text
stringlengths 18
393k
|
---|
எழுத்தாளரும் கல்குதிரை இதழின் ஆசிரியருமான கோணங்கியிடம் அரூ குழு நடத்திய நேர்காணல். அவரது எழுத்துமுறை, எழுத்தில் அவர் மேற்கொண்ட பரிசோதனை முயற்சிகள், தமிழில் அறிவியல் புனைவு, கல்குதிரை துவங்கிய தருணம், பிரமிள், பயணங்கள் இப்படிப் பல புள்ளிகளைத் தொட்டுச் செல்கிறது உரையாடல். இதைச் சாத்தியப்படுத்திய நண்பர் ஸ்ரீதர் ரங்கராஜுக்கும், கேள்விகள் தயாரிப்பில் உதவிய நண்பர்கள் கணேஷ் பாபுவுக்கும் கே.பாலமுருகனுக்கும் நன்றி. கோணங்கியின் கலை என்பது என்ன? சூலாகும் விண்மீன்கள் ஒன்றை ஒன்று மோந்துகொள்ளும் மையலின் பால்விதிதான் என் கலை. இதுவரையிலான படைப்புகளைத் திரும்பிப் பார்க்கையில், உங்கள் எழுத்தில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக நினைக்கிறீர்கள்? எப்படியெல்லாம் அது உருமாறியுள்ளது? ஆரம்ப கால எழுத்து ஊரின் குரல்வளையின் சொல்லி எழுத்து. அதற்குப் பின் இன்றுவரை வந்ததெல்லாம் மொழிக்குள் மறைந்து தோன்றும் புராதனக் கதைசொல்லியின் மொழி எழுத்து. மொழி எழுத்துக்கதைகள் அந்தப் புராதன நாடோடிக் கதைசொல்லி தன் கழுதையுடன் கொண்டுவந்திருக்கும் மொழி அபிதானத்தின் கிளைக்கவைகளாகப் பிரிந்து செல்லும் புதிர்களால் பன்மையைக் கைப்பற்றிவிடுகின்றன. மதினிமார்கள் தொகுப்பில் ஆதிவிருட்சம், பாழ் போன்ற இரண்டு கதைகள் இப்பொழுது எழுதும் கதைகளுக்கு அப்பொழுதே மொழியில் உதித்த மகரமீன். இதைச் சித்தன்னவாசல் ஓவியத்திலும் கண்டேன். கொல்லனின் ஆறு பெண்மக்கள் தொகுப்பில் மீண்டும் ஆண்டாளின் தெருக்களில், அப்பாவின் குகையிலிருக்கிறேன் போன்ற கதைகள் இன்றைய மொழிக்கதைகளுக்கு ஆதாரக்கோடுகளாய் முன்பே அமைந்துவிட்டவை. சொல்கதைக்கும் மொழிகதைக்கும் இடையில் பலவெளிகள் கனவுப்புனைகதைகளாக உருவெடுத்துள்ளன. பட்டுப்பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமம் என்ற முழுத்தொகுதியையும் இதற்கு உதாரணமாகச் சுட்டலாம். தமிழின் சமகால முக்கிய ஆளுமைகள் உங்கள் எழுத்து பற்றிக் கூறும்போது, உங்களின் ஆரம்ப கால எழுத்துகளையே சிறந்த ஆக்கங்கள் என்று குறிப்பிடுவதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? மனிதர்களே பங்குகொள்ளும் சொல்லி எழுத்து போதாமையாக உள்ளது. அவ்வகைமையான கதைகள் கதையின் பால்விதியை அடைவதில்லை. மொழியின்றிச் சொல்லி எழுத்து உயிர்க்குலப் பன்மையை எட்டுவதில்லை. மனிதர்கள் எவரும் பங்குகொள்வதாகக் கதைகள் சொல்லப்படவில்லை முதலில். அப்போதே நாம் கிளம்பி வந்த சுமேரியத் தொன்மத்தின் மூலத்தாய் தியாமெத்தின் யாக்கையில் வரையப்பட்டுள்ள புள்ளி உருவங்கள் கோடுகளாகப் பாய்ந்து விலங்குகளாக மனிதனுக்கு முந்தைய கதை உருவங்களாக எழுதப்பட்டுவிட்டதால் விலங்கு உருவாக்க நிலையே உலகின் முதல் கதை. அதிலிருந்தே புராதனக் கதைசொல்லிகள் மொழி கதைக்குள் தோன்றி மனிதர்களுக்குக் கதைபோட்டு மறைகிறார்கள். உங்கள் கதைகளின் மூலம் தமிழ் நாட்டார் மரபில் பயின்றுவரும் ஆழ்படிமங்களும் தொன்மங்களும் மறுவரையறை செய்யப்பட்டுத் தத்தம் இயல்பு வடிவிலிருந்து வாசகனின் கற்பனையில் மேலும் விரிவான வடிவத்திற்கு நகர்வதை உணர முடிகிறது. உங்கள் படைப்பில் இதைத் திட்டமிட்டு நிகழ்த்துகிறீர்களா? பித்தோகரஸ் கூறிய அனைத்தும் நமது சிலம்பில் அரங்கேற்றுக்காதையில் இளங்கோவடிகளால் முன்பே கூறப்பட்டுள்ளது. கலையில் திட்டமிட்டு எதையும் நிகழ்த்தயியலாது. பெருங்கடலை ஒட்டிவந்த மூ இன மாலுமிகள் தொன்முது காலத்தில் எச்சங்களைத் தேடிவந்த கோடிநாடு மணல் கண்டமாய் இன்றுளது. மூ மாலுமியிடம் மாயன் சுவடிகளும் செங்கோண் தரைச்செலவு நூலுமிருந்ததில் இவர்களும் ஊழியால் அலையும் கதா நரம்பாடிகள் என்றது இசைக்கருவியான கோடு. அதன் நரம்புகள் கீழே உதிர்ந்துகிடந்தன முதுவாய் பாணரின் தொன்மங்களாக. கடகோணிகழ்வுக்கு முன் தப்பியிருந்த மூ இனம் பக்தியற்ற முரட்டு மூதாய்களாக எஞ்சியிருந்தனர் கடல்விதியாய். இந்த மூ இனம் நாம் என்று விளக்க வேண்டியதில்லைதானே? இன்றைய நாவலான பாழியில் மூதாய்களின் நாக்கில் தானிய ஏடுகளும் தேவதாசிகளின் ரத்தாம்பரப் புஸ்தகமும் உள்ளது. நாட்டார் மரபுக்கு ஏகலைவனின் வேட புராண ஏடு உளது. கானல்வரி பாட்டுக்குள் நமது கதைமரபாக உள சிலப்பதிகாரத்தின் கடல்கோள் நிகழ்வு மறைந்துள்ளது. த நாவலின் கடைசி அத்தியாயமான காலரா ரயிலுக்கு முந்தைய அத்தியாயத்தின் தலைப்பு திருப்புநடுவணம் கமாரா. கமாரா என்பது காவேரிபூம்பட்டினம். இதில் நகரும் புனைவுப்பாம்பின் குறுக்குவெட்டுத்தோற்றத்தில் கடல்சிலம்பை உள்ளது. கடல் ஊழியே நமக்குக் கதை மரபாக உளது. கதா நரம்பாடிகள் ஒவ்வொருவரும் நவீனப் புனைகதையாளர்களே. சிலப்பதிகாரம் என்ற செவ்வியல் கலைக்குள் நாட்டார் கதைமரபுகள் மறைந்துள்ளன. அத்தனை மூங்கில் துளைக்கருவிகளும் நாட்டார் மரபிசையிலிருந்தும் மாடு மேய்ப்பவனின் வீசும் நீண்ட புல்லாங்குழலிருந்தும் முல்லைத்தீம்பாணியை அடைந்திருக்கின்றன. நட்சத்திரங்களின் மூலம் வரப்போகும் பேரிடரை அகுதாகவா சுழலும் சக்கரங்கள் குறுநாவலின் மூலமும் மூடனின் நாட்குறிப்புகள் எனும் நெடுங்கதையின் மூலமும் தி கிரேட் கான்டோ எர்த்குவாக் முன்னுணர்ந்ததைப் போல இளங்கோவடிகள் கடல்கோணிகழ்வைக் கானல்வரியில் முன்னுணர்ந்துவிடுகிறார். ஹாருகி முரகாமிக்கு அகுதாகவா மூலப்படிமமாவதைப் போல நமக்கு இளங்கோவடிகள் கடல்கோணிகழ்வுகள் தொன்மத்தின் ஆழத்தில் கதைமரபாகவும் இசைமரபாகவும் கடல் அணங்காகவும் மாதவியின் செங்கோட்டு யாழின் லயமலரானது மொழிகதையாகவே வரிப்பாடலில் தோன்றும் இடமுறைத் திரிபை நமது ராசிவட்டத்தைக் கிரேக்கத்திலிருந்து மூ மாலுமிகள் திரும்பியபோது கூட வந்த பித்தோகரஸ் எடுத்துச்செல்கிறார். நம் இசை போல் புதிய இசையை வகுத்தார். பித்தோகரஸ் கூறிய அனைத்தும் நமது சிலம்பில் அரங்கேற்றுக்காதையில் இளங்கோவடிகளால் முன்பே கூறப்பட்டுள்ளது. இசையும் கதைமரபில் ஒன்றுகலந்திருக்கும் முன்னுணர்தல் கானல்வரிப் பாடலிலும் இடமுறைத் திரிபு அனைத்து கலைகளுக்கும் உலகளாவிய மரபைக் கொடுத்துவிடுகிறது. எனவே நாட்டார் தொன்மங்களும் செவ்வியல் தொன்மங்களும் ஒன்றுகலந்திருப்பது மூத்த மொழியான தமிழ், கிரேக்கம் போன்ற மூத்த மொழிகள் விசும்பின் கைவறுநரம்பில் ஒன்றுகலந்துவிடுகின்றன. உங்களின் படைப்புகளில் எவையெல்லாம் அற்புத யதார்த்தக் கதைகள், கனவுப் புனைகதைகள், பின் நவீனத்துவக் கதைகள், பரிசோதனைக் கதைகள் என எண்ணுகிறீர்கள்? நவீனப் புனைகதைகளுக்கு இப்படியான வகைப்பாடுகள் இனி தேவையிருக்காது. ஒவ்வொரு கதையும் பச்சோந்தி உடலெடுத்து நிலவெளித் தோற்றங்களை மொழியின் அகப்பரப்பில் பல்வேறு நிறங்களாகக் கதை தன்னைப் பகிர்ந்துகொள்கிறது. மாயத்தோற்றங்களின் துயரார்ந்த கன்னிகளின் காலடிகளுடன் ஒடிந்த கலப்பை ஒன்றைச் சுற்றி கண் தெரியாத மண்புழு மோகினி ஆட்டத்துடன் சேர்ந்து வளைந்து வளைந்து ஒவ்வொரு திணையில் இருந்தும் உயிர்பெறுகிறது தழும்புகள் சிவந்த அணங்கு நிலம் எனும் குறுநாவல். இதற்குள் முனிவம் ஒன்றில் யூதர்களின் சிவப்பு நிற சாளரத்தை நெருங்காமலும் நீலத்தில் பயணப்பட்டிருக்க வேண்டுமென்கிற விதி செபூலா இனத்து யூத ஆரோனின் கவசத்திலிருந்த 18 ஜன்னல்களைப் பற்றிய கதைகளையும் சொல்லியை வெறுத்துப்போன இசாகா பழங்குடியின் பழமையானபூமி பச்சை நிறமாயிருக்க தங்கையான தீனா மயிற்பீலிகளில் முகங்களை வரைந்து நெஞ்சிலிருந்து தோகை விரித்து நிற்கிறாள். பெண்ணால் எழுதப்பட்ட இக்குறுநாவல் துயர் மிகுந்த கதைப்பாடலுக்கான குருதியின் ரகசிய உரையாடல்கள் உரைநடைக்கு நவீன மரபாக மொழி தன் கால்களுக்குத் தரை தேடி ஒவ்வொரு நிலமாக அலைந்து திரியும் தனிப்பாடலின் விதி புனைகதைக்கும் உண்டுதானே. பலகன்னிகளைப் போர்த்தியுள்ள கூந்தலால் நெய்யப்பட்ட மதினிமார்கள் கதையே இப்பொழுது எழுதி வெளிவராத அயோனிஜா சிறுகதைக்கு மரபுத் தொன்மங்களின் மண்குரல்வளை பாட்டியிடமிருந்து கதை வெளியாகிறது. சிறுகதைக்கே நோபல் பரிசு பெற்ற பாட்டி ஆலிஸ் மன்றோவும் சாத்தூர் நரிமார்க் வாய்ப்பொடி புகையிலையால் கரகரத்துப் போன என் பாட்டியின் புகையிலைக்குரல் வாசனையும் எனக்குக் கதை மரபு இல்லையா. அவள் சேலையில் முடிந்து வைத்த பறங்கிப்புகையிலை விதைகளின் பாதைகளில் என் புனைவின் அத்தனை வாசனையும் 72 பெயர்களில் எழுதிய பறங்கித் தாத்தா பெர்னாண்டோ பெசோவாவின் மன உளைவின் புத்தகம் பழைய கப்பலாய் அசைந்து பெசோவாவின் நிழல் மெலிதாகப் பரவுகிற யாவினதும் மங்கிய தென்றல் ஒரு போதும் வாழ்வதற்கு துணிவு கொண்டிருக்கவில்லை. முத்துப்பட்டணத்திலும் கொற்கையிலும் அந்தக் கப்பலில் வந்து நிற்கிறார் பெசோவா யாவினதும் ஊமை மூச்சு உணர்தற்கு விளைவு கொண்டிருக்கவில்லை. யாவினது வீண் முனகல்கள் எண்ணிப் பார்க்க விருப்பம் கொண்டிருக்கவில்லை. பெருநீர்ச்சுழிகளினுள்ளாகும் சோம்பல்கதி தவிர்க்க முடியாதபடி உன்னை அடையவிருக்கிறது. வழுக்கலான சரிவுகளின் அடிவாரம் உனக்கான இடமாக அமையப் பெற்றுள்ளது. நிழல்களினுள்ளாக அல்லது ஒளிகளின்னுள்ளாக செல் என்று பெசோவா இன்னும் பலராகக் கருத்த பாய்மரத்தில் கருங்கடல் கிளியாகவும் மாறியிருந்தார். ஒவ்வொரு கதை உருவாகும் சூழலிலும் சமகால வேர்களின் ஊடாகத் தென்கடல் முத்து வாணிபத்தின் கலையின் தரம் நிர்ணயிக்கும் தசமக் கணிதப் பலகை ஜான் பெர்ணான்டோ மச்சாடோ போர்ச்சுக்கீசியத் தந்தைக்கும் பரதவத் தாய்க்கும் பிறந்த கருப்புக் காசாது பாஷை பேசும் முத்து வணிகனின் கையில் உள்ளது. அதைத் தேடி மானாவாரி மனிதர்கள் பஞ்சத்தில் உப்பு வெளிக்குச் சென்றார்கள். நவீனப் புனைகதைக்கு உப்பு ஓடைகள் புதிய வெளியைக் கொடுத்தன எனக்கு. முத்தின் தொல்லுயிர் நவீனக்கதையாகப் பித்தமொழியாகவே தமிழில் வெளிப்படும். இந்தக் குறுநாவல் தழும்புகள் சிவந்த அணங்கு நிலம் யூத வெளியேற்றத்தில் முன்பே மலபாரில் கரை ஏறியோர்க்குச் சேரமான் பெருமாள் கொடுத்த கல்விளக்கு யூதர்களின் சினகாக் ஆலயத்தில் கல்வெட்டு எழுத்துடன் சுடரே துலங்கி எழுதியதுதான் இந்தக் குறுநாவல். மண்சிலம்பை சிறுகதையையும் இறந்து கொண்டிருக்கும் சிறுமியின் கற்சாவி சிறுகதையையும் உணர்ந்து வாசித்தவர்கள் உணர முடியும். பச்சைநிற மர ஜன்னல், ரேகை பதிந்த சாளரம், பியானோத்தெரு ஜன்னலிருந்து எழுதுவோன் மரபில் தீப்பந்தம் செந்தீ படர நவநவ வேடமிட்ட மோகினியின் தண்யங்களின் ஒளியில் மோனத்தின் கலை நம் நாட்டார் கதைகளிலிருந்து இழைகளை வசப்படுத்தி நவீன மந்திரக்கதைகளாக இயற்றுவதற்குக் கீழ்க்கண்ட கதைகள் இனியான உரைநடைக்கு முன்கண்ட தொன்மங்களின் உரை கல்லாகத்தான் தொடர்ந்து கொண்டிருக்கும். சமகால ஓட்டமும் புனைவும் தொன்மமும் மொழியோடு பித்தமாகக் கலந்து புனைவில் கரைவதற்கு இசையைக் கதையாக மாற்றிப் படைத்த சிலப்பதிகாரம் மனித பயங்கள் நிராசைகள் தாகம் எல்லாம் புனைவின் அட்டவணையில் இடம்மாற்றிக் கோக்கப்பட்ட நிராகரிக்கப்பட்ட பாத்திரங்களின் மெளனங்கள் விளிம்புகளிலிருந்து புனைவு வேகத்தில் இப்புதியப் பரிசோதனைக் கதைகளை வந்தடைகின்றன. நவீனப்புனைவின்பதம் கீறித்தான் ஆகவேண்டும் நிலம். கூட்டாகப் புதைந்துபோன நம் காளைகளோடு விவசாய நாகரித்தின் நூறு கல்தானியங்களில் எம் ஆன்மா உள்ளது. உழவு மாடுகளின் எலும்புத்துகள்களிலிருந்து உயிருருவேறி வரும் புலிக்குகை நாயனம் கதையையும் கண்ணாடியில் மிதக்கும் ரசவாதி சிறுகதையையும் சிவனை சிவை என்ற இசைப் பெண்ணாக்கிய மோன இழை சிறுகதையின் இனியான நவீனத்தொன்மமாக அதீத உணர்கதைப் பனுவலாக ஊழின் இயல்களாக இச்சிறுகதைகள் உருவேறியவை. எம்.