கசாயி தெருவில் ரூ.3 கோடியிலும் புதிய மாநகராட்சி பள்ளி கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில்மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராஜன் ஆகியோரின் நினைவிடங்களை பொலிவேற்றம் செய்ய மாநகராட்சி தடையின்மைச் சான்று வழங்கியதற்கு அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநகராட்சி பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள தெரு மின் விளக்கு கம்பங்களில் விளம்பரம் செய்து சுமார் ரூ.26 கோடியே 79 லட்சம் வருவாய் ஈட்டுவதற்கும் மன்றக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.
மேலும் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் கொட்டப்பட்டுள்ள 21 லட்சம் டன் கழிவுகளை அகழ்ந்தெடுத்து, அப்பகுதியை மீட்க ரூ.640கோடி மதிப்பில் 6 அலகுகளாக பணிகளை மேற்கொள்ள, தேர்ந்தெடுக் கப்பட்ட நிறுவனங்களுக்குப் பணிஆணை வழங்கவும் மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாநகரப் பகுதியில் 1-வது மண்டலம் முதல் 8-வது மண்டலம் வரையிலான பகுதிகளில் சேகரமாகும் ஈரக்கழிவுகளிலிருந்து 31 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்துக்கும் மன்றக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.
மாநகராட்சி பட்ஜெட் குறித்து, பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் பேசும்போது, ``ஒரு சில குறைகளைத் தவிர்த்து இந்த ஆண்டு மாநகராட்சி பட்ஜெட்டை மனதார பாராட்டுகிறேன்'' என்றார்.
தனியார் கோசாலைகளில் சென்னை மாநகராட்சி நெறிமுறைகளை கொண்டுவரப் போகிறதா? என்று கேள்வி எழுப்பியதற்குப் பதில் அளித்ததுணை மேயர், ``மாடு வளர்ப்போர் தனியார் இடங்களில் மாடு வளர்க்கஎந்த தடையும் இல்லை. தெருவில் சுற்றி திரியும் மாடுகளைக் கைப்பற்றத் தான் நடவடிக்கை பொருந்தும்'' என்றார். பட்ஜெட்டை பாராட்டியதற்கு துணை மேயர் நன்றி தெரிவித்தார்.
`திராவிட மாடல்' என்ற வார்த்தையை நான் பயன்படுத்த மாட்டேன் என்று உமா ஆனந்த் கூறியபோது, திமுக கவுன்சிலர்கள், உங்கள் வாயால் அவையில் `திராவிட மாடல்' எனப் பதிவு செய்துவிட்டீர்களே என்று கூறி மேசைகளைத் தட்டி வரவேற்றனர்.
|
அதிமுக ஆட்சியைவிட சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது: அமைச்சர் பன்னீர்செல்வம் பெருமிதம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-23 06:00:00 |
சென்னை: சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் மீதான விவாதங்களுக்கு பதிலளித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் நேற்று பேசியதாவது:
தமிழகத்தில் அரவை மற்றும் பந்து கொப்பரைகள் 1.19 லட்சம் மெட்ரிக் டன் 83,386 விவசாயிகளிடம் இருந்து ஆதரவு விலை திட்டத்தின்கீழ் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. உணவுக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதற்கான விழிப்புணர்வு மற்றும் உணவுத் திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
9.38 லட்சம் ஹெக்டேர்: பயிர் காப்பீடு திட்டத்தின் மூலம் 25.12 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.4,436 கோடி இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. வறட்சி மற்றும் வெள்ள நிவாரணமாக 12.58 லட்சம் பேருக்கு ரூ.940 கோடி தரப்பட்டுள்ளது. மண்ணுயிர் காப்போம் திட்டத்துக்கு அனைத்து தரப்பிலும் பாராட்டுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. 2023-24-ம் ஆண்டில் ரூ.65 கோடியில் சிறுதானிய இயக்கம் செயல்படுத்தியதன் மூலம் நடப்பாண்டு 9.38 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
அதிமுகவின் முந்தைய ஆட்சியில் சாகுபடி பரப்பு 61.56 லட்சம் ஹெக்டேராக இருந்தது. திமுக பொறுப்பேற்ற பின்னர் 62.6 லட்சம் ஹெக்டேராக உயர்த்தப்பட்டுள்ளது. இது கடந்த ஆட்சியைவிட 1.04 லட்சம் ஹெக்டேர் கூடுத லாகும்.
அதேபோல், அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சிக் காலத்தில் விவசாயிகளுக்கு மொத்தம் 2 லட்சம் மின் இணைப்புகள் மட்டுமே தரப்பட்டன. திமுக ஆட்சியில் 2 ஆண்டுகளில் 2 லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது மொத்த விவசாய இலவச மின் இணைப்புகள் எண்ணிக்கை 23.37 லட்சமாக உள்ளது.
இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசினார்.
|
கோவையில் 2026 ஜனவரியில் நூலகம் திறக்கப்படும்: வானதி சீனிவாசனுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-23 05:55:00 |
சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை போல அல்லாமல், கோவையில் வரும் 2026 ஜனவரி மாதம் நூலகம் திறக்கப்படும் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் பட்ஜெட்கள் மீதான விவாதத்தின் போது, பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன், கோவையில் நூலகம் அமைப்பது குறித்து கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவின் நேற்றைய பதிலுரையை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
வானதி சீனிவாசன் கேள்வி: நிதிநிலை அறிக்கையின் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய உறுப்பினர்களுக்கு தெளிவாக, விளக்கமாக அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்திருப்பது பாராட்டுக்குரியது.
ஆனால், பாஜகவைச் சேர்ந்த வானதி சீனிவாசன் வைத்த கோரிக்கைக்கு ஏன் பதில் சொல்லாமல் விட்டுவிட்டார் என்று எனக்குப் புரியவில்லை.
கோவையில் நூலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துவிட்டு, அது எங்கே அமையவிருக்கிறது, எவ்வளவு நிதி ஒதுக்கப் போகிறீர்கள், எப்போது ஆரம்பிக்கப் போகிறீர்கள், எப்போது அந்தப்பணிகள் முடிவடையும் என்று வானதி சீனிவாசன் கேட்டிருந்தார்.
அது நிச்சயமாக உடனடியாக செயலாக்கத்துக்கு வரும். ஏனெனில், இந்த ஆட்சி சொன்னதைச் செய்யும், சொன்னதைத் தாண்டியும் செய்யும், சொல்வதைத்தான் செய்யும்.
குறிப்பிட்ட காலத்துக்குள்... மதுரையில் எவ்வாறு உலகத்தரம் வாய்ந்த கலைஞர் நூலகம் குறிப்பிட்ட காலத்துக்குள் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டிருக்கிறதோ, சென்னையில் கலைஞர் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை, மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்காக ஏறுதழுவுதல் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளதோ, சில தினங்களில் கலைஞர் நினைவிடம் அமையவிருக்கிறதோ, அதேபோல கோவை நூலகமும் நிச்சயம் அமைக்கப்படும்.
மேலும், மதுரையில் எய்ம்ஸ்அறிவிக்கப்பட்டதைப் போல இல்லாமல், குறிப்பிட்ட காலத் துக்குள் கட்டி முடிக்கப்படும். 2026 ஜனவரி மாதத்தில் கோவையில் நூலகம் திறக்கப்படும்.
இவ்வாறு முதல்வர் பதில் அளித்தார்.
|
மத்திய அரசு தனது கடமையை நிறைவேற்றாததால் மாநில அரசின் கடன், நிதி பற்றாக்குறை அதிகரிப்பு: நிதியமைச்சர் குற்றச்சாட்டு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-23 05:45:00 |
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று பேசியதாவது:
இந்த அரசுக்கென்று மாபெரும் தமிழ்க்கனவு உள்ளது. சமூக நீதி,கடைக்கோடி தமிழர் நலன் உள்ளிட்ட இலக்குகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள் ளது. சமூக நீதி தத்துவம்தான் பட்ஜெட்டில் வெளிப்பட்டுள்ளது.புதியவறுமை ஒழிப்பு திட்டத்தில் ஆதரவற்றோர், ஒற்றை பெற்றோர் குடும்பங்கள், மாற்றுத் திறனாளிகள், மனநலம் குன்றியோர் குடும்பங்களுக்கு முன்னுரிமை அளித்து, அவர்களுக்குத் தேவையான எல்லா உதவிகளும் வழங்கப்படும்.
மத்திய அரசு திட்டங்களின் பெயரில்தான் தமிழக அரசு திட்டங்களைச் சொல்வதாக திட்டமிட்ட பிரச்சாரம் செய்யப்படுகிறது. மத்திய அரசு திட்டங்களில் தமிழக அரசுதான் பெருமளவில் பங்களிக்கிறது. பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் (ஊரகம்) மத்திய அரசு 30 சதவீதம் தொகையான ரூ.72 ஆயிரம் மட்டுமே தருகிறது. மாநில அரசு ரூ.1.68 லட்சத்தை வழங்குகிறது. . நகர்ப்புற வீடு கட்டும் திட்டத்தில் மத்திய அரசின் பங்கு ரூ.1.5 லட்சம் தான். மாநில அரசின் பங்கு 7 லட்சமாக உள்ளது. முதல்வர் கிராம சாலை திட்டத்தின் முழு நிதியும், மாநில அரசே வழங்குகிறது.
பிரதமரின் கிராமசாலை திட்டம் ரூ.1,945 கோடிக்கு அனுப்பப்பட்ட முன்மொழிவுகளுக்கும் நிதி வழங்கப்படவில்லை. தேசிய கல்விக் கொள்கையில் கூறப்பட்ட காலைஉணவுத்திட்டம் செயல்படுத்தப்பட வில்லை. ஆனால், முதல்வரின் காலை உணவு திட்டம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, நாடு முழுவதற்கும் பின்பற்றப்படும் மாதிரி திட்டமாக வழிநடத்தி வருகிறது.
பேரிடர் மேலாண்மை‘மிக்ஜாம்’ புயல் பாதிப்புகளைச் சீரமைக்க ரூ.19,650 கோடியும், தென் மாவட்டப் பாதிப்புகளுக்கு ரூ.18,214 கோடியும் கேட்டுள்ளோம். ஆனால் இதுவரை நிதி தரப்படவில்லை. நிதிக்குழு பரிந்துரைப்படி வழங்கும் நிதியை, மிகைப்படுத்தி நிதி வழங்கப்பட்டு விட்டதாக கட்டமைக்கப்பார்க்கின்றனர். ஏழை மக்கள் திராவிட மாடல் ஆட்சிக்குஆதரவாக இருப்பதால் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறதோ என தோன்றுகிறது. தூத்துக்குடிக்கு பிரதமர் வருவதற்கு முன்னதாக மத்திய அரசு உரிய நிதியை வழங்கும் என்று நம்புகிறோம்.
மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கான ஒப்புதல் வழங்கப்படாத நிலையில் ரூ.63,246 நிதியையும்தமிழக அரசே ஏற்கவேண்டியுள்ளது. மத்திய அரசு தனது கடமையை நிறைவேற்றாததால் மாநில அரசின் கடனும், பற்றாக்குறையும் அதிகரித்துள்ளது.மத்திய அரசு கூட்டாட்சி தத்துவத்தைக் கடைபிடித்து, கூடுதல் வரி, மேல் வரியில் இருந்து மாநில அரசுக்கு பங்கு தரும் என்றால், மாநிலத்தின் கடன், நிதிச்சுமை குறைந்திருக்கும்.
மாநிலத்தின் வளர்ச்சியை அதிகரிக்க ரூ.59 ஆயிரம் கோடியாக மூலதனச் செலவை உயர்த்தியுள்ளோம். வரும் காலத்திலும் அதிக முதலீடுகள் செய்வோம். மாபெரும் தமிழ்க்கனவுகளை உருவாக்க செதுக்கப்பட்ட இதுபோன்ற அறிவிப்புகள் தமிழர்களின் வாழ்வை வளம்பெறச்செய்யும்.கடனை பொறுத்தவரை, நிதிக்குழு நிர்ணயித்த அளவுக்குள்ளே உள்ளது.
இவ்வாறு தென்னரசு பேசினார்.
மின்விபத்து உயிரிழப்பு நிவாரணம் ரூ.10 லட்சமாக உயர்வு: சட்டப்பேரவையில், தமிழக அரசின் பொது பட்ஜெட் மீதானபதிலுரையின் இறுதியாக, பேரவை உறுப்பினர்கள் சிந்தனைச்செல்வன் (விசிக), ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக), பி.தங்கமணி (அதிமுக) உள்ளிட்டோர் கோரிக்கைகளை ஏற்று, அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட புதிய அறிவிப்புகள் வருமாறு:
மாணவர்கள் எண்ணிக்கை, தேவையைக் கருத்தில் கொண்டு 521ஆதிதிராவிடர், பழங்குடியினர் பள்ளிகள், விடுதிகள் கண்டறியப்பட்டு, வரும் கல்வியாண்டு தொடங்கும் முன் ரூ.100 கோடியில் சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். ஆதிதிராவிடர் தொழில்முனைவோ ருக்காக, 30 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட முதலிபாளையம் உள்ளிட்ட 2 தொழிற்கூடங்களை நவீன கட்டமைப்பு வசதியுடன் ரூ.50கோடியில் மேம்படுத்தப்படும். பேருந்து நிலையங்கள், மாவட்ட மருத்துவமனைகளில் காத்திருப்போருக்காக சிறிய நூலகங்கள் ரூ.3 கோடியில் அமைக்கப்படும். மின்விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படாத நிலையில் ரூ.1 லட்சம் முதல் 2 லட்சமும், உயிரிழப்பு ஏற்பட்டால் ரூ.5 லட்சமும் தற்போது இழப்பீடாக வழங்கப்படுகிறது. இந்த தொகை உயிரிழப்பு ஏற்படாத நிலையில், ரூ.1.5 லட்சம் முதல் ரூ.3 லட்சமாகவும், உயரிழப்பு ஏற்பட்டால் நிவாரணம் ரூ.10 லட்சமாகவும் உயர்த்தப்படும்.இவ்வாறு அவர் அறிவித்தார்.
|
சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேச அனுமதி மறுப்பு: பேரவையில் இருந்து பாமக வெளிநடப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-23 05:41:00 |
சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக பேச அனுமதிக்காததால் பேரவையில் இருந்து பாமகவினர் வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவையில், நேரமில்லா நேரத்தில், சட்டப்பேரவை பாமக தலைவர் ஜி.கே.மணி, சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக பேரவை விதிகளை தளர்த்தி தனித்தீர்மானம் நிறைவேற்றுவது தொடர்பாக பேசவாய்ப்பு கேட்டார். அதற்கு பேரவைதலைவர் வாய்ப்பு அளிக்கவில்லை. அதைத்தொடர்ந்து, ஜி.கே.மணி உள்ளிட்ட பாமக உறுப்பினர்கள் பேச வாய்ப்பு கேட்டு கோஷம் எழுப்பினர்.
அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ஏற்கெனவே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக நானும், நிதியமைச்சரும் பதிலளித்து விட்டோம். பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ், நீங்கள், தி.வேல்முருகன் ஆகியோர் என்னைச் சந்தித்து வலியுறுத்தியுள்ளீர்கள். நான்உங்களுக்கு சாதகமாகத்தான் உள்ளேன். இதற்கு மேல் நீங்கள் முடிவெடுத்துக் கொள்ளலாம்” என்றார்.
அதன்பின், தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தியும், பேச வாய்ப்பு அளிக்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பாமக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதுதொடர்பாக பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் ஜி.கே.மணி கூறியதாவது: தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு மட்டுமின்றி உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூட அதிகாரம் இருக்கிறது. ஒவ்வொரு சாதியிலும் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதோடு, பொருளாதாரத்தில் நலிந்திருப்பவர்களைக் கண்டறிந்து அவர்களை மேம்படுத்த சிறப்புத் திட்டங்களை அளிப்பதே இதன் நோக்கம்.
இதன்மூலம் ஒவ்வொரு சாதியில் இருக்கும் ஏழைகள் முன்னேற்றப்படுவார்கள். தமிழகத்தில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டைக் காப்பாற்றவும் சாதிவாரி கணக்கெடுப்பு தேவை. சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்போவதில்லை என மத்திய அரசு கடந்த ஆண்டே சொல்லிவிட்டது. இதனால் பிற மாநில அரசுகள் எடுக்கின்றன. சமூக நீதியின் பிறப்பிடமாக இருக்கும் தமிழகத்தில்தான் முதலில் சாதிவாரி கணக்கெடுப்பு செய்திருக்க வேண்டும். இது சமூக நீதி பிரச்சினை.
வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். காலம் தாழ்த்துவது வேதனையளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
|
கும்பகோணம் பட்டு கூட்டுறவு சங்கங்களில் ரூ.300 கோடி கைத்தறி பட்டு சேலைகள் தேக்கம் | சி.எஸ். ஆறுமுகம் | கும்பகோணம் | 2024-02-23 05:34:00 |
கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கோட்டத்துக்கு உட்பட்ட அய்யம்பேட்டை, அம்மாபேட்டை, கும்பகோணம், தாராசுரம், திருபுவனம் உள்ளிட்ட பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட பட்டு கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இப்பகுதியில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மறைமுகமாகவும் நெசவுத் தொழிலில்ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருபுவனத்தில் உள்ள பட்டு கூட்டுறவு சங்கத்தில் அண்மையில் நடைபெற்ற பொதுப்பேரவைக் கூட்டத்தில், ரூ.100 கோடிக்கும் மேல் பட்டுச் சேலைகள் தேக்கம் அடைந்துள்ளது குறித்து நிர்வாகிகள் சிலர் கேள்வி எழுப்பியிருந்தனர். இதேபோல, மற்ற பட்டு கூட்டுறவு சங்கங்களிலும் பட்டுச் சேலைகள் தேக்கம் அடைந்துள்ளது தெரியவந்துள்ளதால், அவற்றுக்கு கூடுதல் தள்ளுபடி அறிவிக்க வேண்டும் எனவும், இல்லாவிட்டால் சங்கங்கள் விரைவில் நலிவடையும் எனவும் நெசவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கைத்தறி பட்டு நெசவுத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: நெசவுத் தொழிலுக்கு பிரசித்தி பெற்ற திருபுவனத்தில் திகோ, திருவள்ளுவர், சோழன், காமராஜர், கும்பகோணத்தில் அறிஞர் அண்ணா, அய்யம்பேட்டையில் வஉசி மற்றும் தாராசுரம், அம்மாபேட்டை ஆகிய கைத்தறி பட்டு கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகின்றன.
இவற்றில் உறுப்பினர்களாக இருப்பவர்கள், அந்த சங்கத்தில் இருந்து மூலப் பொருட்களை வாங்கி வந்து, சேலைகளை நெய்து, பின்னர், அந்த சங்கத்துக்கு வழங்குவார்கள். இதற்காக 1 புடவைக்கு குறைந்தபட்சம் ரூ. 4 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.20 ஆயிரம் வரை கூலியாகப் பெறுகிறார்கள்.
இந்நிலையில், திகோ சங்கத்தில் ரூ.100 கோடி, திருவள்ளுவர் சங்கத்தில் ரூ.25 கோடி, சோழன் சங்கத்தில் ரூ.50 கோடி என பல்வேறு சங்கங்களில் மொத்தம் ரூ.300 கோடிக்கு மேல்பட்டுப் புடவைகள் விற்பனையாகாமல் தேங்கியுள்ளன.
இவை பல மாதங்களாகத் தேங்கிஇருப்பதால், தரம் குறைய வாய்ப்புள்ளது. இதனால், நிர்ணயித்த விலைக்குவிற்பனை செய்ய முடியாமல், நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளது.
தமிழக அரசு ஆண்டுக்கு 9மாதங்களுக்கு ஒரு புடவைக்கு ரூ.200, மீதமுள்ள 3 மாதங்களுக்கு ஒரு புடவைக்கு ரூ.300 என மிகக் குறைவாக தள்ளுபடி வழங்குவதால்தான், புடவைகள் தேங்கியுள்ளன.
எனவே, அனைத்து பட்டுச் சேலைகளுக்கும் 10 சதவீதம் கூடுதலாக தள்ளுபடி அறிவித்தால்தான், பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்குவார்கள். இல்லாவிட்டால் இந்த சங்கங்கள் நலிவடைந்து, நெசவாளர்களுக்கு மூலப் பொருட்கள் வழங்க முடியாதநிலை ஏற்படும். இதனால், நெசவாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாகக் கைத்தறி பட்டு நூல் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘இந்த விஷயத்தில் தமிழக அரசுதான் முடிவெடுக்க வேண்டும்’’ என்றார்.
|
புகையிலை விற்பனை செய்த 7,693 கடைகளுக்கு சீல்: ககன்தீப் சிங் பேடி தகவல் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-23 05:33:00 |
சென்னை: தமிழகத்தில் புகையிலை விற்பனையில் ஈடுபட்ட 7,693 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.
தமிழகத்தில் புகையிலை மற்றும் நிகோடின் அடங்கிய பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. ஆனாலும், தடையை மீறி பல இடங்களில் புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்ந்துநடந்து வருகிறது. எனவே, பள்ளி, கல்லூரிகள் அருகாமையில் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க காவல்துறை, உணவு பாதுகாப்பு துறையினர் ஒருங்கிணைந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, 2023 நவ.1-ம் தேதி முதல் இதுவரை புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட7,693 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது:
புகையிலை பொருட்கள் பயன்பாட்டை தடுக்க 391 கூட்டு குழுக்கள் அமைக்கப்பட்டு, தொடர்ந்து பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 7,693 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, 39,359கிலோ புகையிலை பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளன. அவர்களிடமிருந்து ரூ.6.22 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
தற்போது அபராத தொகை உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் வியாபாரிகள் ஈடுபடக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
|
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களின் வாழ்க்கையில் விளையாட வேண்டாம்: அண்ணாமலை வலியுறுத்தல் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-23 05:30:00 |
சென்னை: போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களின் வாழ்க்கையில் விளையாட வேண்டாம் என பாஜகமாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்துஎக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப் பதாவது:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இடஒதுக்கீடு முறையின்படி, தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பார்வைத்திறன் மாற்றுத் திறனாளர்களுக்கு 1 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 6 நாட்களாகபோராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இடஒதுக்கீடுநடைமுறையை அமல்படுத்து வதில் திமுக அரசு எதற்காகத் தயங்குகிறது என்ற கேள்வி எழுகிறது.
அதுமட்டுமின்றி, கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாற்றுத் திறனாளர்களுக்கான ரூ.1000 உதவித் தொகையை உயர்த்துவதாக அறிவித்தது முதல், பல மாவட்டங்களில் உதவித் தொகை வழங்கப்படவே இல்லை என்ற தகவலும் வெளிவந்திருக்கிறது. உடனடியாக, பார்வைத் திறன் மாற்றுத் திறனாளர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்று, அவர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும்.
மேலும், தமிழகத்தில் கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் 1-க்குப் பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு, அதற்கு முன்பாகப் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களைவிட அடிப்படை ஊதியம் ரூ.3,170 குறைவாக வழங்கப்படுவதை எதிர்த்து, சம வேலைக்கு சம ஊதியம் கோரி பல ஆண்டுகளாக தமிழகப் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திமுக, 2021 தேர்தலின்போது இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவோம் என்று போலி வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தது.
ஆசிரியர்கள் போராட்டத்தால்தமிழகம் முழுவதும் மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்பட்டுள் ளது. உடனடியாக, ஆசிரியர்களு டன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். ஆசிரியர்களின் வாழ்க்கையில் விளையாட வேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
|
கருணாநிதி நினைவிடம் பிப்.26-ல் திறப்பு: அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கு முதல்வர் அழைப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-23 05:27:00 |
சென்னை: முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்கள் பிப்ரவரி 26-ம் தேதி திறக்கப்பட உள்ளன. இந்த நிகழ்ச்சியில் அனைத்து கட்சி உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ஆயிரம்விளக்கு தொகுதி திமுக உறுப்பினர் நா.எழிலன், ‘‘வள்ளுவர் கோட்டத்தை சீரமைக்கும் பணி எப்போது முடிவடையும்?’’ என்று கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்து பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: அதிமுகஆட்சியில் 10 ஆண்டுகள் பாழ்பட்டு கிடந்த நிலையில், திமுகஆட்சி பொறுப்பேற்றதும், வள்ளுவர் கோட்டத்தை சீரமைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அந்த வகையில், ரூ.80 கோடியில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பார்வையாளர்கள் பார்ப்பதற்கும், கூட்டஅரங்கை பொதுவான நிகழ்வுகளுக்கு பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதன்படி, கலையரங்கம், குறள்மாட கூரை, தரை புதுப்பித்தல், தூண்கள், நுழைவுவாயில் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. திட்டமிட்டபடி, வரும் 2025ஜூன் மாதம் பணிகளை முடிக்கவேண்டும். இருப்பினும் முன்கூட்டியே பணிகள் முடிக்கப்பட்டு, முதல்வரால் திறக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
தொடர்ந்து, எழிலன், ‘‘கருணாநிதி நினைவிடம் எப்போது திறக்கப்படும்?’’ என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: நின்ற தேர்தல்களில் எல்லாம் வென்ற, நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய தலைவர் கருணாநிதியின் நினைவிடம் அமைக்கும் பணி முடிந்துள்ளது. கருணாநிதி நினைவிடம் மட்டுமல்ல, பேரறிஞர் அண்ணாவின் நினைவிடமும் சீரமைக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டுள்ளது. அண்ணா, கருணாநிதி நினைவிடங்கள் பிப்ரவரி 26-ம் தேதி இரவு 7 மணிக்கு திறந்து வைக்கப்பட உள்ளன.
இதை விழாவாக இல்லாமல், நிகழ்ச்சியாகவே நடத்த முடிவெடுத்துள்ளோம். அதனால், அழைப்பிதழ் அச்சிடவில்லை. அவையில் உள்ள ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணி கட்சி, தோழமை கட்சி என அனைத்து கட்சி உறுப்பினர்களும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும். அதில் பங்கேற்குமாறு தமிழக மக்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.
|
தமிழகம் முழுவதும் உள்ள மேய்க்கால், மந்தைவெளி புறம்போக்கு நிலங்களை அரசின் 97 திட்டங்களுக்கு பயன்படுத்திக்கொள்ள அனுமதி: உயர் நீதிமன்றம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-23 05:22:00 |
சென்னை: தமிழகம் முழுவதும் கால்நடைகளின் மேய்ச்சலுக்காக ஒதுக்கப்பட்ட மேய்க்கால் மற்றும் மந்தைவெளி புறம்போக்கு நிலங்களை அரசின் 97 நலத்திட்டங்களுக்கு பயன்படுத்திக்கொள்ளவும், அதேநேரம் மாற்று இடங்களை மேய்ச்சலுக்கு ஒதுக்கி கொடுக்கவும் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கால்நடைகளின் மேய்ச்சலுக்காக ஒதுக்கப்பட்ட மேய்க்கால் புறம்போக்கு மற்றும் மந்தைவெளி புறம்போக்கு நிலங்களை அரசின் மக்கள் நலத்திட்டம் சார்ந்த பொது பயன்பாடுகளுக்கோ அல்லது அந்த நிலங்களை ஆக்கிரமித்துள்ள மூன்றாவது நபர்களுக்கோ வகை மாற்றம் செய்து பட்டா வழங்க எதிர்ப்பு தெரிவித்து ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
அதில், மேய்க்கால் புறம்போக்கு மற்றும் மந்தைவெளி புறம்போக்கு நிலங்கள் என்ன நோக்கத்துக்காக ஒதுக்கப்பட்டதோ அந்தநோக்கங்களைத் தவிர்த்து வேறுஎந்த பயன்பாட்டுக்கும் அவற்றை பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என்றும், குறிப்பாக இந்த நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஒருபோதும் அங்கீகரிக்கக்கூடாது எனவும் கோரப்பட்டிருந்தது.
அதன்படி மேய்க்கால் புறம்போக்கு நிலங்களை குடியிருப்புகளாக வகை மாற்றம் செய்யஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒருவேளை இந்த நிலங்களை வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்தினால் அதற்காக மாற்று இடம் ஒதுக்கி கொடுக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையம், சிப்காட், ஐடி மற்றும் தொழில் பூங்கா, விளையாட்டுத் திடல், வட்டார போக்குவரத்து அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் நிலையம் போன்ற அரசின் 97 நலத்திட்டப்பணிகள் சார்ந்த பொது நோக்கத்துக்காக இந்த மேய்க்கால் புறம்போக்கு நிலங்களை பயன்படுத்திக்கொள்ள தமிழக அரசின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது.
இதுதொடர்பான வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, அரசின் பல்வேறு மக்கள் நலப்பணிகள் சார்ந்த 97 திட்டங்களுக்கு மேய்க்கால் மற்றும் மந்தைவெளி புறம்போக்கு நிலங்கள்தேவைப்படுவதால், அதற்குப்பதிலாக வருவாய் மற்றும் கால்நடைத்துறை சார்பில் கூட்டு ஆய்வுக்குழு ஏற்படுத்தப்பட்டு மாற்று இடங்களை கால்நடைகளின் மேய்ச்சலுக்காக ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என உத்தரவாதம் அளித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்.
அரசுக்கு அதிகாரம் கிடையாது: அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மேய்க்கால், மந்தைவெளி புறம்போக்கு நிலங்களை அரசுக்கோ அல்லது மூன்றாவது நபர்களுக்கோ வகைமாற்றம் செய்ய அரசுக்கு அதிகாரம் கிடையாது என்றாலும், பொது நோக்கத்துக்காக இந்த நிலங்களை அரசின் திட்டப் பணிகளுக்கு எடுத்துக்கொள்வதாக இருந்தால் கால்நடைகளின் மேய்ச்சலுக்கு தகுதியான இடங்களைக் கண்டறிந்து மாற்று நிலங்களை ஒதுக்கி கொடுத்த பிறகே இந்த நிலங்களைப் பயன்படுத்த அனுமதிக்க முடியும் என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளது.
எனவே அரசு அளித்துள்ள உத்தரவாதத்தின்படி மாற்று நிலங்களை மேய்ச்சல் நிலங்களாக மாற்ற 3 மாதங்களில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்பிறகு இந்தநிலங்களை அரசின் 97 நலத்திட்டப் பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் தகுதியான, சமமான மாற்று நிலம் ஒதுக்கப்படாமல் இந்த நிலங்களை அரசின் பணிகளுக்காக வகைமாற்றம் செய்யக்கூடாது என நிபந்தனை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.
|
மீன்வள அலுவலரை கடலுக்குள் தள்ளிய விசைப்படகு மீனவர்கள் 4 பேர் கைது | செய்திப்பிரிவு | புதுக்கோட்டை | 2024-02-23 05:21:00 |
புதுக்கோட்டை: மீன்வளத் துறை அலுவலரை கடலுக்குள் தள்ளிய கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகேயுள்ள பொன்னகரம் நாட்டுப் படகு மீன்பிடி இறங்குதளத்தில் இருந்து 250 நாட்டுப் படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரையில் இருந்து 5 நாட்டிக்கல் மைல் தொலைவுக்குள் நாட்டுப் படகு மீனவர்கள் மட்டுமே மீன் பிடிக்க வேண்டும். இந்தப் பகுதியில்விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கக் கூடாது என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொன்னகரம் பகுதியில் நாட்டுப் படகு மீனவர்கள் மீன் பிடிக்கும் பகுதியில், கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் நேற்று முன்தினம் இரவு வலை விரித்து மீன் பிடித்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த மீன்வளத் துறை ஆய்வாளர் கனகராஜ்(40), மேற்பார்வையாளர்கள் அலெக்சாண்டர்(30), ஹரி பிரசாத்(28), மீன்பிடி சட்ட அமலாக்கப் பிரிவு காவலர் மகேந்திரன் உள்ளிட்டோர் 2 நாட்டுப் படகுகளில் ரோந்து சென்று, விசைப் படகு மீனவர்களை கண்டித்தனர்.
அப்போது, அந்த மீனவர்கள் தங்கள் விசைப் படகு மூலம் நாட்டுப் படகின் மீது மோதியதில், மீன்வளத் துறை ஆய்வாளர் கனகராஜ் கடலில் விழுந்து தத்தளித்தார். இதையடுத்து, நாட்டுப் படகில் இருந்த மீனவர்கள் கடலில் குதித்து கனகராஜை மீட்டு, மணமேல்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், விசைப்படகு மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து பொன்னகரம் மீன்பிடி இறங்குதள பிரிவு சாலையில், நாட்டுப் படகு மீனவர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் உறுதியளித்ததைத் தொடர்ந்து, அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். இந்த மறியலால் கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர், மீன்வளத் துறை அலுவலரை கடலுக்குள் தள்ளிய கோட்டைப்பட்டினம் மீனவர்கள் சிவக்குமார்(28), சூர்யா(22), சூர்யபிரகாஷ்(25), கருப்பசாமி(24) ஆகியோர் மீது கொலை முயற்சி, பணி செய்ய விடாமல் தடுத்தல், தகாத வார்த்தைகளால் திட்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் மணமேல்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து, அவர்களைக் கைது செய்தனர்.
|
தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-23 05:05:00 |
சென்னை: மீண்டும் கூடும் தேதி குறிப்பிடாமல் தமிழக சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோர் மற்றும் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு பேரவையில்13-ம் தேதி இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தொகுதி மறுசீரமைப்பு, ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்த 2 அரசினர் தனி தீர்மானங்கள் 14-ம் தேதி நிறைவேற்றப்பட்டன. ஆளுநர் உரைக்கு நன்றிதெரிவிக்கும் தீர்மானம் மீது முதல்வர் 15-ம் தேதி பதிலுரை அளித்தார். பொது பட்ஜெட் 19-ம் தேதியும், வேளாண் பட்ஜெட் 20-ம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டன. பட்ஜெட்கள் மீதான விவாதம் 21-ம் தேதி நடந்தது.