வி.வெங்கட்ராமின் நித்ய கன்னி நாவல் அதீதப் புராணிக விலங்காக எனக்குப்படுவதால் அதன் புதிய ஸ்பரிசத்தில் இருந்து யாரும் தப்ப முடியாது. நித்ய கன்னி நவீன மரபாகப்படுவதால் திறந்த விழிகளோடு தூங்கும் ஸ்திரீகள் சிறுகதையும் புதுமைப்பித்தனின் துன்பக்கேணியின் இருட்டுக்குள் நீந்தும் மீனாக என் புனைகதைகளின் அலை வேகம் பிஜித்தீவின் கரும்புத் தோட்டத்திலே எட்டையபுர சுப்பையாவின் துயரக்காற்று நவீனப் புனைகதைக்கு மரபாகப் பாடுகவிதையும் உள்ளது என்பதையும் ஆறாம் திருமுறையில் மயிலின் அண்ணாந்த வான்மழை அகவலும் புதிய உரைநடைக்கான மெய்ப்பாட்டியலாகப் பரிணாமம் அடைந்திருக்கிறது. உடுகணப்பேழையை ஏந்தி வரும் உலகவறவியாக மணிமேகலையை அறிவன் தேயத்தாரின் வான் இயற்பியல் திடம்படு மெய்ஞானத்திலிருந்து இனியான நவீனப் புனைகதைகளுக்கான மெய்ப்பாட்டியலாகக் காண்கிறேன். உலகவறவியின் உடுகணப்பேழையிலிருந்து எடுத்த ஒரு நத்தைச் சுரியலுக்குள் விண்மீன்கள் சுற்றுவதால் நத்தைக்கூடெனும் கேலக்ஸியைச் சிறுகதையாக்கினேன். பிரமிளின் கண்ணாடியுள்ளிருந்து கவிதை, நீலம் சிறுகதை, நட்சத்திர வாசி படைப்பில் இருந்தும் பிரமிளை ஓர் அலையும் சாயையாகக் கொண்டு நட்சத்திரம் உதிர்ந்த மந்திரச் சிமிழ் சிறுகதையை எழுதினேன் புதிய புனைவுப் பரப்பில். உப்புக் கத்தியில் மறையும் சிறுத்தை கம்போடியா அரண்மனையில் காயடிக்கப்பட்ட உச்ச ஸ்தாயி இசைப்பாலகர்களின் கொம்புக் குழல்களின் இசையில் இருந்து துவங்கி கூவாகத்தில் அரவாண் கடபலியில் குருஷேத்திர தேர் சக்கரத்தில் கண்ணாடிப் பாம்புக் கைவளையல்களை உடைத்து அழுகளத்தில் குருதியும் கண்ணாடித் துண்டுகளும் புனைவோடு கலக்கும் திரு நங்கைகளை புராதனக் கதைப்புனைவை விலங்குக் கதைகளின் வெவ்வேறு உருக்களாக இடம்மாற்றிப் புனைவு உடல் மேல் தைத்திருக்கிறேன். மரணமுகமுடி அணிந்த வண்ணத்துப் பூச்சியை மஞ்சள் அலி கதாபாத்திரத்தின் மேல் புதைத்துப் பூமியின் நிறங்களாக புனை கதையை உறுமாற்றி திருநங்கையரின் ஒற்றை நிறத்தைப் பல்லுயிராய்ப் புனைந்திருக்கிறேன். 48 கோடி வார்த்தைகளின் மரணம் நவீன இலக்கியச் சூழலின் மீதான விமர்சனமாகக் குறுக்கு வெட்டுத்தோற்றம் கனவுப் பாம்பாக மாறியிருக்கிறது. நகுலன் இறந்துவிட்ட பின்னும் ஒலிநாடா ஓடிக்கொண்டிருக்கிறது சிறுகதை நகுலன் கல்குதிரை சிறப்பிதழ் நிகழ்ந்த காலத்தில் நகுலன் வீட்டில் வைத்து கவுடியார் கிழக்கில் கால்ஃப்லிங்ஸ் வியூவில் உள்ள விளையாட்டு மைதானத்திலும் அன்றைய கேரளாவின் வேலையில்லா பட்டதாரிகள் நடத்தும் கள்ளுக்கடை மேஜையிலும் காலையில் இறக்கும் மதுரக்கள்ளு வர சில மணிநேரம் தாமதமானதில் பெட்டிக்கடையில் வாங்கிய தாளில் சில பக்கங்கள் நான் சொல்லச் சொல்ல ஜாங்கோ சரவணன் என்ற மதுரை ஓவியனால் நான்கு நாட்களில் எழுதப்பட்டது. நகுலன் இறந்துவிட்ட பின்னும் ஒலி நாடா ஓடிக்கொண்டிருக்கும் இக்கதையை நவீனச்சிறுகதைச் சூழல் பற்றிக்கொண்டிருக்கிறது இன்றும். பொம்மைகள் உடைபடும் நகரம் சிறுகதை அமெரிக்க யுத்த விமாங்கள் 1001 அரேபிய இரவுகளின் கதைத் தொன்ம நகரமான பாக்தாத்தைத் தாக்கியபோது எழுதப்பட்ட சிறுகதை. நீல நிறக் குதிரைகள் வட இந்தியாவில் திரிந்தபோது இரும்புப் புகை மண்டும் ரூர்கேலா நகரத்தின் அழுக்கு லாட்ஜ் அறையில் வைத்து தனிமையான துயர் வீசிய இரவில் எழுதிய கதை. சபிக்கப்பட்ட அணில் சிறுகதை அன்றைய சென்னை வாழ்வின் தங்குவதற்கு அறைஅறையாய் இரவில் தலை சாய்க்க முடியாத கலைஞனின் துயர் தாங்கி அலைந்தபோது எழுதிய சிறுகதை. ஒவ்வொரு கதைக்குப் பின்னும் பல்வேறு கதை இரவுகள் அரேபிய விளக்குகளோடு ஸிரசாத்தும் துன்னிய சாத்தும் மரணத்தைத் தள்ளிப்போடும் புதிர்க் கதைகளைச் சொல்லி இருளில் மறைகிறார்கள். உங்கள் எழுத்து முறையைத் தானியங்கி எழுத்துமுறை எனக் கூறப்படுவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? தானியங்கி எழுத்துமுறையில் அறிவியல் புனைவை நிகழ்த்த இயலுமா? தானியங்கி எழுத்து முறை என் சிறுகதைகளில் சிலவேளை தோன்றி வரைந்து மறைகிறது. என் கதைகள் சிலவற்றிற்குக் கனவு எடிட்டராக அமையும்போது தானியங்கியும் கனவில் தோன்றி மறைகிறான். அவனை நான் பார்த்ததில்லை. எழுதிக்கொண்டிருக்கும் காகிதத்திலிருந்து தலை நிமிரும்போது என் உருவம் சிறிது கணம் எழுதும் கணம் மறைந்து விரல்களுக்கு இடையில் ரேடியம் நிப் மையோட்டத்தில் எழுதிக்கொண்டிருக்கிறது. தானியங்கி என்பவன் அரூபமாக வந்து எழுத்தாளனின் சுயத்தை மறைவுமை பூசி அழித்துவிடுகிறான். அவ்வளவுதான். சங்கரதாஸ் சுவாமிகளுக்குப் பின் உங்கள் தாத்தா மதுரகவி பாஸ்கரதாஸும் பாய்ஸ் கம்பெனி துவங்கி 50 ஆண்டுகள் இயங்கி இருக்கிறார். தாத்தாவிடம் பெற்றதிலிருந்து உங்கள் சிறுகதைகளுக்குள் நாடகத்தின் அடிப்படை இழைகள் தொடர்கின்றனவா? மதுரை என்பது பெரிய நாடக நிலவெளியாக விரிவுகொண்டிருக்கும் நாடகத்திற்கான கபாடபுர வாசிகளாகத்தான் நாமும் இருக்கிறோம். ஒரு நொடி அபிநயத்தின் சோகம் மறைந்துபோன நடிகை கமலவேணி, சிவபாக்கியம் கும்பகோணம் பாலாமணி எக்ஸ்பிரஸ் ரயிலில் நாம் எல்லோரும்தான் நாடக நடிகைகளோடும் விதூசகர்களோடும் பயணித்துக் கொண்டிருக்கிறோம். தேரோட்டி மகன் நாடகத்தை எழுதியவர் மணிக்கொடி எழுத்தாளர் பி.எஸ்.ராமையா. அக்காலத்தின் பிரபல நாடக நடிகரான எஸ்.வி.சகஸ்ரநாமம் நடத்திவந்த சேவாஸ்டேஜ் நாடகக்குழுவிற்காக பி.எஸ்.ராமையா எழுதிய பல நாடகங்களில் ஒன்றுதான் தேரோட்டி மகன். சேவாஸ்டேஜ் நாடகக்குழுவினரால் மிகவும் வெற்றிகரமாக மேடையேற்றப்பட்ட தேரோட்டி மகன் நாடகத்தில் சகாதேவனாகச் சிறிய பாத்திரத்தில் நடித்தவர் கவிஞர் எஸ்.வைத்தீஸ்வரன். தேரோட்டிமகன் நாடகத்தைக் கலையரசு சொர்ணலிங்கம் இலங்கையில் மேடையேற்றியபொழுது, அவர் இந்த நாடகத்தில் வெவ்வேறு பாத்திரங்களில் மாறிமாறி நடித்ததாக அறிகிறோம். நானும் கோவில்பட்டி எழுத்தாளர்களும் தேரோட்டி மகன் நாடகத்தில் நடித்தோம். மதுரையில் என்னுடன் நடித்த சிறுகதை எழுத்தாளர்கள் ச.தமிழ்செல்வன், உதயசங்கர், மூ. அப்பணசாமி, திடவை பொன்னுச்சாமி. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தில் இணைந்திருந்த காலத்தில் நான் சிருஷ்டிக் கலைக்குழுவில் நடிகனாகவும் இருந்தேன். தேவதச்சன் எழுதிய தலைவரின் மரணம் நாடகத்திலும் ஆண்டன் செகாவின் பச்சோந்தி நாடகத்திலும் நடித்தேன். மாயாண்டிக் கொத்தனின் ரஸமட்டம் என் சிறுகதையை நாடகமாக்கி அதில் மாயாண்டிக் கொத்தனாக மாறி மெட்ராஸ் மீது ரஸமட்டம் வைத்துப் பார்த்து ஏழாவது மாடிப்பில்லரிலிருந்து வாஸ்து சரியில்லையென்று அழிவு வரப்போகிறது என்று ரஸமட்டம் பேசுகிறது. இங்கு நான் சொல்ல வந்தது எஸ்.வி.சகஸ்ரநாமம் அவர்களிடம் 20 நாட்கள் நாடகப் பயிற்சி பெற்று மதுரை செளராஷ்ட்ரா பள்ளி மைதானத்தில் அரங்கேற்றினோம். அன்று இரவில் வந்த புதுமைப்பித்தனின் சாயல் கொண்ட ஒப்பனைக்காரன் தாளகபாஸணப் பெட்டியைத் திறந்து இருட்டுக் கண்ணாடியில் எங்களுக்குப் புராண வேடமிட்ட அரிதாரம் நாற பல வேஷங்களில் யார்யாரோ வந்து கொண்டிருந்தார்கள் மதுரைக்கு. பட்டினியும் வறுமையும் பின்துறத்த மவுண்ட் ரோட்டில் புதுமைப்பித்தன் மதுரைத் தெருவில் ஒப்பனைகள் களைந்தெறிந்த ஜி. நாகராஜன் நிரந்தரத் தற்கொலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆத்மாநாம் இந்த விதிகளுக்கு அப்பால் எழுதப்படாத சரித்திரத்தில் அலைந்து கொண்டிருக்கிறான் ஒப்பனைக்காரன் அந்த இருண்ட ஒப்பனைக் கூடத்தில் எங்களுக்கு வேடமிட்டுக்கொண்டிருந்த ஒப்பனைக்காரனைச் சிறுமலராக்கி அந்த மலரை நடிகையாக்கி நடிகையைக் கண்ணாடியாக்கி மதுரைக்கு வந்த ஒப்பனைக்காரன் சிறுகதையை எழுதினேன். ஸ்திரீபார்ட்களின் சோக இழையில் பெயர் பெற்ற நடிகர்களும் நடிகைகளும் மறைந்துபோன சுண்ணாம்புக்காரத் தெருவும் கிளாஸ்க்காரச் சந்தும் பனை ஓலை சந்துகளும் நாடக ஏடுகளாக மறைந்திருக்கின்றன. நாடக உடலாக உள்ள வள்ளிதிருமணம் நாடகத்தில் விடியவிடிய வள்ளிக்கும் நாரதருக்கும் நடக்கும் உரையாடல்களும் நடிப்பில் சேர்ந்துகொண்ட ஆலமரப் பச்சிகளும் நாடக ஏடுகளாகிவிடுகிறார்கள். மீனலோச்சனி பாலபாஸ்கர சபா தாத்தா உருவாக்கியது. தமிழகம் என்ற மூன்றுமாடி வீட்டை 1ஆம் நம்பர் வாணியர் சந்தில் தாத்தா மதுரையில் கட்டியதும் இரண்டு மாடிகளில் பாய்ஸ் கம்பெனி நடந்தது. எம்.எஸ். என்ற குஞ்சம்மாளுக்கு வாய்ப்பாட்டு சொல்லிக்கொடுத்தவரும் எம் தாத்தாதான். இசை அறிஞர் வீ.பா.கா. சுந்தரம் அவர்களுக்கு இசை இலக்கணம் கற்பித்ததும் தாத்தாதான். எல்லோரும் மதுரைக் கடவில்தான் மறைந்துள்ளார்கள். நடிப்பின் ஒவ்வொரு நொடிப்பொழுதும் உடனே மறைந்துதான் விடுகிறது. அந்தக் கலையின் நொடியில் மறைந்திருக்கும் நடிகைகளின் புகையடைந்த கருப்பு வெள்ளை புகை ஓவியங்கள் அழுக்கடைந்த காரை வீடுகளில் இருக்கக் கூடும். கைலாஷ் ஸ்டுடியோ பழைய கேமராக்காரர்கள் காத்திருந்து சேகரித்த அபிநயத்தின் எத்தனை எத்தனை நொடிகள் பார்வையாளர்களின் மறதியில் விடப்பட்ட ஆழ்ந்த சோகமாய்க் காணாமலே போய்விட்ட நாடகக்காரர்கள், மக்களின் தினசரி வாழ்வில் அவர்களை மறந்துபோய் விடுகிறார்கள். நாடகக் கலைஞர்களின் துக்கம்தான் ஊர்ஊராய்ப் புலம்பி நகரும் வையை நதியாகத் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. மணல்மகுடி நாடகநிலம் தாத்தாவின் தொன்மத்தோடும் இசைநாடக மூதாய் சங்கரதாஸ் என்ற கலையோகியின் அதிகாரமற்ற எளிமையின் தவத்தைக்கொண்ட புதிய தலைமுறை 23 வருடங்களாய் சலனமடைந்துகொண்டுதான் இருக்கிறார்கள் காலவெளியில் எனவே. அமெரிக்கா வாழ் தமிழர்களின் பண்பாட்டு அமைப்பினரால் புதுமைப்பித்தன் நினைவாகக் கலை இலக்கியத்தில் சிறப்பாகப் பங்காற்றுபவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் வழங்கப்படும் விளக்கு விருது 2013இல் எழுத்தாளர் கோணங்கிக்கு வழங்கப்பட்டது. அந்நாளில் நாடகக்காரர்கள், கவிஞர்கள், புனைகதை எழுத்தாளர்களைக் கொண்டாடும் கொக்கரை ஒலிச்சடங்கினை மணல்மகுடி நாடக நிலம் கலைஞர்கள் நிகழ்த்தியபோது, நீட்சி வெளியீடாக எழுத்தாளர் பாலைநிலவனின் நகுலனின் மஞ்சள் குப்பிகளை ஏலமிடும் தணிக்கையாளன் வந்துவிட்டபின் ஏன் செக்காவின் ஆறாவது வார்டாக மாறிவிடுகிறது சூழல்? என்கிற 60 பக்க நேர்காணல் புத்தகம் வெளியானது. அதிலிருந்து சில வரிகள். நகுலனின் சூழல் நாற்காலி தன்னந்தனிமையில் மஞ்சள்நிறப் பூனைகள் வட்டமிட, ஆடிக்கொண்டிருக்க பார்த்துக்கொண்டிருக்கிறான் கோணங்கி. ஆண்டன் செகாவின் பழைய புராதன கோட் அணிந்த கோணங்கி அனந்த புரியில் பிஜாய்ஸ் பிராந்திக்குப்பியுடன் ஆட்டோவில் ஏறி அமருகிறான். அதே நகுலன் பயணித்த கவுடியாரில் கிழக்கில் மழைக்கால சாயங்காலம். காகங்களின் பேரவலமான கூர்தீட்டும் அரவம். நகுலன் ஊதியணைக்காமல் சாம்பலின் சுமையுடன் கரைந்துகொண்டிருக்கும் பனாமா பிளைன் சிகரெட்டை சுசீலாவை நினைத்தபடி கோணங்கி இழையவிடுகிறான். சாயைகளின் சலனங்கள் மனநிழலில் பதிய தனது வாழ்வின் வலி மிகும் கடலை பிளேடால் கீறி தமிழ் உணரும் குருதியில் எழுத்துகளை கோர்க்கிறான். கோணங்கியின் பக்கத்தில் அமர்ந்திருக்கும் நகுலனின் மடியில் மஞ்சள் பூனையின் தூக்கம். தினகரன் கொலையுண்ட தினத்தில் நீ எங்கிருந்தாய் என்று கேட்கும் அவரிடம், விசாரத்தில் மூழ்கிய நகுலனின் வீட்டைப் பார்க்கிறான். தினகரனின் சாயை இருவருக்கு இடையில் கடந்து கொண்டிருக்கிறது. இருக்கத்தானே வந்தான் தினகரன், பின் ஏன் அப்படி என நகுலன் வினவ சுவரில் சாய்ந்து அனாதையான தனிமையில் புகைத்துக்கொண்டிருக்கிறான் கோணங்கி. மௌனமே பேருணர்வாய்க் கசிய யாருமற்ற தனிமையில் சுழல் நாற்காலி ஆடிக்கொண்டிருக்கிறது கால காலமாய் மஞ்சள் பூனைகளுக்காக. பெரும் கூட்டமாய் மனிதர்கள் புனைவான நகரத்தில் போலியான சாயைகளுக்கு நடுவே சாலையில் சீறிவரும் ஒரு ஆட்டோவை நிறுத்தி நகுலனும் கோணங்கியும் ஏறி அமர்ந்ததும் மழை விடாமல் பெய்யத் தொடங்குகிறது. பின் ஆட்டோ அநாமதேயத்தில் மறைந்துவிட்டது. புனைவுக்கும் மிகைபுனைவுக்கும் இடையில் ஊடாடும் மொழிக் கட்டமைப்பு எத்தகைய தன்மைகள் உடையவை? புனைவற்றவன் தூங்குவதில்லை. ஒவ்வோர் ஊருமே பனியில் துயிலும்போது புனைவைப் பாடும் இராப்பூச்சியின் கோடு காலை கண்ட பின்னும் மறைவதில்லை. உலகிலேயே அழகான வாலைக் கொண்ட மிருகம் புனைவுதான். வாசக நரி கண் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தில் ஏமாற்றுக்களும் வறண்ட நிலங்களும் முள்ளுடைக் காடும் சாபங்களும் உள்ள பக்கங்கள் செம்பழுப்புநிற அடிக்கோடிழுத்து உதிராமல் தொடரும் புனைவின் அவதானத் தெளிவுபட்டுப் புனைவே சால்வையாக நெய்து முழு இரவும் துயில்கிறேன். புனைவற்றவன் தூங்குவதில்லை. ஒவ்வோர் ஊருமே பனியில் துயிலும்போது புனைவைப் பாடும் இராப்பூச்சியின் கோடு காலை கண்ட பின்னும் மறைவதில்லை. உலகிலேயே அழகான வாலைக் கொண்ட மிருகம் புனைவுதான். அது நரிதான் என்பதில் இறந்துபோன நரிக்கும் கதை இருந்தது. சோம்பேறிக் கரடி ஏமாற்றத்தைப் பெரிதாக அங்கலாய்க்காது. சிறிய வாலைக் கடவுள் கொடுத்தாலும். கடவுள் படைத்ததில் வண்டிக் குதிரையின் வாலைவிட அழகான முதல் சிருஷ்டி நரிவால் என்பதை எந்தக் குழந்தையும் மறக்கவில்லை. நரிவால் தொட்டு எழுதிய நாவலைக் குறைபாடு கண்டது குழந்தையின் கண்களோ மறுபடி திராட்சையுள் சென்று சுவையேறிப்போன என் மண் நுரையீரலில் இசையும் புனைவும் ஒன்றுகலந்து புனைவுக்கும் மிகைபுனைவுக்கும் இடையில் மொழி ஊடாடுகிறது. உங்கள் பார்வையில் தமிழில் வெளியான சிறந்த அறிவியல் புனைவுகள் பற்றிச் சொல்ல முடியுமா? மாய யதார்த்தவாதமும் பின்நவீனத்துவக் கதைசொல்லல் பாணியும் தமிழில் வழக்கொழிந்துவிட்டன எனக் கருதலாமா? தமிழ்ச்சிறுகதை ஒரு நூற்றாண்டைக் கடந்து ஈராண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் குமார் அம்பாயிரத்தின் ஈட்டி தொகுப்பையும், அசதாவின் இசைக்காத மீனின் அக்கார்டியன் என்ற சிறுகதையையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். பாலசுப்ரமணியன் பொன்ராஜின் துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதைத் தொகுப்பு, குணா கந்தசாமியின் சமீபத்தில் வெளிவந்த கற்றாழைப்பச்சை, சித்ரனின் கனாத்திறமுரைத்த காதைகள் தொகுப்பு, சுனில் கிருஷ்ணின் அம்புப்படுக்கை தொகுப்பிலுள்ள பேசும் பூனை, குருதிச்சோறு ஆகிய இரு கதைகள், யதார்த்தனின் மெடூசாவின் முன்நிறுத்தப்பட்ட காலம், கறுத்தடையானின் ஆதாளி, பாட்டக்குளம் துர்க்கையாண்டியின் பாம்புவால்பட்ட கதை, நரனின் கேசம், தூயனின் இருமுனை ஆகிய சிறுகதைத் தொகுப்புகளில் இருந்து சில கதைகளைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அசதாவின் வார்த்தைப்பாடு தொகுப்பிலுள்ள என் பெயர் டாம் மோர்வெல் என்ற கதை நிகழ்காலச் சலனத்துத் தற்கொலை செய்துகொள்ளும் கடைசி மனிதனைக் குறித்தது. இயற்கையின் உயிர்ச்சுவடுகள் ஏதுமின்றி வெற்றுவெளியில் தனியாக நிற்பவனின் கதையை மாய யதார்த்தப் புனைவாக்கியிருக்கிறார் அசதா. வள்ளி ஒயின்ஸ் சிறுகதை காலிகுப்பிகளாக உலவும் உதிரிகளைப் பற்றிய மஞ்சள் திரவ மயக்கமுறும் மாயச்சிறுகதை. ஈட்டி தொகுப்பிலுள்ள பனம்பூழ் ஏந்திய தனிப்பாடல் பழங்கனவின் கிளையொன்று குறுக்கிட நனவை எதிர்காலக் கனவாக மாற்றியிருந்தது. எங்கோ அடித்துச்செல்லும் வெள்ளி மழையைக் காண்கிறோம். நஷ்ட ஈடாக வந்த வீனஸின் மெய்க்கால்கள் இயலாமையின் துக்கமும், கண்ணீரும் இவ்வுலகின் ஒன்றையும் மாற்றாது என்றாலும் அழுதபடி வீனஸோடு பொருத்தப்பட்ட குதிரைக்கால்களை வெட்டி அகற்றிவிட்டு அதன் புராதனக் கால்களைப் பொருத்தி வீனஸை விடுவிக்க யத்தனிக்கிறது இச்சிறுகதை. ஜீ.முருகனின் தேர்ந்தெடுத்த கதைகளின் தொகுப்பான காண்டாமிருகம், ஜே.பி.சாணக்கியாவின் ஆண்களின் படித்துறை, கல்குதிரையில் வந்த முதல்த்தனிமை கன்னிச்சோடை விழுந்த மைய்யலின் மாய உருக்கம் கதையின் எலும்பையும் கரைக்கிறது. லக்ஷ்மி சரவணக்குமார் எழுதிய நீலநதி சிறுகதையும் கல்மண்டபம் சிறுகதையும் கல்குதிரை வேனிற்காலஇதழிலும் பனிக்கால இதழிலும் பிரசுரமாகியுள்ளன. பதினாறு ஜன்னல்கள் இருந்த தேவதாசி ராஜம்மாள் வீட்டில் கணிகையர் ஐவர் மட்டுமே எஞ்சியிருந்தனர். கடந்த வாழ்வின் களிம்பேறிய நினைவுகளால் கசந்த வீடு சலிப்பின் ஆகக் கடைசியான கால கட்டத்தில் உழுதுண்போர் உழுவித்துண்போர் எனும் பிளவில் காவேரியின் நிழல் படிந்த சிறுகதை. மிராசுகளின் கோரவேர்களை அறிந்து உணர்த்திச் செல்லும் சிறுகதை. பர்மாவுக்குப் போன காலத்தின் தூரப்புள்ளிகள் இசையின் வழி இணைந்து விடுகிறது. கல்மண்டபம் சிறுகதை வறட்சியின் ரேகைகள் அழுத்தமான வேர்களெனப் படர்ந்து கிடக்கும் ஊரின் கதை. பிரேதங்கள் ருசிக்குப்பழகிய நாவுகளில் எப்போதும் இருக்கும் சதையின் வாசனை முன்னோர்களின் கனவுகளைச் செரித்தபடி களவுக் குறி சொல்லும் ஊரின் கதை. குறி கேட்காமல் பூனை வேட்டைக்குக் கிளம்பிய அமாவாசை இரவு விளக்கு வைத்துக் களவுத் துரட்டியுடன் கிளம்பிய பதினாறு பேர் இருளில் நிழல் தெரியாமல் மறைந்துள்ளனர். இக்கதை புனைவும் குருதியும் நஞ்சு தோய்த்த எரியும் கம்பியில் சுட்ட வடுவின் எச்சங்களால் ஆன கதை. வலுத்த சர்ப்பங்கள் கல்மண்டபம் கதையைக் குடிக்கும் இருட்டு புனைவுப் பாம்பாக மாறியுள்ளது. கல்குதிரை 26இல் வந்த அனோஜன் பாலகிருஷ்ணனின் வாசனை சிறுகதை பிறழ்வுற்ற மைய்யலிழப்பின் பால்விதியை வாசனை வழியாகக் கனவுப்புனைவாக்கியுள்ளது. ஜெயந்தன், மதன் இருவருக்கும் இடையேயான உப்பு வாசனை கதைக்குள் வந்துசெல்கிறது. கண்ணாடியில் பார்த்த கடற்கரையும் அதன் கிளைகளை மறைக்கும் மரங்களும் தென்பட்டன. ஜெயந்தனின் ஷேர்ட்லிருந்து வரும் வாசனை அப்பாவின் வாசனை. ஹரி, ஜெயந்தன் இருவர் மீது இருந்துவரும் வாசனையின் வித்தியாசங்கள். கதையின் கடைசியில் வியர்வையில் தோய்ந்த மேல்சட்டையில் கசிந்த அந்த வாசனையை நுகர ஆழமாகக் கசிந்து தகிக்கிறது. அது மறைந்த அப்பாவின் வாசனைக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் இருந்தது. சிவப்பு நிறச் சீலையில் நீல நிறமான நீண்ட கைப்பை தோள் மூட்டில் இருந்து வழிந்து தொங்கிய என் பிம்பத்தை அது காட்டியது. ஏதோவொன்றை வேண்ட வேகமாகக் கீழிறங்கிச் செல்லத் தொடங்கினேன். அப்பாவின் வாசனை மறுபடியும் என் நினைவில் வந்துகொண்டிருந்தது. பெண்ணியல்புகளின் சாயைகளைக் கொண்ட ஒரு அகவெளிப்பரப்பாக நீள்கிறது கதையின் உட்பரப்பின் ஒரு பகுதியில். கதை மையமிழந்து பன்மை லவணக்கற்களாகப் பிரிந்து கதையின் ஊடாட்ட ஒளிகளை நிலைக்கண்ணாடியாக உருமாற்றுகிறது. கதை தற்கணத்தில் உவர் கரிக்கும் வெறுப்பின் ஆழத்தையும் இயல்புகளாகக் கொண்டுள்ளது. யாக்கை உவர்க்கும் கணக்கியலை மெலிதாக்கி புனைவுகொள்ள, கதையின் லயம் நண்பர்கள் சந்தித்துக்கொண்ட சந்தர்ப்பங்கள் ஒரு