அதற்கு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எம்ஆர்கே பன்னீர்செல்வம் நேற்று பதில் அளித்தனர். இதையடுத்து, பேரவையை ஒத்திவைப்பதற்காக அவை முன்னவர் துரைமுருகன் கொண்டுவந்த தீர்மானம், குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, மீண்டும் கூடும் தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்படுவதாக பேரவை தலைவர் அப்பாவு அறிவித்தார்.
|
சென்னையில் இன்றும், நாளையும் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-23 04:59:00 |
சென்னை: மக்களவை தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து அரசியல் கட்சிகள், மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான குழுவினர் இன்றும், நாளையும் ஆலோசனை நடத்துகின்றனர்.
மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் 2-வது வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான ஆயத்த பணிகளை இந்தியதேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில், இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் தேர்தல் ஆணையர்கள், ஆணைய அதிகாரிகள் குழுவினர் நேற்று இரவு சென்னை வந்தனர். தமிழகத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து அவர்கள் இன்றும், நாளையும் ஆய்வு செய்கின்றனர்.
சென்னை கிண்டியில் உள்ள ஓட்டலில் இன்று காலை 11.30 முதல் பிற்பகல் 1 மணி வரை, அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி, அவர்களது பரிந்துரைகள், கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெறுகின்றனர்.
பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ முன்னிலையில், மாவட்ட தேர்தல் அதிகாரிகளான சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் இதர மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகள், காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் நேரடியாகவும், காணொலியிலும் ஆலோசனை நடத்தி,உரிய அறிவுறுத்தல்களை வழங்குகின்றனர்.
நாளை (பிப்.24) காலை9 முதல் 11 மணி வரை தமிழகம், கர்நாடகா, கேரளா மாநிலதலைமை தேர்தல் அதிகாரிகள்,காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.
அப்போது, தேர்தல் அதிகாரிகள், காவல் அதிகாரிகள் தங்கள் மாநிலங்களில் தேர்தல்ஏற்பாடுகள் குறித்து தெரிவிக்கின்றனர்.
பின்னர், வருமான வரி, வருவாய் புலனாய்வு, போதை பொருள் தடுப்பு, சுங்கத்துறை, ரயில்வே பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர். பிறகு,தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, டிஜிபி சங்கர் ஜிவால் ஆகியோருடன் ஆலோசனை நடத்திவிட்டு, செய்தியாளர்களை சந்திக்கின்றனர். மாலை டெல்லி திரும்புகின்றனர்.
|
நெடுஞ்சாலை ஆணையம் அமைப்பது, ஆதிதிராவிடர் சட்டம் உருவாக்குவது உட்பட 14 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-23 04:52:00 |
சென்னை: புதிதாக மாநில நெடுஞ்சாலை ஆணையம், தமிழ்நாடு மருத்துவ மன்றம் அமைப்பது, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மேம்பாட்டுக்காக புதிய சட்டம் உருவாக்குவது உள்ளிட்ட 14 சட்ட மசோதாக்கள், பேரவையில் நிறைவேற்றப்பட்டன.
சட்டப்பேரவையில் கடந்த 21-ம் தேதி 12 மசோதாக்களை அமைச்சர்கள் அறிமுகம் செய்தனர். அந்தவகையில், ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மலக்கசடு, கழிவுநீரை பாதுகாப்பாக அகற்ற ஊராட்சிகள் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா, ஊரக உள்ளாட்சிகளில் திடக்கழிவுகளை திறம்பட சேகரித்து, அறிவியல் சார்ந்த முறையில் அகற்றுவதற்கான பொறுப்பை ஊராட்சிகளுக்கு ஏற்படுத்துவதற்கான சட்டத்திருத்த மசோதா ஆகியவற்றை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர்ஐ.பெரியசாமி அறிமுகம் செய்தார்.
2001-ம் ஆண்டு தமிழ்நாடு நெடுஞ்சாலை சட்டத் திருத்த மசோதா, மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் அமைப்பதற்கான சட்டமசோதா ஆகியவற்றை நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு தாக்கல் செய்தார்.
ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்டம், எதிர்பாரா செலவுநிதிய சட்டம், நிதிநிலை நிர்வாகபொறுப்புடைமை சட்டம் ஆகியவற்றில் திருத்தம் செய்வதற்கான 3 சட்டத் திருத்த மசோதாக்களை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிமுகம் செய்தார்.
சென்னை ஒருங்கிணைந்த மாநகர போக்குவரத்து அதிகார அமைப்பு (CUMTA) சட்டத் திருத்தமசோதாவை வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமியும், பாரதியார், பாரதிதாசன், அழகப்பா, மனோன்மணியம், பெரியார், திருவள்ளுவர், தமிழ்நாடு திறந்தநிலை, ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர்களின் ஓய்வு வயதை58-ல் இருந்து 60 ஆக உயர்த்தும்சட்டத் திருத்த மசோதாவை உயர்கல்வி அமைச்சர் ராஜகண்ணப்பனும் அறிமுகம் செய்தனர்.
தமிழ்நாடு மருத்துவ பதிவு சட்டத்தை நீக்கி, தமிழ்நாடு மாநிலமருத்துவ மன்றத்தை உருவாக்குவதற்கான சட்ட மசோதாவை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களையும் கோயில்அறங்காவலர்களாக நியமிக்கும்வகையிலான சட்டத் திருத்தமசோதாவை அறநிலைய அமைச்சர் சேகர்பாபுவும், ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான மேம்பாட்டுசெயல் திட்டம் தயாரித்தல், கண்காணித்தல் ஆகியவற்றுக்காக புதிதாகசட்டம் உருவாக்குவதற்கான மசோதாவை ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜும் அறிமுகம் செய்தனர்.
இந்நிலையில், நேற்று 2 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. தொழில் உரிமம் தொடர்பான ஊராட்சிகள் சட்டத் திருத்த மசோதாவை அமைச்சர் ஐ.பெரியசாமியும், திருச்சி, கடலூர், தேனிசந்தைக் குழுக்களின் தனி அலுவலர்கள் பதவிக் காலத்தை நீட்டிப்பது தொடர்பாக வேளாண்விளைபொருள் சந்தைப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதாவை வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வமும் அறிமுகம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து, மேற்கண்ட 14 சட்ட மசோதாக்களும் பிரிவுவாரியாக ஆய்வு செய்யப்பட்டன.
அப்போது, பேசிய தி.வேல்முருகன் (தவாக), ‘‘தனி அலுவலரிடம் தொழில் உரிமம் பெறலாம் என்பது, ஊராட்சி நிலைக் குழுவின் அதிகாரத்தை பறிக்கும்’’ என்றார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, ‘‘தொழில் உரிமம் கோரும் விண்ணப்பங்களுக்கு ஊராட்சி நிலைக் குழு அனுமதி தருவதில் தாமதம் நிலவுகிறது. இதனால்தொழில் வாய்ப்பு தடைபடுவதை தவிர்க்கவே, தனி அலுவலரிடம்உரிமம் பெறும் வகையில் திருத்தம் செய்யப்படுகிறது’’ என்றார்.
மாநில நெடுஞ்சாலை ஆணையம், சுங்கச் சாவடிகள் அமைக்கப்படுவது குறித்து ஜி.கே.மணி(பாமக), தி.வேல்முருகன் (தவாக)ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர்எ.வ.வேலு, ‘‘வாகன போக்குவரத்து அதிகரிக்கும் நிலையில், சாலைகள், பாலங்கள் போன்ற கட்டமைப்பு வசதிகளின் தேவைஅதிகமாக உள்ளது. இதை ஈடுசெய்யும் அளவுக்கு நிதி இல்லாததால், ஆணையம் அமைத்துதிட்டங்களை முன்னெடுக்க உள்ளோம். ஆணையத்தில் பெருமளவுமாநில அரசின் நிதி பங்களிப்பே செயல்படுத்தப்படும். அதேநேரம்,சுங்கச் சாவடிகள் அமைப்பது தொடர்பாக தற்போது எதுவும் கூறமுடியாது. ஆணைய பரிந்துரை மற்றும் பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினரின் கருத்துகளை பெற்ற பிறகே முடிவு எடுக்கப்படும்’’ என்றார்.
இதைத் தொடர்ந்து, 14 சட்டமசோதாக்களும், குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.
|
காவல் துறை நெருக்கடி: தூத்துக்குடி பனைத் தொழிலாளர்கள் அச்சம் | செய்திப்பிரிவு | கோவில்பட்டி | 2024-02-23 04:10:00 |
கோவில்பட்டி: பதநீர் சீஸன் தொடங்காத நிலையில், காவல் துறை நெருக்கடி கொடுத்து வருவதால் தொழிலைச் செய்ய முடியவில்லை என, பனைத் தொழிலாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், குளத்தூர், விளாத்தி குளம் பகுதி பெரியசாமிபுரம், சித்தவ நாயக்கன்பட்டி, வேடப்பட்டி, அயன்வடலாபுரம், தாப்பாத்தி, கருப்பூர் போன்ற பகுதிகளில் பனைத்தொழில் நடைபெற்று வருகிறது. பனைமரத்தில் இருந்துபதநீர் இறக்குதல், பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டு, சில்லு கருப்பட்டி தயாரித்தல் ஆகியவை முக்கிய தொழிலாகும். ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் முதல் ஆடி மாதம் வரை 6 மாதங்களுக்கு பதநீர் சீஸன் காலமாகும்.
இத்தொழிலில் உள்ள பல்வேறு சிரமங்கள் காரணமாக, வெகு சில குடும்பங்களே பனைத் தொழிலை தொடர்ந்து செய்து வருகின்றனர். நடப்பாண்டு சீஸன் முறையாகதொடங்காத நிலையில், காவல்துறையினர் பனையேறும் தொழிலாளர்களிடம் பணம் கேட்டும், பதநீர் கேட்டும், கருப்பட்டி கேட்டும்தொந்தரவு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து கரிசல்பூமி விவசாயிகள் சங்க தலைவர் அ.வரதராஜன் கூறியதாவது: பனைத்தொழில் ஆண்டுக் காண்டு நலிவடைந்து வருகிறது. பனைத் தொழிலை பாதுகாக்கவும், கோடிக் கணக்கான பனை விதைகளை நடுவதற்கும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பனை மரத்தில் தினம் 3 முறை பாளை சீவவில்லையென்றால் உலர்ந்துவிடும். அதில் பானம் சுரக்காது. ஒரு தொழிலாளி ஒரு நாளைக்கு சுமார் 50 மரங்கள் ஏறுவது வழக்கம்.
இந்தாண்டு சீஸன் தொடங்க சில நாட்களே உள்ள நிலையில், இப்போதே காவல்துறையினர் பனையேறும் தொழிலாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். காவல்நிலையத்தில் வெகுநேரம்காக்க வைக்கின்றனர். கள் விற்பதாக வழக்குப் பதிவோம் என மிரட்டி வருகின்றனர். இதனால் தொழிலாளர்களும், அவர்களது குடும்பத்தினரும் அச்சத்தில் உள்ளனர். பனைத் தொழில் செய்வோருக்கு கருப்பட்டி, கற்கண்டு, சில்லுக்கருப்பட்டி தயாரிப்பு செய்ய அரசு மானியத்துடன் கடனுதவி செய்வதாக தெரிவித்துள்ளது.
ஆனால், அதுவிளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு உட்பட்டிருக்க வேண்டும் என கூறுகின்றனர். இதனால் புதூர் மேற்கு வட்டார பனைத் தொழில் புரிவோர் பயனடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிபந்தனையைத் தளர்த்த வேண்டும். மேலும், பனைத் தொழில் புரியும் குடும்பங்களை நிம்மதியாக தொழில் செய்ய விட வேண்டும், பனைத் தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
|
“2 மக்களவை தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்கிறோம்” - துரை வைகோ | செய்திப்பிரிவு | ராமநாதபுரம் | 2024-02-23 04:08:00 |
ராமநாதபுரம்: திமுக கூட்டணியில் 2 மக்களவை தொகுதிகளும், ஒரு மாநிலங் களவை உறுப்பினர் பதவியும் கேட்க உள்ளோம் என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக கூட்டணி பேச்சு வார்த்தை சுமுகமாக நடந்து வருகிறது. இம்முறை 2 மக்க ளவைத் தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் கேட்க உள்ளோம். மாபெரும் தமிழ் கனவு என்ற தலைப்பில் தமிழக அரசு சிறந்த பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. வேளாண் பட்ஜெட்டில் ரூ.42 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. ரூ.108 கோடி எண்ணெய் வித்துகள் உற்பத்தி செய்ய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதனால் நியாய விலைக் கடைகளில் கடலை எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்ற வற்றை விற்க வேண்டும். அது விவசாயிகளின் பொருளா தாரம் மற்றும் மாநிலத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும். இதை தமிழக அரசுக்கு வேண்டு கோளாக வைக்கிறோம். மத்திய பாஜக அரசு ஆண்டுக்கு 10 கோடி வேலை வாய்ப்பு, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு என 10 ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன வாக்குறுதி களை நிறைவேற்றவில்லை. விவசாயிகள் பிரச்சினையை தீர்க்கவில்லை.
போராட்டம் நடத்தும் விவசாயிகள் மீது கண்மூடித் தனமாக தாக்கி வருகிறது. அதனால் வரும் தேர்தலில் பாஜக தோல்வியை தழுவும். தமிழகத்தில் 39 தொகுதிகளில் ‘இண்டியா’ கூட்டணி வெற்றி பெறும். இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேசுவரம் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜய் தமிழக மக்களுக்காக நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கில் அரசியலுக்கு வந்துள் ளார், இவ்வாறு அவர் கூறினார். ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி, மதிமுக மாவட்டச் செயலாளர் வி.கே.சுரேஷ் உடனிருந்தனர்.
|
“கட்சியை வளர்க்க அண்ணாமலை போராடுகிறார்” - சரத்குமார் பாராட்டு | செய்திப்பிரிவு | திருப்பத்தூர் | 2024-02-23 04:06:00 |
திருப்பத்தூர்: அண்ணாமலை தமிழகம் முழு வதும் சென்று கட்சியை வளர்க்க கடுமையாக உழைத்து வருகிறார் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிராவயல் புதூரில் சரத்குமாரின் குலதெய்வமான காமாட்சி அம்மன் கோயில் உள் ளது. சரத்குமார் குடும்பத்தினரின் சொந்த செலவில் அக்கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதில் சரத் குமார், அவரது மனைவி ராதிகா உள்ளிட்ட குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் சரத் குமார் கூறியதாவது: வாக்குப் பதிவு இயந்திரத்தில் நம்பிக்கை இல்லை என்று ஒட்டுமொத்தமாக அனைவரும் நினைத் தால் வாக்கு சீட்டு முறையை அமல்படுத்தலாம். ஆங்காங்கே சிறு, சிறு சம்ப வங்கள் நடைபெறுவதை சட்டம், ஒழுங்கு பாதிப்பு என்று கூற முடியாது. பெரிய அளவில் மத கலவரங்கள், பாலியல் குற்றங்கள் நடைபெற்றால் மட்டுமே சட்டம், ஒழுங்கு கெட்டதாக அர்த்தம். பெரிய அளவில் குற்றங்கள் நடைபெறாத வகையில் மக்கள் சுயக்கட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டும்.