கணிதவியலாய் உருமாறி ஒரு வாசனையால் கனவுப்புனைவைத் தக்கவைத்துக்கொள்கிறது. லவணத்தின் இயற்கை மைய்யலில் குணரூபமாக இருப்பதால் அப்பா கடைசி வரை அவள் காதலித்தாளா என்று கேட்கவுமில்லை, தான் காதலித்ததாகச் சொல்லவுமில்லை. அதனை எனக்கு அம்மா சொல்லும்போது கண்கள் அகலமாக விரியக் கேட்டுக்கொண்டிருந்தேன். அப்பா கடைசிவரை தன் காதலை என்னிடம் சொன்னதுமில்லை. உப்பின் அரூபவெளி மைய்யலின் தொடரியக்கமாகக் கதையெங்கும் பரவியிருக்கிறது. உப்பே லய அடுக்கில் கரைந்து மைமோகத்தில் கதையாகிறது. ஷோபா சக்தியின் கண்டிவீரன், எம்ஜிஆர் கொலைவழக்கு ஆகிய இரு தொகுப்புகளையும் புனைவுப் பாம்பின் குறுக்குவெட்டுத் தோற்றமாக அளந்து சென்றால்தான் ஒருவன் வேடவாசகனாக மாற முடியும். திசேராவின் வெள்ளைத் தோல் வீரர்கள் தொகுப்பும் கல்குதிரையில் வந்த வாய்டர்கால் சிறுகதையும், கல்குதிரையின் இதழ்களில் வெளிவந்த ராகவனின் உதிரகணம், மீ, மரணநவை ஆகிய சிறுகதைகளையும் இன்றைய தமிழ்ச் சிறுகதைகளின் ஊற்றிலிருந்து இருள்பரப்பும் துயர விளக்கைச் சுற்றிப் புனைவின் இறக்கைகள் நவீனமாகப் பொருந்திவிடுகின்றன. பிரதியின் மடிப்பு சமகால இருப்பில் கதைக்காரர்கள் இருப்பு பெயர்ந்தவர்கள் சூட்சம உடல் கதாபாத்திரங்களாக இருட்டைப் பூசி ஒளிபெறும் தனிமைவளையங்களில் தனித்திருக்கப்பட்டவர்களின் சிறுவெளிச்சமாகச் சிறுகதைகள் துலக்கமான நவீனப் புனைவுருவங்களைப் பெற்றுவிடுகின்றன. பா வெங்கடேசனின் ராஜன் மகள் தொகுப்பில் உள்ள நீலவிதி மலையின் குரல் தனிமை ஆகிய இரு நெடுங்கதைகளையும், லக் ஷ்மி மணிவண்ணனின் வெள்ளைப் பல்லி விவகாரம் ஆண்டன் செக்காவைச் சென்று சேர்வது எப்படி என்ற இரு சிறுகதைகளையும் நவீனப் புனைகதை உருவாக்கத்தில் பரிமாணப் பூரணத்துவம் அடைந்த கதைகளாகக் கூறலாம். பாலைநிலவனின் எம்.ஜி.ராமச்சந்திரனும் காரல் மார்க்சும் தொகுதியையும் இத்துடன் சேர்க்கலாம். பாலைநிலவனின் சிறுகதைக்குள் ஆஸ்பத்திரி லிப்ட் நின்றுபோகிறது. வெகுநேரம் அடைபட்ட இருட்டுக்குள் எழுதியவனோடு திரும்பவும் கீழிறங்குகிறார்கள். சுவெட்டர் அணிந்த பெண் கையில் கடவுளின் புஸ்தகத்தை வைத்துக்கொண்டு அமர்ந்துகொண்டிருக்கிறாள். புஸ்தகத்திற்கு மேல் ஆஸ்பத்திரியில் சேர்த்த குழந்தையின் அழுகுரல். ஆஸ்பத்திரிக்குக் குழந்தையைத் தோள் மீது போர்த்தியவாறு வருகிறாள். குழந்தைகளுடன் வந்த பெண்கள் சிலைகளென வெவ்வேறு நிலைகளில் அமர்ந்திருக்கிறார்கள். யாருடைய குழந்தைக்காகவோ வந்தவர்களும் அழுகிறார்கள். மனித உயிர்நிலையின் தெருக்கோடி வாழ்வின் ஒரு குடுவை விளக்கொளியில் இக்கதைகளெல்லாம் உப்பினால் கரைகின்றன. மைய்யலுக்கான கழுதை அலைச்சல் கதைகள் தமிழில் நிறைய உண்டு. இந்தக் கழுதை அலைச்சல் கதைகளில் இருந்து கைலாஷ் தப்பித்து வெளியே வந்துவிட்டான். கதையின் முடிவில் தனது ஆன்மாவிலிருந்து மைய்யலை இழந்து நிற்கிறான். சாலையோர விளிம்புகளில் வாழும் மரமாகிறான். இலைகளின் ஒலிகளுக்குள் வாழ்கிறான். பாலைநிலவனின் இம்மூன்று கதைகளும் மாயத்தையும் யதார்த்தத்தையும் பிரிக்காமல் வைத்துள்ளன. சென்ற கல்குதிரை 30இல் வந்த 9 சிறுகதைகளில் யதார்த்தச் சட்டகத்தை விட்டு விலகிய கதைகள் பலவும் புனைவுப்பரப்பை எட்டியுள்ளன. அசோக் ராம்ராஜின் நெற்கட்டாஞ்செவலின் ஈசல், வே.நி.சூர்யாவின் கபாலம் ஒரு மலர்மொட்டு ஆகியவற்றைக் குறிப்பிடலாம். யதார்த்தத்தை முற்றிலும் நிராகரிக்கும் கதையாவதற்கு ரயிலை வளர்ப்பு பிராணியென்ற முதல்வரியாகத் துவங்குகிறது கதை. டெலிபோன் டையரியின் பக்கங்களை வயோதிகத்தையும் இளமையையும் ஓய்வின்றி புரட்டுவதில் இருவருக்கும் ஒரேதலையாகிவிடுகிறது. விண்ணிலிருந்து கீழ்பாயும் ஏணியில் மேலேறிக்கொண்டிருக்கிறார்கள். ஆங்காங்கே எலும்புகள் துருத்திக்கொண்டு தெரிந்தன. கீழேயிருந்து உலோகக் காகிதங்களை வாங்கி கூரையாகப் பரப்புகிறார்கள் எண்களிடப்பட்ட வதையுருவோர். இது மரணவேளையாகயிருந்தது. அந்த ஏணியில் நின்றபடி உரையாடத் தொடங்கினான். ஏன் குறிப்பிட்ட மக்களுக்கு மட்டும் இன்னலுக்குரிய காலத்தில் பிறக்கவும் வாழவும் நேரிடுகிறது? யாக்கோபு கனவில் கண்ட விண்ணிற்கும் மண்ணிற்குமான ஏணியில் நின்றுகொண்டிருக்கிறான் அந்நியமான அவன். இந்த ஏணியில்தான் தேவதூதர்கள் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தார்கள். வானத்தின் நுனி வரை ஏணி செல்கிறது. வானத்துக் கதவில் ஒரு பிரம்மாண்ட பூட்டு தென்படுகிறது. மரணத்தின் சாவி எதனிடம் இருக்கிறது. யதார்த்தம் குலைந்த ஏணி கரையானும் மூடுபாலம் போட்டவாறே உயரே சென்று மேலேறும் ஆட்டத்தைக் கலைத்துவிடுகின்றன. ஆனால் சிலந்தி ஏணியை நெய்தவாறு மேலேயேறி ஏணியை நெய்தபடிச் சென்று பூட்டின் துவாரத்தில் தொங்குகிறது. கரையானால் நெய்யும் சிலந்தியைக் கொல்ல முடிவதில்லை. சிலந்தியின் கபாலத்தில் ஒரு மலர் மொட்டு அது சிலந்தியை நெய்துகொண்டிருக்கிறது. மரணத்தின் பூட்டு வானத்தில் தொங்குகிறது. அதன் துவாரத்தில் சிலந்தி நெய்கிறது முடிவற்ற ஏணியை. அதில் மரணத்தின் ஊடுநூலென சாவு ஊர்ந்து செல்கிறது. வதைமுகாமில் கேட்கும் ஒலிகளால் அந்த நூல் இருட்டாகி நகர்கிறது. ஏணியைச் சுற்றி விஷப்புகை ஊட்டும் வதைமுகாமில் எல்லோரும் சீருடை அணிந்தவர்கள். ஏணிக்குக் கீழே கிடந்த சடலம் பார்த்துக்கொண்டிருந்தது. வானத்தில் அங்கே ஒரு கதவு திறந்திருக்கிறது. முகாமுக்குள் வந்த பூச்சி ரயிலில் வதைமுகாமில் இருந்த இறந்த அனைவரும் அமர்ந்திருந்தனர். சிலந்தியின் முடிவற்ற இருட்டு நூலேணியை நோக்கிப் பூச்சி ரயில் ஊர்ந்து மேலேயேறிக் கொண்டிருந்தது. இந்தக் கதையின் ஏணி கீழிறங்குவதும் பூச்சி ரயில் மேலேறுவதுமாகக் கடந்து கொண்டிருப்பதான வதைமுகாமில் நடக்கும் பரமபத விளையாட்டில் கபாலத்தில் ஒரு மலர் மொட்டைச் சுற்றிலும் அதிகாரிகளும் அடிமைசாசனம் எழுதிக்கொடுத்த பிரஜைகளும் வதைமுகாமைச் சுற்றிச் சங்கிலிப் பூட்டைத் திறப்பதற்கு மரணத்தின் சாவியைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அந்தச் சாவி கபாலத்துளையில் மரணத்தின் பாதி வாழ்வாகவும் வதைமுகாமில் அடுக்கிக் கோர்க்கும் உலோகத் தகடாகவும் அமைந்திருக்கிறது கதை. பாலசுப்ரமணியன் பொன்ராஜின் பனிமூடிய சிகரங்களும் நிலத்தடி வசிப்பிடமும். புறவயமான கதைக்கூறுகளை ரத்து செய்யாமல் சுயத்தைக் கரைத்து அசாதரணத் தளத்திற்குப் பனை மதுபான விடுதியில் வைத்தும் பிரித்தானியர் கால பங்களாவில் மூட முடியாதபடிக்கு உடைந்திருக்கும் மரக்கதவுகளை உடைய சாளரத்தின் இருளே பூனையாகத் தாவி மதுவிடுதிக்கு வருகிறது. அதுவே கதையின் இறுதியில் டென்சிங் நார்கே செர்பாவாக மாறிவிடுகிறது. எட்கர் ஆலன் போவின் அமான்டிலாடோ கதைக்குள் வரும் கல்லறைகளும் பழைய திராட்சை தைலமிடப்பட்ட நிலவறைக்குள் பதுங்கியுள்ள ஒரு போத்தல் காடியை எடுத்துத் தருவதாகச் சொல்லி தூணில் நண்பனை விலங்கிட்டு வருகிறான். இருட்டு நிலவறைக்குள் தனிமையில் விடப்பட்டவனின் அலறல் பாலாவின் கதைக்குள் வரும் பனை மதுவிடுதியிலும் கேட்கிறது. நான்கு பிரதியாக எழுதப்பட்ட இச்சிறுகதை நான்கு முறை யதார்த்தவாதம் இடறிவிழுகிறது. யவனிகா ஸ்ரீராமின் விற்பனை பிரதியின் காலாவதிக்காலம் சிறுகதையில் வரலாறும் உலோகங்களும் பிணங்களும்கூட அடுக்குகளாகப் புனைந்திருக்கின்றன. ஈயப்புகையால் தாவரங்களின் இலைகள்கூடக் கருத்த கனிமத்தகடு போலத் தோற்றமளிக்கின்றன. சூழல் சமனிலை குடைசாய்ந்ததிருப்பதைக் கோர்த்துக்கொண்டிருந்தது இச்சிறுகதை. பெரு.விஷ்ணுகுமாரின் தேநீர்க் கோப்பையில் ஆறிடாத மாதவியின் கரு சிறுகதையில் சுழிவுகளால் வரையப்பட்ட உருவங்கள் முதல் இயலில் அத்தியயிக்கும் பென்சில் கோடுகளையும் இரண்டாம் இயலில் வேறுவேறு தலைபாகைகளையும் வரைகின்றன. ஒன்று மாதவியும். மற்றொன்று கிளியோபட்ராவும். நீளமான நகங்களோடு நீண்ட வரிகள் எல்லாவற்றிற்கும் பொதுவான அசைவொன்று இருக்கிறது. அது ஒரே நேரத்தில் சேர முடிகிற மாநாய்க்கனும் தாலமியும் சந்தித்துக்கொண்டதில் எகிப்தை நோக்கியும் தமிழ்க்காப்பியத்தில் திறக்கும் நகரங்களை நோக்கியும் வேறிடம் செல்லும் அயினூற்றுவர் கூட்டத்தின் தலைவனாக மாசாத்துவனும் இருந்தான். திசை மாறிச்செல்லும் வாணிபக் கருங்கலம் ஒருவேளை நம் சமகாலத்தை எட்டிப்பார்க்கிறது. கதையில் வீழ்ந்திருக்கும் சிலம்பு கடற்சிலம்பையின் தொன்மமாகவில்லை. ஆனால் முத்தின் தொன்மையைச் சுற்றி ஆழத்தில் பதிந்திருக்கும் சொற்கள் கைதவறி விழுந்திருக்குமாயின் எதேச்சையின் கணம் எகிப்தின் யவனர்களைக் கொண்டுவந்திருக்காது. மெளத்தீகங்களைத் தரம்பிரிக்கும் தசமகணிதப் பலகையை முன்வைத்து மாசாத்துவனும் தாலமியும் உரையாடியிருந்தால் ஒவ்வொரு இயலும் யதார்த்தத்தைக் கடந்திருக்கும். இக்கதையின் வார்த்தைகளின் அடியிலுள்ள முத்தின் தொன்மையாக இருப்பவர்கள் மாசாத்துவனும் தாலமியும்தான். இவர்களின் வாணிபப் பேரத்தின் உரையாடல் பலவகை இயல்களைக் கொண்டுள்ளது. சிறுகதை வடிவத்தில் இந்த ஆறு இயல்கள் சேர்ந்தும் பிரிந்தும் உள்ளன. மேரி ஷெல்லியின் போன்ற நாவல் தமிழில் வெளிவருவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றனவா? நவீன இலக்கியத்தில் அறிவியல் புனைவுகள் முழுவீச்சில் எழுதப்படாமைக்கான காரணங்கள் என எவற்றைச் சொல்வீர்கள்? பிராங்கன்ஸ்டைன் புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த மேரி ஷெல்லியின் பிரேத மனிதனின் கண் ரெப்பையைத் திறந்து விழிகள் வண்டுகளாக அதிர்ந்து திகைத்து வைத்துப் பறக்கின்றன கதையில். ப்ராம் ஸ்டோக்கருக்கு பைரனின் தாக்கம். எட்கர் அலன் போவிற்கு அதைவிட அதிகம். கல்குதிரை 24இல் சா தேவதாஸ் மொழிபெயர்த்து வெளிவந்தது ஜாய்ஷ் கரோல் ஓட்ஸின் போ இறந்தபிறகு அல்லது கலங்கரைவிளக்கம் கதை. இந்தக் கதை வால்பிரைஸோவிற்கு வடக்கே சிலியின் பாறைமண்டிய கடற்கரையின் மேற்கிருந்து சுமார் 200 மைல் தூரத்தில் தெற்கு பசிபிக் கடலில் 33வது அட்சரேகை மற்றும் 13வது தீர்க்கரேகையில் பிலடெல்பியா சமூகத்தின் இம்சைகளும் ரிச் மாண்டில் கவிதை நெறிகுறித்து எழுதிய காகிதங்களும் கடலில் மூழ்கிக்கொண்டிருக்க, போவின் துணைக்கிருந்த நாய் மெர்க்குரி தாவித் துடித்துக்கொண்டிருக்க இம்மாபெரும்வெளிகளால் ஆகாயம் கடல் பூமி உயிரால் எழுச்சி பெற்றுள்ளன. வினா டெ மாரியிலுள்ள கலங்கரைவிளக்கத்தின் இருண்ட படிக்கட்டுகளில் ஏறி கடல்மேல் விழும் கருவிளக்கை ஒருவரே பராமரித்துவந்துள்ளார்கள். அந்த இருண்ட கலங்கரைவிளக்கத்திற்கு இன் பறவைச்சிறகுகளும் நகங்களும் கொண்ட கிரேக்க அரக்கியின் தோற்றமிருந்தது. அடுத்த கதை கல்குதிரை 27இல் வெளிவந்த தர்ஷிகா தாமோதரன் எழுதிய முள்ளி மலைக்காட்டின் மெமூனாக் குகை. கல்குதிரை 18,19,20 இல் சபரிநாதன் மொழிபெயர்த்த டொனால்ட் பார்த்தல்மேயின் தால்ஸ்தாய் மியூசியத்தில் கதை. அதே இதழில் .