மீனவர்கள் கடலில் எல்லையை தாண்டக் கூடாது. எதிர்பாராத விதமாக தாண்டுவோரை சிறையில் அடைப்பது தேவையற்றது. மீனவர் களை திருப்பி அனுப்புவதுதான் இரு நாட்டு உறவுக்கும் நல்லது. 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலைத்தான் விஜய் சந்திப்பதாக கூறியுள்ளார். அப்போதுதான் அவரை மக்கள் ஏற்றுக் கொள் கிறார்களா? என்பது தெரியவரும். நடிகைகள் குறித்து தவறான செய்திகள் தொடர்ந்து வருவதை நிறுத்த மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவறான செய்திகளை பரப்புவோரை தண்டிக்க வேண்டும். விவசாயிகள் போராட்டத்தில் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். தமிழகத்தில் பாஜக வளர்ச்சி குறித்த அளவுகோல் என்னிடம் இல்லை. அண்ணாமலை தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் சென்று கட்சியை வளர்க்க கடுமையாக உழைத்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
|
தமிழகத்தில் 39 தொகுதியிலும் தாமரை சின்னத்தில் போட்டி: கே.பி.ராமலிங்கம் தகவல் | செய்திப்பிரிவு | தருமபுரி | 2024-02-23 04:04:00 |
தருமபுரி: தருமபுரியில் பாஜக சட்டப் பேரவைத் தொகுதி தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் மக்களுடன் இணைந்து பாஜக தேர்தலை எதிர்கொள்கிறது. வடசென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான 39 மக்களவைத் தொகுதிகளிலும் தாமரைச் சின்னத்தில் களம் காண விரும்புகிறோம். இந்தியாவின் பிரதமராக மீண்டும் நரேந்திர மோடி வர வேண்டும் என்ற எங்களது எண்ணங்களை ஏற்றுக் கொண்டு தமிழகத்தில் எங்களுடன் கூட்டணி அமைக்கும் கட்சியினரும் தாமரைச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என விரும்புகிறோம். இதை சில கட்சிகள் ஏற்றுக் கொண்டுள்ளன.
கடந்த 2014 முதல் 2019-ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில், முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின் தவறுகளிலிருந்து இந்தியாவை பிரதமர் மோடி சீர்திருத்தினார். இதையடுத்து 2019 முதல் 2024-ம் ஆண்டு வரையிலான ஆட்சி காலத்தில் வளர்ச்சி அடைந்த நாடுகளுடன் இந்தியா பொருளாதாரத்தில் போட்டியிடும் அளவுக்கு உயர்ந்துள்ளது. அனைத்துத் துறைகளிலும் இந்தியா வேகமாக வளரும் சூழல் உருவாக்கப் பட்டுள்ளது. எனவே, வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமராக மோடி மீண்டும் வர வேண்டும் என தமிழக மக்கள் கருதுகின்றனர்.
தமிழகத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் பாஜக தேர்தல் அலுவலகங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. வரும் 27 மற்றும் 28-ம் தேதிகளில் தமிழகத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த கூட்டங்களில் பாஜகவுடன் இணைந்து போட்டியிடும் கட்சியினரை காணலாம். இவ்வாறு அவர் பேசினார்.
|
குப்பைக் காடாக மாறிவரும் கோவை மாநகர சாலைகள் - புதிய நடவடிக்கை பலன் தருமா? | டி.ஜி.ரகுபதி | கோவை | 2024-02-23 04:00:00 |
கோவை: கோவை மாநகரில் தரம் பிரித்துகுப்பை சேகரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், குப்பை சேகரிக்க பணியாளர்கள் செல்ல வேண்டிய இடம் குறித்த ‘ரூட் சாட்’ அமைத்துக் கொடுத்தல், குப்பை அள்ளும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்துதல் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வீடு வீடாக குப்பை சேகரிப்பது தீவிரப்படுத்தப்படுவதால், திறந்த வெளிகளில் இருக்கும் குப்பைத் தொட்டிகளை ஒவ்வொன்றாக மாநகராட்சி நிர்வாகத்தினர் அகற்றி வருகின்றனர். ஆனாலும் திறந்த வெளிகளில் குப்பை கொட்டுவது தொடர்கிறது. உடனுக்குடன் அவை அகற்றப் படாததால் குப்பை தேங்கி சுகாதார கேடு ஏற்படுகிறது. கணபதி மாநகர், காந்தி மாநகர், விளாங்குறிச்சி சாலை, சேரன் மாநகர், ஆவாரம் பாளையம் உள்ளிட்ட இடங்களில் தூய்மைப் பணியாளர்கள் சரிவர வருவதில்லை என கூறப்படுகிறது.
இதனால் மக்கள் வேறு வழியின்றி அருகில் உள்ள திறந்த வெளிப் பகுதிகளில் குப்பையை கொட்டிச் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. கோவையைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளர் ராஜ்குமார் கூறும்போது,‘‘தரம் பிரித்து குப்பை சேகரிப்பதை வரவேற்கிறோம். அதே சமயம், சாலையோர திறந்த வெளிப் பகுதிகளில் உள்ள குப்பைத் தொட்டிகளை அகற்றுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், குடியிருப்புவாசிகள் வீடுகளுக்கு வரும் தூய்மைப் பணியாளர்களிடம் குப்பையை கொடுத்துவிடுவர்.
நிறுவனங்கள், கடைகளை நடத்துபவர்கள் என்ன செய்வார்கள். அவர்கள் காலை 9 மணி, 10 மணிக்கு பின்னர் தான் கடையை திறப்பார்கள். அந்த சமயத்தில் தூய்மைப் பணியாளர்கள் வருவது கிடையாது. எனவே, அவர்கள் சாலையோர தொட்டிகளில் தான் குப்பையை கொட்டும் வாய்ப்பு உள்ளது. இதை தவிர்க்க வேண்டுமென்றால், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ள பகுதிகளில் காலை 10 மணிக்கு பின்னர் தூய்மைப் பணியாளர்கள் குப்பை சேகரிக்க செல்ல வேண்டும்.
குடியிருப்புப் பகுதிகளுக்கு காலை 9.30 மணிக்குள் தூய்மைப் பணியாளர்கள் குப்பை சேகரிக்க வந்தால் பயனுள்ளதாக இருக்கும்.அதன் பின்னர், மக்கள் வேலைக்கும், வெளியிடங்களுக்கும் சென்று விடுவர்” என்றார். மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி கூறும் போது,‘‘குப்பை சேகரிப்புப் பணிக்கு தூய்மைப் பணியாளர்கள் குறித்த நேரத்துக்கு வரவில்லை என்றாலோ, வருவதேயில்லை என்றாலோ மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளிக்கலாம்’’ என்றார்.
|
ஸ்டாலின் ‘அழைப்பு’ முதல் ‘மோடியின் மேற்கோள்’ வரை - கடைசி நாள் ஹைலைட்ஸ் @ பேரவை கூட்டத் தொடர் | நிவேதா தனிமொழி | அழைப்பு | 2024-02-22 21:20:00 |
முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் திறப்புக்கு எதிர்க்கட்சியை அழைத்த முதல்வர் ஸ்டாலின், நெகிழ்ந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. பின், காவிரி விவகாரத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து வெளிநடப்பு செய்த அதிமுக என நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் இறுதிநாளில் சட்டப்பேரவையில் நடந்தது என்ன? - ஒரு விரைவுப் பார்வை...
கடந்த 12-ம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது. மேலும், மக்களவைத் தேர்தல் நெருங்குவதால் தமிழக அரசு பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டை முறையே கடந்த 19, 20-ம் தேதிகளில் தாக்கல் செய்தது. இரண்டு பட்ஜெட் குறித்த விவாதங்கள் இரண்டு நாட்களாக நடைப்பெற்றது. இந்த நிலையில், புதன்கிழமை பட்ஜெட் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், முன்னதாக நடந்த நிகழ்வுகள்.
முதல்வர் ஸ்டாலின் அழைப்பு: ‘சென்னை மெரினா கடற்கரையில் கட்டப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம், புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடம் வரும் 26-ம் தேதி திறக்கப்படவுள்ளது’ என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். அப்போது பேசியவர், “இதற்காக அழைப்பிதழ் எதுவும் அச்சிடவில்லை. அதனால், இங்கு இருக்கக்கூடிய ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணிக் கட்சி, தோழமைக் கட்சி என எல்லாக் கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்” என்றார். | விரிவாக வாசிக்க > பிப்.26-ல் கலைஞர் நினைவிடம் திறப்பு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு @ சட்டப்பேரவை
‘எய்ம்ஸ் போல் இருக்காது!’ அதேபோல், இறுதியாகப் பேசிய முதல்வர் ஸ்டாலின், “பட்ஜெட் விவாதத்தில் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், ”கோவையில் நூலகம் அமைக்கவிருப்பதாக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதை எங்கே, எப்போது கட்டி முடிப்பீர்கள் எனக் கேள்வியை முன்வைத்தார். வரும் 2026-ம் ஆண்டு ஜனவரில் திறக்கப்படும். நிச்சயமாக உங்களுக்கு அழைப்பு விடுக்கங்கப்படும். மத்திய அரசு மதுரையில் எய்ம்ஸ் அமைப்பதாக சொன்னார்களே... (அவையில் சிரிப்பொலி) அதுபோல் அல்லாமல், குறிப்பிட்ட காலத்தில் நிச்சயமாக நூலகம் கட்டி முடிக்கப்பட்டும்” என்று மத்திய பாஜக அரசை பகடி செய்தார். | விரிவாக வாசிக்க > “மதுரை எய்ம்ஸ் போல் இல்லாமல்...” - பேரவையில் பாஜகவுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் @ கோவை நூலகம்
’மேகேதாட்டு அணை' - அதிமுக வெளிநடப்பு: தமிழக சட்டப்பேரவையில் இன்றைய நிகழ்வின்போது மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார். இது தொடர்பாக, கம்யூனிஸ்ட், பாமக, பாஜக கட்சியைச் சேர்ந்தவர்களும் பேசியிருந்தனர். மேலும், காவிரி ஆணையம் தமிழகத்துக்கு எதிராக செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்ற வேண்டும்’ என எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்து அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார். | வாசிக்க > “திமுக தூங்கிக் கொண்டிருக்கிறது” - மேகேதாட்டு விவகாரத்தில் இபிஎஸ் காட்டம்
இபிஎஸ் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் துரைமுருகன், ”தமிழகத்தில் ஒப்புதல் இல்லாமல் ஒரு செங்கலைக் கூட கர்நாடக அரசால் வைக்க முடியாது” எனப் பேசினார். | வாசிக்க > மேகேதாட்டு | தமிழகத்தின் அனுமதியின்றி ஒரு செங்கல்கூட கர்நாடகம் வைக்க முடியாது - அமைச்சர் துரைமுருகன்
‘சாதிவாரி கணக்கெடுப்பு’ - பாமக வெளிநடப்பு: சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி, பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் பேச கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில், சபாநாயகர் அப்பாவு, “சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசுதான் எடுக்க வேண்டும். அதைப் பட்ஜெட்டிலும் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது” என்னும் கருத்துக்களை முன்வைத்து பாமகவுக்குப் பேச அனுமதி மறுத்தார். இந்த நிலையில், அவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதால் பாமகவினர் வெளிநடப்பு செய்தனர். அதேவேளையில், “சாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல” என்று சட்டப்பேரவையில் பாமக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார். அதன் விவரம் > “சாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல” - முதல்வர் @ தமிழக சட்டப்பேரவை
மோடியை மேற்கோள் காட்டிய தங்கம் தென்னரசு: தமிழக சட்டப்பேரவையில் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை மீது பதிலுரை ஆற்றிய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, “எங்கள் மாநிலம் 60,000 கோடி ரூபாய் மத்திய அரசுக்கு தருகிறது. அனால் எங்களுக்கு திரும்பிக் கிடைப்பது என்ன? எங்கள் மாநிலம் என்ன கை ஏந்தி இருக்கும் மாநிலமா? - இவ்வாறு மாநில உரிமைக்கு உரத்த குரல் கொடுத்தவர் வேறு யாரும் இல்லை. 2012-ஆம் ஆண்டில் குஜாரத் மாநில முதல்வர், இன்றைய பிரதமர் நரேந்திர மோடிதான். குஜராத்தில் இருந்து அன்று அவர் கேட்டதை இன்று தமிழகத்தில் இருந்து நாங்கள் கேட்கிறோம். மத்திய அரசு தனது வரிகள் மீது செஸ் வரி மற்றும் கூடுதல் கட்டணத்தை விதிக்கிறது. நியாயமாக பார்த்தால் இந்தத் தொகையையும் மாநில அரசுகளுடன் பகிர்ந்தளிக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார். | வாசிக்க > “குஜராத்தில் அன்று மோடி கேட்டதை இன்று நாங்கள் கேட்கிறோம்!” - அமைச்சர் தங்கம் தென்னரசு ஆவேசம் @ பேரவை
கடன் சர்ச்சை: “10 ஆண்டு காலத்தில் குறைவாகக் கடன் வாங்கினோம்; ஆனால் நாங்கள் 3 ஆண்டுகளில் அதிகமாகக் கடன் வாங்கியுள்ளதாக அதிமுக கூறுவது தவறு. நிதிக்குழுவின் வரம்புக்குள்தான் கடன் வாங்குகிறோம்” என்றும் அவர் விளக்கம் அளித்தார். விரிவாக வாசிக்க > அதிமுக Vs திமுக ஆட்சியில் மாநிலக் கடன்: அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் @ பேரவை
மின் துறையில் சீர்திருத்தம் ஏன்? - “மத்திய அரசு நியாயமற்ற கடுமையான நிபந்தனைகளை விதித்து நமது நிதி நிலைமையை பாதிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. அவற்றில் ஒன்றாக, மாநில அரசு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மின் பகிர்மான இழப்பீட்டினை, மத்திய அரசு வகுத்துள்ள கணக்கீட்டுக்கு ஏற்றார்போல் ஒவ்வொரு வருடமும் மாநில அரசு வழங்க வேண்டும். இதன் விளைவாக, இந்த வருடம் 17,117 கோடி ரூபாய் வழங்கியுள்ளோம். வரும் ஆண்டில் 14,442 கோடி ரூபாய் வழங்க உள்ளோம்" என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார். அதன் விவரம் > மின் துறையில் சீர்திருத்தங்களை அரசு மேற்கொள்வது ஏன்? - அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் @ பேரவை
அதேபோல், “மத்திய அரசு தனது திட்டங்கள் என்று பெருமைகூறும் திட்டங்களிலேயே, தமிழக அரசுதான் பெருமளவில் பங்களிக்கிறது. பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்துக்கு (நகர்ப்புறம்) மத்திய அரசின் பங்கு வெறும் 1.5 லட்சம். ஆனால், மாநில அரசின் பங்கு 7 லட்சம்" என்று தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு விவரித்துள்ளார். தமிழக பாஜகவுக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இவ்வாறு விளக்கம் அளித்தார். | விரிவாக வாசிக்க > மத்திய அரசின் திட்டத்தை ‘பெயர் மாற்றி’ அறிவித்ததா தமிழக அரசு? - தங்கம் தென்னரசு மறுப்பு @ பேரவை
பட்ஜெட் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, ‘மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என்பதைக் கூறி ’அம்மஞ்சல்லி’ தரவில்லை என விமர்சித்தார். இறுதியாக, முதல்வர் உரையுடன் அவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
|
எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கப் பணி டெண்டர் முறைகேடு புகார்: அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு | ஆர்.பாலசரவணக்குமார் | சென்னை | 2024-02-22 20:58:00 |
சென்னை: எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க பணிகளுக்காக 4 ஆயிரத்து 442 கோடி ரூபாய்க்கு டெண்டர் கோரியதில் முறைகேடு நடந்துள்ளதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, தமிழக அரசு பதிலளிக் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை எண்ணூரில் உள்ள அனல் மின் நிலையத்தை விரிவாக்கும் செய்யும் திட்டத்தில், 660 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட கூடுதல் அலகை அமைப்பதற்காக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமான டான்ஜெட்கோ கடந்த 2019-ம் ஆண்டில் டெண்டர் கோரியது.பிஜிஆர் நிறுவனத்துக்கு ஒதுக்கிய டெண்டரை ரத்து செய்து 2021 ஏப்ரல் 23-ம் தேதி டான்ஜெட்கோ உத்தரவிட்டது.
பின்னர் அதே டெண்ரை 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் பிஜிஆர் நிறுவனத்துக்கே ஒதுக்கியது. இதில் முறைகேடு மற்றும் ஊழல் நடந்திருக்கிறது. இந்திய தண்டனை சட்டம் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க சிபிஐ-க்கு உத்தரவிடக் கோரி திருச்சி, திருமயம், ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள பெல் நிறுவனங்களின் தொழிற்சங்கங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, பிஜிஆர் எனர்ஜி என்பது பினாமி நிறுவனம் அல்ல. பல திட்டங்களை இந்த நிறுவனம் செயல்படுத்தி உள்ளது. மேலும் ஒப்பந்தம் வழங்கியதற்கான காரணங்களை தாக்கல் செய்ய அரசு தயாராக இருக்கிறது. எனவே, சிபிஐ விசாரணை கோரிய இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல, என்று வாதிட்டார்.