சுவாமிநாதன் மொழிபெயர்த்த காரல் காபெக்கின் ஆர்க்கிமிடிஸின் மரணம் , ஜெல்.எல்.சின்ஜின் யூக்லிடும் ஒரு சிறுவனும் , ஆர்த்தர் கோஸ்ட்லரின் பித்தோகரசும் உளவியலறிஞரும் போன்ற மூன்று கணிதவியல் புனைகதைகள் வெளிவந்துள்ளன. அசதா மொழிபெயர்த்த அந்தோனியோ ஜெர்ஜெனக்ஸியின் செர்வாண்டிஸைக் கைப்பற்றுதல் கதை. இந்த வகையில் இன்னும் பிற கல்குதிரையில் பிரசுரமாகியுள்ளன. மேலும் ஸ்டானிஸ்லெவ் லெம்மின் நாவலைத் தழுவியெடுக்கப்பட்ட தார்க்கோவ்ஸ்கியின் சோலாரிஸ் திரைப்படத்தைப் பலமுறை பார்த்திருக்கிறேன். ஹெச்.ஜி வெல்ஸின் கால யந்திரம் க.நா.சு மொழிபெயர்ப்பில் முன்னரே வெளிவந்துள்ளது. ஒவ்வொரு கிரகமாகக் காட்டி என் கவிதையின் படிமங்கள் எந்த நூற்றாண்டில் விழுந்துகொண்டிருப்பவை என்பதை எதிர்கால வாசகன்தான் புதிர் களைய வேண்டும் என்றார் பிரமிள். கவிதைகளையும் விஞ்ஞானத்தையும் தமிழில் தொன்மையான கலைப்படைப்பாக உருவாக்கியது பிரமிள்தான். முதல் கல்குதிரை உருவானபோது பிரமிள் என்னைக் கூட்டிச் சென்றது கோட்டூர்புரத்தில் உள்ள கோளரங்கத்திற்கு. ஒவ்வொரு கிரகமாகக் காட்டி என் கவிதையின் படிமங்கள் எந்த நூற்றாண்டில் விழுந்துகொண்டிருப்பவை என்பதை எதிர்கால வாசகன்தான் புதிர் களைய வேண்டும் என்றார். அவரோடு நடந்து சென்ற வேப்பமரச் சாலையொன்றில் நிலவின் வடக்குயரும் பிறை, தெற்குயரும் பிறை பற்றிய மெய்ஞானத்தை உலகக் கலைகளோடு இணைத்துப் பேசினார். லயம் வெளியீடாக பிரமிள் அறக்கட்டளையின் சார்பில் காலசுப்பிரமணியம் தொகுத்தவற்றில் தொகுதி 2, 6ஐ முழுமையாக வாசித்து உணர்ந்தவர்கள் பிரமிளின் கல்மண்டபத்தைப் புரிந்துகொள்ள முடியும். விண்மீன்களின் தீக்கங்குகள் காலாதீதமான சமிக்ஞைகளில் சூன்ய சம்பாஷணை நிகழ்த்திக் கொண்டிருப்பதை உணர முடியும். நட்சத்திரம் உதிர்ந்த மந்திரச் சிமிழ் என்ற எனது சிறுகதையில் நட்சத்திரவாசி என்கிற கதாபாத்திரம் பிரமிள்தான். விண்மனிதர்களை நோக்கித் திரும்புகிற பிரமிளின் உலகத்தை மேல்நோக்கிய பயணம் கவிதைத் தொகுதியிலும் உணர்ந்தேன். அவரது 2, கண்ணாடியுள்ளிருந்து போன்ற கவிதைகளைப் எழுதத் துவங்கிய காலத்திலேயே வாசித்திருக்கிறேன். அவரது கதைக் குறிப்புகளில் கல் மண்டபம், மை வளையம், குகையியல், கால வெளிக்கதை, ஒளியின் கதை, பிரபஞ்சத்தின் கதை கம்யூட்டரும் ராமானுஜனும், , , போன்ற பிரமிள் எழுதி எழுதாத ஏகப்பட்ட குறிப்புகள் விஞ்ஞானப் புனை கதைகளில் மிகுந்த ஈடுபாடும் பரந்த வாசிப்பும் உடையவர் பிரமிள். சுயமாக விஞ்ஞானப் புனைவு நாவல்களை எழுதுவதற்கு மிகுந்த விருப்பத்தோடு இருந்தார். அசரீரி என்ற சிறுகதை மட்டுமே அவரது ஆற்றலுக்குச் சிறந்த உதாரணமாகக் கிடைத்துள்ளது. வேலூர்க்கு அருகில் கீழ்வானின் அடியில் கரடிக்குடி என்கிற ஊரில் அவரது திசை நான்காய்த் திரும்பியிருக்கும் சமாதியின் சாம்பல் மரமாக விஞ்ஞானப் புனைவுலகம் அறிவியல் கலைச்சுவடிகளாகப் பதிந்துள்ளன. மேலும் சித்தர்களிடமிருந்தும், சமணர்களிடமிருந்தும், வள்ளலாரின் ஆறாவது திருமுறையிலிருந்தும் சித்த மரபை நோக்கி நாம் செல்ல வேண்டியதிருக்கும். விஞ்ஞானத்தைக் கலையாகவும் தத்துவமாகவும் உருமாற்றும் ரசவாதிகள் நமது சித்த மரபில் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். பதினெண் சித்தர்களின் பழைய ஏட்டை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். அதில் மறைந்திருக்கும் விஞ்ஞானப் புனைவுகளுக்கான தடயங்களையும் நாம் ஆழ்ந்து புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. இது நவீனப் புனைவுகளின் காலம் என்பதால் அறிவன் தேயத்தார் சிலப்பதிகாரத்தில் மாயஜாலக் கண்ணாடியோடு கற்பகத்தரு மீது ஏறிக் கிளையமர்ந்து, பூமியைச் சுற்றியிருக்கும் சக்கரவாள மலையில் நடந்தபடி உடுகணங்களை ஆராய்து கொண்டிருக்கிறார்கள். தமிழில் அறிவியல் புனைவுகள் தோன்றுவதற்கான உரையாடல்கள் இருந்துகொண்டேதான் இருக்கின்றன. நவீனப்புனைவிலக்கியத்தில் அதன் துகள்களும் ஆங்காங்கே தெரியத்தான் செய்கின்றன. அது முழு வீச்சை அடைவதற்கான நேரமிது. இனி தோன்றும் படைப்புகளுக்காக அரூ வின் வெளியில் காத்திருக்க வேண்டியதுதான். அறிவியல் புனைவு எழுத்து வகை தமிழில் அரிதாகவே தென்படுகிறது. குறிப்பிடத்தக்க அறிவியல் சிறுகதைகளோ கவிதைகளோ கல்குதிரையில் வெளிவந்துள்ளனவா? சிலவற்றைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா? தமிழில் பிரமிள், தேவதச்சன், பிரம்மராஜன், பாம்பாட்டிச் சித்தனின் இஸ்ரேலியம் தொகுப்பின் சில கவிதைகளையும் இங்கு குறிப்பிடலாம். உதாரணமாக தேவதச்சனின் முதல் தொகுதியிலுள்ள கடைசி கவிதையை குறித்து இங்கு பார்க்கலாம். தேவதச்சன் சில கவிதைகளைக் கலையின் சிந்தனைப் பரிசோதையாகக் கட்டமைத்தார். முதல் தொகுப்பின் கடைசி கவிதையில்.. உன் நிலையத்தில் ரயில் வந்தால்தான் உனக்குத் தெரியும் வருமுன்னும் போன பின்னும் கண்ணுக்குத் தெரிவதில்லை எனினும் கருத்துக்குத் தெரியாது போகுமா தன் நிலையத்துக்கு வந்து போனதை வண்ணாத்திப் பூச்சியிடம் கேள் வைரஸிடமும் கேட்டுபார் வண்ணத்துப்பூச்சியையும் வைரஸையும் வைத்து வந்துபோனதையும் பார்க்காததையும் அளவிடும் கெய்கர் கருவி தேவதச்சனிடம் அசைந்து கொண்டிருக்கிறது. தேவதச்சனும் புனைவின் எதிர்ப்புள்ளியில் பக்கம்பக்கமாய் நகர்ந்துகொண்டிருக்கிறார். சிந்தனைப் பரிசோதனை என்பதால் இதைத் தன் மனதில் கட்டமைத்தார். இயற்பியல் விதி மீறப்படவில்லை என்பது கண்கூடு. வண்ணத்துப்பூச்சியையும் வைரஸையும் வைத்து வந்துபோனதையும் பார்க்காததையும் அளவிடும் கெய்கர் கருவி தேவதச்சனிடம் அசைந்து கொண்டிருக்கிறது. அறிவியல் புனைவு எழுத்தாளர் நடைமுறை சாத்தியமற்ற எந்த ஒன்றையும் கற்பனையாக எழுத முடியும். தேவதச்சனும் புனைவின் எதிர்ப்புள்ளியில் பக்கம்பக்கமாய் நகர்ந்துகொண்டிருக்கிறார். வெளியே வந்துபோகாத ரயில் வந்துபோனதை மெய்ப்பிக்க வைரஸிடம் கேட்பது கற்பனை செய்து கவிதையை உருவாக்க இயல்கிறது. வெறும் சிந்தனைப் பரிசோதனையாளருக்கு அதில் உரிமையில்லை. கோட்பாட்டு அளவிலான பரிசோதனையே அது. பெட்டியைத் திறக்கும் முன் பூனை ஒரே நேரத்தில் இருந்து கொண்டும் இறந்தும் இருக்கும் என்பது உயிருடன் இருத்தல் இறந்துவிடுதல் என்னும் இருநிலைகளின் ஒன்றிணைப்பாக பூனையிருக்கும் என்ற குவைய இயற்பியலின் விடைப் பகுத்தறிவுடன் முரண்படுகிறது. ஆனால், கலையின் சாத்தியத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நிலைகளில் ஒன்றில் வைரஸிடமும் கேட்டுப்பார் என்கிறது தேவதச்சன் கவிதை. பாம்பாட்டிச் சித்தனின் இஸ்ரேலியம் தொகுப்பிலுள்ள ஸ்க்ரோடிங்கரின் பூனை நான்கு வழித்தடங்களோடு பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருந்த நெடுஞ்சாலையை பார்வையிட்டது பூனை கரையும் ஒவ்வொரு நொடியிலும் ஏதேனும் ஒரு தடத்தில் ஒரு வாகனம் பாய்ந்தோடுவதை பூனையின் தலை ஊசலாய் கண்காணித்தது தேவைகள் உந்த பூனை நெடுஞ்சாலையின் குறுக்கே நுழைந்தது நெடுஞ்சாலையை கடக்கும்போது பூனை உயிர் இழக்கலாம் அல்லது நெடுஞ்சாலையை கடந்தபின் பூனை உயிரோடிருக்கலாம் ஆனால் நெடுஞ்சாலையின் குறுக்கே பிரவேசிக்கும் கணத்தில் அது ஓர் உயிரற்ற உயிருள்ள பூனை. எனும் கவிதை கவிதையையும் அறிவியலையும் ஒன்றோடு ஒன்றுகலக்கிறது. சிறுகதையைப் பொறுத்தவரையில், கல்குதிரை 28இல் வந்த பாலசுப்ரமணியன் பொன்ராஜின் பிரமிடுகளை அளக்கும் தவளை எனும் சிறுகதையைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். மதியழகனின் பலூன் சிறுகதையில் புனைவின் சாத்தியங்கள் சற்று இடைவெளி கண்டிருப்பினும் அறிவியலும் வரலாறும் புனைவின் கருநிலையிலேயே நிற்கின்றன. இனியாக்கும் கதைகளுக்கு முன்னோட்டமாக அமையலாம் இக்கதை. எஸ்.ராமகிருஷ்ணன் தாவரங்களின் உரையாடல் தொகுப்பிலுள்ள புத்தரின் கார்டூன் மொழி சிறுகதையையும் குறிப்பிடவேண்டும். புதுமைபித்தனின் சிற்பியின் நரகத்தை நமக்கான ஆதிக்கையாகக் கொள்ளவேண்டும். தெறிகள் சிற்றிதழில் வந்த எஸ்.சம்பத்தின் உதிர்ந்த நட்சத்திரம் சிறுகதையைத் தமிழின் அறிவியல் புனைகதைகளுக்கு முன்மாதிரியாகக் கொள்ளலாம். கருப்பு ரயில் சிறுகதை இரண்டு பாகங்களால் ஆனது. எதார்த்த நடையில் துவங்கி குறியீட்டுப் படிம வெளிக்குள் கதை பயணிக்கும். ஒரே சிறுகதைக்குள் இப்படிச் செய்யலாம் என்ற எண்ணம் தோன்ற உந்துதலாக இருந்தது எது? இருளைக் கீச்சிய சோகமான கருப்புரயிலில் நீங்களும்தான் பயணிக்கிறீர்களா..! பால்யவனத்தில் அழைத்த ஆதிநிலா உங்களையும் தேடி வீட்டிற்குள் வருகிறது. அவள் இல்லாமல் மூடியிருந்தது ரயில்பெட்டி. ரயில்விளையாட்டுகளை எல்லாம் உள்நாட்டு அகதிகளின் நகரமான குட்டி ஜப்பானில் வைத்துக்கொள்ள வேண்டித் திரும்பினேன். அவள் வீட்டுத் தொழுவில் மாட்டு வாசனை. அவற்றின் மோனத்தில் ரொம்ப நேரமாய்க் கல்தொட்டி அருகே நின்று கரைகிறாள். இருட்டிலுள்ள சிலையாக அதே வயதில் நின்றுவிட்டவள் கருப்புரயிலில் வருகிறாள் ஒரே கதைக்குள் இன்னொரு கதையாக. கதைக்குள் கதையாக அருவமாய்த் தெருவில் நடமாடுவது கருப்புரயில் பூச்சிதான். அது எல்லோருக்கும் தெரியும். அது எதிரெதிராய்ச்செல்லும் கருப்புரயில். பள்ளிக்கூடம் விட்டு ஓடும் தெருத்தெருவாய்ச் சுவரில் கிறுக்கிய என் பென்சில் கோடுகளை இருபது வருடம் கழித்துவந்து பார்த்தேன். கோடுகள் அதிசயமாய் கருப்புரயிலில் ஓடிப்போன சிறுவர்களோடு ஓடிக்கொண்டிருந்த தெரு. சலூன் நாற்காலியில் சுழன்றபடி சிறுகதையின் நடை கனவு போலவே இருக்கும். இந்நடையை எவ்வாறு உருவாக்கினீர்கள்? சலூன் கடையில் அவளை விரும்பிய சலூன் நண்பன் சாத்தூரப்பனும் தெற்குத் தெருவில் இருந்தான், அவள் மறதியைத்தான் தேடி சாத்தூர் சலூனுக்குப் போகிறேன். தெருக்கற்களுக்குத் தெரியும் இவனையும் அவளையும் கண்டுவிட்ட நிலவு காரை வீட்டின் அருகில் இருந்தது. சலூன் கண்ணாடியின் மையலில் சாத்தூரப்பனோடு மூழ்கினேன். அமரபட்சம் நான் பிறந்ததில் என் மொழியும் தேய்பிறையில் தேய்கிறது. வடக்குயரும் பிறை சலூன் கண்ணாடியில் அவளெனத்தோன்றியது. மெளனத்தம்பு படிந்த பிறை, பிறை வளையங்களும் கனா நிலைகளும், நிலவிலிருந்து உதிர்ந்த விதை, வாத்துக்காரியின் கிளிஞ்சல் மேட்டிலிருந்து சலூன் கண்ணாடி திரும்பியது. அந்த சலூன் இருந்த சாத்தூரில் அவளோடு சாத்தூரப்பனையும் காணவில்லை. உங்கள் சிறுகதைத் தொகுப்பிற்கு சலூன் நாற்காலியில் சுழன்றபடி என்று ஏன் தலைப்பிட்டீர்கள்? சலூன் நாற்காலிக்கும் உங்களுக்குமான உறவைப் பற்றி? அப்பாவின் குகையில் இருக்கிறேன் கதைக்குக் காரணமான டவுன்ஹால் ரோடு மலேசியா சலூன்தான். சலூன் ஓவியங்களில் கண்ட துப்பாக்கி வேட்டைக்கார்களின் வேட்டைக்காடுகளில் செவ்விந்திய கௌபாய் தொப்பிகள் பறந்துவந்த குதிரைக்காரர்களையும் அகண்ட கொம்புகளுடன் மெக்சிகன் மாட்டு மந்தைகளையும் கண்டேன். கில்லெட் சவரக்கத்தி தேய்க்கிற தோல் ஓடத்தின் பளிச்சிடும் ஒளியிலிருந்து பிறந்தது சிறுகதைத்தொகுப்பின் தலைப்பு. மதினிமார்கள் கதை தொகுப்பிற்குப் பின் மெல்ல மெல்ல உங்கள் எழுத்து மேலும் அகவயமான, பூடகமான நடையை வரித்துக் கொண்டுள்ளதை வாசக உலகம் அவதானித்தாலும், அவற்றினுள் உட்புகுவது சவாலானதாகவே இன்றளவும் உள்ளது. அதிலும் உங்கள் சமீப நாவல்களிலும் கதைகளிலும் நீங்கள் கையாளும் மொழி மிகுந்த சிக்கலானது எனப் பரவலாகவே பேசப்படுகிறது. உங்கள் படைப்புகளைப் புரிந்துகொள்ள வாசகருக்கு நீங்கள் எவ்விதத்திலும் உதவுவதில்லை என்கிறார். உங்கள் எழுத்து முறை மாறிப்போனதைக் குறித்தும் உங்கள் தற்போதைய எழுத்து குறித்தும் வெளியாகும் இத்தகைய கருத்துகளைக் குறித்தும் சொல்லுங்கள். கீழ்த்திசை முறைப்படி கிழக்குத் திசையிலிருந்த வாசகர்கள் முன் கம்பளத்தை விரித்தேன். இதில் கதைக்குள் கவிதையின் வெள்ளி இழைகளை உருவி, உடனே ஓடையாகவும் சிறு அருவியாகவும் உருமாற்றி என்னை விரட்டியது வாசகன்தான். வாசகனிடம் சிறைப்பட்ட புறாவாய் நடுங்கினேன். எனது கதைகளின் ஊமையான கும்காரத்தில் மொழிகதையும் தொடர்ந்து இருப்பதாக ஊர்க்கோடாங்கி சொன்னான். கிரேக்கக் காலத்திலிருந்து தமிழில் இருந்துவரும் ராசிவட்டம் நம் ரத்த நாளங்களில் உடுகணங்களும் சுற்றிக் கொண்டிருப்பதை, நாழிகை வட்டிலுடன் காலத்தைப் பற்றிய நாலாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட கணக்குழுக்களோடு ஓயாத சர்ச்சையில் அறிவன் தேயத்தார் இருப்பதும் காலத்தை எட்டி வளர்ந்த இளங்கோவின் தியானத்தில் உருவான மண் சிலம்பைத் தொடவே நீள்கிறதென் புனைவு. பிரளயக் காலத்தில் தாடியுடன் அசுரரும் தூக்குவோலைக் கொண்டு வந்த ஷணிகத்தை ஒரு வினாடிக்கு முன்பே படைப்பில் தற்கணத்துக்குள் கொண்டு வந்த பழங்கூட்டத்தின் உரையாடல், தொங்கும் நகரத்தில், சொற்களாலான இவ்வீதிகளில் கண்தெரியாத கு.ப.ரா, தன் கதையில், பெண்மையின் தினுசையெல்லாம் மையல் மகுடியில் வாசித்தவேளை இரண்டாம் கிளிமாந்தாவை நாவலாக்கினேன். அனேகமாக மௌனியின் கதைகளில் தேவதாசிகளின் இசையை மாதவியின் கானல்வரிப்பாட்டில் வரும் மாறு என்பதை ஒரு காப்பியத்தின் அடிநாதத்தில் இடமுறைத்திரிபு நவீன நாவல், நெடுங்கவிதை, குறுநாவல், நாடகம் இவற்றுக்கும் பொருந்தி இலக்கணமாய் அமைவது மொழிகதைக்கு நான் மாறுவதற்கும், சிலப்பதிகாரத்தின் இசைமரபு கடல் அணங்கான மாதவியின் கைவரு மகரயாழுக்குள் படிவம்கொண்டிருப்பதை த நாவலுக்கும் பொருத்திவிடலாம். எனவே தொன்மம் காலவரையறைப்பட்டதல்ல. சமகாலத்தில் நடந்துகொண்டிருக்கும் தொன்மமே மாறு. முன்னால் கண்ட தொன்மங்களின் உறைகல்லாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் சமகால ஓட்டம் கலையும் இனியான நவீனத் தொன்மமும் கம்பனின் அதீத உருக்களும் ந.முத்துச்சாமியின் நீர்மையும், ஆர்.ராஜேந்திரசோழனின் இச்சை பரிணாமச்சுவடுகளிலிருந்து மொழியின் பித்தமாகக் கரைந்து எதிர்காலப்புனைவின் இம்மொழியினை அடைந்திருக்கிறேன். மாறுபட நினைப்பவன் நவீனப்புனைகதையாளன். புரட்டிப்போட நினைப்பவன் தொன்மனாகிறான். கோணல்களை உருவகிக்கிறவன்,புனைகதையின் புதிய வடிவத்திற்கு நாட்டார்மண் குரல்வளையின் ஒப்பாரியிலிருந்து நள்ளிரவில் இறங்கிவரும் தான்தோன்றி உப்போடைகளின் இறந்து உதிர்ந்த ஒரு விண்மீனின் ஒளிவருடங்களுக்காக இசையின் கணிதத்தில் மறைந்திருக்கும் கணிகையர் மரபையே தமிழின் நவீனப்புனைவிற்கு மௌனியின் பிரகாரம்வேண்டிய பேரமைதியில் மயன் மரபையும், திராவிட மரபையும் புனைவு மொழிக்கான சிற்பச்செந்நூலாகச் சித்தம் கொண்டுள்ளது நவீனப்புனைவு. கல்குதிரை உருவான கதை சொல்ல முடியுமா? இதழைத் துவங்கும் எண்ணம் தோன்றியதில் இருந்து முதல் பிரதி உங்கள் கைகளுக்குள் வரும் வரை. 1989 அக்டோபர் 30ஆம் தேதி விருத்தாச்சலம் அருகிலுள்ள பூவனூர் ரயில் நிலையத்திலிருந்து சென்னையை நோக்கிக் கிளம்பிய பகல் நேரத்துப் பாசஞ்சர் வண்டியில் சிறுகதை எழுத்தாளர் உதயசங்கர் அங்கு ஸ்டேசன் மாஸ்டராக இருந்து பச்சைக்கொடி காட்டியதில் கடைசிப் பெட்டியில் இருந்த நான் தூங்கிக்கொண்டிருந்தேன். கடைசி மூன்று ரயில் பெட்டிகளைக் கலைந்துவிட்டுச் சென்னைக்கு ரயில் போய்விட்டது. தூங்கி முழித்தபோது ரயில் திருச்சியை நோக்கி வந்துகொண்டிருந்தது. உளுந்தூர்ப் பேட்டை அவுட்டரில் ரயில் மூச்சு விட்டு நின்றபோது இறங்கி ஒரு முக்கூட்டுச் சாலைக்குப் போய்த் தற்செயலாய் வந்த சேலம் பஸ்சில் சின்னசேலம் போய்ச் சேர்ந்துவிட்டேன். அங்கிருந்து நாலுமைல் தூரத்தில் கல்லாநத்தம் என்ற ஊரில்தான் என் நண்பனான கவிஞர் சௌந்தர்ய அருள் இருந்தான். அவனோடு சிலநாள் அங்குத் திரிந்ததில் கல்வராயன் மலைக்குப் பக்கத்தில் வனம் திரியும் இருளனைச் சந்தித்தேன். இதோ கல்குதிரை பிடி வரம் என்றான். இங்கு எல்லாக் குதிரைகளுமே தமிழிலக்கியத்தில் கண்பட்டை போட்டுக்கொண்டுதான் ஓடுகின்றன. நிழல் குதிரை நிழல் மீசை என்பதுதான் உண்மை என்றான். கால ஒழுங்கை கலையின் விரல்கள் கடைபிடிக்க முடியாது என்றான். துடிப்பான தலைமுறை குதிரையின் தொழில் வேகம் வேகம் என்றான். இது கல்குதிரை சக்தி இருந்தால் உயிரூட்டி சவாரி செய். சௌந்தர்ய அருளின் பீத்தோவன் தோட்டம் நெடுங்கவிதையும் நான் எழுதிக்கொண்டு இருந்த மீண்டும் ஆண்டாளின் தெருக்களில் சிறுகதையும் முதல் இதழுக்கான படைப்புகளாக இருக்க நீண்ட நாள் கவிதை எழுதுவதில் இருந்து விலகி இருந்த தேவதச்சனின் மூன்று கவிதைகள் கிடைக்கவும் சென்னைக்கு மீண்டும் ரயில் ஏறினேன். விக்ரமாதித்தனோடு கொட்டிவாக்கத்தில் இருந்த பிரமிள் அறைக்குச் சென்றோம். முதலில் பிரமிள் கவிதை தர மறுத்துவிட்டார். ஆனால், அவரோடு இருந்த லயம் ஆசிரியர் காலசுப்ரமணியன் அன்று காலப்பிரதீப் சுப்ரமணியனாகப் பிரமிளால் பெயர்மாற்றப்பட்டிருந்தார். அவர்தான் பிரமிளின் வரலாற்றுச் சலணங்கள் கட்டுரையை அவரிடம் இருந்து வாங்கிக்கொடுத்தார். இந்த இதழ் சிறப்பாக வர பிரமிளும் விக்ரமாதித்தனும் தேவதச்சனும் இருப்பதில் கவிஞர்கள் சிற்றிதழ் துவங்குவதற்கு ஆதார ஊற்றாக இருக்கிறார்கள் என்பது தெரியும். முதல் இதழிலேயே பிரமிளின் லங்காபுரி ராஜா சிறுகதைத் தொகுப்புக்கு மூ. அப்பண சாமி விமர்சனம் எழுதினார் . 1989 நவம்பரில் முதலிதழ் தோழர். வைகறை வாணன் நடத்திவந்த ராசகிளி அச்சகத்தில் ஒருமாதக் காத்திருப்பில் முதல் இதழ் வந்தது. தஞ்சாவூர்க்காரர்கள் வைகறையும் வீ. அரசும் ஒவ்வோர் இரவிலும் அமுதமிட்டவர்கள். இவர்கள் இருவரிடமே மணிக்கொடி, சரஸ்வதி, குமாரசாமியின் வைகை இதழ் தொகுப்புகள் அருப்புக்கோட்டைக்கு அருகில் பண்ணை மூன்றடைப்புக் கிராமத்திலிருந்து வந்த யாத்ரா, சாந்தி ஏடுகள், செல்லப்பாவின் எழுத்து இதழ்கள், கசடதபற, பிரஞ்ஞை தொகை நூல் அனைத்தையும் இரவரவாய் வாசிக்க வைத்தவர்களும் இவ்விருவருமே. அன்றைய பொறியியல் கல்லூரி மாணவர்களாய் இருந்த பீட்டர், சாய்ராம், சுப்பையா பாரதி, கைலாஷ்சிவன், த. அஸ்வதரன் இவர்களின் கைகள் கோத்து இதழைக் கொண்டு வந்தனர். த. அஸ்வதரன் மட்டும் எவ்வளவோ முறை இதழ்களைக் கொண்டு வந்தவன் 2000த்திற்கு பிறகான 12 இதழ்களைக் கொணர இன்று வரை முனைப்பாய் செயல்பட்டிருக்கிறார்கள் என் சகோதரர்கள் கவிஞர் தாமரை பாரதியும் எழில் சின்னத்தம்பியும் நண்பன் பீட்டர் பிரசாத்தும். முதல் மூன்று இதழ்கள் அச்சானபோது பிரமிளும் அடிக்கடி அச்சகம் வருவார். நடந்தே திருவான்மியூர் தாண்டி கொட்டிவாக்கம் அறைக்குக் கூட்டி வந்துவிடுவார் பிரமிள். அங்கிருந்து என்னைக் கல்குதிரையை உருவாக்கிய நண்பன் த. அஸ்வதரன் குகை என்ற இடத்தில் கல்குதிரை நடத்துவதற்கு ஆதார முகவரியாக இருந்தான். தனி இதழ் ஐந்து ரூபாய் ஆண்டுச் சந்தா இருபது ரூபாய். கீழே முதல் குறுக்கு தெரு, சிவகாமிபுரம், திருவான்மியூர். அந்த அறை இப்போது இல்லை. இதழின் கடைசி இருபக்கங்களில் பதுங்கு குழியில் இருந்து என்ற கவிதையைச் சேரன் நாடோடி என்ற பெயரின் கல்குதிரைக்கு அனுப்பி இருந்தார். நான்காவது இதழ் கல்குதிரை எடுக்கும் நாட்டுப்பூக்கள் மு. சுயம்புலிங்கத்தின் கையெழுத்துப் பிரதிகளை கி. ராஜநாராயணன் இடைசெவல் வீட்டில் வைத்துக் கொடுத்த அன்றுதான் க.நா.