அப்போது மனுதாரர்கள் தரப்பில் பிஜிஆர் எனர்ஜிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்ட விவகாரத்தில் முதல்வர் தலையிட்டுள்ளார். முந்தைய ஆட்சி காலத்தில் ரத்து செய்யப்பட்ட ஒப்பந்தத்தை புதுப்பித்ததற்கான காரணம் என்ன? என கேள்வி எழுப்பப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழக அரசு, டான்ஜெட்கோ பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஏப்ரல் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
|
கலாஷேத்ரா பாலியல் புகார் விவகாரம்: விசாரணைக் குழு அறிக்கை அதிர்ச்சி அளிப்பதாக ஐகோர்ட் வேதனை | ஆர்.பாலசரவணக்குமார் | சென்னை | 2024-02-22 20:40:00 |
சென்னை: சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம் குறித்து விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி கே.கண்ணன் தலைமையிலான குழுவின் அறிக்கை அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. புகாருக்கு உள்ளான பேராசிரியரை நீக்க வேண்டும் என்ற குழுவின் பரிந்துரையை கலாஷேத்ரா அறக்கட்டளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி கண்ணன் விசாரணை குழுவில், அந்த அறக்கட்டளையின் இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் இடம்பெறக் கூடாது எனவும், குழுவில் மாணவிகளின் பிரதிநிதிகள், பெற்றோரின் பிரதிநிதிகள் இடம்பெறும் வகையில் மாற்றியமைக்க வேண்டும் என்றும் கோரி கல்லூரி மாணவிகள் ஏழு பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
ஏற்கெனவே இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கலாஷேத்ரா அறக்கட்டளை நடத்தும் கல்வி நிறுவனங்கள் மற்றும் பணியிடங்களில் பாலியல் தொல்லை தடுப்புச் சட்டம், போக்சோ சட்டம், பல்கலைக்கழக மானிய குழு சட்டம் உள்ளிட்ட சட்ட விதிகளின் அடிப்படையில் பாலியல் தொல்லைகள் தடுக்க விரிவான கொள்கை வகுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கில் வியாழக்கிழமை இறுதி உத்தரவு பிறப்பித்த நீதிபதி அனிதா சுமந்த், கலாஷேத்ராவுக்கு எதிரான பாலியல் தொல்லை புகார் விரும்பத்தகாதது மட்டுமின்றி மிகவும் கவலைக்குரியது. சம்பவம் குறித்து விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி கே.கண்ணன் தலைமையிலான குழுவின் அறிக்கை அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. நீதிபதி கண்ணன் குழு அளித்த பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக உடனடியாக பரிசீலிக்க வேண்டும் என்று கலாஷேத்ரா அறக்கட்டளைக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், புகாருக்கு உள்ளான பேராசிரியரை நீக்க வேண்டுமென்ற அக்குழுவின் பரிந்துரை உடனடியாக அமல்படுத்த வேண்டுமென்று நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
|
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-22 19:43:00 |
சென்னை: தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் கடந்த பிப்.12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. 2024–25-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்துக்கு அமைச்சர்கள் பதிலுரையுடன் சட்டப்பேரவைக் கூட்டம் புதன்கிழமை முடிவுற்றது. இதைத்தொடர்ந்து கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்திவைத்தார்.
தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் கடந்த பிப்.12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. ஆளுநர் தமிழக அரசு தயாரித்து அளித்த உரையின் முதல் பத்தியை மட்டும் படித்த நிலையில், கூடுதலாக இணைத்து படித்தவை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன. தமிழக அரசு தயாரித்து அளித்த தமிழ், ஆங்கில உரைகள் மட்டும் அவைக்குறிப்பில் இடம்பெறும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து, அன்று நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் முதல்வர் பதிலுரை ஆகியவை பிப்.15-ம் தேதி வரை நடைபெறும் என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி பிப்.13-ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. 14–ம் தேதியும் விவாதம் தொடர்ந்து நடைபெற்ற நிலையில், பிப்.15–ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரையாற்றினார்.
இதைத்தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டம் மீண்டும் (பிப்.19) காலை 10 மணிக்கு கூடியது. அப்போது, 2024–25-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட்டை, நிதியமைச்சர் தங்கம்தென்னரசு தாக்கல் செய்தார். தொடர்ந்து, பிப்.20–ம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
பிப்.20–ம் தேதி முதலே 2 பட்ஜெட்கள் மீதான விவாதமும் தொடங்கியது. பிப்.21-ம் தேதி காலை மற்றும் மாலை என 2 வேளைகளும் பட்ஜெட்கள் மீதான விவாதம் நடைபெற்றது. அதன்பின், பிப்.22–ம் தேதி விவாதத்துக்கு இரு அமைச்சர்களும் பதிலளித்தனர். தொடர்ந்து, நிதி ஒதுக்கத்துக்கான சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப் பட்டு நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து பேரவைக் கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்திவைத்தார்.
|
காவிரி பிரச்சினை: மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக இபிஎஸ் தலைமையில் பிப்.29-ல் அதிமுக ஆர்ப்பாட்டம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-22 19:12:00 |
சென்னை: மேகேதாட்டுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவது பற்றி விவாதித்து, மேல் நடவடிக்கைக்காக மத்திய நீர்வள கமிஷனுக்கு அனுப்பியதைக் கண்டித்தும், தமிழகத்தின் காவிரி நதிநீர் விஷயத்தில் துரோகம் இழைத்து வரும் மத்திய, மாநில அரசுளைக் கண்டித்தும், கர்நாடகம் 2023-24ஆம் ஆண்டுக்கு காவிரியில் தமிழகத்துக்கு தரவேண்டிய பங்குநீரை பெற்றுத் தராத திமுக அரசைக் கண்டித்தும், அதிமுக சார்பில் பிப்.29 அன்று தஞ்சையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும், என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக நிறுவனத் தலைவர் எம்ஜிஆர், மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆகியோரது வழியில், எனது தலைமையிலான அதிமுக அரசு தொடர் சட்டப் போராட்டங்களை நடத்தி, 16.2.2018-ஆம் நாளிட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை அமல்படுத்துவதற்காக, அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 22 நாட்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் அப்போது முடக்கினார்கள். அதைத் தொடர்ந்து, 1.6.2018 அன்று காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு செயலாக்கத்தை மத்திய அரசு அறிவித்து, அதனை மத்திய அரசிதழிலும் வெளியிட்டது.
காவிரி நடுவர் மன்றம் (Cauvery Water Disputes Tribunal) அளித்த தீர்ப்பினை, உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு உட்பட்டு செயல்படுத்துவதற்காக மட்டும்தான் காவிரி மேலாண்மை ஆணையமும் (Cauvery Water Management Authority), காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவும் (Cauvery Water Regulation Committee) அமைக்கப்பட்டது. எனவே, இந்த ஆணையத்தின் பணிகளும், குழுவின் பணிகளும் முறையாக கீழ்க்கண்டவாறு வரையறுக்கப்பட்டுள்ளன.
காவிரி நதிநீரைத் தேக்குதல், பகிர்மானம் செய்தல், முறைப்படுத்துதல் மற்றும் கட்டுப்படுத்துதல்;காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் துணையுடன் அணைகளின் செயல்பாட்டை மேற்பார்வையிடுதல் மற்றும் அவற்றில் இருந்து நீரை பாசனம் மற்றும் இதர தேவைகளுக்கு வழங்குவதை முறைப்படுத்துதல்; கர்நாடகம்-தமிழ் நாடு எல்லையில் பிலிகுண்டுலு நீர் அளவை நிலையத்தில் கர்நாடக அரசு நீர் வழங்குதலைக் கண்காணிப்பது, இவற்றைத் தவிர வேறு பணிகள் எதுவும் மேற்கொள்ள இந்த அமைப்புகளுக்கு அதிகாரம் இல்லை.
2018-ஆம் ஆண்டு மேகதாது அணை குறித்த பிரச்சினை மத்திய நீர்வள கமிஷனின் பார்வைக்குச் சென்ற போது, அதிமுக அரசு 5.12.2018 அன்று மத்திய நீர் வள கமிஷனின் அன்றைய இயக்குநர் மீது உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தது. அதைத் தொடர்ந்து, அதிமுக ஆட்சி இருக்கும் வரை மத்திய நீர்வள கமிஷனோ, காவிரி மேலாண்மை ஆணையமோ மேகேதாட்டு பிரச்சினையை அதனுடைய கூட்டத்தில் கொண்டுவர முயற்சிக்கவில்லை. நாங்கள் தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்னும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேலும், எனது தலைமையிலான அதிமுக அரசு காவிரியில் ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகம், தமிழகத்துக்குத் தரவேண்டிய பங்குநீரை உறுதி செய்தது.
இந்த திமுக ஆட்சியில், கடந்த 2024 பிப்.1 அன்று ஆணையத்தின் வரையறுக்கப்பட்ட ‘பணி வரம்புக்கு’ அப்பாற்பட்டு, மேகேதாட்டு அணை கட்டுவது பற்றிய விவாதத்தை 28-ஆவது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் சேர்த்துவிட்டது.மேகேதாட்டு பற்றிய விவாதம் திமுக அரசின் எதிர்ப்பையும் மீறி சேர்க்கப்பட்டிருந்தால், தமிழக அதிகாரிகள் வெளிநடப்பு அல்லவா செய்திருக்க வேண்டும்.
மேகேதாட்டு அணை விவகாரத்தை அனுமதித்ததோடு மட்டுமல்லாமல், விவாதத்தில் கலந்துகொண்டு தமிழகத்துக்கு எதிரான ஒரு இக்கட்டான சூழ்நிலையை இந்த திமுக அரசு ஏற்படுத்திவிட்டது. இப்போது, ஆணையமும் அதன் அதிகார வரம்புக்கு சம்பந்தமில்லாத மேகேதாட்டு அணை கட்டுவது குறித்த கருத்தை, மத்திய நீர்வள கமிஷனுக்கு பரிந்துரைத்துள்ளது. இந்நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு நிதி ஒதுக்கி உள்ளார்.
28-ஆவது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் என்ன நடந்தது என்ற விவரங்களை தமிழக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய பொறுப்பு இந்த அரசுக்கு உண்டு. ஆனால், விரிவான விளக்கமோ, பதிலோ சட்டமன்றத்தில் தெரிவிக்கவில்லை; விரிவான அறிக்கையும் வெளியிடவில்லை. தமிழக விவசாயிகளின் முக்கியமான, ஜீவாதார பிரச்சினையான, காவிரி நதிநீர் பிரச்சனையில் திமுக அரசின் அலட்சியப் போக்கு, விவசாயிகளுக்கும், தமிழக மக்களுக்கும் செய்யும் மாபெரும் துரோகமாகும்.
காவிரியில் 2023-2024ஆம் ஆண்டு கர்நாடகம் நமக்குத் தரவேண்டிய பங்கு நீரை முழுமையாக இந்த திமுக அரசு பெறாததன் விளைவாக, டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதித்து, சுமார் 3.50 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் கருகி விவசாயிகள் பெரும் நஷ்டமடைந்தனர். குறுவை சாகுபடிக்கு, இந்த திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 3 ஆண்டுகள் ஆகியும் பயிர்க் காப்பீடு செய்யாததால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒரு ஹெக்டேருக்கு காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் ரூ. 84,000 நிவாரணத்தையும் பெற முடியவில்லை.
தேசியப் பேரிடர் நிவாரணமாக ஒரு ஹெக்டேருக்கு ரூ. 13,500-த்தில் இருந்து ரூ. 17,000-ஆக மத்திய அரசு உயர்த்திய நிலையில், இந்த திமுக அரசு ஒரு ஹெக்டேருக்கு ரூ. 13,500 மட்டுமே அறிவித்திருந்தது. எனவே நான், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.34,000 வழங்க வேண்டுமென்று பலமுறை இந்த திமுக அரசை வலியுறுத்தினேன். ஆனால், கிணற்றில் போட்ட கல்லைப் போல், இந்த திமுக அரசு, விவசாயிகளுக்கு நாம் வலியுறுத்திய நிவாரணத்தை அறிவிக்கவில்லை.
இந்நிலையில், காவிரியில் தமிழகத்துக்குரிய பங்கு நீரை இந்த திமுக அரசு பெறாததால், இந்த ஆண்டு சம்பா மற்றும் தாளடி சாகுபடியும் கடுமையாக பாதிக்கப்பட்டது. கடைசி கட்டத்தில் பயிரைக் காப்பற்ற உயிர் தண்ணீராக, குறைந்தது 10 டிஎம்சி தண்ணீரையாவது விடுவிக்க டெல்டா விவசாயிகள் இந்த திமுக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால், இந்த அரசு தனது கூட்டாளி காங்கிரஸ் கட்சி ஆளும் கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுத்து தமிழகத்துக்கு வழங்க வேண்டிய மீதமுள்ள பங்கு நீரைப் பெறவில்லை. எனவே, டெல்டா விவசாயிகளின் கோரிக்கையை ஏற்க முடியாமல், வெறும் 2 டிஎம்சி தண்ணீரை மட்டுமே மேட்டூர் அணையில் இருந்து காலம் கடந்து திறந்தது. இதனால் ஓரளவு மட்டுமே பயிர்கள் காப்பாற்றப்பட்டது.
காவிரி நதி தமிழகத்தின் ஜீவநதி. மேகேதாட்டு அணை கட்டப்பட்டால் மேட்டூருக்கு வரும் தண்ணீர் முழுவதுமாக தடுக்கப்படும்; மேட்டூர் அணை வறண்டுவிடும்; டெல்டா பாசனப் பகுதி பாலைவனமாகிவிடும்; காவிரியை குடிநீர் ஆதாரமாக நம்பியுள்ள 20 மாவட்ட மக்கள் பாதிக்கப்படுவார்கள். காவிரி நதிநீர் ஆணையம், மேகேதாட்டு அணை கட்டுவதற்கான பொருளை மத்திய நீர்வள கமிஷனுக்கு அனுப்பியது, டெல்டா பாசன விவசாயிகளிடம் பெரும் அதிருப்தியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதைப் பற்றி நான் தமிழக சட்டப் பேரவையில் பேசும்போது, நீர்வளத் துறை அமைச்சர் விரிவான பதிலை அளிக்கவில்லை.
இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் தனது வரையறுக்கப்பட்ட ‘பணி வரம்புக்கு’ அப்பாற்பட்டு, 28-ஆவது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகேதாட்டுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவது பற்றி விவாதித்து, மேல் நடவடிக்கைக்காக மத்திய நீர்வள கமிஷனுக்கு அனுப்பியதைக் கண்டித்தும், தமிழகத்தின் காவிரி நதிநீர் விஷயத்தில் துரோகம் இழைத்து வரும் மத்திய, மாநில அரசுளைக் கண்டித்தும்; கர்நாடகம் 2023-24ஆம் ஆண்டுக்கு காவிரியில் தமிழகத்துக்கு தரவேண்டிய பங்குநீரை பெற்றுத் தராத திமுக அரசைக் கண்டித்தும், அதிமுக சார்பில் எனது தலைமையில், பிப்.29, வியாழக்கிழமை மாலை 4 மணியளவில், தஞ்சாவூர், திலகர் திடலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
மக்களின் ஜீவாதார உரிமையை முன்வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்; சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், கட்சியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகள் உள்ளிட்ட தொண்டர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அதிமுகவின் சார்பில் மக்கள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், விவசாயப் பெருங்குடி மக்களும், விவசாயத் தொழிலாளர்களும், பொதுமக்களும், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
|
“குஜராத்தில் அன்று மோடி கேட்டதை இன்று நாங்கள் கேட்கிறோம்!” - அமைச்சர் தங்கம் தென்னரசு ஆவேசம் @ பேரவை | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-22 17:59:00 |
சென்னை: “மத்திய அரசு தனது வரிகள் மீது செஸ் வரி மற்றும் கூடுதல் கட்டணத்தை (Cess and Surcharges) விதிக்கிறது. நியாயமாக பார்த்தால் இந்தத் தொகையையும் மாநில அரசுகளுடன் பகிர்ந்தளிக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு இந்தத் தொகையை தானே வைத்து கொண்டு திட்டங்களை தீட்டுகிறது. 2021-22-இல் இந்த வரிகளின் மூலம் மத்திய அரசு 5.85 லட்சம் கோடி ரூபாயை திரட்டியது. 2022-23-இல் 6.19 லட்சம் கோடி ரூபாய், 2023-24-இல் 6.5 லட்சம் கோடி ரூபாய் மற்றும் 2024-25 இல் 6.95 லட்சம் கோடி ரூபாய்” என்று சட்டப்பேரவையில் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு விவரித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை மீது பதிலுரை ஆற்றிய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, "எங்கள் மாநிலம் 60,000 கோடி ரூபாய் மத்திய அரசுக்கு தருகிறது. அனால் எங்களுக்கு திரும்பிக் கிடைப்பது என்ன? எங்கள் மாநிலம் என்ன கை ஏந்தி இருக்கும் மாநிலமா? - இவ்வாறு மாநில உரிமைக்கு உரத்த குரல் கொடுத்தவர் வேறு யாரும் இல்லை. 2012-ஆம் ஆண்டில் குஜாரத் மாநில முதல்வர், இன்றைய பிரதமர் நரேந்திர மோடிதான். குஜராத்தில் இருந்து அன்று அவர் கேட்டதை இன்று தமிழகத்தில் இருந்து நாங்கள் கேட்கிறோம்.
மத்திய அரசு தனது வரிகளை மாநிலங்களுக்கு எவ்வாறு பகிர்ந்தளிக்க வேண்டும் என்று ஒவ்வொரு ஐந்து ஆண்டும் நிதிக்குழு பரிந்துரை செய்கிறது. 10-வது நிதிக்குழுவில் 6.64 % என்று நமது பங்கை தொடர்ந்து குறைத்து, 15-வது நிதிக்குழுவில் 4.08 சதவீதமாகக் குறைத்துள்ளது. தொடர்ந்து வரும் நிதிக்குழு நமது மாநிலத்துக்கு அநீதியை அளிக்கின்றன.
இது போதாதென்று, மத்திய அரசு தனது வரிகள் மீது மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணத்தை, அதாவது Cess and Surcharges,விதிக்கிறது. நியாயமாக பார்த்தால் இத்தொகையையும் மாநில அரசுகளுடன் பகிர்ந்தளிக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு இத்தொகையை தானே வைத்து கொண்டு திட்டங்களை தீட்டுகிறது. 2021-22 இல் cess and surcharge மூலம் மத்திய அரசு 5.85 லட்சம் கோடி ரூபாயை திரட்டியது. 2022-23 இல் 6.19 லட்சம் கோடி ரூபாய், 2023-24 இல் 6.5 லட்சம் கோடி ரூபாய் மற்றும் 2024-25 இல் 6.95 லட்சம் கோடி ரூபாய்.
ஒரு கற்பனைக்கு, ஒருவேளை மத்திய அரசு, கூட்டாட்சித் தத்துவத்தை கடைபிடித்து இத்தொகையை மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்திருந்தால், தமிழகத்துக்கு 2021-22 இல் 9,000 கோடி ரூபாய், 2022-23 இல் 10,300 கோடி ரூபாய், 2023-24 இல் 10,900 கோடி ரூபாய் மற்றும் 2024-25 இல் 11,600 கோடி ரூபாய் கிடைத்திருக்கும்.
இந்த அளவுக்கு, மாநில அரசின் பற்றாக்குறை, கடன்சுமை குறைந்திருக்கும். இது தமிழகத்தைச் சார்ந்த பிரச்சினை மட்டும் இல்லை. இது அனைத்து மாநிலங்களைச் சார்ந்த பிரச்சினை. மாநில அரசுகளின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பதில் நாட்டுக்கே முன்னோடியாக திகழும் திமுக அரசு, மத்திய அரசு இந்த நியாயமற்ற முறையை மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துவோம்.
வருவாய் வரவினங்கள்: இந்த ஆண்டு, தொடர்ச்சியாக இரண்டு பேரிடர்களைச் சந்தித்ததால், 20.61 சதவீதம் என எதிர்பார்த்த வருவாய் வளர்ச்சி 13.26 சதவீதமாகக் குறைந்துள்ளது. வரி வருவாயின் வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்குடன் இந்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மாநில சரக்கு மற்றும் சேவை வரியில் அதிகளவிலான வளர்ச்சியை தமிழகம் தொடர்ந்து அடைகிறது. ஆனால், ஆய்வு செய்த்தில், மாநிலத்தில் வழங்கப்படும் இணையவழி சேவைகளுக்கான (Digital Services) வரி மாநிலத்துக்கு கிடைப்பதில்லை.
உதாரணத்துக்கு, தமிழகத்தில் ஒரு நிறுவனம் வழங்கிய சேவைக்கு, வரி ஹரியாணா மாநிலத்துக்கு செலுத்தப்படுகிறது. ஏனென்றால், சேவை தமிழகத்தில் பெற்ற போதிலும், அந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள மாநிலம்தான் IGST பெற்று வருகிறது என்பதை அறிந்துள்ளோம். இதனால், பொருளாதாரம் அதிக வளர்ச்சி அடைந்தாலும், அதற்கேற்ப வரி கிடைப்பதில்லை. இதனை, பகுப்பாய்வு செய்வதற்காக (Economic Advisory Council) உறுப்பினர் அரவிந்த் சுப்பிரமணியன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இப்பிரச்சினையை GST குழுவில், இதுகுறித்து விரைவில் விவாதிக்க நமது அரசு முயலும். மேலும், பல்வேறு சீர்திருத்தங்களை வரி வருவாய் திரட்டும் துறையில் எடுத்து வருகிறது. IIT-ஹைதராபாத் தரவு பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேம்படுத்தப்பட்ட ஸ்டார் 3.0 இணையசேவை பதிவுத் துறையில் செயல்படுத்த உள்ளோம். சுரங்கத்தில் ட்ரோன் தொழில்நுட்பம் மூலம் அளவினை கணக்கிடுவதை மேற்கொண்டுள்ளோம். Seigniorage கட்டணம் மாற்றப்பட்டுள்ளது. மோட்டார் வாகன வரியும் திருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், எதிர்வரும் நிதியாண்டில் வரி வருவாய் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று அவர் கூறினார்.
கடன் சர்ச்சை: “10 ஆண்டு காலத்தில் குறைவாகக் கடன் வாங்கினோம்; ஆனால் நாங்கள் 3 ஆண்டுகளில் அதிகமாகக் கடன் வாங்கியுள்ளதாக அதிமுக கூறுவது தவறு. நிதிக்குழுவின் வரம்புக்குள்தான் கடன் வாங்குகிறோம்” என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். விரிவாக வாசிக்க > அதிமுக Vs திமுக ஆட்சியில் மாநிலக் கடன்: அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் @ பேரவை
மின் துறையில் சீர்திருத்தம் ஏன்? - “மத்திய அரசு நியாயமற்ற கடுமையான நிபந்தனைகளை விதித்து நமது நிதி நிலைமையை பாதிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. அவற்றில் ஒன்றாக, மாநில அரசு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மின் பகிர்மான இழப்பீட்டினை, மத்திய அரசு வகுத்துள்ள கணக்கீட்டுக்கு ஏற்றார்போல் ஒவ்வொரு வருடமும் மாநில அரசு வழங்க வேண்டும். இதன் விளைவாக, இந்த வருடம் 17,117 கோடி ரூபாய் வழங்கியுள்ளோம். வரும் ஆண்டில் 14,442 கோடி ரூபாய் வழங்க உள்ளோம்" என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார். அதன் விவரம் > மின் துறையில் சீர்திருத்தங்களை அரசு மேற்கொள்வது ஏன்? - அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் @ பேரவை
அதேபோல், “மத்திய அரசு தனது திட்டங்கள் என்று பெருமைகூறும் திட்டங்களிலேயே, தமிழக அரசுதான் பெருமளவில் பங்களிக்கிறது. பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்துக்கு (நகர்ப்புறம்) மத்திய அரசின் பங்கு வெறும் 1.5 லட்சம். ஆனால், மாநில அரசின் பங்கு 7 லட்சம்" என்று தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு விவரித்துள்ளார். தமிழக பாஜகவுக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார். | விரிவாக வாசிக்க > மத்திய அரசின் திட்டத்தை ‘பெயர் மாற்றி’ அறிவித்ததா தமிழக அரசு? - தங்கம் தென்னரசு மறுப்பு @ பேரவை
|
ப்ரீமியம் வலுக்கும் மேகேதாட்டு விவகாரம் முதல் ஐபிஎல் அட்டவணை வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ பிப்.22, 2024 | செய்திப்பிரிவு | நன்மைகள் | 2024-02-22 17:55:00 |
“குஜராத்தில் அன்று மோடி கேட்டதை இன்று நாங்கள் கேட்கிறோம்!”: தமிழக சட்டப்பேரவையில் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை மீது பதிலுரை ஆற்றிய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, “எங்கள் மாநிலம் 60,000 கோடி ரூபாய் மத்திய அரசுக்கு தருகிறது. அனால் எங்களுக்கு திரும்பிக் கிடைப்பது என்ன? எங்கள் மாநிலம் என்ன கை ஏந்தி இருக்கும் மாநிலமா? - இவ்வாறு மாநில உரிமைக்கு உரத்த குரல் கொடுத்தவர் வேறு யாரும் இல்லை. 2012-ஆம் ஆண்டில் குஜாரத் மாநில முதல்வர், இன்றைய பிரதமர் நரேந்திர மோடிதான். குஜராத்தில் இருந்து அன்று அவர் கேட்டதை இன்று தமிழகத்தில் இருந்து நாங்கள் கேட்கிறோம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
|
‘ரயில்வே போலீஸ் நவீனப்படுத்த வேண்டும். ஏனெனில்...’ - இந்து முன்னணி | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-22 17:24:00 |
சென்னை: ரயில்வே போலீஸ் நவீனபடுத்தப்பட வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "ரயில்வே துறை இந்த நாட்டை இணைக்கும் பாலம். எப்படி ஆன்மிகம் இந்நாட்டை இணைக்கிறதோ அதுபோல ரயில்வேயும் அஞ்சலகமும் தேசத்தின் எல்லா பகுதிகளில் உள்ள மக்களை ஒருங்கிணைக்கிறது. ரயில்வே பயணம் பாதுகாப்பானதாகவும் வசதியானதாகவும் மக்கள் கருதுகின்றனர். பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சியில் ரயில்வே துறை வளர்ச்சியில் பல உச்சங்களை தொட்டுள்ளது.
ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போது மக்களை திசைத் திருப்ப ரயில்வே ஸ்டேஷன்களை சமூக விரோதிகள் குறிவைத்து தாக்கி வருவதை காண்கிறோம். அதுபோல கடந்த இரு மாதங்களாக வந்தே பாரத் ரயில் மீது கல்லெறிவது, ரயில்வே லைனில் எதாவது பொருட்களை வைத்து ரயிலை கவிழ்க்க சதி செய்வதை பார்க்கிறோம். தற்போது ரயிலில் வெடி மருந்து பொருட்கள் கடத்தி வந்ததும் செய்தியாகியுள்ளன. எனவே ரயில் பயண பாதுகாப்பை உறுதி செய்ய தக்க நடவடிக்கைகளை மத்திய அரசு விரைந்து எடுக்க வேண்டும்.
மேலும், ரயில்கள் மீது தாக்குதல்களை நடத்தும் சமூக விரோதிகளை பிடித்து கடுமையாக தண்டிக்க ரயில்வே போலீஸ் நவீனப்படுத்தப்பட வேண்டும். மேலும், ரயில்வே போலீசாருக்கு அதிக அதிகாரங்களை அளிக்கவும் சட்டம் இயற்ற வேண்டும்.
விமான பயணங்கள் போல ரயில்வே பயணத்துக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். ரயில் மறியல் என்ற பெயரில் ரயில்வே போக்குவரத்தை தடை செய்வதை தடுக்க வேண்டும். விமான நிலையங்கள் போல உயர் பாதுகாப்பு பகுதியாக ரயில் நிலையங்களும் அறிவிக்கப்பட வேண்டும். எனவே மத்திய அரசு ரயில்வே பயணத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
|
அதிமுக Vs திமுக ஆட்சியில் மாநிலக் கடன்: அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் @ பேரவை | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-22 17:15:00 |
சென்னை: “10 ஆண்டு காலத்தில் குறைவாகக் கடன் வாங்கினோம்; ஆனால் நாங்கள் 3 ஆண்டுகளில் அதிகமாகக் கடன் வாங்கியுள்ளதாக அதிமுக கூறுவது தவறு. நிதிக்குழுவின் வரம்புக்குள்தான் கடன் வாங்குகிறோம்” என்று சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை மீது பதிலுரை ஆற்றிய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, “பொருளாதாரத்தைப் பற்றியும் நிதி மேலாண்மை பற்றியும் எந்த ஓர் அடிப்படை புரிதலும் இல்லாமல், பரபரப்பை உருவாக்கும் ஒரே நோக்கத்துடன் எதிர்க்கட்சியினர் அரசின் கடன் அளவைப் பற்றி தவறான கருத்துகளை முன்வைத்துள்ளனர். எந்த ஒரு புள்ளிவிவரத்தைப் பார்க்கும்போதும், அந்தகாலகட்டத்துக்கு ஏற்ப அதைப் பார்க்க வேண்டும். நாங்கள் 10 ஆண்டுகாலத்தில் குறைவாகக் கடன் வாங்கினோம்; ஆனால் நீங்கள் 3 ஆண்டுகளில் அதிகமாகக் கடன் வாங்கியுள்ளீர்கள் என்று கூறுவது தவறு.
உதாரணத்துக்குச் சொல்ல வேண்டும் என்றால், 2011-ல் வரவு செலவுத் திட்டத்தின் மொத்த மதிப்பு 1.02 லட்சம் கோடி ரூபாய்தான்; மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.51 லட்சம் கோடி ரூபாய் தான். இன்று, வரவு செலவுத் திட்டத்தின் மொத்த மதிப்பு 4.12 லட்சம் கோடி ரூபாய் அளவும்; மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 31.55 லட்சம் கோடி ரூபாய் அளவும் உள்ளன.
இந்த அடிப்படையைக் கொண்டு, கடனைப் பொறுத்தவரை, அதை மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்புடன் ஒப்பிட வேண்டும். அதாவது, மாநிலத்தின் பொருளாதாரம் வளர வளர, அதன் கடன் வாங்கும் திறனும் , அதை திருப்பிச் செலுத்தும் திறனும் அதிகரிக்கும். அந்த வகையில்,15-வது நிதிக்குழு தமிழகத்துக்கு, கடன் அளவு குறித்த சில வரம்புகளை நிர்ணயித்துள்ளது. அதன்படி, 2021-22 ஆண்டு 15 வது நிதிக்குழுவின் வரம்பு 28.7 சதவீதம்; மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் தமிழகத்தின் கடன் விகிதம் 27.01 ஆகும்.
2022-23 ஆண்டு 15-வது நிதிக்குழுவின் வரம்பு 29.3; மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் தமிழகத்தின் கடன் விகிதம் 26.87 ஆகும். 2023-24 ஆண்டு 15 வது நிதிக்குழுவின் வரம்பு 29.1; மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் தமிழகத்தின் கடன் விகிதம் 26.72 ஆகும். 2024-25 ஆண்டு 15 வது நிதிக்குழுவின் வரம்பு 28.9; மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் தமிழகத்தின் கடன் விகிதம் 26.40 ஆகும். நிதிக்குழுவின் வரம்புக்குள்தான் கடன் வாங்குகிறோம் என்று தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
மேலும், இங்கே இரண்டு முக்கிய விவரங்களைக் கூற கடமைப் பட்டிருக்கிறேன். சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காததால், இந்த ஆண்டு 9,000 கோடி ரூபாய் கடனும், அடுத்த ஆண்டு 12,000 கோடி ரூபாய் கடனும் வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இது போதாது என்று, மாநில அரசின் நிதிநிலையை மேலும் பாதிக்கும் வகையில் கடுமையான நிபந்தனைகளை விதித்து, வளர்ச்சித் திட்டங்களுக்காக நிதி ஆதாரங்களைத் திரட்டும் மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசு கட்டுப்படுத்துகிறது.
இவ்வாறு ஒரு நிபந்தனையின் மூலம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு இழப்பீட்டு நிதியாக இந்த ஆண்டு 17,117 கோடி ரூபாயும், அடுத்த ஆண்டு 14,442 கோடி ரூபாயும் மாநில அரசு வழங்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அவ்வாறு வழங்காவிட்டால், அதற்கு இணையான தொகை நமது கடன் வரம்பிலிருந்து கழிக்கப்படும். மத்திய அரசு இவ்வாறு நம் நிதிநிலையைப் பாதிக்கும் வகையில் செயல்படாமல் இருந்தாலே, நமது கடன் இந்த ஆண்டு சுமார் 26,117 கோடி ரூபாயும், அடுத்த ஆண்டு 26,442 கோடி ரூபாய் அளவுக்கும் குறைந்திருக்கும்.