சு. நடத்திய இலக்கிய வட்டம் முழு இதழ்களையும் கொடுத்தார். வேப்பலோடை கிராமத்தில் காளயுக்தி வருஷம் 1978 ஐப்பசி மாசம் நாட்டுப்பூக்கள் கையெழுத்துப் பிரதியாக ஒவ்வொரு மாதமும், இலக்கியச் சத்திரத்தில் இரவுவிளக்குகளில் படிக்கப்பட்டன. அந்த ஊர் விவசாயிகள் அனேகம் பேர் வாசித்து ரசித்த பக்கங்களே இவை. இன்னும் பல பக்கங்கள் அவர் மெட்ராஸுக்கு வந்து ஆயிரம் மலர்கள் என்ற இருபதுக்கு மேற்பட்ட கையெழுத்துப் பிரதிகளாக வெளியிட்டவை. கிராமத்தில் இருக்க முடியாமல் சம்சாரித்தனத்தை விட்டுவிட்டு மெட்ராஸிக்கு ரயில் ஏறியவர்தான் சுயம்புலிங்கம். நாட்டுப்பூக்கள் இந்த நேரத்தில் இதழ் வடிவில் கல்குதிரை இன் 4 வது இதழாக வெளிவந்திருப்பது எல்லாவற்றையும் சேர்த்துக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றுதான். கிராமப்புறங்களின் ஊடே வேகமாக ஓடும் இருண்ட தார் ரோட்டில் எதையும் ஜன்னல் வழியாகத்தான் பார்த்துக் கிரகிக்க வேண்டியிருக்கிறது. இங்குள்ள நாட்டார் மரபின் தான்தோன்றிக் கலைகளின் இயல்பு நிலைகள் குறைத்து மதிப்பிடப்படுகிறது. நவீனக் கலையின் புனைவுக்கு மண் நூரையீரலில் புதைந்து மூச்சுவிடும் கல் விதைகளாகவும் மொழிக்குள் மறைந்துள்ளன களையெடுக்கும் கதிரருக்கும்கதைகள். தான் தோன்றி ஓடைகளிலேயே காட்டு அணங்குகள் அரிச்சலில் தோன்றி மறைவார்கள். வட்டமாய் உருண்டு வரும் முள்லெலிகளின் நண்பகல் உறக்கம்கூடக் கதைக்கான இருட்டாய் இருக்கிறது. வேலன் வெறியாட்டின் காட்டுவாக்குகளாய்க் கதைக்குள் மறைந்திருக்கும் வள்ளி ஓடை அரூவமாய் வந்து பேனா முனையில் தொட்டுக் கொண்டிருக்கிறது. முனியேறிய கதை சொல்லிகள் காட்டில்தான் ஒளிந்திருக்கிறார்கள் கதைகளுக்குள் கிளைத்துச் செல்கிறார்கள். அங்கு ஒவ்வோர் அங்குல மண்ணிலும் கிளைவிடும் கல்லோடைகளின் முணுமுணுப்பில் புனைவின் கல்ரேகைகளை வரைகிறார்கள் மறைந்துபோன உருவிலிகள். 2000 வருஷக் கதை மரபோடு உடனே நவீனமாகிவிடுவார்கள் இந்த நீரர மகளிர். நாட்டுப்பூக்களில் தினம்தினம் உதிர்ந்து கொண்டிருக்கிறார்கள். புதுமைப்பித்தனின் காஞ்சனையின் சுவாசத்தின் புதிய ஸ்பரிசக்திலிருந்து வறண்டுவிட்ட இலக்கியச் சூழலில் புதிய விழைவுகள் ஏற்படட்டும் என்று உருவானதுதான் கல்குதிரை. 1990 ஜனவரி வரையான நான்கு இதழ்களுக்குள் கால ஓட்டத்தையும் இலக்கிய உள்ளூமைகளையும் கூறி முடித்திருக்கிறேன். மற்ற இருபத்தாறு இதழ்கள் குறித்துதானே தோன்றும் வாச்சியார்த்தங்களைச் சமயம் வாய்க்கும்போது விரித்துரைப்பேன் அவ்வளவுதான். கல்குதிரையில் வெளியாகும் படைப்புகளை எவ்வாறு தேர்வு செய்கிறீர்கள்? தேர்வு செய்யும் முறை கடந்த 25 ஆண்டுகளில் எவ்வாறு மாறி உள்ளது? அந்தந்தக் கவிஞர்களின், கதைக்காரர்களின் இயற்கை நிலையில் இருந்தே ஒவ்வொரு படைப்பையும் பெறுவதற்கான காத்திருப்புதான் தேர்வு செய்யும் முறை. எதார்த்தம் மீறிய கதைகளையும், மீடியாவுக்கு எதிரான மொழி கொண்டவர்களையும் கல்குதிரை தானே ஈர்த்துக்கொள்கிறது. வசதிப்படி கால நிர்ணயம். பனிக்கால இதழாகவோ வேனிற்கால இதழ்களாகவோ, காற்கால இதழ்களாகவோ படைப்புக்கான காலத்தைத் திறந்தவெளியாக வைத்திருக்கிறது கல்குதிரை. வெகுஜன இதழ்களுக்கு எழுதா விரதத்தைக் கல்குதிரையில் எழுதும் பலரும் கடைப்பிடித்து வருபவர்கள்தான். நடு இதழ்கள் சூழலை வளைத்துக்கொள்கின்றன இன்று. அச்சு இயந்திரத்தின் ராட்சஸ நாக்கில் பெரும்பாலான கதைக்காரர்கள் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கும் சூழல் மெல்லமெல்ல மாறி வருகிறது. ஓர் இதழ் கொண்டுவர பத்து மாதங்கள் வரை ஆகிறது. படைப்புக்காக ஓராண்டு விளைச்சலுக்காக ஒரு விவசாயியைப்போல் காத்திருப்பது சிறுபத்திரிக்கையாளரின் இயல்பாகவும் உள்ளது. காலக்கிரமம் தேவையில்லை. ஓராண்டு மழை பொய்த்துவிட்டால் விளைச்சலும் சுருங்கி முதிர்ந்த வார்த்தைகள் அடியில் உள்ள கவிதைகளைத் தானியங்களாகவும் முத்துகளாகவும் பெறுவது சிரமமாகிவிடுகிறது. அந்தந்தக் கவிஞர்களின், கதைக்காரர்களின் இயற்கை நிலையில் இருந்தே ஒவ்வொரு படைப்பையும் பெறுவதற்கான காத்திருப்புதான் தேர்வு செய்யும் முறை. ஒரு சிறுகதையைப் பலமுறை எழுதிக்கொடுத்தவர்களும் உண்டு. ஈகோவாக எடுத்துக்கொள்ளாதவர்கள் இன்றைய நவீனச் சிறுகதைக்காரர்கள். இதைப்போல் தொண்ணூறுகளின் கவிஞர்கள் கல்குதிரை வயலுக்குப் பறவைக் கூட்டமெனத் தானே தேடிப் பறந்துவந்துவிடுவார்கள். சிறுபத்திரிக்கை என்றாலே கவிஞர்கள்தான். அந்த லாவாவின் கோடுகளில் இருந்து ஒவ்வோர் இதழும் வெடிப்பெழுச்சியாய் வருவதற்கு மூத்த மொழியான தமிழ்க் கவிதைகள் சிறுபத்திரிக்கைச் சூழலை இன்றுவரை காப்பாற்றி வருகிறார்கள். பயணம் செய்வதற்குக் காசு தேவையில்லை. கால்கள்தாம் தேவை எனும் பொன்மொழிக்குச் சொந்தக்காரர் தாங்கள். பயணம் உங்களது வாழ்வை, எழுத்தை எவ்வாறு பாதித்தது? இந்திய வனப்பரப்புகளில் மறைந்திருக்கும் என் புனைவின் நிலப்பரப்புகளில் சுவர்ண எறும்புகளின் லட்சம் பாதைகளில் அலைந்து திரியும், நான் நிலவின் ஒளியருந்தும் நரியாக என்னை உருமாற்றிக்கொண்டேன். சாத்பூரா மலையடிவாரங்களிலும், ஆரவல்லி மலைகளிலும் மீனா பழங்குடிகளின் நடுகல்லில் இன்னும் புதிராக உள்ள சிந்துவெளியின் மீனெழுத்தைக் கண்டேன். இதை மொழி அறிஞர் நொபுரு கரசிமா மீன் வடிவத் திடம்படு மெய்ஞானத்தில் கண்டபோது அதிர்ந்தேவிட்டிருந்தேன். அந்த மீனா நடுகல்லின் நிழல் நீண்டு மீன நாட்டைத் தொட்டது. மலையத்துவஜன் குமாரத்தி மீனா தென்கடலில் முன்னைப் பரதவர்க்கு எவ்வளவு தொல்முது தேவதையாக இருக்கிறாள். பயணத்தின் விரிவான வலைக்குள் ஒரு புனைகதையின் குறியீடாகக் கல்மீனைக் கண்டேன். கிர்நாருக்கு அருகில் கடகத் திருப்பத்திலுள்ள குப்தர் காலக் கதைசொல்லிகள் மகாவிஹாரில் வரைந்து சென்ற நிலவின் ஒளியருந்தும் நரியானது என் இருப்பும். அனைத்து அலைச்சலின் ஊடாட்டங்களும் தொலைதூரத்தில் மயங்கியிருக்கும் புனைவின் தூரப்புள்ளிகளாக இருந்தும் எப்போதுமே நவீனப் புனைகதைகளுக்குள் ஊர்ந்து வரியிட்டு இணைந்துகொள்கின்றன. இன்றைய காலத்தில் யுகங்களுக்கு இடையில் திரியும் அலைச்சல்களாக உருவம் கொண்டுள்ளது நவீனப் புனைகதை. இன்னொன்றும், பயணம் என்ற வார்த்தையே இன்று தேய்வழக்குதான். அதை நான் அலைச்சல் என்ற சொல்லால் பதிலீடு செய்ய விரும்புகிறேன். உங்கள் சமகால எழுத்தாளர்களான எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் போன்றவர்கள் பத்திரிகைகளில் தீவிர இலக்கியப் பத்திரிகைகள், வெகுஜனப் பத்திரிகைகள் இரண்டிலும் தொடர் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்கள். நீங்கள் இதுவரை பத்திரிகைகளில் தொடர் பத்திகள் எழுதாததற்கான காரணம் தங்கள் பயணம் மட்டும்தானா? புனைவின் சாபமேற்ற என் விரல்கள் மீடியாவுக்குள் போகாமல் அந்தரத்தில் நுழைகின்றன. சிறு விளக்கு தவிட்டுப்பனியில் குளிரும் மண்வீடு கரையும் நாசியில் ஏறிய காற்றை சுவாசிக்கும் தனலட்சுமியாக மாறி அவள் விரல்கொண்டு எழுதும் என் மண்மத்தின் நாவலிதைத் தனுர் இலைகளால் மூடிய பருவத்தை உடலாகக் கொண்டவள் கிணற்றில் நீரிரைக்கும் கயிற்று ஒலியில் தவளைக் குரல் விட்டு விட்டுக் கேட்கிறது. இவ்வேளையும் அவள்தான் நானாகி எழுதிக்கொண்டிருக்கிறேனோ ! வெளுத்த நெல்வயலில் தலை குனிந்து சொற்களைத் தேடும் வேளை எறும்புகள் கமகமத்தன. எறும்புகளிடம் வாக்களித்தவாறு நீயூஸ்பிரிண்ட் அச்சுத்தாளில் என்னால் எழுத முடியவில்லை. பழைய காரை வீட்டுக்கு ஊர்ந்த எறும்புகள் வரைந்த இவ்வோவியம் புழுங்கிய இரவில் வெளியே போனவளைப் பலரும் கூட்டி வருகிறார்கள் கைத்தாங்கலாய், கனவில் முங்கிய தெரு. எல்லார் மறதிகள் வெளிறிய ஊர் என் ஊர். அதற்குத் தெரியாத அச்சு எந்திர ராட்ஷச நாக்கில் மரத்தில் தொங்கும் வேதாளம் இடமாறிச்செல்வதில்லை. கூப்பிடக் கூப்பிட மனதைத் தொத்திய கதை வெளவால்களோடு வாழ்கிறேன். நித்ய பயணி என்று அறியப்படும் தாங்கள், கிட்டத்தட்ட பயணத்திலேயே வாழ்வின் பெரும்பகுதியைக் கழித்த தாங்கள், பயணக் கட்டுரைகள் அதிகம் எழுதவில்லையே? காவிரியின் பூர்வ காதை என்ற ஒரு நூல்தான் வெளியாகியுள்ளது. தங்களது பயணங்கள் குறித்து விரிவான நூல் எழுதும் திட்டம் இருக்கிறதா? பயணம் என்ற வார்த்தையே இன்று தேய்வழக்குதான். அதை நான் அலைச்சல் என்ற சொல்லால் பதிலீடு செய்ய விரும்புகிறேன். இந்திய இருப்புப்பாதைகள் ஊழின் ஒலிகளோடு புனைவின் தோற்றப் பின்புலமாகி இரும்புக் காலத்தைத் தொட்டு காலத்தொலைவின் தூரப்புள்ளியில் ஒலிக்க என் கதைகளை வரையும் நீண்ட வீடு அரக்குநிற ரயில்பெட்டிகள் ஓடும் ஜன்னல்களாகின்றன. அகாலத்தில் வரும் நாடோடி ரயில் பிச்சைக்காரர்களின் தகரப்பிடில் உருக்கிய சோகக்காற்று அனாதைகளின் தேநீர்க் கோப்பைகளாகிவிடுகின்றன. ஒவ்வொரு ஜன்னலிலும் வேறுவேறு நிலப்பரப்புகளை மரங்களோடும் விலங்குகளோடும் புராதனப் பட்டிணங்களோடும் யமுனையோடும் ஈர்த்துக்கொள்கிறேன். நிலப்பரப்பின் தொலைதூர அகப்பரப்பில் தோன்றும் வெளிகளில் எந்த வெளியில் புனைவு உருவாகிறது? புனைவுச் சர்ப்பங்கள் எங்கே சுருண்டு திரிகின்றன என்று அளந்து பார்க்க முடிவதில்லை. கண்ணிமைத்துக் காணும் கண்களுக்கு வேண்டுமானால் வெகுவாய் வெகுபாஷை கொள்ளும் நவீனப் புனைவின் தோற்றங்கள் பயணக் குறிப்புகளாகத் தோன்றலாம். அவர்கள் சுருக்கப்பர்களாக எஞ்சிவிடுகிறார்கள். த நாவலில் வரும் மாண்டு நகரம் வடமேற்கின் புலப்படாத ஏதோ நகரமாக நாவலில் கருக்கொள்வதற்கு மார்க்கோபோலோ குப்ளாய்கான் சந்திப்பு காரணமாக இருக்கலாம். காவேரியின் பூர்வகாதையில் நீல நைல் ஒரு கண்ணாடிப் புழுவாக நெளிந்து என் புனைவைத் திரும்பிப் பார்க்கிறது. தஞ்சாவூர் மிதந்து கொண்டிருக்கும் காவேரித் தொன்மம் ஹோமர் வாசிக்கும் லயர் யாழுக்கு இணையானது என்பதைக் கண்டுபிடிக்க தஞ்சாவூர் ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரத்தைத் திறக்க தலைக்காவேரியிலிருந்து பழங்காவேரி வரையுள்ள திராவிட மரபு மயன் மரபு கட்டிடக் கலைக்குள் அமைந்துவிட்ட சிற்ப மரபுகள் மயனாசுரனிடம் இருந்தே தோன்றியிருக்க வேண்டும். நம்முடைய தொன்மங்களோடு இயங்கக் கூடிய சிவராம்காரந்தின் மண்ணும் மனிதரும், அழிந்த பிறகு, பாட்டியின் கனவுகள் இங்கும் கதை மரபாகிறது. யூ.ஆர்.