மூலதனச் செலவுகள்: கடந்த ஆட்சிக்காலத்தில் மூலதனச் செலவுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று தரவுகள் கூறுகின்றது. 2011-12 ஆம் ஆண்டில் 16,336 கோடி ரூபாயாக இருந்ததை 2020-21 ஆம் ஆண்டில் 33,068 கோடி ரூபாயாக உள்ளது. நீங்கள் 10 வருடம் ஆட்சிசெய்த காலத்தில் மூலதனச் செலவுக்காக 16,732 கோடி ரூபாய் மட்டுமே உயர்த்தியுள்ளீர்கள்.
ஆனால், நாங்கள் கடும் நிதி நெருக்கடியில் ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில்கூட, மாநிலத்தின் வளர்ச்சியை ஈட்டும் மூலதனச் செலவுக்காக கடந்த மூன்று வருடத்திலேயே 33,068 கோடி ரூபாயாக இருந்ததை, 12,000 கோடி ரூபாயில் சென்னை மெட்ரோ உட்பட 59,681 கோடி ரூபாயாக உயர்த்தி, பணிகள் மேற்கொண்டு வருகிறோம். வெறும் 3 ஆண்டுகளில், நாங்கள் மூலதனச் செலவினத்தை 26,613 கோடி ரூபாய் உயர்த்தியுள்ளோம்.
மூன்றே வருடத்தில் 26,613 கோடி ரூபாய் உயர்த்தியுள்ளோம். நீங்கள் மூலதனச் செலவுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் கடந்து சென்ற வருடத்துக்கும் சேர்த்து, வரும்காலத்தில் நாங்கள் வரவு செலவுத் திட்டத்தில் மூலதனச் செலவுக்காக அதிக தொகையை ஒதுக்கீடு செய்து, நம் மாநிலத்தை புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்வோம்.
தற்போது, 63,246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை, 10,740 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோவை மற்றும் 11,368 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரை போன்ற மாநகராட்சிகளில் மெட்ரோ ரயில் திட்டங்கள், நாமக்கல், பெரம்பலூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி போன்ற மாவட்டங்களில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில், மொத்தமாக 9,535 கோடி ரூபாயில் கூட்டுக் குடிநீர்த் திட்டம், சாலை மற்றும் பாலங்கள் மேம்பாட்டுக்காக 17,890 கோடி ரூபாய், போக்குவரத்துத் துறைக்கு 2,966 கோடி ரூபாய் என்று சொல்லிக் கொண்டே போகலாம், என்று பதில் அளித்துள்ளார்.
|
மின் துறையில் சீர்திருத்தங்களை அரசு மேற்கொள்வது ஏன்? - அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் @ பேரவை | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-22 16:45:00 |
சென்னை: "மத்திய அரசு நியாயமற்ற கடுமையான நிபந்தனைகளை விதித்து நமது நிதி நிலைமையை பாதிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. அவற்றில் ஒன்றாக, மாநில அரசு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மின் பகிர்மான இழப்பீட்டினை, மத்திய அரசு வகுத்துள்ள கணக்கீட்டுக்கு ஏற்றார்போல் ஒவ்வொரு வருடமும் மாநில அரசு வழங்க வேண்டும். இதன் விளைவாக, இந்த வருடம் 17,117 கோடி ரூபாய் வழங்கியுள்ளோம். வரும் ஆண்டில் 14,442 கோடி ரூபாய் வழங்க உள்ளோம்" என்று சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை மீது நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை ஆற்றினார். அவர் பேசுகையில், “எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர் TANGEDCO-வுக்கான இழப்பீட்டு நிதியினைப் பற்றி எழுப்பிய முக்கியமான கேள்விக்கு, இம்மாமன்றத்தில் இருக்கும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தெளிவாக விளக்க விரும்புகிறேன். நான் வரவு செலவுத் திட்டத்தில் கூறியதுபோல, மத்திய அரசு நியாயமற்ற கடுமையான நிபந்தனைகளை விதித்து நமது நிதி நிலைமையை பாதிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.
அவற்றில் ஒன்றாக, மாநில அரசு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மின் பகிர்மான இழப்பீட்டினை, மத்திய அரசு வகுத்துள்ள கணக்கீட்டுக்கு ஏற்றார்போல் ஒவ்வொரு வருடமும் மாநில அரசு வழங்க வேண்டும். இதன் விளைவாக, இந்த வருடம் 17,117 கோடி ரூபாய் வழங்கியுள்ளோம். வரும் ஆண்டில் 14,442 கோடி ரூபாய் வழங்க உள்ளோம். இதனால்தான், அதிகளவில் இழப்பீட்டுத் தொகையை TANGEDCO-வுக்கு வழங்கவேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.
எனினும், மாநில அரசு இத்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. TANGEDCO நிறுவன அமைப்பை மாற்றியமைத்தல் (unbundling). இதனால், மின் உற்பத்தி மற்றும் பகிர்மானத்தில் தனிக் கவனம் செலுத்த இயலும். அதிக வட்டியுள்ள கடனை குறைந்த வட்டிக் கடனாக மாற்றுதல். பசுமை ஆற்றலின் மீது சிறப்புக் கவனம் செலுத்த ஒரு புதிய நிறுவனம் அமைத்துள்ளது” என்று கூறினார்.
|
மத்திய அரசின் திட்டத்தை ‘பெயர் மாற்றி’ அறிவித்ததா தமிழக அரசு? - தங்கம் தென்னரசு மறுப்பு @ பேரவை | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-22 16:24:00 |
சென்னை: “மத்திய அரசு தனது திட்டங்கள் என்று பெருமைகூறும் திட்டங்களிலேயே, தமிழக அரசுதான் பெருமளவில் பங்களிக்கிறது. பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்துக்கு (நகர்ப்புறம்) மத்திய அரசின் பங்கு வெறும் 1.5 லட்சம். ஆனால், மாநில அரசின் பங்கு 7 லட்சம்" என்று தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு விவரித்துள்ளார். தமிழக பாஜகவுக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை மீது நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், “மத்திய அரசு தனது திட்டங்கள் என்று பெருமைகூறும் திட்டங்களிலேயே, தமிழக அரசுதான் பெருமளவில் பங்களிக்கிறது. பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தில் (கிராமம்) ஒரு அலகின் விலை-1.2 லட்சம் ரூபாய். இதில், 72,000 ரூபாய் மத்திய அரசின் பங்கு, 48,000 ரூபாய் மாநிலத்தின் பங்கு.
கிராமங்களில் இத்தொகை போதவில்லை என்று தமிழக அரசு ‘Additional Roofing Cost’ எனக் கூடுதலாக 1.2 லட்சம் ரூபாய் வீடு ஒன்றுக்கு வழங்கி வருகிறது. ஆக மொத்தம், ஒரு வீட்டுக்கு 2.4 லட்சம் ரூபாயில், மத்திய அரசின் பங்கு 72,000 ரூபாய், மாநில அரசின் பங்கு 1,68,000 ரூபாய். 30 சதவீதம் மட்டுமே கொடுத்துவிட்டு, திட்டத்துக்குப் பெயர் ’பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா‘ என்று பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
நாட்டிலேயே முதன்முறையாக, ஆதி திராவிடர்களுக்கு கான்க்ரீட் வீடு வழங்கியது மறைந்த முதல்வர் கருணாநிதிதான். அதுமட்டுமல்ல, 1970-ம் ஆண்டில் முதன்முறையாக குடிசைமாற்று வாரியத்தை அமைத்தார். கடந்த 2010-ம் ஆண்டு ‘கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தை’ அறிமுகப்படுத்தினார். 14 வருடங்கள் கழித்து தந்தையின் கனவை இன்று மகன் நிறைவேற்றுகிறார். தமிழக முதல்வர் இன்று குடிசையில்லா தமிழ்நாடு என்ற இலக்கை நோக்கி, ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
மத்திய அரசால் வழங்கப்படும் தொகை போதாது என்றுதான், ஏழை எளிய மக்கள் மீது அக்கறை கொண்டுள்ள இந்த அரசு, ’கலைஞரின் கனவு இல்லம்’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், வீடு ஒன்றுக்கு ரூ.3.5 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க தமிழக அரசு நிதியிலிருந்தே செயல்படுத்தப்படும். இது மட்டுமன்றி, அரசு ஏற்கெனவே கட்டித்தந்த 2.5 லட்சம் பழைய வீடுகளைப் பராமரிப்பதற்காக 2,000 கோடி ரூபாய் நிதியை அறிவித்துள்ளது. பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்துக்கு (நகர்ப்புறம்) மத்திய அரசின் பங்கு வெறும் 1.5 லட்சம். ஆனால், மாநில அரசின் பங்கோ 7 லட்சம்.
முதல்வரின் கிராம சாலை திட்டம், பிரதமரின் கிராம சாலை திட்டத்தை பெயர் மாற்றி அறிவித்துள்ளதாக தவறாக கூறினார்கள். இத்திட்டம் முழுவதையும் மாநில அரசு தனது சொந்த நிதியில் இருந்து தான் செயல்படுத்தி வருகிறது. ஆனால், மறுபுறம், பிரதமரின் கிராமசாலை திட்டத்துக்கு, 1,945 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மத்திய அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பப்பட்டுள்ளன. இன்றுவரை ஒப்புதல் பெறப்படவில்லை.
மேலும், ஊட்டச்சத்தை உறுதி செய், மாதிரி பள்ளிகள் ஆகிய திட்டங்களை மாநில அரசு தனது சொந்த நிதியிலிருந்து செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசு வெளியிட்ட தேசிய கல்விக் கொள்கையில் பள்ளி மாணவர்களுக்கு காலைஉணவு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால், இதுவரை செயல்படுத்தவில்லை. தமிழக முதல்வர், மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு நாட்டுக்கே முன்னோடியாக இத்திட்டத்தை அறிமுகப்படுத்தி, வரலாற்றில் முத்திரை பதித்துள்ளார்.
தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்கள்தான், பின்னர் நாடு முழுவதும் பின்பற்றப்படும். நாட்டையும் பிற மாநிலங்களையும் வழிநடத்திச் செல்லும் நலத்திட்டங்களை இந்த அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மக்களின் நலனுக்காக, இந்த திராவிட மாடல் அரசு அறிமுகப்படுத்திய மக்கள் நலத்திட்டங்களை மத்திய அரசு நாடு முழுவதும் விரிவுபடுத்தினால் நன்றாக இருக்கும்.
பேரிடர் மேலாண்மை: மிக்ஜாம் புயலால் பெரும் பாதிப்பினை சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டத்தில் சந்திக்க நேரிட்டது. இப்பாதிப்புக்களை சீரமைப்பதற்காக மத்திய அரசிடம் 19,689 கோடி ரூபாய் மாநில அரசுக்கு நிவாரண நிதியாக வழங்க கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும், தென்மாவட்டங்களில் வரலாறு காணாத மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் பெரும் பாதிப்பினை தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் எதிர்கொண்டது. இதனால், 18,214 கோடி ரூபாயாக மத்திய அரசிடம் தற்காலிக மற்றும் நிரந்தர சீரமைப்பு பணிகளுக்கு நிதி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், பேரிடர் நிகழ்கிறதோ இல்லையோ, 15-ஆவது நிதிக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், ஆண்டுதோறும் விடுவிக்கப்படும் மாநிலப் பேரிடர் நிவாரண நிதியின் இரண்டாவது தவணையை வழங்கிவிட்டு, ஏதோ பெரிய உதவியை வழங்கியதுபோல் மத்திய நிதியமைச்சர் பெருமை கூறினார்கள். மேலும், பல்வேறு குழுவினர் வந்தபோதிலும், எந்த ஒரு நிதியையும் இன்றுவரை மத்திய அரசு வழங்கவில்லை.
தமிழகத்துக்கு மட்டும் இந்த பாரபட்சமா என்று பார்த்தால்,2023-ல் குஜராத்தில் ஏற்பட்ட பிபர்ஜாய் புயலுக்கு 338 கோடி, 2022-ல் அசாம் வெள்ளத்துக்கு 250 கோடி, 2022-ல் கர்நாடகா வெள்ளத்துக்கு 939 கோடி, 2021-ல் குஜராத் புயலுக்கு 1000 கோடி, 2021-ல் மத்தியப் பிரதேச வெள்ளத்துக்கு 600 கோடி, 2021-ல் பிஹார் வெள்ளத்துக்கு 1,038 கோடி, 2021-ல் கர்நாடகாவில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு 1,623 கோடி வழங்கப்பட்டுள்ளது.
அரசியல் ரீதியாகச் செயல்படும் மத்திய அரசினால் பாதிக்கப்படுவது ஏழை எளிய மக்கள்தான். மக்களை வாக்குகளாகப் பார்க்கும் பாஜகவுக்கு மக்களின் துயரத்தை எவ்வாறு அறிய இயலும். மத்திய அரசு எந்த ஒரு நிதியையும் வழங்காத நிலையில் இந்த அரசு தனது சொந்த நிதியிலிருந்து பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது. மிக்ஜாம் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் உள்ள 24.25 லட்சம் குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் என 1,486 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்த குடும்பங்களுக்கு 6,000 ரூபாய் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 1,000 ரூபாய் என மொத்தம் 30.94 லட்சம் குடும்பங்களுக்கு 541 கோடி ரூபாய் செலவில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் மற்றும் பழுது பார்த்தல் 385 கோடி ரூபாய். பயிர் சேத நிவாரணம் 250 கோடி ரூபாய், தற்காலிக மற்றும் நிரந்தர சீரமைப்புக்காக நெடுஞ்சாலை துறைக்கு 725 கோடி ரூபாய், நீர்வளத் துறையில் சீரமைப்பு பணிகளுக்காக 630 கோடி ரூபாய், நிவாரண இழப்பீடாக பல்வேறு துறைகளுக்கு தற்காலிக சீரமைப்புப் பணிகளுக்காக 130 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
சிறு வணிகர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை சிறப்புக் கடன் திட்டம். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மூன்று லட்சம் ரூபாய் வரை வெள்ள நிவாரண கடனுதவித் திட்டம். மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 350 கோடி ரூபாய் கடன். நிலுவையில் உள்ள கடன் தவணைகளுக்கு கால நீட்டிப்பு. சேதம் அடைந்த மீன்பிடி படகுகளுக்கு நிவாரணம் 15 கோடி ரூபாய்
கால்நடைகள் வாங்குவதற்கு கடன், உப்பள தொழிலாளர்களுக்கு உதவித்தொகை 3,000 ரூபாய். பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்கள் மற்றும் பாட புத்தகங்கள் வழங்குதல் மற்றும் இதர அரசு துறைகளில் வழங்கப்படும் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் வழங்குதல்.
இந்த மாதத்தில் பிரதமர் தூத்துக்குடிக்கு வருகைதர உள்ளார். அதற்கு முன்பாவது, தேசியப் பேரிடர் நிவாரண நிதியை வழங்குவார் என்று நம்புகிறோம். விண்வெளிச் சாதனைக்கு அடிக்கல் நாட்ட வரும் பிரதமர், சமவெளியில் நடந்த துயரத்துக்கு நிவாரணம் அளிப்பாரா என்று எதிர்நோக்குகிறோம்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டம்: 63,246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் இரண்டாம் கட்டம், நம் நாட்டிலேயே ஒரு மாபெரும் கட்டமைப்புத் திட்டமாகும். ஒவ்வொரு மாநிலத்திலும் செயல்படுத்தும் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு தனது பங்களிப்பை வழங்கும். சென்னை மெட்ரோ ரயிலின் முதல் கட்டத்துக்கு அவ்வாறு ஒப்புதல் அளித்துள்ளது. அவ்வாறே, சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டத்துக்கு தனது பங்களிப்பாக 50% மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் என்று நம்பிக்கையில்தான், இத்திட்டத்துக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சரும், சென்னைக்கு வருகை புரிந்து, எதிர்க்கட்சித் தலைவருடன் கைகுலுக்கி, திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். எதிர்க்கட்சியினர் தங்களது கூட்டணிக் கட்சியின் மீது கண்மூடித்தனமாக நம்பிக்கை வைத்து பணிகளைத் தொடங்கினார்கள். சற்றுத் தாமதாகவே அவர்கள் கண் திறந்திருக்கிறது. சற்று முன்பே திறந்திருந்தால், மாநிலத்துக்கு பல ஆயிரம் கோடி ரூபாயை சேமித்திருக்கலாம். அதற்குப் பின், 17.8.2021 அன்று திட்ட முதலீட்டு வாரியம் (PIB) ஒப்புதல் அளித்தது. ஆனால், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்கு மத்திய அரசு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால், இத்திட்டத்தின் மொத்தச் செலவையும் மாநில அரசே ஏற்க வேண்டியுள்ளது.
நமக்கு ஒப்புதல் அளிக்காத அதேவேளையில், மத்திய அரசு, 2022-ல் நாக்பூர் மெட்ரோ இரண்டாம் கட்டம், கொச்சி மெட்ரோ இரண்டாம் கட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. 2023-ல் குருகிராம், புனே மெட்ரோ திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நியாயமற்ற செயலினால், மாநில அரசுக்கு இந்த வருடம் 9,000 கோடி ரூபாயும் அடுத்த வருடம் 12,000 கோடி ரூபாயும் கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு தனது கடமையை நிறைவேற்றாததால், மாநில அரசின் பற்றாக்குறையும், கடனும் அதிகரித்துள்ளது. மத்திய அரசு விரைவில் இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளிப்பார்கள் என்று நம்புகிறோம். அதற்கு, சமீபத்தில் மனம் மாறிய நமது எதிர்கட்சித் தலைவர் குரல் கொடுப்பார் என்றும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் உதவுவார் என்றும் நம்புகின்றேன் என்று பேசினார்.
|
ஆளுநர் தமிழிசை Vs புதுச்சேரி அரசு - மத்திய அரசிடம் செல்கிறது புதிய பேரவை கட்டிட கோப்பு விவகாரம் | செ. ஞானபிரகாஷ் | புதுச்சேரி | 2024-02-22 16:06:00 |
புதுச்சேரி: புதுச்சேரியில் புதிய சட்டப்பேரவை கட்டிட கோப்பினை தாமதப்படுத்தினால், ஆளுநர் தமிழிசை மீது மத்திய உள்துறையில் புகார் செய்வேன் என்று அம்மாநில சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் ஒருங்கிணைந்த தலைமை செயலகத்துடன் கூடிய சட்டப்பேரவை கட்ட அரசு முடிவு செய்தது. இதற்கான கோப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசையின் ஒப்புதல் பெற அனுப்பி வைக்கப்பட்டது. துணைநிலை ஆளுநர் தமிழிசை, இந்தக் கோப்பினை மத்திய அரசுக்கு அனுப்பாமல், கடந்த 5 மாதங்களாக நிலுவையில் வைத்திருப்பதாக பேரவைத் தலைவர் செல்வம் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், ‘மக்கள் வரிப்பணத்தை வீணாக்கக் கூடாது, ஆடம்பர செலவுகளை தவிர்க்க வேண்டும் என்பதற்காக சில கேள்விகளை கேட்டுள்ளேன்’ என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார். இதனையடுத்து பேரவைத் தலைவர் செல்வம் இன்று கூறியது: “முதல்வர் ஆலோசனையின் பேரில் பிரதமர், நாடாளுமன்றத் தலைவர் ஓம் பிர்லா, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தேன். புதுச்சேரியில் புதிய சட்டப்பேரவை கட்ட 100 சதவீதம் நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என வைத்த கோரிக்கையை பிரதமர் மோடி ஏற்றார்.
இதன்பின் மத்திய உள்துறை அமைச்சகம் திட்ட முன்மொழிவை சமர்ப்பிக்க 2021-ஆம் ஆண்டு புதுவை அரசுக்கு கடிதம் அளித்தது. பொதுப் பணித்துறை மூலம் சட்டப்பேரவை கட்ட ரூ.335.70 கோடிக்கான பூர்வாங்க திட்ட அறிக்கையை தயாரித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு சமர்ப்பித்து சிறப்பு மத்திய நிதி உதவியை விடுவிக்க கோரியது. டிசம்பர் 2021-ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் சில விளக்கங்கள் கேட்டு அதன் அடிப்படையில் விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்கும்படி புதுவை அரசை அறிவுறுத்தியது.
இதனால் இந்தியாவின் சிறந்த நிறுவனம் மூலம் திட்ட அறிக்கை தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. நொய்டாவை சேர்ந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு தயாரிக்கப்பட்ட கோப்பு, உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கும் முன்பு துணைநிலை ஆளுநர் ஒப்புதலுக்காக கடந்த அக்டோபரில் சமர்பிக்கப்பட்டது. இந்தக் கோப்பில் துணைநிலை ஆளுநர் தமிழிசை கையொப்பமிட்டு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்புவதற்கு பதிலாக, கோப்பு சரியாக தயாரிக்கவில்லை என்பது போன்ற விளக்கங்களை கேட்டு துறைக்கு திருப்பி அனுப்பினார்.
மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு துணைநிலை ஆளுநர் அனுப்பிய பிறகு அவர்கள் ஏதேனும் விளக்கம் கேட்டு கோப்பினை திருப்பி அனுப்பினார்களா அல்லது ஆளுநரே மத்திய உள்துறை அமைச்சகம் சார்பாக விளக்கங்களை கேட்டாரா என்று கேள்வி எழுகிறது.
உள்துறை அமைச்சகம் விளக்கம் கோரினால் தலைமைச் செயலருக்குத்தான் கோப்பினை அனுப்பும். மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பாமலேயே ஆளுநர் தமிழிசை விளக்கங்கள் கேட்கிறேன் என்ற பெயரில் கோப்பினை கால தாமதப்படுத்த வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுகிறது. பொதுப் பணித்துறை அனைத்து விளக்கங்களையும் அளித்துள்ளதாக ஆளுநர் மாளிகை கூறுகிறது.
இருப்பினும் கோப்பு தொடர்பாக ஆளுநர் தமிழிசை முடிவு செய்யாமல், பரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் என்ன - புதுச்சேரியில் தலைமைச் செயலகத்துடன் கூடிய சட்டப்பேரவைக் கட்ட 100 சதவீத மானியம் வழங்க மத்திய அரசு தயாராக இருந்தும், காலதாமதத்துக்கு யார் காரணம் என்று கேட்கிறேன். துணைநிலை ஆளுநர் தமிழிசை இந்த கோப்பினை விரைந்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
சட்டப்பேரவை கட்ட ஆளுநர் முழுவதும் தடையாக உள்ளார். ஆளுநர் கூறியப்படி விமானத் தளம் ஏதும் புதிய சட்டப்பேரவை திட்டத்தில் இல்லை. ஹெலிகாப்டர் இறங்க வாய்ப்பு உருவாக்கவே திட்டமிட்டோம். தலைமைச்செயலர் தலைமையில் குழு அமைத்து நான்கு முறை கூடி திருத்தங்கள் செய்துதான் முடிவு எடுத்தது.
இது முழுக்க மத்திய அரசின் மானியத்தில்தான் கட்டப்போகிறோம். அதற்காகதான் திட்ட வரைவு அறிக்கை கேட்டனர். பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கேட்டதன் அடிப்படையில்தான் இக்கோப்பினை தயாரித்தோம். முதல்வரோ நானோ இம்முடிவை எடுக்கவில்லை.
நான் ஆளுநரிடம் 50-க்கும் மேற்பட்ட முறை சட்டப்பேரவை கட்டுவது தொடர்பாக பேசிவிட்டேன். அவர் கோப்பினை அனுப்பாதது தெரியவில்லை. இதற்கு மேலும் அனுப்பாவிட்டால், தேவைப்பட்டால் மத்திய உள்துறையிடம் ஆளுநர் மீது புகார் செய்வேன், புதுவை வளர்ச்சிக்கு துணைநிலை ஆளுநர் தடையை ஏற்படுத்துவது சரியல்ல. பேரவைக்கான புதிய கட்டடக் கோப்பு தாமதத்துக்கு துணைநிலை ஆளுநர்தான் விளக்கமளிக்க வேணடும்.
தெலங்கானா பேரவைக் கட்டிட மதிப்பை விட புதுவை பேரவைக் கட்டட மதிப்பு குறைவாகவே உள்ளது. புதுச்சேரி பேரவை வளாகத்துக்கான நிதியை மத்திய அரசு வழங்க முன்வந்தும் ஆளுநர் தடையாக இருக்கிறார். ஆளுநரிடம் கருத்து மோதல், பிரச்சினை ஏதுமில்லை. ஆகவே, எங்கள் கருத்தால் மக்களவைத் தேர்தலில் ஏதும் (பாஜக அணிக்கு) பாதிப்பிருக்காது” என்று அவர் குறிப்பிட்டார்.
|
“மதுரை எய்ம்ஸ் போல் இல்லாமல்...” - பேரவையில் பாஜகவுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் @ கோவை நூலகம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-22 15:11:00 |
சென்னை: “கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசனுக்கு நான் ஒன்றை மட்டும் உறுதியாகத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். நிச்சயமாக மதுரையில் ‘எய்ம்ஸ்’ அறிவிக்கப்பட்டதைப்போல் இல்லாமல், குறிப்பிட்ட காலத்துக்குள் கோவை நூலகம் கட்டி முடிக்கப்படும். அதுவும் குறிப்பிட்ட நாளையும் நான் குறிப்பிட விரும்புகிறேன். 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அது திறக்கப்படும்” என்று கோவை நூலகம் திறப்பு தொடர்பான கேள்விக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை மீது நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை ஆற்றினார். இதன்பின்னர், பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “நேற்றைய தினம் சட்டமன்றப் பேரவையில் நிதிநிலை அறிக்கையின் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றி இருக்கக்கூடிய உறுப்பினர்களுக்கு எல்லாம் மிகத் தெளிவாக, விளக்கமாக, விரிவாக அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்திருப்பது உள்ளபடியே பாராட்டுக்குரிய வகையில் அமைந்திருக்கிற காரணத்தால் என்னுடைய வாழ்த்துக்களையும் மனதார நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
நேற்றையதினம் விவாதத்தின்போது சில குறிப்பிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்த வினாவுக்கு விளக்கம் சொல்லியிருக்கிறார். ஆனால், அதேநேரத்தில், பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வைத்த கோரிக்கைக்கு ஏன் பதில் சொல்லாமல் விட்டுவிட்டார் என்று எனக்குப் புரியவில்லை.
அவர் ஒரு கோரிக்கையை வைத்திருந்தார். கோவையில் நூலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துவிட்டு, அது எங்கே அமையவிருக்கிறது? எவ்வளவு நிதி ஒதுக்கப் போகிறீர்கள்? எப்போது ஆரம்பிக்கப் போகிறீர்கள்? எப்போது அந்தப் பணிகள் முடிவடையும் என்று கேள்விகளைக் கேட்டிருந்தார். அது நிச்சயமாக உடனடியாக செயலாக்கத்துக்கு வரும். ஏனென்றால், இந்த ஆட்சி சொன்னதைச் செய்யும், சொன்னதைத் தாண்டியும் செய்யும், சொல்வதைத்தான் செய்யும்.
மதுரையில் எவ்வாறு உலகத் தரம் வாய்ந்த கலைஞர் நூலகம் குறிப்பிட்ட காலத்துக்குள் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டிருக்கிறதோ, சென்னையில் கலைஞர் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை, மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்காக ஏறுதழுவுதல் அரங்கம் அமையப் பெற்றிருக்கின்றனவோ, இன்னும் சில தினங்களில் நம்முடைய கலைஞர் நினைவிடம் அமையவிருக்கிறதோ, அதேபோல் அதுவும் சொன்னபடி நிச்சயமாக இந்த ஆட்சியில் நடக்கும்.
ஆனால், வானதி சீனிவாசனுக்கு நான் ஒன்றை மட்டும் உறுதியாகத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். நிச்சயமாக மதுரையில் ‘எய்ம்ஸ்’ அறிவிக்கப்பட்டதைப்போல் இல்லாமல், குறிப்பிட்ட காலத்துக்குள் கோவை நூலகம் கட்டி முடிக்கப்படும். அதுவும் குறிப்பிட்ட நாளையும் நான் குறிப்பிட விரும்புகிறேன். 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அது திறக்கப்படும். திறப்பு விழா நிகழ்ச்சிக்கு உங்களுக்கு முறையாக அழைப்பு வரும். நீங்களும் வந்து விழாவில் கலந்துகொள்ள வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார்.
சாதிவாரி கணக்கெடுப்பு - முதல்வர் விளக்கம்: முன்னதாக, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை தமிழக அரசே எடுத்து நடத்த வேண்டும் என்று பாமக உறுப்பினர்கள், தமிழக சட்டப்பேரவையில் குரல் கொடுத்தனர். ஆனால், ஆளுநர் உரையில் இதுபற்றி தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறி இதுகுறித்து பேரவையில் விவாதிக்க மறுக்கப்பட்டது. எனினும், தொடர்ந்து பாமக உறுப்பினர்கள் கூச்சல் எழுப்பிய வண்ணம் இருந்தனர்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, “நீங்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு பிரச்சினை பண்ண வேண்டும் என்றே கூச்சல் எழுப்புகிறீர்கள். ஏற்கெனவே ஆளுநர் உரையில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு கணக்கெடுத்தால் மட்டுமே அதை நடைமுறைப்படுத்த முடியும். நீங்கள் அரசியலுக்காகவோ அல்லது எதற்காகவோ மாநில அரசு கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சொல்கிறீர்கள். மாநில அரசு எடுக்க வேண்டிய அவசியமில்லை.
மாநில அரசு கணக்கெடுப்பு நடத்தினாலும், அதனை நடைமுறைபடுத்துவதை யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இந்த அரசியலமைப்பு சட்டப்படி பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒன்றிய அரசு மட்டும்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடியும். முதல்வர் ஸ்டாலினும் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு அழுத்தம் கொடுத்து இருக்கிறார்கள். உங்களின் கருத்தோடு ஒத்த கருத்தாக முதல்வரும், இந்த அரசும் உள்ளது” என்றார்.
பின்பு விளக்கமளித்த முதல்வர் ஸ்டாலின், “சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ஏற்கெனவே இந்த அவையில் பலமுறை விவாதிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டிலும் இது குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் தாண்டி பாமக தலைவர் ராமதாஸ், அன்புமணி, வேல்முருகன், ஜி.கே.மணி போன்றோர் இதுகுறித்து என்னிடம் நேரடியாக சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார்கள். அப்போதே இதுகுறித்து விளக்கமாக பதில் சொல்லியிருக்கிறோம். சாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிராளிகள் அல்ல. உங்களுக்கு சாதகமாகதான் நாங்களும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
பிப்.26-ல் கலைஞர் நினைவிடம் திறப்பு: இதனிடையே, சென்னை மெரினா கடற்கரையில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நினைவிடம், புதுப்பிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா நினைவிடம் வரும் 26-ம் தேதி திறக்கப்படவுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
“கலைஞர் நினைவிடம் அமைக்கும் பணி முழுமையடைந்திருக்கிறது. அறிஞர் அண்ணா நினைவிடமும் புனரமைக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. புதுப்பிக்கப்பட்டிருக்கக் கூடிய பேரறிஞர் அண்ணா நினைவிடமும், கலைஞர் புதிய நினைவிடமும் வருகிற 26 ஆம் தேதி மாலை 7 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளன.
எதற்காக இதை இங்கே நான் குறிப்பிட்டுச் சொல்கிறேன் என்றால், அந்த நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் எதையும் நாங்கள் அச்சிடவில்லை. அதனை ஒரு விழாவாக இல்லாமல், நிகழ்ச்சியாகவே நடத்திட நாங்கள் விரும்பியிருக்கிறோம்; முடிவெடுத்திருக்கிறோம். ஆகவே, அந்த நிகழ்ச்சியிலே இந்த அவையில் இருக்கக்கூடிய ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணிக் கட்சி, தோழமைக் கட்சி என எல்லாக் கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டு மக்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
மேகேதாட்டு விவகாரம்: இதனிடையே, மேகேதாட்டுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதியின்றி ஒரு செங்கல் கூட கர்நாடக அரசால் வைக்க முடியாது என்று சட்டப்பேரவையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்தார். | அதன் முழு விவரம்: மேகேதாட்டு | தமிழகத்தின் அனுமதியின்றி ஒரு செங்கல்கூட கர்நாடகம் வைக்க முடியாது - அமைச்சர் துரைமுருகன்
அதேவேளையில், “உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி ஒரு நல்ல தீர்ப்பை பெற்று தந்து இருக்கிறோம். இன்று ஒரு வேளை மேகேதாட்டுவில் அணை கட்டப்பட்டுவிட்டால், மேட்டூருக்கு தண்ணீர் வராமல் வறண்டு போய்விடும். டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக ஆகிவிடும். எனவே இந்த அரசு அலட்சியமாக செயல்பட்டு நடந்துகொண்டு இருப்பதனால் தான் இதனை நாங்கள் அரசின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளோம்” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். | வாசிக்க > “திமுக தூங்கிக் கொண்டிருக்கிறது” - மேகேதாட்டு விவகாரத்தில் இபிஎஸ் காட்டம்
|