அனந்தமூர்த்தி படைப்புகளான சம்ஸ்காரா, பாரதிபுரா, அவஸ்தே, பவா, திவ்யா, அக்கமாதேவி கவிதைகளில் இருந்து பசவண்ணர் பாடல்கள் வரை சலனமடைந்தது காவேரி. என்னைத் திறந்த சந்திரகிரியில் வடக்கிருந்து உயிர்நீத்த சந்திரகுப்தன் அருகில் 23வது தீர்த்தங்கரர் பார்சுவநாதர் சுற்றி வண்டுகள் ரீங்காரமிட்டு அரூபத்தில் வரைந்து மறைந்து கொண்டிருந்த கலையின் உருவற்ற இயற்கையின் லயமலரை சாதாரண வரிவண்டுகளிடமிருந்து பெற்றுக்கொண்டதுதான் இந்நூல். இங்கே காவேரி கிளைகளில் மெளனியின் பிரபஞ்ச கானத்தையும், லா.ச.ராவின் பச்சைக்கனவையும், கும்பகோணம் வீட்டில் துவங்கிய நகுலனின் நினைவுப்பாதைக்குப் பின்வந்த நாய்கள் நாவலையும், தி.ஜாவின் செம்பருத்தியையும், ந.முத்துசாமியின் புஞ்சைக் கதைகளுக்குள் தோன்றும் செம்பனார்கோவில் ஊர்த்தேடலையும், தஞ்சை பிரகாஷின் மிஷன் தெருவையும் கடந்து திருப்புவனம் சரபேசருக்குப் பின்னுள்ள தெரு ஓவியன் மாடுகள் முத்துகிருஷ்ணனுக்கு முன்பே நற்றுணையப்பன் கோவில் சிற்பச்சிற்றுருக்களில் வேட்கையை வடிவத்தில் கைவிடாத ஓவியர் மூ. நடேஷையும், காவேரி நீரின் தொன்மங்களாக நெல்மணி திறந்த வெண்மணித் தியாகிகளையும் கீழத்தஞ்சையின் இடதுசாரிகளையும் அனைத்து விவசாயிகளையும் 126 வகை நெல்வகைகளையும் கடந்து கொண்டிருக்கிறது காவேரியின் பூர்வகாதை. மலேசிய சபா சரவாக் நிலப் பழங்குடி மக்களைப் பற்றிய நாவலின் ஆய்வுக்காக நீங்கள் என்னென்ன முயற்சிகள் மேற்கொண்டீர்கள்? அந்த நிலப்பரப்பின் பழங்குடி மக்களின் வரலாற்றின் மூலமாக உங்கள் படைப்பு இந்த உலகிற்கு என்ன சொல்ல விழைகிறது? இந்த நிலத்தஸாக்குகள், கடல் தஸாக்குகள் வெப்ப அயன மண்டலமெங்கும் கடந்து செல்லும் மூங்கில் சாலையான மலேசியாவின் சபா சரவாக் நிலங்களின் பழங்குடி மக்களை அத்தியாயங்களாகக் கொண்ட த நாவல் இரண்டாம் பதிப்பாக வெளிவந்துவிட்டது. ஒரு மூங்கிலைத் தொட்டதும் சாண்டகான் காற்று ஒலி. போர்னியா நிலக்குடிகளின் வேறுபடும் பாடல் ஓசை. மூங்கில் வெட்டி அவைகளை மரங்களோடு சேர்த்துக் கொக்கியிட்டு வடிவப்பின்னலில் உருளும் நீருக்குள் மிதக்கும் வழி. மரத்தின் மீது ஏரி ஒரு மூங்கிலைப் புதர்மேல் வீசித் தாவும் சுருளானபாதை. தொடர்ச்சியாகப் பாயும் மூங்கில் நீரில் பட்டுச் சாயும் ஒன்றுமேல் ஒன்றடுக்கி நகரும் படகு வடிவம் கடைசிவரை பள்ளங்களில் கடந்து மிதக்கும் மூங்கில் குகையில் காகாதுயே பறவையாகக் சஞ்சலந்தி புலம்புகிறது. வர்ணிக்க நேரமிதுவல்ல. அங்குக் குறுகிய துளைப்பாதைகளில் ஸர்ப்பமாக ஊர்ந்து மூச்சுவிடும் பாறைகளில் படிந்த லாவா ரேகைகளில் எழுதினேன். சபா சரவாக் எலும்புகளில் உறைந்த நீரில் சலனம் சாவை நோக்கிச் செல்லும் பாதையில் ரானாவ் பிணைக்கைதிகளின் அணிவகுப்பை நாவலாக எழுதினேன். நீங்கள் இன்னும் செல்லாத இடம் அல்லது செல்ல விரும்பி இதுவரை நிறைவேறாத பயணத் திட்டம் என்று ஏதேனும் இருக்கிறதா? இனிவரும் காலங்களில் உங்களது பயணத்தில் அடுத்தகட்ட மாற்றம் என்பது எவ்வாறு இருக்கும்? மலேசியாவுக்குச் சென்ற ஆண்டு வந்தபோது வல்லினக் குழு காட்டிய பத்து கேவ்ஸ் முருகன் கோவில் சுண்ணாம்பு மலையில் தொங்கும் தலைகீழ் சிற்ப வடிவங்களைத் தொட்டதும் யாரோ வீறிட்டு அலறும் ஒலி கேட்டது. பர்மா மலேசியாவிலிருந்து இந்தோனேஷியா கினபடாங்கன் மலைகளில் இறங்கி சபாசரவா பிலிப்பைன்ஸ் வரை நான்காம் பிறை வடிவிலிருக்கும் சுண்ணாம்பு மலைகளை மலைமலையாய் அலைந்து திரிந்து அதில் மறைய விரும்புகிறேன். இந்த நேர்காணலின் தொடர்ச்சியாகப் படைப்புகளை உள்வாங்கி நவீனப் புனைகதைகளுக்குள் செயல்பட முனைபவர்கள் மற்றும் புதிய உரையாடலைத் துவங்குபவர்களின் கேள்விகளுக்கு எழுத்தாளர் கோணங்கி பதிலளிக்க இருக்கிறார். கேள்விகளை . என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் அனுப்பவும். தேர்ந்தெடுத்த கேள்விகள் அவரது பதில்களுடன் அரூ இதழில் பிரசுரமாகும். ஓவியங்கள் ஞானப்பிரகாசம் ஸ்தபதி வேலூர்ப்பக்கம் உள்ள ஆம்பூரில் வசித்து வருகிறார். கடந்த 15 ஆண்டுகளாகக் கல்குதிரையின் ஒவ்வோர் இதழிலும் சில கோட்டோவியங்கள் வரைந்திருக்கிறார். தீவிர இலக்கிய வாசிப்பும் கலை குறித்த விவாதங்களும் செய்யக் கூடியவர். திருநெல்வேலியில் வசிக்கும் ஓவியர் செல்வம் அவர்களின் ஓவியங்கள் பல கல்குதிரை இதழ்களில் வெளியாகியுள்ளன. இந்த ஓவியம் ஓவியர் சந்துருவால் பொதிகைக்கூடலில் நடைபெற்ற ஓவியர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் சந்திப்பில் வரையப்பட்டது. லண்டனில் வசித்து வரும் கவிஞரும், ஓவியருமான றஷ்மியின் தூரிகைச்சிதறலில் பல கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் கள் வந்துள்ளன. அவரது ஆக்கங்கள் ஆயிரம் கிராமங்களைத் தின்ற ஆடு, ஈ தனது பெயரை மறந்து போனது, ஈதேனின் பாம்புகள் ஆகியவை. இதைப் பகிர தொடர்புடைய படைப்புகள் நேர்காணல் எழுத்தாளர் ஜெயமோகன் அறிதொறும் அறிதல் பெருகும் முடிவிலியாகவே இந்தப் பிரபஞ்சம் இருக்கும், வெளியிலும் துளியிலும். நேர்காணல் கவிஞர் சிரில் வாங் நம் இலக்கிய உலகம் டிராகன்ளாலும் ரோபோட்டுகளாலும் மட்டுமே நிறைந்துவிடும் என்பது என் அச்சம். நேர்காணல் லொந்தார் இதழாசிரியர் ஜேசன் எரிக் லுண்ட்பர்க் பாகம் 2 மற்ற இலக்கிய வகைகளைக் காட்டிலும் அறிவியல் புனைவு உயர்ந்ததோ தாழ்ந்ததோ அல்ல. நேர்காணல்அறிவியல் புனைவு, இதழ் 3, கல்குதிரை, கறுப்பு ரயில், கனவுருப் புனைவு, கோணங்கியின் படைப்புலகம், சிலப்பதிகாரம், செவ்வியல் மரபு, தேவதச்சன், தொன்மம், நகுலன், நாட்டார் மரபு, பரிசோதனை முயற்சிகள், பிரமிள், பின்நவீனத்துவம், புதுமைப்பித்தன், புராதனம், மணிக்கொடி, மாய யதார்த்தம், மிகைப்புனைவு ஒரு பெருந்திறப்பு ஒரு கனவு 2 நேர்காணல் எழுத்தாளர் கோணங்கி 12, 2019 10 30 நான் வெகுநேரம் எடுத்துக்கொண்ட நேர்காணல் பதிவு! கோணங்கியாரைப் போலவே மிகச் செறிவாக இருந்தது! நேர்கண்டோருக்கும், பதிந்தோர்க்கும் பகிர்ந்தோர்க்கும், மூலவருக்கும் நன்றிகள்! . 16, 2019 6 54 நேர்காணலை இப்போது தான் படித்து முடித்தேன்.சரியான பதிவு.காலத்தின் தேவையும் கூட.கோணங்கியின் புதுச் செல்நெறியை முன் மொழிவதோடு புதுகோணத்தையும் ,கனவுலகின் தமிழ்நிலவெளியின் படிமத்தையும் ,நிகழ்வெளியின் அரிதாரம் பூசா மெய்வுருவையும் எனப் பலகோணத்தில் விரிகிறது நேர்காணல்.மவுனத்தின் நாவில் எழுதப்பட்ட மொழி லாவகமாக பல்நிறம் கொண்டுள்ளது.. நிகழ்த்து வெளியின் பரப்பினை முன்மொழிந்தது, பேசாப் பொருளை பேசத் துணிந்ததன்விளைவாகவே நான் கருதுகிறேன்.மௌனத்தில் உலாவும் நாவின் எழுத்தை உருவாக்கும் தருணத்திற்காக பல்வேறு இடங்களுக்கு பயணம் செல்வதை அலைச்சல் எனக் கூறியது புதுமையானது. பறவைகள் வலசை செல்வது போல ஒரு படைப்பாளி பல்வேறு நிலப்பரப்பின் சுவடுகளைத் தேடி அலைந்து நீரின் தடம் தேடி, நீண்ட மணல் பரப்பின்ஈரத்தின் தடம் தேடி, பூக்களின் வாசம் நுகர்ந்து ,மனிதர்களின் வியர்வையை நுகர்ந்து, வரலாற்றின் சர்வதேச சுவாசத்தை நாடி பிடித்து சொல்வது போல இந்த நேர்காணல் அமைந்துள்ளது.கோணங்கி எனும் படைப்பாளி மிகப் பிரம்மாண்டமான எழுத்துலகம் விரிந்திருக்கிறது.பிரபஞ்சத்தில் இருக்கும் வானத்தைப்போல. இதை அறியாதவர்களுக்கு அறியாதவைகளாகவும் புரிந்தவர்களுக்குப்புரியாதவைகளாகவும் வெளிப்படுகின்றன.தன் படைப்பின் நிலப்பரப்பை மட்டும் இந்த நேர்காணல் விளக்கவில்லை, உலகளாவிய எழுத்தின் முகம் தேடி அனைத்துப்படைப்புலகில் தமிழ் நிலப்பரப்பில் நவீன யுகத்தில் வாழும் படைப்பாளர்களின் பொருண்மைகளை நுண்மாண் நுழைபுலம் கொண்டுஆய்ந்துஆய்ந்துஉய்த்துணர்ந்துவெளிப்பட்டுள்ள கோணங்கி நேர்காணல்.சகபடைப்புலகத்தின் பூடகத்தன்மைகளை வாசித்து வாசித்து ஆழ்ந்த வாசிப்புக்கு உட்படுத்தும்போது வரலாற்றின் படிமங்கள் நம் கண்முன்னே தோன்றக்கூடும்.நவீனத்தொழிநுட்ப யுகத்தில் வாழும் வாசகன் ஒரு படைப்பை ஆழ்ந்து ஆய்ந்து ஆய்ந்து வாசித்தல் நிகழ்வதில்லை. தற்காலச் சூழலில் ஆதலால்தான் கோணங்கி போன்ற புதுயுக படைப்பாளர்களின் படைப்புகளை யாரும் முகர்ந்து பார்ப்பதும் இல்லை.இந்த முகர்ந்து பார்க்கும் படைப்பாளியின் படைப்பு மனத்தை நாடி பிடித்துப் பார்க்கும் வாசகனுக்கு ,இதுநுழைவாயிலாக அமைகிறது இந்த நேர்காணல்.எழுத்தாளர் கோணங்கி அவர்களின் சக உலகளாவிய படைப்பாளர்களின் தன்மையை வெளிப்படுத்துவதோடு தொன்மை தமிழ் இலக்கியங்களிலிருந்து நம் மரபை தேடும் பார்வை நேர்காணலில் வெளிப்பட்டுள்ளது கோணங்கி எனும் நவீன ஆளுமை தத்துவங்களையும் மரபின் தொன்மைகளையும் தமிழ்நில விழுமியங்களையும் சமயங்களையும் கலை இலக்கியப் பெருவெளிகளையும் நீண்டதொரு வாசிப்பிற்குப்பின்னான கருத்தாழமிக்க நேர்காணலாக இது வெளிப்பட்டுள்ளது,சிறப்புக்குரியதாகும்.பரிசுகளை எதிர்பார்க்காத படைப்பாளிகள் அரிதே.அந்தவகையில் கோணங்கியின் படைப்புலகம் விருதுகளும் பரிசுகளும் தன் படைப்பாளுமை விரும்பாத எதிர்நோக்காத பாசாங்கற்ற எழுத்துலகின்பிதாமகனாகவிளங்கும் கோணங்கி அவர்களின் நேர்காணல் சிறப்புக்குரியது.கோணங்கி அவர்களுக்கு பேரன்பும் வாழ்த்துக்கள் ம.கருணாநிதி, தமிழ்த்துறை,அருள் ஆனந்தர் கல்லூரி,கருமாத்தூர். உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள் இதழ் வெளியாகும்போது மின்னஞ்சல் பெற . 2018, . , , , , , , . ' ' அரூ ' ' அரூபம் , . அரூவில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகள் படைப்பாளருடையவையே, அரூவின் கருத்துகள் அல்ல. அரூவில் வெளியாகும் ஓவியங்களும் புகைப்படங்களும் அரூவிற்கென்றே படைப்பாளர்களிடம் பெறப்பட்டவை. உரிய அனுமதியின்றி வேறெங்கும் பயன்படுத்தலாகாது. |
"கனடாவில் நல்ல படைப்பாளிகள் இருக்கின(...TRUNCATED) |
"வாடிக்கையாளர்கள் போன்ற பாவனையில் நக(...TRUNCATED) |
"அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்ச(...TRUNCATED) |
"வலையங்கம் ஆன்மீகம் கதை ஷெர்லக் ஹாய் (...TRUNCATED) |
"திருமணத்திற்கு வரன் தேடுகிறீர்களா? (...TRUNCATED) |
"திருமணத்திற்கு வரன் தேடுகிறீர்களா? (...TRUNCATED) |
"காங்கிரஸ் போஸ்டர்களை மட்டும் அப்புற(...TRUNCATED) |
"ஒரு முஸ்லிம் தன் காரியத்தில் வெற்றி (...TRUNCATED) |
"எடப்பாடி பழனிசாமி கூட்டணியின் முதல்(...TRUNCATED) |
End of preview. Expand
in Dataset Viewer.
- Downloads last month
- 65